டௌரி தராத கௌரி கல்யாணம் ……17

This entry is part 8 of 15 in the series 1 செப்டம்பர் 2013
 
ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை 

….சீ…சீ….என்னவாக்கும் இது….எனக்கேன் இப்படில்லாம் தோணறது..? இந்த மாணிக்கம் மட்டும் என்ன அவள் மேல இருக்குற பாசத்துலையா இப்படி அழறான்..அப்படி இருந்திருந்தால் வசந்தியைப் பார்த்த அந்த வினாடியே சொல்லியிருக்க வேண்டாமோ? ஒரு நிமிஷம் ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி நின்னுட்டு திடீர்னு எங்கேர்ந்து ஞானோதயம் வந்ததாம்? இவனுக்கு .வீட்டு வேலை செய்ய ஆள் வேணுமாயிருக்கும் ..குழந்தையைப் வேற பார்த்துக்கணம்….பத்தாக்குறை

க்கு அவளோட தங்கை வேற செத்துப் போயிட்டாளாம். அதான் வசந்தியைப் பார்த்ததும் முதலைக் கண்ணீர் விடறான். எல்லாம் சுயநலம். நடிக்கறான். எது எப்படியோ, வசந்திக்கு அவளோட வாழ்வு மீண்டது. வசந்திக்கும் அதுல தான் சந்தோஷம் கிடைக்கும்.  முகம், கைகால்களை  அலம்பிக் கொண்டு வந்தவள் ‘எப்டி வசந்தி….உன் வீட்டுக் காரரே டிரைவரா வந்து சேர்ந்தது உனக்கு சந்தோஷம் தானே…?’ உடனே பெட்டியைக் கட்டு…. கொண்டு போயி விட்டுட்டு வரேன்.

என்ன கெளரிம்மா…அப்டி சொல்லிப்புட்டீங்க…நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா..? எனக்கு இவன் சங்காத்தமே வேணாம்..அன்னிக்கு அடிச்சுத் தொரத்திப்புட்டு  இன்னிக்கு வான்னு என்னிய கூப்டடா ….வாரேன்னு நானும் போயிருவேண்டு நெனெச்சீங்களா …நீங்க. நான் மாட்டேன். என்னியப் பொருத்தவரைக்கும் அவங்களுக்கு நான் என்னிக்கோ செத்துப் போயிட்டேன். எனக்கு உங்களைத் தவிர யாருமே இல்லை.

அப்போ நீ மகிழ்ந்து சிரித்தது..?

ஒரு நிமிட பந்தம்,,,அம்புட்டுத்தான்..அதுக்கு பெறவு அந்த அடியும் உதையும் வார்த்தையும் நெனப்புக்கு வந்துருச்சு. என் தங்கச்சியும் தீ விபத்துல கருகிச் செத்துப் போச்சாமே…? அந்தப் பச்சப் புள்ளைய நெனச்சாத் தான் பாவமாயிருக்குது. என் அத்தையும் பாவம்..வயசு போன காலம்…! சரி அதுங்க எப்படியோ போவுதுங்க. எனக்கெதுக்கு இப்ப நெஞ்சு கெடந்து தவிக்கணம்…நான் பெத்த பிள்ளையா அது..? ஆனா ஒண்ணு  மட்டும் சொல்லிப்புட்டேன்ம்மா…அவனை நீங்க டிரைவரா வெச்சுக்கிருங்க …இல்லாட்டி தொரத்திடுங்க…ஆனால் நான் மட்டும் உங்களை விட்டுப்போட்டு எங்கிட்டும் போவ மாட்டேன். என்னிய விரட்டிப் போடாதீங்க.. அது சுயநலம் பிடிச்சது…வான்னு தான் கூப்பிடும். அது பண்ற கொடுமை எனக்குத் தானே தெரியும்.

நானே சொல்லி அனுப்பிட்டேன்….நான் உசுரோட இருக்கேனா…இல்ல செத்துக் கித்துப் போயிட்டேனாண்டு கூட தேட நாதியில்ல…அன்னிக்கி நான் சாகப் போன போது என்னைக் காப்பாத்தி எனக்கு ஒரு தொழிலை செய்து கொடுத்த தெய்வங்க இவங்க. இந்த வீட்டு வாசப்படி மிதிக்கிற யோக்கியதை கூட உனக்கு இல்லே ,,,இனிமேட்டு இந்தப் பக்கம் வந்துராதே….ண்டு சொல்லித் தான் திருப்பி அனுப்பிச்சேன். இனிமேட்டு இந்தப் பக்கம் வராது. நம்ம வேற யாராச்சும் டிரைவரை வெச்சுகிடலாம் . ஊருல வேற ஆளா இல்லே இவர விட்டால்…..

அதானே..அவன் வா ன்னு கூப்பிட்டால் போய் நிக்கணம் …வெளில போன்னா …வீட்டை விட்டு இறங்கணமா ? பொம்மனாட்டினா  வெறும் ஜடமா? அவாளுக்கு மனசுன்னு ஒண்ணுமில்லையா …? நீ போகாதே வசந்தி..சித்ரா வசந்தியுடன் சேர்ந்து கொண்டாள்.

ஆனால் உங்களால முடிஞ்சா எனக்கு அந்த முருகனை மட்டும் வாங்கிக் கொடுத்திடுங்கம்மா..புள்ளைய நெனச்சாத் தான் பாவமா இருக்குது.

வேணாம் வசந்தி. கொஞ்சம் பொறு….நிதானமா யோசி. அந்தக் குழந்தைக்காகவாவது நீ அவனோட சேர்ந்து தான் வாழணும் ..கௌரி சொல்வதைப் பார்த்து சித்ரா கௌரியை முறைத்தபடி, அப்பிடியே போனாலும்…உன் பிரசவம் முடிஞ்சு போகட்டும்….என்கிறாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், வெள்ளையம்மாள் குழந்தை முருகனைத் இடுப்பில் இடுக்கியபடி இவர்கள் வீட்டு வாசலில் நிற்பாள் என்று வசந்தி சிறிதும் நினைக்கவில்லை. ஆனால் அது தான் நடந்தது.

எலும்பும் தோலுமாக குழந்தை முருகனைப் பார்த்த வசந்தி , அப்படியே கண்ணீருடன் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டவள், ஏன் அத்தை…? இம்புட்டு மோசமாருக்கான்….விமலா எப்படி செத்துப் போச்சு என்று வெள்ளையம்மாளை சேர்த்து கட்டிக் கொண்டு அழுது விட்டு, நான் இங்கன இருக்கேண்டு சொன்னாராக்கும். இந்த நேரத்துல கெளம்பி வந்திருக்க… எனக்கு உசுரப் பிச்ச போட்ட இவங்க தான் எனக்கு எல்லாம். அதனால் இவங்கள விட்டு நான் வரமாட்டேன். என்று நிறுத்தினாள் .

ஆமா….மாணிக்கம் வந்து சொல்லித் தான் எனக்கே தெரியும். அழுதுப்புட்டான்….அவன் என்கிட்டே போகக்கூடாதுன்னு ரொம்ப சொன்னான்.நான் தான் மனசு கேட்காமல் உடனே உன்னியப் பாக்கணம்ண்டு துடியாத் துடிச்சி ஓடியாந்தேன். மாணிக்கம் அங்கன ரெண்டு தெரு தாண்டி நிக்கிது. நான் உன்னியப் பார்த்துபோட்டு போறேன்.எங்கள மன்னிச்சுருடி வசந்தி என்று கண் கலங்கி நின்றாள் வெள்ளையம்மாள்.

வசந்தி….நீ உசுரோடத் தான் இருப்பேன்னு என் மனசு சொல்லிச்சுடி….முருகன நீ பார்த்துக்கடி.  நீ எதோ ஒரு இது வெச்சுருக்கியாமே அதுல நானும் உனக்குத் துணையா இருக்கேன். என்று வலுக்கட்டாயமாக தன்னையும் அவர்களோடு நுழைத்துக் கொண்டாள் .

சித்ரா மட்டும்…தலையிலடித்துக் கொண்டாள் …இதெல்லாம் வேண்டாத்த வேலை. கத்தி போச்சு வாலு வந்ததுன்னு…

வசந்தி இவங்களையும் அந்த வீட்டில் உங்களோட இருக்கவிடேன்….உங்க அத்தை உனக்கு உதவியா இருப்பாங்க..நான் இங்க இருக்கேன்…அந்த மாணிக்கம் உன்கிட்ட வாலாட்ட முடியாது. அடி தடின்னு. ஒரு ரூம்ல நீங்க எல்லாரும் இருந்துக் கிட்டா கூட மத்த இடத்தில் குழந்தைகளை வெச்சுப் பார்த்துக்கலாம்.. எப்டியோ நீயும் நல்லா இருக்கணம் வசந்தி.

வெள்ளையம்மாள் மல்கிய கண்களோடு கையெடுத்து கும்பிட்டு நீங்க மனுச தெய்வங்க ..நீங்க .நல்லாருக்கோணம்…உங்க குடும்பம் பூத்துக் குலுங்கும். ஒரு குடும்பத்தை வாழ வைக்கிற புண்ணியம் உங்க கூடவே வரும்…என்று மனதார வாழ்த்துகிறாள்.

சித்ராவுக்கும் , கௌரிக்கும்  மனது நெகிழ்கிறது.

0  0   0  0   0   0   0   0   0  0   0   0    0

மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்த ஈஸ்வரனின் வருஷாப்திய ஸ்ரார்த்தம் எல்லாம் முடிந்ததும் , பாலு வாத்தியார் மெல்ல சமயம் பார்த்து பேச்சை ஆரம்பிக்கிறார்.

சித்ரா மாமி…..ஈஸ்வரன் மாமாவோட வருஷாப்த்திய ஆட்டத்திவசத்தை  நல்ல படியா பண்ணி முடிச்சுட்டேள் . அடுத்த வருஷமாவது காசிக்கு போயி பிரயாகைல பண்றதைப் பண்ணிட்டு கயால பிண்டப் பிரதானம் பண்ணிடுங்கோ. ரொம்ப விசேஷம். அதுக்கப்பறம் உங்களுக்கு முடியலைன்னா வருஷா வருஷம் ஹிரண்யமா பண்ணினாக் கூட போதும். ஆமாம்…கேட்கணம்னு நினைச்சேன். கௌரிக்கு எப்போவாக்கும் கல்யாணம் பண்ணேள்? அவாளாப் பார்த்துப் பண்ணீண்டாளா? சீமந்தம் உண்டோல்லியோ? அதுக்காவது கூப்பிடுங்கோ.
நன்னாப் பண்ணி வெக்கறேன். இது எத்தனாவது மாசம்..?

ம்ம்….சரி மாமா..ஆகட்டும் என்று திக்கினாள் சித்ரா…எனக்கு ஒரே ஷீணமாயிருக்கு….விஷயத்துக்கு ஃபோன்ல கூப்பிடறேன்.

ஓ …பேஷா…அப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன் என்று நகர்ந்தார் அவர்.

போச்சு….எல்லாம் அக்கு வேறு ஆணி வேறா கண்டுபிடிச்சாச்சு. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யைத் தேடணம்…என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

இவருக்கெல்லாம் நீ ஏன்மா பயப்படறே…?

யாருக்குமே பயப்படாதவள் நீ…அதான் இப்படியாச்சு.

சரி விட்டுத் தள்ளு.அப்பா போயி அதுக்குள்ளே ஒரு வருஷம் போயிடுத்தே…நம்பவே முடியலை இல்லையா? என்று கௌரி பேச்சைத் திசை திருப்புகிறாள்.

ம்ம்ம்ம்….எதையுமே நம்ப முடியலை…யாரையுமே நம்ப முடியலை…என்று பொடி வைக்கிறாள் சித்ரா.

இதோ….இப்போ வசந்திக்கு அவ புருஷன் காரன் உணர்ந்துண்டு வந்து நின்னானே…அது போல ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் அந்த கார்த்தியும் உன் அருமை புரிஞ்சுண்டு வந்து நிற்பான் …பார்த்துண்டே இரு…!

இது எந்தானம்மா…அப்பிடியொரு இதொண்ணும் நடக்காது கேட்டோ..நான் கார்த்திய ஒருநாளும் இந்தாத்துப் படி எத்த அனுமதிக்க மாட்டேன்.என்னைப் பொருத்தவரையில் நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் யார்  யாரோ.நீ புரிஞ்சுண்டியா. இந்த வசந்திக்கு இருக்கற இது கூட எனக்கு இருக்காதா..?பின்ன ரௌத்ரம் பழகுன்னு எதுக்கு சொல்லியிருக்கு.?

ம்கும்….இந்த வித்தாரமெல்லாம் வாய் கிழியப் பேசு….அது போட்டும் விடு…இன்னைக்கு கோவிலுக்குப் போய்ட்டு வரணம் நாம ரெண்டு பேரும். அப்படியே டாக்டரையும் பார்த்துட்டு வந்துடலாம்.

ஆட்டும்…என்று சொல்லியபடியே சித்ரா மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில் போட்டு அடக்கிக் கொண்டு லேசாக மென்று திங்க ஆரம்பித்தாள்  கௌரி.அப்படியே….அம்மா….இங்க கையை வெச்சுப் பாரேன்…எப்படி குடு குடுன்னு புரண்டு புரண்டு போற மாதிரி இருக்கு தெரியுமா..? ஐயோ…ஐயோ….இதோ…இங்க தான்…இங்க தான்…என்று வயிற்றில்  தன் தாயின் கைகளைப் பற்றி அங்கும் இங்கும் தன் வயிற்றில் இழுத்துச் செல்கிறாள் கௌரி.

ஆமா…..ஆமா….வாலுங்க …இதைத் தான் நாங்க உதைக்கிறான்னு சொல்லுவோம். உனக்கு இப்பவே ஆரம்பிச்சுட்டானா ? என்று பிடித்தும் பிடிக்காமலும் வாய் வார்த்தைக்கு சொல்லி வைக்கிறாள் சித்ரா.

இன்னும் எத்தனை மாசம்மா…? நல்ல வேளையா என்னால ஆபீஸ் வேலையை வீட்டில் இருந்தபடிக்கே செய்ய முடியறது. எல்லாருக்கும் இப்படிப் பெர்மிஷன் தர மாட்டார். ஏதோ என் சீனியாரிட்டி திறமைன்னு….என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சிரிக்கிறாள் கௌரி.

ஆமாம்டி…நீ இப்படி சகஜமாப் பேசிச் சிரிச்சி எத்தனை நாளாச்சு தெரியுமா? என்று சித்ரா தன் மகளின் முகத்தைப் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள்.  நாளாக நாளாக நீ ரொம்ப அழகா ஆயிண்டு வரே…வயிறும் ஏகத்துக்குப் பெரிசாயிண்டு வரது . அடிக்கடி செக்கப்புக்குப் போயாகணம் . இன்னும் இப்ப ஏழு மாசமாயாச்சு…இன்னும் அனேகமா ரெண்டு மூணு மாசம் தான் கணக்கு. என்று காலண்டரை எடுத்துப் பார்க்க ஆரம்பிக்கிறாள் சித்ரா. வர கார்த்திகைல பிரசவமாயிடும்….என்று தனக்குள்ளாக சொல்லிக் கொள்கிறாள்.

கார்த்திகைன்னா…? இங்கிலிஷ்ல எந்த மந்த் …? கௌரி ஆவலாகிறாள்.

இந்தா….நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ என்று காலண்டரை அவளிடம் நீட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் சித்ரா.

0  0  0  0   0    0    0    0    0    0    0   0   0

டெல்லியில்……

தனது தாய் கல்யாணியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். வருஷாப்தியத்தை முடித்த பிரசாத், கவலை தோய்ந்த முகத்தோடு
‘அம்மா…நீ நினைச்ச எதுவுமே என்னால் நடத்திக் காண்பிக்க முடியலைம்மா’  அப்படியே நீ விட்டு வைத்த இடத்தில் அப்படியே இருக்கும்மா…என்று தாயின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே மெளனமாக பேசிக் கொண்டிருந்தான்.

இந்த வருஷம் முதல் ஸ்ரார்த்தம் நான் பண்ணினதில் உனக்கு ஒரு குறையும் இல்லையேம்மா…என்று மானசீகமாகக் கேட்கவும்.

கல்யாணியின் புகைப்படத்திலிருந்து ஒரு ரோஜாப் பூ  விழுந்து பதில் சொன்னது.

அம்மா…அடுத்த ஸ்ரார்த்தம் நம்ம வாத்தியார் சொன்னாப்பல கண்டிப்பா கயால போயி பண்ணிடறேன்மா…என்று அந்த ரோஜா மலரை எடுத்து முகர்ந்து பார்க்கிறான் பிரசாத்.

அம்மா…என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பா நான் கௌரியை மீட் பண்ணணும்மா…அதுக்கும் நீ தான் எனக்கு உத்தரவு தரணம்ம்மா.
என்று கல்யாணியின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

பூவும் விழவில்லை. பிரசாத் அந்த இடத்தை விட்டும் நகரவில்லை. நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.

சிறிது நேரம் கழித்து பிரசாத்தின் கைகளில் ஈஸ்வரன் இறுதியாக எழுதிய கடிதம் ஃபேன் காற்றுக்குப்  படபடத்துக் கொண்டிருந்தது.

இந்நேரம் அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்…” மை பெஸ்ட் விஷ்ஷஸ் கௌரி ” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டவன் ஒரு கல்யாணப் பத்திரிகை எனக்கும் அனுப்பியிருக்கலாம்…என்று நினைத்துக் கொண்டே “அதான் நான் கேட்ட கேள்விக்கு அம்மா உத்தரவு தரலை” என்றும் எண்ணிக் கொண்டான்.

கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு “ஈஸ்வரன் சார்…சச் எ நைஸ் ஜெண்டில்மேன் ” என்று வாய்விட்டே சொல்லிக் கொள்கிறான். ” ஸார் ….நானும் ஜென்டில்மேன் தான்..யார்கிட்டயும் இனி டௌரியும் கேட்கமாட்டேன் .கல்யாணமும்  பண்ணிக்க மாட்டேன்…” என்று விரக்தியில் தனக்குத் தானே  சிரித்துக் கொள்கிறான் பிரசாத்.

உடனே அவனது கைபேசி அழைக்கிறது.

“ஹமே…தும்ஸே ப்யார் கித்துனா….
ஏ ஹம் நஹி ஜானுதே….
மகர் ஜி நஹி சக்குத்தே
தும்ஹாரே பினா….
சுனா கம் ஜுதாயீ கா ,
உட்டாத்தே ஹை லோக்
ஜானே ஜிந்தகி…..”

டக்கென்று கைபேசியை எடுத்துக் காதில் வைத்தபடி….ஐம்…பிரசாத் ஹியர்…..! ஹூ இஸ் காலிங்? ”

“குட் மார்னிங் பிரசாத்…..ஐம் கார்த்திக் ஃப்ரம் சென்னை…..”

என்றொலித்தது  மறுமுனை.

0  0   0   0   0   0   0   0   0   0   0   0   0   0   0

(தொடரும்)

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *