தேமொழி
ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987), என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist), உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர். அதன் பயனாக உலகில் உள்ள புராணக் கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு. இவர் 1949 ஆம் ஆண்டு இக்கருத்தை மையமாகக் கொண்டு “ஆயிரம் முகங்களுடைய நாயகன்” (The Hero with a Thousand Faces) என்ற நூலை எழுதினார். அவர் அப்புத்தகத்தில் கதைகளில் வரும் “கதாநாயகனின் பயணம்” (Hero’s Journey) எவ்வாறு ஒற்றைப் புராண விதிகளைக் கொண்டிருக்கிறது என்பதனை பயணத்தின் பல கட்டங்களையும் பட்டியலிட்டு விவரித்தார்.
“A hero ventures forth from the world of common day into a region of supernatural wonder: fabulous forces are there encountered and a decisive victory is won: the hero comes back from this mysterious adventure with the power to bestow boons on his fellow man.”
– Joseph Campbell
ஒற்றைப் புராணத்தின் வாழ்க்கைப் பயண நிலைகள்:
நாயகன் தீரங்களை நிகழ்த்தும் பயணப் பாதையின் பொதுவான அடிப்படை சூத்திரம்:
பிரிவு–துவக்கம்–திரும்பி வருதல் என்ற கருவினைக் கொண்டதாகும்.
(இங்கு குறிப்பிடப்படும் நாயகனின் வாழ்க்கைப் பயண நிலைகள், கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தின் “இலக்கியத்தின் ஊடாக வரலாற்றை அறியும் திட்டம்” (History Through Literature Project, University of California, Berkeley, >>http://orias.berkeley.edu/hero/about.html) வழங்கும் நிலைகளை ஆதாரமாகக் கொண்டு கொடுக்கப் பட்டுள்ளது.
ஒற்றைப் புராணம் குறிப்பிடும் கதாநாயகனின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு நிலைகள்:
(1) பிறப்பு:
நாயகன் கருவில் தோன்றியது, பிறப்பு, வளர்ப்பு ஆகியவை அதிசயங்கள் நிறைந்த வகையில் இருக்கும். அவை அவனது உயர்ந்த தனித்தன்மையைக் குறிக்கும் ஒற்றைப் புராணத்திற்கு அடிப்படையாக அமையும்.
(2) சாதனைபுரியஅழைப்பு:
நாயகன் சாகசப் பயணத்திற்கான சூழ்நிலை உருவாவதாலோ அல்லது தூதுவர் போன்றவராலோ அழைக்கப் படுவான். அந்த அழைப்பை நாயகன் விருப்பத்துடனோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ ஏற்றுக் கொள்வான் .
(3) உதவியாளர்கள்:
பயணத்தின் துவக்கத்தில் நாயகனின் நலம்விரும்பி தேவையான உதவிகளைப் புரிவார். இந்த உதவியைச் செய்யும் வழிகாட்டிகளாய் வருபவர்கள் பெரும்பாலும் மந்திரவாதி, வயது முதிர்ந்த பெரியோர், வினோதமான குள்ளர்கள் மற்றும் தேவதைகள் ஆவார்கள். அத்துடன் தாயத்து, பாதுகாப்பு கவசங்கள் போன்றவற்றையும் கொடுத்து உதவுவார்கள்.
(4) நிர்ணயித்தவரம்பைமீறுதல்:
நாயகனின் பயணம் ஒரு உச்சகட்ட நிலையை அடையும்பொழுது, அவன் ஒரு துன்பத்தில் உழன்று சராசரி வாழ்க்கையைவிட வேறுபட்ட தீரச் செயல்களைப் புரியும் நிலைக்குச் செல்ல வேண்டும். இந்த அனுபவம் வலியற்றதாக ஒரு இருண்ட குகைக்குள் நுழைந்து வருவதாகவும் இருக்கலாம், அல்லது திமிங்கிலத்தால் விழுங்கப்படும் கொடுமையைப் போன்றதாகவும் இருக்கலாம். இக்கட்டத்தின் தனிச் சிறப்பு, நாயகனின் அனுபவத்தை தினசரி நடவடிக்கைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாகும்.
(5) சோதனைகள்:
கனவு போன்ற சாகசம் நிறைந்த பயணத்தைத் தொடரும் கதைத் தலைவன் அப்பயணத்தில் பல சோதனைகளைத் அடுத்தடுத்து சந்திக்க நேரிடும். இந்தச் சோதனைகள் கொடூர அரக்கர்களை, மந்திரவாதிகளை, எதிரியின் படைகளை, அல்லது இயற்கையின் தாண்டவாங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளவதாக இருக்கும். ஒவ்வொரு போராட்டத்திலிருந்தும் வெற்றிகரமாக மீண்டு வருவது கதாநாயகனின் திறமையை, போராட்டத்தின் இலக்கை அடைய அவனுக்கு உள்ளத் திறமையை நிரூபிக்கும்.
(6) உதவியாளர்கள்:
பெரும்பாலும் நாயகனின் பயணத்தில் அவனது உற்ற தோழமைகள், நட்புகள் அவனுக்கு உதவி செய்து சோதனைகளில் இருந்து அவன் மீண்டு வர உதவுவார்கள். சில கதைகளில் இவ்வாறு உதவி செய்பவர்கள் தெய்வீகத் தன்மை போன்ற சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
(7) உச்சகட்டம்/இறுதிப்போர்:
இறுதியான முக்கியத் தருணத்தில் நாயகன் எதிரியுடன் போரிட வேண்டியிருக்கும். இந்த எதிரி அரக்கன், மந்திரவாதி, எதிரிப்படை வீரர்கள் போன்றவர்கள். இவர்களுடன் போர் புரிந்து நாயகன் பயணத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவான்.
(8) தப்பியோடுதல்:
கடமையை நிறைவேற்றிய பின்பு தனது சராசரி வாழ்விற்குத் திரும்புவதற்கு கதாநாயகன் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் கட்டம் இது. நாயகன் எதிரியை ஆத்திரப்படுத்தியிருந்தால், எதிரியின் பொருளைக் கவர்ந்து வர நேர்ந்திருந்தால், அல்லது கொடிய அரக்கனை அழித்திருந்தால், இவ்வாறு திரும்புவது அவசரமாகத் தப்பியோடும் செயலாக இருக்கும். அவ்வாறில்லாமல் கதாநாயகன் தேடியது அவனுக்கு முழுமனதுடன் வழங்கப் பட்டிருந்தால் இந்த ஓட்டம் ஆபத்தற்றதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
(9) திரும்புதல்:
இக்கட்டத்தில், நாயகன் மீண்டும் பயணத்தின் சோதனை எல்லையைக் கடந்து நிகழ்கால உலகிற்கு வந்து தினசரி வாழ்க்கையை வாழ வேண்டும். இது விழித்தெழுதல், மறுபிறவி எடுத்தல், உயிர்த்தெழுதல் போன்றவையாகவோ, அல்லது குகை, காடு போன்றவற்றை விட்டு வெளிவருவதாகவோ இருக்கும். சில நேரங்களில் கனவு போன்ற பயண உலகில் பயணிக்கும் நாயகன் நிஜ உலகின் சக்தி ஒன்றினால் பழைய வாழ்க்கைக்கு இழுத்து வரப்படுவான்.
(10) சஞ்சீவி/நிவாரணி:
நாயகன் பயணத்தின் போது பெற்ற பொருள், அறிவு, அனுபவம், வரம் போன்றவை தினசரி வாழ்வில் உபயோகப் படுத்தப் படும். பெரும்பாலும் இவை வாழ்க்கையின் குறைகளை நீக்கப் பயன் பட்டாலும், சில நேரங்களில் சமுதாதயத்தில் கதாநாயகனின் பங்களிப்பு என்ன என்பதையும் வரையறுக்கும்.
(11) வீடு:
கதாநாயகன் தான் துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்தல். பயணத்தில் பெற்ற வரத்தை, வெற்றியை, அனுபவத்தைக் கொண்டு தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுவது பயணத்தின் இறுதிக் கட்டம்.
ஒரு சில கதைகளோ, புராணங்களோதான் குறிப்பிடப்பட்ட அனைத்து பயண நிலைகளையும் கொண்டிருக்கும். ஒரு சிலவற்றில் பல நிலைகள் அமையப் பெற்றிருக்கலாம், சில கதைகள் சில நிலைகளைக் கொண்டிருக்கும், மேலும் சில ஓரிரு நிலைகளை மட்டும் விரிவாகக் கொண்டிருக்கும். அத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பயண நிலைகளின் வரிசையும் பல கதைகளில் வெவ்வேறு வகையில் மாறு பட்டிருக்கும். சிலநேரங்களில் இந்த சுழற்சி ஒருமுறைக்கும் மேலும் இடம் பெறக்கூடும்.
இலக்கிய அல்லது புராணக் கதாநாயகர்களின் “வாழ்க்கை சுழற்சி” அல்லது ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு “வாழ்நாள் சுழற்சி”யும் கதாநாயகனின் பயணம் என்று ஜோஸப் கேம்பெல் குறிப்பிட்டதன் அடிப்படை நியதியிலேயே அமைந்திருக்கிறது என்பதனைக் கூர்ந்து கவனித்தால் புலப்படும். புராணங்களில், புத்தர், ஏசு, மோசெஸ் போன்றோரின் வாழ்க்கைப் பயணமும் இராமாயணமும் வாழ்க்கை சுழற்சி பயண நிலைகளைக் கொண்டிருப்பதற்கு எடுதுக்காட்டகக் கொடுக்கப் படுகிறது. தற்காலக் கதைகளில் ‘ஹாரி பாட்டர்‘ (Harry Potter), ‘ஸ்டார் வார்ஸ்‘ (Star Wars), ‘மேட்ரிக்ஸ்‘ (Matrix) கதைகள் மற்றும் திரைப்படங்களின் கதைகளில் இந்த வாழ்க்கை சுழற்சி தத்துவம் அடிப்படையாக இருப்பது தெரிகிறது. ஸ்டார் வார்ஸின் இயக்குனர் ஜோஸப் கேம்பெல் குறிப்பிட்ட வாழ்க்கை சுழற்சி நியதியையும், மற்ற பல உலக புராணக் கதைகளின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு ஸ்டார் வார்ஸ் கதையை அமைத்ததாகக் கூறியுள்ளார்.
கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி (1899-1954) அவர்கள் எழுதிய “பொன்னியின் செல்வன்” கதையுடன், ஜோஸப் கேம்பெல் குறிப்பிடும் ஒற்றைப் புராணக் கோட்பாட்டையும், கதாநாயகனின் பயணத்தின் நியதிகளையும் ஒப்பிட்டால் அது பொன்னியின் செல்வன் கதை ஓட்டத்துடனும் பொருந்துகிறது. பொன்னியின் செல்வன் கதையினைப் படித்திருக்காத தமிழர்கள் இருப்பது அரிது. எனினும் படித்திராத ஒரு சிலருக்காகக் கதையின் சுருக்கம் கீழே கொடுக்கப் படுகிறது. ஐந்து பெரும் பகுதிகளாக வந்த வரலாற்றுக் கதையை முடிந்தவரை மிகச் சுருக்கமாகக் கொடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதை சோழப் பேரரசின், தமிழத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மன்னர் ராஜ ராஜ சோழனைப் பற்றியது. இக்கதை அவருக்கு முடிசூட்டிய பின்னணியைக் குறிப்பது என்றாலும் கதைத் தலைவன் அவர் அல்ல. அரசரின் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன்தான் கதையின் நாயகன். வந்தியத்தேவனின் பயணத்தைப் பற்றியக் கதையே பொன்னியின் செல்வன். இனி கதையின் சுருக்கம். கதை தெரிந்தவர்கள் இப்பகுதியைத் தாண்டிச் சென்று அடுத்த ஒப்பீடு பகுதியிலிருந்து மேலே தொடரலாம்.
பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்:
முதலாம் பராந்தகசோழ மன்னரின் மூத்த மகன் ராஜாதித்தன் போரில் இறந்துவிட, அவரது இரண்டாம் மகன் கண்டராதித்தன் மன்னராகிறார். அவர் இறக்கும் பொழுது அவரது மகன் மதுராந்தகன் சிறுவனாக இருந்ததாலும், மேலும் அவர் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தனது சகோதரன் அரிஞ்சய சோழருக்கும், அவருக்குப் பின் அரிஞ்சயரின் மகன் இரண்டாம் பராந்தகனுக்கும் அரசுரிமை செல்லுமாறு ஏற்பாடு செய்கிறார். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழரின் மூத்த மகன் அரசுரிமைப் பெற்று நாட்டின் வடதிசைக் காவல் பொறுப்பேற்று காஞ்சியில் இருக்கிறான். இவன் மிகச் சிறந்த வீரன், சிறுவயதிலேயே சோழ எதிரி பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் வென்று அவனது தலையை வெட்டி கொணர்ந்ததால் புகழப் பட்டவன். சுந்தர சோழரின் மகள் குந்தவை பழையாறையிலும், அவரது கடைசி மகன் அருண்மொழி வர்மன்(பிற்கால ராஜ ராஜ சோழன்) இலங்கைப் போரின் பொறுப்பேற்று இலங்கையிலும் இருக்கிறார்கள். இந்நிலையில் சுந்தர சோழர் நோயுற்று தஞ்சை அரண்மனையில் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரின் பாதுகாப்பில் இருக்கிறார், மன்னரின் பாதுகாப்பு என்ற போர்வையில் மற்றவர் யாரும் அவரை அணுக முடியாத நிலை ஏற்படுத்தப் படுகிறது. இதனை விரும்பாத ஆதித்த கரிகாலன் தனது தந்தையைக் காஞ்சிக்கு வருமாறு தனது உற்ற தோழன், சிற்றரசர் குல வழி வந்த வல்லவரையன் வந்தியத்தேவனின் வழியாக மன்னருக்கு ஒலை கொடுத்தனுப்புகிறான். பழையாறையில் தங்கைக்கும் வந்தியத்தேவன் வழியாக செய்தி அனுப்புகிறான். இந்தப் பயணம் ஒரு ரகசியப் பயணம். பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்த இடத்தில்தான்.
தஞ்சைக்கு தனது ரகசியப் பயணத்தைத் துவக்கும் வந்தியத்தேவன் வழியில் தனது நண்பன் கந்தமாறனின் கடம்பூர் அரண்மனையில் தங்குகிறான். கந்தமாறனின் தங்கை மணிமேகலை வந்தியதேவன் மேல் ஒருதலைக் காதல் கொள்கிறாள். இரவில்கடம்பூர் அரண்மனையில் விருந்தினராக வந்து கூடிய சோழ சிற்றரசர்கள், பெரிய பழுவேட்டரையின் தலைமையில், கண்டராதித்தர் மகன் மதுராந்தகனுக்குத்தான் அரசுரிமை சொந்தம் எனக் கூறி அவனை அரியணை ஏற்ற மதுரந்தகனுடன் சேர்ந்து செய்யும் சதியை எதேச்சையாக வந்தியத்தேவன் காண நேர்கிறது. வந்தியத்தேவன் பயணத்தின் இடையில் சந்திக்கும் ஆழ்வார்க்கடியான் பெரிய பழுவேட்டரையரின் இளையராணியான தனது சகோதரி நந்தினியைப் பற்றி வந்தியத்தேவனுக்குக் கூறுகிறான். அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்காத தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறான். தஞ்சை கோட்டைக்கு செல்லும் வழியில் எதிர்பாரா வகையில் பல்லக்கில் நந்தினியை சந்திக்கும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றி கூற, அவள் தனது முத்திரை மோதிரத்தை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மறுநாள் தனது அரண்மனையில் வந்து சந்திக்கச் சொல்லிச் செல்கிறாள்.
அந்த முத்திரை மோதிரத்தை தஞ்சைக் கோட்டைக்குள் நுழைய வந்தியத்தேவன் பயன்படுத்திக் கொள்கிறான். பலத்த பாதுகாப்பினால் சிற்றரசர்கள் சதியை தஞ்சையில் உள்ள மன்னரிடம் வந்தியத்தேவனால் தெரிவிக்க வழியில்லாது போகிறது. ஓலையைச் சேர்ப்பித்துவிட்டு, நந்தினியைச் சந்தித்து அவள் மாளிகையில் உள்ள இருண்ட கருவூலத்தின் சுரங்கவழியாக வெளியேறி, பழுவேட்டரையாரால் கொலைகுற்றம் சுமத்தப் பட்டு, தஞ்சை வீரகளிடம் இருந்து தப்பி ஓடுகிறான். திரும்பும் வழியில், ஆதித்த கரிகாலன் ஆணைப்படி இளவரசி குந்தவையை பழையாறையில் சந்திக்கும் பொழுது அவளிடம் சிற்றரர்களின் சதியைக் கூறி எச்சரிக்கிறான். சதியை முறியடிக்க எண்ணிய குந்தவை உடனே இலங்கை சென்று அருண்மொழிவர்மனைக் கையோடு அழைத்து வரச் சொல்லி வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்தனுப்புகிறாள். கோடிக்கரை வழியாகப் படகில் இலங்கை செல்ல படகோட்டி பூங்குழலி வந்தியத்தேவனுக்கு உதவுகிறாள்.
பழுவேட்டரையரின் முத்திரை மோதிரத்தை வைத்திருந்த வந்தியத்தேவனை இலங்கையில் கோட்டை வீர்கள் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சோழ ஒற்றனான ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்து அருண்மொழிவர்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அருண்மொழி வர்மனின் நட்பைப் பெற்று இளவரசரை அழைத்து வரும் பொழுது, கப்பலைப் புயல் தாக்கி அது கடலில் மூழ்குகிறது. தத்தளிக்கும் இளவரசனையும், வந்தியத் தேவனையும் பூங்குழலி படகில் ஏற்றிச் சென்று கரை சேர்க்கிறாள். நோயுற்ற அருண்மொழிவர்மனின் பாதுகாப்பினைக் கருதி நாகை சூடாமணி விகாரத்தில் சேர்ப்பிக்க பூங்குழலி மூலம் ஏற்பாடு செய்த பின்பு, வந்தியத் தேவன் பழையாறைக்கு விரைகிறான்.
இதற்கிடையில் நந்தினி சோழ குலத்தை வேரறுக்கத் திட்டமிடுகிறாள். இவள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் மகள், ஆனால் இந்த உண்மை வெளியுலகம் அறியாது. சோழ அமைச்சர் அநிருத்த பிரமராயரின் சீடன் மற்றும் ஒற்றனான ஆழ்வார்க்கடியானின் தங்கையாகத் தத்தெடுக்கப்பட்டு அவன் குடும்பத்தில் வளர்க்கப் பட்டவள் நந்தினி. தனது தந்தையைக் கொன்ற ஆதித்த கரிகாலனைப் பழிவாங்குவது அவள் திட்டம். எனவே கிழவரான சோழ நாட்டின் தனாதிபதி பெரிய பழுவேட்டரையரை மணந்து, தஞ்சையில் அரச குடும்பத்துடன் இருந்து கொண்டே, பாண்டிய நாட்டு சதிகார்களுடன் கூடி திட்டம் தீட்டுகிறாள். நந்தினி சோழ அரச நிர்வாகத்தைப் பங்கிடும் காரணம் என்று கூறி ஆதித்த கரிகாலனை கடம்பூர் அரண்மனைக்கு வரவழைக்கிறாள். சதிக்கூட்டத்தினரால் ஒரே நாளில் கடம்பூரில் ஆதித்த கரிகாலனையும், நாகையில் இருந்து தஞ்சை திரும்பும் அருண்மொழி வர்மனையும், தஞ்சையில் சுந்தர சோழரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டப் படுகிறது. மூவரும் இறந்து மதுராந்தகன் ஆட்சிக்கு வந்தபின்பு கலகமேற்படுத்தி வீரபாண்டியனின் வாரிசின் மூலம் சோழ நாட்டைக் கைப்பற்றுவது சதிகாரர்களின் திட்டம்.
பழையாறையில் வந்தியத் தேவன் குந்தவையை சந்திக்கும் பொழுது, அவள் ஆதித்த கரிகாலனின் கடம்பூர்ப் பயணத்தை நிறுத்தவோ, இயலாது போனால் அவனுக்கு பாதுப்பாக உடனிருக்கவோ வந்தியத்தேவனை வேண்டுகிறாள். கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் மெய்க்காவலனாக வந்தியத் தேவன் உடனிருந்தும், அவனையும் மீறி சதிகாரர்களால் ஆதித்த கரிகாலன் குத்திக் கொல்லப்பட்டு அப்பழி வந்தியத் தேவன் மீதே விழுகிறது. ஆனால் அருண்மொழி வர்மனும், சுந்தரசோழரும் எதிர்பாராத விதத்தில் உயிர் தப்புகிறார்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பொழுது அங்கிருந்து வந்தியத்தேவன் தப்பி ஓடுகிறான். வழியில் கூர்வாளால் எதிர்பாராதவிதமாக தவறாகத் தாக்கப் பட்டு மீண்டும் பூங்குழலியாலும், ஆழ்வார்கடியானாலும் காப்பாற்றப் படுகிறான். பிறகு குற்றமற்றவன் என்ற உண்மை அறிந்து வந்தியத்தேவன் விடுதலை செய்யப் படுகிறான்.
ஆதித்த கரிகாலன் மரணத்தால் அருண்மொழிவர்மனுக்கு வாரிசுப் பட்டம் சூட்ட ஏற்பாடு நடக்கிறது. அருண்மொழிவர்மனோ வாரிசு முறைப்படி மதுராந்தகனைச் சேர வேண்டும் என்று விட்டுக் கொடுத்து மதுராந்தகனை அரசனாக்குகிறான். வந்தியத்தேவன் குந்தவையின் காதலைப் பெறுகிறான். அவனை நினைத்து ஒருதலைக் காதலில் மதிகலங்கி இறக்கும் தருவாயில் உள்ள மணிமேகலையைக் கடம்பூரில் சந்திக்கிறான். மணிமேகலை வந்தியத்தேவனின் மடியில் உயிர்விடுகிறாள் (பொன்னியின் செல்வன் கதை >> http://ta.wikisource.org/s/ep, பொன்னியின் செல்வன் கதையின் சுருக்கப் பட்ட பதிப்பு >> http://poniyinselvan.blogspot.com/ ஆகியவற்றைப் படிக்க விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று படிக்கலாம்).
பெரும்பாலோரால் இக்கதையில் விரும்பப்படும் பாத்திரங்கள் சோழ ஒற்றன் ஆழ்வார்க்கடியானும், படகோட்டி பூங்குழலியும் ஆவார்கள். சோழப் பேரரசை சதிகார்களிடம் இருந்து காப்பாற்ற நடக்கும் முயற்சியில் வந்தியத்தேவன் காஞ்சியில் தொடங்கி, தஞ்சை, பழையாறை, இலங்கை, கடம்பூர் எனச் சுற்றியலைந்தாலும், வந்தியத்தேவனுக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் இவர்கள் இருவரும்தான் அவனுக்கு உதவி செய்து அவனது கடமையை நிறைவேற்ற வழி வகுப்பவர்கள்.
கதாநாயகன் வந்தியதேவனின் பயணத்துடன் ஒப்பீடு:
ஒற்றைப்புராணத்தின் கதாநாயகனின் பயணத்தின் நிலைகளாக ஜோஸப் கேம்பெல் குறிப்பிடும் நிலைகளை பொன்னியின் செல்வன் கதையுடன் ஒப்பிட்டுக் கீழ்வரும் நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கவனம் கொள்ள வேண்டியது அனைத்து நிலைகளும் அமையத் தேவையில்லை, அத்துடன் அவை அதே வரிசையிலும் அமையத் தேவையில்லை என்ற விதி. ஆனாலும் பொன்னியின் செல்வனின் கதையோட்டம் குறிப்பிடத் தக்க மாறுதல்களின்றி ஒற்றைப் புராண கதாநாயகனின் பயணநிலைகளைப் பின்பற்றுவதைக் கீழ்வரும் கதைப்பகுதியின் மேற்கோள்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
[படத்தினைப் பெரிய அளவில் காண >> http://tinyurl.com/Vandiyathevans-Journey]
சாதனை புரிய அழைப்பு:
ஆதித்ய கரிகாலனின் தூதுவனாக தஞ்சைப் பயணம் மேற்கொள்ளல்
உதவியாளர்கள்:
நந்தினியின் முத்திரை மோதிரத்தைப் பெற்று கோட்டைக்குள் செல்லல்
நிர்ணயித்த வரம்பை மீறுதல்:
இருண்ட கருவூல வழியாக பழுவேட்டரையரிடம் இருந்து தப்பி ஓடுதல்
சோதனைகள்:
இலங்கைப் பயணத்தின்பொழுது ஏற்படும் சோதனைகள், சிறை செய்யப் படுத்தல், புயலில் பாதிக்கப் படுத்தல்
உதவியாளர்கள்:
இலங்கைப் பயணத்திற்கு பூங்குழலியும், இளவரசனை சந்திக்க ஆழ்வார்கடியானும் உதவுதல்
உச்சகட்டம்:
புயலில் சிக்கிய மரக்கலம் மூழ்கி உயிருக்குப் போராடுதல்
தப்பியோடுதல்:
குந்தவையின் வேண்டுகோள் படி இளவரசனை அழைத்து வருதல்
திரும்புதல்:
பழையாறைக்குத் திரும்பி குந்தவையை சந்தித்தல்
சஞ்சீவி/நிவாரணி:
குந்தவையின் காதலைப் பெறுதல்
வீடு:
கடம்பூருக்குத் திரும்பி மணிமேகலையின் மரணத் தருவாயில் உடன் இருத்தல்
இங்கு குறிப்பிடப்படுவது முழுக்கதைக்கும் உள்ள ஒப்பீடு. கதையை நன்கு அறிந்தவர்கள் இந்த ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறையானது ஒருமுறைக்கும் மேலும் பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுணர முடியும். எடுத்துக்காட்டாக, ஆதித்த கரிகாலனின் தூதுவனாக முதல்முறையும், குந்தவையின் வேண்டுகோள்படி ஒருமுறை இலங்கைக்கும், பிறகு இலங்கையில் இருந்து வந்த பின்பு குந்தவையின் வேண்டுகோளை மீண்டும் ஏற்று கடம்பூரில் ஆதித்த கரிகாலனின் உயிர்காக்க வந்தியத்தேவன் பயணிக்கும் மற்றொருமுறையும் இதே வாழ்க்கை சுழற்சி அமைவதை தனித்தனியாகப் பிரித்தும் காணலாம். ஆதித்த கரிகானிடம் இருந்து முதலில் தஞ்சைப் பயண அழைப்பும் குந்தவையிடம் இருந்து இலங்கை செல்லவும், கடம்பூர் செல்லவும் இரு அழைப்புகள் அடுத்தடுத்து வந்தியதேவனுக்குக் கிடைக்கிறது. இப்பயணங்களையும் தனித்தனியே ஒற்றைப்புராண வாழ்க்கை சுழற்சி முறை கோட்பாட்டிற்கு உட்படுத்த முடியும்.
References:
http://www.jcf.org/new/index.php
http://en.wikipedia.org/wiki/Joseph_Campbell
http://en.wikipedia.org/wiki/The_Hero_with_a_Thousand_Faces
http://orias.berkeley.edu/hero/about.html
http://orias.berkeley.edu/hero/JourneyStages.pdf
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1b/Heroesjourney.svg
http://ed.ted.com/lessons/what-makes-a-hero-matthew-winkler
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20512092
http://www.tamilpaper.net/?p=359
http://en.wikipedia.org/wiki/Ponniyin_Selvan
http://ta.wikisource.org/s/ep
http://poniyinselvan.blogspot.com/
http://tinyurl.com/Vandiyathevans-Journey
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
- பறக்காத பறவைகள்- சிறுகதை
- சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
- இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
- கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
- வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
- வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
- அக்னிப்பிரவேசம்-20
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
- பள்ளியெழுச்சி
- விற்பனைக்குப் பேய்
- விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
- வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- விதி
- தாய்மை
- கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
- உண்மையே உன் நிறம் என்ன?
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
- குப்பை
- கவிதை பக்கம்
- ரயில் நிலைய அவதிகள்