சாம்பவி
கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது கை மேல் படவில்லை. மனுஷருக்கு அரைமணி முன்பாகவே விழிப்பு தட்டி விடுகிறது. இரண்டு நிமிஷம் தாமதமான காபிக்கு பாக்கியத்திற்கு விழும் டோஸ் இல்லை. ‘ வை “ என்றொரு அதட்டல் மட்டும். இந்த அதட்டல் ஒன்றுதான் 50 வருட வாழ்வின் அடையாளம். மிரட்டல் ஒருவகை சாயல் என்றால் பணிதல் இன்னொரு வகை சாயல். ஒரு நீண்ட பூரண வாழ்வில் பணிதல் எவ்வளவு இயல்போ மிரட்டலும் அத்தனை இயல்பு. மிரட்டல் இல்லாமல் அவரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவர் மட்டுமில்லை மொத்த ஆண்களின் ஆளுமை இந்த மிரட்டல்தான். ‘ செய்து கொடுப்பாயா ? “ கிடையாது. “செய் “ என்பதுதான் இன்று வரை.
பாக்கியம் எழுந்து கூடத்திற்கு வந்தாள். மூத்தவன் சுந்தரத்தின் அறையில் விடிவெள்ளி எரிந்து கொண்டிருந்தது. மருமகள் சியாமளா எழுந்திருக்க அரைமணி நேரமாவது ஆகும். பேரன்கள் இருவரும் டிவியில் நடு இரவு வரை கிரிக்கெட் மாட்ச் பார்த்த அலுப்பில் தூங்கி கொண்டிருந்தனர். மொத்த ஊரே ஆறரைக்குதான் விழித்து கொள்கிறது. 50 வருட ஆச்சரியத்தில் இந்த பின் தங்கிய விழிப்பு இன்னமும் தொடர்கிறது. பாக்கியத்திற்கு பிறந்த வீடு மதுரை .காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வாசல் பெருக்கி,தெளித்து,கோலம் போட்டு தெருமுனை பிள்ளையார் கோவிலில் விளக்கேற்றி விட்டு வரவேண்டும். இந்த ஊரில் மாமியாரே ஆறு மணிக்கு மேல்தான் எழுந்திருப்பார். விளையாட்டு போல 50 வருடங்கள் ஓடிப் போய்விட்டது. சுந்தரத்திற்கே இப்பொழுது 48 வயசு. கன்ன கிருதாவெல்லாம் வெள்ளிக்கம்பிகள் ஆகத் தொடங்கி விட்டன . அகிலா இருந்திருந்தால் அவளுக்கும் 45 வயசு ஆகியிருக்கும். “ ணங் “ என்று பாறாங்கல்லில் முட்டி கொண்டது போல் வலித்தது. 45 வருட வலி.
அழிக்கதவை திறந்து கொண்டு வெளியில் தோட்டத்திற்குள் சென்றாள். கிணற்றடியில் பவள மல்லி மரத்தடியில் அவரது ஜபம் போய்க் கொண்டிருந்தது. ஆவணி மாசம் என்பதால் சூரியன் இன்னும் கிளம்பவில்லை. மூக்கு கண்ணாடி அணியாத முகம் வேறு மாதிரி இருந்தது. அப்பா தாரை வார்த்துக் கொடுக்க பற்றி கொண்ட கைகள். காலம் ஒரு சுழற்று சுழற்றி அவரது புருவ முடியை கூட விட்டு வைக்காமல் வெள்ளை அடித்து விட்டது . இருப்பினும் அந்த சாயல் மட்டும் இன்னும் மாறவே இல்லை. மாறாதோ?.
“ காபி “ என்று செருமினாள். கடைசி ஆசமனம். தாம்பாள நீரை பவளமல்லி வேர் மூட்டில் விட்டு விட்டு அவள் பக்கம் திரும்பினார். என்ன பார்வை அது. கொஞ்சம் கூட சிரிப்பை காட்டாத பார்வை.
“ ம் “என்றொரு செருமல் மட்டும்தான் பதில்.
பாக்கியலக்ஷ்மி சமையலறையில் புகுந்தாள். அடுப்புக்கு வெந்நீர் வைத்து விட்டு ஒரு தன்னிச்சை செயலாக காலெண்டர் தாளை கிழிக்க போனாள். கண்ணை நுணுக்கி இன்று என்ன நட்சத்திரம் என்று பார்க்க தேவை இல்லை.இன்று ஆவணி பூரம் . அகிலாவின் ஜன்ம நட்சத்திரம் . “மூத்தது பிள்ளை. இது பொண்ணா இருக்கட்டும் “ என்று அவர் தடவி கொடுத்த வயிறு கணன்றது. .சுமந்து நழுவ விட்ட வயிறு. வேண்டாம் ! வேண்டாம் ! இந்த பித்து பிடித்த சுழல் சுற்றி சுற்றி அவர் அருகில் கொண்டு தள்ளும்பொழுது வழக்கமாக வாங்கும் அந்த வசவை வாங்க வேண்டாம். ஒரு அலுவலக அதிகாரியின் விரைப்பான குரலில் அடுத்த முறை இந்த புலம்பல் கிளம்பவே கிளம்பாதோ என்று நடுங்க வைக்கும் வண்ணம் மிகப் பெரிய அதட்டலில் முடியும் வசவு அது. “ அசடு “ 23 வருடங்கள் ஓடி விட்டன அகிலாவை காலன் கையில் அள்ளி கொடுத்து. ஒவ்வொரு வருடமும் அகிலாவின் ஜன்ம நட்சத்திரத்தன்று அவரிடம் அசடு என்ற வசவை வாங்கிக் கொண்டுதான் நாள் முடிகிறது. இன்று அப்படி முடியக்கூடாது கடவுளே.
காபியை மேசை மேல் வைத்தாள். சமையலறை மூலையில் உள்ள மேசை. கிட்டத்தட்ட 50 வருடங்களாக இதே மேசைதான் . இதே எதிரும் புதிரும்தான். இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை அவருக்கு. சொந்த வீடு. பூர்வீக சொத்து . மனை மட்டும் இரண்டு கிரௌண்ட் .பெரிய காம்பௌண்டு . இரண்டு தனி தனி வீடுகள். ஒன்று மாடியும் கீழுமாய் வாடகைக்கு குடித்தனம் இருக்கிறார்கள். ஒன்று இவர் தாத்தா காலத்து வீடு.. இன்னொன்று இவர்கள் குடி இருக்கும் வீடு. இவருடைய சுய சம்பாத்தியம். அதிகபடியாக மாற்றல் என்றால் பதவி உயர்வு காரணமாக நாமக்கல் வரை போய் வந்ததுதான். அதுவுமே பஸ் ஸ்டாண்டில் ஸ்கூட்டரை போட்டு விட்டு இவர் மட்டும் போய் விட்டு வருவார். மற்றபடி சிரிப்பது அழுவது பட்ஜெட் போடுவது, இதோ இப்பொழுது புலம்பி கொண்டிருப்பது போல அகிலாவை பற்றி புலம்புவது எல்லாம் இந்த மேசையில்தான்.
“ இன்னிக்கு பூர நட்சத்திரம் “
சொல்லி விட்டு அவர் முகத்தை பார்த்தாள். பெற்றவர்தானே. ஏன் ஒரு கடுகளவு மாற்றம்கூட இல்லாமல் கல்லாய் ஒரு முகம்? இன்னிக்கு பூரம் என்று சொல்லும்பொழுதே பாக்கியத்திற்கு நா தழ தழத்து போகிறது .
போன வருஷம் இதே நட்சத்திரத்தை நினைவு படுத்தி விட்டு நின்ற பொழுது .” வருஷா வருஷம் ஆவணி பூரத்தன்னிக்கு சுமங்கலி ஒருத்திக்கு சாப்பாடு போட்டு தாம்பூலத்தோட புடைவை வச்சு கொடுக்கறதை விட்டுடு “ என்றார். ஏன் என்று கேட்க முடியாது.மிரட்டல்; உருட்டல்; சுள் என்று நாக்கு பொசுக்கும். இரவில் அவரே காரணம் சொன்னார். “ நாய்க்கு உடம்பில் புண் இருந்தா கால் நகத்தாலே பிறாண்டி பிறாண்டி ரண வழியை அனுபவிக்கறா மாதிரி இருக்கு நீ பண்ற காரியம்”
“ 23 வயசில் அவளை அள்ளி கொடுத்தது இல்லேன்னு ஆயிடுமா? “ அவளும் விடாமல் கேட்டாள்.
“ அதையே நினச்சிண்டிருந்தா மட்டும் அவள் திரும்பியா வரப் போறா? அசடு ”
இந்த முறை அசடு கொஞ்சம் அதிகமாக அதிகமாக வலித்தது.ரொம்ப நாட்கள் அந்த அசடை பிடித்துக் கொண்டு உழன்றாள். யாருடைய பிறப்பு யார் கையில் ? அல்லது யாருடைய இறப்பு யார் கையில்? ஆனாலும் உதைத்து வெளியில் வந்த சிசுவை பால் ஊட்டி ,சீராட்டி, அழுதால் பால் கொடுத்து, பீ மூத்திரம் துடைத்து, நிலாவை காட்டி சோறூட்டி, ஜட்டி போட்டு விட்டு, ஸ்கர்ட் மாட்டி விட்டு, பாவாடை தாவணி சுற்றி விட்டு, புடைவை கட்டி விட்டு , மாங்கல்யதாரணம் செய்து அனுப்பி தலை பிரசவத்திற்கு வந்தவளை எமன் கையில் வாரி கொடுத்ததை எப்படி மறக்க முடியும்? இதில் ப்ரக்ருதி எது? புருஷன் எது? எந்த தத்துவத்தையும் மனசு ஏற்க மறுக்கிறதே
“ திலீபனுக்கு இன்னிக்கு போல வயசு இருபத்து மூணு இருக்கும் இல்லியா? “என அவர் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். காபி குடித்து விட்டு டம்ளரை அவள் பக்கம் நகர்த்தி வைத்தார். இந்த நகர்த்தலுக்கு கூட ஐம்பது வயசாகிறது. காபி டம்ளரை அவள்தான் அலம்ப வேண்டும். காபி குடிப்பது புருஷ லட்சணம். டம்ளர் அலம்புவது ஸ்திரீ லக்ஷணம். மொத்தமாக இரண்டு நாள் கூட தாய் முலையில் அந்த பிஞ்சு பால் குடித்திருக்குமா தெரியவில்லை-.சிசு-. திலீபன் என்ற பெயர் கூட கிடையாது .பிரசவத்திற்கு பின் அகிலாவுக்கு ஜன்னி வந்தது. .உடல் தூக்கி தூக்கி போட்டது. எந்த சிகிச்சைக்கும் கட்டுப் படாமல் சிசுவை விட்டு அம்மாவை கொண்டு போனது. தொட்டில் போடுவது, நாமகரணம் எந்த குடுப்பினையும் சிசுவுக்கு இல்லை. மாப்பிள்ளை நீலகண்டன் பெயரிடப் படாத சிசுவை தூக்கிக் கொண்டு டெல்லி போய் விட்டார். ஒரு துண்டு கார்டில் குழந்தைக்கு திலீபன் என்று பெயர் இடப்பட்டது என்று கடிதம் வந்தது. இரண்டு மாதம் கழித்து நீலகண்டனின் இரண்டாவது கல்யாண பத்திரிகை வந்தது. மாப்பிள்ளை நீலகண்டன் வெறும் நீலகண்டன் ஆன பிறகு கடித போக்குவரத்தும் நின்று போனது. இரண்டு குடும்பத்துக்கும் பொதுவாக இருந்த கிருஷ்ணமூர்த்தி மாமா தவறிப் போன பின்பு இருந்த கொஞ்ச நஞ்ச தொடர்பும் விட்டு போயிற்று. இந்த மருகல் மட்டும் பாக்கியலக்ஷ்மிக்கு ஆயுசு பரியந்தம்..
‘ இன்னிக்கு பூரம் “ என்றாள் மீண்டும்.
அவரிடமிருந்து பதில் இல்லை. அவளுக்கு புரு புரு என்று வந்து விட்டது.
“ நாந்தான் 23 வருஷமா பயித்தியம் மாதிரி அகிலாவை பத்தி புலம்பறேன். கிஞ்சித்து நினைப்பு கூடவா உங்களுக்கு இல்லை? “ அவர் முன்னால் கோர்வையாக ஒரு முழு வாக்கியத்தை பேசி விட்ட ஆச்சரியம் மட்டும்தான் பாக்கியலக்ஷ்மிக்கு மிச்சம்.
ஒரே ஒரு முறைப்பு மட்டும்தான் பதில்.
மனுஷர் எழுந்து விட்டார்.
“ சித்த நில்லுங்கோ. மாடி வீட்டில புதுசா குடுத்தனம் வச்சிருக்காளே எல் ஐ சி டெவலப்மென்ட் ஆபீசர் நாராயணன் அவரோட ஆம்படையா ஜெயந்தியை கூப்பிட்டு தாம்பூலமும் புடைவையும் கொடுக்கலாம்னு இருக்கேன் “
செய் அல்லது செய்யாதே. இரண்டும் இல்லை. வழி மறிச்சு கத்தலாமா என வந்தது. டிராமா போடதே என்று ஒரே ஒதுக்காய் ஒதிக்கி விடுவார். அசடு பட்டம் நிரந்தரமாகி விடும்.
அறையிலிருந்து சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் வந்த அவரை பார்த்து ஆச்சரியமானது. இந்த நேரத்தில் எங்கே புறப்பாடு?. கண் புரையை லேசர் ஒளியில் கரைத்து ஒரு மாசம் கூட ஆகவில்லை. தினம் சட்டை பாண்ட் மாட்டிக் கொண்டு அரைமணி நேரம் போய் விட்டு வரும் வாக்கிங் கூட ஒரு மாதமாக நின்று போயிருக்கிறது . ஆனால் இந்த புறப்பாடு வாக்கிங் புறப்பாடாக இல்லையே. மயில்கண் சலவை வேட்டி சலவை சட்டை.
எங்கே புறப்பாடு என்று கேட்க முடியாது. முறைப்புதான் பதிலாக வரும் . தன் மூக்கு கண்ணாடியை தூக்கி விட்டு கொண்டு பாக்கியம் அவர் முகத்தில் பதிலை தேடினாள்
“ ஏற்காடு எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வர்றது? “
ஒரே ஒரு நூல்தான் அகப்பட்டது. இது போதாதா பாக்கியத்திற்கு? அப்புறம் இந்த ஐம்பது வருடம் குப்பை கொட்டியதற்கு என்ன அர்த்தம்? அவர் சொல்வது என்ன ? அவளே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான் . அசடு.
“” யாரு வரதுக்கு இருக்கா? வரவா எல்லாருக்கும் எப்படி வரணும்னு தெரியும்.ரொம்ப முக்கியமானவாளா இருக்கட்டுமே. நீங்க போகணுமா கூப்பிட?அதுவும் காட்ராக்ட் ஆபரேஷன் ஆன கண்ணோட? கார் எடுத்துண்டு சுந்தரம் போக மாட்டானா? “
நீளமான கேள்வி அவரை வாசல் வரை பின் தொடர்ந்தது. ஸ்விட்ச் போட்டது மாதிரி ராமன் ஆட்டோரிக்ஷா வாசலில் நின்று கொண்டிருந்தது. மொபைல் புக்கிங் சர்வீஸ் ராமனுடையது .கூட பத்தோ இருபதோ வாடகை வாங்குவான். அதிகம் போல தோன்றினாலும் ராமன் பெற்ற பிள்ளை மாதிரி பத்திரமாக கூட்டி கொண்டு போவான் . பத்திரமாக கொண்டு விடுவான்.
“ அழிக்கதவை சாத்திக்கோ . நான் அரை மணியில் வந்துடறேன் “ ஆட்டோ கிளம்பி போய் விட்டது.
இது என்ன மர்மம்? சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதே. டிராமா டிராமா என்பாரே இது எந்த விதத்தில் சேர்த்தி? இந்த 50 வருட தாம்பத்தியத்தில் இருவருக்கும் இடையில் ரகசியம் என்ற ஒன்றே கிடையாது. ஹரிசந்த்ர மகா சக்ரவர்த்தியின் வாழ்வை எல்லோராலும் வாழ முடியாதுதான் . ஆனால் கிருஹஸ்தாஸ்ரம தர்மத்தை ஒழுங்கா கடை பிடிச்சா போதாதா? தர்மத்திலேயே உசந்தது இல்லற தர்மம்னு இதிகாசம் புராணம் எல்லாம் இதைத்தானே தலையில் வச்சிண்டு கொண்டாடறது? இந்த வீடு , சொத்து சேர்த்தது விட்டது எதுவுமே வீட்டு மனிதர்களுக்கு தெரியாமல் நடந்தது இல்லை.
“ சதுர அடி இந்த பக்கமெல்லாம் 5000 ரூபாய் பக்கமா போறதாமே.” என்றாள் ஒரு நாள் அவரிடம்.
மறுப்பில்லை. எனவே அதுதான் பதில்.
“மாமனார் சொத்துன்னாலும் இதை எவ்வளவுன்னு வாங்கினாராம்? “ என்றாள் விடாமல்.
“ உனக்கு எதுக்கு இப்போ அந்த கணக்கு? “
“ சும்மா ஒரு குருட்டு கணக்கு “
“ சதுர அடி ரெண்டு ரூபாயோ மூணு ரூபாயோ கொடுத்து வாங்கினாராம். அப்போ இந்த இடம் ஊருக்கு வெளியிலயாம் .செவ்வாய் பேட்டையும் அக்ராஹாரமும் மட்டும்தான் அப்போ ஊர். “
“ எட்டயிரத்துக்கு வாங்கின இடம் இப்போ இரண்டு கோடியா வளர்ந்து நிக்கறது இல்லையா? “
“ ஆமாம் “
“ நாம அதிர்ஷ்டம் பண்ணினோமா? இல்லை சுந்தரம் அதிர்ஷ்டம் பண்ணினானா?”
அன்று பாக்கியம் தூக்கி எறிந்த எறிந்த கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
எதற்கு இந்த விஷயம் இப்பொழுது ஞாபகம் வர வேண்டும்? பாக்கியம் கதவை சாத்திக் கொண்டு உள்ளே வந்தாள்.
இன்று ஆவணி பூரம் வேறு மாதிரி ஆரம்பமாகி இருப்பது போல தோன்றியது. எப்பொழுதும் ஒரு இறுக்கத்துடனே தொடங்கும் நாளாகத்தான் இது இருக்கும்.. எந்த இடத்தில் தொட்டாலும் சிதறி விடும் நிலையில் பாக்கியலக்ஷ்மி இருப்பாள் என்பதால் எவ்வித பேச்சும் இருக்காது. முன்னேற்பாடு இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கி விடும். அகிலாவுக்கு பிடித்த அவல் பாயசம். அகிலாவுக்கு பிடித்த வாழைப்பூ உசிலி . அகிலாவுக்கு பிடித்த வெள்ளரி பச்சடி என இருபத்து மூன்று வருஷமும் இதுதான் காலத்து சாப்பாடு. மருமகள் சியாமளாவும் இருபது வருடமாக இணைந்து விட்டாள். நின்றால் , நடந்தால், அமர்ந்தால் , திரும்பினால் சமையல் அறையில் அகிலா புராணம்தான்.
“ சுந்தரத்தை விட அகிலா நன்னா படிப்பா. எந்த கணக்கு கொடுத்தாலும் ரெண்டு நிமிஷத்தில் விடையோட நிப்பா. பாட்டு பேச்சு டிராமா எல்லாத்துலயும் அவதான் முதல் .பள்ளிகூடத்தில் அகிலாவை தலயில வச்சுதான் தாங்கினா. சுந்தரத்துக்கு என்னோட ஜாடை. அகிலாவுக்கு அப்படியே அவரோட ஜாடை. அவரோட முகத்தை உத்து பார்த்த சிரிக்கறச்சே கண்ணோட ஓரத்தில சின்னதா ரெண்டு வரி கோடு இழுத்தா மாதிரி இருக்கும். அந்த வரிகளை அப்படியே அகிலா கண்ணுலயும் பார்க்கலாம். இவராவது எப்பவாதுதான் சிரிப்பார். அகிலாவுக்கு எப்பவும் சிரிச்ச முகம். சிரிப்பை அவ எடுத்துண்டு புலம்பலை எனக்கு கொடுத்துட்டு போய்ட்டா.”
“ ஜாதகக் கட்டை எடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. கிருஷ்ணமூர்த்தி மாமாவுக்கு தெரிஞ்சவான்னு நீலகண்டன் வீட்டில் பொண்ணு கேட்டு வந்து இந்த தரையில் உட்கார்ந்து அகிலா பால் வடியும் முகம் பாட்டு பாடின மாதிரி இருக்கு. ரெண்டு வாரத்தில் நிச்சயதார்த்தம் . ஒரு மாசத்தில் கல்யாணம் டெல்லியில் குடித்தனம். எம்எஸ்சி . முடிச்சிட்டு கணக்கு டீச்சரா போகணும்னு ஆசை அவளுக்கு. படிப்பு பிஎஸ்சியோட நின்னு போயிடுத்து. என்னை மாதிரியே தனக்கு இது வேணும்னு அடமா கேட்க தெரியாத ஜன்மம். ஒரு வேளை மேற்படிப்பு படிச்சு முடிச்சுட்டுதான் கல்யாணம்னு பிடிச்ச பிடியா நின்னிருந்தா இப்படி காலன் கையில் வாரி கொடுத்திருக்க மாட்டேனோ என்னவோ?”
“ அம்மா “ சுந்தரம் தோள் தொட்டு ஆறுதல் சொன்னான். பாக்கியம் புடைவை தலைப்பால் மூக்கை சிந்தினாள்.
“ ஒரே ஒரு கேள்வி மட்டும்தான் அதுவா முளைச்சு வேரூன்றி தழச்சு நிக்கறது. தர்மம்தான் கேள்வியா கிளம்பறதுன்னு நினைக்கிறேன். அந்த கேள்விக்கான பதில் கண்டு புடிச்சிட்டா தர்மம் எதுன்னு தன்னால தெரிஞ்சிடும். “ என்றாள் பாக்கியலட்சுமி.
“ என்ன கேள்வி ? என்றான் மகன்.
இரண்டாவது டோஸ் காபியுடன் மாமனாரை தேடி போன மருமகள் “ அப்பாவை காணுமே” என்று வந்தாள்.
‘ காலமே சட்டையை மாட்டிண்டு ராமன் ஆட்டோவில் ஏறி ஜங்ஷன் வரைக்கும் போயிட்டு வரேன்னு போனார். அவ்வளவுதான் தெரியும்.”
“ தனியாவா? அப்படி யாரு வராளாம் ஸ்பெஷல்லா? என்றான் சுந்தரம்.
அவன் சொல்லி முடிக்கவும் வாசலில் ஆட்டோ ரிக்ஷா வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.
அவர் மட்டும் இறங்கவில்லை. 23 , 24 வயசு மதிக்கத்தக்க ஆஜானுபாகுவாய் சுண்டி தெறிக்கும் நிறம் என்பார்களே அப்படி ஒரு நிறத்துடன் ஏதோ வடக்கத்தி ஹீரோ மாதிரி ஒரு பையனும் இறங்கினான். நேர்த்தியான ஆடை. வசீகரமான சிகை. இந்த காலத்து பசங்க மாதிரி முதுகில் ஸ்கூல் பை போல ஒன்று. அவர் அவன் கையை பிடித்திருந்தாரா அவன் அவர் கையை பிடித்திருந்தாரா தெரியவில்லை. இருவரும் உள்ளே நுழைந்தனர்.
அவராக வாய் திறக்கும் வரை வேறு யாரும் கேள்வி கேட்க கூடாது. குறுக்கே கேள்வி கேட்டால் முறைப்புதான் பதில். அந்த முறைப்பு ஆயிரம் “அசடுகளை” விட வலிமையானது. உக்கிரமானது. கூடத்தில் சோபாவில் அவனை அமரச் சொன்னார். அனைவரது பார்வையும் அவன் மேல் தழைந்தன. பார்வைகளின் ஊடுருவலை சமாளிக்க முடியாமல் அவன் நெளிவது தெரிந்தது.
நிலைமையை உணர்ந்த அவர் பாக்கியத்தை பார்த்து “ இவன் யார் தெரியறதா பாரு” என்றார்.
பாக்கியம் அவனை உற்று நோக்கினாள். உள்ளுணர்வு சொல்லிவிட்டது . இவன் கண்களிலும் சிரிக்கும்பொழுது இரண்டு வரிகள்.
‘ பாக்கியம் இவன் நம்ம திலீபன் ‘ என்றார்.
அந்த வார்த்தையை கேட்டதும் பாக்கியலக்ஷ்மிக்கு பாதாதி கேசம் ஒரு முறை நடுங்கியது. வயிற்றில் ஒரு இனம் புரியாத வேதனை. பெற்ற வயிற்றின் தகிப்பு தாளாமல் கண்களில் கண்ணீர் மள மள என பொங்கியது.
“ நம்ம திலீபனா? “ அவள் குரல் ஈரத்தில் கம்மியது.
“ ஆமாம் ” என்றார் அவர்.
தடுமாறியபடி அவன் அருகில் சென்றாள்
“ தொடலாமோ? “ என்றபடி அவன் தோள்களில் கைகளை படர விட்டாள். கைகள் நடுங்கின. அந்த ஸ்பரிசம் 23 வருட தேடலை, 23 வருட சிநேகிதத்தை , 23 வருட தாபத்தை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தது.
“ நான் உன் பேரன் பாட்டி “ அந்த ஆஜானுபாகு உருவம் எழுந்து நின்று பாக்கியலக்ஷ்மியை தழுவி கொண்டது. இரண்டு மெல்லிய வரிகள் எழ கண்கள் சிரித்தன. அந்த தழுவலை தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை. விலகினாள். ஒன்றும் சொல்லாமல் சுவாமி உள்ளுக்குள் நுழைந்தாள்.
நாள் தவறாமல் பிறந்த வீட்டு ஞாபகமாய் இருக்கும் சில்பி வரைந்த மீனாட்சி அம்மன் படத்தை பார்த்தபடி உட்கார்ந்து விட்டாள். என்ன சொல்வது ,என்ன செய்வது என்ற சிந்தனை எதுவும் இன்றி மூளை வெறுமையாக இருந்தது. துக்கம் வேதனை, ஏக்கம், வலி , சந்தோஷம் , உற்சாகம் எதுவுமே தெரியாத ஒரு மோன நிலை. அம்மா நன்றி . மனம் திடமானது. எழுந்து வெளியில் வந்தாள்.
அதன் பிறகு நடந்த எல்லாமே ஜெட் வேகத்தில் நடந்தாலும் அவன் வருகையின் காரணம் மட்டும் புரியவில்லை. வந்தவன் ஏன் அகிலாவின் ஜன்ம நட்சத்திரத்தன்று வர வேண்டும்?
“ படிச்சதெல்லாம் எங்கே? “
“டெல்லியில்”
“என்ன படிப்பு ? ”
“ குருக்ஷேத்திராவில் எம் டெக் “
“ வேலை? “
“ இப்பதான் ஒரு எம் என் சி கம்பெனியில் சேர்ந்திருக்கேன் . மாசம் ஒன்றை லக்ஷம் சம்பளம். .”
“ தமிழ் எப்படி இவ்வளவு நன்னா பேசற? ‘
“ தமிழ் என் தாய் மொழி பாட்டி. டெல்லியில் தமிழ் சங்கம் இருக்கு தெரியுமா?”
“ அகிலாவை பத்தி தெரியுமா?”
“ தெரியும் “
“ யாரு சொன்னா? “
“ அப்பா “
“ எப்போ சொன்னா?”
“ எனக்கு விவரம் தெரியற வயசு வந்த உடனே ”
“ இங்கே வரணும்னு தோணலியா? “
“ என்னோட அம்மா _இப்போ இருக்கற அம்மா அவளை வேறு எப்படியும் நினைக்கத் தோணலை._இருக்கறப்போ இங்க வரணும்னு தோணலை பாட்டி.”
“ இப்ப மட்டும் ஏன் வந்த? “
“ தாத்தா போன வாரம் என் மொபைலுக்கு கூப்பிட்டிருந்தார்.”
ஒரு வாரமாக அவரது செய்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இதுதான் காரணமா?
அவராக வாய் திறந்து சொல்ல வேண்டும்.
“ போன வாரம் கிருஷ்ணமூர்த்தி மாமாவோட பையன் கார்த்திகேயனை பாங்குக்கு போயிருக்கறச்சே பார்த்தேன். திரும்பவும் நம்ம ஊருக்கு மாற்றல் ஆகி வந்திருக்கானாம். பழைய கதை பேசிண்டிருந்தப்போ நீலகண்டன் பத்தி சொன்னான். மாப்பிள்ளை டெல்லியில்தான் இன்னமும் இருக்கார். திலீபன் நன்னா வளர்ந்து ஜம்முனு இருக்கறதா சொன்னான். போன் நம்பர் கொடுத்தான். சுந்தரத்தோட மூத்த பையன் அஸ்வின்தான் மொபைலில் நம்பர் போட்டு கொடுத்தான். நான் சேலத்திலிருந்து இன்னார் பேசறேன்னு மட்டும்தான் சொன்னேன். சட்டுன்னு புடிச்சிண்டு தாத்தா ஸௌக்கியமான்னு கேட்டுட்டான். “
புதிரின் முடிச்சு ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியது.
அவர் எழுந்து உள்ளே போனார் .பீரோ திறக்கும் சப்தம் கேட்டது.. வரும்பொழுது நகைக் கடையின் மஞ்சள் பை ஒன்றை கொண்டு வந்தார். பையிலிருந்து வெல்வெட் மூடி போட்ட பெட்டியை திறந்தார். புதுக்கருக்கு அழியாமல் மஞ்சள் நிறத்தை வாரியடித்தபடி தங்கச் சங்கிலியும், பளீர் மின்னல் வெட்டுக்களை வீசி ஒரு வைர மோதிரமும் ஜொலித்தன.
“ 23 வருஷமா மாசா மாசம் உன் பேரில் ஆயிரம் ரூபாய் போட்டுண்டு வந்தேன். ஆரம்பிச்ச புள்ளியில் முடியலேன்னா அது பூரணம் ஆகாது இல்லையா? அதான் அஞ்சு பவுனில் ஒரு சங்கிலியும் ஒரு காரட்டில் வைர மோதிரமும். “
பாக்கியலக்ஷ்மிக்கு வாயடைத்து போய்விட்டது.
அதன் பிறகு நடந்தவை இறக்கை கட்டிக் கொண்டது போல் நடந்தன. மாமியாரின் மேற்பார்வையில் மருமகள் சியாமளா சமைத்தாள். இந்த முறை அவல் பாயசத்துடன் திலீபனுக்கு பிடிக்கும் என்று சேமியா பாயசமும் சேர்ந்து கொண்டது. மாடி வீட்டு ஜெயந்தியை கூப்பிட்டு பாக்கியலட்சுமி அலமலர்ந்து போனாள். அவனுக்கு அவர் வாங்கி கொடுத்த தங்க சங்கிலியையும் மோதிரத்தையும் காட்டினாள். இப்படி ஒரு மனுஷரா என்று ஜெயந்தி மாய்ந்து போனாள். வழக்கமாக நடுக் கூடத்தில் விளக்கேற்றி, அகிலா படத்தை சுவரில் சாய்த்து, மாலை மஞ்சள் குங்குமம் இட்டு, இலை போட்டு பிரார்த்தனையுடன் உணவு பரிமாறப்பட்டது. இந்தமுறை பாக்கியலக்ஷ்மிக்கு அடி வயிறு கலங்கவில்லை. வீழ்ந்த வாழை வேறொரு மண்ணில் கீறிக் கிளம்பி தள தள என்று வளர்ந்ததை பார்த்த சந்தோஷம் மட்டுமே நெஞ்சு முழுவதும்…
உணவு பரிமாறப்பட்டவுடன் ஜெயந்திக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சளுடன் கல்யாணி காட்டன் புடைவை ஒன்றை வைத்து கொடுத்தாள். பேரன் திலீபன் அம்மாவின் ஞாபகங்களை போட்டோ ஆல்பத்தில் தேடி கொண்டிருந்தான்.
அனைவரும் உண்ட பிறகு அவர் “ பாக்கியம் கொஞ்சம் வெளியில் போகணும் கிளம்பு “ என்றார்.
பாக்கியம் எதிர் கேள்வி கேட்காமல் நெற்றிப் பொட்டை திருத்தி தலையை ஒதுக்கி கொண்டு கிளம்பினாள். உடன் சுந்தரம்,திலீபன். வாசலில் ராமன் ஆட்டோ ரிக்ஷா.
“ காரில் போலாமே “ என்றான் சுந்தர். அவன் வேண்டுகோளை அவர் மௌனத்தால் மறுத்தார்.
வெளியில் இறங்குவது என்பது இப்பொழுதெல்லாம் தெருமுனை பிள்ளையார் கோவில் மட்டும்தான். சில பிரத்யேக வழிகள் மட்டும் அத்துப்படி. ஈஸ்வரன் கோயில் , குரங்குச்சாவடி சாஸ்தா கோயில் ஆகியவற்றிற்கு போகும் வழித்தடங்கள் . அவருடன் ஊர் சுற்றிய காலங்கள் போயே போச்சு. அடுக்கு மாடி வீடுகளும், பெரிய பெரிய கடைகளுமாய் அடையாளம் மாறிப் போன சேலத்தை வியந்து பார்த்தபடி ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்தாள்.
ஒரு பிருமாண்ட கட்டிடத்தின் முன்பு ஆட்டோ ரிக்ஷா நின்றது. மாவட்ட ஆட்சியாளர் மாளிகை. .அவரை பார்த்து சிரித்தபடி ஒரு வெள்ளை வேட்டிகாரர் வந்தார். வளைந்து வளைந்து போன காரிடர்களின் வழியே நடந்து சென்று ஒரு அறை வாசலின் முன்பு நின்றனர். உதவி சார்பதிவாளர் எண் இரண்டு என்ற பெயர்ப் பலகை அடையாளம் சொன்னது.
பாக்கியலக்ஷ்மி அவரை ஏறிட்டு பார்த்தாள்.அந்தப் பார்வையில் இந்த முறையும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்கு என்று கேட்டு அசடு பட்டம் வாங்கிக் கொள்ள அவளும் தயாராக இல்லை.
“ இப்படி உட்காருங்க. சார்பதிவாளர் சாப்பிடப் போயிருக்கார். வந்திடுவார்.” வெள்ளை வேட்டிக்காரர் காட்டிய இடத்தில் அமர்ந்தனர்.
“ புகைப்பட அடையாள அட்டை, முகவரிச் சான்று, புகைப்படம் இதெல்லாம் கொண்டுவந்திருக்க இல்லியா ? “ என்று பேரனிடம் அவர் ஆங்கிலத்தில் கேட்டார்.
“ தாத்தா ! இது ரொம்ப அதிகம் ‘ என்றான் பேரன்.
“ திலீபா ! தாத்தா சொல்றதை மட்டும் செய். வேற எதுவும் உன்னால் செய்ய முடியாது.” என்று பாக்கியலக்ஷ்மி பாதி நக்கல் கலந்த சிரிப்புடன் கிசு கிசுத்தாள்.
அவர் பக்கியலக்ஷ்மியை பார்த்து ஒரு முறை முறைத்தார்.
“ பாக்கியம்! “ இது அவளுக்கு.
‘ உம் சொல்லுங்கோ “ என்றாள்.
“ சுந்தரம் நமக்கு பிள்ளைன்னா அகிலா நமக்கு பொண்ணு. நாம இப்ப இருக்கற இடம் என் சுய சம்பாத்தியம் இல்லை. பூர்வீக சொத்து. அகிலா போய்ட்டா ஆனாலும் அவள் வயித்தில் ஜனிச்ச திலீபன் இருக்கான். முழுசா அந்த சொத்தை நாம மட்டும் அனுபவிக்க கூடாது. அது தர்மமும் இல்லை. ரெண்டு கோடிக்கு சுலபமா போகும் என்கிறார்கள். அன்னிக்கு நீ பாட்டுக்கு ஒரு கேள்வியை வீசிட்டு போய்ட்ட. அந்த கேள்வி என்னை அரிச்சுண்டே இருந்தது. ஒரு கேள்வி பிறந்ததுன்னா அதுக்கான பதிலும் சேர்ந்துதானே பிறக்கறது. நான் பதிலை கண்டு பிடிச்சிட்டேன். அதனாலதான் மனையை சரிபாதியா பிரிச்சு ஒரு பாதியை திலீபன் பெயரில் ரெஜிஸ்டர் பண்ணப் போறேன். சுந்தரம் திரும்பவும் கேட்கிறேன். உனக்கு வருத்தம் இல்லியே?”
“என்ன கேள்விப்பா இது? “ என்று கூறிய சுந்தரத்தின் பதில் கணீர் என்று வந்தது .அந்த பதிலின் தயக்கமின்மை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம், அவர்கள் பேணி வந்த தர்மத்தின் வெளிப்பாடு முதலியவற்றை எடுத்து கூறுவதாக இருந்ததது . ஒரு நாள் இரவிற்குள் முழு ராஜ்ஜியம் கை நழுவிப் போனதற்கே கலங்காமல் செந்தாமரை ஒத்த முகம் காட்டிய புண்ணிய ஆத்மாக்கள் தோன்றிய மண் அல்லவா இது?
பாக்கியலக்ஷ்மி மலைத்துப் போய் அவரை பார்த்து கொண்டிருந்தாள். மலைப்பென்றால் அப்படி ஒரு மலைப்பு. சார்பதிவாளர் அலுவலகத்தில் பூர்வாங்க வேலைகள் முடிந்து திலீபன் பெயரில் சொத்து மாற்றப் பட்டதோ, மீண்டும் வீடு வந்து சேர்ந்ததோ , திலீபன் மீண்டும் கிளம்பி போனதோ எதுவும் நினைவில் நிற்காத மலைப்பு . அந்த மலைப்புதான் இரவில் கிடைத்த தனிமையில் அவரை கட்டி கொள்ள சொன்னது. எப்பொழுதோ ஒரு முறை அவளாக தழுவிக் கொள்ளும் மாமாங்கத் தழுவல். அன்பை வெளிப்படுத்த அவளுக்கு தெரிந்த பாஷைதான் அந்த தழுவல்.. அவள் கண்களில் நீர் துளிர்த்தது.
“ அசடு “ என்று அதட்டினார் . ஆனால் இந்த முறை முற்றிலும் வேறு மாதிரியான அசடு அது. அவளுக்கு வலிக்கவில்லை.
- தாயின் அரவணைப்பு
- அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘
- புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
- 3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்
- நடுங்கும் என் கரங்கள்…
- உனக்காக ஒரு முறை
- இந்திரா
- உழவு
- ஆகஸ்ட் 15
- இராஜராஜன் கையெழுத்து.
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15
- முக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்பு
- சிவதாண்டவம்
- கொம்புத்தேன்
- வசை பாடல்
- மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு
- பாரம்பரிய இரகசியம்
- பூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1
- வேர் மறந்த தளிர்கள் – 29
- விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !
- கருத்தரங்க அழைப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30
- விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
- சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
- அசடு
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33
- மங்கோலியன் – II
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23