மூன்று அரிய பொக்கிஷங்கள்

This entry is part 8 of 26 in the series 17 மார்ச் 2013

ஒரு காலத்தில் ஒரு ஏழை விதவை தன் இரு மகன்களுடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தாள்.

அவளது மூத்த மகன் மிகவும் புத்திசாலி. சம்பாதிக்கும் வழி தெரிந்தவன். அதனால் தாய் விரும்பும் மகனாக இருந்தான். சுற்றி உள்ளவர்களும் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் தந்தனர்.

ஆனால் அவளது இளைய மகன் மிகவும் எளியவன். நேர்நோக்கு கொண்டவன். எப்படிச் சம்பாதிப்பது என்று தெரியாத இளைஞன். அவனை எதற்கும் லாயக்கற்றவன் என்று தாய் அழைக்கும் அளவிற்கு எதுவும் தெரியாத அப்பாவியாக இருந்தான். சகோதரன் எப்போதும் கேலி செய்து கொண்டே இருப்பான். கிராமத்தாரும் அவனை முட்டாள் என்றே அழைத்தனர்.

ஒரு நாள் தாய் அவனை அழைத்து, சில தோசைகள் கட்டிய மூட்டையை அவனிடம் தந்து, “இந்தா.. இதை எடுத்துக் கொண்டு கிளம்பு. ஏதாவது பணம் சம்பாதிக்காமல் வீடு திரும்பாதே. என் வீட்டில் வெறுங்கையோடு வந்து காலடி வைக்கக் கூடாது..” என்று சொல்லி வீட்டை விட்டுச் செல்ல பணித்தாள்.

திடீரென்று தாய் இப்படிச் சொன்னதைக் கேட்டு, ஏதும் அறியாத இளைஞன் அதிர்ந்தான். இருந்தாலும் தாயின் பேச்சைக் கேட்டாக வேண்டிய நிலையில் இருந்தான். அதனால் தோசை மூட்டையை எடுத்துக் கொண்டு, உலகத்தை வெற்றி கொள்ளும் பயணத்தை ஆரம்பித்தான். அவனுக்குச் சம்பாதிக்கும் வழிப் பற்றிய அறிவு கொஞ்சம் கூட இருக்கவில்லை. திக்குத் தெரியாமல், பல இடங்களில் சுற்றித் திரிந்தான். கடைசியில் ஒரு நதிக்கரையை அடைந்தான்.

கரையில் அமர்ந்து கொண்டு, தோசையை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். சில தோசைகளையே சாப்பிட்டு இருப்பான். அப்போது மிகவும் சிறிய ஒரு முள அளவு கொண்ட பாம்பினைக் கண்டான். அது தரையில் அசைவற்றுக் கிடந்தது.இளைஞன் அதை கருணையுடன் நகர்த்தினான். அது நோய்வாய்ப்பட்டு இருந்தது போல. உயிர் இருந்தது. தன்னுடைய பையில் இருந்த காகிதப் பெட்டியை எடுத்து, அதை அதில் வைத்தான். அப்போது அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. இந்தப் பாம்பினால் என்றாவது ஒரு நாள் தன்னால் சம்பாதிக்க முடியும் என்று.

அவன் பாம்பினை நன்கு பார்த்துக் கொண்டான். தன்னுடைய தோசையை அதனுடன் பகிர்ந்து கொண்டான். நாளாக நாளாக, காகிதப் பெட்டியில் இருக்க முடியாத அளவு பாம்பு பெரிதானது. இளைஞன் பாம்பினை ஒரு சிறிய குளத்தில் விட்டுக் கவனித்துக் கொண்டான். தனக்கு எப்போதெல்லாம் சாப்பிட ஏதாவது கிடைக்கிறதோ, அதை எடுத்து வந்து பாம்புடன் பகிர்ந்து கொண்டான். செல்லப் பிராணியாக பாம்பு நன்கு கொழு கொழுவென குளமும் பத்தாமல் போகும் அளவிற்குப் பெரிதானது.

ஒரு நாள், குளத்திற்கு வந்த இளைஞனிடம் பாம்பு, “நீ என்னைப் பெரிய நதிக்கு எடுத்துச் செல். இங்கு இடம் போதவில்லை. அங்கு நான் சுதந்திரமாக வலம் வர முடியும்” என்றது.

இதைக் கேட்ட இளைஞன் சற்றே வருந்தி, பாம்பிடம், “நான் உன்னை யாரிடமாவது விற்று காசு பண்ணலாம் என்று தான் என்னிடம் வைத்து இருந்தேன். உனக்குத் தெரியமா.. நான் ஏதாவது சம்பாதிக்காமல் வீடு திரும்பக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்” என்ற உண்மையைக் கூறினான்.

பாம்பு ஒரு நொடி யோசித்தது. பிறகு, “அப்படியென்றால் சரி.. உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். என்னைப் பெரிய நதிக்குக் கொண்டு போய் விடு. உனக்கு நல்ல பரிசு காத்திருக்கிறது” என்றது.

நல்ல மனம் கொண்ட இளைஞன், ஒரு கூடையைக் கண்டுபிடித்து, பாம்பை அதில் இட்டு, தன் தோளில் போட்டுக் கொண்டு, நதியை நோக்கிச் சென்றான். பாம்பினை நதியில் எறிந்த மறு கணமே, அது தங்கச் செதில்களும் துடுப்புகளும் கொண்ட பெரிய டிராகனாக மாறியது. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஆடி ஆடி உள்ளே சென்று பெரிய பெரிய அலைகளை ஏற்படுத்தியது. பிறகு இளைஞனை நோக்கி நீந்தி வந்தது.
“நீ ஒரு உண்மையான நண்பன். என்னுடைய சத்தியத்தை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். இதோ உனக்காக ஒரு சிறிய கழுதை” என்று மகிழ்ச்சியுடன் அவனுக்கு உதவ முன் வந்தது. டிராகன் சொல்லி முடிக்கும் முன்பே, ஒரு கழுதை அவர்கள் முன் தோன்றியது. “உனக்கு எப்போது பணம் வேண்டுமோ அப்போது கழுதையிடம் கொஞ்சம் தங்கமும் வெள்ளியும் தா என்று கேள். உனக்கு வேண்டியது கிடைக்கும்..” என்று கூறியது டிராகன்.

இளைஞன் பெரு மகிழ்ச்சி கொண்டான். டிராகனின் கருணைக்கு நன்றி தெரிவித்தான். அவன் கழுதையை அழைத்துக் கொண்டு, வீடு செல்ல திரும்ப எத்தனித்த போது, “ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் கொள். இதைப் பற்றி யாரிடமும் சொல்லி விடாதே..” என்று அவனது வெகுளித்தனத்தை உணர்ந்த டிராகன் எச்சரித்தது.

இளைஞனும் கழுதையும் வீட்டை நோக்கி, புழுதி படிந்த வீதியில் நடந்து கொண்டிருக்கும் போது, இருட்டி விட்டது. இனியும் பயணத்தைத் தொடர முடியாது என்று முடிவு செய்த இளைஞன், அங்கு வழியில் ஒரு விடுதியைக் கண்டதும், அன்றிரவை அங்கே கழிக்க எண்ணினான். விடுதிக்குள் நுழைந்து தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டான். கழுதையுடன் வந்த இளைஞனுக்கு இடம் தரச் சம்மதித்தான். ஆனால் கழுதையை லாயத்தில் கட்ட வேண்டும் என்றான். இளைஞனும் அதற்குச் சம்மதித்தான். விடுதியாள் கழுதையை லாயத்தில் கட்ட இழுத்துச் சென்ற போது, “என்னுடைய கழுதைக்கு நல்ல உணவு கொடுங்கள். ஆனால் தங்கம் வெள்ளி தா என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்” என்று கூறினான்.

விடுதியாள் ஒப்புக் கொண்டு, கழுதையை இழுத்துச் சென்றான். இளைஞன் நன்கு உண்ட பின், மறுநாள் தாயிடம் கழுதையைக் காட்டி நல்ல பெயர் வாங்கி வீட்டில் தங்கலாம் என்ற கனவுகளுடன் நிம்மதியாகத் தூங்கினான்.

இளைஞன் சொன்ன கூற்று விடுதியாளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவனது வார்த்தைகள் அவனது எண்ணத்தில் மாறி மாறி வந்து சென்றது. இரவில் அவனால் உறங்க முடியவில்லை. நடு இரவில் முயன்று விடுவது என்ற ஒரு முடிவுடன் எழுந்து லாயத்திற்குச் சென்றான். கழுதையின் காதில் மென்மையாக “கழுதையே.. கழுதையே.. எனக்குத் தங்கம் தா” என்று கிசுகிசுத்தான்.

விடுதியாள் சொல்ல வந்ததை முடிக்கும் முன்னரே, அவனது காலடியில் ஒரு சிறு தங்கக் குவியல் தோன்றியது. அதைக் கண்டு ஆடிப் போனான். அத்தனைத் தங்கத்தை அவன் ஒரு சேரப் பார்த்ததேயில்லை. தங்கத்தை பத்திரபடுத்திய பின், உடனே இளைஞனின் கழுதைக்கு பதிலாக இரவோடிரவாக ஊரில் தேடி, இளைஞனின் கழுதையைப் போன்ற மற்றொரு கழுதையை கண்டுபிடித்துக் கொண்டு வந்து லாயத்தில் கட்டினான். அதிசயக் கழுதையையும் ஒளித்து வைத்தான்.

விடியும் போது இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்தான். கிடைத்த பரிசின் காரணமாக, விடுதியாள் மிகவும் பணிவுடன் இளைஞனுக்கு தேவையானவற்றை சிறப்பாகச் செய்தான். நல்ல உணவு அளித்தான். கிளம்பும் போது, லாயத்தில் இருந்த கழுதையை அவனிடம் தந்து, நல்ல பயணத்திற்கு வாழ்த்துக் கூறி அனுப்பினான்.

வீட்டிற்கு வந்ததுமே, தாய் மகனிடம் “என்னப்பா.. கழுதையோடு வந்திருக்கிறாய்? எவ்வளவு சம்பாதித்து வந்தாய்?” என்று கேட்டாள். மிகுந்த ஆர்வத்துடனும் கர்வத்துடனும், “அம்மா.. இங்கே பாருங்கள் என் கழுதையை.. அது நான் கேட்கும் போதெல்லாம் தங்கமும் வெள்ளியும் கொடுக்கும் தெரியுமா? வேகமாக ஒரு ஜமக்காளத்தைக் கொண்டு வாருங்கள். நான் காட்டுகிறேன்..” என்றான்.

தாய்க்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன் மகனா? புத்திசாலியாக ஒரு பொக்கிஷத்தைக் கொண்டு வந்திருக்கிறானா? உடனே வேகமாகப் போய் ஒரு ஜமக்காளத்தைத் தரையில் விரித்தாள். பிறகு, இளைஞன் மிகவும் கவனத்துடன் கழுதையை அதற்கருகே அழைத்து, “கழுதையே.. கழுதையே.. எனக்குக் கொஞ்சம் தங்கம் தா..” என்றான்.

கழுதை அவனை பார்த்த வண்ணம் நின்றது. மறுபடியும் அவன் ஆணையிட்டான். கழுதை அமைதியாக நின்றிருந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் கூறினான். ஒன்றும் நடந்த பாடில்லை. அவன் மிகவும் வெறுத்துப் போனான்.

நடப்பதைக் கண்டு தாய், தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற கோபத்தில் சீறினாள். “என்ன இது முட்டாள் தனம். கழுதையைக் கொண்டு வந்து தங்கத்தைத் தா என்று கேட்டால் அது கொடுக்குமா? உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?” என்று கத்தினாள். மகன் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

“அம்மா.. பொறுமை.. பொறுமை.. அது நிச்சயம் கொடுக்கும். கொஞ்சம் நேரம் எடுக்குமோ என்னமோ?” என்றான் சந்தேகத்துடன்.
மாறாகக் கழுதை அவர்களது குரலைக் கேட்டு பயந்து கத்தியது. மண்டியிட்டு ஜமக்காளத்தில் படுத்து தூங்கிப் போனது. தாயும் மகனும் அதை எழுப்பிப் பார்த்தனர். எழுப்ப முடியவில்லை. பொறுமையின் எல்லையைக் கடந்த தாய், கோபம் கொண்டு, இளைஞனை திட்டி, கட்டையால் அடிக்க ஆரம்பித்தாள். இளைஞனோ வலி தாங்க முடியாமல் அலறினான். கழுதையையும் அடித்து எழுப்பி, இருவரையும் வீட்டிற்கு வெளியே துரத்தினாள் தாய்.

வலியால் துடித்தான் இளைஞன். தாயை மகிழ்ச்சி படுத்த முடியவில்லை என்ற மற்றொரு கவலையும் சேர்ந்து கொண்டது. அவனது எண்ணம் உடனே டிராகன் பக்கம் திரும்பியது. அதனால் தானே இந்த அடியும் உதையும் திட்டும். டிராகனை வெறுத்தான். அதனிடம் தன் வெறுப்பைத் தெரிவிக்க எண்ணி நேரே நதிக்கரைக்குச் சென்றான். டிராகனை தன் உச்சக் குரலில் கத்தி அழைத்தான். திடீரென்று அலைகள் எழும்பி, டிராகன் தலையை வெளியில் நீட்டி எட்டிப் பார்த்தது.

“இப்போது என்ன வேண்டும்? ஏன் என்னை அழைத்தாய்?” என்று கேட்டது.

மிகுந்த வெறுப்புடன், “என்னை ஏன் ஏமாற்றினாய்.. கழுதையை நீயே எடுத்துக் கொள். அது எனக்கு தங்கம் கொடுக்கவில்லை. மாறாக என் தாயிடம் திட்டும் அடியும் தான் பெற்றுக் கொடுத்தது” என்றான்.

டிராகன் விளக்கம் எதுவும் கூறவில்லை. ஆனால், “அப்படியா.. சரி.. கழுதை உனக்கு வேண்டாமென்றால், நான் வேறொன்றைத் தருகிறேன்..” என்று மட்டும் சொன்னது அன்புடன்.

நொடியில் நதிக்கரையில் ஒரு அழகிய மேஜைவிரிப்பை விட்டிடெறிந்தது. “இதை எடுத்துக் கொள். உனக்கு பசிக்கும் போது, இதை விரித்து உனக்கு வேண்டிய உணவினைக் கேள். இது கொடுக்கும்” என்றது.

இம்முறை அவன் ஏமாற விரும்பவில்லை. அங்கேயே விரிப்பை விரித்து தனக்கு வேண்டிய பலகாரம் ஒன்றைத் தருமாறு கேட்டான். உடனே அது விரிப்பில் தோன்றியது. திருப்தியுடன் டிராகனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, நன்றியையும் தெரிவித்து கொண்டு, மேஜைவிரிப்புடன் வீடு நோக்கிப் பயணமானான்.

முன்பைப் போன்றே வழியில் இருட்டிவிட்டது. அருகே அதே விடுதி இருந்தது. நடந்தது எதையும் அறியாத இளைஞன் அந்த விடுதியிலேயே தங்க முடிவு செய்தான்.

விடுதியாள் இளைஞனைக் கண்டதுமே, கழுதையைப் பற்றிக் கேட்கத்தான் வந்திருக்கிறனோ என்று முதலில் எண்ணி பயந்து போய், முழி பிதுங்கி நின்றான். இளைஞன் “தங்க இடம் கிடைக்குமா?” என்று கேட்டான். இளைஞன் கழுதையைப் பற்றி எதுவுமே கேட்காததால், விடுதியாள் சற்றே ஆசுவாசப்பட்டுக் கொண்டான். இளைஞனுக்கு தங்க இடத்தை ஏற்பாடு செய்தான். இம்முறை இளைஞன் மேஜைவிரிப்பை தன் தலைக்கருகே பத்திரமாக வைத்துக் கொண்டு தூங்க முற்பட்டான். மேஜை விரிப்பு மிகவும் அழகாக இருந்ததால், அதன் மேல் ஆசை கொண்டான்.

விடுதியாள் இளைஞனிடம், “இந்த மேஜை விரிப்பு அழகாக இருக்கிறது. அதை நான் பத்திரமாக வைத்து உங்களிடம் காலையில் தரட்டுமா?” என்று கேட்டான். இளைஞன், “அதெல்லாம் வேண்டாம். அது என்னிடமே இருக்கட்டும். அதனிடம் “எனக்கு இன்ன உணவு கொடு” என்று மட்டும் கேட்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தூங்கினான்.

தந்திரக்கார விடுதியாள் இளைஞன் சொன்னதைக் கேட்டு தலையை மட்டும் ஆட்டிவிட்டு, தனக்குள் சிரித்துக் கொண்டு, மேஜைவிரிப்பு மற்றொரு பொக்கிஷம் என்பதை மட்டும் புரிந்து கொண்டான்.

அடுத்த நாள் தாயைக் கண்டு தான் பெற்ற பரிசினைக் காட்டி நற்பெயர் வாங்கும் கனவுகளோடு இளைஞன் மெய்மறந்து உறங்கினான். இரவில் இளைஞன் அருகே எந்தவித சத்தமும் செய்யாமல் நைசாக நடந்து சென்று, தலை மாட்டில் வைத்திருந்த விரிப்பை எடுத்துப் பார்த்தான். இரவோடு இரவாக அதைப் போன்ற மேஜைவிரிப்பை தேடிக் கண்டுபிடித்தான். இளைஞனின் விரிப்பை மாற்றி வைத்தான்.
மறுநாள் முதல் சேவலின் கூவலிலேயே இளைஞன் விழித்து எழுந்தான். தன் அருகே இருந்த மேஜைவிரிப்பை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டு, வீட்டை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

வீட்டை அடைந்ததும், மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். கோபத்துடன் வரவேற்றத் தாயிடம், “அம்மா.. இந்த முறை எல்லாமே நல்லதாக நடக்கும்” என்ற நம்பிக்கையைத் தந்து வீட்டிற்குள் நுழைந்தான். “அம்மா.. உங்களுக்கு என்ன உணவு வேண்டுமோ கேளுங்கள்” என்றான்.
இளைஞனின் வார்த்தைகளில் குழப்பமடைந்த தாய், வேறெதையும் யோசிக்காமல், “அதனால் என்ன நல்லது நடக்கும்?” என்று கேட்டாள்.
இளைஞன் விரிப்பைக் கீழே விரித்தான். “அம்மா.. வாருங்கள்.. உங்களுக்கு என்ன உணவு வேண்டுமோ கேளுங்கள்?” என்றான் மறுபடியும்.
சந்தேகமாக இருந்த போதும், ஆர்வத்துடன், தாய் சிரித்துக் கொண்டே, “சரி.. நான் மிகச் சாதாரண உணவைக் கேட்கிறேன். எனக்கு சுவையான ஒரு கிண்ணம் சாதம் கொடுக்கச் சொல்..” என்றாள்.

இளைஞன் விரிப்பின் பக்கமாக குனிந்து, “எனக்கு சுவையான சாதத்தைக் கொடு..” என்று ஆணையிட்டான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கெஞ்சியும் கத்தியும் மறுபடி மறுபடி கேட்டுக் பார்த்தான். எதுவும் நடந்த பாடில்லை. தாயின் முகம் கோபத்தால் சிவந்தது. மகன் மறுபடியும் தன்னை ஏமாற்றவே வந்திருக்கிறான் என்ற எண்ணினாள். புத்தி வரும் என்று பார்த்தால், இன்னமும் உருப்படாமல் இப்படித் திரிகிறானே என்ற வருத்தத்துடன் தாய் மகனை வீட்டை விட்டு துரத்தினாள். இளைஞன் மறுத்ததும், அடித்து வீட்டிற்கு வெளியே தள்ளினாள்.

தன்னை டிராகன் தான் மறுபடியும் ஏமாற்றிவிட்டது என்று எண்ணி இளைஞனுக்கு, அதன் மேல் கடுங்கோபம் ஏற்பட்டது. டிராகனைப் பார்க்க நதிக்கரைக்குச் சென்றான். கத்தி அழைத்தான். அலைகளையெழுப்பி டிராகன் வெளியே வந்தது. டிராகனைக் கண்டதுமே, “என்ன இது.. நன்றிகெட்டத் தனம்..” என்று கத்திய இளைஞன், “என்ன கேலி செய்கிறாயா? கழுதை தங்கம் தரும் என்றாய். எதுவும் தரவில்லை. மேஜைவிரிப்பு உணவு தரும் என்றாய். எதுவும் தரவில்லை. உன்னிடம் எந்தப் பொக்கிஷமும் இல்லை. என்னை ஏமாற்றத் தான் பொருள்களைத் தந்தாய். எனக்கு இனி ஒன்றும் வேண்டாம். இப்போது உன்னால் தான் என் தாயிடம் இரண்டாவது தடவையாக நன்கு அடி வாங்கினேன். என் தாய் இனி என்னை நம்ப மாட்டார்.. போதும் போதும்..” என்று கூறி அழ ஆரம்பித்தான்.

டிராகன் மறுபடியும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. “நண்பனே.. ஒரு நிமிடம் பொறு.. நான் உனக்கு வேறு பொருளைத் தருகிறேன்” என்றது. அடுத்த நொடி, நதிக்குள் சென்று, டிராகன் ஒரு மரக்கட்டையுடன் திரும்பியது. அதை இளைஞனிடம் கொடுத்து, “இம்முறை நீ இரவில் விடுதியில் தங்க நேர்ந்தால், விடுதியாளிடம் நிச்சயம் மரக்கட்டையே.. மரக்கட்டையே என்னை அடி என்று மட்டும் சொல்லச் சொல்லி விடாதே” என்றது.

வழக்கம் போல், வழியிலே இருட்டிவிட, இளைஞன் விடுதியில் தங்கச் சென்றான். பேராசை கொண்ட விடுதியாள், இம்முறை என்ன பொக்கிஷம் காத்திருக்கிறதோ என்ற ஆவலுடன், இளைஞனை மறுபடியும் கண்டதும் தன்னால் முயன்ற வரை இளைஞனை நன்கு கவனித்துக் கொண்டான். நல்ல உணவு கொடுத்தான். களைப்புடன் உறங்கச் சென்ற இளைஞனிடம் “பத்திரப்படுத்த எதாவது பொருள் இருக்கிறதா” என்று கேட்டான்.

“அப்படியொன்றுமில்லை. இந்த மரக்கட்டை தான் என்னிடம் இருக்கிறது. மரக்கட்டையே மரக்கட்டையே என்னை அடி என்று மட்டும் இதனிடம் சொல்லக் கூடாது” என்று சொன்னான்.

விடுதியாள் “இதில் என்ன இருக்கிறதோ.. நம்மிடம் இளைஞன் மறைக்கிறான்..” என்று எண்ணியவன், தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

பிறகு அனைவரும் நன்கு உறங்கிய பின், வழக்கம் போல், மரக்கட்டை திருடிச் சென்றான். இம்முறை அதை மாற்றவும் பொறுமையின்றி, தன் அறைக்குச் சென்று, “மரக்கட்டையே.. மரக்கட்டையே.. எனக்கு வீடு கொடு” என்றான். எதுவும் கிடைக்கவில்லை. மற்ற பொருள்களை ஒவ்வொன்றாகக் கேட்டுப் பார்த்தான். எதுவும் நடக்கவில்லை என்றதும் “மரக்கட்டையே.. மரக்கட்டையே.. என்னை அடி” என்று கத்தினான்.

எதாவது பொருள் கிடைக்கும் என்று எண்ணியவனுக்கு, அவன் சொன்ன வார்த்தைகள் முடிக்கும் முன்னரே, கட்டை அவன் கைகளிலிருந்து குதித்து, அவனை அடிக்க ஆரம்பித்தது. தலை முதல் கால் வரை ஒரு இடம் விடாமல் அடித்தது. விடுதியாள் கத்தினான். கதறினான். ஆனால் கட்டை விடுவதாக இல்லை. மறுபடி மறுபடி அது சுரீரென்று அடித்தது. அவனது உடலில் எந்த பாகத்தையும் விட்டு வைக்கவில்லை. விடுதியாள் தப்பிக்க முயன்றான். ஆனால் எங்கே ஓடினாலும், கட்டை விடுவதாக இல்லை. துரத்தித் துரத்தி அடித்தது. அவன் உடல் ரணகளமானது. எங்கும் சென்று ஒளிய முடியவில்லை.

இளைஞன் தான் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறான் என்று எண்ணி, கடைசியில் அவனது அறைக்கு ஓடினான். இளைஞன் சத்தம் கேட்டு எழுந்தான். கட்டை விடுதியாளை அடிப்பதைக் கண்டு, இளைஞனுக்கு என்ன நடக்கிறதென்று புரியவில்லை. விடுதியாள் “என்னால் இனியும் இந்த அடியைத் தாங்க முடியாது. கட்டையை நிறுத்தச் சொல்..” என்றான்.

இளைஞன் விடுதியாள் படும் பாட்டைக் கண்டு இரக்கப்பட்டு கட்டையிடம் அடிப்பதை நிறுத்தச் சொன்னான். ஆனாலும் கட்டை அடித்த வண்ணம் இருந்தது. விடுதியாள் மறுபடியும் கெஞ்சினான். கட்டை தன் வேலையை செய்தது. கடைசியில் விடுதியாள் “ஐயோ.. ஐயோ.. வலி தாங்க முடியவில்லை.. உங்களிடம் திருடிய கழுதையையும் மேஜைவிரிப்பையும் நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.. அடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்..” என்று கெஞ்சினான்.

இளைஞனுக்கு அப்போது தான் நடந்த விவரம் தெரிந்தது. விடுதியாள் பொருள்களை திருப்பித் தருகிறேன் என்று சொன்னதும் கட்டை தன் வேலையை நிறுத்தியது. வலி தாங்காத விடுதியாள், கழுதையையும் விரிப்பையும் ஓடிச் சென்று கொண்டு வந்து கொடுத்தான்.

மறுநாள் காலை, இளைஞன் டிராகன் தந்த பொக்கிஷமான விரிப்பையும் கட்டையையும் எடுத்துக் கொண்டு, மந்திரக் கழுதை பின்னால் வர, மகிழ்ச்சியுடன் தன் தாயைக் காண வீட்டை நோக்கிப் பயணமானான்.

இளைஞன் நடந்த விஷயமனைத்தையும் தாயிடம் கூறினான். மூன்று பொக்கிஷங்கள் அவர்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கியது.

Series Navigationஎதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *