மங்கோலியன் – II

This entry is part 27 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

நரேந்திரன்

genghis-khan-bust
உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் பிடிக்கப் புறப்பட்ட அலெக்ஸாண்டர் பாபிலோனில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது விசுவான படைவீரர்களே அலெக்ஸாண்டரின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, அவர் கைப்பற்றிய நாடுகளை பங்கு போட்டுக் கொண்டனர். ஜூலியஸ் சீசரின் நண்பர்களான அவரது செனட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரை ரோமானிய செனட்டில் வைத்தே குத்திக் கொலை செய்தார்கள். தனது போரின் மோசமான தோல்விகள் மற்றும் அழிவுகள் காரணமாக கசந்த மனதுடன் நெப்போலியன் யாராலும் எளிதில் அனுகவியலாத ஒரு தீவில் தனிமையில் வாடி, மனம் புழுங்கிச் செத்துப் போனார்.

ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் செங்கிஸ்கான் தனது 81-ஆம் வயதில், குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும், விசுவாசப் படைவீரர்களும் சூழ அவரது கூடாரத்தில் அமைதியான முறையில் மரணமடைந்தார். 1227-ஆம் வருடத்திய கோடைகாலத்தில், தன்னை மிகவும் அலைக்கழித்த, மஞ்சளாற்றின் மேற்புறம் அமைந்த டான்குட் (Tangut) நாட்டின் மீதான படையெடுப்பின் போதே அவரது மரணம் நிகழ்ந்தது. மங்கோலியர்களின் கூற்றுப்படி ‘செங்கிஸ்கான் சொர்க்கத்திற்கு ஏகினார்’.

செங்கிஸ்கான் இறந்து பல காலம் வரையில் அவரது மரணம் குறித்த காரணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த காரணத்தால் பல வதந்திகள் உருவாகி நாட்டில் உலவின. அவற்றுள் எவையும் வரலாற்று பூர்வமான அல்லது ஆதாரபூர்வமான தகவல் எதனையும் தரவில்லை.

மங்கோலியாவின் முதல் ஐரோப்பிய தூதரன Plano-Di-Carpini செங்கிஸ்கான் இடி தாக்கி மரணமடைந்ததாக எழுதி வைத்திருக்கிறார். செங்கிஸ்கானின் பேரனான குப்ளாய்கானின் காலத்தில் மங்கோலியாவில் தொடர் பயணம் செய்த வெனிஸ் நகரத்து வணிகரான மார்கோ-போலோ எழுதியதின்படி, செங்கிஸ்கானின் முழங்காலில் தைத்த ஒரு அம்பின் காரணமாக மரணமடைந்தார்.

முகம் தெரியாத எதிரிகள் அவருக்கு விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக இன்னும் சிலர் எழுதினர். அவர் இறப்பதற்கு முன் போரிட்டுக் கொண்டிருந்த டான்குட் நாட்டு அரசன் அவருக்கு செய்வினை செய்த்தாக இன்னொரு வதந்தி உலவியது. இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி உலவிய ஒரு வதந்தியின்படி, செங்கிஸ்கானால் கைப்பற்றப்பட்ட டான்குட் நாட்டு அரசி தனது பிறப்புறுப்பில் ஒரு கத்தியை ஒளித்து வைத்திருந்ததாகவும், கான் அவளுடன் உடலுறவு கொள்ள முயல்கையில் அவரது ஆணுறுப்பு சேதமடைந்து அதனால் அவர் இறந்ததாகவும் சொல்லப்பட்டது. எது எப்படியோ, உலகை தனது வலிமையால் அதிரச் செய்த செங்கிஸ்கான் இறந்து போனார். அவ்வளவுதான்.

செங்கிஸ்கானின் பூத உடல் அவரது படைவீரர்களால் மங்கோலியாவிற்கு ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது. அவர் பிறந்து வளர்ந்த நாட்டில் எவரும் அறியாத ஓரிடத்தில் மிக ரகசியமாக, எவ்வித ஆடம்பரங்களோ, கட்டடங்களோ, கோவிலோ, பிரமிடோ, ஏன் ஒரு சிறிய அடையாளக் கல்லோ இல்லாமல் புதைக்கப்பட்டது.

மங்கோலிய நம்பிக்கையின்படி இறந்து போன ஒருவரின் உடல் மிக அமைதியான நிலையில் இருக்க வைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவ்வுடலில் வாழ்ந்த ஆன்மா அங்கு வாழப்போவதில்லை. இனிமேல் அந்த ஆன்மா, இறந்து போன மனிதரின் ஆத்ம பதாகையில் மட்டுமே வாழும்.

இப்படியாக பேரரசர் செங்கிஸ்கான் அவரது மரணத்திற்குப் பிறகு பரந்து, விரிந்த மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளிப் பரப்பில் புதையுண்டு காணாமல் போனார்.

இன்றுவரை அவர் புதைக்கப்பட்ட இடம் எவருக்கும் தெரியாது. எப்போதும் போல அது குறித்தான வதந்திகளே பஞ்சமில்லாமல் உலவிக் கொண்டிருக்கின்றன.

மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற ஒரு கதையின்படி, செங்கிஸ்கானின் படைவீரர்கள் அவரது உடலை மங்கோலியாவிற்கு எடுத்து வந்த 40 நாட்களில், அந்த உடலுடன் பயணம் செய்து வந்த அத்தனை மனிதர்கள் மற்றும் மிருகங்களைக் கொன்று விட்டனர். அத்துடன் அவரது உடலைப் புதைத்த இடத்திற்கு மேலாக 800 குதிரைவீரர்கள் முன்னும், பின்னும் நடந்து அந்த இடத்தை சமன் செய்தனர். அதன்பிறகு மேற்கண்ட 800 வீரர்களும் வேறு சில படைவீரர்களால் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொன்றவர்களும் வேறொரு படையணியால் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறாக புதைத்த இடம் குறித்த ரகசியம் காக்கப்பட்டது என்கிறது அக்கதை.

அவ்வுடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து பல் நூறு சதுரமைல் பரப்பளவுள்ள இடம் மங்கோலிய ராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டது. செங்கிஸ்கானின் குடும்பத்தினர் தவிர வேறெவரும் அங்கு நுழையத்தடை விதித்ததுடன் அவ்வாறு நுழைபவர்களைக் கொல்வதற்காக விஷேஷ பயிற்சி பெற்ற வில் வீரர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் வரை அந்தப்பகுதி ஒரு தடை செய்யப்பட்ட இடமாக (Ikh Khorig – The Great Taboo), வெளியார் யாரும் நுழைய முடியாத இடமாக வைக்கப்பட்டிருந்தது. அவரைக் குறித்தான எல்லா ரகசியங்களும் அவரது நாட்டினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மங்கோலியப் பேரரசு சிதைவடைந்து, மங்கோலியாவின் சில பகுதியள் வெளி நாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நேரத்திலும் மங்கோலியப்படை தங்களது முன்னோர்களால் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த பகுதிகளுக்குள் அவர்களை அனுமதிக்காமல் போராடி விரட்டியது. செங்கிஸ்கான் புதையுண்டிருக்கலாம் என்ற பகுதியின் அருகில் ஒரு பவுத்த கோவிலோ அல்லது நினைவிடமோ அல்லது வேறெதுவும் கட்டிடங்களோ கட்ட பின்னாட்களிலும் அனுமதி மறுக்கப்பட்டே வந்தது.

*

செங்கிஸ்கானின் ஆன்மா அவரது மக்களுக்கு உத்வேகத்தையும், விடுதலையையும் அளிக்குக் என்று நம்பபட்டது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டு மங்கோலியர்கள் அதனை மதிக்காமல் இருக்கப் பழகிப் போனார்கள். மங்கோலியா சோவியத் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

மங்கோலியாவை ஆண்ட ரஷ்யர்களும் செங்கிஸ்கான் புதைக்கப்பட்டதாக அறியப்படும் இடத்தை ரகசியமாக பாதுகாத்து வந்தனர். எனினும் அதனை மங்கோலியர்களைப் போல The Great Taboo என்று அழைக்காமல் ‘தடைசெய்யப்பட்ட இடமாக’ அறிவித்தனர். அந்த இடம் சோவியத் தலைமையின் நேரடி ஆளுமையின் கீழ் வைக்கப்பட்டது. அந்தப் பகுதியின் நுழைவாயிலில் ராணுவ டாங்கிகள் நிறுத்தி வைக்கப்ட்டன. மேலும் ஒரு பெரும் MiG விமான தளமும் கட்டப்பட்டு அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ரகசிய அணு ஆயுதங்களும் அந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

மங்கோலியர்களின் மீது எரிச்சலில் இருந்த ஸ்டாலின், செங்கிஸ்கானின் கல்லறை இருக்கும் பகுதிகளை பீரங்கிப் பயிற்சிக் களமாக அறிவித்து அதன்படியே நடத்தப்பட்டது.

*

மங்கோலியர்கள் உலகை ஆக்கிரமித்த நேரத்தில் அவர்கள் புதிய தொழில் நுட்பங்களையோ அல்லது புதிய மதங்களையோ அல்லது புதிய விவசாய முறைகளையோ அல்லது இலக்கியங்களையோ உலகிற்குக் கண்டுபிடித்து அறிவிக்கவில்லை. மாறாக தாங்கள் ஆக்கிரமத்த நாடுகளில் இருந்த புதிய விஷயங்களை உலகமெங்கும் பரப்புவதற்கு காரணமாக அமைந்தார்கள். மிக மிகச் சில புத்தங்களும் மற்றும் நாடகங்களும் மட்டுமே மங்கோலிய மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன.

மங்கோலிய பழங்குடித் தொழிலாளர்கள் நெசவு செய்யவோ, புதிய ஆயுதங்கள் தயாரிக்கவோ, சட்டி பானைகள் புனையவோ அல்லது குறைந்த பட்சம் நல்ல ரொட்டி தயாரிக்கவோ அறியாதவர்களாக இருந்தார்கள். சீனர்களைப் போல வெள்ளைக் களிமண்ணை உபயோகித்து கலைப் பொருட்கள் தயாரிக்கவும், ஓவியங்கள் வரையவும் மங்கோலியர்கள் அறிந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு நிரந்தரமான கட்டிடங்கள் எதனையும் அவர்கள் கட்டியதில்லை. இருப்பினும் மங்கோலிய ராணுவம் பல முன்னேறிய கலாச்சாரங்கள் கொண்ட நாடுகளை மிக எளிதாக வெற்றி கொண்டார்கள். பின் அங்கிருந்த தொழில் நுட்பங்களை உலகில் பரப்பினார்கள்.

செங்கிஸ்கானால் கட்டப்பட்ட ஒரே நிரந்தர கட்டமைப்பு பாலங்கள் மட்டுமே. படையெடுத்துச் செல்கையில் வழியில் இருந்த் கோட்டைகள், கொத்தளங்கள், பெரும் சுவர்கள் செங்கிஸ்கானால் தகர்த்து எறியப்பட்டாலும், அவன் தாண்டிச் சென்ற ஒவ்வொரு நீர் நிலைகள், ஆறுகள் மீது ஏராளமான பாலங்களைக் கட்டிய ஒரே ஆக்கிரமிப்பாளர் செங்கிஸ்கானாகத்தான் இருக்க முடியும். வழியில் குறுக்கிட்ட ஆறுகள், கால்வாய்களை மிக விரைவாகத் தாண்டி தன் படைகள் செல்வதற்கும், ஆயுத தளபாடங்களைக் கொண்டு செல்வதற்குமான ஒரே காரணத்தால் நூற்றுக் கணக்கான பாலங்கள் செங்கிஸ்கானால் கட்டப்பட்டன.

தங்கள் காலடி பட்ட இடங்களிலிருந்த, மூடிக் கிடந்த சந்தைகளைத் திறந்துவிட்டு புதிய, சுதந்திரமான சந்தைகளை உருவாக்கினார்கள். அதன்மூலம் புதிய சிந்தனைகள் உலகில் பரவவும் அவர்கள் வகை செய்தார்கள் என்றால் மிகையில்லை.

மங்கோலியர்கள் ஜெர்மனிய சுரங்கத் தொழிலாளர்களை சீனத்திற்கும், சீன மருத்துவர்களை பாரசீகத்திற்கும் கொண்டு சென்றார்கள். இதுவே உலகின் பல பாகத்திற்கும் இதுவரை இல்லாத தொழில் நுட்ப அறிவு பரவ காரணமாகியது. முதன் முதலில் தரைவிரிப்பு – Carpet – உபயோகிப்பதனை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மங்கோலியர்களே. எலுமிச்சை, காரட் போன்றவற்றை சீனத்திற்கும், அங்கிருந்து நூடில்ஸ், சீட்டாட்டம், டீ போன்றவற்றை மேற்குலகிற்கும் அறிமுகப்படுத்தினார்கள்.

தாமிர வேலை செய்பவர்களை பாரசீகத்திலிருந்து மங்கோலியாவின் வறண்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்கள் மூலம் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிக் கொண்டார்கள். ஆங்கிலேய பிரபுக்களை ராணுவத்தில் வேலைக்கமர்த்தி அவர்களை மொழிபெயர்ப்பாளர்களாக்கினார்கள். சீனக் கைரேகை முறைகளை பாரசீகத்திற்கு அறிமுகம் செய்தனர்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் சீனத்தில் அமைக்க பண உதவி செய்ததுடன், பாரசீகத்தில் பவுத்த மத மடாலயங்களும், இஸ்லாமிய குரானிக் பள்ளிகள் அமைக்கவும் அவர்கள் உதவினர். கலாச்சாரங்களை அழிக்காமல் அதனைப் பேணும் முயற்சி மங்கோலியர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது அவர்கள் நீண்ட காலம் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் வெற்றிகரமாக இருக்க உதவியது. செங்க்கிஸ்கானுக்குப் பின் வந்த அவரது வாரிசுகளும் அதனையே தங்களின் கொள்கையாகக் கொண்டனர்.

மறைமுகமான வகையில் பல புதிய தொழில் நுட்பங்கள் உருவாகவும் அவர்களின் பங்கு இருந்தது. உதாரணமாக சீனப் பொறியாளர்களுடனும், பாரசீக மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களை ஒன்றிணைத்து துப்பாக்கிகள் தயாரிப்பதற்கு முன்னோடிகளாக இருந்தார்கள். அவர்கள் இல்லாவிடில் உலகில் துப்பாக்கி தயாரிப்பதற்கு மிக நீண்ட காலமாகியிருக்கலாம்.

செங்கிஸ்கானின் பேரனான குப்ளாய்கானின் ஆட்சிக்காலத்தில்தான் முதன் முதலாக காகிதத்தில் தயாரிக்கப்பட்ட பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பணத்தின் துணை கொண்டு பேரரசின் அத்தனை பகுதிகளிலும் தொடக்கப்பள்ளிகள் கட்டப்பட்டு அனைவருக்கும் கல்வி என்ற முறை செயல்பாட்டிற்கு வந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கான துல்லியமான நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டன. துல்லியமான உலக வரைபடங்கள் வரையப்பட்டது மங்கோலியர்களின் காலத்தில்தான்.

*

ஐரோப்பாவை ஆண்டுகொண்டிருந்த பிரபுக்களை விரட்டியடித்த மங்கோலியர்கள் அங்கு நிலவும் வறுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். தங்களின் கீழிருக்கும் சீன, இஸ்லாமிய நாடுகளை விடவும் நிலவிய வறுமையைக் கண்டு, தாங்கள் பிடித்த ஐரோப்பி நாடுகளின்பால் ஆர்வமிழந்து அங்கிருந்து கிளம்பிசி சென்றார்கள். அந்த நாடுகளை தங்களின் பேரரசின் கீழ் இணைக்க முயலவில்லை என்பது ஆச்சரியமான செய்தி. இருப்பினும் அவர்கள் காலத்தில் வந்த ஐரோப்பிய வெனிஸ் நகர வணிகர்களின் உதவியுடன் போப்புடனும், பிற ஐரோப்பிய நாடுகளுடனும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து நல்லுறவு பேண முயன்றார்கள்.

இவ்வாறு பெறப்பட்ட புதிய தொழில் நுட்பங்களாலும், வியாபாரத்தில் பெற்ற செல்வத்தாலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி வேகம் பிடித்தது. அச்சிடும் கலையையும், வெடி மருந்து தயாரிப்பதையும், திசைகாட்டி மற்றும் அபாகஸ் போன்ற கணித நுட்பங்களையும் மங்கோலியர்களின் உறவால் பெற்ற ஐரோப்பா மிக வேகமாக முன்னேறியது. மங்கோலியத் தாக்கத்தின் விளைவாக புதிய விவசாய முறைகளும், உடைகள், போரிடும் கலை, வணிகம், கலை, இலக்கியம் என பல திசைகளிலும் ஐரோப்பா முன்னேறியது.

Series Navigationபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33பூரண சுதந்திரம் யாருக்கு ?
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    திரு நரேந்திரனின் ” மங்கோலியன் ” அருமையான பகிர்வாகும்…வாழ்த்துகள்…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *