போதி மரம்
பாகம் ஒன்று – யசோதரா
அத்தியாயம் – 14
கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர் செல்லும் வழியைத் தெரிவித்தன. மன்னரை மட்டுமன்றி மன்னர் குடும்பத்தில் அனைவரயுமே ஒரே நேரத்தில் காண்பதற்கு இது நல்ல வாய்ப்பு. பெண்கள் பெரிய எண்ணிக்கையில் குழுமியிருந்தனர். இளவரசர் சித்தார்த்தரின் மகன் ராகுலனை அவர்களில் மிகக் குறைவானோரே பார்த்திருந்தனர். யசோதராவின் நிலையை அவர்கள் மிகுந்த கரிசனத்தோடும், கவலையோடுமே நோக்கினார்கள். அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை எந்தப் பெண்ணாலுமே எதிர்கொள்ள இயலாத ஒன்று என்றே எண்ணினார்கள். யசோதராவையும் காணும் ஆவல் மிகுந்திருந்தது.
முதலில் வெண்மையான வாட்டசாட்டமான குதிரையில் “மாமன்னர் சுத்தோதனர் வருகிறார். பராக் பராக்..” என்று அறிவித்தபடியே ஒரு வீரன் வந்தான். நான்கு வரிசைகளில் நாற்பது குதிரைப் படைவீரர்கள் அவனைத் தொடர்ந்து வந்தனர். நூறு பேர் இருக்கலாம் என மதிப்பிடத்தக்க காலாட்படை வீரர்கள் அவர்களைப் பின்பற்றி வந்தனர். அவர்களுக்குப் பின் தகதகக்கும் தங்கக் கூரை கொண்ட தேர் மட்டான வேகத்தில் ஊர்ந்து வந்தது – மக்கள் மாமன்னரை தரிசிக்கத் தோதாக. காலாட் படையினரின் வேக நடைக்கு ஈடாக மன்னரின் தேரில் மன்னரும் மகாராணியும் வீற்றிருந்தார்கள். அவருக்குப் பின்னே சித்தார்த்தனின் தேரில் யசோதராவும் ராகுலனும். அதற்குப் பின் பிரதான அமைச்சர், ராஜ குரு, மந்திரிகள், படைத் தலைவன் என அணிவகுத்தன தேர்கள். ராகுலன் அம்மா மடியில் உட்காராமல் எழுந்து நின்று தேரின் தூண்களைப் பற்றி உற்சாகமாய் வேடிக்கை பார்த்தபடியே வந்தான்.
நகரின் பிரதான வீதிகளைக் கடந்த தேர்களின், படைகளின் அணிவகுப்பு நகரைத் தாண்டி வயல் வெளிகள் தென்படும் நிலையில் வேகம் குறைந்து நிற்பதாய்த் தோன்றியது. கூட்டத்தின் நெரிசலையும் மீறி சில ஜனங்கள் தரையில் விழுந்து மன்னரை வணங்கினார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே கை கூப்பி வணங்கினார்கள்.
இறுதியாக மன்னரின் தேர் நின்ற வயல்வெளி அருகே நூற்றுக்கணக்கில் கிராமத்துப் பெண்கள் குழுமியிருந்தனர். மன்னரின் தேரருகே செல்ல அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் மன்னருக்கு ஆரத்தி எடுத்தார்கள். மன்னர் தேரை விட்டு இறங்கியதும் வரிசையாக நின்ற பெண்கள் மலர் தூவி வரவேற்றார்கள். நீர் இறைத்து இளகி இருந்த வயலில் மன்னர் இறங்கியதும் “மாமன்னர் வாழ்க. மாமன்னருக்கு வெற்றியுண்டாகட்டும்” என்னும் கோஷங்கள் ஒருமித்துப் பெரிய குரலாக வெளிப்பட்டன.
யானைக்குச் செய்வது போல பட்டுத் துணி போர்த்தப் பட்ட இரண்டு எருதுகள் ஒரு விவசாயியால் நிலத்துக்குள் அழைத்து வரப் பட்டன. தங்கப் பூணிட்ட கலப்பை நுகத்தடியில் மாடுகள் பூட்டப்பட்டன. மன்னர் கலப்பையைச் சம்பிரதாயமாகத் தொட விவசாயி மாடுகளைத் தட்டிக் கொடுக்க அவை நகர்ந்ததும், ஒரு சேவகன் ஏந்திய தங்கத் தட்டிலிருந்த விதைகளை மன்னர் நிலத்தில் தூவினார். மன்னரை வாழ்த்தும் கோஷங்கள் மீண்டும் எழுந்தன.
மன்னர் மறுபடி தேரில் ஏறி அமர்ந்ததும் இரு வரிசையாக வந்த ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடினர். மன்னர் மற்றும் பரிவாரங்கள் அந்த நாட்டியம் முடியும் வரை இருந்தனர். பிறகு சாரிசாரியாக ரதங்களும் வீரர்களும் மன்னரின் மாளிககைக்குப் புறப்பட்டனர்.
சற்று நேரத்தில் விரிந்து பரந்து வரப்புக்களால் பிரிக்கப் பட்ட எல்லா நிலங்களுக்கும் மடை திறந்த நீர் பாய்ந்தது. மாடுகளும் உழைப்பாளிப் பாட்டாளிகளும் நிலங்களெங்கும் ஒரே சமயத்தில் இறங்கி நூற்றுக்கணக்கான கலப்பைகளுடன் உழத் தொடங்கியது கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. மன்னர் செய்தது போல் ஒரு உழவு உழுது அவர்கள் விதைக்கவில்லை. மேலும் மேலும் நீர் பாய்ச்சி நிலத்தை உழுது இளக்கும் பணியிலிருந்தார்கள். ராகுலன் சித்தார்த்தரின் அச்சுப் போன்ற வடிவமாய் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர்.
**********************
வணிகருடன் இரு இளைஞர்களும் கிளம்பிச் சென்ற பின்பு, உதக ராம புட்டரின் இருப்பிடத்தை விசாரித்தபடி சென்றான் சித்தார்த்தன்.
ஒரே மாதிரியாக அனைவரும் மேற்குப் பக்கம் என்றனர். மேற்குத் திசையில் செல்லச் செல்ல ஒரு மலையே தென்பட்டது. சூரியன் மலைக்குப் பின்பக்கம் இறங்கத் துவங்கி இருந்தான். மலையில் ஏறாமல் அதைச் சுற்றி வருவது போல் அதை அவதானித்தபடியே நடந்தான். மாலை மங்கும் நேரம். சலசலவென்று ஓடும் நீரோடையில் மிகவும் குளிர்ந்த நீரைப் பருகி இளைப்பாறினான். நிமிர்ந்து பார்த்த போது பேரிரைச்சலின்றி வீழும் சன்னமான பல அருவிகளும் காடுகளுக்கு இடைப்பட்ட குடிலும் தென்பட்டன. இருட்டும் முன் முனைப்போடு மலையேறிக் குடிலை அடைந்தான். குடிலின் ஒரு மூலையில் கோரைப்பாய் சுற்றி வைக்கப் பட்டிருந்த்து. மண் ஜாடிகள், மட்பாண்டங்கள், குவளைகள் தென்பட்டன. குடிலில் தன் சிறு துணி மூட்டையை வைத்து விட்டு வெளியே வந்து அடுப்பைத் தேடினான். மூன்று கற்களுக்கு இடையே நீறு பூத்த நெருப்புத் துண்டுகள் தென்பட்டன. சிறிய குச்சியை அதில் வைத்து ஊதி ஒரு நெருப்புத் தழலை உருவாக்கி சில குச்சிகளை மேலும் இணைத்து சிறிய பந்தம் போல ஏந்தி குடிலுக்குள் வந்து அங்கே ஒரு மூலையில் இருந்த அகல் விளக்கை ஏற்றினான். குச்சிகளின் தழலைத் தணித்து வெளியே சென்று வைத்து விட்டு வந்து தியானத்தில் ஆழ்ந்தான்.
தியானம் கலைந்து சித்தார்த்தன் கண் விழித்த போது இரவு இரண்டாம் ஜாமத்தை எட்டியிருந்தது. நடு வயது கடந்த ஒருவர் அவன் அருகே அமர்ந்திருந்தார். “வணக்கம் யோகியாரே. உங்கள் ஊரையும் பேரையும் தெரிந்து கொள்ளலாமா?”
“என் பெயர் சித்தார்த்தன். கபிலவாஸ்து எனது நாடு’
“தாங்கள் மாமன்னர் சுத்தோதனரின் திருக்குமாரர் இளவரசர் சித்தார்த்தரா? தாங்கள் ராஜகஹம் வந்ததை அறிந்தோம். இங்கே தாங்கள் வந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி”
“நான் உதக ராம புட்டரின் வழிகாட்டுதலில் யோகம் கற்க எண்ணி வந்தேன்”
“என் பெயர் ஜெயசிம்மன். நான் சில காலமாக அவரது மாணவனாக முயன்று வருகிறேன்”
அவர் ‘முயன்று வருகிறேன்’ என்று கூறுவது பணிவாகவா இல்லை உதக ராமபுட்டரிடம் மாணவனாகச் சேருவதே கடினம் என்று உணர்த்தவா?
“யோகி புட்டர் இன்னும் சற்று உயரத்தில் உள்ள குடிலில் இருக்கிறார். காலையில் தாங்கள் அவரைச் சந்திக்க இயலும். சில கிழங்கு வகைகளும் அரிசிச் சோறும் உணவாகத் தாங்கள் ஏற்று அருள வேண்டும்”
இந்த மலைப் பகுதியில் பிட்சை பற்றிய பேச்சை எடுக்க விரும்பவில்லை சித்தார்த்தன். குறைந்த பட்சம் காய்கனிகளைச் சேமித்து சமைக்க எண்ணினான்.
**********************************
‘அமர கலாம என்னையா பரிந்துரைத்தார்?” சற்றே வியப்புடன் கேட்டார் உதக ராம புட்டர்.
‘நான் அவரின் கூற்றுப்படி – அதாவது அவர் தமக்குத் தெரிந்ததையெல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன் என்று குறிப்பிட்ட போது தான் நான் கிளம்பினேன். ஆனால் அதற்கு சில காலம் முன்பே தங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்”
“ராஜகஹத்துக்குத் தாங்கள் வந்து யோக சாதனைகளில் ஈடுபடத் துவங்கிய விவரம் எனக்கும் தெரிய வந்தது. அமர கலாம பற்றித் தங்கள் கருத்தென்ன?”
இந்தக் கேள்வியை சித்தார்த்தன் எதிர்பார்திருக்கவில்லை. அமர கலாம உடன் தான் பயிற்சி பெறும் மாணாக்கனாக இருந்த நாட்களிலோ, அவரை விட்டு நீங்கிய இந்த சொற்ப காலத்திலோ அவரை எடை போட்டு மனதுள் சிந்தித்து இருக்கவில்லை.
“அவரை யோகத்தில் நிலைத்து நிற்கும் ஒரு சாதகராகவே கருதுகிறேன். நல்ல குரு. புலன்களை வென்ற மேம்பட்ட நிலையின் சின்னம்”
“சரியாகச் சொன்னீர் சித்தார்த்தரே. அவர் யோகத்தில் நிலைத்தவர். அதில் ஒரு பூரணத்துவத்தை அவர் உணர்ந்து கொண்டிருப்பவர். தாங்கள் தமது தேடலில் யோகக் கலையையும் சேர்த்துக் கொண்டீர்களா?”
“ஒரு யோகியாகவோ அல்லது சம்சாரியாகவோ இருப்பது என்பது வேறு. ஞானம் என்னும் பேற்றை அடைவது வேறு. தங்கள் கருத்து இதுதானே யோகியாரே?”
“அதைக் குறிப்பிடவில்லை. தங்கள் லட்சியம் இதைத் தாண்டிய தொலை நோக்கு உள்ளது”
“அது என்னை உந்தியதாலேயே நான் ராஜ போகத்தை விட்டு நீங்கினேன். தங்களைப் போன்ற, அமர கலாமவைப் போன்ற ஆசான்களின் வழி காட்டுதலின்றி நான் மேற் செல்லுதல் சாத்தியமா?”
புட்டர் மௌனமானார். ‘மாணவர்கள் என்று வருகிற பலரும் ஒரு காலக்ட்டதில் யோகம் பயில்பவர்கள்.அவர்களது நீண்ட காலத் திட்டம் அங்கேயிருந்து தொடர்வது அபூர்வமே. வயோதிகத்தில் குருவுக்குத் துணையாக ஓரிருவரே எஞ்சுவர். பலரும் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறவர்களே. உங்களைப் பொருத்த அளவில் ஒரு பளிங்கு போலவோ, ஒரு அமைதியான நீர்ப்பரப்பு போலவோ தங்கள் நிலையைத் தங்களுக்கே எடுத்துக் காட்டும் பணி என்னுடையதாக இருக்கும்”
மறுநாள் காலையில் புட்டரின் குடிலுக்குச் சென்ற போது அவர் தியானத்தில் இல்லை. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
அவரது சிந்தனையைக் கலைக்காமல் அமர்ந்த சித்தார்த்தனுக்கு ராஜகஹத்தில் தன் பின்னே வந்த இரு இளைஞர் நினைவுக்கு வந்தனர். அவர்களிடம் மரணம், துன்பம் என்னும் இருளைத் தாண்டும் தேடல் பற்றி குறிப்பிட்டதும். ஏதோ ஒரு அகந்தையோ, உடலோ அல்லது புலனோ தன்னை இழுத்துப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. நூற்றாண்டு கால இருளையும் ஒரு நொடியில் விரட்டும் சுடரை அது தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது. தனக்குள் அந்த வெளிச்சம் பரவாமல் இருளையும், இருள் நீக்கிப் பெரு நிலை தந்த வெளிச்சத்தையும் உலகுக்கு எங்கே உணர்த்துவது?
திடீரென அவனை கவனித்தார் புட்டர் “சித்தார்த்தரே! தாங்கள் கடுமையான உபவாசம், நீண்ட நேர தியானம் இதையெல்லாம் செய்வதன் பயன் என்ன? அதை உணர்ந்திருப்பீர்கள் இல்லையா? என்ன பலனை உணர்ந்தீர்கள்?’
“துவக்கத்தில் இறந்த காலம் சமகாலத்தை ஊடுருவி என் தேடலில் உள்ள நிலைப்பையே பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குறி ஆக்கியது. தியானம் என்னும் தினசரி நியமம் எனக்கு ஒரு புதிய ஆற்றலைக் கொடுக்கிறது. தியானம் நான் என் தேடலில் முன் செல்லும் போது என்னைப் பின்னுழுக்கும் பாரத்தை ஒன்றுமில்லாமற் செய்து விடுகிறது”
“அகம்பாவமும் இச்சைகளும் தரும் பற்று மட்டுமே தடை என்று நீங்கள் எண்ணியிருப்பீர்கள் சித்தார்த்தரே. துவக்ககால மனநிலைக்கு அது பொருத்தமான அணுகுமுறையே. ஆனால் யோக சாதனை தரும் ஆன்மீக ஆற்றலும் அகம்பாவத்தின் சாயல் உள்ளதே. ஒரு மல்லனுக்குத் தன் உடலின் வலு பற்றிய மமதை போல யோகிக்கு உள்ளேயும் சிறிய கர்வம் சத்தமின்றி உள் நுழைந்திருக்கும்”
“அதை இனங்கண்டு களைவது எவ்வாறு யோகியாரே?”
” ஆத்ம சோனையான விசாரங்களில், ஒரு சுயவிமர்சனத்தில் நீங்கள் ஈடுபட்டே இருக்க வேண்டும். லட்சியத்துடன் ஐக்கியமாவது என்பது ஒரு குறுகிய கால இலக்காக இருப்பதே உத்தமம். விடுதலை என்பது ஒரு பெருநிலைக்குப் பரிணமிப்பது. அந்தப் பரிணாமம் என்பது லட்சியத்தின் வரையறைகளுக்குள் அடங்க முடியாத படி பிரம்மாண்டமானது”
- காவல் நாய்
- ரேபீஸ்
- ‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’
- “சூது கவ்வும்” இசை விமர்சனம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக
- கந்தா ( தமிழ் )
- தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்
- பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?
- கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…
- கவிதைகள்
- நாகூர் புறா.
- நம்பிக்கை
- விவசாயிகள் போராட்டமா?
- அமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா
- கேள்
- ஆத்தா…
- போதிகை (Bearing)
- பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!
- ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’
- ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்”
- தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14
- புகழ் பெற்ற ஏழைகள் – ஷேக்ஸ்பியர்
- தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4
- அக்னிப்பிரவேசம்-28
- விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்
- குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….