ரமணி பிரபா தேவி
கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை..
நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும், இயற்கையின் மேல் ஒரு விதமான அன்பும் நேசமுமுண்டு . தொலைக்காட்சியிலேயே இளம்பருவத்தைத் தொலைத்திராக் காலகட்டமது. பெரும்பான்மையான பொழுதுகள் தோட்டத்திலே கழியும்.
முழுக்க முழுக்க நீர்ப்பாசனத்தாலான காலகட்டமாகையால் நெல் பாசனமுண்டு எங்கள் வயலில். சாலையிலிருந்து காணும்போதே கண்ணுக்கு குளிர்ச்சியளித்த பசுமையான நெல் நாற்றுகள் மனதினில் படமாய் விரிகிறது, பின்னர் காற்றிலாடும் நெற்கதிர்கள் மனதையும் சேர்த்து ஆட்டுவித்த காலமது.
நெல் நாற்றுகளை, குழந்தையாய் இருக்கும்போது நட்ட அனுபவமுண்டு. அப்போது வளமிக்க வண்டல் மண், தண்ணீருடன் சேர்ந்து குழப்பியடித்த செந்நிறச்சேறு போல் காட்சியளிக்கும். சிறு குழந்தையாய் ஊன்றிய கால்களை வெளியே எடுக்கச் சிரமப்பட்டாலும், திரும்ப அதிலேயே நடந்த நியாபகம். வீட்டின் சிறுபிள்ளையாதலால் முதன்முதலில் நாற்று நடுதலைத் தொடங்கி வைத்ததுமுண்டு. நன்கு விளைந்தநெல்மணிகளின் நறுமணம், சேற்றுக்கால்களையும், புழுதி படிந்த கைகளையும் மறக்கடித்துவிடும்.
அப்போது வயலில் நெல்லையும், நிலத்தில் புகையிலையும் இட்டிருந்தோம் . யானைக் காதுகளைப் போல்முறமுறமாய் இருக்குமது. புகையிலை நாற்றுக்களை வாங்கிச் செல்ல பலர் வந்ததுமுண்டு.
பின்பு நாட்கள் செல்லச்செல்ல நெல் நடுவது குறைந்து, கடலை பயிரிடல் தொடங்கியது. வரப்பு வெட்டி, பாத்திகட்டி, பருப்பு போடும் அம்மாவின் லாவகமும், வேகமும் வேறெங்கும் நான் கண்டதில்லை. அப்பாவுடன் கடலைக்காட்டிற்குத் தண்ணீர் பாய்ச்சியது, வரப்பு மாறி விட்டது எனப்பல அனுபவங்கள்.
கடலைச் செடியின் மஞ்சள் பூவை ரசித்தது, அங்கேயே அழகிய சிவப்புக்கல் மோதிரத்தைத் தொலைத்துவிட்டுஅழுதது, கடலைச்செடிக்குக் களை வெட்டியது , பாதி விளைந்த கடலைச் செடியைப் பிடுங்கி கடலைக்காய்தின்றது என அடுக்கலாம். எனக்கும் மாமா பெண்ணிற்கும் யார் அதிகச்செடிகள் பிடுங்குவது என்பதில் போட்டிவரும். தலைவலி வரும் எனத்தெரிந்தும் பச்சைக் கடலைக்காயை உண்டது, கடலைக்காய் பறிக்கும்போது முக்கொட்டைக் கடலை வந்தால் தரவேண்டுமென்று அம்மா, ஆத்தா மற்றும் வேலையாட்களிடம் சொல்லி வைத்தது என எண்ணிலடங்காது.
அச்சமயங்களில் அப்பிச்சி வீட்டுத் தோட்டத்தில் சூரியகாந்தி போட்டிருந்தது. தண்ணீர் அதிகம்தேவையில்லை என்பதன் சிறப்பு. மஞ்சள் நிற சூரியகாந்திப் பூக்கள், பூட்டை விடுவதற்கு முன்னர், தன்மணாளனை நோக்கிக் காத்திருக்கின்ற மங்கைபோல், சூரியனுக்காகக் காத்திருக்கும். கொள்ளை அழகுடன்தோட்டமே, தங்க நிறச்சொர்க்கம் போல் தோன்றும்
வேலையொன்றும் நெல், கடலை பயிரிடலை விடக் குறைவென்றாலும், சூரியகாந்திப் பூட்டை வந்தவுடன் குருவி, கிளி முடுக்குவதுதான் பெரிய வேலை. எனக்குப் பிடித்தமான வேலையும் கூட. ஒரு பக்கம்போய்அதனை முடுக்கிவிட்டு வருவதற்குள், நமக்கு போக்கு காட்டிவிட்டு மறுபக்கம் போய் அவையமர்ந்துகொள்ளும். பச்சைப் பசேலென சூரிய காந்திச் செடிகள் காற்றுக்கு ஆடும்போது, கூடவே பச்சைக்கிளிகளும் சேர்ந்தாடும். அதனையறிந்து முடுக்குதல், பூட்டைகளைக் காப்பாற்றச் செய்வதில் இன்றியமையா வேலை.இளங்காலை நேரத்திலேயே உண்பதற்கு வந்துவிடும். பொழுது சாயும்வரை அக்கிளிகள், குருவிகளுக்குஉலகமங்கேயே. அறுவடையின் போது கருதுகள், நாணிச் சிவந்து தலைகுனியும் மணமகள் போல, அதன்கனம் தாங்காமல் தலை சாய்ந்திருக்கும். சமயங்களிலவை ஒடிந்து விடுவதுமுண்டு .
சிறுவயதில் அப்பாவும், பெரியப்பாவும் பயிரிட்டது பருத்தி. அப்பொழுதுகள் பெரிதாக நினைப்பிலில்லை என்றாலும் மடி கட்டிக்கொண்டு பறித்ததும், புடைத்துப் பெருத்த பருத்திப் பூக்களும் ஞாபகக்கற்றையில் மங்கலாக ஊசலாடுகிறது.
பின்பெல்லாம் நாங்கள் பயிரிட்டது கம்பும் சோளமுமே. தண்ணீர்ப் பற்றாக்குறையும், ஆடு மாடுகளுக்குத்தீவனமாகுமென்ற என்ற எண்ணமுமே அதற்குக் காரணம். கடைசியில் அதற்கும் நீராதாரமில்லாமல் பாளம்பாளமாய் வெடித்து நிற்கிறது நிலம்.
மனிதன்,ஆடு மாடு முதல் புழு பூச்சிகள் வரை அனைத்துக்கும் உணவாகும் நெல்லில் தொடங்கி,புகையிலை, கடலை, சூரியகாந்தி எனப்போய் சோளம் கம்பிலே முடிந்து, மாதம் மும்மாரி பொழிந்தஇயற்கையை ஆண்டுக்கு மும்முறைகூடப் பெய்யவிடாமல் செய்த மானிடத்தை எண்ணி, தரிசு வெளியாய் வானம் வெறிக்கிறது, எங்கள் தோட்டக்காடு.
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……16
- மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
- நேர்முகத் தேர்வு
- நீங்காத நினைவுகள் 15
- பிரேதத்தை அலங்கரிப்பவள்
- ஜீவி கவிதைகள்
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
- புகழ் பெற்ற ஏழைகள் 21
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)
- அயோத்தியின் பெருமை
- தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
- தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
- பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
- கூடு
- பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
- தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்
- தூங்காத கண்ணொன்று……
- சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக
- முக்கோணக் கிளிகள் [2]
- நாவற் பழம்
- திட்டமிட்டு ஒரு கொலை
- பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]
- காவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா
- எங்கள் தோட்டக்காடு