விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்

This entry is part 28 of 31 in the series 7 ஏப்ரல் 2013

Vishwaroopam-releaseவிஸ்வரூபம் படத்துக்கு திரைப்பட விமர்சனம் எழுதலாம். அல்லது அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியலுக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக,  இந்த விமர்சகர்கள், விஸ்வரூபம் படத்தின் கலை நுணுக்கத்தையும் பார்க்கவில்லை. அதன் அரசியலையும் பார்க்கவில்லை. வஹாபி பார்வையுடைய இஸ்லாமிய அமைப்புகள் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, இந்த அமைப்புகளை ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளாக கருதிகொண்டு, அதன் காரணம் தொட்டு கமலஹாசனை விமர்சிப்பதையே முக்கியமாக செய்தார்கள்.

முதலில் விஸ்வரூபம் படத்தின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை பார்க்கும் ஒவ்வொருவரும் உடனே உணர்ந்துகொள்ளமுடியும். அதற்கு எந்த விதமான திரைப்பட விமர்சன பட்டப்படிப்பும் தேவையில்லை.

அமைதிப்புறாவான இஸ்லாமின் காலில் அணுகுண்டை கட்டிகொண்டிருக்கிறார்கள் என்று தீவிரவாத இஸ்லாமியர்களை சாடுவதுதான் இந்த திரைப்படத்தின் உள்ளீடு.

இதே நிலைப்பாட்டைத்தானே இந்த வஹாபிய அமைப்புக்கள் தங்களது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சொல்லிவருகிறார்கள்? இஸ்லாம் என்பது அமைதிமார்க்கம். அதில் இருக்கும் ஒரு சில தீவிரவாதிகளை வைத்து இஸ்லாமை தீவிரவாத மதம் என்று பார்க்கக்கூடாது. இஸ்லாமில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இஸ்லாமில் இருக்கும் தீவிரவாதிகள் இஸ்லாமை தவறாக புரிந்துகொண்டவர்கள். இதுதானே இஸ்லாமிய பேச்சாளர்கள் கூறுவது?

இதனைத்தானே விஸ்வரூபமும் கூறுகிறது?

இஸ்லாமை சேர்ந்தவர்கள் ஒரு நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தால், அந்த நாட்டுக்கு விசுவாசமானவர்கள்தானே தவிர, இஸ்லாமியர் என்பதற்காக இன்னொரு நாட்டுக்கு விசுவாசமானவர்கள் அல்ல. இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்குத்தான் விசுவாசமானவர்கள். பாகிஸ்தானுக்கோ ஆப்கானிஸ்தானுக்கோ விசுவாசமானவர்கள் அல்ல. இதுதானே இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசுவது?

இதனைத்தானே விஸ்வரூபமும் கூறுகிறது?

அப்பாவிகளை கொல்பவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அப்பாவிகளை கொல்வதை எதிர்ப்பவர்களே முஸ்லீம்கள். போரில் அப்பாவி பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை முகம்மது நபி தடை செய்திருக்கிறார் என்றுதானே இஸ்லாமிய பேச்சாளர்கள் கூறுகிறார்கள்.

அதனைத்தானே விஸ்வரூபமும் கூறுகிறது?

ஆனால், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்யும் பயங்கரவாதங்களை ஒவ்வொரு முஸ்லீமும் செய்வதாக மற்ற மதத்து மக்கள் கருதிவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். அவ்வளவு மடையர்களா மற்ற மதத்து மக்கள்?

ஆனால், அந்த அமைப்புகள் சொன்னதை அப்படியே ஒப்புகொண்டுதான் இந்த அறிவுஜீவி விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு இரண்டு அறிவுஜீவி பத்திரிக்கைகள் எழுதிய விமர்சனங்களை பார்க்கலாம்.

ஒரு சிக்கலை எப்படி அணுகக் கூடாது? விஸ்வரூபத்தை முன்வைத்துச் சில பாடங்கள்
அரவிந்தன்
http://www.kalachuvadu.com/issue-159/page21.asp

“புறாக்களின் சிறகடிப்போடு மென்மையாகத் தொடங்கும் படம் திடீரென்று வன்மைக்கு மாறுவது விஸ்வரூபம் படத்தின் தன்மையை உணர்த்தும் குறியீடு என்று சொல்லலாம். பெண்மையின் சாயலுடனும் வசீகரமான நளினத்துடனும் தோற்றம் தரும் நாயகன் ஆக்ரோஷமான ஆண் மகனாக உருமாறுவதும் அதே வகையிலான குறியீடுதான். மென்மையும் நளினமும் பெண்மையும் ரசிக்கவும் போற்றவும் ஆராதிக்கவும் உரியவை; ஆனால் வீறு கொள்ளும் ‘ஆண்மை’யும் வன்மையும்தான் இந்த உலகை எதிர்கொள்வதற்கு ஏற்ற வழி என்று விஸ்வரூபம் சொல்ல முயல்கிறது என்று இந்தப் படிமங்களைக் கட்டுடைக்கலாம். ”

படத்தின் மிக முக்கியமான குறியீட்டை – மற்றவர்கள் பலரும் தவற விட்டதை – அரவிந்தன் நுணுகி ஆய்ந்து குறிப்பிட்டிருப்பது நம்பிக்கை தரும் விஷயம். ஆனால் பெண்மையிளிருந்து ஆண்மைக்குத் தாவிச்செல்வதாக இந்தக் குறியீடு இடம் பெறவில்லை. மாறாக “எல்லோருக்குமே இதில் இரட்டை வேடம் தான் என்னும் போது , இந்த இரட்டையின் ஓர் அங்கமாக பெண்தன்மை இடம் பெறுகிறது. சாமானிய மக்களின் மீது விஷம் ஏற்றும் தத்துவம் பற்றிய விமர்சனமாக வருகிறது. இந்த படம் பெண்களை பற்றி பேசுவதை இந்த கட்டுரையில் இன்னும் சில பத்திகள் தாண்டி பேசுகிறேன்

இவர் எழுதுகிறார்.
//முஸ்லிம்கள் பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியப் பார்வை கட்டமைக்கும் பிம்பத்துக்கு வலுச் சேர்க்கிறது. மாறுபட்ட வடிவில் வெளிப்படும் அமெரிக்கப் பயங்கரவாதத்தைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. இந்த அணுகுமுறை முஸ்லிம்களை அவதூறு செய்பவர்களுக்கு உகந்த அணுகுமுறை.//

முஸ்லீம்கள் பற்றிய அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ன பிம்பத்தை கட்டமைக்கிறது அல்லது கட்டமைக்க முயல்கிறது என்று ஆதாரத்துடன் எழுதினால் பேசலாம். இன்றைக்கு முஸ்லீம்கள் பலதரப்பட்ட அதிகார மையங்களில் அமெரிக்காவில் பங்கெடுக்கிறார்கள். சொல்லப்போனால், பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ள சி.ஐ.ஏ உப அமைப்பின் தலைவரே மதம் மாறிய ஒரு முஸ்லீம். zero dark thirty என்ற படத்தில் அவர் தனது அறையிலேயே நமாஸ் செய்வதை காட்டுவார்கள். அது பொய்யில்லை.

ஜீரோ டார்க் தர்ட்டி பற்றிய ஸ்லேட் குறிப்பு

அப்படியிருக்கும் ”அமெரிக்க ஏகாதிபத்தியம்” எப்படி முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கமுனைகிறது?

அமெரிக்க பயங்கரவாதம் என்று ஒன்று இருக்கிறதா? அது பார்வையிலிருந்து வேறுபடும். அமெரிக்கா என்பது இன்றைய வல்லரசு. வல்லரசுக்கான அனைத்து குணங்களும் கொண்ட ஒரு அமைப்பு. அதன் தலையாய கடமையாக கருதுவது தனது குடிமக்களை பாதுகாத்துகொள்வது. ஆனால், ஒமருக்கு அந்த தெளிவு இல்லை. எது போர்வீரன், எவன் குடிமகன் என்ற பிரித்து பார்க்கும் நிலைப்பாடு இல்லை.

//விஸ்வரூபத்திலோ ஒற்றைக் குரல் மட்டுமே கேட்கிறது. விவாதத்துக்கு இடம் தராத பாரபட்சமான முடிவுகளையும் கற்பிதங்களையும் படம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பிரச்சினையின் பன்முகப் பரிமாணங்களைப் பார்க்க மறுக்கிறது. இது சிக்கலான பிரச்சினையைக் கையாள்வதற்கான நெறிமுறைகளை மீறும் செயல்.//

என்ன விதமாக இவர் படம் பார்த்தார் என்று எனக்கே புரியவில்லை. விஸ்வரூபம் பலதரப்பட்ட முஸ்லீம்களை பற்றி பேசுகிறது. முஸ்லீம்களுக்குள்ளாகவே இதற்கு எதிரான கருத்துக்களை பற்றி பேசுகிறது. முஸ்லீம் பெண்களை பற்றி பேசுகிறது. முஸ்லீம்கள் அமெரிக்கரின் கழுத்தை அறுக்கும்போது தங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்குவதாகவே பேசுகிறார்கள் என்பதை அரவிந்தன் பார்க்கவில்லை. ஆனால் உண்மையில், இஸ்லாமுக்கு எதிரான போராக பிரச்சாரம் செய்வதன் மூலமே அனைத்து முஸ்லீம்களையும் தங்கள் பக்கம் நிறுத்தமுடியும் என்று கருதித்தான் தாலிபான்களும், தீவிரவாதிகளும் தெளிவாக இஸ்லாமை முன்னிருத்துகிறார்கள். இதனை பேசாமல் ஒரு படம் எடுக்கமுடியாது.

இது ஒரு சரித்திரப்படமல்ல . ஆனால் சரித்திரத்தை முழுக்க நிராகரித்த படமும் அல்ல. அமெரிக்கா மீது எந்த விமர்சனமும் இல்லாத படமும் அல்ல.

அரவிந்தன் மீண்டும் சொல்கிறார்.

//நவீன அம்சங்களை முற்றாக மறுதலிக்கும் அல்கொய்தா அமைப்பினரின் வாழ்க்கை முறை, சிறுவர்களை மனித வெடிகுண்டாக மாற்றும் போர் முறை, துரோகிகளைத் தண்டிப்பதில் உள்ள ஈவிரக்கமற்ற தன்மை, போரை மதக் கடமையாக நினைத்துச் செய்யும் நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டும் படம், ரஷ்யாவின் மீதான பகைமையை முன்னிட்டு ஆப் கானிஸ்தானில் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களை ஊட்டி வளர்த்த அமெரிக்காவின் விபரீத அதிகாரப் போட்டியைப் பற்றிச் சொல்லவில்லை. //

சரித்திரம் இதில் இல்லை என்று சொன்னவர் சரியான சரித்திரத்தையும் சொல்லவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்ததில் பல நோக்கங்கள் உண்டு. ஆனால் தாலிபான் மூலம், தீவிர இஸ்லாமியப் படைகளை உருவாக்குவதன் மூலம் சோவியத் யூனியனை எதிர் கொள்ளலாம் என்ற உத்தி பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கினால் உருவாக்கப் பட்டது. இவரது தீவிரவாத மூளையில் உதித்த இந்தத் திட்டத்தின் செயல்பாடு தான் தாலிபான் முதல் இன்று பம்பாய் தாக்குதல் வரை பரிணமித்துள்ளது. “சோவியத் யூனியன் ஆக்கிரமித்தால் இந்த அமெரிக்காக்காரனுக்கு என்ன வந்தது? ஹங்கேரி, போலந்து, கிழக்கு ஜெர்மனி போல ஆப்கானிஸ்தானமும் மார்க்சிய, சோஷலிசப் புரட்சி மலர்ந்து சோவியத் யூனியனில் ஐக்கியமாகி உய்வு அடையத் தடையாக அமெரிக்கா இருந்தது ஏன்?” என்ற மார்க்சிய அலசலுக்கு பதில் என்னிடம் இல்லை. பூகோள ரீதியாய்ச் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு முயன்ற பனிப்போரின் தொடர்ச்சி என்று மட்டும் சொல்ல முடியும்.

தாலிபான் வென்று சோவியத் யூனியன் விரட்டப் பட்ட பின்பு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்றது தவறு என்று பல விமர்சனங்களும் உண்டு.

“நாட்டோ படைகள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்வதில்லை என்று அவர்களது நன்னடத்தைக்குச் சான்றிதழும் வழங்குகிறது. ” என்பதில் காட்சியைக் காண அரவிந்தன் தவறிவிட்டார். இந்த வசன சொல்லி வாய் மூடுவதன் முன்பே அமெரிக்கா தாக்குதல் நடக்கிறது. அதன் பின்பு உமார் வருத்தப் படும்போது விசாம் “உன் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்கிறது. போர் என்றால் மரணமும் தான். ” என்று பதில் சொல்வதும் திரைப் படத்தில் உள்ளது.

“அமெரிக்காவைக் காப்பாற்ற இந்தப் படத்தின் நாயகனான முஸ்லிம் எடுக்கும் முயற்சிகள் முஸ்லிம்களை மகிழ்விக்கும். இந்த நாயகனைப் போன்ற முஸ்லிம்கள்தான் உலகில் முஸ்லிம்கள் மீதுள்ள அவப் பெயரைப் போக்குவார்கள். எனவே இந்த நாயகனை (அதாவது கமலின் பார்வையில்‘நல்ல’முஸ்லிம்) முஸ்லிம்கள் முன்னுதாரணமாகக்கொள்ள வேண்டும். அதுவே தேசபக்த முஸ்லிம்களின் கடமை. இதுதான் கமல் விடுக்கும் செய்தி. ” என்கிறார் அரவிந்தன்.

விஸாமின் முயற்சிகள் அமெரிக்காவைக் காப்பாற்ற அல்ல. இஸ்லாமிய சமூகத்தைக் காப்பாற்ற. வன்முறையின் மூலம் அமெரிக்காவை வென்றெடுத்துவிடலாம் என்ற அறியாமையிலிருந்து இஸ்லாமிய சமூகத்தைக் காப்பாற்ற. எதிரி அமெரிக்கா அல்ல, உன்னையே நீபார் என்று சொல். “கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.”

ஆப்கானிஸ்தான் போரில் ஒத்துழைப்புத் தராவிட்டால், பாகிஸ்தானைக் கற்கால நாடாக ஆக்கிவிடுவோம் என்று அச்சுறுத்தல் நடந்ததாய் பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப் தெரிவித்தது உண்டு. அப்படிப் பட்ட அச்சுறுத்தல் இல்லாமலே அமெரிக்காவிற்கு தொண்டு செய்ய பாகிஸ்தான் காத்திருக்கிறது என்பது வேறு விஷயம். இந்தப் போரில் அமெரிக்காவை வன்முறையினால் வென்றெடுக்க முடியும் என்ற தாலிபானின் நப்பாசை எபப்டி நம் இடதுசாரிகளையும், இஸ்லாமிஸ்டுகளையும் ஆக்கிரமித்துள்ளது என்பது தான் புரியாத புதிர். ஆப்கானிஸ்தானின் உள்னாட்டு வன்முறை ஒழிந்து ஜனநாயகமும், அடிப்படை மனித உரிமைகளும் மலர்ந்தாலே அமெரிக்காவின் சிறகுகள் தானே முறியும்.

விஸ்வரூபம் தொடர்பான தமிழ்நாட்டின் நாடகக் காட்சிகளைப் பற்றிய அரவிந்தனின் எழுத்துக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. அது படத்தின் விமர்சனத்திற்குத் தொடர்பானதும் அல்ல.

****

http://www.kalachuvadu.com/issue-159/page12.asp
சிறுத்துப்போன பேருருக்கள் – க. திருநாவுக்கரசு

//அதே நேரத்தில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விஷயங்கள், இஸ்லாமியத் தீவிரவாதிகள் குறித்த உண்மைக்குப் புறம்பான விஷயங்கள் என்று எவையும் படத்தில் இல்லை.//
அப்பாடா!

//ஆப்கன் போரில் அமெரிக்காவின் நோக்கம், கைக்கொள்ளும் போர் முறைகள், அப்பாவி ஆப்கன் மக்கள் மீது போர் ஏற்படுத்தும் பெரும் நாசங்கள், அல் கொய்தாவுடனான அதன் முந்தைய கால உறவு பற்றியெல்லாம் எதுவுமே இப்படத்தில் பேசப்படவில்லை என்பதிலிருந்தே தீவிரவாதத்திற்கெதிரான போர் குறித்த கமல் ஹாஸனின் புரிதல் நமக்குப் புரிகிறது.//

முதலில் இந்த படம் ஆவணப்படம் அல்ல. ஆகையால் இதில் 1980 ஆரம்பித்து 2013வரைக்கும் உள்ள எல்லா விஷயங்களையும் பேசமுடியாது. ஆனால், கமலஹாசன் என்ற கலைஞனுக்கு எது முக்கியமோ அது மட்டும் தவறாமல் பேசப்படுகிறது. ஒரு கிழவியின் வாயிலிருந்து அது வருகிறது. “முதலில் ரஷியா வந்தான், பிறகு அமெரிக்கா வந்தான், தாலிபான் வந்தான், இப்ப நீ வந்திருக்கிற” இந்த திரைப்படம் முழுவதும் ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பார்க்கப்படுவதை ஒரு சாதாரண பார்வையாளன் உடனே புரிந்துகொண்டுவிடுவான். அந்தப் பெண்மணி இப்படி வரிசைப் படுத்தும்போது, தாலிபனும் இந்த மண்ணிற்குச் சொந்தமில்லாத அன்னியர்கள் என்ற தொனியையும் கொண்டு வருவதன் மூலம் தாலிபான் பிராண்ட் இஸ்லாம் பற்றியும் ஒரு தீவிர விமர்சனத்தை வைக்கிறாள்.

படம் பெண்களின் பார்வையில்தான் துவங்குகிறது. இன்னும் பெயர் சொல்லப்பட்டும் சொல்லப்படாமலும் ஏராளமான பெண்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எதிரி நண்பன் என்று எதுவும் பார்க்காமல் சிகிச்சை செய்பவளும் பெண்ணே. ஆப்கானிஸ்தானின் ஒரே வண்ணமாக இருப்பதும், நீலநிற அங்கி போர்த்திய பெண்களே. அவர்களே கடுமையாக ஆண்வர்க்கத்தை விமர்சனமும் செய்கிறார்கள். இறுதியில் பெண்ணே நியூயார்க் மாநகரத்தையும் காப்பாற்றுகிறாள். அப்படி காப்பாற்றக்கூடும் என்பதைக்கூட விஸாம் ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டுகிறான்.

ஆப்கானிஸ்தானின் பெண்கள் இருப்பும், மறைவும், மறைவில் இருப்பும் என்று மூன்று நிலைகளையும் விஸ்வரூபம் பேசுகிறது. தன் மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று விருப்பப்படும் ஆப்கான் பெண்மணி, தவறாகக் குற்றம் சாட்டப் பட்டு முச்சந்தியில் எல்லோரின் முன்பும் தூக்கிலிடப்படும் ஆணுக்காகக் கதறியழும் பெண்மணி, உதவி செய்ய வந்த மருத்துவப் பெண்மணி , அறைகளுக்குள் முடங்கிக் கிடந்து மூடிய முகங்களை முன்னிறுத்திய அடையாளம் அழிக்கப் பட்ட பெண்மணிகள் என்று படம் பேசுகிறது. மருத்துவராய் வரும் வெளிநாட்டுப் பெண்மணியையும் கூட “எதிரியாக”ப பார்க்கும் ஒரு மனநிலையினை படம் பேசுகிறது. தன்னையும் தன்னுடன் இணக்கம் கொண்ட ஒரு சிலரையும் தவிர அனைவரையும் எதிரிகளாய்ப் பாவிக்கும் நோய்க் கூறான மனநிலையின் இனவாதம் பற்றிப் பேசுகிறது.

தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளையும், பெண்களையும் இந்த படம் பேசுகிறது. அது வரலாற்று கதை சொல்லவில்லை. ஒரு கலைஞனுக்கு எது முக்கியமோ அதுவே அவன் சொல்லவிரும்பும் விஷயம். மக்களுக்கு சரித்திர பாடம் சொல்வது அவன் வேலையல்ல.

“ஒரு கதை சொல்லியின், இயக்குநரின் மேதைமையை வெளிப்படுத்தும் விஷயங்கள் என்று எவையுமே இந்தப் படத்தில் இல்லை.” என்கிறார் திருநாவுக்கரசு.,. அவர் திரைப்பட விமர்சனம் இதற்கு முன்பு ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. படத்தை எந்த அளவு ஊன்றிப் பார்த்தார் என்றும் புரியவில்லை. படத்தின் கருத்துகள் பற்றியும் வரலாறு பற்றியும் எழுதிய இவர் இதன் கலை அம்சங்கள் எப்படி பொருந்தாமல் உள்ளன என்று ஒரு வரி கூட எழுதாமல், படத்தை துவம்சம் செய்திருக்கிறார். எனவே இதை விமர்சனம் என்று சொல்வதே தவறு.

(பின் குறிப்பு : “கமலஹாசனுக்கே தெரியாத புது புது அர்த்தங்களைக் கண்டுபிடித்து எழுதி இருக்கும் ஆசிரியரின் கற்பனை வளம் பாராட்டுக்கு உரியது.” என்ற களிமிகு கணபதியின் கருத்துக்கு மட்டும் ஒரு சிறு பதில் தர உத்தேசம். திரைப்படம் என்பது தற்செயல்களால் உருவான கலை வடிவம் அல்ல. இயக்குனர், எடிட்டர், கதை வசனகர்த்தா, நடிக நடிகையர் என்று பெரும் படையே ஈடுபடும் ஒரு தொடர்செயல். கிட்டத்தட்ட நாம் பார்க்கும் படத்திற்கு பத்து மடங்கு சுடப் பட்டு மீண்டும் மீண்டும் தெரிவு செய்யப் பட்டு இறுதி வடிவம் பெறும் படைப்பு. படத்தின் சலனத் திரைவடிவத்தின் ஒட்டு மொத்த செல்வாக்கினை வெறுமே தான் தோன்றித் தனமாக உருவாக்கி விட முடியாது.)

 

Series Navigationமுத்தம்புகழ் ​பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
author

கோபால் ராஜாராம்

Similar Posts

6 Comments

 1. Avatar
  punaipeyaril says:

  எது எப்படியோ, இந்த படத்தைப் பார்க்கத் தூண்டும் ஆராய்ச்சி..

 2. Avatar
  ஷாலி says:

  “விஸ்வரூப காவிய”த்திற்கு உரை எழுதிய உரையாசிரியர் திரு. கோபால் ராஜாராம் அவர்கள், தன் மனம் போகும் போக்கில் கற்பனையை விரித்து கம்பரையே தோற்கடித்து விட்டார்.முன்பு கமல் படங்களை நியாயப்படுத்தி கட்டுரை எழுதிய திரு.கண்ணன் ராமசாமி அவர்கள் படக்காட்சிகளை வைத்தே நியாயப்படுத்தினார்.திரு.கோபால் ராஜாராம் கண்களுக்கு மட்டும் திரைக்கப்பாலும் காட்சிகள் விரிகின்றன.தன் மனக் கற்பனைகளை தானே சிலாகித்து பேசுகிறார்.சுயமாக சொரிந்து கொள்வதில் சுகம் இருக்கத்தானே செய்கிறது.
  //தமிழ் நாட்டின் ஜனங்கள் அறிவு ஜீவிகளை விட புத்திசாலிகள் என்றும் அவர்களால் பல பரிமாணங்களிலும் சிந்திக்க முடியும் என்று நிறுபித்திருக்கிறார்கள்.// திரு.கோபால் ராஜாராம் அவர்கள் பல பரிமாணங்களிலும் சிந்திக்கக்கூடிய தமிழ் நாட்டு மக்களாக தன்னையே உருவகப் படுத்தி பரிமாண படம் காட்டி மகிழ்கிறார்..படக்கதை விவாதத்தில் பங்கு பெற்றால் பாக்கியராஜ் அவர்களை விட இவர் முன்னணிக்கு வரலாம். மூட முஸ்லிம் இயக்கங்கள் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாமல் இருந்திருந்தால் இந்நேரம் கமலின் வீடு வாசல் ஏலத்திற்கு வந்திருக்கும்.இதுதான் உண்மை.
  //திரைப்படம் என்பது தற்செயல்களால் உருவான கலை வடிவம் அல்ல. இயக்குனர்,எடிட்டர்,கதைவசனகர்த்தா,நடிக,நடிகையர் என்று பெரும் படையே ஈடுபடும் ஒரு தொடர் செயல்.//
  ஏதோ அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து மக்களுக்கான அரசியல் சாசன திட்டத்தை வடிவமைக்கப் பாடுபடுவதுபோல், திரைப்பட தயாரிப்பு பிம்பத்தை தோளில் தூக்கி வைத்து ஆடுகிறார்.நடப்பது என்ன? டைரக்டர் சொன்னபடி கொடுக்கிற காசுக்கு கூவி விட்டுப் போவதுதான் மற்றவர்கள் வேலை.இதற்க்கு ஏன் இத்தனை பில்டப்.?
  இவர் கட்டுரையின் தலைப்பே திரை குரூரத்தை தெளிவாக சொல்லி விடுகிறது.”பறவைகளை நஞ்சுதாங்கிகளாக மாற்றும்”
  இந்த திரை மனிதர்களின் அவலத்தை. விஸ்வரூப கமலின் இந்த டெக்னிக்கை தாலிபான்கள் பின்பற்ற தொடங்கிவிட்டார்கள்.இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கழுதையில் வெடிகுண்டை கட்டி படை வீரர்கள் பக்கம் விரட்டி விட்டு அவர்களை நெருங்கியதும் வெடிக்க வைத்ததாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது. எப்படியோ,தாலிபான்களுக்கும் விஸ்வரூப விஸாம் கமல் வழிகாட்டி விட்டார்.

 3. Avatar
  murali says:

  1. “கமலஹாசனுக்கே தெரியாத புது புது அர்த்தங்களைக் கண்டுபிடித்து எழுதி இருக்கும் ஆசிரியரின் கற்பனை வளம் பாராட்டுக்கு உரியது ” reflecting everyone’s opinion”

  2.ஒரு கதை சொல்லியின், இயக்குநரின் மேதைமையை வெளிப்படுத்தும் விஷயங்கள் என்று எவையுமே இந்தப் படத்தில் இல்லை.” என்கிறார் திருநாவுக்கரசு.,. “100 percent correct – i agree this”

  3.முதலில் இந்த படம் ஆவணப்படம் அல்ல. ஆகையால் இதில் 1980 ஆரம்பித்து 2013வரைக்கும் உள்ள எல்லா விஷயங்களையும் பேசமுடியாது. ஆனால், கமலஹாசன் என்ற கலைஞனுக்கு எது முக்கியமோ அது மட்டும் தவறாமல் பேசப்படுகிறது ” some parts of movie is just like a documentary filn – you cant deny it too”

  4. Several years ago terrorist are communist, now muslims are terrorist – very unfortunte. No one understand feelings and emotions of muslims. Just pointing fingers on them….now hollywood and bollywood uses islam fighters to fill their coffers….

 4. Avatar
  taj says:

  திரு.கோபால் ராஜாராம் எழுதிய
  விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல் வாசித்தேன்.
  அவர் சுட்டும் விஸ்வரூபம் படத்தின் நுட்பங்கள் மிக சரி.
  இது
  நான் எழுதிய என் ரக விஸ்வரூபத்துக்கான விமர்சனம்.
  நன்றி.
  -தாஜ்

  *
  பார்வை:

  விஸ்வரூபம் தந்த வியப்பு!
  ———————————–
  -தாஜ்

  24-பிரிவாகவும்
  எண்ணற்ற கோணங்களாகவுமான
  தமிழக இஸ்லாமிய கட்சிகளின்
  ஒருங்கிணைந்த வேடிக்கைகளிடமும்…
  அதிகார அரசியலின் கரங்களிடமும்
  சிக்கோ சிக்கென்று சிக்கி
  அலைகழிக்கப்பட்ட
  கமலின் விஸ்வரூபம்
  பல வெட்டுகளுக்கும்
  ஒரு சில வசன அழிப்புகளுக்கும்
  உள்ளான நிலையில்,
  மூன்று நாட்களுக்கு முன்
  அப்படத்தைக் கண்டுக் கழித்தேன்.

  நல்ல தியோட்டர்!
  சிதம்பரம் மாரியப்பா!
  100 பேர்களுக்கும் குறைவான
  பார்வையாளர்கள்!
  அமைதியான
  இரவுக் காட்சி!
  ஓர் இனிமையான அனுபவம்.

  இஸ்லாமியக் குழுக்கள்
  இப்படத்தை பிரத்தியோகமாக
  கண்டுவந்த நாளில்
  அவர்கள் கூறிய மதம் சார்ந்தக்
  கருத்துக்களையெல்லாம்
  முற்றாய் ஒதுக்கிய மனோநிலையில்
  காண அமர்ந்தேன். என்றாலும்
  வியாபார ரீதியிலான படங்களின் மீது
  எப்பவும் நான் கொள்ளும்
  அவநம்பிக்கை மட்டும் வாழ
  படத்தை காணத் தொடங்கினேன்.

  படத்தின் ஒவ்வொரு காட்சிகளும்
  விரிய விரிய
  என் அவநம்பிக்கை முற்றாய் மறைந்தது.
  இது வியாபாரப் படம் என்றாலும்
  முகம் வேறு!

  அடுத்தவர்கள் சொல்லத் தயங்குகிற
  நிஜத்தை
  துணிந்து சொல்ல முனைகிற
  வித்தியாசமான
  ஆண்மை கொண்ட முகமிது!

  குத்திட்ட விழி,
  தேவைக்கும் இமைக்காதப் பார்வையோடு
  அடுக்கடுகாய்
  வியந்துக் கொண்டே இருந்தேன்!
  துணை வியப்பாய்
  ‘காண்பது தமிழ்ப் படம்தானா?”
  எனுமோர் கேள்வி!

  ஹீரோ பலரை சாய்ப்பது
  தியோட்டரையே கிடுகிடுக்க வைக்கும் இசை
  தெரிந்தே வைக்கும் சில லாஜிக்கற்ற
  பிழைப் போன்ற
  சினிமா சங்கடங்களைத் தவிர்த்து,
  படம்
  முழு நீள உண்மைச் சம்பவங்களின்
  தடம்பிடித்து
  விஸ்தீரணக் காட்சிகளாக
  தீவிரப்பட்டு கொண்டே இருந்தது.

  அங்கே இங்கே திரும்பியென
  ஒரு காட்சியையும் விட்டுவிடாது
  என்னைப் பார்க்கவைத்த
  ஒரு ஆக்ஸன் தமிழ்ப் படமென்றால்…
  அது,
  இதுவொன்றாகத்தான் இருக்கும்!

  படத்தைக் குறித்து பேச
  நிறைய இருக்கிறது.
  அதற்கு இங்கு இடம் போதாது.
  நேரமும் பஞ்சம்.

  விஸ்வரூபத்தில்
  விரியும் பிரமாண்டம் தவிர்த்து
  அதன் கலை நேர்த்திகள் குறித்தும்
  யுக்திகள் குறித்தும் நிறைய எழுதலாம்.
  சில யுக்தியான
  சங்கதிகளை மட்டும் பார்ப்போம்.

  பலரும் அறிந்த
  பெரியாரிஸ்ட்டான கமல்.
  தான் நடிக்கும் படங்களில்
  சாமி கும்பிடும் காட்சிகளை
  கிண்டலும் கேலியுமாகவே
  காட்சிப் படுத்தியிருப்பார்.
  இதற்கு முன் வந்த
  கமலின் தசாவதாரத்தில்
  சுவாமி சிலை பந்தாட்டப்படுவதாக
  படம் பூராவும் சித்தரித்திருப்பார்.

  இந்தப்படத்தில்
  ‘வாசிம் அஹமத்’ என்னும் பெயர் கொண்ட
  காஷ்மீரி முஸ்லிமான நடிக்கும் கமல்,
  ஓர் இந்துவாக….
  விஸ்வநாதன் எனும் பெயர்தாங்கி
  மாறு வேடத்தில் இருக்கிற போது…
  தொழுகைக்கு அவர் விரையும் விரைவும்
  தொழுகையை நிறைவேற்றும் விதமும்
  குறைக்காண முடியாத அளவில்
  பௌவியமாகவே
  காட்சியாக்கியிருக்கிறார்.

  தான் கொல்லப்படப் போவதை அறிந்து
  தனது கடைசி ஆசையாக
  தொழ அவர் வேண்டுகோள் வைப்பதும்
  தொழுது முடித்த நிலையில்
  ‘ரப்பனா…’ என்று தொடங்கும் ‘சூரா’வை
  சப்த லயத்துடன் ஓதி முடித்தவராக,
  ஓதப்பட்ட சூராவின் துவா பலத்தோடு
  எதிராளியைப் பந்தாடுவார்!
  தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது இது.

  அதாவது,
  அடிப்படையில்
  தான் ஒரு பெரியாரிஸ்டாக இருந்தாலும்,
  கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும்,
  இப்படத்தில்
  இஸ்லாமிய வேடமேற்றிருக்கும் கமல்
  நம்பிக்கைச் சார்ந்த எந்தவொரு
  கிண்டலோ கேலியோ இல்லாமல்
  கௌரவமான முறையிலும் செய்திருக்கிறார்.

  ஒரு கோணத்தில் பெரியாருக்கு
  இஸ்லாத்தையும்,
  இஸ்லாமியர்களையும் பிடிக்கும்.
  இங்கே,
  இப்படத்தில் கமலுக்கும்
  அப்படி பிடித்ததோர் நிலையே
  வெளிப்படுவதாக உணரமுடிகிறது!

  ஆப்கானிஸ்தானில்
  தலைமைக் கொண்டிருக்கும்
  அல்கொய்தா இயக்கத்தை
  வேவுப் பார்க்க
  இந்திய அரசின் ‘ரா’வால்
  ஜிஹாத்தியாக
  அனுப்பிவைக்கப்பட்டிருக்கும்
  உயர் அதிகாரியும், முஸ்லிமுமான கமல்
  அல்கொய்தா இயக்கத்தினரோடு
  இரண்டறக் கலந்து
  வேவுப் பார்க்கும் காலத்தில்
  அவரையும் அறியாமல்
  ஓர் ஜிஹாத்தியின் மனோநிலைக் கொண்டு
  அமெரிக்கர்களின் வான் தாக்குதலில்
  படுகொலை செய்யப்படும்
  ஆப்கான் இஸ்லாமியர்களுக்காக
  மனம் பதறுகிறார்.
  தவிர, அவர் பங்கிற்கும்
  அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்த
  ஆக்ரோஷம் கொள்கிறார்.

  ‘வெஸிட்டேரியன்’ யென பீற்றிக் கொள்ளும்
  அவரது சொந்த இன மக்களிடத்து
  கிளைக்கும் சிக்கன் உணவு மோகத்தை
  போர் சூடும்
  அதன் தகிப்புகளும் கொண்ட
  இந்தப் படத்தில்
  சந்திக்கு இழுத்து வைத்திருக்கிறார்!

  தமிழக இஸ்லாமியர்களின் காவலர்களாக
  தங்களை பிரகடணப்படுத்திக் கொள்ளும்
  24 – இஸ்லாமியக்
  கூட்டமைப்பு கட்சிமார்களுக்கு
  கமல் நிகழ்த்தியிருக்கும்
  இந்த யுக்திகள் எதுவும்
  கண்ணில் பட்டதாகவே தெரியவில்லை.

  //முல்லா உமர்,
  கோவையிலும், மதுரையிலும்
  இரண்டு வருடம்
  இருந்ததாக சொல்வது எப்படி?//

  //வீட்டின் உள்ளிருக்கும்
  சிறுவர்களையும் பெண்டீர்களையும்
  அமெரிக்க ராணுவம் கொல்லாது என்று
  சொல்வதெப்படி?//

  //எதிரிகளைக் கொல்லத் தலைப்படும் போது
  ஜிஹாத்திகள்
  குர்-ஆன் சூராவினை
  ஓதுவதாகக் காட்டலாமா?//

  //அமெரிக்க நகரங்களை
  காபந்து செய்ய
  கமலுக்கு ஏன் இத்தனை அக்கரை//

  -இப்படியான…
  ஒரு நிமிடத்தில் பதில் சொல்லிவிடக் கூடிய
  படு அற்பமான,
  படு அபத்தமான
  கேள்விக் காரணிகளை முன்வைத்து
  விஸ்வரூபத்தை தடைசெய்ய சொல்லி
  24 – இஸ்லாமியக் கூட்டமைப்பு கட்சிமார்கள்
  அடித்தக் கொட்டம்
  அந்த அல்லாவுக்கே அடுக்காது.

  ‘துப்பாக்கி’ படத்தில்
  இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின்
  தேசப்பற்று கேள்விக் குறியாக
  சித்தரிக்கப்பட்டிருந்தது
  இஸ்லாமியர்கள் கோபம் கொண்டார்கள்.
  படவெளியீட்டை எதிர்த்தார்கள்
  அதில் குறைந்தப் பட்ச அர்த்தமிருந்தது.

  விஸ்வரூபம்
  அமெரிக்கா – ஆப்கானிஸ்தான்
  இடையேயான தளத்தில்
  கதையும் காட்சிகளுமாக
  படமாக்கப்பட்டிருக்கிறது.
  இதனில்
  இஸ்லாமிய கூட்டமைப்பினர்
  கோபப்பட வேறு என்ன
  பிரத்தியோக காரணமாக இருக்கும்?

  24 – இஸ்லாமியக் கூட்டமைப்பின்
  சிப்பாய்களும்
  மற்றுமதன்
  அரும் பெரும் தொண்டர்மார்களும்
  கடந்த முப்பத்தி ஐந்து வருடக்காலமாக
  ஆப்கானிஸ்தானில்
  என்ன நடந்துக் கொண்டிருக்கிறதென்பதை
  அறிந்த்திருப்பார்களா என்ன?
  அறிந்திருக்கும் பட்சம்
  இத்தனைக்கு…
  கொதித்தெழுந்திருக்க மாட்டார்கள்.

  *
  இப்படத்தையொட்டி
  கமல் செய்திருக்கிற தவறுகள் இரண்டு.

  ஒன்று.
  ஆப்கானிஸ்தானின்
  கடந்தக் கால நிகழ்வுகள் அத்தனையும்
  தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் என்கிற
  தொனியில்
  இப்படத்தின் கதை மையத்தை
  தேர்வு செய்தது.

  இரண்டு,
  கமல்,
  சப்தம் காட்டாமல்
  இப்படத்தை ஆங்கிலத்தில்
  எடுக்கத் தவறியது.

  தமிழ்த் திரையை
  உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென்று
  கமலிடம்
  இங்கே யார் அழுதார்கள்?.

  *
  24 – இஸ்லாமியக் கூட்டமைப்பு கட்சிமார்களுக்கு
  ஓர் தாழ்மையான வேண்டுகோள்.
  படைப்பாளியையும்
  அவனது படைப்புகளையும்
  அசிங்கப்படுத்தி
  சிதைப்பதையெல்லாம் விட்டுவிட்டு
  முதலில் நீங்கள்
  சினிமா பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

  ***

  1. Avatar
   பொன்.முத்துக்குமார் says:

   தாஜ்,

   எதுக்குங்க இப்படி ரெண்டு வார்த்தைக்கு ஒரு தடவை Enter Key – யை தட்டி இவ்ளோ நீளமா ? பத்தி பத்தியா எழுதி இருக்கலாமே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *