Posted in

செங்குருவி

This entry is part 6 of 23 in the series 16 ஜூன் 2013

 

 

மான்கள் துள்ளும் அவ் வனத்தில்

செங்குருவிக்கென இருந்ததோர் மரம்

தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு

நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம்

செங்குருவிக்குப் பிடித்தமானது

 

அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து

பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம்

சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில்

குளத்தில் விட்டு வரும் செங்குருவி

கிளையில் அமர்ந்திருக்கும்

 

தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு

சொன்ன கதைகளையெல்லாம்

கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி

வானவில் விம்பம் காட்டும்

தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால்

அருந்தித் திளைத்திருக்கும்

 

அச் செங்குருவிக்கின்று

எந்தத் தும்பி இரையோ

இல்லை எக் கிளைக் கனியோ

 

நடுநிசியொன்றில் அகாலமாய்

செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின்

அதன் ப்ரியத்துக்குரிய மரத்திலேறிய சர்ப்பம் குறித்த

செய்தியை அறிந்துகொள்ளும்

அல்லிப் பூக்களும்

குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன

மேகங்களும்

பின்னர் துயரத்தில் கதறும்

 

– எம். ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

 

Series Navigationதூக்குகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14

One thought on “செங்குருவி

  1. அல்லிப் பூக்களும்
    குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன
    மேகங்களும்
    பின்னர் துயரத்தில் கதறும்!!!!!!!!!

    நிஜக்கதறல்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *