காவல்

This entry is part 15 of 25 in the series 7 ஜூலை 2013

 

                                                டாக்டர் ஜி.ஜான்சன்

புருநோவுக்கு வயது பத்து . எங்கள் வீட்டில் பிறந்தது. அதன் தாய் ஸ்நோவி..சமீபத்தில்தான் காணாமல் போனது.இரண்டுமே ஒரு அடிக்குக் குறைவான உயரம் உடையவை. ஸ்பிட்ஸ் ( spitz ) ரகத்தைச் சேர்ந்தவை.வெண் பனி நிறத்தில் தாயும் , சாம்பல் நிறத்தில் மகனும் விளையாடுவதும், சண்டைப் போடுவதும் எங்களுக்கு நல்ல பொழுது போக்காகும்.

பால் மறந்த புருநோவுக்கு அதன் தாயும் மறந்துபோனது.இது பற்றி நான் தீர பல நாட்கள் யோசித்து முடிவு தெரியாமல் போனது.

பொதுவாக நாய்களுக்கு மோப்ப சக்தி அபாரம் என்றுதான் நாம் எல்லாரும் அறிவோம். அதனால் தான் காவல் துறையினர்கள் கூட மோப்ப நாய்களைப் பயன்படுத்தி துப்பு துலக்கி குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கின்றனர்.

பண்டைய வெனிஸ் நகரக் ( Venice ) கதையில்கூட மார்க்கோ போலோ ( Marco Polo ) கீழை நாடுகளின் பிரயாணம் மேற்கொண்டு சீனா வரை  சென்று வயதாகித் திரும்பியபோது உறவினர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவனின் நாய் அவனை அடையாளம் கண்டுகொண்டு வாலை ஆடி அவன்மீது பாய்ந்து வரவேற்றது என்று படித்துள்ளோம்.

நன்றிக்கு உதாரணமாக நாயைத்தான் கூறுகின்றோம். மகாகவி பாரதிகூட

” வாலைக் குழைத்து வரும் நாய்தான்

அது மனிதர்க்குத் தொழனடி பாப்பா .” என்று பாடியுள்ளதையும் அறிவோம்.

இந்த நன்றி குணம் கூட அதன் மோப்ப சக்தியுடன் தொடர்புடையதோ என்றும் எண்ணியதுண்டு.கண்களால் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டாலும், அதை நினைவில் வைத்துக்கொள்ள மூலையில்தான பதிவாகிறது. மோப்ப சக்தியும் நன்றி உணர்வும் அதன் மூலையில் அதிகமாகவே இருப்பதாகவும் தோன்றியது.

நான் நாயின் மூளை பற்றி இப்படியெல்லாம் சிந்தித்தபோது ஒரு விசித்திரமான எண்ணமும் தோன்றுவதுண்டு. நாய்களின் மூளையை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் நினைவாற்றலையும் ( ஞாபக சக்தி ) நன்றியுணர்வையும் உண்டு பண்ணக்கூடிய இரசாயனத்தைக் கண்டுபிடித்து , அதற்கு நாய் மூளை திரவம் ( dog brain extract )  என்று பெயெரிட்டு ,அதை ஞாபக மறதி , படிப்பில் பின்தங்கும் மாணவ மாணவிகள், நன்றி மறுப்பவர்கள் ஆகிய வகுப்பினருக்கு ஊசி மூலம் புகுத்தினால் அவர்கள் நாய்கள் போல் நன்றியுள்ளவர்களாகவும் , ஞாபக சக்தி மிக்கவர்களாகவும்.யாரையும் எளிதில் மறக்காதவர்களாகவும் மாற்ற முடியுமா என்பதே நான் மேற்கொள்ள விரும்பும் நாய்கள் ஆராய்ச்சி.

குறிப்பாக பிள்ளைகளுக்கு இந்த ஊசியைப் போட்டால் அவர்கள் பிற்காலத்தில் வயதான பெற்றோரை மறந்து உதாசீனம் செய்யாமல் நன்றி உள்ளவர்களாகவும் இருப்பார்கlள் .

நாய்களை வைத்து இப்படி ஆராய்ச்சி செய்வதை வேடிக்கை என்று எண்ணாதீர்கள். இன்று உலகெங்கிலும் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் இன்சுலின் ஊசியை பண்டிங் ( Banting) ) எனும் கனடா நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளார் நூறுக்கணக்கான நாய்களின் கணையத்தை ஆராய்ந்துதான் இன்சுலின் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றார

நாயின் மூளை பற்றிய ஆராய்ச்சியை இத்துடன் முடித்துக்கொண்டு நான் சொல்ல வந்த கதைக்கு வருவோம்.

பால் மறந்த புருநோ எப்படி தன் தாயை மறந்தது என்று நான் ஆராய்ந்த வேளையில் அவை இரண்டும் எப்படி அவ்வப்போது சண்டை போட்டு கடித்துக் கொள்வதையும், கொஞ்ச நேரத்தில் ஒன்று கூடி தரையில் மல்லாக்கப் படுத்து விளையாடுவதையும் கண்டு இரசிப்பதுண்டு.

புருநோவுக்கு சின்ன பிள்ளைகள் மாதிரி ஒரு குணம் உண்டு. அது பொறாமை. எல்லாமே அதற்குதான் முதலில் கிடைக்க வேண்டும்.இல்லையேல் அதற்கு கோபமும் சோகமும் வந்துவிடும். உடன் சென்று ஒரு மூலையில் பொய்ப் படுத்துவிட்டு பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்.அதில் ஏக்கப் பார்வைப் புலப்படும்.

நான் வேலை முடிந்து இல்லம் திரும்பியதும் இரண்டும் முண்டியடித்துக்கொண்டு என்னிடம் ஓடிவரும். அப்போது புருநோவைதான் முதலில் தட்டிக் கொடுக்க வேண்டும்., மரந்துபோய் ஸநோவியை தொட்டுவிட்டால் போதும். அவ்வளவுதான். கோபம் வந்துவிடும். வாலைச் சுருட்டிக்கொண்டு, காதுகளைத் தொங்க விட்டு மூலையில் சென்று படுத்துவிடும்.

உணவு தரும்போதும் அப்படித்தான். முதலில் தட்டை புருநோவுக்குதான் வைக்கவேண்டும். இல்லையேல் உணவைச் சாப்பிடாமல் பட்டினி கிடக்கும்!

பிஸ்கட் தந்தாலும் புருநோவுக்குதான் முதல் பிஸ்கட்டை நீட்டணும் . இல்லையேல் திரும்பிப் பார்க்காமல் போய்விடும்.

சில வேளைகளில் இரண்டும் வீட்டு கூடத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும். ஸ்நோவி என்று அழைத்தால் புருநோதான் வந்து நிற்கும். அதை வர விடாமல் தடுக்கும். அப்படி ஸ்நோவி முந்திக்கொண்டு வந்துவிட்டால் அதைத் தள்ளிவிட்டு அருகில் வந்து உரசும்.

புருனோவின் பொறாமை குணம் கண்டு நான் வியந்ததுண்டு.

நான் இரவு பத்துக்கு வேலை முடிந்த திரும்பும் பொது ஐந்து வெள்ளிக்கு பொறித்த கோழிக் கறி வாங்கி வருவேன்.கார் உள்ளே நுழைந்ததும் இரண்டும் குரைத்துக்கொண்டு குதித்து குதித்து ஓடிவரும். கார் வீதி முனையில் திரும்பும் போதே அதன் சத்தம் தெரிந்துவிடும்.அவ்வளவு கூர்மையான காதுகள்! கேட்டைத் திறந்ததும் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு வெளியில் ஓடி ஒரு சுற்று சுற்றியபின் திரும்பும்.இது வாடிக்கையானது.

காரின் கதவு திறக்காமலேயே உள்ளே வைத்திருக்கும் கோழிக் கரியின் வாசமும் தெரிந்துவிடும். கறியைத் தட்டில் போட்டதும் சிரித்துக்கொண்டு முழுங்குவது போன்று தோன்றும்.

இந்த இருவர் பற்றிய தகவல்கள் போதும் என்று கருதுகிறேன்.இனி புருனோ கதைக்கு வருவோம்.

ஒரு முறை நான் தொடர்ந்து ஒரு மாதம் இரவு வேலையில் இருந்தேன். இரவு கிளினிக்கில் தூங்கிவிட்டு விடிந்த்துதான் வருவேன்.

இரவில் மனைவி தனியாக படுக்கை அறையில் படுத்திருப்பாள். இவை இரண்டும் கால் மாட்டிலும் தலை மாட்டிலும் படுத்துக்கொண்டு அவளுக்கு காவல் காப்பது வழக்கம்.பெரும்பாலும் நான் தங்கும் நாட்களில் ஸ்நோவியை மட்டுமே படுக்கை அறையில் அனுமதிப்பது உண்டு.புருநோவை வெளியில் விட்டு விடுவேன். அது இரவெல்லாம் வீட்டைச் சுற்றிக்கொண்டு வேறு நாய்கள் அப்பகுதிக்கு வர நேர்ந்தால் குரை த்துக்கொண்டு எங்களின் உறக்கத்தைக் கெடுப்பது வழக்கம்.

அனால் நான் இரவில் இல்லை என்றதும் படுக்கை அறையில் தங்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

ஒரு மாத இரவு வேலை முடிந்தது

முதல் நாள் இரவு .

வழக்கம்போல் வாலை ஆட்டிக்கொண்டு என் மீது பாய்ந்து பாய்ந்து விளையாடியது புருநோ .அதைப் பரிதாபமாகப் பார்த்து பெருமூச்சு விட்டது ஸ்நோவி.

இரவு பதினோரு மணிக்கெல்லாம் என் மனைவி படுக்க மாடிப் படிகளில் ஏறினாள். உடன் அவளைப் பின் தொடர்ந்தன இரண்டும்.நான் புருநோ என்று கூப்பிட்டும் பயனில்லை! அவளும் ஒன்றும் சொல்லவில்லை. இரண்டும் அறைக்குள் நுழைந்ததும் கதவை சாத்திக்கொண்டாள்.

எனக்கு தூக்கம் வரவில்லை. இரவில் விழித்திருந்த பழக்கமாகவும் இருக்கலாம். தொலைக் காட்சியில் நேரத்தை செலவிட்டேன். எனக்குப் பிடித்த சில நிகழ்ச்சிகளை மாறி மாறி சில அலைவரிசைகளில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரவு இரண்டு மணிக்கு தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, விளக்குகளை அணைத்துவிட்டு மாடிக்குச் சென்றேன்.

கதவைத் திறந்து விளக்கைப் போட்டது தான் தாமதம்!

கூர்மையான கோரப் பற்களை வெளியில் காட்டிகொண்டு கோபமாக உறுமிக்கொண்டு என்னை நோக்கி ஓடி வந்தது புருநோ !

நான் “: புருநோ ! ” என்று அதட்டியும் அது சட்டை செய்யவில்லை!

அதன் கடி படாமல் கதவை அடைத்து விட்டு நான் கீழே ஓட வேண்டியதாயிற்று!அதன் எஜமானி அம்மாளின் அறையில் இரவில் எனக்கு என்ன வேலை என்று எண்ணிவிட்டது காவலில் கண்ணும் விழிப்புமாய் இருந்த என் புருநோ !

( முடிந்தது )

 

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *