மழையின் பாடல்.

This entry is part 23 of 25 in the series 7 ஜூலை 2013

மூலம்:கலீல் ஜிப்ரான்

தமில் : புதுவை ஞானம்.

 

சொர்க்கத்திலிருந்து துளித்துளியாய்

இறைவனால் இறக்கி விடப்படும்

வெள்ளிக் கோடுகளாக இருக்கிறேன் யான்

என்னைக் கையேற்று வளம் சேர்க்கிறது இயற்கை

வயல்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும்.

பூங்காக்களுக்கும் அழகூட்டு முகத்தான்

விடியலின் தேவதையான இஷ்தாரின் மணிமுடியில்

இருந்து பறிக்கப்பட்ட அழகிய முத்து யான்.

மலைகள் சிரிக்கின்றன நான் அழும் வேளையில்

மலர்கள் குதுதூகலிக்கின்றன மகிழ்ச்சியால் .

 

என்னை யான் தாழ்த்திக் கொள்கையில்

எல்லாமும் உயர்வடைகின்றன.

 

வயல்வெளிகளும் வான்மேகமும் காதலர்கள்

இருவர்க்கும் இடையில். தூது செல்லும் தோழி நான்

ஒருவரின் தாகத்தைத் தணிக்கும் நான்

மற்றவரின் நோயைத் தணிக்கிறேன்.

இடியோசையின் பலத்த முழக்கம் அறிவிக்கிறது எனது வருகையை

வானவில்லின் வண்ணத் தோற்றம் விளம்புகிறது எனது புறப்பாட்டை .

 

கிறுக்குப் பிடித்த மூலகங்களின் பாதத்தில் பிறந்து

போற்றப்படாத சாவின் சிறகுகளில் முடிவடையும்

பூவுலக வாழ்வு போல இருக்கிறேன் நான்.

 

கடலின் ஆழத்தில் இருந்து கிளம்பும் நான்

காற்றின் வேகத்தில் உப்பி உயருகிறேன்.

தாகத்தில் தவிக்கும் வயலைக் கண்டுவிட்டால்

தாழ்ந்து இறங்குகிறேன் இலட்சோப லட்சம் துளிகளாய்

தழுவித் தூவுகிறேன் மலர்கள் மீதும் மரங்கள் மீதும்.

யன்னல்களைத் தொடுகிறேன் மெல்லிய விரல்களால்

எனது  வருகையெனும் வரவேற்பு கீதம் எல்லாரும் கேட்கலாம்

ஆனால் உணர்வு மிகு சிலருக்கே விளங்கும் அதன் பொருள்.

காற்றின் வெப்பம்தான் பிரசவிக்கிறது என்னை

ஆனால் வெப்பத்தை தான் சாகடிக்கிறேன் முத்லில்.

ஆண் இடமிருந்து பெறும் ஆற்றலால் பெண்மை

அவனைத் தோற்கடிப்பது போல.

 

கடலின் பெரு மூச்சு யான்

வயல்களின் சிரிப்பு யான்

சொர்க்கத்தின் விழி நீர் யான்.

நேசமெனும் ஆழ்கடலின் பெருமூச்சாய்

ஆன்மாக்களின் வண்ணமிகு வயல் வெளியாய்

நினைவுகள் எனும் சொர்க்கத்தின் முடிவறா விழித்துளியாய்

இறங்குகிறேன் யான் விண்ணில் இருந்து.

Series Navigation‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்கவிஞன்
author

புதுவை ஞானம்

Similar Posts

Comments

  1. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    கலீல் ஜிப்ரான்
    கல்லிலும் காற்றிலும்
    உயிர் பிசைந்து எழுதிய
    கவிதைகள்.
    மண்ணின் அடியிலும்
    மரகத யாழின் பச்சை நரம்புகள்
    மீட்டிக்கொண்டிருப்பது
    அவருக்கு கேட்கிறது.
    நிலவு
    அவர் வார்த்தைகளின் கன்னத்தை
    வந்து வந்து
    வருடிவிட்டுப்போகிறது.

    அன்புள்ள புதுவை ஞானம் அவர்களே!
    உங்கள் தொடர்
    ஒரு தேனாறு.
    தொடரட்டும் இனிக்கின்ற வரிகள்
    வாழ்த்துக்கள்

    அன்புடன் ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *