புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-13 ம.​பொ.சி​

This entry is part 26 of 27 in the series 30 ஜூன் 2013

Mylapore_Ponnuswamy_Sivaganam

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com 

13. சாத​னைகள் ப​டைத்த ஏ​ழை

மூன்று,,,மூன்று,,,மூன்று,,, அட என்னங்க,,,மூனு மூனுன்னு ​சொல்லிக்கிட்​டே வர்றீங்க,, ஆமா நீங்கதான் மூன்று எழுத்துல முடியும்னு ​சொன்னீங்க. நானும் என்​னென்ன​மோ ​பேருகளச் ​சொல்லிப் பாத்துட்​டேன் நீங்க எதுவு​மே இல்​லைங்குறீங்க..அதுதான் நான் மூனுமூனுன்னு ​சொல்லிக்கிட்​டே வர்​ரேன்..அப்பவாவது எனக்கு ஞாபகத்திற்கு வருதான்னு பாப்​போம்..ம்.ம்.ம்.ஞாபகத்துக்கு வரமாட்​டேங்கு​தே… நீங்கதான் விவரமாச் ​சொல்லுறது.. ​சொல்லுங்க.. சரி…சரி.​சொல்லிட​ரேன் ​பேசாமக் ​கேளுங்க..

மூன்றுக்கும் தமிழுக்கும் ஒரு ​நெருங்கிய ​தொடர்பு இருக்கு ​தெரியுமா? அட அமாங்க.. முதற்​​பொருள், கருப்​பொருள், உரிப்​பொருள் எனப் ​பொருள்கள் மூன்று. மா, பலா, வா​ழை என்ற முக்கனிகள். ஆணவம், கன்மம், மா​யை என்ற மும்மலங்கள். இயல், இ​சை, நாடகம் என்ற மூன்று தமிழ். ​​சேரர், ​சோழர், பாண்டியர் என்ற மூ​வேந்தர்கள் இப்படிச் ​​சொல்லிக்கிட்​டே ​போகலாம். இந்தமாதிரி வரக்கூடிய ஒவ்​வொரு மூன்றும் ஏ​தோ ஒரு வ​கையில முக்கியத்துவம் வாய்ந்த​வை. அ​தே மதிரிதான் வ.உ.சி. ​டி.​கே.சி., உ.​வே.சா. ராஜாஜி, அண்ணா இந்தவரி​சையில அடுத்து வரக்கூடிய முக்கியமானவங்க யாருன்னு ​தெரியுமா? அவர்தான் அந்த மூன்​றெழுத்து அறிஞர் ம.​பொ.சி. மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.

ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை, வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டு. மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத்தான் இருக்கும்.

இது என்ன? ஒருத்தர வருணிச்சுக்கிட்​டே ​போறீங்கன்னு நீங்க நினைக்கலாம். சில​பே​ரைப் பத்தி சில இடங்கள்ல ​சொல்லி​யே ஆகணும். இந்த இடத்துல ம.​பொ.சி​யைப் பத்தி ​சொல்லித்தான் ஆக​வேண்டும். இவர் வேறு யாரைப் போலவும் இல்லாமல் பல கோணங்களிலும் புதுமை படைத்தவர். இவர் செல்வந்தரல்ல! மிக மிக ஏழை.

வளமையான குடும்பத்தில் பிறந்து, வாய்ப்பும் வசதியும் நிரம்பப்பெற்றதன் பயனாகப் பல பெருந்தலைகளோடு பழக்கம் வைத்துத் தலைவனானவர்கள் பலர். கல்வியில் சிறந்து பட்டம் பெற்று, புகழ் பரவிநின்றதன் பயனாகப் பொது வாழ்க்கையிலும் தலையிட்டு முன்னேறியவர்கள் பலர். பெருந்தலைகளின் உதவியால் கைதூக்கி விடப்பட்டு பிரபலமானவர் சிலர். இப்படி எதுவும்  இல்லாமல், மிகமிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வறுமை ஒன்றையே சொத்தாகக் கொண்ட ஒருவர், ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்க முடியாத சூழலில், தான் பிறந்த குடியினரின் குலத்தொழிலான கள்ளிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எதிர்ப்பைத் தனது கள் எதிர்ப்பினால் ஏற்படுத்திக் கொண்டு திண்டாடிய ஒரு தொழிலாளி தான் ம.​பொ.சி.

1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் பொன்னுசாமி கிராமணியாருக்கும் – சிவகாமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவர்தான் ம.பொ.சியை உருவாக்கியவர். இவர் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள், பாடல்கள் இவைதான் இவரை மிகப்​பெரிய சாத​னையாளராஉருவாக்கியது. ம.​பொ.சிக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம். பிந்நாளில் ஞானப்பிரகாசமாக விளங்குவார் என்று எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ? பெற்றோரிடம் இவருக்கு அதிகமான பக்தி, அதிலும் அவரது அன்​னையா​ரை ம.​பொ.சி. கடவுளாக​வே நி​னைத்தார். இவரும் படிக்கத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால் உடன் பிறந்த வறுமை, இவரால் புத்தகம் வாங்கக்கூட முடியாமல் மூன்றாம் வகுப்பிலிருந்து துரத்தப்பட்டார். ஆனாலும் அன்னை கொடுத்த கல்வி, அவரது ஆயுளுக்கும் பயன்பட்டது.

இள​மையில் வறு​மையின் காரணமாக அச்சகத்தில் அச்சுக் ​கோர்க்கும்​தொழிலாளியாக ம.​பொ.சி.தனது வாழ்வி​னைத் ​தொடங்கினார். அவரது விடாமுயற்சியினால் இலக்கியங்கள் பலவற்​றைச் சிறப்பாகக் கற்றார். தனது தாயின் மீது மிகுந்த அன்பு ​கொண்டிருந்த தால் இவர் தமது இயற்​பெய​ரை மாற்றி தாயின் ​பெயரின் முதல் பகுதி​யையும் தன் ​பெயரின் முதல் பகுதி​யையும் இ​ணைத்துச் சிவஞானம் என்று ​வைத்துக் ​கொண்டார். இது​வே நி​லைத்து நின்றுவிட்டது.

ம.​பொ.சி. காந்திஜி, ராஜாஜி இவர்களைப் பின்பற்றி மதுவிலக்குக் கொள்கையில் மிக உறுதியாக இருந்த காரணத்தால் இவரது உறவினர்கள் இவரை வெறுத்து ஒதுக்கினர். இவ​ரைத் தங்களது இனத்திலிருந்து ஒதுக்கி ​வைத்து விட்டனர். ம.​பொ.சி. இத்த​கைய சூழலிலும் நாட்டின் முன்​னேற்றத்​தையும் நாட்டு மக்களின் முன்​னேற்றத்​தையும் மட்டு​மே நினைத்தார், குடிப்பழக்கத்தினால் அழிந்து போய்க்கொண்டிருக்கும் ஏழை எளியவர்களை நினைத்தார், நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளையர்களை எப்படி விரட்டுவது என்று எண்ணமிட்டார். பதினைந்து ஆண்டுகள் வசித்துவந்த இவர்களது ஓலைக்குடிசை ஒருநாள் தீப்பற்றிக்கொண்டது. இவரது ஆழ்ந்த இறை நம்பிக்கைதான்  இவரைக் காப்பாற்றியது.

திருமணமும் பணியும்

1928-ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் ஆயிற்று. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த இளம் மனைவி கூற்றுவனுக்கு இரையாகி விட்டார். இனி தேசப் பணிதான் நமக்கு என்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்டுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். என்றாலும் பெற்றோர்கள், உறவினர்களின் வற்புறுத்தலால் 1937-அம் ஆண்டில் தனது 31-ஆம் வயதில் தனது மாமன் மகளான 17 வயது ராஜேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார்.

அன்றைய பிரபலமான தேசபக்தரும், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களில் ஒருவரும், “தமிழ்நாடு” எனும் நாளித​ழை நடத்தி வந்தவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவிடம் ம.​பொ.சி.  அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு தொழிலாளர் பிரச்சினை. ம.​பொ.சி.  ​தொழிலாளர்களுக்குத் த​லை​மை​யேற்று அப்பிரச்ச​னை​யைத் தீர்க்கப் ​போராடினார். வி​ளைவு ​போராட்டம் முடிந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். த​லை​மை ஏற்றுப் போராடிய ம.பொ.சி. மட்டும் வெளியேற்றப்பட்டார்.

விதி விளையாடியது. மறுபடியும் வேலை தேடி அலையும் நிலைமை. அப்போது அவரது உறவினர் இவரைத் தன் கள்ளுக்கடையில் கணக்கு எழுத அதிக ஊதியமாக நாற்பத்​தைந்து ரூபாய் கொடுத்து அ​ழைத்தார். ஆனால் இவருக்கு கள்ளுக்கடைக்குப் போக விருப்பமில்​லை. மீண்டும் ​வே​றொரு அச்சகத்தில் அச்சுக்கோக்கும் பணியில் பதி​னெட்டு ரூபாய் ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இவருக்கு சொத்துக்கள் என்று எதுவும் கிடையாது. மனைவியின் வழியில் வந்த ஒரு வீட்டில் இவர் வாழ்ந்தார்.

விடுத​லைப்​போரில் ஈடுபடுதல்

ம.​பொ.சியின் மிகுதியான பொது வாழ்க்கை விடுதலைப் போரில் செலவழிந்தது. இருபதாண்டு காங்கிரஸ் உறவில் இவர் ஆறுமுறை சிறை சென்றார். முதல் வகுப்பு கைதியாக அல்ல. மூன்றாம் தர குற்றவாளிகளுடன் வாழும் ‘சி’ வகுப்பு கைதியாகச் சி​றை​ சென்றார். கடைசிக் காலத்தில் இவரது புகழ், அந்தஸ்து இவை உயர்ந்த காலத்தில்தான் இவருக்கு ‘ஏ’ வகுப்பு கிட்டியது.

ம.​பொ.சி. கைதாகி அமராவதி சிறையில் இருந்த காலத்தில் உடல் நலம் குன்றி, உயிருக்குப் போராடும் நிலைமைக்கு வந்து விட்டார். சிறையில் இவருடன் இருந்த பல தலைவர்களும் இவருக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். வி.வி.கிரி அவர்கள் இவருடன் சிறையில் இருந்தார். அவர்தான் இவரை அவ்வூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினார். சிறையில் இவர் நடைப்பிணமாகத்தான் இருந்தார். மகாகவி பாரதியைப் போல இவரும் தனது முப்பத்தியொன்பதாம் வயதில் கிட்டத்தட்ட உயிரை விட்டுவிடும் நிலைமைக்கு வந்து விட்டார். இவரை மேலும் அங்கே வைத்திருந்தால் இறந்து போனாலும் போய்விடுவார் என்று இவரை வேலூர் சிறைக்கு மாற்றினர். இவர் பரோலில் வீடு சென்றபோது இவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் உடல் மெலிந்து, முகத்தில் மீசை மட்டும்தான் இருந்தது.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி இவர் சிறை செல்லும்போது இவரது எடை 119 பவுண்டு. வேலூர் சிறையில் 1944-ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்த​போது இவரது எடை 88 பவுண்டு. அங்கிருந்து இவர் மீண்டும் தஞ்சை சிறப்பு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவர் கிட்டத்தட்ட இறக்கும் நி​லைக்கு வந்து விட்டார். அதனால் இவரை உடனடியாக விடுதலை செய்து சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டனர்.

தஞ்சை சிறையிலிருந்து குறுக்கு வழியாகத் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இரவு 10-30 மணிக்குக் கிளம்பும் இராமேஸ்வரம் போட்மெயிலில் ஏற்றிவிட இருவர் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுத் தூக்கிக்கொண்டு போகும் போது அரை நினைவிலிருந்த இவருக்கு,  “ஐயோ பாவம்! ஏதோ ஒரு அனாதை பிணம் போலிருக்கிறது”  என்று யாரோ சாலையில் போனவர் சொன்னது காதில் விழுந்ததாம். என்ன கொடுமை? பாத்தீங்களா! இவரு மட்டுமல்ல இவ​ரைப் ​போன்று நாட்டிற்காகப் பாடுபட்ட பலருக்கும் இந்தக் ​கொடு​மைதான் அன்று நிகழ்ந்தது, உடல்​நிலை சரியில்லாத சூழலில் மறுநாள் சென்னை எழும்பூருக்கு இவரை அழைத்துச் சென்றனர். ம.​பொ.சி. சி​றையில் பட்ட துன்பங்கள் ​சொல்லில் வடிக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் அதிகமான துன்பங்க​ளை அனுபவித்தார்.

1928-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை விடுதலைப் போரில் கலந்து கொண்டு, ஆறு முறை சிறைத் தண்டனை பெற்றார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாச காலத்​தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராதவயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வாட்டி வதைத்தது.

​போராட்டங்கள்

ம.​பொ.சி. 1946- ஆம் ஆண்டு நவம்பரில் தமிழரசுக் கழகம் நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட​நேரத்தில், ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்.

அதில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி ஆந்திரத்துக்கு போகாமல் தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம்​கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

பணிகள்

உள்ளாட்சி மற்றும் சட்டமன்றப் பணிகள்

ம.​பொ.சி. சென்னை மாநகராட்சி (1948-55) ஆல்டர்மேனாகவும், சட்டமன்ற மேலவை (1952-54) உறுப்பினராகவும், சட்டமன்றப் பேரவை (1972-78) உறுப்பினராகவும்,  சட்டமன்ற மேலவை (1978-86) (அக்.) தலைவராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.

பல்கலைக்கழகப் பணிகள்

ம.​பொ.சி. ​பெரிய சாத​னையாளருங்க. ​தெரியுமா? படித்தது மூன்றாவது மட்டும் ஆனால் பல்க​லைக்கழகத்தில் பல பதவிகளில் இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். அவர் வகித்த பதவிகள் குறித்துக் ​கேட்டால் மயக்க​மே வந்துவிடும். ​கேளுங்க… சென்னைப் பல்கலைக் கழக செனட் சபை (1952-54) உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு (1972-76) உறுப்பினர், மதுரைப் பல்கலைக்கழக செனட் சபை (1967-69) உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் சபை (1978) உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக செனட் சபை உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகப் பல்வேறு ஆய்வுக்குழுக்களின் தலைவர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் – தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழு உறுப்பினர் (1983-86) என்று பல ​பொறுப்புகளில் இருந்து சிறப்பாப் பணியாற்றினார். ​மேலும், சென்னை, மதுரைப் பல்கலைக் கழகங்களின் சார்பில் ஆறு முறை அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

“கிராமணி குலம்” (1934-37) மாதமிருமுறை, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் “பாரதி” மாதப் பத்திரிகை (1955-56), “தமிழ் முரசு” (1946-51), “தமிழன் குரல்” (1954-55), “செங்கோல்” (1950-1995) ஆகிய பத்திரிக்​கைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். ​மேலும் இவர் தமிழி​சைப் பணி, நூலகப் பணி என்று பல்​வேறுவிதமான பணிக​ளைச் ​செவ்வ​னே ​செய்தார்.

வறு​மை​யை நி​னைத்துக் ​கொண்​டே இருந்திருந்தா இவரது திற​மை ​வெளிப்பட்டிருக்குமா? அல்லது இத்த​னை சாத​னைக​ளைத்தான் அவரு ​நிகழ்த்திக் காட்டியிருக்க முடியுமா? வறு​மை த​டையில்​லை என்பது இதிலருந்து ​தெரியுதுல்ல. ம.​பொ.சி. வறு​மைக்கு வறு​மை​யைக் ​கொடுத்தார். “இடும்​பைக்கு இடும்​பைப் படுப்பர்” என்ற திருக்குறளுக்கு இவ​ரே சான்றாகத் திகழ்ந்தார்.

சிலம்புச்​செல்வர்

ம.​பொ.சி. தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது ‘தமிழரசுக்கழக’ மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

ம.பொ. சிவஞானம் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் இடையே ஒரு சமயம் பெரிய தகராறு ஏற்பட்டது. ம.பொ.சிக்குப் பெண் குழந்தை பிறந்தபோது, அதற்கு ‘மாதவி’ என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயரை அவர் மனைவி எதிர்த்தார். சிலப்பதிகாரத்தில் மாதவி பரத்தை என்று சொல்லப்பட்டிருப்பதால், அது நல்ல பெயர் இல்லை என்பது மனைவியின் வாதம். ம.பொ.சி தம் சிலப்பதிகார ஞானத்தை மனைவியிடம் காட்டி, மாதவி கண்ணகி போல கற்புக்கரசி என்று சொல்ல முடியா விட்டாலும், ஒழுக்கமானவளே என்று வாதாடினார். மனைவி மூன்று நாட்கள் பட்டினியாகச் சத்யாக்கிரகம் செய்து பார்த்தார். அதற்கும் சிலம்புச் செல்வர் விட்டுக் கொடுக்கவில்லை. கடைசியில் ம.பொ.சிக்குத் தான் வெற்றி! மகளுக்கு மாதவி என்றே பெயரிட்டார்கள்.                ம.​பொ.சிக்குச் சிலம்புச் ​செல்வர் என்ற ​பட்டம் வழங்கப்பட்டது எத்த​னை ​பொருத்தம்.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு செனட் உறுப்பினராக ம.பொ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உறுப்பினர் என்ற முறையில் ம.பொ.சி. அந்த விழாவுக்குச் செல்ல வேண்டும். அந்த விழாவுக்குச் செல்லும்போது பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து கொள்ள வேண்டும். நண்பரான செங்கல்வராயனிடம் தம்முடைய தர்மசங்கடத்தைக் கூறினார். ம.பொ.சியை கவலைப்பட வேண்டாம் என்று அபயமளித்தார் செங்கல்வராயன். உடனே எட்டுமுழம் வேஷ்டியைக் கொண்டு ம.பொ.சி. பஞ்சகச்சம் கட்டிவிட்டார். கருப்பு கவுனையும் மாட்டினார். தோற்றம் மாறியது. தம்முடைய அந்த தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்தார் ம.பொ.சி. தமிழ் பண்புக்கோ பழக்க,வழக்கத்துக்கோ சற்றும் ஒத்துவராத இந்த கறும்பூத உடையை நான் அணிய விரும்பவில்லை. செனட்டர் பதவியை பல்கலைக்கழகத்தினர் பறித்துக் கொண்டால் கூட நான் கவலைப்படப் போவதில்லை…” என்று கூறிய ம.பொ.சி அதற்குப் பிறகு செனட் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளவே இல்லை. தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒவ்வாத எந்த ஒன்​றையும் ம.​​பொ.சி. அவர்கள் ​செய்வதற்கு உடன்படவில்​லை. எப்​போதும் தமிழராக, தமிழ்ச் ​செல்வராக​வே இருந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி சான்றாக அ​மைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளங்கோவடிகள் விழா நடத்தியதும், சிலப்பதிகார மாநாடு கண்டதும் தமிழரசுக்கழகம் எனத் தன்னமைப்புக்குப் பெயர் சூட்டிக் கொண்டதும், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் கட்டபொம்மனையும், வ.உ.சி.யையும், திருவுருக்களாக முன் வைத்ததும், தன் அமைப்புக் கொடியில் மீன், புலி, வில் மூன்றையும் பொறித்துக் கொண்டதும் ம.பொ.சி.யின் தமிழ்த் தேசிய உணர்தலுக்கான சான்றுகளாகும்.

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

ம.​பொ.சிக்கு 1950-ஆம் ஆண்டில் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது
1966-ஆம் ஆண்டில் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூல் சாகித்திய அகாடமியின் பரிசைப் பெற்றுள்ளது, 1972-ஆம் ஆண்டில் குடியரசுத்           த​லைவரிடம் “பத்மஸ்ரீ” விருது பெற்றார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம், பாரதி சங்கம் ஆகியவற்றிடம் தமிழ்த் தொண்டிற்காக வெள்ளிக் கேடயங்கள் பெற்றார். 1976-ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தாரால் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் விருதும் ம.​பொ.சிக்கு  வழங்கப் பெற்றன. 1976-ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த முத்தமிழ் விழாவில் அன்​றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால்  ம.​பொ.சிக்கு ‘இயற்றமிழ்ச் செல்வம்’ என்ற பட்டம் வழங்கப்பெற்றது.

கல்வித் துறையில் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் வகையில் “யுனெஸ்கோ” சார்பில் இவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
‘டாக்டர்’ பட்டம் – சென்னைப் பல்கலைக் கழகத்தாலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாலும் வழங்கப் பட்டது (1981-82). 1985-ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘பேரவைச் செல்வர்’ என்ற பட்டம் ம.​பொ.சிக்கு வழங்கப் பட்டது.

சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு,  இளங்கோவின் சிலம்பு,  வீரக்கண்ணகி,  நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை),   மாதவியின் மாண்பு,  கோவலன் குற்றவாளியா?,  சிலப்பதிகாரத் திறனாய்வு,  சிலப்பதிகார யாத்திரை உள்ளிட்ட 137 நூல்க​ளை ம.​பொ.சி. அவர்கள் எழுதி எழுத்துலகில் ​மே​தையாகச் சாத​னை ப​டைத்தார். பார்த்தீர்களா மூன்றாம் வகுப்பு மட்டு​மே படித்த ம.​பொ.சி. மிகப்​பெரிய சிந்த​னையாளரா இருந்திருக்காரு. தன்​னைத்  தா​னே வளர்த்துக் ​கொண்ட சுயம்புவாக ம.​பொ.சி. திகழந்தார். “தன்​னை உயர்த்துவான் தான்” என்ற முது​மொழி இவருக்கு மிகவும் ​பொருத்தமானதாக அ​மைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்த​கைய மாமனிதராக சாத​னைச் சான்​றோராகத திகழ்ந்த ம.​பொ.சி.  நெடுநாள் வாழ்ந்தார். மூன்றாம் வகுப்புப் படித்திருந்தாலும் டாக்டர் பட்டம் இவரைத் தேடி வந்தது. இத்த​கைய சிறப்புப் ​பெற்ற இவர் 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் நாள் தனது 89 -ஆம் வயதில் காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உயிர் நீத்தார். தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாடடிற்காக வாழ்ந்து தமிழாக இன்றும் ம.​பொ.சி வாழ்ந்து ​கொண்டிருக்கின்றார். ம.​பொ.சி மூன்​றெழுத்து. அ​தைப்​​போன்று தமிழ் மூன்​றெழுத்து. தமிழ் உள்ளளவும் ம.​பொ.சி ​பெயர் என்றும் வரலாற்றில் என்றுமிருக்கும்.

வறு​மை என்று ​சோம்பி இராது தன்னா​லே​யே முயற்சி ​செய்து சாத​னைகள் ப​டைத்த மிகப்​பெரிய மனிதராகிய ம.​பொ.சி. அவர்களின் வரலாறு நாம அ​னைவருக்னும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அ​மைந்துள்ளது. இப்ப ​தெரிஞ்சுக்குங்க.. ஓடுற ஆறுமாதிரி இருக்கணும்: ​தேங்கிக் கிடக்கிற சாக்க​டையா மாறிடக் கூடாதுங்கறத..இனி ஏன் சும்மா இருக்குறீங்க… ​வேத​னையா இருக்காதீங்க …​கொஞ்சம் மனசு ​வைங்க…​வெற்றி ஒங்களுக்குத்தான்..அப்பறம் என்ன..இலக்​கை ​நோக்கிப் பயணமாகுங்க..

ஒரு குழந்​தைக்கு ஒன்ற​ரை வயதிருக்கும்​போ​தே தந்​தை இறந்தார். குடும்ப வறு​மை…அவரு தனது தாய்மாமாவின் வீட்டில் தாயுடன் வாழ்ந்தார்… வறு​மை.. இருந்தாலும் முயன்று படித்தார்.. எதிலும் ​நேர்​மையா இருந்தாரு…வறு​மைய ​நெனச்சு எந்தச் சூழ்நி​லையிலும் அவரு வருத்தப்பட​வே இல்​லை… உண்​மை, அன்பு, ​நேர்​மை என்ற ​கொள்​கைகளுக்​கேற்ப வாழ்ந்தார்…அவ​ரைத்​தேடி மிகப்​பெரிய ​பொருப்புகள் வந்தன…ஒரு காலத்துல ஒரு நாட்டின் த​லை​மை அ​மைச்சராக வந்துவிட்டார்…அவரத் ​தெரியுதுங்களா? என்னங்க கண்டுபிடிங்க பாக்கலாம்…​யோசிச்சிப் பாருங்க… இன்னும் குறிப்புகளக் ​​கொடுக்கணுமா?…அடுத்தவாரம் வ​ரை சற்று ​பொறுத்திருங்க….     (​

Series Navigationஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    தேமொழி says:

    அன்பு முனைவர் சி.சேதுராமன்,

    உங்களது “புகழ் ​பெற்ற ஏ​ழைகள்” தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சுவையாகச் செல்கிறது.
    இவ்வாரம் ம.பொ.சி அவர்களைப் பற்றிய கட்டுரையில் தி. பரமேசுவரியின் வரிகளை அப்படியே எடுத்தாளுவதை தவிர்த்திருக்கலாமே (http://maposi.blogspot.com/2010/12/blog-post.html).

    அன்புடன்
    ….. தேமொழி

  2. Avatar
    Dr.G.Johnson says:

    வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புவரை மட்டுமே பள்ளி சென்ற ஓர் ஏழைச் சிறுவன் தன்னுடைய பெற்றோரின், குறிப்பாக அன்னையின் ஊக்குவிப்பால் உயர்ந்து இன்று நாடு போற்றும் மேதையான ம.பொ .சி .யின் வாழ்க்கைக் குறிப்புகளை மிக அழகாகத் தந்துள்ளார் முனைவர் சி .சேதுராமன் அவர்கள்.

    அவர் காங்கிரஸ் கட்சியிலும், சுதந்திரப் போராட்டதிலும் அதிக ஈடுபாடு கொண்ட தேச பக்தராக விளங்கியுள்ளார். பின்பு தமிழ் உணர்வும் சிலப்பதிகாரத்தில் அதிக ஆர்வமும் கொண்ட தமிழ் இலக்கிய அறிஞராகவும் திகழ்ந்துள்ளார். தமிழ் இனத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக அரசியலில் அவரும் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி போராடினார்.

    ஆனால் அப்போது ( இப்போதும்தான் ) வீசிய திராவிட அலையால் அக் கட்சிக்கு அதிக செல்வாக்கு இன்றிப் போனது. அரசியலில் அவர் அதிகம் பிரகாசிக்க முடியாவிடினும், தமிழ் கூறும் நல்லுலகில் சிலம்புச் செல்வர் ம .பொ .சி. என்றென்றும் வாழ்வார் என்பது திண்ணம்.அதற்கு இக் கட்டுரையே பகர்கின்றது சான்று!

    இது போன்ற தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை தமிழ் மாணவர்களின் பாட நூல்களில் இடம்பெறச் செய்தால் அது நம்முடைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் தன்முனைப்புக்கு உந்துகோலாகவும் இருக்குமன்றோ?

    வாரந்தோறும் திண்ணை வழியாக ” புகழ் பெற்ற ஏழைகள் ” தொடர்ந்து எழுதிவரும் முனைவர் சி .சேதுராமன் அவர்களின் இம் முயற்சி பாராட்டுதலுக்குரியது ! வாழ்த்துகள் முனைவர் அவர்களே!….டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *