காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு

This entry is part 33 of 34 in the series 6 ஜனவரி 2013

female-inequality-in-india

பொதிகையின் காரசாரம் நிகழ்ச்சிக்காக முகநூல் நண்பர் ப்ரேம் சாகர்  தொடர்பு கொண்டு பெண்சிசுக் கொலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்ற தலைப்பில் கருத்துக் கூற அழைத்திருந்தார். விழிப்புணர்வு இல்லை என்ற பகுதியில் நானும் விழிப்புணர்வு இருக்கிறது என்ற பகுதியில் கருத்துக் கூற என் கணவரும் இடம் பெற்றிருந்தோம்.

சமூக ஆர்வலர் ஷைலா சாமுவேல்  இப்போது விழிப்புணர்வு வந்து விட்டதாகவும் ஆனால் முன் காலங்களில் எல்லாம் பெண் பிள்ளை என்றால் தத்து யாரும் எடுப்பதில்லை எனவும் கூறினார்.

பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி  அரேபியாவில் இரு பெண் குழந்தைகள் இருந்தால் வரமாகக் கருதப்படுவதாகக் கூறினார். அங்கே திருமணம் ஆக ஆண் பெண்ணுக்கு மகர் அளிக்க வேண்டும் என்பதால் முதிர்கண்ணர்கள் அதிகம் என்பதை நகைச்சுவையாகப் பகிர்ந்தார்.

சமூக ஆர்வலர் ஜேனட் செல்வகனி  இது போல் பெண் கருக்கொலையும் சிசுக்கொலையும் அதிகரித்தால் சமூகத்தில்  ஆணுக்குத் திருமணம் செய்யப் பெண் கிடைப்பது அரிதாகிவிடும் என்றும், ஒரு பெண் பல ஆண்களுடன் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும்,அதனால் பாலியல் தொழில், விபச்சாரம் அதிகரித்துவிடும் என்றும் ,பாலியல் நோய்களுக்குப் பெண் ஆளாக வேண்டும் என்பதையும், சீர்கேடான சமூகம் உருவாகும் என்பதையும் எடுத்துரைத்தார்.

வெளிச்சம் அமைப்பிலிருந்து வந்த பெண்கள் பெண் சிசுக் கொலை தற்போது கருக்கொலையாக உருமாறி இருப்பதையும் ( ஸ்கானிங்க் செண்டர்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டு), பெண்ணுக்கு பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளையும் பட்டியலிட்டார்கள்.  கேட்கவே கஷ்டமாக இருந்தது.

மொழி, இலக்கியம், அரசியல் என்று எல்லாவற்றிலும் ஆண்பாலுக்கான வார்த்தைகள்தான் உண்டு. அவர்கள் ஆக்கிரமிப்புத்தான் அதிகம், பெண்குரல்கள் வெளியே தெரிவதில்லை என்ற கருத்தை நான் பதிவு செய்தேன். ஆண் குழந்தை என்றால் என்ன, பெண் குழந்தை என்றால் என்ன இருவரும் சமமே என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் மனோபாவம் மாறவேண்டும் என்று கூறினேன். ”வரதட்சணை கொடுக்க வேண்டும். இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு அதிகம் செலவு செய்து ஏன் படிக்கவைக்க வேண்டும்” என்று பெற்றோர் எண்ணுவதை விட வேண்டும். படிப்பு ஒரு பெண்ணுக்குச் சொத்து மாதிரி . அது சுயமாய் நிற்கும் சக்தியைத் தருகிறது என்று கூறினேன்.

என் கணவர் தன்னுடைய வங்கியில் உயர் பதவியில் சந்தா கோச்சார் போன்ற பெண்மணிகள் இருப்பதால் அவர் பெண்கள் கல்வி, பொருளாதாரம், அனைத்திலும் முன்னேறிவிட்டதால் பெண் சிசுக் கொலை நடப்பதில்லை என்றும் அது பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது என்றும் கூறினார்.

1992 அக்டோபர் பெண்குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை அரசு இயற்றி உள்ளது. கருக்கலைப்புக்காக  1994 இல் இரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.  2003 இல் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்துள்ளது. தொட்டில் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பல பெண் சிசுக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். 1997 இல் இருந்து மத்திய அரசு பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு உதவித் தொகையும் வழங்குகிறது. ஐடி துறைகளில் 2010 இல் இருந்து செக்சுவல் ஹரேஸ்மெண்ட் செல் என்பதை வைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது.

பெண்குழந்தைகளுக்குத் தேவை சமூகப் பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு மற்றும் கருவில் பாதுகாப்பு. பெண்குழந்தைகளுக்கு கல்வியையும் வேலைவாய்ப்பையும் மறுக்காமல் அளிக்க வேண்டும். பெண்குழந்தைகளை சாபமாக எண்ணாமல் வரமாக எண்ணுவோம்.

Series Navigationபத்து நாட்கள்அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *