அகமும் புறமும்

This entry is part 12 of 27 in the series 30 ஜூன் 2013

கலைச்செல்வி

சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு வாசம் முளை விட்டுக் கொண்டிருந்த கிராமம் அது. இந்துக்களும் கிறித்துவர்களும் அடர்வாக சம அளவில் இருந்தனர். “வேதகாரங்க வூட்டு ஸ்டெல்லா பெரிய ஸ்கூல்ல படிக்க போவுது.. என்னையும் அனுப்பி வுடு..” ரெண்டு மூணு பொம்பளப்புள்ளங்க பன்னெண்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காங்க. அதுங்களுக்கு மாப்பிள்ளை தேடும்போது ஏற்பட்ட சின்ன தேக்கநிலை நம்ப புள்ளங்களுக்கும் வந்துடக்கூடாதுங்கிற நினைப்பு ஒரு பக்கம். ‘படிச்சப்புள்ளயாயிருக்கு’ன்னு அதுங்க மாமியார்வீட்ல இதுங்களுக்கு இருக்குற பவுசு ஒரு பக்கமுமா பத்தாவது வரைக்கும் வந்த புள்ளங்களோட தாய்தகப்பன்ங்களுக்கு சின்னதாக ஒரு தடுமாற்றம் வர்ற காலமா இருந்துச்சு

தலைமாட்டுல நல்ல விளக்கு ஏத்தி வச்சுருந்தாங்க. பக்கத்துல அரைப்படி உழக்கில் முழுசா நெல் நிரப்பி அது மேல ஒரு உருண்டை மாட்டு சாணத்த பரப்பி அதுக்கு மேல எரியாத ஒரு விளக்க அமுத்தி வச்சுருந்தாங்க. பிணத்தின் வாசம் என்றே அறியப்படும் சம்பங்கி பூக்களின் மணம் அந்த பட்டாச்சாலையை நிரப்பிக் கொண்டிருந்தது. இளவட்ட பையன் ஒருவன் கையில் ஏந்தியிருந்த பெரிய தாம்பாளத்தில் டீ கப்புகள் நிறைந்திருந்தன. வெளியே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த ஆண்களுகளிடம் நீட்டியப்படியே நகர்ந்துக் கொண்டிருந்தான்.

துரைராசு, மாணிக்கம், ராசதுரைன்னு நகுலனின் மூன்று மகன்களும் நீளவரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் பங்காளிமார்கள் இருவது முப்பது பேருடன் வரிசைக்கட்டி அமர்ந்திருந்தனர். துரைராசு வெள்ளை நிற விலையுயர்ந்த காட்டன் வேட்டி அணிந்திருந்தான். ராசதுரை கட்சிக் கரை வேட்டியும், மாணிக்கம் கைலியுமாக அணிந்திருந்தனர். மேல் சட்டை கூட உசத்தியானதாக இருந்தது துரைராசுவுக்கு. மாணிக்கம் பளீர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் போட்ட சட்டை அணிந்திருந்தான். ராசதுரை அரக்கு சிவப்பு வண்ணத்தில் முழுக்கை சட்டையுடன் இருந்தான். சாவுக்கு வரும் ஆண்கள்; நாற்காலியிலிருந்து எழுந்து நின்று பெறுவது போன்ற பாவனையில் நீட்டிய வரிசைக்கட்டிய ஆண்களின் கைகளில் தங்களின் ‘தருவது போன்ற பாவனையை’ கொண்ட கைகளால் தொட்டுக் கொண்டே வந்தனர். பிறகு பட்டாச்சாலையில் கடைசிக் காத்திருப்பில் இருந்த நகுலனை பார்த்து கும்பிட்டப்படி சிறிது நேரம் நின்றிருந்தனர். பிறகு பிளாஸ்டிக் நாற்காலியை வசதிக்கு தக்க நகர்த்திப் போட்டுக் கொண்டு ஆங்காங்கே உட்கார்ந்தனர்.

இத்தனை காபியும் கலரும் சப்ளையாவது தெரிந்தால் குளிர்ப்பெட்டியிலிருந்து எழுந்து வந்து விடுவார் நகுலன். யாருக்கும் எந்த உபகாரமும் செய்வதில் நாட்டமில்லாதவர். சின்னவன் ராசதுரையின் திருமணத்தின் போது பெண் அழைக்கும் நிகழ்ச்சிக்காக ஊர்சனங்க இவங்க வீட்ல கூடியிருந்தாங்க. சரக்கு ஏத்துற மினி லாரி சனங்கள ஏத்திக்கிட்டு போக வெளியில ரெடியா நின்னுச்சு. வந்த சனங்களுக்கு மிக்சரும் டீயும் சப்ளை ஆகிட்டிருந்துச்சு. “அதான் பொண்ணு வீட்ல டிப்பனுக்கு ஏற்பாடு செஞ்சுருக்காங்கள்ல்ல.. இங்ஙன என்னாத்துக்கு ஒரு தண்ட செலவு..” பொண்டாட்டி அழகம்மாகிட்ட பெனாத்தி எடுத்துட்டாரு. “ஒன்ன தான் ரோசன கேட்டாளுவளா..? எல்லாம் இந்த பெரிய பயலும் அவன் பொண்டாட்டியும் பண்ற வேல.. நீ பேசாம துன்னுட்டு வண்டில போயி குந்து.. தாந்தோன்றிபயலுவ…” நல்ல பொடவையா எடுத்துத் தாராத மகன்; மேல வந்த கோபத்தை ஆத்திக்கிட்டா அழகம்மா.

அழுக்குச் சேலையும் கொண்டையிட்ட தலையுமாக வயசாளி பெண்கள் நைலக்ஸ் சேலையும் அதிலிருந்த கிழித்து தைக்கப்பட்ட மெல்லிய ஜாக்கெட்டுமாக இளம் பெண்கள் இறுக்கமான சட்டை அணிந்த நடுத்தர வயது பெண்கள் என பெண்கள் கூட்டம் நிரம்பிக் கொண்டிருந்தது.

அவர்கள் ஒருவருக்கொருவர் முதுகோடு முதுகு கைக்கோர்த்து உண்டாக்கியிருந்த வட்டம் ஆட்கள் வரவர பெரிதாகிக் கொண்டே போனது. சீரான மாரடித்தலும் அதை தொடர்ந்த தெளிவற்ற ஒப்பாரியுமாக அந்த வட்டம் இருந்தது. பிறகு அந்த வட்டத்திலிருந்து பிரிந்து அழகம்மாளிடம் சூழ்ந்திருந்த சிறிய வட்டத்திற்குள் பெண்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது ஒரு தெளிவான நிகழ்வாக நடந்து கொண்டிருந்தது. ஒப்பாரியின் சத்தம் இங்கு கூடுதலாக இருந்தது.

பட்டாசாலை ரொம்பி வழிந்தது. தெருவில் துணிப்பந்தல்; போடப்பட்டிருந்தது. தார்பாலின் விரித்திருந்தது. வந்த கடமையை அழுதழுது முடித்தவர்கள் முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு ஆங்காங்கே அமர்ந்து வம்புகளில் ஆழ்ந்தனர்.

“எக்கா.. ரெட்ட பட்ட செயின மீட்டுட்ட போலருக்கு…”

“ஆமாண்டீ.. போன வருசத்துக்கு மொத வருசம் வச்சுச்சு.. முளுவிடும்னே பயந்துட்டேன்… நல்லவேள.. எம்மவன் லாரிக்கு போற பக்கம் நல்லா வரும்புடி வருதுன்னு கொண்டாந்தான்.. இப்ப தான் மூட்டேன்..”

“என்னா அத்தாச்சி.. ரொம்ப எளப்பா தெரியிற..?

“ஆமாண்டீ.. சக்கரை கூடிப்போச்சுன்னு சொன்னாவ.. புள்ளங்கள தாட்டி வுடற வரைக்கும் உசுரு புடிச்சுக்கிட்டு கெடக்குணுமே..”

“அது சரி.. ஆமா.. அளவம்மா வூட்லேர்ந்து இன்னுமா பொறந்த கோடி வருது..?” குரலை தழைத்து கேட்டாள்.

“வருவானுங்க.. வருவானுங்க.. அவஅவன் பணத்த பொரட்டிட்டுல்ல வருணும்…”

ஆறேழு பேர் பறை, மேளங்களோடு வந்தனர். “ஏம்ப்பா.. வெள்ளன வந்துடுன்னு படிச்சு படிச்சு சொன்;னோம்ல… பொணத்த சாய்ச்சு வச்சு ரெண்டு மணி நேரமாச்சு.. இப்ப தான் வர முடிஞ்சுதா..?” உறவுக்கார பெரிசு ஒண்ணு குரலை உயர்த்திக்கிட்டே போச்சு. கல்யாணமோ. சாவோ இவரின் குரல் ஆள் அரவம் இருக்கும் வரை ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும். கூட்டம் கலைந்த பிறகு இவரை தேட வேண்டியிருக்கும்.

“அய்யா.. இவனுவ தான் லேட் பண்ணிப்புட்டானுங்க..” ஒரு மாதிரியா சிரிச்சான் தலைவன் மாதிரி இருந்தவன்.

“இத்துனோண்டு பய கூட தண்ணி போடுவானா..?” பத்து வயசு பையனை காட்டினார்.

“பாலு குடிக்காத பூனை உண்டுங்களா சாமி…” பேச்சு பேச்சா இருக்கும் போதே ஒருத்தன் ஒதுக்கா வைக்கோல போட்டு நெருப்புண்டாக்கி பறையை சூடேத்திக்கிட்டு இருந்தான்.

அழகம்மாளை சுற்றி கும்பல் இருந்துக் கொண்டேயிருந்தது. சிறிய கொண்டையில் வைக்கப்பட்ட அளவுக்கு மீறிய பூக்களின் சுமையும், கை நிறைய கண்ணாடி வளையல்களும் இடுப்பில் கட்டப்பட்டிருந்த பட்டுச்சேலையும் அவளை படாதப்பாடு படுத்திக் கொண்டிருந்தது. நேற்று இன்னேரம் கரும்புக் கொல்லையில் இருந்தாள் அழகம்மா.

“ஏ அத்தாச்சி… அண்ண எப்டியிருக்காக..?”

“அப்டியே தான் கெடக்காக.. திடுப்புன்னு இதுக்கு இப்டி கேடு வரும்னு கண்டனாக்கும்.. இளுத்துக்கிட்டு கெடக்காம போயி சேந்துட்டா கூட பரவால்ல.. கீழ வுளுந்த தண்டத்துக்கு பத்து பதுனைஞ்சு நாளா இப்டி செரமப்பட்டுக்கிட்டு கெடக்கறத பாத்தா கண்றாவியா இருக்கு… அதுக்கும் கஸ்டம்.. இருக்கறவங்களுக்கும் கஸ்டம்…” தள்ளாமை பேச வச்சுது அழகம்மாவ.

”இன்னும் கொஞ்ச நாளு இருந்தா நடுள்ளவன் கண்ணாலத்தையும் பாத்துப்புட்டு போயிரும்…”

“ஊமப்பயல கண்டா தான் ஊருக்கே எளக்காரமா கெடக்கே… அவன் வெசனம் தான் உங்கண்ணனை புடிச்சு ஆட்டுது… இந்த வருசமும்; வெள்ளாமை பாக்லேன்னா அடமானம் வச்ச நெலம் முளுவி போயிடும்… இந்த ஊம பயலுக்கு என்னாத்த வுட்டுட்டு போறது…? பின்னால ஒரு பயலும் இவன பாக்க மாட்;டானுங்க.. இது இன்னும் இளுத்துகிட்டு கெடந்துச்சுன்னா வச்சு பாக்க தான் காசு இருக்கா.. இல்ல பீ மூத்தரம் அள்ளி கொட்ட ஆளு தான் இருக்கா..? ஆண்டனுவிச்சாச்சு.. நிம்மதியா அடங்குனாதான் நல்லது..”

அவளுக்கும் அறுபது வயதிற்கு மேல் இருக்கும். மூன்று ஆண் பிள்ளைகளையும் ரெண்டு பெண்பிள்ளைகளையும் பெற்றவள். மகள்கள் இருவரும் பத்து வயசுக்குள்ளயே நோய் கண்டு சாக மிஞ்சியது பசங்க தான். அதில்; மூத்தவன் துரைராசுவுக்கு படிப்பு நன்கு வர இன்று மத்திய அரசாங்க வேலையில் இருக்கிறான். ரெண்டாவது பையன் மாணிக்கத்திற்கு வாய் பேச வராது. காது கேட்பதில்லை. ஆனால் உழவு வேலைகள் அனைத்தும் அத்துப்படி. ராசதுரை பக்கத்து ஊரில் கூல்டிரிங்ஸ் கடை வைத்திருக்கிறான்.

கும்பல விலக்கிட்டு அழகம்மாளுக்கு ஒருத்தி டம்ளர்ல டீ கொண்டு வந்தாள். “வேண்டாய்யா.. வேண்டாம்… வெத்து வயத்துல டீயா குடிச்சு குடிச்சு வாந்தி வர்ராப்புல இருக்கு…” தலையை அண்ணாந்து சொல்ல முடியாமல் பின்னாலிருந்த பூ கனத்தது. மாராப்பே நிற்காமல் புடவை அவிழ்ந்திருந்தது. கண்களில் கண்ணீர் இல்லையெனினும் குரல் கட்டிப் போயிருந்தது.

நகுலனின் அப்பாவும் பக்கத்து வீட்டு மூக்கனின் அப்பாவும் உடன் பிறந்த சகோதரர்கள். நிலம் பிரிந்ததில் ஒற்றை பலாமரம் இருந்த பகுதி தனக்கு வேண்டுமென்று நகுலன் கேட்க, மூக்கன் விட்டுக் கொடுக்க மறுக்க அந்த மரம் இரவோடிரவாக நகுலனால் வெட்டப்பட்டது. பெரிய சண்டைக்கு பிறகு ரெண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை இல்;லாமல் போய்விட்டது.

உள்ளப்படி மூக்கன் தான் எந்த நேரமோ எந்த நாளோ என்று எதிர்ப்பார்ப்பில் மூச்சை உருட்டிக் கொண்டிருந்தார். திண்ணையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவருக்கு இந்த சத்தங்கள் எந்த வித சலனமும் ஏற்படுத்தவில்லை. மூச்சு சன்னமாக போய் கொண்டும் வந்துக் கொண்டும் இருந்தது. கஞ்சி மட்டுமே ஆகாரம்.

தப்பாட்ட குழுவினர் இப்போது சிவப்பு கலர் பளபள பேண்டும், மஞ்சள் கலர் சட்டையுமாக கழுத்தில் மாட்டப்பட்ட பறை, மேளங்களுடன் தயாராக வந்தனர்.

பறையோசையும் சீரான தாளகதியில் மேளச்சத்தமும் காதை பிளந்தது.

“மூக்காயி மவளுக்கு மூணாவதும் பொட்டப்புள்ளயா பொறந்துருக்காமுல்ல..”

“ஆமா.. அவ முளுவாம இருக்குறப்பவே சொன்னேன்.. ஆசுபத்திரிக்கு போயி படம் புடிச்சு பாருன்னு… அவ கேக்குல… ஆம்பயளா பொம்பளயான்னு சொல்ல மாட்டங்கன்னுட்டா.. காசு குடுத்தா சொல்லிட்டு போறாளுவ.. செலவுக்கு செத்து போனா.. இப்ப பெத்துப்புட்டு அவஸ்தைபடுறது யாரு..?” மேளத்தோட ஓசைக்கு தகுந்த மாதிரி குரலை ஏத்திக்கிட்டே போனவளால ஜெயிக்க முடியல.

கூட்டம் பேச்சையெல்லாம் நிறுத்தி விட்டு வேறு வழியில்லாமல் கவனிக்க ஆரம்பிக்க தப்பாட்டக்காரர்களுக்கு உற்சாகம் பிடித்துக் கொண்டது. பந்தலின் நடுவே ஒரு வட்டமாக நான்கு பறை கருவிகளும் இரண்டு மேளக்கருவிகளுடனுமாக நின்றுக் கொண்டனர். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க பறையை கொட்டிக் கொண்டே இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக இசைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டே பறையை இசைத்தனர்.

ஒருவர் குரலெடுத்து பாடினார்.. “உள்ளத்தில் நல்ல உள்ளம்.. உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா… வருவதை எதிர்க்கொள்ளடா..” ‘ச்சே.. என்ன ஒரு பாட்டு..’ ‘அந்த காலத்து பாட்டுன்னா பாட்டு தான்…’ ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே.. எந்த காலத்து பாட்டாம்..?’ ‘கட்டிக்கலாமா..? ஓடிப்போலாமா…ங்கிற எறைச்சல பாட்டுங்கிறீயாக்கும்..’ ‘நாலு வரியில மகாபாரதத்தையே சொல்லிப்புட்டாங்க..’ ‘மகாபாரதங்கறதே ஒரு கப்சா.. இதுல நாலு வரியில சொன்னா என்ன..? நாப்பது வரியில சொன்ன என்னா..?’ ‘சீர்காழி கொரல் தானே..?’ ‘ச்சே.. ச்சே.. டி.எம்.எஸ்ஸாலதா இப்டி பாட முடியும்..’ ஆளாளுக்கு ஒரு நினைப்பில் இருக்க அழகம்மாளுக்கு கரும்பகாட்டுக்கு தண்ணி வுட்டானுங்களோ இல்லையோன்னு பதைச்சுச்சு. கூட்டத்துல நடுமவன் எங்க இருக்கானுன்னு கண்ணு தேடிச்சு..

திடீர்ன்னு கூட்டத்துல சலசலப்பு. வெள்ளையும் சள்ளையுமாக ஒருவர் முன்னால் வர அவருக்கு பின்னே கைககளில் மாலையை வழிய விட்டவண்ணம் ஒருவரும் அதற்கு பின் நாலைந்து பேரும் வந்தனர்;. ராசதுரையின் அரசியல் ஈடுபாட்டினால் வந்த ‘ஒன்றியம்’ போல. யாரோ ஒரு பெரிய ஆள் வருகிறார் என்பதை புரிந்துக் கொண்ட தப்பாட்டக்குழுவினர் பாட்டை நிறுத்தி விட்டு வேக வேகமாக பறையை கொட்ட அதற்கேற்ப மேளம் முழங்க தலையை ஆட்டி ஆட்டி மெய்மறந்தவராக மாறியிருந்தார் பாட்டு பாடியவர். நேரே நகுலனின் உடல் அருகே சென்ற நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் பின்னால் வந்தவர் நீட்டிய மாலையை வாங்கி அந்த குளிர்ப்பெட்டியில் அணிவித்தார். வரவேற்பில்லாத வரவேற்போடு ராசதுரை அருகிலேயே நின்றான். பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலியை திரும்பி எடுத்து போட்டு அவரை அமரச் செய்தான். ஒருவன் தயாராக வைத்திருந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலை உடைத்து நீட்ட அவர் மறுத்து விட்டார். அழாத ராசதுரையை சமாதானப்படுத்துவது எப்படி என்று புரியாமல் விழித்தவர் தனது விலையுயர்ந்த காலணிக்குள் காலை நுழைத்தவாறு கிளம்பினார். கூடவே கைத்தடிகளும்.

அழகம்மாளுக்கு கலர் பிடிக்காது. இந்த இனிப்பு சோடாவ ரொம்ப பிடிக்கும். சொல்லி கொள்வது போல வேறெந்த வியாதியும் இல்லையெனினும் அடிக்கடி அவளுக்கு வயிறு உப்புசமாக இருக்கும். முன்பெல்லாம் சோடா வாங்கி குடிப்பாள். இப்பல்லாம் ‘கொடல பெரட்டுது.. போய் இனிப்பு சோடா வாங்கியா..’ன்னு சுருக்கு பையிலேர்ந்து காசெடுத்து குடுத்து ஊமைப்பயலை அனுப்பி விடுவாள்.

சந்தடி சாக்கில் மேள குழுவினர் அங்கிருந்து நகர்ந்து மூக்கனின் வீட்டுக்கெதிரே வைக்கோலை போட்டு சிறு தீ உண்டாக்கி மீண்டும் இசைக்கருவிகளை சூடுப்படுத்திக் கொண்டனர். “எல மணி.. அடுத்தாப்புல இந்த கெழவந்தேன்..” பறையை அறைந்து பார்த்தான். சத்தம் எகிறியது. நெருப்பை தற்காலிகமாக அணைத்தான் மணி என்பவன்.

நகுலனின் தங்கை சரோசாவின் மகள் காந்திமதிக்கு துரைராசு மாமான்னா ரொம்ப பிரியம். அண்ணன் பொண்டாட்டி அழகம்மாளும், நாத்தனாரும் சண்டை சச்சரவு இல்லாம இருக்கும் போது அழகம்மா ‘எம்மருமவ மருமவன்னு’ காந்திமதிய பாத்து உருகிப் போவா. பக்கத்து வீட்டு பங்காளி மூக்கனோட மகளை சரோசாவின் மகனுக்கு கட்டிக் கொண்ட வகையில்; மூக்கனை ஆதரித்தாக வேண்டிய நிலை சரோசாவுக்கு. அத்தோடு நகுலனுக்கும் சரோசாவுக்குமான பேச்சு வார்த்தை முடிந்து போனது.

காந்திமதி வயசுக்கு வந்த சடங்குக்கு கூட யார் கையிலேயோ மாமன்சீரை கொடுத்து விட ஆவேசமாக அண்ணன் வீட்டுக்கு வந்தாள் சரோசா. “சோத்துக்கு வக்கத்து கெடக்கேன்னு ரொப்பிப்பிட்டு போனியோ சீரு.. நல்ல சீரு.. யாருக்கு வேணும் உஞ்சீரு.. ஆம்பள குடும்பம் பண்ணுனா வீடு வெளங்கும்.. இங்க பொட்டச்சி ராச்சியமால்ல இருக்கு.. என் வவுத்தெரிச்ச உன்ன சும்மா விடாது..” கத்தியப்படி வந்தவள் சீர் சாமான்களை அண்ணன் வீட்டு வாசலில் தூக்கியெறிந்து விட்டு போனாள். ‘இனிமே தொரராசு.. தொரராசுன்னு கூவிக்குனு கெடந்தே வெளக்குமாறு பிஞ்சுடும்.. ஆமா சொல்லிப்புட்டேன்.. அந்த ஒறவு அந்து போச்சு…” ஆத்தாக்காரி சொல்லிவிட்டாலும் காந்திமதிக்கு மனசு பூரா துரைராசே இருந்தான். அடிக்கடி அண்ணிக்காரி அம்மா வீட்டுக்கு வரும்போது அவளோட வந்து டேரா போடுவாள்.

“தொர்ராஸ் மாமா… தொர்ராஸ் மாமா..” யாருக்கும் கேக்காம கிசுகிசுப்பா கூப்புடுவா..

“ஏய்.. உள்ள போ.. அம்மா பாத்துச்சுன்னா வையும்…”

“வைஞ்ஞா வையுட்டும்.. எனக்கொண்ணும் கவல இல்ல.. அதுசரி நீ காலேசுக்கு போயி பெரிய படிப்புல்லாம் படிக்கிறியாமுல்ல…”

“ஆமா…”

“அம்மா சொல்லுச்சு.. அதுனாலதா நீங்கள்ளாம் திமுரு புடிச்சு கெடக்குறீங்களாம்..”

“ஓ.. அப்டியெல்லாம் சொல்லுச்சா உங்கம்மா..? எங்கம்மா சொன்னது செரி தான்…”

“அதுக்காவ சொல்லுல.. நான் ஒன்னை பத்தி பேசிக்கிட்டே கெடக்கேன்னு அப்டி சொல்லுச்சு. ஒரு நாள் வெளக்குமாத்துல கூட அடிச்சுப்புடுச்சு…” அதற்குள் ஆள் அரவம் கேட்க ஓடிப்போனாள்.

வந்த சனமெல்லாம் ஒப்பாரியை முடித்துக் கொண்டு டீயிலும், கோலி சோடாவிலும் சற்று நேரம் இளைப்பாற கையில் வைத்திருந்த கூல்டிரிங்ஸ்; பாட்டிலோடு அம்மாவிடம் நகர்ந்தான் மாணிக்கம். அப்பாயி அழகம்மாளின்; மடியில் போய் உட்கார்ந்துக் கொண்டான் துரைராசுவின் மகன். அவள் கையில் இருந்த அந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலை இழுத்தான். “அப்பாயி.. ஃபார் மீ.. ப்ளீஸ்..” ‘ஏய்.. டோனூ.. நோ..நோ.. கோல்ட் பிடிச்சுக்கும்..” அங்கே வந்தாள் பெரிய மருமகள். பக்கத்தில் கோலி சோடா குடித்துக் கொண்டிருந்தான்; ராசதொரையோட மகன்.

துரைராசுவுக்கு கல்யாணம் பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே சரோசாவால் சும்மா இருக்க முடியவில்லை. மருமகளை தூண்டி விட்டாள். “பொண்ண குடுத்து பொண்ணு எடுக்கறது வழக்கந்தான்.. ஆனா அளகம்மா ஏளு ஊரு வாய்க்காரியாச்சே… அண்ணன் பொண்ண பக்கத்துல கண்டுக்கிட்டா சாடை பேச்சுல்ல பேசிக்கிட்டு கெடப்பா.. இது செரியா வருமா..?.” மூக்கனின் மனைவி தயங்கினாள்.

“எங்கத்த காந்திய அண்ணனுக்கு தான் குடுக்குணும்னு ஆசப்படுது..” அதே ஆசை சுந்தரத்திற்கும் இருந்தது. மாநிறமும் ஓரளவு தாட்டியான தேகமுமாக அளவான உயரமுமாக இருப்பாள் காந்திமதி. முகம் சாந்தமாக அவளின் குணத்தை பிரதிபலிப்பது போல இருக்கும். அடர்வான நீள முடி சாட்டையாய் தொங்கும்.. நிச்சயதார்த்தன்னைக்கு காந்திமதி மாமனாரின் காலில் விழுந்தாள். “சரோசா சரோசான்னு கெடந்தான் அந்த நகுலேன்… காந்தி பொறந்ததுலேர்ந்து எம் மவனுக்கு கட்டிக்கிறேன்.. கட்டிக்கிறேன்னு கெடந்து குதிச்சுச்சு அந்த பொம்பள… இப்ப என்னாச்சு பாத்தியா..?” கொஞ்ச நேரம் விழுந்து கிடந்து பார்த்து விட்டு எழுந்துக் கொண்டாள் காந்திமதி.

சுந்தரம்; காந்திமதியின் புருசன் ஆனான். கல்யாணம் முடிந்த மறுநாளே ரொம்ப கண்டிப்பாக சொல்லி விட்டான். “;மாமன்.. கீமன்னு ஒறவுக் கொண்டாடிக்கிட்டு அங்கிட்டு போற வளக்கம் வச்சுக்கிட்டீன்னா கால ஒடைச்சுடுவேன்..”

துரைராசுவிற்கும் கல்யாணம் முடிந்தது. அவன் மனைவி சிவப்பாக அழகாக இருந்தாள். படித்த குடும்பம். வேலை பார்க்கிறாள். வெளியூரிலேயே தங்கி விட்டனர். அழகம்மாளின்; சின்னம்மா மகளை ராசதுரைக்கு கட்டிக் வைத்தனர் கடையை கவனித்துக் கொள்வதும் ஒழிந்த நேரத்தில் அரசியலுமாக பக்கத்து ஊரில் மாமியார் வீட்டிலேயே தங்கி விட்டான் ராசதுரை. இருவருக்குமே பெண்ணும், பையனுமாக இரண்டு குழந்தைகள்.

ராசதுரையின் மனைவி காந்திமதியை விட சுமாரா தான் இருப்பா. ஆனாலும் ராசதுரை ‘செல்லாயி.. செல்லாயி..’ன்னு உருகுவான். சுந்தரம் மாதிரி கத்த மாட்டான். தொட்டதுக்கெல்லாம் கை நீட்ட மாட்டான். பத்து வயசுல ஒரு பையனும்;, ஏழு வயசுல ஒரு பையனும் இருந்தாலும் காந்திமதி இன்னமும் ‘வௌரங்கெட்டவளே..’ன்னு பாட்டு வாங்கிட்டு தான் இருக்கா..

தஸ்புஸ்ஸென்ற ஆங்கில பேச்சுக்களோடு மம்மியை சுற்றி சுற்றி வந்தன துரைராசின் பெண்ணும், பையனும். ராசதுரையின்; வாரிசுகளுக்கோ பெரியப்பாவின் வாரிசுகளை பார்க்கும் போது கண்களில் அன்னிய தன்மை தெரிந்தது. “ஏய்.. கம்.. கம்.. நம்ம எல்லாரும் ஹைட் அண்ட் சீக் வெளையாடுலாமா..?” தொரைராசுவின் மகன் கேட்டு விட சட்டுன்னு அக்காகிட்ட வந்தான் ராசதுரையின் மகன்.. “ஏய்.. என்னாடி சொல்றான் அவன்..?” “ஒளிஞ்சுக்கற வெளாட்டு வெளாடுலாமான்னு கேக்றான்னு நெனைக்குறேன்;…” “நீயும் வாடீ.. அவன் பேசறதே புரிய மாட்டேங்குது…” “நா வர்ல்ல.. நீ போயி வெளாடு.. நான் அஞ்சாப்பு படிக்கிறேன்ல்ல.. பெரிய புள்ளதானே.. நான் வெளாண்டா அம்மா திட்டும்..” கிட்டத்தட்ட அதே வயதுடைய துரைராசின் மகள்; மகனுடன் சில்லுண்டிகள் சேர ‘ஒளிஞ்சுக்கிற வெளாட்டு’ விளையாடினார்கள். ஓடி வந்து தன் வீட்டு திண்ணையில் ஒளிந்துக் கொண்ட துரைராசுவின் மகளை தடவி உச்சி முகர்ந்தாள் காந்திமதி. “லீவ் மீ ஆன்ட்டீ.. வாய்ஸ் கேட்டா அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க..” திமிறிக்கொண்டு கட்டிக்கடியில் உட்கார்ந்தாள் அந்த சிறுமி.

நேரமாகிக் கொண்டிருந்தது. “சீமைலேர்ந்து சீமானும் மைசூர்லேர்ந்து மகாராசாவும் வர்றாங்களாக்கும்.. ஆளாளுக்கு ஒக்காந்திருந்தா யாரு வேல பாக்கறது.? சீக்கிரம்.. பொணத்த எடுக்க ஏற்பாடு பண்ணுங்க.. முடிச்சுப்புட்டு அததுங்க வூட்டுக்கு போவ வேண்டாமா..?” கூட்டம் கூடவும் பெரிசின் குரலும் கூடுதலாக இருந்தது. காலியாக்கி வாசல்புரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்க்குடங்களில்; நீர் சேந்தி வர ஆட்கள் தயாராயினர்.

கூட்டத்தோடு கூட்டமாக தொலைவில் உட்கார்ந்துக் கொண்டாள்; காந்திமதி. சுந்தரம் இழவு விழுந்த சேதியைக் கேட்டதும் வெளியேறியவன் தான். இன்னும் வரவில்லை. நல்லவேளை மூக்கன் இப்படி ‘வுளுந்து கெடந்தது’ இவளுக்கு வசதியாக போய் விட்டது. மெல்ல நகர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக இணைந்துக் கொண்டாள்

வேட்டித்துணியை பந்தலாக்கி நீர் சேந்தி வந்தனர் மகன்களும் பேரன்களும். “தண்ணீ எடுத்துக்கிட்டு வர்ற இவ்ளோ நேரமா…? சட்டுபுட்டுன்னு குளிப்பாட்டி சாங்கியத்த ஆரம்பிங்க..” பெருசு இல்லேன்னாலும் சரிப்பட்டு வராது. நகுலன் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கடைசியாக குளிக்க வைக்கப்பட்டார். அரைப்படிஉழக்கில் இருந்த நல்ல விளக்கை சாணத்தோடு எடுத்து பிணம் இருந்த இடத்தில் வைத்தாள் ஒரு பெண்மணி.

பனிக்காலமானதால் சீக்கிரமே இருட்டு கவிழ ஆரம்பித்தது. “வெள்ள காடா துணி எங்க…? ஒருவர் கத்தினார். காடா துணியால் உடல் முழுவதும் நன்கு சுற்றப்பட்டது. நுனியை கிழித்து கால்களுக்கு கட்டுப் போட்டார் ஒருவர். கட்டிலிருந்து விலகியதும் வாயை திறந்தவாறு கோரமாக இருந்தது பிணத்தின் முகம். “யோவ்.. மொதல்ல மூஞ்சிய கட்டுப்பா..” பிணம் தயாராகி வீட்டுக்கு நேரே வெளியே வைக்கப்பட்டது.

ஒவ்வொருவராக பிணத்தை சுற்றி வந்து வாய்க்கரிசி இட்டனர். “கும்பல் போடாதீங்கம்மா… கொஞ்சம் நவுந்து நின்னுக்கிட்டீங்கன்னாதா சாங்கியம் செய்யறதுக்கு நல்லாருக்கும்… ஏற்கனவே இருட்டிக் கெடக்கு…” பெரிசு கத்தவும் கூட்டம் சற்று நகர்ந்துக் கொடுத்தது. பெண்கள் சற்றே அழகம்மாளை விட்டு நகர்ந்திருக்க ஆசுவாசுமாக நிம்மதியாக அழுதாள் அழகம்மாள். இப்போது அவளது கண்களில் கண்ணீர் வந்திருந்தது. ‘என்னத்த பண்ண போறேன்.. நீயில்லாம என்னாத்தைய்யா பண்ண போறேன்..’ சன்னமான வார்த்தைகள் ஒப்பாரியின்றி வந்தது.

பேரன்மார்கள் கையில் நெய்பந்தம் கொடுக்கப்பட்டது. பிணத்தின் கைகள் இருக்கும் இடத்தில் வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டது. “மருமவளுங்கள கூப்டுங்க.. மகனுங்க பேரபுள்ளங்க எல்லாரும் வாங்க.. சீதேவி வாங்குணும்..” சாங்கியம் செய்துக் கொண்டிருந்தவர் அழைத்தார். “சீக்ரம் வாங்கம்மா.. இப்பவே இருட்டி போச்சு.. சுடுகாட்டுக்கு இன்னும் நாலைஞ்சு மைல் நடக்கணுமில்ல..” வழக்கம் போல பெரிசோட குரல் கேட்டுச்சு.

பிணத்தின் மேல் பந்தல் போட்டாற்போல் நாலு பக்கமும் நாலு பேர் ஈர வேட்டியை பிடித்துக் கொள்ள மகன்கள் மருமகள்கள் பேரன் பேத்திகள்; அனைவரும் அந்த ஈரவேட்டிப்பந்தலுக்குள் குனிந்தவாறு நெருக்கமாக வலம் வந்தனர். மூன்றாவது சுற்றில் விறுவிறுவென்று வேட்டிப்பந்தலுக்குள்ளிருந்து வெளியேறிய உருவத்தை யாரும் கவனிக்கவில்லை.

தப்பாட்டக் குழுவினர் தன் வீட்டு திண்ணை மாடத்தில் சொருகி விட்டு சென்றிருந்த விசிட்டிங் கார்டை போகிற போக்கில் கையில் எடுத்தவாறு உள்ளே சென்று பத்திரப்படுத்தினாள். “அத்தே.. பொணத்த தூக்குறாங்;க.. வெளக்குமாத்த எடு.. தேச்சு களுவுணும்..” வழக்கத்திற்கு மாறாக சத்தமாக தரையை தேய்த்;தாள்; காந்திமதி.

ழூழூழூ

(ளாயnஅயவாi1995@டiஎந.உழஅ)

Series Navigationநசுங்கிய பித்தளைக்குழல்மரணத் தாள்
author

கலைச்செல்வி

Similar Posts

5 Comments

  1. Avatar
    Sivakumar N, New Delhi says:

    மிக அருமை.. பந்தமும் பாசமும், இன்றைய சூழலும் இழையோடுகின்றது…

  2. Avatar
    ஆத்மா says:

    கிராமத்தின் வாசம் படர்ந்த இனிய கதை… வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *