டௌரி தராத கௌரி கல்யாணம்…!

This entry is part 5 of 31 in the series 31 மார்ச் 2013

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர்சிதம்பரம்.

 

சித்ரா…சித்ரா ..! மாப்பிள்ளை யாத்துக்காரா எல்லாரும் கிளம்பியாச்சாம்…இன்னும் அரைமணி நேரத்தில் வந்துடுவாளாம் இப்போ தான் ஃபோன் பண்ணினார்.  என் கணக்குக்கு இந்த டிராஃபிக்கில் மாட்டிண்டு வெளில வந்து சேர எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் . அவாள்ளாம்   வரும்போது நம்ம கௌரியை ரூமுக்குள்ள போய் உட்காரச்சொல்லு . நாம கூப்பிட்ட போது வந்தாப் போறும்ங்கிட்டியா ஈஸ்வரன் ஈனஸ்வரத்தில் சொல்லிவிட்டு போகிறார்.

ஒ……நான் அப்பவே சொல்லியாச்சு கேட்டேளா….நம்மாத்துல ..இதென்ன முதலாவதாவா நம்ம கௌரியைப்  பெண் பார்க்கிற கோலாகலம்  நடக்கறது. இத்தோட சேர்த்து மூணாவது .! எண்டே குருவாயூரப்பா….! இதாவது நிச்சயத்தில் கொண்டு போய் நிறுத்தேன்…உன் சன்னதில வந்து துலாபாரம் தூக்கறேன்.

அவரோட கவலை அவருக்கு….வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்ன்னு சொன்னாப்பல…இந்தாத்தை கட்டி முடிச்சு இப்பத் தான் ஒரு சாதியா வீட்டுக்  கடனை அடைச்சி மூச்சு விட்டு நிமிர்ந்திருக்கோம். அதுக்குள்ள கல்யாணம்னா இன்னும் எங்கல்லாம் கடன் வாங்கணுமோங்கற பயம் உள்ளூர இருக்காதா என்ன? இந்த லட்சணத்துல கொடுக்க மாட்டேன் வரதட்சணைன்னு அப்பாவும் பொண்ணுமா…  கொடியை மேலே தூக்கி  கெட்டியாப் பிடிச்சுண்டு நிக்கறா..பெத்தவ என் வயித்துல புளியைக்  கரைக்கிறது அவாளுக்கு என்ன தெரியும்? அங்கலாய்க்கிறாள் சித்ரா.

.சித்ராவுக்கு அம்பது வயசுன்னா யாரும் சத்தியம் பண்ணினாக்கூட நம்ப மாட்டா.அவ்வளவு இளைமைத் தோற்றம்..அதிலயே அவளுக்கு ஏக பெருமை.இதில் அவளோட ஒரே பொண்ணு கௌரி இருபத்தைந்து வயசாச்சு. இன்னும் சாண் ஏறி முழம் சறுக்கிண்டு, அவ சொல்ற ஒன்னொண்ணுக்கும் தலையாட்டற வரன் வர வேண்டாமா? அதுக்குள்ளே சித்ராவுக்கே வயசாயிடும்.

நேக்கு இந்தப் புடவை நன்னாருக்கா…..பாந்தமா இருக்கோ.? கழுத்து நெக்லஸை சரி செய்தவளாக லேசாகத் திரும்பியவள் கணவர் ஈஸ்வரனிடம்  கேட்கிறாள். நிற்கும் தோரணையே ஏதோ நாடக நடிகையை ஞாபகப் படுத்தியது ஈஸ்வரனுக்கு.

ஏ ……..நோக்கென்ன குறைச்சல்ங்கறேன்…..உன்னப் பார்த்தால் பொண்ணுக்கு அக்காவான்னு கேட்பா,பாரேன்…அப்போ நான் பொண்ணோட அம்மாவுக்கு எங்கியாக்கும் போறது…?

போறும்  போங்கோ…! தத்தக்கப் பித்தக்கான்னு உளரப்டாது .! கெடக்கறது கெடக்கட்டும்னு ஏதோ  சொல்வாளே அதாக்கும்….இங்க நடக்கறது…இப்படியெல்லாமா மனசுக்குள்ள நினைப்பு ? எண்டே குருவாயூரப்பா….என்னே ரக்ஷிக்கனமே..! முதல்ல ஆத்துல திமிறிண்டு  நிக்கறதை நல்லபடியா வெளிய அனுப்பற வழியைப் பார்க்கணுமாக்கும். ம்ம்ம்….ஏன்னா..? இந்த நெக்லஸ் நேக்கு எடுப்பா இருக்கோ? கல்யாணி கவரிங்குல நேத்து தான் புதுசா வாங்கினேன்.கௌரியோட கல்யாணத்துக்கு இதே மாடல்ல தங்கத்துல செய்யக் கொடுக்கணுமாக்கும்

ஆமாம்…எதோ தங்கத்துல செய்யக் கொடுக்கணும்னு சொன்னியே….அது நோக்கா….இல்லை கௌரிக்கா  ? சந்தேகமாகக் கேட்டார் ஈஸ்வரன்.

ஆமா…நான் நேக்குத் தான்னு சொன்னா உடனே வாங்கிக் கொடுத்துட்டுத் தான் மறுவேலை பார்ப்பேளாக்கும் ..? இதுல குதர்க்கமா கேள்விக்கொண்ணும் குறைச்சலில்லை..
நான் கொடுத்து வெச்சது “கல்யாணி கவரிங்” தான்…எல்லாம் நான் வாங்கிண்டு வந்த வரம்.

.ஏண்டி இப்படி என் மானத்த வாங்கறே? இப்படி நீயே பள பள ன்னு நின்னா…மாப்பிள்ளையாத்துக் காரா…நம்மள நல்ல பசையுள்ள இடம்னு தப்பா நினைச்சுண்டு போட்டுத் தேய்க்கப் போறா..அப்பறம் இதுவும் தட்டிப் போனா அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை…ஆமா ,.இப்பவே சொல்லிட்டேன்.

ம்கும்…என்ன பொண்ணைப் பெத்துட்டா பிச்சைக் கார வேஷம் தான் போடணுமா? அதெல்லாம் இங்க நடக்காதுங்கறேன். இந்த வாட்டியாவது அவா கேட்கறதுக்கு முன்னாடியே நாம நம்ம பொண்ணுக்கு என்ன செய்யப் போறோம்னு சொல்லிட்டாப் போறது…..நீங்க என்ன சொல்றேள்? எப்டி என் ஐடியா…சித்ராவா கொக்கான்னானாம்.

நீ உன் திருவாயை மூடிண்டு சும்மா இருங்கறேன். அவாளா நம்மகிட்ட என்ன கேட்கறான்னு முதல்ல பார்த்துக்கலாம்.நீயா எதையும் உளறிக் கொட்டாதே. நோக்கு ஏற்கனவே கை நீளம்…வாய் நீளம்…இப்போ பொண்ணோட கல்யாணம்னு நீயே என்கிட்டே மளிகை லிஸ்ட் எழுதித் தரா மாதிரி ஏகத்துக்கு இழுத்து விடாதே. அவஸ்தைப் படப் போறது நான் தானே?

ஐயே…பின்ன என்ன தான் பண்ணச் சொல்றேள் என்னை  நீங்க? சும்மா டம்மி பீஸா வந்து உங்க பின்னாடி தலையாட்டீண்டு நிக்கச் சொல்றேளா?

அப்படி நீங்க சொல்றதைக் கேட்டுத் தான் ரெண்டு நல்ல நல்ல அலையன்ஸ் கை நழுவிப் போச்சு. அந்த டெல்லி வரனை விட்டது தப்பாப் போச்சு.

ஒரு லட்சம் தான் கையில கேட்டா….கொடுத்து தொலைச்சிருக்கலாம். உங்க கொள்கையைத் தூக்கி உடைப்புல போடுங்கோ.எந்தக் காலமானா என்ன கேட்கறவா கேட்டுண்டே தான் இருக்கா….கொடுக்கறவா கொடுத்துண்டே தான் இருக்கா…அப்போ தானே காரியம் ஆகும். இல்லாத போனா இப்படித் தான் ஆத்தோட பொண்ணை வெச்சுக்க வேண்டியது தான். வரவா போறவா எல்லாரும் கடைசீல என்ன சொல்வா தெரியுமோ? பொண்ணை  அவளோட சம்பளத்துக்காக கல்யாணம் பண்ணாம வெச்சுண்டிருக்கான்னு வாய் கூசாம சொல்லிட்டுப் போவா.அது நன்னாவாயிருக்கும்?

அந்தந்த காலத்துல செய்ய வேண்டியதை செய்யணுமாக்கும் .ஆமா  நானும் தெரியாமத் தான் கேட்கறேன்…அப்படி நீங்க என்ன தான் மனசுல நெனைச்சுண்டு இருக்கேள்? அதையாவது சொல்லுங்கோ…வெறுங்கையால் முழம் போட முடியாதோன்னோ ?

அடி அசடே….நாமென்ன ஒண்ணத்துக்கும் உதவாத பூச்சி கத்திரிக்காயா வெச்சுண்டு இருக்கோம்.? பி.டெக் முடிச்சுட்டு ‘விப்ரோ’வில் மாசம் சுளையா அம்பதாயிரம் சம்பளம் வாங்கற ஏ  டி எம் மெஷினாக்கும் நம்ம கௌரி. இத்த விட என்ன வேணும்? வருஷத்துக்கு ஆறு லட்சம்….! வரதட்சிணையாவது….வெங்காயமாவது..ஒத்த ரூபாய் தரமாட்டேன்.

இப்ப உன்னையே எடுத்துக்கோ…அந்தக் காலத்துலயே உங்கப்பா,  நயாப்பைசா   வரதட்சிணை தர மாட்டேன்…அதுக்கு நேக்கு வக்கில்லைன்னு சொன்னார்.நானும் போனாப் போறதுன்னு….ஏய்….ஏய்….ஒரு பேச்சுக்குச் சொல்றேனாக்கும் அப்படி முறைக்காதே….! உன்கிட்ட தட்சிணையா முக்கியம் உன்னோட முக தாட்சண்யம் தான் முக்கியம்னு நான் ஒரு இளிச்சவாயன் உனக்கு கிடைக்கலியா? அதே போல கெளரிக்கும்  ஒரு இ-ன்னா வா- ன்னா  கிடைக்காமலா போயிடுவான்…? அது வரைக்கும் பஜ்ஜியும் சொஜ்ஜியும் பண்ணு நான் ஒரு வாய் பார்த்துடறேன்.

ம்கும்..நன்னாருக்கு உங்க வியாக்கியானம். மனசெல்லாம் திங்கர்த்துலயே வெச்சுண்டு இன்னும் வாயைக் கட்ட முடியலை உங்களால.  போன வருஷமே அந்த டெல்லி பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா இந்த வருஷம் நீங்க தாத்தா ஆகியிருப் பேளாக்கும் .  இந்த மூணாவது வரனையாவது ஒழுங்கா நழுவ விடாமல் முடிக்கிற வழியைப்  பார்க்கணும் கேட்டேளா?  ஜாதகம் கூட நன்னாப் பொருந்தி இருக்கு.  கௌரிக்கு ஏத்த பிள்ளை. பெயர் பொருத்தம் கூட பிரமாதமா அமைஞ்சிருக்கு..பார்த்தேளா? ..’கார்த்திக்’ நன்னாருக்குல்லன்னா..?

நான் சொல்லிட்டேனாக்கும்….இந்த ‘கார்த்திக்’ தானாக்கும் நம்மாத்து மாப்பிள்ளை. அவாக் கேட்கறதைக் கொடுத்து வந்த வரனை சட்டு புட்டுன்னு பிடிச்சுப் போடுங்கோ சொல்லிட்டேன்…என்றவள் இருங்கோ ஒரு வாய் காப்பி கலந்து எடுத்துண்டு வரேன் என்று சமையலறை பக்கம் போகிறாள் சித்ரா.

இந்த நிமிஷத்துல இந்த வீடே எலிப்பொறி மாதிரின்னா நேக்குத் தோணறது…! அப்போ மசால் வடை தான் கௌரியா ? என்று கட கட வென்று சிரிக்க.

போதுமே நீங்களும் உங்க துப்புக்கெட்ட  ஜோக்கும்…என்று எரியும் தணலில் தண்ணீர் தெளித்தது போலச் சொல்லிவிட்டு..”பொறுப்பா பொண்ணுக்கு அப்பா மாதிரி பேசுங்கோ…எப்போ தான் வரப் போறதோ அந்தப் பொறுப்பு.?..இதே உங்க அண்ணா…தன்னோட ரெண்டு பொண்களையும் சாமர்த்தியமா லண்டனுக்கும் , அமெரிக்காவுக்கும் பண்ணிக் கொடுத்துட்டு அக்கடான்னு செட்டில் ஆயாச்சு. நாம தான் இன்னும் குண்டுச் சட்டில குதிரை ஓட்டிண்டு நின்ன  இடத்துலயே நிக்கறோம்.

எல்லாரும் குண்டுச் சட்டில குதிரை ஓட்டுவா …சரிதான்…ஆனால் நீ தான் கொட்டங்கச்சியிலயே குதிரை ஓட்டுவியே …எனக்கு நம்பிக்கையிருக்கு ..நீ அலுத்துக்காதேடி சித்ரா..கௌரிக்கு அருமையா வரன் அமையும் நான் நினைச்சா மாதிரி….!

அமைஞ்சாச் சரி…! சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே….கௌரி அறைக்குள்ளிருந்து “அம்மா….அம்மா….இங்க வாயேன்..இந்தப் புடவையை கொஞ்சம் கட்டி விடறியா….ஐ ஜஸ்ட் ஃபர்கெட்…இந்த ஃபிரில் எப்டி பண்றதுன்னு/ ?

ஓ ..இதுக்குத் தான் சொல்றேன்…லீவு நாள்ல, நல்லநாள் கிழமைல புடவை கட்டிப் பழகிக்கோன்னு ….அப்போல்லாம் நைட்டியே கதின்னு கெடந்துட்டு அவசரத்துக்குப் புடவை கட்டத் தெரியலை நோக்கு . நாளைக்கே புக்காத்துல போயி யாரைக் கூப்பிடுவாய்..?சொன்னாக் கேட்டாத் தானே…நல்ல பொண்ணுடி…..இரு… இரு…. இதோ வரேன்…என்று அவசரகதியில் அறைக்குள் ஓடுகிறாள் சித்ரா.

மாம்….எதுக்கு இவ்ளோ ஃ பார்மாலிட்டி. ப்ளீஸ் லீவ் மீ…நான் எப்டி இருக்கேனோ அப்டி இருக்க விடேன்….ஐ ஆம் கம்ஃபர்டபிள்  வித் சுடிதார்..அதைப் போட்டுக்கவா? வொய் திஸ் சாரி வெறி?

ப்ராந்தாட்டமா பேத்தாதே …….இப்ப வரவா….நல்ல ஆர்த்தடாக்ஸ் குடும்பமாக்கும்.. யாரெல்லாம் வராத் தெரியாது..பார்த்தவுடனே , உன்னைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் வரணும். அதுக்குத் தான்.. நோக்கும் இது ஒரு நல்ல அனுபவமா இருக்குமே..கௌரி.

என்ன இருந்து என்ன…? ஐ ரிமைன் தி ஸேம்…நான் யாருக்காகவும் மாற மாட்டேன்.

ஆமா..அப்படியே ஆகாஸத்துலேர்ந்து குதிச்சு வந்துட்டியாக்கும்…நல்ல படியா நடந்துண்டு எப்டியாவது இந்த வரனை முடிக்கிற வழியை பார்க்கணும்.இனியும் காலம் தள்ளக் கூடாது. நீ உங்கப்பா பேச்சைக் கேட்டியானா இந்த ஜென்மத்துல நீங்க சொல்ற மாப்பிள்ளை யாரும் நம்ம வீட்டுக் கதவைத் தட்ட மாட்டார். அதுவும் உங்கப்பா சொல்றாப்பல யாராவது ‘இ -னா  வா -னா..’  வந்து மாட்டினாத் தான் உண்டு. அதுவும் இனிமேலாப் பொறக்கப் போறார்? வந்து எனக்கு டௌரி வேண்டாம்…கௌரி தான் வேணும்னு …?  நீயா யாரையாவது லவ்வு கிவ்வு பண்ணித் தொலைச்சாத் தான் நடக்கும். ஆமா…அப்படி ஏதாவது இருக்கோடி .? இருந்தாச் சொல்லிடு.

அப்படி இருந்தா இப்படி வேஷம்லாம் எதுக்கு ? பாரெண்ட்ஸ்ங்கறது சரியாத் தான் இருக்கு…எல்லாத்துலயும் டௌட்….அம்மா….ஆபீஸ்ல ஒருத்தன் கூட என் பக்கத்துல கூட வந்து நிற்க முடியாது…தெரியுமா? நான் அவ்வளவு டெரர் . எல்லாம் நடிப்பு தான்…பட்…நான் மட்டும் அப்படி ஒரு இதைக் கிரியேட் பண்ணலையின்னு வெச்சுக்கோ ,

அவ்ளோ தான்..அவனவன் எடுத்த எடுப்புல “டேட்டிங் ” போகலாம் வரியான்னு கூப்பிடுவான்.

என்னது.டேட்டிங்கா ? சித்ரா ஆச்சரியத்துடன் கேட்கிறாள்.

ஆமாம்..அதெல்லாம் நோக்குப் புரியாதும்மா…!

நேக்கேன் புரியாது../ எவ்வளவு தமிழ் சீரியல் பார்க்கிறேன்….!

அது சரி…சீரியல் பார்த்தால் போதுமே எதேஷ்டமாப் புரியும்….என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு…ஆமா….உன்னை அப்பா டேட்டிங் அழைச்சுண்டு போயிருக்காரோ?..

நன்னாக் கேட்டே போ….கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு…..ஒரு போட்டிங் கூட அழைச்சுண்டு போனதில்லை.

கட கட வென்று சிரித்த கௌரி…இன்னைக்கும் அப்பா அப்படியே தான் இருக்கார். கஞ்சூஸ்..!

அதான் நானும் சொல்றேன் கேட்டுக்கோ..! இப்ப வரவா ஏதாவது டௌரி கிவ்ரி கேட்டால் போனாப் போறதுன்னு நீ தலையாட்டிடு..புரிஞ்சுதா ?

நோ…நோ…நோ….அது மட்டும் நடக்காது.இது தான் சாக்குன்னு நீ சந்துக்குள்ள புகாதே….எனக்குன்னு சில வல்யூஸ் இருக்கு. !

மண்ணாங்கட்டி….இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது..என்று சொல்லிக் கொண்டே புடவைத் தலைப்பை கௌரியின் தோள் மேலே சார்த்தி விடுகிறாள் சித்ரா.

ச்சே…போம்மா…விடு..எனக்கு இந்த சாரி வேண்டாம்…. என்னமோ வெயிட்டைத் தூக்கீண்டு ரோபோ மாதிரி என்னால நிக்க முடியாது…அத்தனை நேரம் கஷ்டப் பட்டு கட்டி விட்டதை ஒரு நிமிஷத்தில் உருவிக் கட்டிலில் வீசி விட்டு அவளுக்குப் பிடிச்ச சுடிதாரை எடுத்து நிமிஷம் மாட்டிக் கொண்டு “ம்ம்ம்ம்…..நான் ரெடி ….எங்கே உன் மாப்பிள்ளை? என்று சிரிக்கிறாள் கௌரி.

இந்தா இந்தப் பூவை வெச்சுக்கோ….கழுத்தில இந்த செயினை போட்டுக்கோ…சித்ரா எடுத்துத் தருகிறாள்.

நத்திங் டூயிங்…..இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கெல்லாம் நீயே மாட்டிக்கோ….நான் இவ்ளோ தான்…! எதுக்கு இந்தப் புடவைக்கடை…பூக்கடை….நகைக்கடை எல்லாம்?  நான் என்ன மரப்பாச்சி பொம்மையா.?.அலங்காரம் பண்ணீண்டு கொலுல உட்கார?  சொல்லிக்கொண்டே “..சாஜ்ஜனா ….  ஜூடோ ஜோ  தேரே  காப் ஸே…….. தூ சூட்டே ஹம்  நீந்த்  ஸே  …ஏ  கைஸா தேரா  இஷ்க் ஹை …சாஜ்ஜனா … ஆ ஆஆ ஆ …ஆ ஆ ஆ ….” என்று அவளுக்குப் பிடித்த ஹிந்திப் பாடலை  மெல்லப் பாடிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்து டச் அப் செய்து கொண்டிருக்கிறாள்.

நமக்காகத்தான் இதெல்லாம்…..வேறெதுக்கு ? இதெல்லாம் போட்டுண்டாத்தான்  பொண்ணுக்கு அழகு. சரி.உன்னோட இப்போ என்னால மல்லுக்கு நிக்க முடியாது..   உன் இஷ்டப் படி செய்.என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போறியோ நேக்கு பயம்மா இருக்கு. எல்லாம் நல்லபடியா முடியணும் சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் போகிறாள் சித்ரா, தாய்மைக்குரிய தவிப்புடன்.

வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது. வீட்டுக்குள் ஒரு பரபரப்பு மின்னல் அடிக்குது. ஈஸ்வரன் வாயெல்லாம் பல்லாக வருபவர்களை வரவேற்க வெளியே ஓடுகிறார் . சித்ரா அவசர அவசரமாக எத்தனை பேர்கள் வருகிறார்கள் என்று தலையை எண்ணுகிறாள்.

காரை விட்டு இறங்கிய ஐந்து பேர்களும் புன்னகைத்தபடியே வீட்டுக்குள் நுழைகிறார்கள். மாப்பிள்ளை பையன்  கார்த்திக் துரு துரு வென்று இருப்பதைப் பார்த்ததுமே சித்ராவுக்கு மனசுக்கு ரொம்ப பிடித்துப் போயிற்று..கௌரிக்கு பொருத்தமானவர்  தான். என்று மனசு சொல்லிக் கொண்டது.  ஆனால் கௌரிக்குப் பிடிக்கணுமே !

வந்தவர்கள் சௌகர்யமாக அமர்ந்து கொண்டு…அறிமுகப் பேச்சு முடிந்ததும்….. மாமி ஒரு தாம்பாளம் எடுத்துண்டு வாங்கோ….என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னதும்.. அருகில் தயாராக எடுத்து வைத்திருந்த பித்தளைத் தாம்பாளத்தை எடுத்து பௌயமாக நீட்டுகிறாள் சித்ரா.

அவர்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்த மஞ்சள்,வெத்தலை,பாக்கு, பூ,பழம்,என்று அனைத்தையும் எடுத்து தாம்பாளத்தில்  வைத்து விட்டு பொண்ணை அழையுங்கள்…என்று அன்பாக சொல்கிறார்.

இதோ…..என்று தாம்பாளத்தை எடுத்து ஸ்வாமி அலமாரியருகில் வைத்து விட்டு… அப்படியே கௌரியை அழைத்துக் கொண்டு வருகிறாள் சித்ரா. மனசுக்குள் ‘ச்சே..இன்னைக்குன்னு பார்த்து இவள் பட்டுப் புடவையைக் கட்டிக்கலை…எவ்வளவு சொன்னேன்…கொஞ்சம் பூவாவது வெச்சுண்டு நிற்கப் படாதா? என்ன அவ்ளோ அழிச்சாட்டியம்….மனசு கிடந்து தவித்தது…அவர்களுக்கு பெண்ணைப் பிடிக்க வேண்டுமே.. என்று கடவுளை வேண்டிக் கொண்டது. அவா என்ன பாடச் சொல்லப் போறாளோ….இவள் என்னத்தைப் பாடப் போறாளோ…இவளுக்குத் தான் வாயைத் திறந்தால் ஹிந்தி சினிமாப் பாடல் தானே வரும்….”இது சொதப்பாமல் இருக்கணும்”

தவிப்பாகவே இருந்தாள்  சித்ரா.

சித்ராவின் பயந்த பார்வையைக் கௌரி படித்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் .இதென்ன எனக்கு வாழ்க்கை பரிட்சையா..?.என்ன…அம்மா ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கா..?   ஆபீசில் நான் எத்தனை பேரை இண்டர்வியூ பண்ணியிருக்கேன்…இதெல்லாம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போறது..பாவம்..நினைத்துக் கொண்டவளாக அம்மாவைப் பார்த்து கண்சாடை காட்டுகிறாள்…அது,  நீ அமைதியா இரேன்….நான் பார்த்துக்கறேன்….என்று சொல்லியது.

கம கம வென்று வீடெல்லாம் பரவியது  நரசுஸ் காப்பி மணம்.   எல்லோரது கையிலும் மணக்க மணக்க காப்பியும்  தட்டில் டிஃபன் வகையுமாக  நாவில் நீர் சுரக்க வைத்தன.   கார்த்திக்கின் அம்மா வந்திருந்த ஒவ்வொருவரையும் இவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு….கௌரியைப் பார்த்த பார்வையில் திருப்தி தெரிந்தது.

அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர். அருமையான சொஜ்ஜிக்கும் பஜ்ஜிக்கும் அம்மாவை வாயாரப் பாராட்டினார்கள்..”இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் பண்றா ./ ..நீங்கள் ரொம்ப ஸ்ரமப்பட்டு செய்திருக்கேள் ..ஒரு காப்பி மட்டும் இருந்தாப் போறுமாயிருக்கும் .நாங்க இதெல்லாம் எதிர் பார்க்கவே இல்லை…என்று பேருக்கு சொல்லிக் கொண்டார்கள்.

எங்காத்துல இவளுக்கு எல்லாமே முறைப்படி நடக்கணமாக்கும்…இந்த சின்ன சின்ன சம்பிரதாயத்தை எல்லாம் விடப் படாதுன்னு அடிக்கடி சொல்லிப்பாள் என்று ஈஸ்வரன் மனைவியைப் பார்த்துக் கொண்டே பெருமையுடன் சொல்கிறார்.

ம்ம்…வாசல்ல போட்டிருந்த கோலத்தைப் பார்த்ததும் புரிஞ்சுண்டோம் என்ற மாப்பிள்ளையின் அம்மா,   அதுவும் நல்லதுக்குத் தானே…ஒரு சந்தோஷம்..ஒரு நிறைவு… என்றவர்…கௌரியைப் பார்க்கிறார் .

கோலமெல்லாம் நான் போடலை..நேக்கு அதெல்லாம் வராது…. இந்த டிஃபன்  எல்லாம் அம்மா செஞ்சதாக்கும் …கோலம் கூட  அம்மாவாக்கும்  போட்டா …என்று சொல்லி விட்டு தன் அம்மாவைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் கௌரி.

லேசாக தொண்டையைச் செருமிக்கொண்டு ….”பெண்ணை எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு…என்று கார்த்திக்கின் முகத்தைப் பார்த்தபடியே சொல்கிறார் “…பிறகு இல்லையோடா கார்த்திக்…நோக்கும் சம்மதம் தானே? என்று கேட்கவும்…கார்த்திக் தலை நிமிர்ந்து உட்கார்ந்தபடியே ஒரு ஆட்டு ஆட்டி பரம சம்மதம் சொல்கிறான்.

நிமிர்ந்த கௌரி தலை குனிந்து புன்னகை பூத்தாள் !

அரைக்கிணறு தாண்டியாச்சு….சித்ரா மனசுக்குள் மகிழ்ந்தாள்.

அப்போ…. மேற்கொண்டு பேசறதுன்னு ஏதாவது இருந்தால்..இப்பவே பேசி முடிச்சுக்கலாம்… .நாங்க மத்தவா மாதிரி ஆத்துக்கு போய் ஃபோன் பண்றோம்  என்றெல்லாம் சொல்லிக்கலை என்று நாசூக்காக பேச்சை மாற்றுகிறார் கார்த்திக்கின் அப்பா. ஆமாம் ஆமாம் என்று அங்கிருந்த மீதி தலைகளும் ஆடின.

அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் தனியா இவர் கிட்ட பேசிக்கலாமா? என்று கௌரி “கார்த்திக்கைக் காட்டி “கேட்டது தான் தாமதம்…அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி, ..ஆச்சரியம்…குழப்பம்…சித்ராவுக்கும் அதே கதி தான்.

ஓ …பேஷா……என்று தடுமாறிக் கார்த்திக் அப்பாவின்  குரல்…சம்மதத்தை தெரிவித்தது.  ஆனால் கார்த்திக் அம்மாவுக்கு திக்கென்றது !   பெண்ணிய வாதியா இவள் ?  கார்த்திக் எழுந்து நின்றான்.

மொட்டை மாடிக்கி அழைச்சுண்டு போயேன்…ஈஸ்வரன் சொல்ல…”அங்க வேண்டாம்பா…. என் ரூமுக்கு..என்று சொல்லிவிட்டு…”வாங்க மிஸ்டர்.கார்த்திக்…என்று அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்று…உட்காருங்கோ…”என்று சொல்லிவிட்டு அங்கு தயாரா இருந்த இன்னொரு சேரில் இவளும் உட்கார்ந்து கொள்கிறாள்.

மிஸ்டர்.கார்த்திக்….உங்களை நான் பேர் சொல்லி கூப்பிடலாம் இல்லையா? அழகாக ஆங்கிலத்தில் கேட்கிறாள் கௌரி.

மை ப்ளெஷர் ….மென்மையாகச் சொன்னார்  கார்த்திக்.

நான் இப்படி தனியாப் பேசணும்னு சொன்னதை உங்காத்து மனுஷா எப்படி எடுத்துப்பான்னு தெரியலை.  நான் பெண்ணியவாதி அல்ல !  நீங்க அப்பறமா உங்காத்து பெரியவாட்ட  சொல்லி புரிய வெச்சுக்கோங்கோ.

இட்ஸ்….ஆல் ரைட்…அதை நான் பார்த்துக்கறேன்…இப்போ நீங்க சொல்லுங்கோ…என்ன பேசணும்னு கூப்பிட்டேள் .? என்னை என் பெயர் சொல்லி ஒருமையில் கூட  நீங்கள் அழைக்கலாம்..புன்னகை மாறாத முகத்துடன் சொல்கிறார் கார்த்திக்.

ம்ம்ம்…தெரியும்.!

இதுக்கு முன்னாடி ரெண்டு அலையன்ஸ் வந்து விட்டுப் போச்சு. எல்லாம் டௌரி விஷயமாத்தான்…யு நோ எனக்கு டௌரி தந்து என் கல்யாணம் நடப்பது பிடிக்கலை.

ஃபைன்…எனக்கும் டௌரி வாங்கி என் லைஃப்  ஆரம்பிக்கப் பிடிக்கலை. ..சொல்லும்போது கார்த்திக்கின் முகத்தில் குறும்பு இழையோடுவதைக் காணத் தவறவில்லை கௌரி.

கௌரி தொடர்ந்தாள்.

மூணு வருஷமா ‘விப்ரோ’ வில் இருக்கேன். ரொம்ப சாலேன்ஜிங் சீட்….ரெஸ்பான்சிபிளிட்டி ஜாஸ்தி.  என் கல்யாணம் என்னோட ப்ரொபெஷனலை பாதிக்காமல் இருக்கணும்…. என்னால வேலையை விட முடியாது. அதே சமயம்….வீட்டையும் என்னால நெக்லெக்ட் செய்ய முடியாது. ஸோ .. எனக்கு ஒரு ஹெல்தி டிஸ்டன்ஸ் அதே சமயம் புரிஞ்சுக்கற ஒரு ஃ ப்ரெண்ட்லி லைஃப்  பார்ட்னர் வேண்டும்…….அது நீங்களா இருந்தால் ஐ ஆம் வெரி ஹாப்பி..இன் கேஸ்..இல்லாவிட்டாலும் ….. பரவாயில்லை…ஐ கேன்.

தென்….இம்பார்டண்டா இதைச் சொல்ல மறந்துட்டேனே…. நான் ஆத்துக்கு ஒரே பெண்ணாக இருக்கறதால என் அம்மா அப்பாவுக்கு என்னோட துணை, பண உதவி எப்பவாவது தேவைப் படலாம்…இப்போ இல்லாட்டாலும் எதிர்காலத்தில் என் உதவி முழுவதும் தேவைப் படலாம்….அப்போ நான் வருவதைப் போவதை …அல்லது அவர்கள் நம்மோட இருப்பதை நாம எல்லாரும் ஒரே குடித்தனக் கூட்டுக் குடும்பமா இருக்க முடிஞ்சா ரொம்ப ரொம்ப சந்தோஷம் …..அது இல்லாத பட்சத்தில் அவர்களைப்  வந்து பார்த்துக்க வேண்டி வந்தால் தடுக்காமல் இருக்கணும்….இது ஒரு ரெக்வெஸ்ட்.. அப்போ நம்மளோட ஸ்ரிங்க்கான ஃபாமிலி கண்டிப்பா எலாபரேட் ஆகும்..

அதே மாதிரி…கல்யாணம் என்ற பேரில் ரொம்ப செலவு செய்து தாம் தூம்னு கஷ்டப் பட்டுசம்பாதிக்கும் பணத்தை ஆடம்பரமா செலவு செய்றதில் எனக்கு உடன்பாடே இல்லை. அதற்கு ஆகும் செலவை சேமிப்பில் போட்டு வெச்சா நம்ம ஃபுயூச்சருக்கு ஆகும்..கஷ்டப் பட்டு கடன் வாங்கி கல்யாணம் பண்ணீண்டு அப்பறம் வாழ்நாள் பூரா வட்டி கட்டி கடன் கட்டிண்டு இருக்கற எத்தனை ஃபாமிலி இருக்கா தெரியுமா? இதெல்லாம் என்னோட வியூஸ் தான்…உங்களுக்குன்னு ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்கோ…நாம  வெளிப்படையா பேசி ஒர் மண ஒப்பந்தம் செய்து கொள்வோம்.. என்று சிறிது நேரம் அமைதியானாள் . பின்பு , உங்களைச் மீட் பண்ணி பேசினதில் நான்  ரொம்ப ஹாப்பி. என்று நிறுத்துகிறாள் கௌரி.

ஸேம் ஹியர் ..கௌரி…உங்க தாட்ஸ் ரொம்ப சரி தான். வெரி நைஸ்…..ஐ அப்ரிஸியேட் யுவர் வால்யூஸ் .  யூ  ஆர் ரைட் அண்ட் குட்..எனக்கும் அதே போலத்தான். உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன். ஈவன் ஐ லைக் யூ ..என்று தங்கு தடையின்றிக் கம்பீரமாகச் சொல்லி நிறுத்துகிறான் கார்த்திக்.

ஐ கேரண்டி…தாங்க்ஸ் என்று நாணத்துடன்  சொல்லிவிட்டு அப்போ நாம்  ஹாலுக்குப் போகலாமா என்று எழுந்து கொள்கிறாள் கௌரி…!

இருவரும் வெளியில் வருகிறார்கள். அவர்கள் முகத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க நினைத்துத் தோற்றுப் போகிறார்கள் அங்கிருந்த பெரியவர்கள்.

இவள்  என்னத்தத்  தனியாப் பேசறேன்னு சொல்லி காரியத்தைக் கெடுத்து வெச்சிருக்காளோ ..என்று பயந்த படியே மகளின் முகத்தைப் பார்க்கிறாள் சித்ரா.

பேசியாச்சா? என்று கார்த்திக்கின் அப்பா மகனைப் பார்த்துக் கேட்க்கிறார்…அவனும் “ம்ம்…ம்ம்…” என்று தலையாட்டுகிறான்.

அப்போ நாங்க பெரியவா….பேசலாமோன்னோ..என்று அவர் கேட்கவும்….ஈஸ்வரன் குறுக்கிட்டு ” பேசலாம்….கேளுங்கோ..என்ன கேட்கப் போறேள் ? என்று பீடிகையோடு ஆரம்பிக்க.

“எங்களுக்கு இருப்பது  கருவேப்பலை கொத்தாட்டமா ஒரே பையனாக்கும்…அவனோட கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை…அதனால கல்யாணத்தை மட்டும் கொஞ்சம் கிராண்டா பண்ணிடுங்கோ…நாங்க வேற ஒண்ணும் அது வேணும்..இது வேணும் ன்னு டிமாண்ட் பண்ணலையாக்கும். உங்களுக்கும் ஒரே பொண்ணு தானே…இதே ஆசை உங்களுக்கும் இருக்காதா என்ன…? என்று கார்த்திக்கின் அப்பா பேசிக் கொண்டே போக, அம்மா…ஆமாம்..அதை நாம சொல்லணுமா என்ன? அவா பொண்ணுக்கு அவா நன்னா செய்வா….இல்லையா?  நாம ஒண்ணுமே கேட்க வேண்டாம். அவாளுக்கே தெரியும். எங்களோட ஒரே டிமாண்ட் கொஞ்சம் தடபுடலா, கச்சேரிக் காட்சியோடு மாரேஜ் நடக்கணும், அவ்வளவுதான். அதுக்கப்பறம் நீங்க செய்றதெல்லாம் உங்க பெண்ணுக்குத் தான். என்று நிறுத்துகிறாள்.

கார்த்திக் என்ன செய்வதென்று தெரியாமல் நெளிவதை கௌரி பார்க்கிறாள்.   அவனது கண்கள் கௌரியை கெஞ்சுவது போலப் பார்த்து விட்டு நகருகிறது.

ஈஸ்வரன் மனசுக்குள் கணக்குப் போட ஆரம்பிக்கிறார்…இந்தக் காலத்தில் டீசண்ட், க்ராண்ட் கச்சேரி மேரேஜ் எல்லாம்…குறைந்தது பத்து லக்ஷத்தில் கொண்டு போய் நிறுத்தும். இத்தனைக்கும் ரெண்டு பேருமே ஐ.டி  யில் வேலை பார்க்கிறவா…கூட்டத்துக்குக் கேட்கணுமா? நம்மால தாங்குமா ? விரலை ஒரு தடவை பார்த்துக் கொள்கிறார்.இந்த வீக்கத்தை இந்த விரல் தாங்குமா? மனசு கால்குலட்டரை நீட்டுகிறது..

சித்ரா அங்கிருந்து..கணவரின் காதருகில் வந்து “சரின்னு சொல்லுங்கோன்னா….இந்த சம்பந்தம் போனால் வராது…..வீட்டை அடமானம் வெச்சுடலாம்..தேவையானால் வித்துடலாம்…..” என்று சமாதானப் படுத்தும் வகையில் ஈஸ்வரனின் காதில் கிசு கிசுக்கிறாள்.

இந்த நேரம் பார்த்து கௌரியின் கைபேசியில் ஆங்கிலப் பாடல் அலறுகிறது…..

Tonight we dance,
I leave my life in your hands.
We take the floor,
Nothing is forbidden anymore.

Don’t let the world in outside.
Don’t let a moment go by.
Nothing can stop us tonight!

[Chorus]
Bailamos! – We Dance
Let the rhythm take you over…
Bailamos!

இந்தப் பாடலைக் கேட்டதும் கார்த்திக்கும் கால்களால் தாளம் போட ஆரம்பிக்கிறாரன் …

அதைப் பார்த்துக் கொண்டே கௌரி புன்னகைத்தபடியே மொபைலை எடுத்து சர்வ சாதாரணமாக பேச ஆரம்பிக்கிறாள்.

” ஹலோ ரேவ்ஸ்….ஹௌஸ் லைஃப்? எனி இம்ப்ரூவ்மெண்ட்…..?

“………………….” அந்த பக்கம் சொன்ன பதில் ஒன்றும் இவர்கள் காதில் விழவில்லை.

வாவ்….தட்ஸ் குட் ஐடியாடி…..செப்பரேடா போறேளா? வீடு பார்த்தாச்சா?  ம்ம்…தனிக் குடித்தனமாக்கும்….! கடைசீல நினைச்சதை சாதிச்சுட்டே…பின்ன உன் ஹஸ்பண்டை டென் லாக்ஸ் கொடுத்து வாங்கிருக்க….பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்டோட  டாட்டர்…..ம்ம்ம் நீ இழுத்த இழுப்புக்கு வந்து தானே ஆகணும்….? எனிவே கங்க்ராட்ஸ்…..பை தி பை இங்க இப்போ வீட்டில் என்னைப் பார்க்க   வந்திருக்கார் மாப்பிள்ளை வீட்டார்  ஃபாமிலியோட….!

“……………………….…………”

அஃப்  கோர்ஸ்…ஐ பிரிஃபர் அண்ட் ஐ  லைக் ஜாயிண்ட் ஃ பாமிலி ஒன்லி…!

“……………………….…………”

நாட் யெட் ரேவ்ஸ்….ஸீ  யூ…பை…பை..என்ஜாய் .! என்று கைபேசியை மூடினாள் கௌரி.

யார்  முகத்திலும் ஈயாடவில்லை…..சித்ரா ஓரமாக உட்கார்ந்து கொண்டு கௌரியைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்…”இந்த நேரத்தில் இப்படி ஒரு ஃபோன் பேசலைன்னு யாராக்கும் அழுதா? காரியத்தைக் கெடுதுண்டுடுத்து …தவளை தன வாயால கெடுமாம்…..! என்று என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பிக்கிறாள். மனம் பூரா “வட  போச்சே…” சோகம் கப்பியது.நேரங்காலம் தெரியாமல் ரேவதி ஏன் தான் போன் செய்தாளோ ? என்று அவளை சபித்தது.

அப்போ நாங்க புறப்படறோம்…அதான் பேச வேண்டியதைப் பேசியாச்சே…மேற்கொண்டு ஆத்துக்குப் போய் கலந்து பேசீண்டு ஃபோன் பண்றோம் என்று அரை குறையாக “மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ” அதிகம் நாட்டம் காண்பிக்காதபடி  கிளம்புகிறார்கள்.

கார்த்திக்கின் பார்வை கெளரியின் கண்களைத் தொட்டுச் சென்றது. அதில் “நீதானே எந்தன் பொன்வசந்தம்..” என்ற காதல் தூது இருந்தது.

அதைப் புரிந்து கொண்டு கௌரி நிமிர்ந்து மென்மையாகச் சிரிக்கிறாள். அதில் சம்மதம் என்று எழுதி இருந்தது.

காரில் ஏறும்போது   கௌரியின்   கண்ணோடு கார்த்திக்கின் கண்கள் ஆழமாகப் பார்த்தது. அப்போது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட  கௌரி கார்த்திக்கின் கல்யாணம் ….. நடக்கப் போவதற்கு அச்சாரமாக அந்தப் பார்வை அவர்களுக்குள் “காதலை” ஆரம்பித்தது.

சித்ராவுக்குப் புரிந்து போனது இந்த வரனும் ‘ கோவிந்தா’  என்று. அதனால் வந்த கோபத்துடன் அறைக்குள் ;நுழைந்து கதவை டமார் என்று அறைந்து சார்த்திக் கொள்கிறாள்.

ஈஸ்வரனோ மனதுக்குள் “…நன்னாச்சு”….இதில்லைன்னா இன்னொண்ணு என்று சமாதானமாகி எதுவுமே நடக்காதது போல தட்டு நிறைய பஜ்ஜியை எடுத்து வைத்துக் கொண்டு  “ஜீ தமிழ்’ சானலில் ஜான்சி ராணி சீரியல் பார்க்க உட்கார்ந்து கொண்டார்.

கௌரியின் மனம் மட்டும் எதையோ இழந்தது போல வலிக்க ஆரம்பித்தது.. அப்போ என்னையும் மீறி நான் அவரை….1 நினைக்கும் போதே சிலிர்த்துப் போகிறாள்..

கூடிய விரைவில் ‘டௌரி தராத கௌரி கல்யாணம்’ கார்த்திக்கோடு தான்  நடக்கும் என்று. அவளுக்குப் புரியவும் வெட்கப்பட்டுச் சிரித்துக் கொள்கிறாள்.

Series Navigation“சூது கவ்வும்” இசை விமர்சனம்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

5 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ஒரு நிறைவான குடும்ப கதை படித்த மன நிறைவு உண்டானது. கிண்டலும், நகைச்சுவையுடன் கூடிய நடை தொய்வில்லாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது. இளைய சமுதாயத்தினருக்கு வரதட்சணை வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் உண்டுபண்ணியுள்ள விதம் இக் கதையின் சிறப்பு அம்சம் எனலாம். சிதம்பரம் ஜெயஸ்ரீ சங்கருக்கு பாராட்டுகள்….டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    ஜெயஸ்ரீ. says:

    அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

    எனது கணினி மயங்கி நின்று விட்டது. என்னால் தங்களின் பின்னூட்டம் பார்க்கவும் பதில் இடவும் இயலவில்லை. மன்னிக்கவும்.
    தங்களின் நல்ல விமர்சனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. தங்களின் ரேபிஸ் கதையை இன்று தான் படித்தேன். நெஞ்சை உலுக்க வைத்த உணர்வு.
    அன்போடு
    ஜெயஸ்ரீ.

  3. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    வாழ்த்துக்கள். மிக யதார்த்தமாக வழக்கம போல அழகான நடையில் எழுதப்பட்டுள்ள கதை. ஒரு குடும்பக் காட்சியை நேரில் கண்டது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *