ராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )

This entry is part 13 of 32 in the series 13 ஜனவரி 2013

பொம்மரிலு பாஸ்கரால் இயக்கப்பட்டு, வெற்றியடைந்த ‘ஆரஞ்ச்’, மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. வாழ்க்கை முழுதும் காதல் இருக்கும் என்று நம்பும் பெண்ணும், காதல் கொஞ்ச நாட்கள் தான் இருக்கும். பிறகு, சொல்லப்படும் பொய்களே அதன் ஆயுளை நீட்டிக்கும் என்று உணரும் ஆணும், ஆஸ்திரேலிய பின்னணியில் நடத்தும் ‘நீயாநானா’

பார்த்தவுடனே காதலிப்பதும், பொய் சொல்ல வேண்டி வந்தால், அதை முறித்துப் போடுவதுமான கொள்கை கொண்ட ராம் ( ராம் சரண் ), ஜானுவை ( ஜெனிலியா டிசோசா ) பார்த்தவுடனே காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால் அவனுக்கு அவள் பத்தாவது காதலி. ‘வாழ்நாள் முழுக்க என்னை மட்டுமே காதலிப்பேன் என்றால் எனக்கு சம்மதம் ‘ என்று நிபந்தனை போடும் ஜானுவுக்கு, உத்திரவாதம் தர முடியாமல் விலகும் ராம், ஒரு கட்டத்தில் இதுவே உண்மையான காதல் என்பதை உணர்ந்து, காதலை தக்க வைக்க, தன் விருப்பங்களை மாற்றிக் கொள்ளும் ரொமாண்டிக் கதை.

சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனலியாவை மீண்டும் ஒருமுறை பார்ப்பது போல் இருக்கிறது. ஆனாலும் சிரிப்பை தொலைத்து, ராம்சரணை விரட்டும் பின் கட்டங்களில் அவருக்குள்ளிருக்கும் நடிகை தெரிகிறார். ராம் சரண், லகுவாக காதலன் பாத்திரத்தைச் செய்து விடுகிறார். பப்பியாக வரும் பிரம்மானந்தம், அதிக வேலையில்லாவிட்டாலும், அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். கதை கேட்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ், ஜெனிலியாவின் அப்பாவாக பிரபு என பல தெரிந்த முகங்கள்.

அசத்தல் ஒளிப்பதிவால் ஆஸ்திரேலிய அழகை அள்ளிக்கொண்டு வந்திருக்கின்றனர் பி.ராஜசேகரும், கிரண் ரெட்டியும். ஹாரிஸ் ஜெயராஜ் ‘ரூபா ரூபா’ பாடலிலும், ‘ஓலா ஓலாலா ‘ பாடலிலும் புதிதாகத் தெரிகிறார். மற்றவை எல்லாம் பழைய கள்ளு.

கௌதம் மேனனுக்கு உறவுக்காரர் போல பொம்மரிலு பாஸ்கர். படத்தில் ஏகத்துக்கு வசனங்கள். எந்த வித திருப்பங்கள் இல்லாத கதை, ராம் சரணின் நடிப்பு ஒன்றையே நம்பி எடுக்கப்பட்டது என்பது படம் பார்க்கும் முதல் பென்ச் ரசிகனுக்கும் தெரிந்த விசயம்தான்.

இந்த வருடத்தின் இறுதி வெற்றிப்படம் என்று விளம்பரம் தந்து, புதிய படம்போல் தோற்றம் தந்த வெளியிட்டவர்களுக்கு, இபிகோவில் தண்டனை ஏதும் உண்டா என்று தெரியவில்லை.

0

Series Navigationசரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3மணிராமின் “ தமிழ் இனி .. “

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *