மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி

This entry is part 4 of 18 in the series 14 ஜூலை 2013
                                                                டாக்டர் ஜி.ஜான்சன்
          மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே.           தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .இது வயது அதிகரிக்கும்போது மேலும் அதிகமாகிறது. உதாரணமாக 60 வயதைத் தாண்டிய பெண்களிடையேயும், 70 வயதைத் தாண்டிய ஆண்களிடையேயும் தற்கொலை முயற்சகள் அதிகம் காணலாம். இதற்கு குடும்ப, சமுதாய, பொருளாதார ,காரணங்களைக் கூறலாம்.

15 முதல் 34 வயதுடையோரிடையே உண்டாகும் மரணங்களில் தற்கொலை இரண்டாம் இடத்தில உள்ளதாக கருதப் படுகிறது.

கடுமையான மனச்சோர்வுக்கு ( depression ) உள்ளானோர் இறுதியில் தற்கொலையால் இறந்து போகின்றனர்.

ஸ்கீசோப்ரென்யா ( schizophrenia ) எனும் உளச் சிதைவு மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களில் 20 முதல் 50 சத விகிதத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அவர்களில் 9 முதல் 13 சதா விகிதத்தினர் வெற்றியும் காண்கின்றனர்.( வெற்றி என்பது இறந்து போவதில் வெற்றி! )

தற்கொலை முயற்சியை அதிகரிக்கக்கூடிய சில காரணங்கள் வருமாறு :

* ஆண்கள்

* அதகமான வயது

* தனிமை

* அன்புக்குரியவரின் மறைவு

* காதலில் தோல்வி

* மண முறிவு

* வேலை இழப்பு

* வேலை ஓய்வு

* சமுதாய சீர்கேடு

* போதை மருந்துக்கு அடிமை

* மதுவுக்கு அடிமை

* கடுமையான மன அழுத்தம் , இதர மன நோய்கள்

* கடும் வலியை உண்டுபண்ணும் வியாதிகள்

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோருக்கும் அதில் வெற்றி பெறுவோருக்கும் இடையில் உள்ள வேற்றுமைகள் வருமாறு:

* தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் 35 வயதுக்குக் குறைவானவர்கள்.

* தற்கொலையால் உயிர் நீப்போரின் வயது பெரும்பாலும் 60 வயதைத் தாண்டியவர்கள்.

* தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் அதிகமானோர் பெண்கள். ஆனால் உயிர் நீப்போர் அதிகமானோர் ஆண்கள்.

* தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரில் 90 சத விகிதத்தினர் விஷம் அருந்துகின்றனர்.

* தற்கொலையால் மரணம் அடைந்தோரில் பெரும்பாலானோர் மன நோயால் பாதிக்கப் பட்டவர்கள்.

தற்கொலையில் ஈடுபடுவோர் பற்றி நண்பர்களும் உறவினரும் சில தகவல்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.அவை வருமாறு:

* தற்கொலை முயற்சிக்கான காரணம் ஏதும் உள்ளதா?

* தற்கொலை முயற்சி திட்டமிட்டதா அல்லது திடீர் என நடந்ததா?

* தற்கொலை பற்றி ஏதும் குறிப்பு வைத்திருந்தாரா?

* தற்கொலை பற்றி யாரும் அறியாதவாறு முன்னெச்சரிக்கை எடுத்துள்ளாரா?

* தற்கொலை செய்துகொள்ள வீட்டைத் தவிர வேறு இடத்தை நாடியுள்ளாரா?

* அவர் திரும்பவும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாரா?

* அவருக்கு மனநோய் ஏதும் உள்ளதா?

* குடும்ப உறுப்பினர்கள் யாராவது தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதுண்டா?

* தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு குணப்படுத்த முடியாத வேறு நோய் உள்ளதா?

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு போதை மருந்து, தூக்க மருந்து அல்லது மது பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா?

மேற்கூறியவற்றில் ஆம் என்ற விடை கிடைத்தால், பாதிப்புக்கு உள்ளானவர் நன்கு கவனிக்கப்பட வேண்டும். முடிந்தால் மனநோய் மருத்துவரிடம் அவரைக் கொண்டு செல்ல வேண்டும் .இந்த கேள்விகளை குடும்ப உறுப்பினர் மூலமாகவோ நண்பர்களின் மூலமாகவோ கேட்டு அறிந்து கொள்வதும் நல்லது.

குறிப்பாக மன அழுத்தம், மனச் சோர்வு, இதர மன நோய்கள் உள்ளவர்களை மன நல மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதனை செய்து அவர்களை நன்கு கண்காணிப்பது குடும்பத்தினரின் பொறுப்பாகும் .

( முடிந்தது )

Series Navigationவிடுப்புபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *