என்ன ஆச்சு சுவாதிக்கு?

This entry is part 27 of 29 in the series 23 ஜூன் 2013

“சுவாதி.. சுவாதீம்மா.. என்னடா பன்றே. மணி 8.30 ஆகுது. ஸ்கூல் லீவுன்னா இவ்ளோ நேரமா தூங்கறது. எழுந்திரிச்சி வாம்மா. அம்மா, ஆபீஸ் போகணுமில்ல. நீ குளிச்சிட்டு சாப்பிட வந்தாத்தானே உனக்கு டிபன் குடுத்துட்டு நானும் நிம்மதியா கிளம்ப முடியும். வாடா குட்டிம்மா, ப்ளீஸ்.. என் தங்கமில்லையா நீ..”

 

ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்ட அன்பு மகளின் போக்கு இந்த மூன்று நான்கு நாட்களாக வித்தியாசமாகத்தான் இருக்கிறது.  எதைக்கேட்டாலும் மௌனம்தான் பதில். கலகலவென பேசித்தீர்க்கும் மகளிடம் இந்த குணம் ரொம்ப வித்தியாசமாகத்தான் இருக்கிறது. எல்லாம் வயசுக் கோளாறாக இருக்குமோ. இந்த வருசம் பிளஸ் டூ வேற. இப்படி இருந்தா எப்படி படிக்கப்போறாளோ. இந்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்குப் பிடித்த இடமான மாமல்லபுரம் ஃபிஷ்ஷெர்மேன்ஸ் கோவ்விற்கு [Fisherman cove] கூட்டிச்சென்று அவளிடம் மனம்விட்டு பேச வேண்டும். என்ன பிரச்சனைன்னு கேட்கணும். இதுக்கும் மேல காத்துக்கிட்டிருக்க முடியாதலால் பணிப்பெண்ணிடம் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். வங்கியின் உயர் அதிகாரியாகிய தானே நேரம் கழித்துச் செல்வது சரியாகாது என்பதால் மாருதியை விரட்டிக்கொண்டு போகவேண்டியதாகியது.

 

நகரின் மையப்பகுதியின் தலைமை அலுவலகம் என்பதால் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும். அதுவும் அன்று சனிக்கிழமை வேறு. பரபரவென மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் செயல்பட வேண்டும். இந்த நேரம் பார்த்து மொபைல் போனின் சிணுங்கல் வேறு. முழுவதும் அடித்து ஓயும் வரை எடுக்க முடியவில்லை. முக்கியமான ஒரு டாக்குமென்ட்டை பாதியில் நிறுத்த முடியவில்லை. அதற்குள் மீண்டும் சிணுங்க ஆரம்பிக்க, யாராக இருக்கும், ஒரு வேளை சுவாதியாக இருக்குமோ. பார்ப்போம் முக்கியமா இருந்தா மட்டும் எடுக்கலாம் என்று  கையில் எடுத்தாள். வீட்டிலிருந்தான் கால் வந்திருக்கிறது என்பதால் உடனே எடுத்து,

 

‘ஹலோ…. ’ என்றாள். பதிலே இல்லை.

 

சுவாதியாகத்தான் இருக்கும்.  ஏன் பேசவில்லை என்று யோசிக்கும் போதே, திரும்ப மணி ஒலித்தது.

 

‘ஹலோ’ , என்றாள் திரும்ப.

 

‘ அம்மா, சீக்கிரமா உடனே வீட்டுக்கு வாங்க ‘. மகள் சுவாதியின் நலிந்த குரல். ஏதோ தப்பு நடந்திருக்கு. ‘என்னம்மா, என்னாச்சு’, படபடப்பாகக் கேட்டாள், அபி.

 

‘சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, ப்ளீஸ்…….’ குரல் என்றுமே இல்லாத அளவிற்கு வித்தியாசமாக இருந்தது.

 

‘நான் வந்துகிட்டே இருக்கேன் சுவாதிம்மா, என்னடா நடந்தது, சொல்லும்மா…….’

 

நான்… நான்..  தூக்க மாத்தி…. தூக்க…. போன் கீழே விழுகிற சத்தம் ….  ஒரே அமைதி……….

 

ஒரு வினாடி ஒன்றுமே புரியாமல் பயத்தில் வெடவெடக்க அசையாது நின்றிருந்தவள், உடனே கைப்பையை எடுத்து, அதிலிருந்து, தன்னுடைய கார் சாவியைத் தேடியெடுத்தாள். மேனேஜரிடம் சென்று, எதையோச் சொல்லி புரியவைத்துவிட்டு விரைந்தாள். வழியில் எப்படித்தான் அப்படி இயந்திரத்தனமாக  காரை ஓட்டிவந்தாள் என்று புரியவே இல்லைதான். கிளம்பும்போதே ஆம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வந்ததால், வீட்டை  நெருங்குவதற்கும்  ஆம்புலன்ஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. சுவாதியை அருகில் சென்று பார்க்க தைரியம் இல்லை என்றாலும், அதற்கு காத்திராமல்  மளமளவென அவளைத் தூக்கி ஸ்ட்ரெட்சரில் வைத்து வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மயங்கிவிட்டாள் போல….

 

அதிர்ச்சியில் நா வறண்டு, கண்கள் இருண்டுபோன நேரத்தில் கணவனுக்கு விசயத்தைச் சொல்ல வேண்டுமே என்று போனைப் போட்டாள்.  ” உடனே கிளம்பி சுதா ஹாஸ்பிடல்  வாங்க, ரொம்ப அவசரம். என்ன சொல்றதுன்னே தெரியலைங்க. ரொம்ப  மோசமான விசயம் நடந்து விட்டது”.

முதல் முறையாகத் தேம்பி அழ ஆரம்பித்தாள் அபி.

 

நர்ஸ் வந்து அபியைத் தட்டிக் கொடுத்து, ஆதரவாகக் கையைப்பிடித்து அழைத்துச் சென்று, அவசரச் சிகிச்சைப் பிரிவின்  கண்ணாடிக் கதவின் வழியாக  சுவாதியைக் காட்டினார். அங்கேயே பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அதற்கு மேல் அவள் காலகள் தள்ளாட ஆரம்பித்துவிட்டது. தன் உடலில் இருந்த அத்தனைச் சத்தும், தன் மகளின் போன் வந்த அந்த நொடியில் கரைந்தேப் போனதை உணர்ந்தாள்.

 

நேரம் செல்லச் செல்ல உண்மை உரைக்க ஆரம்பித்தது. சுவாதியா தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கிறாள்.  ஐயோ.. கடவுளே.. தூக்க மாத்திரை என்ற சொல்லின் பிரயோகமே அவளை மிகவும் பாதித்தது. ஆனாலும் அதனைத் தவிர்க்க முடியவில்லையே. தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் தன் அன்பு மகள் என்பதை நம்பவே முடியவில்லை. என்ன குறை வைத்தோம் என்றே தெரியவில்லையே. இந்த வயசில் அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப்போகிறது. மனோகரனும், தானும் நல்ல நண்பர்களாகத்தானே மகளிடம் பழகிக் கொண்டிருக்கிறோம். பள்ளியில் நடக்கும் சின்னச் சின்ன விசயங்களைக்கூட தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் சுவாதியா இப்படி, எதையுமே சொல்லாமல், இதுபோன்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறாள்.. இருக்காது, இது எப்படி சாத்தியம்?

 

சுவாதி மட்டும் தான் இவர்களின் உலகம், உயிர், மற்றும் வாழ்க்கை இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். அவளும் மிக ஒழுக்கமான பெண்ணாகத்தானே நடந்து கொண்டிருக்கிறாள். தங்களுடைய பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய ஒரே ஜீவன். சுருள் சுருளான அழகிய தலை முடியும், குண்டு திராட்சை போன்ற கருநீலக் கண்களும், கொள்ளை அழகு, அவள். நர்சரி பள்ளி சென்ற நாளிலிருந்து, அவளுடைய ஆசிரியர்கள் அவளின் ஒழுக்கம், திறமை குறித்து பாராட்டாத நாளே இல்லை. சில நேரங்களில் அது தனக்கேச் சற்று மிகையாகக் கூடத் தோன்றும். வளர்ந்து பெரியவளாகி பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் இந்த சமயத்தில் கூட அவளைப் பற்றி எந்தவொரு தவறான புகாரும் இதுவரை வந்ததில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றல்லாவா இருக்கிறாள். அதிகமாக நண்பர்களிடம் பழகும் பழக்கம் கூட இல்லையே.

 

மனோகரனும், அபியும் ஒரு முறை கூட அவளை பெரிதாக சாதிக்க வேண்டும் என்றோ, இதைச் செய், அதைச் செய்யக் கூடாது, என்று கட்டாயப் படுத்தியதோக் கிடையாது. அவளுடைய வேலையிலும், படிப்பிலும், எந்தக் குறையும் சொல்ல முடியாது என்பதால் அவள் போக்கிலேயே விட்டு வைத்திருந்தார்கள். திடீரென்று இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போடுவாள் என்று கனவிலும் நினைத்ததில்லை.

 

மனோகர் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்ததைப் பார்த்தவுடன், அபிக்கும் அழுகை கட்டுக்கடங்காமல் போனது. அவன் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டு நின்றிருந்தாள்.

 

சுவாதி இருந்த அறைக் கதவு திறந்து, மருத்துவர் வெளியே வந்தார். சுவாதி துவண்டு போய் மயக்க நிலையிலேயே இருந்தாள். மூக்கில் பிராணவாயு முகமூடி இருந்தது. மருத்துவர், அவள் வயிற்றைக் கழுவி சுத்தம் செய்தாகி விட்டதாகக் கூறினார். மயக்கம் தெளிய ஒரு சில மணித் துளிகள் ஆகலாம் என்றும், யாராவது ஒருவர் மட்டும் அருகில் இருக்கும் படியும் கூறினார்.

 

“அவள் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாள் என்று தெரியுமா”?  என்று கேட்டார்.

 

இருவரும் ஒரே நேரத்தில், தெரியாது என்று வேகமாகத் தலையாட்டி, ” என்ன காரணம்னே புரியல சார். அவ மேல உசிரையே வைச்சிருக்கோம். அவளும் அப்படித்தான் இருக்கான்னு தான் நினைச்சிக்கிட்டிருக்கோம் “, என்றனர், தாங்க முடியாத வேதனையோடு.

 

“சரி, நான் ஒரு அட்டெண்டரை அனுப்பி வைக்கிறேன். அவருடன் சென்று மன நல மருத்துவரைப் பார்த்துவிட்டு வாருங்கள்,” என்றார்.

 

சுவாதி குறுகலான படுக்கையில் துவண்டு கிடந்தாள். மனோகர் கால் மாட்டிலும், அபி தலை மாட்டிலும் உட்கார்ந்திருந்தனர்.  அபி சுவாதியின் கையை மெதுவாக எடுத்தாள். சில்லென்றிருந்தது. எந்த உணர்வும் இல்லை. ஒரு மணி நேரம் கடந்தது..   இரண்டு மணி நேரமும் கடந்துவிட்டது. அவர்கள் இருவர் மனதிலும் சுவாதி ஏன் இப்படிச் செய்தாள் என்ற கேள்வி மட்டும் விடை தெரியாமலே இடியெனத் தாக்கிக் கொண்டிருந்தது.

 

சுவாதி இப்படி செய்ததற்கு என்ன காரணமாக இருக்கும்?  அதற்கான அறிகுறி ஏதும் இல்லையே. உடன் படிக்கும் மாணவர்களிடம் நன்றாகப் பழகுகிறாள். உறவுகளிடம் உண்மையான அன்பைக் காட்டுகிறாள். திடீரென்று இப்படி ஒரு முடிவெடுக்கும் அளவிற்கு என்னதான் நடந்திருக்கும் என்றே தெரியவில்லையே!

 

ஒரு வேளை தன் அன்பில் ஏதேனும் குறை இருக்குமோ என்று யோசிக்கத் துவங்கினாள், அபி.  சுவாதியை முதன் முதலில் கையில் வாங்கிய அந்த நாளிலிருந்து இந்த நொடி வரை அவள் மீது ஒரு துளி வெறுப்போ, வருத்தமோ கொண்டதில்லையே. அது மட்டுமல்லாமல் அடுத்து ஒரு குழந்தை வந்தால் சுவாதி மீது உள்ள பாசம் குறைந்துவிடுமே என்ற அச்சத்தினாலேதானே , நான்கு வருடத்திற்குப் பிறகு உருவான அந்தக் கருவைக் கூட வளர விடாமல், அழித்து விட்டாள். இதைவிட வேறு எப்படி தன்னுடைய பாசத்தை நிரூபிக்க முடியும்?  மனப் போராட்டத்தின் எல்லைக்கேச் சென்று விட்டாள் அவள்.

 

எந்த பதிலும் கிடைக்கவில்லை அவளுக்கு.  நேரம் மட்டும் கடந்து கொண்டே இருந்தது. சுவாதி மிக மெலிதாக முனகும் சத்தம் கேட்டது. முனகல் ஒலி அதிகரிக்க ஆரம்பிக்கும் வேளையில், அவள் உடலும் சேர்ந்து குலுங்க ஆரம்பித்தது.

 

’சுவாதி.. சுவாதீம்மா,  அபி மெதுவாகக் கூப்பிட்டாள். சுவாதி.. அம்மாடா…. அப்பாவும் இங்கத்தான் இருக்காங்க பாரும்மா….

 

அவளுடைய முனகல் அதிகரித்தது. உதடுகள் குவிந்து வார்த்தைகளை வெளிக் கொணர முயற்சித்துக் கொண்டிருந்தது.

 

அவளுடைய முன் நெற்றியில் சுருண்டு விழுந்து கிடந்த முடியை ஒதுக்கிவிட்டு, அபி தன்னுடைய முகத்தை அவள் கன்னத்தோடு, வைத்தாள். “கண்ணம்மா… அம்மாடா… என்று முடிப்பதற்குள்,  அவள் வாயிலிருந்து, நுரையாக வந்ததைக் கண்டு அரண்டு போய் படாரென எழுந்தாள்.

 

மனோகர் வேகமாக ஓடிச் சென்று நர்சை அழைத்து வரச் சென்றான். அவர்களும் வந்து பார்த்துவிட்டு, ஏதோ ஊசி போட்டுவிட்டுப் போனார்கள். இரவு முழுவதும் இப்படியேக் கழிந்தது.

 

அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அன்பான ஒரு பார்வை கூட இல்லை. இயல்பான அவளுடைய புன்னகையைக் காணவில்லை. கையை மேலே வைத்தால் தட்டிவிடும் அளவிற்கு வெறுப்பை மட்டும் காட்டிக் கொண்டிருந்தாள். இறுதியாக விடியற்காலை 5 மணிக்குத்தான் தூங்க ஆரம்பித்தாள்.

 

வெகு நேரம் கழித்து சுவாதி மெதுவாக கண் விழித்துப் பார்த்தாள். உதடுகள் மிகவும் வறண்டு போயிருந்தன. ஏதோ பேச முயன்றாள்.  அபி தண்ணீர் எடுத்துக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தாள். மனோகரும் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

 

சுவாதி மெதுவாக கண்களைத் திறந்து ‘ நான் எங்கே இருக்கிறேன்’, என்றாள். ‘ஆஸ்பத்திரியில்’, என்று இருவரும் ஒன்றாகக் கூறினர்.

 

சுவாதி தன் கையின் மணிக்கட்டைத் துடைத்துக் கொண்டே, ‘ ஏதோ, கனவு போல இருக்கு… ஒன்னுமே புரியல…  எல்லார் மேலயும் வெறுப்பா இருக்கு,  என்றாள். அவள் முகத்தில் நிறைய குழப்பங்கள்.

 

சில மணித்துளிகள் இப்படியே நகர்ந்தது. புதிதாக ஒரு மன நல மருத்துவர் உள்ளே நுழைந்தார். அபியையும், மனோகரையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, தான் மட்டும் உள்ளே சென்று, மகளுடன் நீண்ட நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பது மட்டும், கண்ணாடிக் கதவு வழியேத் தெரிந்தது.

 

மனோகரும், அபியும் மிகக் குழப்பமான மனோநிலையுடனேயே, டாக்டர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று தவித்துக் கொண்டிருந்தனர்.

 

சிறிது நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார். அவர்கள் இருவரும் ஓடி வந்து அவரருகில் நின்று கொண்டனர். இருவரையும் தன் அறைக்கு அழைத்துச் சென்றவர், கேட்ட முதல் கேள்வியே அவர்களைப் புரட்டிப் போட்டது.

 

” இந்தப் பெண் உங்களுடைய சொந்தக் குழந்தை இல்லையா ?” , என்பதுதான் அது.

இத்தனை ஆண்டுகாலமாக வெளியே தெரிந்தால் எங்கே தங்கள் பாசம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் மறைத்து வைத்திருந்த இரகசியம் இன்று வெளியே தெரிந்து விட்டதா? அதுவும் தங்கள் செல்லக் குழந்தையின் மூலமாகவே…?

 

மனநல மருத்துவர் மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேட்க முயற்சிக்க , அபி அவரைத் தடுத்து, 14 வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவத்தை முதன் முறையாக டாக்டரிடம் கூறத் தொடங்கினாள்.

 

பிரசவ வேதனையுடன் மருத்துவமனைக்குச் சென்ற அந்த நாளிலிருந்து ஆரம்பித்தாள். வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் மருத்துவர் வந்து, குழந்தை, நிலை மாறியுள்ளதாலும், உடல் முழுவதும் கொடி சுற்றியிருப்பதாலும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், யாராவது ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியுமென்றும் கூறிவிட்டனர். அந்த நேரத்தில் மனோகர் தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றவேண்டியதே முக்கியம் என்று எழுதிக் கொடுத்துவிட்டான். அறுவைச் சிகிச்சையில் தீவிர முயற்சிக்குப் பிறகும் குழந்தையைக் காப்பாற்ற முடியாத அதிர்ச்சி அபியை பலமாகத் தாக்கியிருந்தது.

 

இந்த நேரத்தில் தான் , அதே மருத்துவமனையில், பிறந்த ஒரு பெண் குழந்தையின் தாய், அந்தக் குழந்தையை ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடும்படி எழுதி வைத்து விட்டு, எங்கோ சென்று விட்டது தெரிய வந்தது.

 

இதையறிந்த மனோகரும் அபியும்,அக்குழந்தை கடவுளாகப் பார்த்து தங்களுக்காகக் கொடுத்த ஒரு வரப் பிரசாதமாகவே கருதிக்கொண்டனர். இருவரும் சேர்ந்து நன்கு யோசித்து, அந்தக் குழந்தையைத் தாங்களே தத்து எடுத்து வளர்ப்பது என்ற முடிவிற்கு வந்தனர். பிறகு மற்ற சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு வந்துவிட்டனர். இந்த விசயம், அவர்களுடைய மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரியும்.  சுவாதிக்காக அடுத்த குழந்தையேக் கூட வேண்டாம் என்றிருந்ததையும் கூறினர்.

 

இதைக் கேட்ட மனநல மருத்துவர், ” நீங்கள் செய்த மாபெரும் தவறு இதுதான் “, என்றார்.

 

குழந்தையை தத்து எடுத்து வளர்த்ததெல்லாம் நல்ல காரியம்தான். ஆனால் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பருவம் வந்தவுடன் , இந்த விசயத்தை அந்தக் குழந்தையிடம் நீங்களே பக்குவமாக எடுத்துக் கூறியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. யாரோ ஒருவர் மூலம் திடீரென இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்தப் பிஞ்சு நெஞ்சில் அதிர்ச்சி குத்தீட்டியாகப் பாய்ந்துவிட்டது. அந்த ரணம் தாங்க முடியாமல் தான் அவள் தற்கொலை என்ற அளவிற்குச் சென்றிருக்கிறாள்.

 

மனநல மருத்துவரும் இவர்கள் இருவரின் அதிர்ச்சியைப் போக்குவதற்காக சில மணித்துளிகள் எடுத்துக் கொண்டு அவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி, மேற்கொண்டு  சுவாதியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் வழங்கி அனுப்பி வைத்தார்.

 

ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பி வந்த சுவாதி இன்று கொஞ்சம், கொஞ்சமாக உடல் நிலையிலும், மன நிலையிலும் தேறிக் கொண்டிருக்கிறாள். வெகு விரைவில் பழைய நிலைக்குத் திரும்பி விடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவளுடைய அன்பான பெற்றோர்.

Series Navigationஇரயில் நின்ற இடம்நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *