This entry is part 24 of 32 in the series 13 ஜனவரி 2013

திங்கள் முதல் வெள்ளிவரை
நெடுந்தொடர்களின்
நாயகிகளின்
குடும்பப் பிரச்சினைகளில்
ஒன்றிப்போன மனைவி

வார விடுமுறையின் துவக்கத்தில்
காரணமின்றி கோபித்துக்கொண்டு
மகளின் அறையில் படுத்துக்கொள்ள

என்னுடன் படுத்துக்கொண்ட
சின்னவன்
நெடுநேரமாகியும்
தூக்கமில்லாமல்
என் தோளிலேயே தவித்திருந்தான்

டைனோஸர் கதை
கேசம் துழாவிய வருடல்
என
எந்த முயற்சியும்
அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க

சட்டென எழுந்து
மேசையின் இழுவரையில்
மடித்திருந்த
மனைவியின்
இரவு அங்கி ஒன்றை
எடுத்துவந்து
அதன்
முன்கழுத்து வளைவில் தொங்கிய
நாடாக்களின் குஞ்சத்தினை
நெருடிக்கொண்டிருந்தவன்
சடுதியில் உறங்கிப்போனான்

புதுமையான வடிவங்களிலும்
எழிலான வண்ணங்களிலும்
எத்தனையோ
நவீன
கவர்ச்சியான இரவு அங்கிகள்
வந்துவிட்டப்போதிலும்
அந்தக்
குஞ்சம் வைத்த
பழைய வடிவத்து அங்கியையே
அவள் தேடித்தேடி வாங்கியது நினைவுக்கு வர
அடுத்த அறைக்குச் சென்று
அவன் அம்மாவின்
ஆழ்ந்த உறக்கத்தை
நெடுநேரம்
பார்த்துக்கொண்டு நின்றேன்.

——————————————-

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்அக்னிப்பிரவேசம்-18