விற்பனைக்குப் பேய்

This entry is part 16 of 28 in the series 27 ஜனவரி 2013
சுங் நல்ல வியாபாரி.  திறமைசாலி.  கிராமத்தில் பலசரக்குக் கடை வைத்திருந்தான்.  ஒரு கோடை காலம் எல்லோரையும் வருத்தியது.  வெப்பம் அதிகரித்து, பயிர்கள் வாடின. மக்களை வாட்டியது.  சுங்கின் கடை நட்டத்தில் இருந்தது.  காய்கறிகள் விற்க முடியவில்லை. உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை.  கிராமத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக, குடும்பம் குடும்பமாக ஊரை விட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.  பெரிய நகரங்களில் வேலை செய்யும் ஆசையில் நகரை நோக்கிச் சென்றனர்.  ஒரு நாள் சுங்கும் ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்தான்.
ஒரு நாள் கடையை மூடிவிட்டு, தன்னிடம் இருந்த பொருட்களில் வேண்டியவற்றை மட்டும் எடுத்து மூட்டையாகச் செய்து கயிற்றினால் இறுகக் கட்டினான்.  மேற்கே இருந்த கிராமத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.
இருபது நிமிடங்கள் தான் சுங் நடந்து இருப்பான்.  அப்போது ஒரு பாறைக்குப் பின்னிருந்து ஒரு பேய், சுங்கின் முன் குதித்தது.  அவனை பயமுறுத்துவதாக எண்ணி “பூ..” என்று கத்தியது.
சுங்கிற்கு தன்னுடைய வறுமை பற்றிய நினைப்பைத் தவர வேறெதுவும் அவன் எண்ணத்தில் இல்லை.  சுற்றி நடப்பதன் மீதும் கவனம் இருக்கவில்லை.  தன் போக்கில் நடந்து கொண்டிருந்தவன், பேய் கத்தியது கூட காதில் விழாமல், யோசனையிலேயே இருந்தான்.  பேய் மறுபடியும் கத்தியது.  அவன் பேய் கத்தியதை இப்போது கேட்டான்.  ஆனால் அதைக் கண்டு கொண்டு பயப்படவில்லை.  அதற்கு மாறாக, “ஆ… என்னை நீ பயமுறுத்த வேண்டியதில்லை பேயே.. நானும் ஒரு பேய் தான்..” என்றான் மிகவும் இயல்பாக.
“ஓ.. அப்படியா.. நல்லதாகப் போய்விட்டது.  நண்பனே.. நீ எந்தப் பக்கம் போகிறாய்?” என்று நட்பு பாராட்டிப் பேச ஆரம்பித்தது பேய்.
“நான் மேற்கே இருக்கும் கிராமத்திற்குச் செல்கிறேன்.  அங்கு என்னை யார் பயமுறுத்துகிறார்கள் என்று பார்க்க.. நீயும் என்னுடன் வருவதானால் வா..” என்றான் சற்றும் பயம் கொள்ளாமல்.
பிறகு இருவரும் சேர்ந்து மேற்கு நோக்கிப் பயணமானார்கள்.
போகின்ற வழியில், சுங்கிற்கு ஒரு யோசனை தோன்றியது. “ஏய் பேயே.. நீ நான் நினைத்ததை விட கிராமம் அதிக தூரத்தில் இருக்கிறது. எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது.  நாம் இருவரும் மற்றவர் தோள் மீது மாறி மாறி பயணித்தால், களைப்பைத் தவிர்க்கலாம்” என்று கேட்டான்.
பேய்யும் ஒத்துக் கொண்டது. சுங் பேய்யின் தோள் மேல் ஏறிக் கொண்டான். தன் மூட்டையை தன் கையில் பிடித்துக் கொண்டான்.  பேய் சுமை அதிகம் என்று உணர்ந்து, “நீ சவத்தை விடவும் மிகவும் கணக்கிறாய்?” என்றது சலிப்புடன்.
பேய் சுங்கை அரை மணி நேரம் தூக்கிச் சென்றது.  பிறகு, “எனக்கும் களைப்பாக இருக்கிறது.  இப்போது உன் முறை.  என்னைத் தூக்கிக் கொள்..” என்றது.
இருவரும் இடம் மாறிக் கொண்டனர்.
“நான் புதிதாக இறந்தபடியால், நான் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறாயா பேயே..!” என்று ஆவலுடன் கேட்டான் சுங்.
பேய் மிகவும் ஆர்வத்துடன் தன் மூச்சை நிறுத்தி, “எச்சில் உமிழ்வது மனிதர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கம்.  அது தான் பேய்களுக்கு எமன்.  மிகவும் மோசமானது மனிதனின் எச்சில் தான். அது பேய்களை கூடு விட்டு கூடு பாய்வதைத் தடுக்கும்” என்று விளக்கியது.
“கூடு விட்டு கூடு பாய்வதா?” என்று தன் சந்தேகத்தை வெளியிட்டான் சுங்.
“ஆமாம்.. மனிதர்களை அச்சுறுத்த வேண்டுமென்றால், பேய் உருவிலிருந்து மற்ற உருவத்திற்கு உடனுக்குடன் மாற வேண்டும்.  கவலைப்படாதே.. நீ பேயாக இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தால், இதையெல்லாம் நீ கற்றுக் கொண்டு விடுவாய்.” என்றது.
சுங் இதை கவனமாகக் கேட்டுக் கொண்டே நடந்தான்.
அப்போது சுங் முன்னால் தொலை தூரத்தில் கிராமம் தெரிவதைக் கண்டான்.  பேய், “சரிப்பா.. நீ இப்போது என்னை இறக்கி விடு.  நாம் கிராம மக்களை பயமுறுத்தத் தயாராகலாம்..” என்றது.
சுங் பேயின் கைகளை விடவில்லை.  பேய் போராடியது. கத்தியது.  “ஏய்.. என்னை விடு.. என் கையை விடு..” என்று முரட்டு பிடித்தது.  சற்று நேரத்திற்குப் பிறகு நடப்பதைப் புரிந்து கொண்டு, “ஏய்.. நீ பேயில்லை.. மனிதன்.. என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டாய்..” என்று கடிந்தது.
எதுவும் பேசாமல், சுங் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான்.  பேய் மேலும் போராடியது.  பறவையாக மாறி பறக்க முயன்றது.  ஆனால் சுங் கைகளை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.  பேய் அப்போது மிகவும் கனமான ஆடாக மாறியது.  அவனது தோளிலிருந்து குதிக்க முயன்றது.  தன் சக்தி முழுவதையும், திரட்டிக் கொண்டு, சுங் ஒரு பெரிய செருமல் செருமி, முடிந்த அளவு அதிக எச்சிலை வரவழைத்து அதன் மீது துப்பினான்.  அது ஆடு ரூபத்தில் இருந்த பேயின் மேல் விழுந்தது.  பேய் வேறு உருவத்திற்கு மாற முடியாமல் ஆட்டு உருவத்தைப் பெற்றது.
சுங் முன்னால் குதித்து, அதன் கொம்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். தன் மூட்டையிருந்த கயிற்றை எடுத்து, ஆட்டின் கழுத்தில் இறுகக் கட்டினான்.
விரைவிலேயே ஆட்டை சந்தைக்கு எடுத்து வந்து, நல்ல விலைக்கு விற்றான்.  விற்ற பணத்தில், அவன் தன்னுடைய கிராமத்திற்குச் சென்று கடையைத் திறக்க, வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பினான்.
மீண்டும் மகிழ்ச்சியுடன் வியாபாரத்தைத் துவக்கினான் திறமைசாலியான சுங்.
Series Navigationபள்ளியெழுச்சிவிழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்

1 Comment

  1. Avatar Sivakumar N, New Delhi

    சிறிய கதை. நன்று! என் சிறு வயதில் படித்த சிறுவர் மலர், அம்புலிமாமா கதைகள் நினைவிற்கு வருகின்றன. நாடோடிக் கதைகள் இனிமையானவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *