சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2

This entry is part 12 of 34 in the series 6 ஜனவரி 2013

Sri Meenakshi Temple, Maduraiமழைக்கால அரண்மனை மதிலுள் நுழைந்த தீப்பந்த வரிசை இடது புறம் நீண்ட தூரம் சென்று வலது புறமாகத் திரும்பியது. தீப்பந்தங்கள் மீது ஈசல்கள் மோதி விழுந்தன. மேலே உதிரும் ஈசல் சிறகுகளைப் பொருட் படுத்தாமல் பின் வரும் ரதத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி விரைந்தனர் சேவகர் ஓட்டமும் நடையுமாய்.

அந்தப் புறத்தின் மேல் வாசற் கதவுகள் சத்ததுடன் திறக்க தீப்பந்தங்களுடன் பணிப் பெண்கள் மன்னரைத் தலைவணங்கிக் கும்பிட்டு வரவேற்றனர். மன்னர் கிரீடமும் பட்டு உத்தரீயமும் நகைகளும் அணிந்திருந்தார். இடையில் இருந்த உடைவாளை அவரது மாளிகைக்கு மெய்க்காப்பாளருள் ஒருவர் எடுத்து சென்றிருந்தார்.

அனேகமாக நித்தமும் நடனமும் இசையுமாக மிளிரும் நீராழி மண்டபம் அமைதியாயிருந்தது. அதிக உயரமில்லாத ஒரு மேடை நடுநாயகமாக இருக்க சுற்றிலும் விரிப்புகள் மீது திண்டுகள். மண்டபத்துக்குக் சற்று தள்ளி கீழே ஆழமான நீராழி இருந்தது. இசையின் நாதம் நீர்ப்பரப்பில் அபூர்வமான சுருதியுடன் வெளிப்படும்.

பக்கவாட்டில் சென்ற நடையில் விரைந்த மன்னர் மகாராணி பஜாபதியின் உறைவிடமான பெரிய கூடமும் நான்கு அறைகளும் ஆன பகுதியில் நுழையும் போதே “ராணி பூஜை அறையில் இருக்கிறார்” என்றாள் ஒரு பணிப்பெண் மிருதுவான் குரலில் பணிவாக.

பூஜையறையில் வெவ்வேறு அளவு மற்றும் வடிவிலான சாளிக்கிராமங்கள் ஒரு பெரிய மாடத்தில் வீற்றிருந்தன. வெண்கல விளக்குகள் வரிசையாய் ஒளிர்ந்தன. மரத்தினால் ஆன ஒரு பெரிய மண்டபத்தில் மகாராணி மாயாவின் ஆளுயர ஓவியம் பெரிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

நீண்ட முகம். சிறிய கூர்மையான மூக்கு. வளைந்த மெல்லிய புருவங்கள். பெரிய கண்கள். புன்னகைக்கும் பாவனை. தலையின் மீது அழகிய சிறிய பொன் மகுடம். சிறிய முத்துக்கள் நடுவே மரகதம் பதித்த நெற்றிச் சுட்டி. ஒருபக்க மூக்கில் சிறு வளையம். வேலைப்பாடுகள் மிகுந்த கூம்பு வடிவ சிறிய காதணிகள். காசு வடிவ பதக்கங்கள் நிறைந்த தங்க மாலை அதன் மீது முத்து மாலை. மணிகள் பதிக்கப் பட்ட தங்க வளையல்கள். ஒட்டியாணம். கால்களில் பெரிய சதங்கைகள். மாயாவின் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சுத்தோதனருக்கு அவள் உயிருடன் எழுந்து வந்து விடுவாளோ என்று ஆசையாயிருக்கும். மண்டபத்தின் அருகே கண்களை மூடியபடி பஜாபதி அமர்ந்திருந்தார். மன்னரின் காலடி ஒலி கேட்டு எழுந்து நின்று வணங்கினார்.

பூஜையறையில் ஆசனங்கள் ஏதுமில்லை. தரையில் பூ வேலைப்பாடு மிகுந்த கம்பளத்தில் மன்னர் சம்மணமிட்டு அமர்ந்தார். மௌனமாக மாயாவின் ஓவியத்தை உற்று நோக்கியபடி இருந்த அவரது விழிகளினின்று நீர் தாரை தாரையாக வழிந்தது. ராணியின் கண்ணசைவில் பூஜையறை வாயிலில் காவலிருந்த பணிப்பெண் நகர்ந்தாள்.

“கோலி வம்சத்து இளவரசிகளான நானும் தமக்கை மாயாவும் இங்கே மருகள்களான பின் சாக்கிய வம்சத்து மரபுகளை மதித்தே வாழ்ந்தோம். நானும் தங்கள் மனம் அறிந்தே நடந்து வந்தேன். சித்தார்த்தன் பற்றிய செய்தியை பிராதான அமைச்சரின் மனைவி சற்று முன் என்னிடம் தெரிவித்தார்.” பேச்சைத் தொடராமல் நிறுத்திய மகாராணி தமது மேலங்கியால் மன்னரின் கன்னத்தில் வழியும் நீரைத் துடைத்து அவர் அருகே அமர்ந்தார். “ராகுலன் பிறந்ததும் யசோதராவின் கவனம் குழந்தை மீதே இருந்தது. சித்தார்த்தனுக்கு அதை ஏற்கும் பக்குவமில்லை. வனத்தில் புகுந்த அவன் ஒரு நாள் கூட அந்தச் சூழலில் ஒட்ட வாய்ப்பிலை மகாராஜா! கண்டிப்பாக விரைவில் திரும்பி வருவான்” மன்னரின் தோளை ஆதரவாகப் பற்றினார்.

**********

இடுப்பை இறுக்கிக் கட்டியிருந்த பருத்தியால் ஆன கௌபீனம் இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த காவி அங்கி நனைந்ததால் உறுத்தியது. அந்த இரண்டு ஆடைகளும் மறையும் படி இடையங்கியில் சொருகி இடது தோள் வழியே பின்னே இடுப்பு வரை நீளும் காவி வேட்டி போன்ற நீண்ட மேலங்கி இருந்தது. சித்தார்த்தனின் நிழலுருவம் முன்னடக்க மந்திரத்தில் கட்டுப்பட்டவன் போல சாரதி காந்தகன் பின்னே குதிரையைப் பிடித்தபடி நடந்து வந்தான்.

நகரின் எல்லையில் காவலர்கள் ஓடி வந்து வணங்கிய போது சித்தார்த்தன் எதுவுமே பேசாமல் முன்னே நடந்து சென்று விட்டான். காந்தகன் ஏதோ சொல்லி அவர்களை அனுப்பி விட்டு இளவரசரைத் தொடர்ந்தான். நதிக்கரையில் படுத்திருந்த பைராகியைக் காணும் போது சித்தார்த்தனுக்குப் பரவசமாயிருந்தது. இளவரசே என்று வணங்காமல் நிமிர்ந்து நின்ற அவனது பெருமிதம் அசர வைத்தது. ஒரு கணம் கூட யோசிக்காமல் சித்தார்த்தன் தனது பட்டாடைகளைக் கழற்றி அவனிடம் கொடுத்த போது அவன் பதிலே சொல்லாமல் அவற்றை சுருட்டித் தலைக்கு கீழே வைத்து தொடர்ந்து படுத்தபடி இருந்தான். காந்தகன் கைவசம் கொண்டு வந்திருந்த காவியுடைகளை சித்தார்த்தன் அணிந்து கொண்டான். மூன்று ஆடைகளைகளில் கோவணத்தை இடுப்புத் துணியுடன் இணைத்துக் கட்டிக் கொண்ட சித்தார்த்தனுக்கு மேலங்கியை சுற்றிக் கொள்வதில் சிரமம் இருந்த போது காந்தகன் வைராகியை அழைத்து வந்தான். வைராகி அதை அணிவித்தான். சித்தார்த்தன் நகைகளை யசோதராவின் அறையிலேயே விட்டு விட்டான்.

மழை வலுத்தது. காந்தகன் முதல் நாள் இரவு காந்தகன் கொட்டும் மழையில் தோணியில் நதியின் அக்கரை வரை உடன் வந்தான். மறுகரையில் சித்தார்த்தனின் கால்களைப் பற்றி ” நானும் உடன் வருகிறேன் இளவரசரே” என்றான்.

அவனைத் தூக்கி நிறுத்தினான் சித்தார்த்தன். அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து ” என்னிடம் இல்லாமல் நீ மகாராஜாவின் சாரதியாக இருந்திருந்தால் விசுவாசமாக இருந்திருப்பாய் தானே?” காந்தகன் பதில் சொல்லாமல் கண்ணீருடன் கை கூப்பி நின்றான்.

” சொல் காந்தகா… விசுவாசமாக இருந்திருப்பாயா இல்லையா?”

” இருந்திருப்பேன் இளவரசே…”

“இந்த எளிய உறுதியான விசுவாசம் உன்னை என்றும் வழி நடத்தும் காந்தகா…”

“இனியும் அதே விசுவாசத்துடன் உங்களைத் தொடரக்கூடாதா?”

“தேர் இல்லாத இளவரசனாக இல்லாத ஒரு நாடோடியாய் நான் ஒரு தேடலைத் தொடங்கி இருக்கிறேன்..காந்தகா..உன் அன்பை மதிக்கிறேன். ஆனால் நீ என் நிழலாயிருப்பது நான் நீங்கி வந்திருக்கும் தங்கக் கூண்டின் நீட்சியாகவே இருக்கும்”

“நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லை இளவரசே”

“என் மீது பரிபூரண விசுவாசம் காட்டும் இந்த நொடி வரையிலான உன் பங்களிப்பு எளியது காந்தகா.. என் தேடலை இனம் கண்டு என்னுடன் இருப்பது உனக்குப் பொருத்தமில்லாத காற்சங்கிலி ஆகி விடும்”

” என்னை ஏன் நிராகரிக்கிறீர் இளவரசே?”

“காந்தகா.. தேடல் தன் வயமாய் உள் நெருப்புப் பொறியாய் துவங்கும் வரை நீ காத்திருக்க வேண்டும். மன்னரின் விருப்பத்துக்கு எதிராக நான் எடுக்கும் இந்த முடிவு நல்லது என்று எப்படி நினைத்தாய்?”

மௌனமாய் நின்றான் காந்தகன். இருளில் மழைநீர் வழியும் அவன் முகபாவம் பிடிபடவில்லை. சில நொடிகளுக்குப் பின் ” இளவரசர் சித்தார்த்தரே. வில் வித்தையோ, வாட் போரோ, மற்போரோ, சாக்கிய வம்சத்து வீரம் மிளிரும் உங்கள் பராக்கிரமத்தை நாங்கள் யாவரும் அறிவோம்.

முன்னொரு நாள் ஒரு சவத்தைப் பார்த்த போது “மரணம் வாழ்வு என்னும் நாணயத்தின் மறுபக்கம் ஒரு பக்கத்தை மட்டுமே ஏன் கொண்டாடுகிறோம்?” என்று வினவினீர்கள். பின்னொரு நாள் ஒரு முதியவரின் பலவீனம் கண்டு இளமையின் மாயை ஏன் எனக்குத் தெரியாமற் போனது என்று ஆழ்ந்து சிந்தித்தீர்கள். ஒரு வைராகியைப் பார்த்ததும் செல்வம் தேவைப்படாத பெருமிதம் ராஜ போகங்களை அற்பமாக்கும் பெருநிலை என்று துல்லியமாகக் குறிப்பிட்டீர்கள்.

சாக்கிய வம்சத்தின் வீரமும் ஞானமும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற பெருமகன் நீங்கள். உங்களுக்கு இந்த அடிமை துணையாக வந்தது பெரும் பேறு” என்றான்.

“காந்தகா.. உன் சேவக மனப்பான்மையையும் விசுவாசத்தையும் தாண்டி, என் தேடலைப் புரிந்து கொண்டு துணை நின்றாய். இனி நீ உன் குடும்பத்துக்கும் கபிலவாஸ்துவுக்குமான கடமைகளைத் தொடர்ந்து செய்”. அவன் தோளில் தட்டி விட்டு ஈரமணலில் கால் புதைய சித்தார்த்தன் நடந்தான்.

அணிலோ ஓணானோ எதுவோ மேலே விழுந்து துள்ளிச் செல்ல சித்தார்த்தனின் தேகம் விதிர்தது. குளிரில் உடல் நடுங்கியது.

மழையிலும் மற்போரை நிறுத்தாமல் எதிராளியைத் தாக்கிய நாட்களில் தான் சித்தார்த்தன் இதற்கு முன் நனைந்தது.

ஒரு சாதாரண தேரோட்டி, பணியாள், அடிமை என்றெல்லாம் கீழ்மையானவனாக நான் நடத்திய காந்தகனிடம் எந்த அளவு அறிவு? மரணத்தின் சத்தியத்தை வாழ்க்கையின் மாயையைப் புரிந்து கொள்ள முனையும் என் தேடல் அவனுக்கு எவ்வளவு எளிதாகப் பிடிபட்டு விட்டது?

மாமன்னரின் கோபத்துக்கு ஆளானாலும் அதைப் பொருட்படுத்தாத அளவு அவனுக்கு என் முடிவின் மீது எத்தகைய நம்பிக்கை!

இரண்டாம் நபரான அவனது நம்பிக்கையை விடவும் உறுதியாய் நிற்குமா என் வைராக்கியம்? பரிச்சையமில்லாத மலையில், இக்காட்டு வழியில் நான் தாக்குப் பிடிப்பேனா?

மழை நின்றது. விடியலின் மெல்லிய வெளிச்சம் பரவ நெருங்கி நின்ற மரங்களைக் கடந்து பாறை ஒன்றின் மீது சித்தார்த்தன் அமர்ந்தான். தொலைவில் கபிலவாஸ்து சிறு பொம்மைகளின் அணி போலத் தென்பட்டது.
————

Series Navigationவெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “நதி வெள்ளத்தின் துளி!
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *