யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண்.
ராணி பமீதா தம் நாட்டுக்குக் கிளம்பும் முன் யசோதராவைக் காண வந்தார். இரண்டு மூன்று நாட்களாகவே யசோதரா விருந்தினர் மாளிகைக்கு வரவில்லை. ராகுலனின் பெயர் சூட்டும் விழாவிலும் யசோதரா மிகவும் வாடிய முகத்துடனேயே இருந்தாள். இரவு பகல் எந்நேரமும் அழுது யசோதராவுக்கு ஜுரம் கண்டது. பால் கசந்ததால் ராகுலன் தாயிடம் பால் குடிக்கவில்லை. பால் சுரக்கும் தகுதி உள்ள ஒரு தாதிதான் பாலூட்டி வந்தாள்.
ராணி பமீதா, ராணி பஜாபதி இருவருமே மௌனமாக யசோதரா அருகே அமர்ந்திருந்தார்கள். சுரக்கும் பாலை ராகுலன் குடிக்காததால் யசோதராவின் உடல்நிலை ஜுரத்துடன் சேர்ந்து வலியும் போராட்டமுமாக இருந்தது.
“நாளை விடியற்காலை கிளம்புகிறோம் ” என்றார் பமீதா சுருக்கமாக.
“இன்னும் சில தினங்கள் இருந்து விட்டுப் போகலாமே மகாராணி. தற்போதைய யசோதராவின் மனநிலைக்குத் தங்களின் ஆதரவு மிகவும் ஆறுதலாயிருக்கும்” என்றார் பஜாபதி.
“மன்னரின் கட்டளைக்காக அங்கே பணிகள் காத்திருக்கின்றன. யசோதராவின் சோகம் விரைவில் தீர்ந்துவிடும். சித்தார்த்தன் சீக்கிரமே வந்து விடுவார்” என்றார் பமீதா.
“தங்களின் நல்லாசிகளுடன் யசோதராவின் மணவாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசட்டும் ” என்றார் பஜாபதி.
“சக்கரவர்த்தியோ, தவ முனிவரோ யாராக இருந்தாலும் உலகமே அவனை வணங்கும் என்று தானே ஜாதகம் சொல்லுகிறது. அவ்வாறெனின் தீங்கு ஏதும் நிகழாது. எங்கிருந்தாலும் சித்தார்த்தன் நலமாக உள்ளான் என்பதே உண்மை. நீங்கள் தான் யசோதராவைத் தேற்ற வேண்டும் என்றார் பமீதா.
மாளிகையின் வாயில் வரை சென்று பமீதாவை வழி அனுப்பிய பின்பு, பஜாபதி நந்தவனத்தில் உலவினார். நந்தவனத்தை ஒட்டியுள்ள சிறிய மைதானத்தில் குடும்பத்துடன் இருக்கும் பணிப் பெண்கள் அல்லது சேவகர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். செடிகளோடும் கொடிகளோடும் சேர்ந்து ராணி பஜாபதி நின்று கொண்டிருந்தபடியால் குழந்தைகள் தம் இயல்புப்படி விளையாடுவதைக் காண இயன்றது அவருக்கு.
“நான் தான் தேவேந்திரன்” என்று பெருமிதமாகக் கூறியது ஒரு பெண் குழந்தை வில் போல ஒரு மரக்கிளையை வலது கையில் பிடித்துக் கொண்டு.
“இந்திரனின் ஆயுதம் வஜ்ராயுதம். இப்படிப் பிடி ..” என்று அதன் நுனியைப் பிடிக்கும் படி கையில் மாற்றிக் கொடுத்தாள் இன்னொருத்தி.
“அக்கினி தேவனும், வாயு தேவனும், வருண தேவனும், வந்து என் முன்னே வரிசையாய் நில்லுங்கள்” என்றது தேவேந்திரனாகிய குழந்தை.
“நான் தான் தேவகுரு பிரகஸ்பதி. அனைவரும் வணங்குங்கள்” என்றாள் இன்னொருத்தி.
“இதோ அசுரர்கள் வந்து விட்டோம்” என எங்கிருந்தோ நான்கைந்து குழந்தைகள் ஓடி வந்தன. ஒரு குழந்தை ஒவ்வொரு சிறு கிளையாக ஒடித்து ஒடித்து தேவேந்திரன் மீது எறிய அவன் அதை வஜ்ஜிராயுதத்தால் தடுத்தான்.
அசுராக நடித்த குழந்தைகளுள் ஒரு பெண் குழந்தை நின்றது. இப்போது நான் நாட்டியம் ஆடப் போகிறேன்” என்று பாடிக் கொண்டே ஆடினாள்.
பூலோகம் வணங்கும் புனித முனியாம் கபிலதேவரே
அவரின் புனித மண்ணில் புவியை ஆளவந்தார்
நான்கு சோதரரே
போதல நாட்டு சாக்கிய ராஜகுமாரர் நால்வர்
எழுப்பிய நகரம் கபிலவாஸ்துவே
அந்த வம்சத்து மாமன்னர் சுத்தோதனரே
தானியம் செல்வம் மாடுகள் தங்கம்
நிறைந்த எம் நாடு வாழியவே
கன்னிப் பெண்கள் நாம் பாடுவோமே
வீரரும் அழகில் மன்மதனுமான
எம் ராஜகுமாரர் சித்தார்த்தரே
அவர் பெயரைச் சொல்லி ஆடுவீர் பெண்களே
பூலோகம் வணங்கும் புனித முனியாம் கபிலதேவரே
அவரின் புனித மண்ணில் புவியை ஆளவந்தார்
நான்கு சோதரரே
நான்கு சகோதரரும் என்று விரல்களைக் காட்டி அபிநயித்த போதும், அழகிய நிலமாம் என்று தம்மைச் சுற்றிபடியே காட்டி கண்களை விரித்துக் கூர்ந்து நோக்குவது போல் நடித்து , சாக்கிய வம்ச வீர மன்னர் தாமே” என்று மீசையை முறுக்குவது போல் நடித்ததை பஜாபதி மிகவும் ரசித்தார்.
கங்கை நதிக்கரையில் தலை மொட்டையடிக்கப் பட்டு தாடியும் மீசையும் மழிக்கப் பட்ட சித்தார்த்தன் மனம் மிகவும் லேசாகியிருந்தது. குளித்து விட்டு இடுப்பில் ஒரு துண்டு இறுக்கக் கட்டி அதில் பற்றி கோவணம் அணிந்து நீண்ட காவி நிறத் துணியை இடுப்பில் சுற்றி முதுகில் விழும்படி தோளில் சுற்றி முதுகுத் துணி முடிவில் திருவோட்டை சிறு மூட்டையாகச் சுற்றி மேலே நடந்தான்.
கங்கை நதிக்கரை மணற்பரப்பைத் தாண்டி வயல் வெளியைச் சுற்றி வர்ப்போரமாக நடந்தான். வரப்பில் தாவும் தவளைகளும் ஓடி மறையும் நண்டுகளும் சுற்றித் திரியும் பறவைகளும் பசுமையான நெல் வயலும் காண மிகவும் ரம்மியமாக இருந்தன. வயலைத் தாண்டி ஊருக்குள் நுழையும் போது எருது பூட்டிய வண்டிகள் சாரிசாரியாகச் சென்று கொண்டிருந்தன.
பெண்களும் குழந்தைகளும் வயதானவரும் அந்த வண்டிகளில் நன்கு அலங்கரித்து உடையுடுத்தியிருந்தனர். பெண்கள் ஒன்று சேர்ந்து சுருதி பிசகாமல் பிம்பிசாரரின் வீரம் போற்றும் பாடல்களைப் பாடி வந்தனர்.
ஆண்கள் ஒருவர் மேல் ஒருவர் வண்ணப் பொடிகளையும், வண்ணம் தோய்ந்த நீரையும் வீசியபடி மாட்டு வண்டிகளுக்கு இணியான வேகத்தில் ஓடியபடியும் நடந்த படியும் உற்சாகமாக வந்தார்கள்.
சில இளைஞர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலாட்டம் ஆடியபடி வந்தனர். சிலர் ஈட்டியைச் சுழற்றியும் சில வாட்களை வீசியும் தம் திறமையைக் காட்டினர்.
சித்தார்த்தன் ஒரு ஓரமாக நின்று இந்தக் கொண்டாட்டங்களை ரசித்தான். ஒரு மாட்டு வண்டி நின்றது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கி வந்து ஒரு மண் குடுவையைக் கொடுத்து “பாயசத்தை அருந்துங்கள். என்னை ஆசீர்வதியுங்கள்.” என்று அவன் காலில் விழுந்து வணங்கினாள்.
சித்தார்த்தன் அந்த பாயசத்தை அருந்தினான். பாலும் தித்திப்பும் பாதாம் பருப்புமாக மிகவும் சுவையாயிருந்தது. அதை அருந்தியபின் அவனும் அந்த கிராம மக்களோடு நடந்தான்.
*************
திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. அந்தப் புரத்தில் ஒரு வினோத விளையாட்டு வைத்தார்கள்.
உங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டி விட்டார்கள். திருமண விழாவுக்கு வந்திருந்த பிற நாட்டு இளவரசிகள், எல்லா மன்னர், மகாராணிகள் எதிரில் நீராழி மண்டபத்துக்கு அருகில் உங்களை அமர்த்தி ஒரு சவால் விட்டார்கள்.
மண்டபத்தின் மையப் பகுதி முழுவதும் இருந்த ஆசனங்கள் பக்கவாட்டுக்களில் மண்டப சுவர்களை ஒட்டிப் போடப் பட்டன. நீங்கள் மையத்தில் இருந்த ஒரு தூணுக்கு அருகே விடப் பட்டீர்கள். நானும் பிற நாட்டு இளவரசிகளும் மண்டபத்தின் விரிந்த மையப் பகுதியில் சுற்றி வருவோம். நீங்கள் சரியாக என்னைக் கண்டுபிடித்து ‘யசோதரா’ என்று அழைத்துக் கண் கட்டை அவிழ்க்க வேண்டும். நீங்கள் தவறி ஏதேனும் ஒரு பெண்ணை அதாவது அந்த இளவரசிகளுள் ஒருத்தியைப் பற்றி ‘யசோதரா’ என்றழைத்தால் அவளை நீங்கள் இரண்டாவதாக மணம் செய்து கொள்ள வேண்டும். உங்களை மண்டபத்தின் நடுவே விட்டு அனைவரும் துள்ளி ஓடினார்கள்.
எனது சதங்கைகள் மிகவும் மெல்லியவை. அளவிலும் சிறுத்தவை. எனவே என் கால் தட ஒலியை நீங்கள் எளிதாக அறிந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் மனம் மிகவும் பதறியது. நான் குரலே எழுப்பக் கூடாது என்பது மிக முக்கியமான விதி.
உங்கள் கண்களைக் கட்டும் முன்பு “இது என் தலைமீது வந்திறங்கிய பிரச்சனை என்று தானே நினைக்கிறீர்கள். என்னால் கண்டுபிடிக்கப் படுவது என்பது யசோதராவின் தலையில் உள்ள பிரச்சனை என்று நான் நினைக்கிறேன்” என்று மட்டும் கூறினீர்கள்.
ஒரு பொல்லாதவளின் விருப்பப்படி எங்கள் சதங்கைகள் ஒருவருக்கு ஒருவர் மாற்றி அணிவிக்கப் பட்டன.
நீங்கள் எழுந்து உலவிய போது ஒவ்வொருத்தியும் உங்களுக்கு மிக அருகில் வந்து தொட்டுவிடும் தூரத்தில் இருந்து ஓடினாள். எனக்கு இணையாக எல்லா இளவரசிகளுமே வளையல்களும் அணிந்திருந்தார்கள்.
தாங்களோ எழுந்து நடக்கும் போது உங்கள் மீது மெதுவாக இடித்துப் போன பல இளவரசிகளைப் பொருட்படுத்தவேயில்லை. மண்டப மையத்தில் உள்ள தூண்களில் இடித்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே தங்கள் கவனத்தில் இருந்தது போல மெதுவாக உலவி வந்தீர்கள். கலகலவென சிரிப்பும் கும்மாளமுமாய் ஏகப்பட்ட இளவரசிகள் தங்களைச் சுற்றிவர பார்வையாளர்களான பல நாட்டு அரச குடும்பத்தினர் கைத்தட்டி மகிழ நான் உங்கள் அருகே வர முயலும் போதெல்லாம் வேறிரு பெண்கள் என் இரண்டு கரங்களையும் பற்றித் தள்ளி இழுத்துச் செல்ல கரகோஷம் அதிரும். எனக்கு மனதுள் பதட்டம் அதிகமாகி கிட்டத்தட்ட கண்களில் நீர் துளிர்த்து விட்டது.
ஒரு பெரிய தூணின் ஒரு பக்கத்தில் தாங்கள் சாய்ந்து நின்றீர்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்த பெண்களைத் தாண்டி, முண்டியடித்து அந்தத் தூணின் மறுபக்கம் வந்தேன்.தங்கள் அருகே வர நாணமாயிருந்தது.
திடீரென இரண்டு பெண்கள் என் இருபுறமும் வந்து நின்று கொண்டனர். மொத்தம் மூன்று பெண்கள், நீங்கள் என தூணைச் சுற்றி நாம் நால்வர் மட்டுமே. அரங்கமே பெரிய எதிர்பார்ப்புடன் நிசப்தமானது.
கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு முகத்தை சற்றே முன்னே நீட்டியபடி தாங்கள் எங்கள் மூவரின் முகத்தருகே வந்தீர்கள். மூன்றாவதாக நின்றிருந்த என் கரத்தைப் பிடித்து “யசோதரா” என்று அழைத்ததும், என் அப்பாவுக்கும், உங்கள் அப்பாவுக்கும் பிற மன்னர்களுக்கும் கூட அந்த சூட்சுமம் புரியவில்லை.
யசோதரா தலை மீது என்று தாங்கள் குறிப்பிட்ட போது, அன்றைய தினம் காலையில் சந்தன எண்ணை தடவிய என் தலைமுடியின் நறுமணத்தை நீங்கள் பாராட்டியது நினைவுக்கு வந்தது. தாங்களும் அந்த மணத்தை வைத்தே என்னைக் கண்டு பிடித்து விட்டீர்கள்.
அன்று நம்மிடையே மௌனமான ஒரு கருத்துப் பரிமாற்றமும் புரிதலும் நிகழ்ந்து ஊரே வியக்க நீங்கள் என்னை அடையாளம் காணவில்லையா?
இன்று, குழந்தை ராகுலன் வரவை நாடே கொண்டாடுகிறது. உங்கள் அரவணைப்பில் அவன் வளருவான் என என் உள்மனம் சொல்கிறது. நீங்கள், நம் பிரிவின் இந்நாட்கள் ஒரு கெட்ட கனவு என்பது போல எப்போது திரும்பி வரப் போகிறீர்கள்? உறங்கி,விடிந்த பின் எழுந்த போது உங்களைக் காணவில்லை. இனி உங்கள் திருமுகம் கண்டால் தான் இந்தப் பெண்ணுக்கு விடிவு காலம் என்று அறியாதவரா தாங்கள்?
———————
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
- பறக்காத பறவைகள்- சிறுகதை
- சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
- இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
- கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
- வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
- வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
- அக்னிப்பிரவேசம்-20
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
- பள்ளியெழுச்சி
- விற்பனைக்குப் பேய்
- விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
- வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- விதி
- தாய்மை
- கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
- உண்மையே உன் நிறம் என்ன?
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
- குப்பை
- கவிதை பக்கம்
- ரயில் நிலைய அவதிகள்