ரோஜர் எபர்ட் – ஒரு சினிமா விமர்சகனின் பயணம்.

This entry is part 2 of 29 in the series 28 ஏப்ரல் 2013

நல்ல படங்களைப் பார்க்கும் என் பழக்கம் திருச்சியில் சினி போரத்தில் தொடங்கியது.

பேராசிரியர் எஸ் ஆல்பர்ட் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கிய சினி போரம் பல ஆண்டுகளாக உலக அளவிலும், இந்திய அளவிலும் வெளிவந்திருந்த முக்கியமான படங்களை பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தினை இந்த போரம் அளித்தது.  சத்யஜித் ரே, குரோசவா, பெலினி, போலன்ஸ்கி, கோதார் , த்ருபோ என்று பலதரப்பட்ட பெரும் ஆளுமைகளின் படங்களைப் பார்க்கவும் விவாதிக்கவும் களத்தை அமைத்துக் கொடுத்த அந்த அமைப்பிற்கு என் ஈடுபாடுகளை விரிவு படுத்தியதில் பெரும் பங்குண்டு.  எஸ் ஆல்பர்ட் அறிமுகத்தில் அவர் வீட்டில் தான் முதன் முதல் பிரிட்டிஷ் சினிமாப் பத்திரிகையான “சைட் அண்ட் சௌண்ட்” (Sight and Sound) பற்றிய அறிமுகம் கிடைத்தது.  சினிமா ரசனை பற்றிய அடிப்படையான உணர்வுகளும் பெற்றது எஸ் ஆல்பர்ட் மூலமாகத்தான். நான் இருபது வயது வரையில் பார்த்த தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதற்கு தமிழ் சினிமா விமர்சனமும் ஒரு முக்கிய காரணம்.  விமர்சனம் என்றால் “நீதிக்குப் பின் பாசம், பாதிக்குப் பின் மோசம்” என்ற அருமையான அடுக்கு மொழியைத் தாண்டி இன்னமும் தமிழ் சினிமா விமர்சனம் வந்ததாய்த் தெரியவில்லை.

விமர்சனம் எது, மதிப்புரை எது, அறிமுகம் எது (Criticism, Review, Introduction) என்ற வேறுபட்ட அணுகுமுறையினைக் கூட நாம் அறிந்து கொள்ளவில்லை. அதையும் தாண்டிய ஆழ்ந்த ஆய்வாக (Reflection) ஆக அமைந்தவை எஸ் ஆல்பர்ட்டின் உரையாடல்கள். சாருலதா சத்யஜித் ரேயின் ஆகச் சிறந்த படம் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்,. ஆனால் அது ஏன் என்று எஸ் ஆல்பர்ட் செய்த விமர்சன உரைதான் அதன் முக்கியத்துவம் பற்றி எனக்கு அறியத்தந்தது.
அமெரிக்காவில் நான் சந்தித்த அன்பர்களில் அதே அளவு சினிமா மீது ஈடுபாடும் ரசனையும் கொண்ட முருகானந்தத்தைச் சந்தித்தது என் பேறு என்றே சொல்ல வெண்டும். அவர் தான் எனக்கு ரோஜர் எபர்ட் பற்றி முதன் முதலில் சொன்னவர். ரோஜர் எபர்ட் , இன்னொரு விமர்சகரான ஜீன் சிஸ்கெலுடன் வாரவாரம் சின்னத் திரையில் நிகழ்த்திய திரை விமர்சனம் நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது அப்போது தான். ரோஜர் எபர்ட் பற்றி அவர் சொன்ன சந்தர்ப்பம் குரோசவாவின் இன்னொரு முக்கிய படமான “இகுரு” பற்றிய பேச்சு வரும்போது தான். “இகுரு” நான் அப்போது பார்த்திருக்கவில்லை. குரோசவாவின் மற்ற படங்களைப் பார்த்திருந்தேன். ஷேக்ஸ்பியர் நாடகமான மாக்பெத்தின் ஜப்பானியத் திரை வடிவமான “ரத்த சிங்காதனம்” படத்தை, லாலி ஹாலின் பின்னால் ஒரு கிடங்கு அறையில் புனித ஜோசப் கல்லூரியின் ஒரு சிப்பந்தி உபயத்தில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. மறக்க முடியாத படம் அது. குரோசவாவின் “இகுரு” பற்றி ரோஜர் எபர்ட் சொன்ன வாக்கியத்தை ஆங்கிலத்தில் சொன்னார் ஆனந்த். ” I think this is one of the few movies that might actually be able to inspire someone to lead his or her life a little differently.” “ஒருவனை அல்லது ஒருத்தியை தன் வாழ்க்கையை சற்றே வேறுவிதமாக வாழ்வதற்கான உந்துதலை இந்தப் படம் அளிக்கும் என்று நினைக்கிறேன்.” ஒரு திரைப் படத்திற்கு இதை விட வேறு சிறப்பான ஒரு புகழ் மாலையை வேறு எப்படியும் சூட்டிவிட முடியாது.
originalஅதன் பிறகு தான் நான் “இகுரு” படத்தைப் பார்த்தேன். மரணத்தின் வாயிலில் நிற்கும் ஒருவன் தன வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாய் ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் ஒரு பூங்காவை அமைக்க காரணமாய் இருப்பது படத்தின் அடிநாதம். அவன் மரணத்தின் செய்தியிலிருந்து மீண்டு வாழ்க்கையை கண்டுபிடிப்பது தான் படத்தின் பயணம். படத்தின் துவக்கத்தில் வடனபே என்ற இந்த நாயகனின் மரணத்திற்குப் பின் நடக்கும் ஒன்று கூடலில் தொடங்குகிறது. பின்னோக்குக் காட்சிகளில் கதை சொல்லப் படுகிறது. அவன் அலுவலகத்தில் அவனுக்கு இட்ட பெயர் மம்மி (Mummy ) அவன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் அவன் பெற்ற மாற்றங்கள் கதையின் இன்னொரு சரடு என்றால், இந்த மாற்றங்கள் எப்படி அவனைச் சூழ இருந்தவர்களை குழப்பி, அதிரச்செய்து, கோபமூட்டி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது கதையின் இன்னொரு சரடு.
ரோஜர் எபர்ட் இந்தப் படத்தை கல்லூரி வாழ்வின் போது பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது உடனடியாக அது பற்றி எழுதியது இது .” ஆய்வுக்கு உட்படுத்தாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது.” இது ப்ளேடோ வின் வாக்கியம். “நான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இகுரு படத்தைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படம் என்னை பாதிக்கிறது. நான் முதுமை அடைந்து வளரும் தருணங்களில் ஒரு முதிய நபர் பற்றிய படமாக இகுரு தோன்றவில்லை. மாறாக நம் ஒவ்வொருவர் பற்றிய படமாக இது தோன்றுகிறது” என்று ரோஜர் எபர்ட் தன் விமர்சனத்தை முடிக்கிறார்.

ஒரு விமர்சகனின் பங்கு என்ன என்பதையும் இந்த வாக்கியம் தெளிவாகக் காட்டுகிறது. படத்தின் நுணுக்கங்களையும், திரைப்பட ஆக்க சாமர்த்தியங்களையும் காட்டிலும் ஒரு திரைப்படத்தின் உயிர்ப்பான பகுதியும் , ஒட்டு மொத்தமான பாதிப்பும் எந்த அளவில் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி பார்வையாளனை நெறிப் படுத்துவதும், தயார் செய்வதும் தான் ஒரு விமர்சகனின் பணி.

இந்தப் படம் உடனடியாக எனக்கு நினைவிற்குக் கொண்டு வந்தது சார்வாகன் எழுதிய “அமர பண்டிதர்” என்ற அற்புதமான குறுநாவலைத் தான். குள்ளன் என்று அழைக்கப் படும் பண்டிதர் கோவில் கட்டுகிறேன் என்று சொல்லி பணம் வசூல் செய்கிறான். கதை சொல்லியின் அம்மாவிடம் அவன் பணம் கேட்டு அவ்ரும்போது கதைசொல்லி அவனைக் குறித்து எச்சரிக்கிறான். குள்ளன் முன்னால் எப்ப டிஎல்லாம் ஏமாற்றியிருக்கிறான் என்று பட்டியல் இடுகிறான். ஆனால் அம்மா குள்ளன் மாறிவிட்டான் என்கிறாள். குள்ளனின் சாதாரண வாழ்வில் நடக்கும் சாதாரண விஷயங்களாக கதை நகரும்போது, கதை சொல்லி திரும்பி ஊருக்கு வரும்போது குள்ளன் இல்லை. ஆனால் குள்ளன் கோவில் ஒரு பஸ் நிறுத்தத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் மாற்றங்களும், பயனுள்ள செயல்களும் செய்ய தன் வாழ்க்கையின் திசையை முற்றிலும் மாற்றியாக வேண்டிய அவசியம் இல்லை, சாதாரண மனிதர்களும், தம் சாதாரண இருப்புக்குள்ளாகவே தன்னிடமும், சுற்றுசூழலிலும் மாற்றம் கொண்டு வர முடியும் என்று உணர்த்தும் கதையும், படமும் கலாசாரங்கள் தாண்டி கலைப் பார்வைகள் அடையும் ஒற்றுமையைச் சுட்டுகின்றன.

 

சத்யஜித் ரேயின் மூன்று படங்கள் “பதேர் பாஞ்சாலி”, “அபராஜிதோ” ,”அபுர் சன்சார்”  மூன்று படங்களும் அப்பு முப்படங்கள் (Apu Trilogy ) என்று அழைக்கப் படுகின்றன. மூன்று படங்களும் அப்பு  குழந்தையிலிருந்து பெரியவனாகி அவன் பெற்ற  குழந்தைக்குப் பொறுப்பேற்கும்  வரையிலான கதையைச் சொல்கின்றன. “the great, sads gentle sweep of teh Apu Trilogy remains in the mind of the moviegoer as a promise of what film can be ” என்று தொடங்குகிறது ரோஜர் எபர்ட்டின் விமர்சனம். காலத்தில் தோன்றி மறையும் மோஸ்தர் தாண்டிய அசலான வாழ்க்கையை இந்த முப்படங்கள் சித்தரிக்கின்றன என்பார் அவர். “நம் அவ நம்பிக்கை தாண்டிய ஒரு பிரார்த்தனையை  போன்றது. சினிமா என்னவாய் இருக்கலாம் என்ற சாத்தியத்தை முன்வைக்கிறது” என்பார்.

தினசரி வேலையாக சினிமா விமர்சனத்தை மேற்கொண்டவர் ரோஜர் எபர்ட் . சிகாகோ தினசரி ஒன்றின் விமர்சகராக எல்லாப் படங்களையும் பார்த்து விமர்சிப்பது அவர் பணி. அவருடைய் விமரனங்கள் சினிமா ரசிகர்களின் ரசனை வெளியை வெகுவாக விரித்தது என்பதில் ஐயமில்லை.

ரோஜர் எபர்ட் கோட்பாடுகளை முன்வைத்து விமர்சனத்தை மேற்கொள்ளவில்லை. ஆனால் கோட்பாடுகளை அறிந்திருந்தார். சினிமா வரலாறு அவருக்குத் தெரியும். வரலாற்றில் ஒரு படத்தின் இடம் என்ன என்பது அவர் சிறந்த திரைப் படங்கள் வரிசையில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் சினிமா ஒரு தொழில் நுட்ப ஊடகமும் தான் என்பதை உணர்ந்திருந்தார். “ப்யூடி அண்ட் தி பீஸ்ட்” அனிமேஷன் திரைப் படம் வெளிவந்தபோதும், “டாய் ஸ்டோரி ” வெளிவந்தபோதும் மனம் திறந்து அதைப் பாராட்டி வரவேற்றவர் அவர். ரசனையும், மனிதாபிமானமும், சோதனை முயற்சிகளும் அவரிடம் வரவேற்புப் பெற்றன.
ebertஅமெரிக்காவில் இருந்ததால் அவர் அமெரிக்கப் படங்களை அதிக அளவில் மதிப்புரை செய்தவர் எனபது உண்மையாயினும், உலகப் படங்களை பெரும் எண்ணிக்கையில் அறிமுகம் செய்துள்ளார். ஆனால் பல முக்கியமான வேற்று மொழிப் படங்களையும் விரிவாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரும், ஜீன் சிஸ்கெல் என்ற இன்னொரு விமர்சகரும் சேர்ந்து தொலைக் காட்சியில் வாரந்தோறும் புதிய படங்களை அறிமுக செய்து விமர்சிக்கத் தொடங்கினர். இருவர் விமர்சனப் பணியில் ஈடுபட்டு இரு வேறு பார்வைகளை அளித்தது ஒரு முக்கிய விஷயம். பல படங்களுக்கு இரு வேறு சில சமயம் முற்றிலும் மாறுபட்ட கோணங்களை அளிப்பதன் மூலம் தனிப்பட்ட பார்வையை திரைப் படங்களுக்கு அளித்ததில் விவாதத்தின் மூலமாக படத்தின் பல்வேறு அம்சங்களை தொட்டுக் காண்பித்ததில் இந்த பாணி வெற்றி பெற்றது.

Thumbs up என்று ஒரு படத்தின் சிறப்பைச் சுட்டிக் காட்டி பாராட்டுவது அவர்களின் பாணி ஆயிற்று. Two thumbs up என்ற இருவரின் பாராட்டும், திரைப்பட விளம்பரங்களில் வெளியாவது வழமையானது.

cancer_cant_force_roger_ebert_to_fear_death2002-ல் தைராய்ட் புற்றுநோய் தாக்கியதால் தன் குரலை இழந்த ரோஜர் எபர்ட் சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருந்தார். 2013-ல் அவர் இறக்கும்வரையில் அவர் விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாயின. தொலைக் காட்டியில் அவர் விமர்சனங்கள் அவர் மனைவியால் அல்லது வேறு விமர்சகரால் படிக்கப் பட்டன.
“நீங்கள் பல நல்ல படங்களைப் பார்க்கும்போது இயக்குனரின் தனிப் பட்ட பார்வையினை அறிந்து கொள்வீர்கள். சில படங்கள் தனிநபரால் உருவாக்கப் படுகின்றன. சில படங்கள் குழு ஒன்றினால் ஆக்கப் படுகின்றன. சில படங்கள் தனி நபர்களைப் பற்றியவை. சில படங்கள் அந்த வகைமாதிரி படங்களில் ஒன்றாக நின்று போகும். பெரும்பாலான படங்கள் அவற்றை ஆக்கிய இயக்குனரின் தனித்துவ நடை, தொனி , மற்றும் பார்வையைக் கொண்டிருக்கும். உங்களின் கற்பனை விரிக்கும் வகையில் ஒரு தூண்டுதலை அளிக்கும் இயக்குனரின் பிற படங்களைத் தேடிச் சென்று காண்பீர்கள். இயக்குனர்கள் உங்கள் நண்பர்களாகி விடுவார்கள். மனித இயல்பின் வெட்கமற்ற தன்மையை ப்யுனால் சொல்வார். ஸ்கார்ஸீஸ் கத்தோலிக்க மதத்தினரின் குற்ற உணர்வினால் உண்டாகும் விரசக் கதையாக்கம் தருவார். தனிமனிதத்தன்மையை சந்தேகிக்கும் கலாசாரப் பின்ணணியில் குரோசவா தனிமனிதர்களைக் கொண்டாடுவார். மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் மனிதர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடும் என்று ஒயில்டர் வியப்பில் ஆழ்த்துவார். கீடன் வெளியுலகப் பொருட்களுக்கு எதிராக மனித உணர்வு போராடுவதைக் காண்பிப்பார். குற்றவுணர்வு தரும் கனவுகளை ஒத்த பிம்பங்களை ஹிட்ச்காக் உருவாக்குவார். இறுதியில் திரைப்படங்களை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஓஸு வைக் கண்டடைவார்கள் – திரைப் படங்கள் சலனப் படங்கள் அல்ல, சலனம் கொள்வதா இல்லையா என்ற தேர்வினைப் பற்றியது என்று புரிந்து கொள்வார்கள்.” – ரோஜர் எபர்ட். (சிறந்த திரைப்படங்கள் புத்தக முன்னுரையிலிருந்து)

 

Series Navigationஆமதாபாதில் இரவுகள் – சில பார்வைகள் – 2சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *