புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – சார்லி சாப்ளின்

This entry is part 22 of 31 in the series 7 ஏப்ரல் 2013

புகழ் பெற்ற ஏழைகள்

( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)

2.உலகைச் சிரிக்க வைத்த ஏழை…….

City-Lights-charlie-chaplin-14440701-1600-1213என்ன யோசிச்சிங்களா?.. சரி நானே சொல்லிவிடுகிறேன். அந்தச் சிறுவன் யாருமில்லைங்க…அவருதான் சார்லி சாப்ளின்… என்ன புரியுதுங்களா…? உலகைச் சிரிக்க வைத்து சோகத்தில் ஆழ்ந்த புகழ்பெற்ற ஏழைங்க அவர். அவருடைய வரலாறு கல்லையும் கரையவைக்கும் தன்மை கொண்டதுங்க.. ஆமா.. எந்தவிதமான பற்றுக்கோடுமில்லாம ஒருத்தர் எப்படி உலகப் புகழ் பெற்று உயர்ந்தாரு தெரியுமா?…அதுதான் உழைப்புங்க.. சரிசரி….மேல படிங்க….

ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889-ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் முழுப்பெயர் ‘சார்லஸ்ஸ்பென்சர் சாப்ளின்’. லண்டன் மதுவிடுதிகளில் பாட்டுப் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் தாய்.

இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு தந்தைக்குப் பிறந்தவன் சாப்ளினின் அண்ணன் ஸிட்னி. ஒரு நாள்மேடையில் பாடும்போது சாப்ளினின் அம்மாவிற்குத் தொண்டையில் பிரச்னை; அவளால் பாட முடியவில்லை! அதனால் ரசிகர்கள் ஒரேகூச்சலிட்டனர்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா. அப்போது ஆறு வயது சிறுவன் சார்லி என்னநினைத்தானோ தெரியவில்லை உடனே வேகமாக மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்காது!

தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். ரசிகர்களின் விசில் சத்தத்தாலும், கைத்தட்டலாலும் அரங்கமே அதிர்ந்தது! மேடையை நோக்கிச் சில்லறைகள் சீறிப் பறந்தன. சிறுவனான சார்லி உடனே பாடுவதை நிறுத்திவிட்டுச் சில்லறைகளைப் பொறுக்கினான். கூட்டமோ சார்லியைப் பாடச் சொல்லி கூச்சலிட்டது !

ஆனால் சார்லியோ சிறிதும் சளைக்காது ‘சிறிது நேரம் பொறுத்திருங்கள்! சில்லறைகளைப் பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரேநேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!’ என்று கூறிவிட்டுச் சில்லறைக்காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான் சார்லி.கூட்டத்தினர் சிரித்தனர். மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும்காது கிழியும் சிரிப்பொலி… மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை! பசிக்குமுன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள்.

வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் தந்தையார் மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள்இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். வறுமையால் தாய் குழந்தைகள் ஆகியோர் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். தாய் ஒருபக்கம்! குழந்தைகள் ஒருபக்கம்! பிரிவு தாயின் மனதைப் பிசைந்தது! சொல்லொனாத வேதனையுற்றாள் ஹென்னா! காலத்தின் கொடுமை! குழந்தைகளின் பிரிவுத் துன்பத்தால் ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

சார்லி, ஸிட்னி இருவரையும் சார்லியின் தந்தைதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சார்லியின் தந்தை அவர்களிருவரையும் தன் மற்றொரு மனைவி லூஸி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கேயும் வறுமை. பசிக் கொடுமை சார்லியையும்,சிட்னியையும் வீதிக்குத் துரத்திச் சிரித்தது.

பசிபொறுக்க மாட்டாத சார்லி, ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதான். அப்போது அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும்அங்கு இல்லை! ஒரு நாள் அவனது வீட்டு வாசலில் அந்த வியக்கத்தக்க அதிசயம் நிகழ்ந்தது! பைத்தியம் தெளிந்து குணமாகி சார்லியின் தாய்ஹென்னா வந்திருந்தாள்!! சார்லி, சிட்னி இருவரும் ஓடிப்போய் தங்களின் தாயுடன் ஒட்டிக்கொண்டார்கள்! மீண்டும் மூன்று உயிர்களும் ஓர்உயிரானது. அங்கு அன்பு கரைபுரண்டு ஓடியது.

சாப்ளின் தந்தையிடம் இருந்து சிறிது பணம் ஹென்னாவுக்கு வந்தது. அதனால் சார்லி, ஸிட்னி ஆகிய இருவரின் பள்ளிப் படிப்புத் தங்குதடையின்றித் தொடர்ந்தது.

பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன,நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் வாய்ப்பு வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை நோக்கி, ‘ஏய்!அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்துகொண்டிருக்கிறான்!’ என்று தன்னை மறந்து கத்தினான்.

அடுத்த ஐந்தாண்டுகளில் அவன் கூறியதே நடந்தது. சார்லி சாப்ளின் அமெரிக்காவை மட்டுமல்லாது இந்த உலகத்தையே கொள்ளையடித்தான். சார்லி தன் உயிரினும் மேலாக ஹெட்டி என்ற பெண்ணைக் காதலித்தான். தன் உலகமே அவள்தான் என்று கருதினான். ஆம்,

“காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்”

என்ற பாவேந்தரின் பாடல்வரிகளுக்கு ஏற்ப சாப்ளின் வாழ்க்கையில் முன்னேற முழு முயற்சி எடுத்தான். ஓரளவு முன்னேறினான். இருப்பினும் அவனால் வறுமையை முழுமையாக வெற்றி காண முடியவில்லை. தன் காதலியைக் கைபிடிக்கலாம் என்றிருந்தான் சாப்ளின். நடந்ததா எனில் இல்லை. விதி தன் வேலையைக் காட்டியது. ஹெட்டி தன் காதலனைக் கைபிடிக்கக் காத்திருந்தாள்.

ஆனால் அங்கு விதி ஹெட்டியின் அண்ணன் வடிவில் வந்தது. வறுமையில் உழன்ற சார்லி சாப்ளினை ஹெட்டியின் அண்ணனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலி ஹெட்டியின் அண்ணன் சார்லியின் ஏழ்மையைக் காட்டி காதலைப் பிரித்தான். பிரித்தான் என்பதைவிட அவர்களிருவரின் காதலைக் கொன்றான்.

முதல் காதல் வறுமையால் தோற்றுப் போயிற்று. அந்தக் காதல் தோல்வியைச் சார்லி சாப்ளினால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.வறுமையினை நினைத்து நொந்தான். தனது வாழ்வின் மகிழ்வை அடியோடு அழித்த நிகழ்வை, வறுமையை மனதிற்குள் சபித்தான். ஆம்… அவனுக்கு அதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. அன்று… மட்டுமா அவன் வேதனையடைந்தான்…. அக்காதல் தோல்வி சார்லி சாப்ளினை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது! நெஞ்சில் ஒரு முள்ளாய் இருந்து ஒவ்வொரு கணமும் உறுத்திக் கொண்டே இருந்தது. வறுமைநிலைக் காதலைக் கொன்றுவிடும்! காதலர்களையும் மனதால் கொன்றுவிடும்! வறுமையாளன் காதல் கொண்டால் அவ்வறுமையே அக்காதலைப் பலி வாங்கிவிடும் என்பதற்கு சார்லி சாப்ளினின் காதல் தோல்வியே தக்க சான்றாகும். உலகில் வேதனையைச் சுமந்து கொண்டு நடைபிணமாகக் காட்சியளித்தார் சார்லி(வாழ்வில் சார்லி படிப்படியாய் உயர்வதால் நாமும் சார்லியை அவர் என்று குறிப்பிடுவோம்…என்ன?).

பின்னாளில் அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே அடிப்படைக் காரணமாகஅமைந்தது. தனது காதலியின் நினைவுகளிலிருந்து தப்பிக்க சார்லி கடும்முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அவர் தன்னைத் துன்புறுத்தும்ஹெட்டியின் காதல் நினைவுகளில் இருந்து தப்பிக்கப், பொய்யாகத் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு… தீவிர வாசிப்பை மேற்கொண்டார். பல புத்தகங்களைப் படித்தார். சார்லி சாப்ளின் படித்துப் படித்துத் தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது என்று கூறலாம்!

ஒரு நாள் நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்து சென்னட் என்ற தயாரிப்பாளர் “ஏதாவது நடித்துக்காட்டு” என்று கூறினார். சாப்ளினின் உடல் வாகுக்கு ஏற்ற உடைகள் அங்கு இல்லை என்பதால், பெரிய அளவுள்ள தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை,ஷு, தொப்பி, கைத்தடி. ஆகியவை கொடுக்கப்பட்டது. தனக்குக் கிடைத்ததை வாங்கி அணிந்து கொண்டார். அவரது தோற்றத்தைப் பார்த்தவுடனேயே தயாரிப்பாளருக்குச் சிரிப்பாக வந்தது. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!

இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது! சார்லி சாப்ளின் சென்னட் கொடுத்தவற்றை அணிந்து கொண்டு அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட ரசிகர்களின் சிரிப்பால் மேடை அதிர்ந்துஅடங்கியது! தாயாரிப்பாளர் மிகவும் வியந்துபோனார். சார்லி சாப்ளினின் முதல் படம் newspaper reporter என்பதாகும்.

தயாரிப்பாளர் சென்னட்டிடம் சார்லி, “என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன்” என்றார். முதலில்ஒத்துக் கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு கடுமையான ஒரு நிபந்தனையை விதித்தார். “அந்தபடம் தோல்வி அடைந்தால் தயாரிப்புச் செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் எனக்குத் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?” என்றுகேட்டார். அதற்குச் சாப்ளின், “நிச்சயம் முழுப்பணத்தையும் நான் திருப்பித் தருவேன். அதோடு மட்டுமல்லாமல அந்தப் படம்தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்” என்று கூறினார். அவ்வாறு சார்லி சாப்ளின் சபதமிட்டு இயக்கிவெளிவந்த முதல் வெற்றிப்படம் “caught in the rain”.

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ ரசிகர்களுக்குத் தெரிய வர… மலர்கொத்துக்கள்,பேண்டு வாத்தியங்கள் முழங்க, உயரமான கம்பங்கள், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டிருந்து அவரை வரவேற்றது. அதைக்கண்டு பிரமித்துப்போன சார்லி சாப்ளின் தான்பட்ட பசியும், அவமானங்களும் இதற்குத் தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும்காவியமாக வேண்டாமா? சிந்தனை செய்யத் தொடங்கினார். தொடர்ந்து சமுதாயச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் படங்களை மக்களுக்காகச் சார்லி சாப்ளின் உருவாக்கினார்.

அமெரிக்காவிற்குக் குடியேற வரும் மனிதர்களிடம் அமெரிக்க அரசு நடத்தும் கெடுபிடிகளைக் கடுமையாகச் சாடி அவரது, “the immigrant” படம்வெளியானது. இதனைக் கண்ணுற்ற அமெரிக்க அரசாங்கம் சார்லி சாப்ளினைக் கண்காணிக்க உத்தரவு போட்டது.

இவ்வாறு சார்லி சாப்ளின் ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் அனைவரும் அவருடைய எதிரிகளானார்கள்.படத்தயாரிப்பாளர்கள் சார்லி சாப்ளினை வைத்துப் படம் தயாரிப்பதை விரும்பவில்லை. அவரைத் தவிர்க்க முற்பட்டனர். இதனால் மனம் நொந்த சார்லி சாப்ளின் வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று சார்லி சாப்ளின் மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளைத்திருமணம் செய்து கொண்டார். சார்லி சாப்ளினுக்கும் ஹாரிஸூக்கும் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அது உடனேயே இறந்து விட்டது.சார்லியால் அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் வேதனையுற்றார். இறந்த தனது மகனின் நினைவாக, “the kid” என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.

அதற்குப் பின்னர் லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் சார்லி சாப்ளின் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும்தனித்த துன்பியல் வரலாறு ஆகும். அவர்கள் அனைவரும் தோற்றத்தில் பார்ப்பதற்கு அசல் அவரது முதல் காதலி ஹெட்டியைப் போலவேஇருந்தார்கள் என்பதுதான் அதிசயமான தகவலாகும். அதனால்தான் அவர்களைச் சார்லி சாப்ளின் காதலித்தார்.

உள்ளத்தில் உருவான முதல் காதலை யாராலும் மறக்க முடியாது என்பதற்கு சார்லியின் வாழ்வே எடுத்துக்காட்டு. ஆம்…..தனது வாழ்நாளின் இறுதிவரை தனது காதலி ஹெட்டியை அவரால் மறக்க முடியவில்லை என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. சார்லி சாப்ளின் புகழின் உச்சியில் இருந்த நேரம்….திடீரென்று ஒருநாள் அவரது பெயருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. யாரை மறக்க முடியாமல் தவித்தாரோ. யார் யாரையெல்லாம் ஹெட்டியாக நினைத்தாரோ? அந்தக் காதலியிடமிருந்துதான் அக்கடிதம் வந்திருந்தது.

சார்லி சாப்ளினுக்கு அடக்கமுடியாத மகிழ்ச்சி! மனம் படபடவென அடிக்க..இதயம் ஹெட்டி..ஹெட்டி.. என்று கூற, வேகவேகமாக அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அக்கடிதத்தில் அவரது முதல் காதலி, “என்னை நினைவிருக்கிறதா?… நான் தான் ஹெட்டி!… நான் ஒருமுட்டாள்,… அபாக்கியசாலி…. நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை உங்களின் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன்வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்துக் கதறி அழவேண்டும்…. நான் என்னுடையதவறுகளுக்காகத் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!…” என்று கடிதம் எழுதியிருந்தாள்.

கடிதத்தைப் படித்துப் பார்த்த சார்லிக்குக் கால்கள் தரையில் நிற்கவில்லை. வானத்தில் பறந்தார். யாரைப் பார்க்க முடியாது என்று நினைத்து நினைத்து வருந்தினாரோ? யாரைப் பார்த்து இனிப் பேசமுடியாது என்று கருதினாரோ? யாரைப் பார்க்காமலேயே இறந்து விடுவோமோ என்று நினைத்திருந்தாரோ? அந்தக் காதலியிடம் இருந்து இப்படியொரு அழைப்பு வந்ததைக் கண்டு அகமகிழ்ந்தார் சார்லி சாப்ளின். உடனே தான் பார்த்த எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு லண்டனை நோக்கிப் பயணித்தார் சார்லி சாப்ளின்.

சார்லி சாப்ளின் லண்டன் வந்திறங்கினார். லண்டனில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஞ்சையாய்,பராரியாய், பிச்சைக்காரனாய் இருந்தபோது சார்லி சாப்ளினைத் துரத்தியடித்த அதே லண்டன் மாநகரத்தின் தெருக்கள் வெட்கமே இல்லாமல்அவரை வரவேற்க விழாக்கோலம் பூண்டது.

சார்லியை வரவேற்க மக்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தனர். எங்கு பார்த்தாலும் வெறி பிடித்த மக்கள் வெள்ளம்! மக்கள் வெள்ளத்தைக் கடந்து செல்வது சார்லி சாப்ளினுக்குக் கடினமாக இருந்தது. தனது நிலையையும் உலகத்தின் நிலையையும் எண்ணி சார்லி சாப்ளின் மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டார். ஆனால் அவரது மனம் முழுமையும் அவரது காதலி ஹெட்டியே நிறைந்திருந்தாள். அவளை உடனே பார்க்க வேண்டும் என்று துடித்த அவருக்கு இந்த வரவேற்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. விரைவாகச் சென்று தனது காதலியின் முகம் பார்க்க நினைத்தார் சார்லி சாப்ளின்.

ஆனால் காலத்தின் கொடுமை அங்கும் தலைவிரித்து ஆடியது. ஆம்! அதனைக் கொடுமை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இந்தத் தடவையும் ஹெட்டி சார்லி சாப்ளினை ஏமாற்றித் தான் போயிருந்தாள்! விதி! சார்லி சாப்ளினைப் பார்க்க முடியாமலேயே அவள் இவ்வுலகத்தை விட்டே சென்றுவிட்டாள். சார்லி சாப்ளினுக்குச் செய்த துரோகமா? அல்லது தன்னால் ஏமாற்றப்பட்ட சார்லியை எவ்வாறு எந்த முகத்தோடு எதிர்கொள்வது என்ற தன்னிலை இரக்கத்தின் காரணமா? என்னவென்று சொல்ல முடியாத நிலையில் அவள் மரணத்தின் வாசலுக்குள் புகுந்தாள்! யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாளோ யாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தாளோ அவரைப் பார்க்காது, அவரிடம் மன்னிப்புக் கேட்காது மண்ணிலிருந்து விண்ணிற்கு ஏகினாள். என்னே! விதியின் கொடுமை! பாரசீகக் கவிஞன் உமர்கய்யாம் கூறுவதைப் போன்று,

“எழுதிச் செல்லும் விதியின் கை

எழுதி எழுதி மேற்செல்லும்

அழுதாலும் தொழுதாலும்

அதிலோர் எழுத்து அழிந்திடுமா?”

என்பதைப் போன்று விதி அங்கும் சதி செய்தது. காதலியைக் காண வந்த சாப்ளினுக்குக் கண்ணீர்தான் மிஞ்சியது.

ஹெட்டியைப் பார்க்க நினைத்து ஓடோடி வந்த சார்லியால் அவளது மரணச் செய்தியைத்தான் கேடக முடிந்தது! காலமெல்லாம் அவளின் நினைவாகக் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இடிபோன்ற இந்தச் செய்தியைக் கேட்டு மீண்டும் ஒரு முறை செத்துப்போனார்!

ஆம்! கடவுளைப் போலவே காதலும் சரியாகப் புரிபடாமலேயே இந்தப் பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது! சார்லி சாப்ளினால் ஓவென வாய்விட்டுக் கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம்! நடு இரவில் தன் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால்கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறை போய் மவுனமாக அழுது விட்டு வந்தார் அந்த மகா கலைஞன்!

அந்தச் சோகத்தில் இருந்து சார்லி மீள்வதற்குள்ளாகக் கூடவே அவரது தாயின் மரணமும் சுனாமியாக வந்து அவரைத் தாக்கியது. தாயை நினைத்து நினைத்து சார்லி சாப்ளின் வருந்தினார். கதறினார். புரண்டார். “இந்தத் தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம்,அவளது திறமைகள் ஆகியவற்றுக்கும், அவள் பட்ட வேதனைகளுக்கும் முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!” என்றுசாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழுதார்! ஆம்! அந்த மகா கலைஞனின் இதயத்தை இந்தத் துயரச் சம்பவங்கள் குத்திக் குதறின. இருந்தாலும் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டார். வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார். அவர் அழுதாரே தவிர அவரது படங்களைப் பார்த்த மக்கள் வயிறு வலிக்கச் சிரித்தனர். சொல்ல முடியாத சோகத்தைத் தன் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார் சார்லி சாப்ளின்.

சினிமா பேசத் தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே சார்லி சாப்ளின் எடுத்தார்! தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேசவைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் “city lights”. எதிரிகள் சதி செய்ததால் அனைத்துத் திரையரங்குகளிலும் அப்படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ஒரே ஒரு திரையரங்கில் மட்டும் திரையிடப்பட்டு மக்களின் கட்டுக்கடங்கா கூட்டத்தைக்கூட்டிவிட்டது அப்படம். அந்தப் படம் எதிரிகளை பணிய வைத்தது.

இந்தியாவிலிருந்து வரும் மகாத்மா காந்தியடிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட சார்லி சாப்ளின் அவரைச் சந்தித்தார்! யுத்த வெறி பிடித்தஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லி சாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாகஅமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தானாம்!

உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times படம் வெளி வந்த பிறகு மனிதகுலத்தை மேம்படுத்த வந்த சார்லி சாப்ளினை அமெரிக்க அரசு “கம்யூனிஸ்ட்!” என்று அடையாளப்படுத்தியது.

அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம், “உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. இனிமேல் நீங்கள் அமெரிக்காவில்காலடி எடுத்து வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்!” என்று தெரிவித்து. சார்லி சாப்ளின் ஸ்விட்சர்லாந்துக்குக் குடிபெயர்ந்தார். அங்கு இருந்து கொண்டே இரண்டு படங்களை இயக்கினார்.

சார்லி சாப்ளினுக்கு கலையுலகம் 1972 – ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது! 1977-ஆம் ஆண்டு கொடுமையான ஆண்டு. அவ்வாண்டில் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்…. எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மகா கலைஞனின் மரணம்முதன்முறையாக அனைவரையும் அழவைத்தது! சிரித்துக் கொண்டே இருந்த மக்கள் சிரிப்பைத் தொலைத்தனர். தங்கள் வீட்டில் உள்ள ஒருவரைத் தாங்கள் இழந்துவிட்டதாகக் கருதிக் கண்ணீர் வடித்தனர். பல்வேறு சொல்ல முடியாத சோகங்களை எல்லாம் மனதிற்குள் போட்டு மூடி வைத்துக் கொண்டு மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாபெரும் மக்கள் கலைஞர் மாண்டது கலைத்தாய்க்குப் பேரிழப்பாகியது. தன்னுடைய துன்பத்தைக் கூட வெளியில் தெரிவிக்க முடியாமலேயே அந்தக் கலைஞன் இறந்தான். தன் காதலியை நெஞ்சில் சுமந்த வண்ணமே மாய்ந்தான் அந்த மகா கலையுலக மேதை!

“தண்ணீரிலே மீன் அழுதால்

அதன் கண்ணீரையே யாரறிவார்?”

ஆம் மற்றவர்களை மகிழ்வித்த அந்த மகா கலைஞன், தன் உழைப்பால் புகழ் பெற்ற அந்த ஏழை இறந்தும் இறவாது இன்றும் உலக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

என்ன வாசகர்களே இந்த மகாகலைஞனுடைய வாழ்க்கைச் சரித்திரம் நெஞ்சை கசக்கிப் பிழிஞ்சிடுச்சா?..இப்ப தெரிஞ்சுக்கங்க.. ஏழ்மை என்பது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையில்லைன்னு.. எல்லாம் உழைப்புத்தான்னு புரிஞ்சுக்கங்க.. சரி…சரி.. இதுக்கே இப்படியா? சிரிச்சுக்கிட்டே இருக்கணும்..அதுதான் சார்லி சாப்ளினுக்கு நாம செலுத்தக் கூடிய நன்றி..

இதே மாதிரிதான் ஒரு ஏழை எல்லாரையும் சிரிக்க வச்சாரு.. அதோடு மட்டுமில்லை…சிந்திக்கவும் வச்சாரு… சம்பாதித்த எல்லாத்தையும் வாரி வாரி ஏழைகளுக்குக் கொடுத்து வள்ளலா வாழ்ந்தாரு.. பெரும்புகழ் பெற்றாரு..அந்த ஏழை …யாரு..தெரியுமா? நம்ம இந்தியாவைச் சார்ந்தவருதாங்க.. பலதிறமைகள் இருந்தது.. இன்றைக்கு வரைக்கும் அவரை நாம மறக்காம நெனச்சுக்கிட்டேதான் இருக்கிறோம்… நினைவுக்கு வந்துட்டாரா..ம்…ம்…ம்..பொறுத்திருங்க. அடுத்தவாரம் வரைக்கும்

 

(தொடரும்……….3)

Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15நம்பி கவிதைகள் இரண்டு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  சார்லி சாப்லின் உலகையே சிரிக்க வைத்த ஒரு மாபெரும் கலைஞர்., அவரின் துன்பம் நிறைந்த இளமையையும், காதலியை இழந்துபோன வாலிபப் பருவத்தையும் சுவைபட சித்தரித்துள்ள முனைவர் சி . சேதுராமன் அவர்களுக்கு பாராட்டுகள். எவ்வளவுதான் ஏழையாக இருக்க நேர்ந்தாலும் உழைப்பால் உயரலாம் என்பதற்கு சார்லி சாப்லினை உதாரணம் காட்டி பரந்த சமுதாயப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள தன்முனைப்புப் படைப்பு இது! வாழ்த்துகள்!…டாக்டர் ஜி.ஜான்சன்.

 2. Avatar
  புனைப்பெயரில் says:

  புகழ் பெற்ற ஏழையல்ல சாப்ளின்… புகழ் பெற்ற சிந்தனையாளர், திறமையாளர். முன்னேறத் துடிப்பவர்கள் தங்களின் திறைமை அயராது வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நோபல் சந்திரா சொன்னது போல், “நோபல் வாங்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்க முடியாது… உங்கள் துறையில் ஆழமாக ஈடுபடுங்கள். வெளிப்படுவன வேறுபடும்” என்பதே உண்மை. அப்துல் கலாம், ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு கண்டவரல்ல… உழைப்பே வாழ்வு என்றிருந்தவர் – நேர்மையுடன். பகவத் கீதை தாண்டி ஒரு தன்னம்பிக்க ஊட்டும் செய்தி இருக்க முடியாது. வெற்றி பெற்றவர்களின் அனைத்து கடந்த காலமும் ஒரு அர்த்தத்திற்குள் பின்னப்படும். நகைச்சுவையான உண்மை அது…

 3. Avatar
  புனைப்பெயரில் says:

  அதே லண்டன் மாநகரத்தின் தெருக்கள் வெட்கமே இல்லாமல்அவரை –> சரி இனி எல்லா ஊரிலும் ரோட்டில் அலையும் எல்லோருக்கும் கட் அவுட் பேனர் வைத்து விடலாம். வெட்கம் போய் விடும். நமது சிந்தனைக் கோளாறால் தான் நாம் அடிமையாய் இருந்தது. அது தொடர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *