கவிஞர் கருணாகரன்
ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழாவில் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் என்னும் புத்தகம் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெறவுள்ளது. அந்த புத்தகத்திற்கு கவிஞர் கருணாகரன் எழுதிய முன்னுரை.
—
இது எஸ். கிருஷ்ணமூர்த்தியின் பல வகை எழுத்துகளைக் கொண்ட ஒரு தொகுப்பு. அனுபவங்களின் பதிவு. திரைப்படங்களைக் குறித்த பார்வை. நேர்காணல்இ புத்தக விமர்சனம், ஆளுமைகளைப் பற்றிய வெளிப்பாடு எனப் பல வகையில் அமைந்த எழுத்துகள் இதிலுண்டு. ஆறு பிரிவுகளாக இவை தொகுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிறுகதைகள் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவை பின்னொருபோது இன்னொரு புத்தகத்தில் கிடைக்கலாம். பொதுவாக நமக்குக் கிடைக்கும் புத்தகங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மையப்படுத்தியிருக்கும். சிறுகதை அல்லது நாவல் இல்லையென்றால் கவிதை அல்லது கட்டுரை என்று ஏதோ ஒரு வகைப்பாட்டுக்குள். ஆனால், இங்கே அவ்வாறில்லாமல் தான் எழுதியவற்றில் ஒரு தொகுதியை எடுத்து பல வகை எழுத்துகளை உள்ளடக்கிய ஒரு களஞ்சியமாக உருவாக்கி, இவற்றைத் தருகிறார் கிருஷ்ணமூர்த்தி. ஏறக்குறைய ஒரு சஞ்சிகையைப்போல இதை நாம் வாசிக்கலாம். இதன்மூலம் கிருஷ்ணமூர்த்தியின் ஈடுபாடுகளை நாம் அறிய முடிகிறது. அதேவேளை அவர் கொண்டுள்ள அக்கறைகளின் வழியாக நாமும் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வாய்க்கிறது.
கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துகளில் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஷ்யமுண்டு. அந்தச் சுவாரஷ்யம் நமக்குச் சுவையைத் தருகிறது. வாசிப்பின் உந்துதலுக்கான சுவை அது. இந்த நாட்கள் வாசிப்புக்குச் சவாலாக இருக்கின்றன. பெரும்பாலான தமிழர்கள் இன்று காட்சி ஊடகத்தின் பக்கமாகத் திரும்பி விட்டனர். அநேகமான வீடுகளில் தொலைக்காட்சிகளும் அவற்றின் தொடர்நாடகங்களுமாக நிரம்பிவிட்டன. அடுத்ததாக எவ்.எம். வானொலிகள். ஏராளம் பண்பலை வானொலிகள் எல்லா இடங்களிலும் முளைத்துள்ளன. எல்லாமே தமிழ்ச் சினிமாவை மையப்படுத்தியே இயங்குகின்றன. பகுதியாக அரசியலை. தமிழர்களின் அரசியலும் அவர்கள் தேர்ந்துள்ள சினிமாவும் எல்லாச் சீரழிவுகளையும் தமிழ்ச் சமூகத்துக்குள் இறக்கியுள்ளன. போதாக்குறைக்கு தமிழர்களால் வெளியிடப்படுகி்ன்ற வெகுஜனப்பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வாசிப்புக்கான அடிப்படைகளும் அம்சங்களும் குறைந்து விட்டன. இந்த நிலையில் தமிழர்களின் வாசிப்பு பெரும்பாலும் குறைவடைந்து விட்டது. வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழர் வாழ்வில் ஏற்பட்டுள்ள பல நெருக்கடிகளைப் போலவே இதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே இன்றைய தமிழ் எழுத்தாளரின் முன்னாலுள்ள பெரும் சவால் என்பதுஇ எழுத்தை விருப்பத்துக்குரிய ஒன்றாக்குவதே. எழுத்தை விருப்பத்துக்குரிய ஒன்றாக, பெருந்திரளி்ன் நுகர்ச்சிக்குரிய ஒன்றாக ஆக்குவதென்பது இலகுவான காரியமல்ல. நினைத்த மாத்திரத்தில் அதைச் செய்து விடமுடியாது. அப்படி ஆக்க வேண்டுமென்றால், பரபரப்புட்டும் கட்டுக்கதைகளையும் வதந்திகளையுமே எழுதவேண்டும். அப்படியான ஒரு போக்கும் உண்டு. அதுதான் இன்று வளர்ச்சியடைந்தும் வருகிறது. அதை ஒரு நல்ல மனம் தொடர முடியாது. நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால், கூச்சமின்றி அதை எதுகிறவர்களைப்போல, வெட்கமின்றி அதைப் படிப்போரும் உள்ளனர். சீரழிந்த அரசியலை ஆதரிப்பதைப்போல, மூன்றாந்தரமான சினிமாக்களைக் கொண்டாடுவதைப்போல இதையும் தமிழ்ப்பெருந்திரள் கொண்டாடுகிறது.
ஆனால், பிறவற்றைப் போலன்றி எழுத்து பெரும்பாலும் தனி ஒரு ஆளுமையுடன் சம்மந்தப்பட்ட கலையாகவே உள்ளது. தீர்மானகரமான கருத்துலகத்துடன் தொடர்புபட்டது. என்னதான் இதை மறுத்தாலும் அடியோட்டமாக ஒரு கருத்து நிலையில் அது வேர்கொண்டிருக்கும். தவிர, எழுத்து தீவிர கவனத்திற்குரிய ஒன்றுமாகும். எல்லாக்கலைகளிலும் தீவிரமும் ஆழமும் ஊன்றிய கவனத்திற்குரிய அடிப்படைகளும் இருக்கும் என்றாலும் எழுத்து வாசிப்புக்குரிய ஒன்று என்பதால், அது சற்றுக் கூடிய கவனத்தைக் கோருகிறது. மேலோட்டமான ரசனையாளர்களுக்கு அது இலகுவில் சாத்தியங்களை அளிப்பதில்லை. மேலோட்டமான எழுத்தும் வாசிப்பும் இருந்தாலும் அங்கும் உன்னிப்பான ஒரு நிலை அடியோட்டமாக உண்டு. சினிமா, நாடகம், இசை போன்றன பெரும்பாலும் கூட்டுக்கலை சார்ந்தவை. அதிலே பல கலவைகள் உள்ளன. இது ரசனைக்கு அதிக சுவையுட்டும். அத்துடன் எந்த வயதினரையும் எந்தத் தரப்பினரையும் ஈர்க்கும் தன்மையையும் கொண்டவை. ஒரு நாடகத்தை அல்லது ஒரு சினிமாவை குடும்பமாகவே கூடியிருந்து பார்த்து ரசிக்கலாம். ஆனால், எழுத்துப் போன்ற கலைகளில் இது சாத்தியமில்லை. எனவேதான் எழுத்தைத் தவிர்ந்த பிற கலைகளுக்கு அதிக கவர்ச்சியுண்டு. இந்த நிலையில் எழுத்தை ஈர்ப்புக்குரிய ஒன்றாக்கும் சவாலை எதிர்கொண்டவாறே எழுத்தாளன் இயங்க வேண்டியுள்ளது. கிருஷ்ணமூர்த்திக்கு இந்த நிலைமை விளங்கியிருக்கிறது. என்பதால் வாசிப்புச் சுவாரஷ்யத்தைக் கவனத்திற் கொண்டு எழுத முயன்றிருக்கிறார். ஆனாலும் கிருஷ்ணமூர்த்தியின் முன்னே இன்னும் சவால்களிருக்கின்றன.
எஸ். கிருஷ்ணமூர்த்தி அடிப்படையில் ஒரு வாசிப்பாளர். சினிமா நாடகம் போன்ற கலைகளின் ரசனையாளர். அவற்றிலிருந்தே அவர் தன்னுடைய எழுத்தை ஆரம்பிக்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் விமர்சனங்கள் பெரும்பாலும் இதைத் தெளிவுறுத்துகின்றன. தான் வாழ நேரிட்ட வாழ்ந்து கடந்த கடக்க முயன்ற காலத்தையும் வாழ்க்கையையும் அவர் எழுதும்போதும் இதையே கவனத்திற் கொள்கிறார். எத்தகைய கடின நிலையைப் பற்றியும் விவரிக்கும்போது அவரிடத்தில் ஒரு எள்ளல் வந்து விடுகிறது. அந்த எள்ளலை அவர் இயல்பாக்குகிறார்.
நேரிற் பழகும்போது அதிகம் அலட்டிக் கொள்ளாத, அதிர்ந்து பேசாதவர் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், எழுத்தில் இதற்கு மாறாக இருக்கிறார். சில விசயங்களை மென்மையாக இடித்துரைக்கிறார். அல்லது மென்தீவிரத்துடன் எதிர்க்கிறார். சிலபோது அதே மென்தீவிரத்துடன் கிண்டலடிக்கிறார். ஆனால், எதிர்க்கருத்துடையோரும் வாசிக்கும் விதமாக, வாசிப்பதை யோசிக்கும் விதமாக எழுதிவிடுகிறார். இதனால் அவருடைய எழுத்தின் எல்லா இடத்திலும் கிருஷ்ணமூர்த்திக்கு என்றொரு அடையாளத்தைக் காணலாம்.
1980 களின் தொடக்ககாலத்தில், அவருடைய இருபதுகளின் ஆரம்பத்தில் ஈழப் பிரச்சினையில் நம்பிக்கைகளோடும் ஆர்வத்தோடும் இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அந்த நாட்களில் பெருவாரியான இளைஞர்கள் மிகத் தீவிரத்தோடும் ஆழமான நம்பிக்கையோடும் உன்னதமான கனவுகளோடும் ஈழப்போராட்டத்தில் இணைந்தனர். அப்படியான சூழலில் அந்த நாட்களில் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கடந்த அனுபவங்களையும் இங்கே பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் அவற்றை அவர் பிரதானமாகக் கொள்ளவில்லை. ஈழப்போராட்ட அனுபவங்களை, அந்த நாட்களின் நினைவுகளை பலரும் இப்பொழுது எழுதி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு இயக்கத்தின் அனுபவமும் வெவ்வேறானது. அதைப்போல போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறானவையே. ஒரு காலகட்டத்தின், ஒத்த சூழலின் நிகழ்ச்சிகளும் சில விசயங்களும் ஒத்த தன்மையைக் கொண்டிருந்தாலும் மெல்லிய நிறவேறுபாடுகள், குணவேறுபாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவருக்கும் இடையில் உண்டு. கிருஷ்ணமூர்த்திக்கும் அவ்வாறான பிரத்தியேக அனுபவங்கள் உண்டு. ஈழப்பிரச்சினைக்கான தீர்வின் வழிகள் திசைமாறியதால் அவர் கொழும்புக்கு நகர்ந்து, பிறகு அங்கிருந்து ஐரோப்பாவுக்குப் பெயர்ந்து, பின்னர் அங்கிருந்து நாடோடியாகி இப்பொழுது அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அல்லது அங்கே வசிக்கிறார். இது கிருஷ்ணமூர்த்தி எதிர்பார்த்திராத ஒன்று. அவரே ஒரு இடத்தி்ல் இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ‘பள்ளியில் அவுஸ்ரேலியாவைப் பற்றிப் படிக்கும்போது வாழ்வில் அந்த நாட்டுக்குப் போகக் கூடியதாக அங்கே வாழும் நிலை ஒன்று ஏற்படும் என நினைத்ததேயில்லை. ஆனால் இன்று வாய்த்திருக்கிறது நாடோடி வாழ்க்கை’ என்று.
ஈழத்தமிழர்களில் ஒரு சாராரின் நிலையும் கதையும் இப்படித்தான் அமைந்தது. அவர்கள் எதிர்பாராத திசைமாற்றம் இது. ஒரு புதிய சமூகத்தை புதிய வாழ்க்கையை புதிய வழமைகளை உருவாக்கலாம் என்று நம்பியவர்கள் நாடுகடந்து, கண்டம் கடந்து, தொலைதேசங்களி்ல் அகதியாகி பிறகு அந்த நாடுகளின் குடிமக்களாகி விட்டனர். ஆனாலும் அவர்களுடைய நினைவுகளும் கடந்த காலமும் அவர்களை இலேசாக விட்டுவிடவில்லை. அவர்களை அரசியல் ஆய்வாளர்களாகவும் அரசியல் விமர்சகர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களாகவும் ஈழப்போராட்ட ஆதரவாளர்களாகவும் ஈழ அபிமானிகளாகவும் மாற்றுப் பார்வையாளர்களாகவும் மாற்றுச் செயற்பாட்டாளர்களாகவும் எனப் பல பாத்திரங்களை ஏற்க வைத்துள்ளது. அல்லது அவர்களை அப்படி உருமாற்றிவிட்டுள்ளது. இதில் கிருஷ்ணமூர்த்தியும் ஒரு பாத்திரம். அவருடைய பாத்திரத்தின் வெளிப்பாடே – ஒரு குறியீடே இந்தப் புத்தகம்.
கிருஷ்ணமூர்த்தி தன் அனுபவத்தின் செறிவான பதிவையோ அந்தக் காலகட்டத்தின் நிகழ்ச்சிகளையோ மையப்படுத்தி இந்தப் புத்தகத்தில் பேசவில்லை. ஆனால்இ அந்த நாட்களின் அடையாளத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய சில புள்ளிகளை மட்டும் வைத்துவிட்டு அப்பால் செல்கிறார். கிருஷ்ணமூர்த்தியின் பிரதான அக்கறை என்பது இன்று நிதானமாக யோசிக்க வேண்டிய விசயங்களைக் குறித்தே உள்ளது. அனுபவங்களை அரசியற் பாடமாகவும் வழிமுறையாகவும் கொள்ள வேண்டும் என்ற உட்தெரிவை அவர் செய்கிறார். இது இன்றைய பொதுப்பரப்பின் அரசியற் சிந்தனைக்கு மாற்றான ஒன்று. ஆனாலும் அவருக்கு இதில் உறுதியும் தெளிவும் உண்டு. வழிமுறைக்கும் தெரிவுக்கும் தேவையான ஒன்றென்று. அதேவேளை கிருஷ்ணமூர்த்தியின் கலை மற்றும் ரசனைத் தேர்வையும் நாம் தெளிவாக நோக்க வேண்டும். அவற்றிலும் அவருடைய பார்வைத் திறன்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அண்மைக்கால இந்தியச் சினிமாக்களைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி எழுதியிருக்கும் விமர்சனங்கள், திராவிட இந்திய அரசியலின் குறைபாடுகளையும் போலித்தனங்களையும் பண்பாட்டுக் கீழிறக்கங்களையும் திரைவிலக்கிக் காண்பிக்கின்றன. நல்ல சினிமா தொடர்பான அக்கறைகளைக் கோருகின்றன. அதைப்போலவே அவர் எழுதியிருக்கும் சில புத்தகங்களுக்கான மதிப்புரைகளும் போலிகளுக்கெதிரான ஒரு மென்குரலின் வெளிப்பாடே.
கிருஷ்ணமூர்த்தியின் பல வகைப்பட்ட எழுத்துகளின் தொகுதியாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் கவனிப்பைப் பெறும். ஆனால், கிருஷ்ணமூர்த்தி என்ன வகைப்பட்ட எழுத்தாளர் என்பதில் பலருக்கும் குழப்பங்கள் நேரலாம். விமர்சகரா, ரசனையாளரா, பத்தி எழுத்தாளரா, இலக்கியப்படைப்பாளியா என. நீண்ட காலமாக எழுதி வந்தாலும் கிருஷ்ணமூர்த்திக்கு இதுவே முதற்புத்தகம். இந்த முதற்புத்தகம் ஏற்படுத்தும் அடையாளமே அவருடைய எதிர்கால எழுத்தையும் அவருடைய பொதுவான அடையாளத்தையும் உருவாக்குவதற்கான அடிப்படையைக் கொடுக்கும் என்றொரு பிரச்சினையுண்டு. அப்படிப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் சிலவேளை எதிர்மறையான விளைவைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால், அதைக் கடந்து கிருஷ்ணமூர்த்தியின் இந்த எழுத்துகளைச் சரியாக விளங்கிக் கொண்டால், அவரைத் தொடரும் வாசகர்களுக்கு பயனுண்டு. இந்த மாதிரியான தொகுப்புகள் முன்னரும் வந்துள்ளன. ஒரு படைப்பாளியின் பல்வகை ஈடுபாட்டைத் தொகுத்து அளிப்பதாக. அல்லது சிலருடைய பல்வகைப்படைப்புகளைத் தொகுத்து வழங்குவதாக. எனவே, தான் ஈடுபாடு கொண்டவற்றில் தன்னுடைய பார்வைகளையும் அனுபவங்களையும் எழுதிப் பகிரும் இந்தத் தொகுதி கிருஷ்ணமூர்த்திக்கு ஒருவகையில் வாய்ப்பைத் தரக் கூடியது. பல தளங்களிலும் இயங்கும் ஒருவர் என்ற அறிமுகமும் அடையாளமும் அவரைப் பிறருக்கு அறிமுகப்படுத்தி, அடையாளப்படுத்தும்.
சிலர் இதிலுள்ள சினிமா சார்ந்த கட்டுரைகளுக்காக கிருஷ்ணமூர்த்தியை நெருங்குவர். சிலர் இங்கேயிருக்கும் அனுபவப் பதிவுளுக்காக கிருஷ்ணமூர்த்தியுடன் உறவாகலாம். சிலர் கிருஷ்ணமூர்த்தி முன்வைக்கின்ற போலி அரசியலுக்கும் போலித்தமிழுணர்வு போன்றவற்றுக்கெதிரான கிண்டல்களுக்காகவும் எதிர்வினைகளுக்காகவும் அவரை விட்டுத் தூர ஒதுங்கலாம். சிலர் இவைகளுக்காகவே அவரை நெருங்கலாம். ஆனால்இ எல்லோரும் கிருஷ்ணமூர்த்தியை வாசித்தே ஆகவேண்டும். அப்படி பல விதங்களில் நாசுக்காக எழுதிவிடுகிறார் அவர் சில விசயங்களைப் பற்றி.
நான் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தது, எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில்தான். இவ்வளவுக்கும் அவருக்கும் எனக்குமிடையில் நெருக்கத்துக்கான காரணங்கள் பல இருந்தபோதும் அது இருவருக்கும் சாத்தியப்படவேயில்லை. மிகப்பிந்தியே நாங்கள் நண்பர்களாகினோம். இலங்கையில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்காக அவுஸ்ரேலியாவில் இருந்து வந்திருந்தபோது யாழ்ப்பாணத்தில் வைத்து லெ. முருகபுபதியும் நோயல் நடேசனும் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனாலும் நீண்டகால நெருக்கத்தைப்போல கிருஷ்ணமூர்த்தியுடனான இந்த உறவை உணர்கிறேன். கிருஷ்ணமூர்த்தியை அப்படித்தான் உணர முடியும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு கிருஷ்ணமூர்த்தியை நான் அறிமுகப்படுத்தினேன். என்னையும் விட மிக நெருக்கமாக அவர்கள் இருவரும் இன்றுள்ளனர். இவ்வளவுக்கும் அந்த நண்பரும் கிருஷ்ணமூர்த்தியும் அடிக்கடி சந்திப்பவர்களில்லை. அடிக்கடி சந்திக்கக் கூடிய வாழ்க்கையைக் கொண்டவர்களும் இல்லை. சில நாட்கள் மட்டுமே பழகியிருந்தாலும் இழையோட்டங்கள் அதிகமான உறவு இருவருக்குமிடையில் உருவாகிவிட்டது. இது கிருஷ்ணமூர்த்தியின் இயல்பிலிருந்து உருவாகியது. இதையே எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையிலான உறவிலும் நான் கண்டிருக்கிறேன். மனிதர்களைப் புரிந்து கொள்வது, அவர்களுடைய உணர்வுகளையும் நிலைமைகளையும் விளங்கிக் கொள்வது என்பதிலிருந்தே இந்த மென்னிழைகள் தளைத்து உறவைப் பின்னுகின்றன. இதை தன்னுடைய வாழ்வின் அடிப்படையாகவும் இயல்பாகவும் கிருஷ்ணமூர்த்தி வைத்திருக்கிறார். மனிதர்களின் மீதான,சமூகத்தின் மீதான அக்கறையை, அதில் ஈடுபாடு கொள்ளும் அடையாளத்தை, அடிப்படைப் பண்பை அவர் இத்தனை காலத்துக்குப் பிறகும், வேறு களமொன்றில், வேறொரு யதார்த்தத்தில் வாழ்கின்றபோதும் இழக்கவில்லை. அதைப் பேணுகிறார். இந்த எழுத்துகளும் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையும் அதற்குச் சாட்சி.
– கருணாகரன்
(இந்த மாதம் (ஏப்ரல் – 2013) வெளிவரவுள்ள எஸ். கிருஷ்ணமூர்த்தியின் “மறுவளம்“ என்ற புதிய புத்தகத்திற்கான முன்னுரை
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்