ஜீவி கவிதைகள்

This entry is part 6 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

    ‘வானம் தொலைந்து விடவில்லை’ என்ற கவிதைத் தொகுப்பை த.மு.எ.ச. சார்ந்த ஜீவி எழுதியுள்ளார். இதற்கு ‘சுகத்திற்காக… கவிதைக்காக’ என்ற தலைப்பில் கந்தர்வன் சிறிய அணிந்துரை தந்துள்ளார். உரைநடையை இவ்வளவு அழகாக எழுத முடியுமா? என்று வியப்பு தோன்றுகிறது. அம்மாவின் பொறுப்புணர்ச்சி, கிராம வாழ்க்கை அழகுடன் போட்டி போடுகிறது. கந்தர்வனின் தமிழ் விரல் நெருடலில் சிக்கிய பட்டுத்துணி போல நேர்த்தியாக உள்ளது.

 

    ‘இந்த ஒரு மாதத்தில் ரெண்டாயிரம் தடவையாவது அம்மா முந்தானையில் வேர்வை துடைத்திருக்கும்’ என்னும் போது உழைப்பின் பெருமை வான் முட்டுகிறது. ‘தீத்தித் தீத்தி மண் சுவர் பட்டுப்போல் பிரகாசிக்கும்’ என்பது அழகான வெளிப்பாடு!

 

    இத்தொகுப்பில் 37 கவிதைகள் உள்ளன. கவிதைகள் மிக மிக எளியவை. யாரும் விளக்கம் சொல்லத் தேவையில்லை. பொதுவுடைமைக் கருத்துகளை கவிதையில் சொன்னாலே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் குரல் கேட்காமல் போகாது. இங்கும் கேட்கிறது.

 

    கவிதையில் ‘நிழல்களோடு கை குலுக்காமல் நிஜங்களை பேச வேண்டும்’ என்பதே ஜீவியின் கவிதைக் கொள்ளை என்பதை முதல் கவிதை உறுதிப் படுத்துகிறது.

 

    நடுத்தரக் குடும்பத்தின் கஷ்டங்கள் பற்றிப் பேசுகிறது ‘மிடில்கிளாஸ்’!

 

    ஐ.ஏ.எஸ் கனவுகளோடு

    ஐந்து மாத பாக்கி சொல்லி

    எம் பிள்ளைகள்

    டியூசன் போய்க் கொண்டிருக்கின்றன.

 

    இருசக்கர வாகனத்தில் கணவன் பின்னால் உட்கார்ந்து செல்ல ஆசைப்படும் மனைவி துருப்பிடித்த சைக்கிளைக் கண்டதும் வெறுத்துப் போயிருக்கிறாள் என்கிறார் ஜீவி.

 

காதல் பற்றி ஒரு கவிதை… ‘அவஸ்தை’

 

    அந்தக் கண்களில்

    மாட்டிக் கொண்டேன்

    மனசோடு,

    இப்போது நான்

    இரண்டாவது மனிதன்

 

    நான்

    இருந்த வீடுதான்

    பழகிய வீதிதான்

    இப்போது

    அரண்மனையாகவும்

    ராஜவீதியாகவும்

    ரசவாதமாகியுள்ளது

 

    அந்த வானவில்

    வருகிற நேரமெல்லாம்

    எனக்குள்

    சில மேகங்கள் முட்டிக் கொள்கின்றன

    இப்போது

    நிமிஷத்தின் நீளம்

    குறைந்து விட்டதோ

    என்று யோசித்தேன்

 

    எளிமையாகவும், காதலின் எதிர்வினையும் ஒரு புதிய இனிய பிராந்தியத்தை மனத்தில் உருவாக்கிவிடுகிற அழகையும் இக்கவிதையில் காண முடிகிறது.

 

    ‘மூன்றாம் கை’ தன்னம்பிக்கை தரும் கவிதை. தன்னம்பிக்கைதான் இங்கு மூன்றாம் கையாகப் பேசப்படுகிறது.

 

    நம்பிக்கை கொள்பவனின்

    நாளை கூட தீபமாகிறது – அதை

    இழந்தவனின் இன்று கூட இருட்டாகிறது

 

என்பது எல்லோரையும் நிமிர்ந்து நிற்கச் சொல்கிறது.

 

    எல்லோருக்கும் மகிழ்ச்சி ஆன சில தருணங்கள் வறுமையின் பிடியில் சிக்கியவர்களுக்கு சுமையாகிப் போவதுண்டு. ‘பூத்தது ஏன் பூவே?’ என்ற தலைப்பில் எளிய மெட்டில் நாட்டுப்புறப் பாடல்போல அமைந்துள்ளது ஒரு கவிதை.

 

    அன்றாடம் செலவுக்கே

    அல்லாடிக் கிடக்கையிலே

    அடியே கடன்காரி

    அதுக்குள்ள பூத்துட்டியே…

 

என்பதில் தாய்மை நெகிழ்வதைப் பார்க்க முடிகிறது.

 

    ‘நீ மின்மினியல்ல.. நட்சத்திரம்..’ – கலைஞர்களை உற்சாகப்படுத்துகிறது.

 

    கைகள் இருப்பது

    குலுக்கிக் கொள்ளத்தான்

    பல்வேறு முகங்களுடன்

    முகவரி பேசி

    நேச சங்கிலியை வளர்

 

என்று பேசி விட்டு

 

    மீசைக்காரனின் தோன்றல் நீ!

    மனசில் கனலை ஊதிப் போடு

 

எனப் பாரதியாரை நினைவுபடுத்துகிறார் ஜீவி!

 

மூன்று வரிகளில் சில துளிப்பாக்கள் உள்ளன. சிறு ஊசிகள் போல் தைக்கின்றன.

 

தகிக்கும் கோடை

தார்ச்சாலையில்

உருகும் ஐஸ் வண்டிக்காரன்

 

    நிறைவாக ஜீவி கவிதைகள் சமூக அக்கறை கொண்டவை. மனித மனத்தின் குணக்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை. இருபது ஆண்டுகளுக்கு முன் அன்னம் வெளியீடான இத்தொகுப்பு இன்றும் நம் கவனத்தை ஈர்க்கிறது.

Series Navigationபிரேதத்தை அலங்கரிப்பவள்சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *