சாகச நாயகன் 5. என்டர் தி டிராகன் அனுபவம்

This entry is part 2 of 15 in the series 1 செப்டம்பர் 2013

 

 

சான் புரூஸ் லீயுடன் நெருக்கமாகப் பழகாவிட்டாலும், அவர் செட்டில் நடந்து கொண்ட விதத்திலிருந்து, அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டான்.  அவருக்கு நெருக்கமானோர் மிகச் சிலரே.  ஏனென்றால் அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தார்.  ஆனால் அவர் மிகச் சாதாரண ஸ்டண்ட் கலைஞர்களையும் மதிக்கும் குணம் பெற்றவர்.  அவர் தன்னுடைய முதலாளிகளை எதிர்த்தும் கூட, தன் கீழ் பணி புரியும் கலைஞர்களை நன்கு கவனித்துக் கொண்டாராம்.

பிஸ்ட் ஆப் புயூரி  படம் வெளிவந்த சில வருடங்களுக்குப் பிறகு, என்டர் தி டிராகன் படம் எடுக்கப்பட்டது.  அதில் சான்  ஸ்டண்ட் கலைஞனாக பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. போதை மருந்து கடத்தும் கூட்டத்தின் தலைவன் தன் தொழிலுக்குத் தேவையான சிறந்த சண்டையாளனை தேர்ந்தெடுக்க தன்னுடைய தீவில் ஒரு குங்பூ போட்டிக்கு ஏற்பாடு செய்கிறான். அதில் தலைவனை உளவு பார்க்கவும் தன் தங்கையின் மரணத்திற்குக் காரணமானவனை அழிக்கவும் கிளம்பும் கதாநாயகனாக புரூஸ் லீ நடித்தார். படத்தில் பல சண்டைக் காட்சிகள் இருந்தன.  புரூஸ் இருபதுக்கும் மேற்பட்டவர்களை சண்டையிட்டு பின்னுக்குத் தள்ளுவார்.

இந்தப் படத்தில் தான் நான்சாகுஸ் என்ற புரூஸ் லீயின் குறிப்பிடத்தக்க ஆயுதமான இரு பக்கத் கட்டையும், நடுவே சங்கலியும் கொண்ட ஆயுதம் பிரபலமானது. நாயகளை வீழ்த்த வரும் அடியாட்கள் ஒவ்வொருவராக லீயின் திறமையால் வீழ்த்தப்பட்டு தரையில் விழுவார்கள்.  அவர்களில் கடைசியாகச் சான் வருவான்.

காட்சியின் ஒத்திகையின் போது புரூஸ் அடித்ததும், சான் மயங்கிச் சாய்வது போல நடிக்க வேண்டும் என்றும் பிறகு நினைவு திரும்பி எழுந்து கமேராவைப் பார்த்து விட்டு ஓட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் நடந்ததோ வேறு.

கமேரா ஓட ஆரம்பித்ததும், சான் புரூஸைத் தாக்கச் சென்ற போது, புரூஸ் தன்னுடைய ஆயுதத்தை வேகமாக சுழற்றி சானைத் தாக்க வந்த போது, கட்டை உண்மையிலேயே வேகத்தோடு சானின் முகத்தில் தாக்கியது.

புரூஸ் போஸ் கொடுக்கும் போது, வலிக்கும் இடத்திற்குத் தன் கையைக் கொண்டு போகாமல் வலியைப் பொறுத்துக் கொண்டு சான் படுத்திடுந்தான்.  வலியால் உயிர் போனதென்றே கூடச் சொல்லலாம்.

புரூஸ் லீக்குத் தன் தவறு புரிந்தது.  காட்சி முடிந்ததுமே, ஆயுதத்தை எறிந்து விட்டு, ஓடோடி வந்து, சானிடம், “மன்னித்து விடு.. மன்னித்து விடு” என்று மன்னிப்புக் கோரிக்கொண்டே சானின் காயத்தை கவனித்தார். அந்த நாள் முழுவதும், ஒவ்வொரு காட்சியின் இடைவேளையின் போதும், “மன்னித்து விடு” என்று பலமுறை கூறினார் என்று சான் நினைவு கூர்வார்.

புரூஸ் ஒரு சிறந்த மனிதர். அவர் செய்த  அனைத்துக் காரியங்களும் சிறப்பானவை.  அவரது குணமும் சிறப்பானது.  அவரது இந்த இளகிய மனம் ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரையும் கவர்ந்த ஒன்று.

அப்படிப்பட்ட  கலைஞரின் திடீர் மரணம் தான் ஹாங்காங் திரையுலகை திடுக்கிட வைத்தது.  வர்மக் கலைக்கு உயிர் கொடுத்த நாயகன் இறந்து போனார்.   அத்துடன் ஹாங்காங் திரையுலகில் பல விஷயங்களும் இறந்தன என்றே சொல்லலாம்.  புரூஸ் லீ படத்திற்குப் பிறகு வந்த சண்டைப்படங்களை மக்கள் பார்க்க விரும்பவில்லை.  அதனால் அதற்குப் பிறகு வெளிவந்த பல படங்கள் தோல்வியடைந்தன.

பாவ்விற்கு பெருத்த ஏமாற்றம்.  தங்களது கடின உழைப்பு இப்படிப்பட்ட சம்பவத்தால் பலன் தராமல் போனது கண்டு மனம் வருந்தினார். படத்தின் வெற்றி தோல்வி பற்றி அறிந்து கொள்ளும் முன்னரே காணாமல் போனார்.

தயாரிப்பாளர் தன்னிடம் பணி புரிந்தவர்களை அழைத்துப் பேசினார். அப்போது சானிடம் “சான் உனக்கு எல்லாம் தெரியும்.  நான் சொல்லப் போவது உனக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.  எனக்கு பெருத்த நஷ்டம். உன்னிடம் ஒன்றைச் சொல்ல வேண்டும்” என்று ஆரம்பித்தார்.  என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்த காரணத்தால், உடன் இருந்தவர்கள், பேசுவதைப் கண்டு கொள்ளாதவர்கள் போல் வேறு பக்கம் பார்த்த வண்ணம் இருந்தனர்.

“என்ன அது?” என்றான் சான்.

 

லிட்டில் டைகர் ஆப் கேன்டன் படம் போன்று நடக்கப் போகிறது என்பது புரிந்தது.

“நிறுவனத்தை மூடப் போகிறோம்.  உங்களுக்குத் தர வேண்டிய பணம் முழுசாகத் தர முடியாத சூழ்நிலை. மன்னிக்கவும்” என்றார் தயாரிப்பாளர்.

அங்கு  சோர்ந்து நின்றிருந்த அனைவரையும் பார்த்துத் தலையசைத்துவிட்டு வெளியில் நடந்தான் சான்.

வெளியில் நின்றிருந்த பியாவ் “என்ன நடக்கிறது?” என்று கேட்டான்.

“இனி நடக்க ஒன்றுமில்லை.  எல்லாம் முடிந்துவிட்டது. சம்பளம் முழுக்கக் கொடுக்க முடியாதாம்.  படமும் எடுக்கப் போவதில்லையாம்.  நாம் திரும்பவும் தெருவுக்கு வந்து விட்டோம்” என்று ஆதங்கத்துடன் சான் கூறினான்.

 

யூன் பியாவ்விற்கு அதிர்ச்சி.  இருந்த வேலை போய்விட்டது.  இனிமேல் என்ன செய்வது என்று மலைத்து நின்றவனிடம், சான், “திரும்பவும் பெரியண்ணாவிடம் போ.  அவர் நிச்சயம் ஏதாவது வேலை வாங்கித் தருவார்” என்று ஆறுதல் வார்த்தைக் கூறிவிட்டு, அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.  கிடைத்த சிறு தொகை போதாதென்று தன் சேமிப்பில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு கவலையை மறக்க குடித்து விட்டு வீட்டிற்குச் சென்று படுத்தான்.

அடுத்த நாள் முழுவதும் படுத்திருந்தான்.

என்ன முடிவு செய்வது என்று யோசித்தான்.

தன்னைத் தனியே ஏழு வயதிலேயே விட்டுச் சென்ற பெற்றோர் ஆஸ்திரேலியாவில் தனக்காக இருக்கும் போது அங்கே சென்று விடுவது நல்லது என்று தோன்றியது.

கடைசியாக இருந்த பத்து வெள்ளியில் தன் தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

“அப்பா.. நான் அங்கு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தந்தையின் பதில் என்னவாக இருக்கும் என்று எண்ணினான்.

அவன் எண்ணியதற்கு மாறாக, தந்தை பயணத்திற்குத் தேவையான பணத்தை அனுப்புவதாகச் சொன்னதால், அதற்காகக் காத்திருந்தான்.

ஆஸ்திரேலியாவிலிருந்து சானின் பெற்றோர் பணம் அனுப்பும் வரை வீட்டை நிர்வகிப்பவரிடமிருந்து பணத்தைக் கடனாக வாங்கி சில நாட்களைக் கழித்தான்.  யாரிடமும் செல்லப் போவதைப் பற்றி மூச்சு விடவில்லை.  யாரையும் கவலைப்படவோ, தங்கச் சொல்லும்படி பேச வைக்கவோ விரும்பவில்லை.  கஷ்டமான முடிவு தான்.

திரைத் துறையில் சாதித்துக் காட்டலாம் என்று விரும்பியது பொய்துப் போனது.  ஹாங்காங்கிற்கு சானை வெளிக் கொணர விருப்பமில்லை என்று அப்போது தோன்றியது.

 

ஆஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது.  ஹாங்காங்கை விட்டு செல்ல மனமேயின்றி விமானம் ஏறினான்.

தன்னுடைய பால்ய நாட்களை அசை போட ஆரம்பித்தான்.

—-

Series Navigation7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்முக்கோணக் கிளிகள் [3]
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *