எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்

author
16
0 minutes, 6 seconds Read
This entry is part 18 of 31 in the series 7 ஏப்ரல் 2013

MVVenkatram

 

–       யாழினி முனுசாமி

 

 

நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவராகத் திகழ்பவர் எம்.வி.வெங்கட்ராம். அவரது படைப்புகள் காலத்தால் அழியாத் தன்மை கொண்டவையாகும். அவரது வேள்வித் தீ எனும் புதினம் தமிழின் தலைசிறந்த புதினங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அதற்கான காரணம் அப்புதினம் ஒரு சமூக வரலாறாகவும் இருப்பதுதான். தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரர்களைப் பற்றிய இனவரைவியலாக இப்புதினம் அமைந்திருக்கிறது. அப்புதினத்தின்வழி சௌராஷ்டிரர்களின் வாழ்வியலையும் அச்சமூகத்தையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

 

எம்.வி.வெங்கட்ராம் வாழ்க்கைக் குறிப்பு :

 

1920-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் வீரைய்யர் – சீதை அம்மாள். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம் – சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்தெடுத்துக்கொண்டனர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்துகொண்டு மணிக்கொடி இதழில் சிறுகதைகள் எழுதினார். 16-ஆவது வயதில் முதன்முதலில் இவர் எழுதிய  “சிட்டுக் குருவி ” எனும் சிறுகதை மணிக்கொடி இதழில் வெளியானது. “விக்ரஹவிநாசன்” எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.  1941 – 1946 காலகட்டத்தில் கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். 1965 – 1970 காலகட்டத்தில்  தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.  ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948-இல் “தேனீ” என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார்.   2000-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் இவர் காலமானார்.

நித்திய கன்னி, இருட்டு, உயிரின் யாத்திரை, அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள்,

வேள்வித் தீ ஆகிய புதினங்களும், மாளிகை வாசம், உறங்காத கண்கள், மோகினி, குயிலி, இனி புதிதாய், நானும் உன்னோடு, அகலிகை முதலிய அழகிகள், எம். வி. வெங்கட்ராம் கதைகள், முத்துக்கள் பத்து, பனிமுடி மீது கண்ணகி ஆகிய சிறுகதை நூல்களும் இவரது படைப்புகளாகும்.

 

வேள்வித் தீ ” – கதைச் சுருக்கம் :

                                      

 

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தறி நெய்யும் சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் புதினம் வேள்வி்த் தீ.  புதினத்தின் தலைமைக் கதை மாந்தரான கண்ணனின் போராட்ட வாழ்க்கையின் ஊடாக  சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்க்கையை இப்புதினத்தில் பதிவுசெய்திருக்கிறார் ஆசிரியர் எம். வி. வெங்கட்ராம்.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள துவரங்குறிச்சியில் இரண்டு அண்ணன்கள், மூன்று சகோதரிகளுடன் பிறந்தவன் கண்ணன். தந்தையின் மறைவிற்குப் பிறகு அம்மாவிற்கும் அண்ணிகளுக்கும் ஒத்துவராததாலும், அண்ணன்களும் அம்மாவைப் பார்த்துக் கொள்ள  முடியாது என்று போட்டி போட்டதாலும், அம்மாவை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் துவரங்குறி்ச்சியிலிருந்து அம்மாவுடன் கும்பகோணத்திற்குக் குடிபெயர்கிறான் கண்ணன்.  அங்கு ஜவஹர் அன் கோவின் ஒற்றைக் கூலித் தறியுடன் தன் நெசவு வாழ்க்கையைத் தொடர்கிறான்.  கண்ணனி்ன்  திறமையைக் கேள்விப்பட்ட கீழத்தெரு ராமசாமி அய்யர் அவனுக்கு இரண்டு ஒப்பந்தத் தறிகளையும், தறி நெய்வதற்கான சரக்குகளையும், குடியிருக்கத் தன்னுடைய பழைய வீட்டையும்  கொடுத்துத் தன்னுடைய ஒப்பந்தக் கூலியாக மாற்றிக் கொள்கிறார்.

சாரநாதன் என்பவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு கடுமையாக உழைக்கத் தொடங்குகிறான் கண்ணன்.  இரண்டாம் ஆண்டில் கூலி உயர்வு கோரி பட்டு நெசவாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்கிறார்கள்.  கண்ணனும் சாரநாதனும் அப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.  முதலாளிகளின் சூழ்ச்சியால் போராட்டம் தோல்வியில் முடிகிறது.  முதலாளிகளின்  இன்னொரு முகத்தைக் கண்ணன் காண்கிறான்.  தன் முதலாளியையும் அவன் புரிந்து கொள்கிறான். வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நெசவுத் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டு நெசவுத் தொழில் நலிவடைந்துவிடுகிறது.  நெசவார்கள் சிலர் பட்டணத்தில் பிச்சையெடுக்கும் நிலைக்கு  ஆளாகிறார்கள்.  சிறு முதலாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.  கண்ணனும் சாரநாதனும் வேறுநகரம் எதற்கும் இடம் பெயராமல் கும்ககோணத்திலே தங்கியிருக்கிறார்கள். கொஞ்ச நாட்கள் கடந்தபின் நெசவுத் தொழில் சீரானது.  நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகச் சீரடைந்து கையில் கொஞ்சம் பணமும் சேர்கிறது கண்ணனிடம்.  கண்ணனின் நீண்டநாள் கனவான “சொந்த வீடு” கனவுகூட நிறைவேறுகிறது.  தான் குடியிருந்த தன் முதலாளியின் வீட்டையே குறைந்த விலைக்கு வாங்கி புதுப்பித்துக் கொள்கிறான்.  அவனது வாழ்க்கை நிலை உயர்ந்துவிட்டது.  வருமானமும் பெருகத் தொடங்கியது.  அதுவரை கண்டுகொள்ளாமலிருந்த உடன் பிறந்தவர்கள் இப்போது உறவு கொண்டாடத் தொடங்குகிறார்கள். உதவிகள் செய்வது, கோயில்களுக்கு யாத்திரை செல்வது என்று அவர்களால் அவனுக்குச் செலவுகள் கூடுதலானது என்றாலும் தன் தாயின் மகிழ்ச்சிக்காக இவற்றையெல்லாம் செய்கிறான் கண்ணன்.  தொழில் கணக்குகளை சாரநாதன் கவனித்து வருகிறான்.  அந்த ஆண்டு பட்டிலும் ஜரிகையிலும் எடை குறைந்து நட்டம் ஏற்பட்டு விடுகிறது.

கண்ணனின் தாய் உடல் நலம் குன்றி இறந்து போகிறாள்.  அவனது சகோதரர்களும் சகோதரிகளும் அம்மா போட்டிருந்த நகைகளைப் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டுப் பிரித்தெடுத்துக் கொள்கிறார்க்ள.  இத்தனைக்கும் அவற்றையெல்லாம் வாங்கிப் போட்டிருந்தவன் கண்ணன்தான்.  சடங்கெல்லாம் முடிந்து கொஞ்ச நாட்கள் தனியாக இருக்கிறான் கண்ணன்.  பிறகு துவரங்குறிச்சி பத்மநாப அய்யரின் மகள் கௌசலைக்கும் கண்ணனுக்கும் திருமணம் நடைபெறுகிறது.  கண்ணன்  வேறொரு முதலாளிக்குக் கட்டுப்பட்டு நடப்பதை அவரது மாமனார் விரும்பவில்லை.  கண்ணனின் முதலாளிக்கும் பாரிசவாதம் ஏற்பட்டு வலதுகாலும் கையும் விழுந்துவிடுகின்றன.  நிர்வாகப் பொறுப்புகளை முதலாளியின் பிள்ளைகள் ஏற்றபிறகு கெடுபிடிகள் அதிகமாகின்றன.  மாமனார் உதவியுடன் கண்ணன் இரண்டு சொந்தத் தறிகளைப் போட்டு கொள்கிறான்.   சில நாட்களாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. வீட்டுச் சுவர்கள் எல்லாம் இடிந்து விழுந்து அல்லல்படுகிறார்கள் நெசவாளர்கள். கண்ணனின் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்து விடுகிறது.  கூரை ஓட்டில் மழை ஒழுகி வீடே நனைந்து விடுகிறது.

கண்ணனின் குடும்பத்திற்குத் தானாக உதவ முன் வருகிறாள் கௌசலையின் தோழி ஹேமா.  கண்ணன் மறுத்தும் அவனை சமாதானம் செய்து ஏற்க வைத்துவிடுகின்றனர் ஹேமாவும் கௌசலையும்.  ஹேமா இருபது வயதிலே தன் கணவனைப் பறிகொடுத்து விட்டு தாய்வீட்டில் தன் சகோதரர்களோடு வாழ்ந்து வருகிறாள்.  வசதியான வீட்டுப்பெண். கௌசலைக்கும் ஹேமாவிற்கும் நெருக்கம் அதிகமாகி வருகிறது.  கௌசலையின் வீட்டுக்கு ஹேமா அடிக்கடி வந்து போக… கௌசலையின் கணவன் கண்ணன் மீது ஹேமாவிற்குக் காதல் ஏற்பட்டுவிடுகிறது.  கண்ணனையும் அவனது  நண்பன் ரங்கன், “ நீ யோகசாலி” என்று உசுப்பேற்றிவிடுகிறான்.  இதற்கிடையில் கண்ணனின் மாமனார் திடீரென்று இறந்துவிடுகிறார். கௌசலை தாய் வீட்டிற்கும் கணவன் வீட்டிற்கும் சென்று வந்து கொண்டிருக்கிறாள்.

இந்நிலையில் ஒரு நாள் கௌசலை வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து ஹேமா கௌசலையைப் பார்க்கும் சாக்கில் கண்ணனின் வீட்டிற்கு வருகிறாள்.  கண்ணனோடு பேச்சுக் கொடுத்து துக்கம் விசாரித்து பரிவாகப் பேசி பேச்சின் மூலமாகக் கண்ணனை ஈர்த்து, இருவரும் புணர்ச்சியில் ஈடுபட்டு, ஹேமா புறப்படும் நேரத்தில் கௌசலை வந்துவிடுகிறாள்.  அரைகுறையாகக் கலைந்த கோலத்தில் தன்னைக் கடந்து செல்லும் ஹேமாவையும்  தன் கணவன் கண்ணனையும் திட்டித் தீர்க்கிறாள்.  கண்ணன் ஒன்றும் நடவாதது போல் பொய் சொல்கிறான்.  கௌசலை நம்பத் தயராக இல்லை. இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது.  ஒருநாள் கௌசலையை ரொம்பவும் அடித்து விடுகிறான் கண்ணன். மீண்டும் ஒருநாள்,  பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து இரவுநேரத்தில் கண்ணன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது  ஹேமா சந்திக்கிறாள்.  ஹேமாவுடன் ஆற்றங்கரையில் பேசியிருந்துவிட்டு விடியற்காலையில் வீட்டிற்கு வருகிறான் கண்ணன்.  இரவு  ஹேமா வற்புறுத்திக் கொடு்த்த கழுத்துச் சங்கிலியை கௌசலைக்குத் தெரியாமல் மறைத்து வைத்து விட்டுத் தூங்கிவிடுகிறான்.

இதையெல்லாம் தெரிந்து கொண்ட கௌசலை, தன் நகைகளையும் தன் குழுந்தையின் நகைகளையும் கழுற்றி அதனுடன் வைத்துவிட்டுத் தன் அப்பா வீட்டிற்குச் சென்று  வருவதாகச் சொல்லி, தன் கைக்குழந்தையுடன் சென்று விடுகிறாள்.   அப்போது அவள்  மூன்று மாத கர்ப்பமாக வேறு இருக்கிறாள். அன்று இரவு கௌசலை வீட்டிற்குத்  திரும்ப வராததைக் கண்டு அதிர்ச்சியுற்ற கண்ணன் தன்னுடைய மாமனார் வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறான்.  கௌசலை அங்கு செல்லவில்லை என்று தெரிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து  எங்கெங்கோ தேடுகிறார்கள். ஆனால்  காலையில் அவளது பிணம்தான் கிடைக்கிறது. பொற்றாமரைக் குளத்தில் மார்போடு குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டு மிதந்துகிடக்கிறது கௌசலையின் உடல்.

ஹேமாவால்தான் கௌசலை தற்கொலை செய்து கொண்டாள் என்று ஊர் பேசுகிறது.  கண்ணனின் தங்கையும் கௌசலையைத் திட்டிச் செல்கிறாள்.  இது எதுவும் கண்ணனுக்குத் தெரியாது.  அவன் பிரமைப் பிடித்தவன் போல் கிடக்கிறான். சடங்கெல்லாம் முடிந்து எல்லோரும் அவரவர் வீட்டிற்குச் சென்று விடுகின்றனர்.   ஹேமா, கண்ணனின் வீட்டிற்கு வந்து கண்ணீர் சிந்தியபடி அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.  இருவரும் சிலகாலம் எங்காவது ஊர் ஊராகச் சென்று சுற்றினால் மன அமைதியடையும், பிறகு சேர்ந்து வாழலாம் என்று வழி சொல்கிறாள் ஹேமா.  முதலில் மறுக்கும் கண்ணன் பிறகு இருவரும்  சேர்ந்து வாழ ஒப்புக் கொள்கிறான்.

 

“ வேள்வித் தீ ” காட்டும்  சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும் :

    

இப்புதினத்தில் கும்பகோணத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள சௌராஷ்டிர நெசவாளர்களின் போராட்டகரமான வாழ்க்கையைத் திறம்படச் சித்திரித்திருக்கிறார், எம்.வி.வெங்கட்ராம். மூன்றாவது அத்தியாயத்தில் சௌராஷ்டிரர்கள் என்பவர்கள் யார், அவர்களின் பூர்வீகம் எது, எந்தக் காலகட்டத்தில் அவர்கள் தமிழகத்திற்குக் குடிபெயர்ந்தார்கள், அவர்களது பண்பாடு என்ன என்பனவற்றையெல்லாம் இனவரைவியல் தன்மையில் விவரிக்கப்பட்டுள்ளன.

“சௌராஷ்டிரர்கள் ‘ தொன்று தொட்டு ’ தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் அல்ல; அவர்களுடைய பெயரிலிருந்தே தெரிவதுபோல், அவர்களுடைய ஆதித் தாயகம் சௌராஷ்டிர ராஜ்யம். கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து, ஆலயங்களை இடித்தும், விக்கிரங்களை உடைத்தும், ஹிந்து மதத்தையே ஒழிக்க முனைந்தான் அல்லவா? அச்சமயத்தில், சௌராஷ்டிரத்தில் இருந்த பல குடும்பங்கள் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிறந்த மண்ணைத் துறந்து, பிழைப்பைத் தேடி தெற்கே குடிபெயர்ந்தார்கள். அவர்கள் சாதியில் பிராமணர்கள்; ஆயினும் நெசவுத் தொழிலில் வல்லவர்கள்; வேலைப்பாடுகள் மிக்க பட்டு பருத்தி நூல் ஆடைகள் நெய்வதற்குப் பெயர் பெற்றவர்கள். ஆகையால் அவர்கள் அகதிகளைப் போல் பிறருடைய உதவியை எதிர்பார்க்கவில்லை. போகும் இடங்களில் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார்கள் ”

(வேள்வித் தீ . ப. 16). என்று சௌராஷ்டிரர்களின் புலம்பெயர்வு பற்றிக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

ஒரு மொழிபேசும் இனம் வேறுவேறு மொழிகள் பேசப்படும் பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ நேர்கையில் அவர்களின் மொழியிலும் பண்பாட்டிலும் கலப்பு ஏற்படுவது இயல்பே. என்றாலும் தம் பண்பாட்டையும் மொழியையும் முற்றாகத் தொலைத்துவிட மாட்டார்கள். அப்படியான மொழி மற்றும் பண்பாடு சார்ந்த மாற்றங்களையும் இப்புதினத்தில்  பின்வருமாறு கோடிட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர். “ அவர்கள் மீண்டும்  சௌராஷ்டிரத்திற்குத் திரும்ப வேண்டும் என்று எண்ணவில்லை; வடக்கைவிட தெற்குதான் அவர்களுக்கு அமைதியை அளித்ததுபோலும். ஆந்திரம், கர்நாடகம் முதலிய பல இடங்களில் இருந்தவர்கள் ஒருவழியாகத் தமிழகத்தில் நிலைத்தார்கள். பல மொழிகள் வழங்கும் பிரதேசங்களில் தங்கியதால் கன்னடம், தெலுங்கு முதலிய தென்மொழிச் சொற்கள் அவர்களுடைய மொழியில் கலந்திருப்பதைக் காணலாம்.” ( வேள்வித் தீ . ப.17) என்று மொழிகலப்புக்கான காரணம் பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர், அவர்களது குடும்ப அமைப்பு, கோத்திரம், மணமுறை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

 

சௌராஷ்டிரர்களுக்குக் கோத்திரம் உண்டு. ஒவ்வொரு குடும்பத் தொகுதியினரும் தாங்கள் இன்ன `ரிஷி` பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவார்கள் . சக கோத்திரக்கார்கள் தங்களுக்குள் கல்யாணம் செய்துகொள்வதில்லை. ஓர் ஊரில் இருப்பவர்கள் தம் சொந்த ஊரிலோ அல்லது பக்கத்து ஊரிலோதான் பெண் கொடுத்து வாங்குவார்கள். சமீப காலமாகத்தான் இந்தப் பழக்கம் மாறி வருகிறது.

கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு முறையும் மனிதச் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கின்றன. அத்தகைய கடவுள்  நம்பிக்கையும் வழிபாட்டுமுறையும் சௌராஷ்டிரர்களின் வாழ்க்கையில் எத்தகைய பங்களிப்பைச் செலுத்தின என்பவற்றைப் பற்றியும் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

 

” சௌராஷ்டிரர்கள் தெய்வபக்தி மிகுந்தவர்கள். வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றறிந்தவர்கள் உள்ளனர்.  எளிய முறையில் வழிபாடு செய்வோரே மிகுதி. ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருக்கும். நெருக்கமான இடத்தில் வசிக்கும் தறிக்காரர்கள் ஒரு மாடத்தைச் ”சாமிக்காக”ஒதுக்கி வைத்திருப்பார்கள். நாள் கிழமைகளில் பூஜை செய்யாமல் உண்ணமாட்டார்கள். நாடு சுதந்திரம் அடைந்தபின் அரசியல் பொருளாதார விஷயங்களைப் பற்றி எல்லோரும்  பேசத் தொடங்கிவிட்டார்கள் அல்லவா? பகுத்தறிவுவாதிகளின் ஆதிக்கம் மற்ற சமூகத்தைப் போலவே இச் சமூகத்தையும் ஊடுருவியுள்ளது. கட்சி வேறுபாடுகளும் கொள்கை முரண்பாடுகளும் தறி மேடையைக்கூட அதிர வைக்கின்றன. ஆனால் எந்த இயக்கமும் பெண்களை எளிதில் மாற்ற முடியவில்லை. சௌராஷ்டிர மாதர்கள் ஆலய வழிபாட்டிலும் தீர்த்த யாத்திரையிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்” (வேள்வித் தீ ,  ப. 19). ஆழ்ந்த இறை நம்பிக்கையுள்ள சமூகமாக இருந்தாலும் அச்சமூகத்திலும் பகுத்தறிவு இயக்கம் தாக்கம் செலுத்தியிருப்பதை நேர்மையுடன் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். சௌராஷ்டிரர்களின் வாழ்க்கை நிலை, தொழில், கல்வி ஆகியன குறித்து ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.

” சௌராஷ்டிரர்களில் பெரும்பாலோரும் ஏழைகள். நெசவுத் தொழிலையே நம்பி வாழ்பவர்கள். படிப்பில் பிற்போக்குச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாடு விடுதலை பெற்றபின் மற்றவர்களைப் போலவே இவர்களும் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். பணக்காரர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்குப் பெரும்பாலும் ஜவுளி உற்பத்தியே தொழில் . சமீபகாலத்திலிருந்துதான் அவர்களும் வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.” (வேள்வித் தீ , ப. 19) .

பெரும்பான்மையான சௌராஷ்டிர மக்கள் நெசவுத் தொழிலை நம்பிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கும் அவர்களது முதலாளிக்குமான உறவும்  இப்புதினத்தில் முக்கியப பங்கு வகிக்கிறது. நெசவாளர்கள் முதலாளிகளையும், முதலாளிகள் நெசவாளர்களையும் சார்ந்து வாழவேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, கூலி உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் அனுசரித்தே நடந்துகொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இச்சூழலை முதன்மைக் கதாப்பாத்திரமான கண்ணன் மூலம் கீழ்க்காணுமாறு விளக்குகிறார் ஆசிரியர்.

”விலைவாசிகள் ஏறிக்கொண்டே போகின்றன. யார் இதற்குப் பொறுப்பு என்பதை ஆராய நாம் இங்கு கூடவில்லை. ‘விலைவாசிகளுக்குப் பொருத்தமாக நம் கூலியை  உயர்த்த வேண்டும்’ என்று கேட்கவே இங்கு கூடியிருக்கிறோம். பட்டுச் சேலை உற்பத்தியாளர்களை நாம் முதலாளிகள் என்று சொல்லுகிறோம் . இந்த முதலாளிகள் டாடா பிர்லாக்கள் அல்ல. கோடீசுவர்கள் அல்ல. சில நாட்களாகப் பெய்யும் மழை தொடர்ந்து பெய்தால் நெசவாளர்கள் மட்டுமல்ல இந்த முதலாளிகளிலும் பாதிப்பேர் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போவார்கள். நாம் மில் தொழிலாளர்கள் அல்ல பொழுது விடிந்தால் முதலாளி முகத்தில்தான் விழிக்க வேண்டும். முதலாளியை ஒழித்துக் கட்டிவிட்டால் நெசவாளியும் அழிய வேண்டியதுதான். இன்றைக்குள்ள நிலவரம் இதுதான். முதலாளிகளைப் பகைத்துக்கொண்டு நெசவாளர் வாழ முடியாது நெசவாளரைப் பகைக்துக் கொண்டால் முதலாளிகளும் வாழமுடியாது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடக்க வேண்டும்  நடந்தால்தான் இருவருக்கும் நன்மை.” (வேள்வித் தீ , ப. 109 – 110).

இத்தகைய உறவும் முரணும் கொண்ட சௌராஷ்டிர நெசவாளர் மற்றும் முதலாளிகளின் சமூகமே இப்புதினம் காட்டும் சமூகமாகும். இவ்வாறாக,  சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும் குறித்தும், அவர்களின் பூர்வீகம் , புலம்பெயர்வுக்கான காரணம் ,  தமிழகத்தில் அவர்களின் வாழ்நிலை போன்றன குறித்தும் எம்.வி.வெங்கட்ராம் தமது வேள்வித் தீ புதினத்தில் புலப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

——(முற்றும்)—-

 

 

Series Navigationஅகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்வெற்றிக் கோப்பை
author

Similar Posts

16 Comments

  1. Avatar
    தேமொழி says:

    வேள்வித் தீ கதையை நான் பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன், மிகவும் நல்ல கதை. அதை நினைவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி யாழினி முனுசாமி.

    இந்த கதையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க வேண்டும் என்றால், மறைந்த என் அம்மாவின் உணர்வுகளின் வழி நான் வெளிப்படுத்தினால் புரியக்கூடும். கௌசலை குழந்தையுடன் தற்கொலை செய்ததைப் படித்த பின்பு, கதை என்று தெரிந்தும் என் அம்மா மிகவும் மனம் வருந்தினார். அந்த வயதில் எனக்குப் புரியவிலை, ஆனால் அவர் வருந்தியது மனதை விட்டு அகலவில்லை. அந்த அளவிற்கு ஆசிரியரின் எழுத்து நடை இருக்கும். ராணிமுத்துவில் வெளியிட்டார்கள் என ஞாபகம். நன்றி யாழினி முனுசாமி.
    ….. தேமொழி

    1. Avatar
      யாழினி முனுசாமி says:

      ஆமாம் தேமொழி …கௌசலையின் முடிவைக் கண்டு என் மனைவியும் கண்கலங்கி விட்டார்…ஏதோ நம்முடன் நெருக்கமாகப் பழகிய பெண் இறந்துவிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார் எம்.வி.வெங்கட்ராம்.

  2. Avatar
    அ.பெரியார் says:

    யாழினியின் கட்டுரை எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” நாவலை முழுமையாகப் படித்த உணர்வை ஏற்படுத்துகிறது. விமர்சனக் கட்டுரையில் இத்தகைய மனவுணர்வை ஏற்படுத்துவதற்கு பெருமுயற்சி செய்திருக்கிறார். யாழினி முனுசாமி இந்நாவலைத் தீவிர வாசிப்பிற்கு உட்படுத்தியிருப்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.

    சௌராஷ்டிரர்களின் புலம்பெயர்வு குறித்து நாவலாசிரியர் குறிப்பிடும் பகுதிகளை (ப.16) உண்மையான வரலாற்று ஆய்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

    இந்து-இந்தி-இந்தியா குறித்த தெளிவான பார்வையும் சிந்தனையும் இளம்தலைமுறைக்கு ஏற்படுத்த வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது.

    எதையும் நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றுதான் நாமும் எதிர்பார்க்கிறோம்.

    1. Avatar
      யாழினி முனுசாமி says:

      நீங்கள் சொல்வது சரிதான் தோழர்…சௌராஷ்டிரர்களின் புலம்பெயர்வுக்குக் காரணமாக எம்.வி.வி.சொல்வது வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய தேவை இருப்பதை உணர்கிறேன். அந்த முயற்சியை நான் மேற்கொள்ளாமல்விட்டது தவறுதான். அது குறித்து தெரிந்தவர்கள் யாராவது தெரியபடுத்தினால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

  3. Avatar
    R. Jayanandan says:

    இதே போல்தான், மாராட்டியர்களும், சிவாஜி படையெடுப்பால், தமிழகத்திற்குள் வந்தார்கள். அவர்களுக்கு, பெரிய வரலாறு இருக்கின்றது.
    வாழ்க்கை முறை, கடவுள் நம்பிக்கை, விழாக்கள், கல்யாண முறைகள்
    எல்லாம், இன்னமும் மராட்டிய முறைகளில் நடை பெற்று வருகின்றன.
    மராட்டியர்கள் குறித்து, இன்னும் ஒரு நாவல் மலரவிலலை.
    தி.ஜானகிராம் தான், மோகமுள்ளில், கதாநாயகியை, மராடிய பாத்திரமாக
    படைத்துள்ளார். ஜெயானந்தன்.

    1. Avatar
      யாழினி முனுசாமி says:

      நல்ல செய்திதான்…யாராவது மராட்டியர்கள் குறி்த்து நாவல் படைத்தால் நல்லதுதான்.

      நீங்களாவது முயற்சி செய்யுங்களேன் ஜெயானந்தன்…

  4. Avatar
    உஷாதீபன் says:

    எம்.வி.வெங்கட்ராமின் ”காதுகள்” நாவலை மறந்து விட்டீா்களே? முக்கியமான படைப்பு அது. – உஷாதீபன்

    1. Avatar
      மேரி வசந்தி says:

      நாவலின் முடிவு எனக்கு உறுத்தலாக இருக்கிறது. ஏனெனில்… தன் அன்பான மனைவி கௌசலை நிறைமாதமாக இருக்கும் போது தன் முதல் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட பிறகு…அவளது தற்கொலைக்குக் காரணமாக இருந்த அவளது தோழியுடனே அவன் சேர்ந்துவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆசிரியர் கண்ணனை அத்தனை கொடியவனாகக் காட்டியிருக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது. தன் தவறை உணர்ந்த தன் மனைவியின் நினைவாக வாழ்வதைப் போன்று முடித்திருந்தால் நன்றாக இருக்கும்.

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    எம் வி வெங்கட்ராம் ஒரு சிறந்த தமிழ் நாவலாசிரியர் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் அவரின் புதினங்களைப் படித்து ஆராயும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? வெங்கட்ராமிடம் ஏதாவது தனித்தன்மை உண்டா? எனபதைக் கண்டிபிடித்துச் சொல்லவேண்டும். யாழினி முனுசாமி செய்ததாகத் தெரியவில்லை.

    எழுத்தாளர்கள் சினிமா நகைச்சவை நடிகர்களைப்போல. ஒவ்வொரு நடிகரும் தனக்கென ஒரு பாணியுடன் இருந்தால்தால் பேசப்படுவான்; இரசிக்கபபடுவான்; அல்லது நிலைப்பான். ஆனால் அந்த பாணி பிறமொழிப்பட நடிகர்களுள் ஒருவனை காப்பியடித்து இருக்கலாம். தமிழ்ப் பார்வையாளருக்கு புதிதாக இருந்தால் போதும்.

    இதைப்போல பிறமொழி எழுத்தாளர்களைக் காப்பியடிக்கலாம். தமிழர்களுக்கு ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஜாயசைத்தெரியாது. ஆனால் அவரின் stream of mind consciousness டெக்னிக்கை காப்பியடித்து புகழ்பெற்றத் தமிழ் எழுத்தாளர் நம்மிடையே உண்டு. அவருக்கு நோபல் பரிசு கொடுப்பது ஏன் இன்னும் தாமதாகிறது என்றெல்லாம் கோபப்படுகிறார்கள். மடையர்கள் நோபல் பரிசு கொடுப்பவனுக்கும் இங்கிலீசும் ப்ரெச்சும் தெரியுமென்று இவர்களுக்குத் தெரியாது போலும்.

    எனவே காப்பியடித்தல் என்ற பேச்சை விட்டுத்தள்ளிவிட்டு வெங்கட்ராம் எப்படி தனித்து நிற்கிறார்? அதைச்சொல்லுங்கள் மேடம்! Dont mistake me MVV imitated other writers. I am just making a point that we should leave out that and see only what which he had that makes him unique !

    இரண்டாவது தவறு – எனக்குப்பட்ட வரை –

    ஒரு புதினம், புதினமே first and last.
    It is not a historical document.
    Therefore, our first priority in reading a novel is to enjoy it; get maximum pleasure out of it by reading it as a fine fiction. Literary pleasure.

    Pleaese note both the writer and his reader – each has his dharma. The dharma of the writer is to create a original piece. The dharma of a reader of a fiction, is to read that w/o any ulterior or superior motive. To read MVV to trace historical roots of Saurashtrian is lacking the dharma of a reader of a fiction.

    இதைச்செய்யாமல் வேள்வித்தீ மாபெரும் வரலாற்றுப்பெட்டகம் எனபதைப் போலல்ல்வா கட்டுரை பேசப்படுகிறது!

    போகட்டும். அப்படியே நாமும் எடுத்து ஒரு நல்ல தமிழ் எழுத்தாளனை சம்ஹாரம் பண்ணிவிட்டு, – like Humty Tumpty let us both have a fall ! – வரலாற்றுப்பெட்டகம் என்று மட்டுமே எடுத்துப்பேசினால், எழும் கேள்வி – இது மேடம் முனுசாமிக்கு _

    தன் வரலாறு என்று எழுதுபவர் பல கசப்பான உண்மைகளை மறைத்துவிட்டு எவை தன்னை வரலாற்றில் சீரழிக்காதோ அதை மட்டும் எழுதுவார். ஏதோ ஓரிருவர் மட்டுமே உண்மையைச்சொல்வர். காந்தி கூட தன் வரலாற்றில் பலவற்றைப்பூசி மெழுகினார் எனபது ஒரு விமர்சனம்.

    இங்கே தன் இனமக்களின் வரலாற்றை அவர்களுள் ஒருவர் எழுதுகிறார் இப்படி.

    //கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து, ஆலயங்களை இடித்தும், விக்கிரங்களை உடைத்தும், ஹிந்து மதத்தையே ஒழிக்க முனைந்தான் அல்லவா? அச்சமயத்தில், சௌராஷ்டிரத்தில் இருந்த பல குடும்பங்கள் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிறந்த மண்ணைத் துறந்து, பிழைப்பைத் தேடி தெற்கே குடிபெயர்ந்தார்கள். அவர்கள் சாதியில் பிராமணர்கள்; ஆயினும் நெசவுத் தொழிலில் வல்லவர்கள்; //

    இதை நம்பச்சொல்கிறீர்களா மேடம்?

    ஏன் வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? என்பதை ஒரு வரலாற்று அறிஞர் வாயிலாக அவர் வைக்கும் ஆதாரங்களை வைத்தன்றோ அறிய‌ வேண்டும்? இதுதானே அடிப்படை கல்வி?

    எழுத்தாளர்கள் வரலாற்று அறிஞர்கள் அல்ல. அவர்களுள் பலர் அப்படி வேடம் போட்டு ஏமாற்றுவார்கள். மதி மயங்க வேண்டா.

    எம். வி. வெங்கட்ராமின் ஒரு நாவல்தான் அதைத்தான் மேடம் முனுசாமி சொல்கிறார். வெங்கட்ராம் தன்னை வரலாற்று அறிஞர் எனறு சொல்லிக்கொள்ளவேயில்லை. எனவே தன் புதினத்தில் ஒரு கதாமாந்தர் பேசுவதாகத்தான் அமைக்கிறார். ஆக, அவர் செய்தது extreme professional integrity. To exploit it as a historical evidences is to mislead us. Grandiloquent PITY!

    1. Avatar
      யாழினி முனுசாமி says:

      கணபதி ராமன் அவர்களுக்கு வணக்கம்…முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்…நான் மேடம் அல்லள். பிற்காலத்தில்…அதாவது ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகள் கழித்து வரும் என்று நினைத்த குழப்பம் (என் பெயர் குறித்த – ஆணா ? பெண்ணா? ஏன்ற குழப்பம்) இப்போதே வந்துவிட்டது.யாழினி என் செல்ல மகள். அவள்பெயரை முனுசாமி என்ற என் பெயருடன் இணைத்துக்கொண்டேன்.

      இரண்டாவது…எம்.வி.வி்.யின் எழுத்து காப்பியடிக்கப்பட்டது என்று நான் எங்கும் சொல்லவில்லையே. அத்துடன் அவரது ஒரு நாவலை மட்டும் படித்துவிட்டு அவரது தனித்தன்மையைச் சொல்லவது சரியாக இருக்காது.

      மூன்றாவது…

      இது கல்கியின் வரலாற்று நாவல்களைப் போன்றதல்ல..கல்கி சிவகாமியின் சபதத்தில் பல்லவர்களின் வரலாற்றை கற்பனையாக எழுதியிருப்பார். நவீன எழுத்தாளர்கள் இனவரைவியல் சார்ந்த எழுத்துக்களை அப்படி முழுதும் கற்பனையாக எழுத வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்.
      என்றாலும் சௌராட்டிரர்கள் பற்றிய எம்.வி.வி.யின் கருத்துகள் முற்றிலும் புனைவாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.

      எதற்கும் … வாய்ப்பிருக்கும்போது தமிழக சௌராட்டிரர்களின் உண்மை வரலாற்றை அறிய ஆவலாக இருக்கிறேன்.

      தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி!

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        MVV காப்பியடித்தார் என்று சொல்லவில்லை. அஃதொரு பொதுக்கருத்து. அதன்படி, ஒரு தமிழெழுத்தாளனைப்பற்றி சொல்லும்போது, காப்பியடித்தல் விடயத்தை எடுத்துப்பேசுதல் சரியன்று. தமிழுக்கு புதியதா என்று மட்டும்தான் பார்க்கலாம். நான் எழுதியதை சரியாக கிரஹிக்க முடியவில்லை. ஆங்கிலத்தில் சொன்னால் புரியுமென நினைக்கிறேன்: A vernacular literature can be an imitation – in a crude or good sense. For, one imitates from the best, doesn’t he?. The readers of Tamil do not know who James Joyce is. The English novelist is a pioneer in the new technique of novel writer using Mind of Stream Consciousness. A famous Tamil novelist wrote his magnum opus using the same technique. His novel is highly admired and celebrated by Tamil readers. That he imitated no one knows. So long as we don’t know, everything is alright. But when we talk about him, it is not that imitation but which we should be concerned but about the overall estimate about him as a contributor to Tamil lit.

        கண்டிப்பாக அவர் சவுராட்டியர்களைப்பற்றி எழுதியவை புனைவென்று சொல்லவில்லை. மாறாக, அதில் திரிபுகள் கண்டிப்பாக இருக்கும். எனவே அவர் எழுதியதை வரலாற்று உண்மைகள் எனவெடுப்பது ஆபத்தானது.

        கட்டுரை வரலாற்றுக்கு ஆழமான அடிபோட்டு எழுதுகிறது. ஒரு புதினத்தில் சொல்லப்பட்ட வரலாறு படித்துப்புன்னைக்க வேண்டியது மட்டுமே. அதற்கு மேல் அதற்கு மரியாதை கொடுக்க்க்கூடாது. நீங்கள் ரொம்ப மரியாதை கொடுத்த்தனால், நான் திண்ணை வாசகர்களை எச்சரிக்க வேணடியதாகி விட்டது.

        பல புதினங்களத் தமிழில் படித்தோருக்கு ஒரு நாவலை எடுத்துப்படிக்கும்போது ஆசிரியரின் நடை பிற எழுத்தாளர்களை நினைவுபடுத்துகிறதா என்பது தன்னாலேயே தெரிய வரும். ஒரே ஒரு நாவல்தானே என்றே கிடையாது. ஒரு எழுத்தாளர் தன் ஒருநாவலை மட்டும் தனக்குச் சற்றும் ஒட்டா நடையில் எழுத முடியாது. எனவே ஒரே ஒரு நாவலை வைத்தும் ஒரு அந்த ஆசிரியரைப்பற்றி ஒரு கருத்து உருவாக்கிக்கொள்ள முடியும்.

        ஜோதிர்லதா கிரிஜாவின் ஐம்பது நாவல்களைப்புரட்டிப்பார்த்துப் படிக்கவேண்டிய தேவையில்லை. ஒரே ஒரு நாவலைபடித்தால் அவர் எந்த நிச்சேக்குள் விழுகிறார் என்று சொல்ல முடியும்.

        ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னையறியாமல் ஒரு நிச்சேயை உருவாக்கிவிடுவார்கள். நிச்சே = niche

        சவுராட்டியர்கள் வரலாற்றை ஒரு சவுராட்டியர் எழதினால், அவர் தன் வரலாற்றை எழுதுவது போலத்தான் எனக்குறிப்பிட்டேன். அதாவது அதில் உண்மைகள் கசப்பாக இருப்பின் ஓரங்கட்டுப்பட்டு மறைக்கப்படும்.

        இவ்விடம் அவர்கள் வரலாற்றின் சில துளிகள் – அதாவது சில சங்கடமான கேள்விகளைக் கேட்குமிடமன்று எனப்தால் விடுகிறேன். இல்லாவிட்டால் MVV எங்கு ஏமாற்றுகிறார் எனச் சொல்ல முடியும்.

        //வேத விற்பன்னர்கள்; பிராமணர்கள்; இந்துமதத்தைக்காக்க தமிழகம் நோக்கி புறப்பட்டார்கள் – //

        அடேங்கப்பா…எத்தனை உட்டான்சுகள் மிஸ்டாற் முனியசாமி!.

        Literary criticism should be bold. It should not surrender meekly.

        மயர்வர மதிநலம் வேண்டும்.

        நன்றி.

  6. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    கிட்டத்தட்ட முப்பத்தைந்தாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வைத்துவிட்டீர்கள். கலைமகள் வெளியீடா அல்லது வாசகர் வட்டம் வெளியீடா என்று நினைவில்லை, ‘வேள்வித்தீ’ யை முதல் பதிப்பிலேயே படித்தவன் நான். அப்போதெல்லாம் நாவல்கள் என்றாலே உருக்கமான முடிவினைக் கொண்டிருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. (‘லக்ஷ்மி’ யின் நாவல்களைக் காண்க). படித்து முடித்தவுடன் நீண்ட அழுகை வர வேண்டும். அது தான் சிறந்த நாவலாகக் கருதப்பட்டது. அன்றைய சினிமாக்களும் அப்படித்தான்……! கவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி.

    1. Avatar
      மேரி வசந்தி says:

      நன்றி கவிஞர் இராய. செல்லப்பா ஐயா… அன்றைய நாவல்களின் முடிவு உருக்கமாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது என்பது அன்றைய நாவல்களின் ஒரு பாணியாக இருந்திருப்பதை உணரமுடிகிறது.

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        இராய செல்லப்பாவின் இக்கருத்து கிட்டத்தட்ட நான் தொட விரும்பிய கருத்தை கொஞ்சம் நகர்ந்து வந்து தொட்டுவிட்டது. அதாவது, எம் வி வி எப்படி பிறரிடமிர்ந்து விலகுகிறார் என்பது.

        //(‘லக்ஷ்மி’ யின் நாவல்களைக் காண்க). படித்து முடித்தவுடன் நீண்ட அழுகை வர வேண்டும். அது தான் சிறந்த நாவலாகக் கருதப்பட்டது.//

        எழுத்தாளர்களிடையே ஜெண்ட்ர் பயஸ் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

        தமிழ்ப்பெண் எழுத்தாளர்கள் பெண்களுக்காக எடுக்கப்படும் தமிழ் சீரியல் எழுத்தாளர்களின் முன்னோடிகள். அவர்கள் டார்கெட் ரீடர்சிப் பெண்களே.

        காதல் இலைமறை காயாகச் சொல்லப்படவேண்டும் (ஓபனாக எப்படி சொல்வது: புஸ்பா தங்கதுரையைப்படிக்கவும். சுஜாதாவைப்படிக்கவும்). காமம் மெல்லிய பூங்காற்றாக அக்காதலுக்குள் வீசவேண்டும். கோபம், வெறுப்பு, இவையெல்லாம் வெறும் பேச்சாகவே இருக்கவேண்டும். புரட்சிப்பெண், ஆண்களோடு போட்டி போடவேண்டும். அவளுக்கு ஒருவன் துணை அவளின் தியாகப்போராட்டத்தில் துணை நிற்கவேண்டும்.

        சென்டிமென்ட்ஸ் வற்றாத கேணியாக முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கவரை இருக்க வேண்டும்.

        இந்த நிச்சேயுக்குள் விழுபவர்கள் பெண் எழுத்தாளர்கள். இதில் விழும்பொதுதான் இவர்களுக்கு மூச்சே நன்றாக வரும். (விதி விலக்குகள் உண்டு)

        அதே சமயம், அதே தீமை ஒரு ஆண் எழுத்தாளர் எழுதும்போது இந்த ஜென்டர் கான்ஸியசே நமக்கு வராது. ஒரு யுனிவர்சல் ட்ரீட்மென்ட். இன்னொரு வகை. இதில்தான் – என்னைப்பொறுத்தவரை – இலக்கிய இன்பம்.

        ஆக, எம் வி வி ஒரு அழகிய ஆண் எழுத்தாளர் பெண்கள் விரும்பும் தீமை எழுதுவதில். இதே போன்ற பல எழுததாளர்கள் தமிழில் உண்டு. எஸ் ஏ பியும் ஒருவர். Gentle writers, taking gentle themes, tackling it gently. டோண்ட் ஹர்ட். ஹர்ட் பண்ணினால பெண் வாசகிகள் ஓடுவிடுவார்கள். MVV wont hurt. SAB wont hurt. NaaPaa wont hurt. Akilan wont hurt. MuVa wont hurt.

        இன்னொரு எ.கா: புரட்சிப்பெண் கான்செப்ட். அதாவது ஆண் வைத்த எழுதாச்சட்டங்களை எதிர்ப்பவள். இதை லட்சுமியின் நாவல்கள், அனுராதா ராமன் என்று பார்க்கலாம். படியுங்கள். இதே புரட்சிப்பெண்ணை அண்ணாவின் ‘பார்வதி பி.ஏ’வில் படியுங்கள்.

        Lakshmi is a Mills and Boons writer. Tamil women cannot read Mills and Boon pocket novels. So, the supplier for them is Lakshmi. Mills and Boons plays an important role in the growth and development of a girl into a woman, just as porn magazines for boys. In other words, both are phases in development in the two sexes.

        நான் ஏன் ஆண்-பெண் என்ற ஜென்டர் வேறுபாடு எழுத்தில் உண்டு என்று சொல்கிறேன் என்பது தெரியும் நன்றாக.

        இதனால் அண்ணா ஜோதிர்லதா கிரிஜாவை விட நன்றாக எழுதுகிறார் என்றல்ல பொருள். வெவ்வேறு என்ப்து மட்டுமே பொருள். Anna pleases me. Latha pleases my mother and sisters.

        Viva la the difference.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *