குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28

This entry is part 16 of 26 in the series 22 செப்டம்பர் 2013

..  ..  ..    ரமணி அன்று இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். நேரே தன்னறைக்குப் போனான். தயா கொண்டுவந்து கொடுத்த காப்பியைக் குடித்தான். எந்த நேரமானாலும் வீடு திரும்பியதும் அவனுக்குக் காப்பி குடித்தாகவேண்டும். காப்பியைக் குடித்துக்கொண்டே அவன் தன் அலமாரியைப் பார்த்தான். அதன் சாவி அதிலேயே செருகி யிருந்ததைக் கவனித்தான். அவன் பார்வை போன திக்கைக் கண்டதும் தயாவுக்குத் திக்கென்றது. கவனமாக அலமாரிப் பக்கம் பார்க்காமல் அவள் காலித் தம்ப்ளரைத் திருப்பி எடுத்துச் செல்லுவதற்காகக் காத்திருந்தாள்.
திடீரென்று ரமணியின் முகம் கடுமை கொண்டது: “நீ இந்த ரூமுக்குள்ள வந்தியா?”

தயாவுக்குக் கண்கள் இருளும் போல்  இலேசான மயக்கம் வந்தது. ‘ஒரு நிச்சயத்தோடு கேட்கிறானே? எப்படித் தெரிந்தது இவனுக்கு!’

“இல்லியே? நான் வரல்லே.”

“பொய்யா சொல்றே எங்கிட்ட? வாடி இங்கே. அந்தக் கதவைச் சாத்து முதல்ல.”

அவள் நடுங்கிக்கொண்டே கதவைச் சாத்தினாள்.

“வாடி, இப்படி. பொய்தானே சொல்றே?”

அவள் திகைத்துப்போய் அவனை அச்சத்துடன் பார்த்தாள். குளிரில் நடுங்கும் கோழிக்குஞ்சு போல் அவள்  அதிர்ந்துகொண்டிருந்தது ரமணிக்குச் சிரிப்பாக இருந்தது. வெற்றிலைக் காவிப் பற்களைக் காட்டியபடி அவன் குரூரமாய்ச் சிரித்தான்:

“உண்மையைச் சொல்லு. நீ இந்த ரூமுக்கு வந்தியா இல்லியா?”

“இல்லே.”

“கட்டின புருஷன் கிட்ட பொய்யாடி சொல்றே?” என்ற அவன் பாய்ந்து அவளை நெருங்கி அவள் காதைக் கடித்தான்.

“ஆ! அய்யோ! அம்மா!”

“ஏய்! சொல்லுடின்னா? அப்புறம்  தோடு போட்டுக்க உனக்குக் காதே இருக்காது.”

“எதை வெச்சு இப்படிக் கேக்கறேள்?”

“அப்படிக் கேளுடி, புளுகு மூட்டை! அலமாரிக்குப் பக்கத்திலே மல்லிகைப்பூ உதிர்ந்து கிடக்கு, பாரு. அதை வெச்சுத்தான்.”

அவள் தலை தாழ்ந்தது. நெஞ்சு பயத்தில் அடித்துக்கொண்டது. ‘இவன் வெறும் நாய் இல்லை. துப்பறியும் நாய்!’

“என்னடி முழிக்கிறே? எதுக்கு வந்தே இங்கே? இந்த வீட்டில பொம்மனாட்டிகள் ஆம்பளைகளோட ரூமுக்கு வர்றதில்லை, கூப்பிட்டாலொழிய வரக் கூடாதுன்னு உனக்குத் தெரியுமில்ல? உனக்குன்னு இருக்கிற ரூமை விட்டுட்டு இங்கே என்னடி வேலை உனக்கு? அலமாரியைத் திறந்து நோண்டினியா?”

கடியினால் காயமுற்று இலேசாய் இரத்தம் கசிந்துகொண்டிருந்த காதைப் பிடித்து அவன் முறுக்கினான்.

“அம்மா!”

“எதுக்குடி அம்மாளையும் ஆத்தாளையும் கூப்பிட்றே? யாரும் வரமாட்டா. எதுக்கு என்னோட அலமாரியைக் குடைஞ்சே?”

“குடையல்லே .. சும்மா எட்டிப் பாத்தேன். அலமாரிக் கதவிலேயே சாவி தொங்கிண்டிருந்தது. பூட்ட மறந்திருந்தா, பூட்டலாமேன்னு உள்ள வந்தேன். சாவியைத் திருகினப்ப பூட்டல்லேனு தெரிஞ்சுது. பூட்டினேன்.”

“அலமாரிக் கதவைத் திறந்து உள்ளே நீ குடையவே இல்லே!”

“இல்லே.”

அவன் அவள் கையைப் பிடித்து முரட்டுத்தனமாக முறுக்கிவிட்டுக் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான்.

“அய்யோ!” –  தயாவின் விழிகள் கண்ணீரில் மூழ்கின.

“சும்மா சொல்லக்கூடாது. அழறப்ப கூட நீ அழகாத்தாண்டி இருக்கே! என்னோட அலமாரியிலேர்ந்து நீ என்னத்தை எடுத்தேன்னு நான் சொல்லட்டுமா? ..  .. இன்லண்ட் எடுத்தியா, இல்லே, கவரும் ஸ்டாம்பும் எடுத்தியா?”

‘இன்லண்ட் லெட்டர்சுக்குக் கூட இவன் கணக்கு வெச்சுப்பானோ? அட, கடவுளே! நான் இன்னிக்கு செத்தேன்!’

தயா மிகவும் பயந்து போனாள். மயக்கம் வரும் உணர்ச்சி அதிகரித்தது.

“என்னடி, திருதிருன்னு முழிக்கிறே? ஆனா ஒண்ணு. நீ திருடி மாதிரி முழிக்கிறப்பவும் அழகோ அழகுதான்.”

அவனது பார்வையின் கோரம் தரை பிளந்து அப்படியே தன்னை விழுங்கிவிடக் கூடாதா என்று அவளை நினைக்க வைத்தது.

“உண்மையைச் சொல்லு. இன்லண்டா, கவரா? சாந்தி கிட்ட குடுத்துப் போஸ்ட் பண்னச் சொன்னியா, இல்லையா?”

“இ  இ  இன்லண்ட் லெட்டர்..  ..”

“யாருக்குடி லெட்டர் எழுதினே? உன்னோட அந்தக் கள்ளக் காதலனுக்கா?” –  இவ்வாறு கேட்டுவிட்டு அவன் அவள் வயிற்றில் எட்டி உதைத்தான்.

“அம்மா! அய்யோ!” என்று கதறியபடி அவள் இரண்டடி தள்ளிச் சுருண்டு விழுந்தாள். வயிற்றினுள் ஏதோ பிசகிக்கொண்டது போல் உணர்ந்தாள்.

“உன்னோட அந்த ஓரகத்தியாளுக்கும் இருக்குடி வேட்டை. எங்க அண்ணா அவளை இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடப் போறான். அவன் என்னை விட முரடன். .. பட்டும் தெரியல்லியே இந்த மன்னிக்கு! ஒரு தரம் இங்கேர்ந்து ஓடிப் போனா. போய்ப் பிடிச்சு இழுத்துட்டு வந்து நாலு சாத்துச் சாத்தினோம். ரெண்டு மாசத்துக்கு ஒரே ஒரு வேளை மட்டும் அரை வயித்துக்குப் போட்டோம். தினமும் அடி, உதை, வசவு. இவ்வளவுக்கு அப்புறமும் உனக்காக  லெட்டரைப் போஸ்ட் பண்ணி யிருக்கான்னா அவளுக்கு எம்புட்டுத் திமிரு இருக்கணும்!.. யாருக்குடி லெட்டர்?”

“ரமான்னு என்னோட சிநேகிதிக்கு!” – தரையில் பாதியாய்ப் படுத்தபடி பதிலிறுத்த அவளை நெருங்கி மறுபடியும் அவன் ஓர் உதை விட்டான்.

“எந்திருடி, நாயே! என்னமோ டால்·பின் மாதிரி பாதி உடம்பைத் தூக்கிப் படுத்துண்டு போஸ் குடுக்கறா!”

தள்ளாடிக்கொண்டே தயா மெல்ல எழுந்து நின்றாள். கால்கள் தள்ளாடியதோடு, கண்கள் இருண்டு தலை சுற்றியது.

“ரமாவா, இல்லே, ரமேஷா? ஆமா? அந்த அவனோட பேரென்ன? அதான், உன்னோட அந்தக் கள்ளக் காதலன்!”

“சங்கரன்.”

“பொய் சொல்லாம சொல்லு. அவனுக்குத்தானே லெட்டர் எழுதினே?”

“இல்லே. என் ·ப்ரண்ட் ரமாவுக்குத்தான். உங்க மன்னியையே கேளுங்க.”

“அவளை என்னடி கேக்குறது? வேலிக்கு ஓணான் சாட்சி! ரெண்டு பேரும் பேசி வெச்சிண்டிருந்திருப்பேள் –  மாட்டிண்டா ரமான்னு சொல்லணும்னு! கல்யாணம்னு ஒண்ணு ஆனதுக்கு அப்புறமும் கள்ளக் காதலனுக்குக் கடுதாசியா எழுதறே, கடுதாசி?”

“சாமி சத்தியமா ரமாவுக்குத்தான்.”

அவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து உதட்டோரம் அதைத் தொங்கவிட்டபடி பேசினான்: “இப்ப நீ என்னோட பொண்டாட்டி. என் சொல்பேச்சுக் கேட்டுண்டுதான் நீ இருந்தாகணும். அப்படி இருக்க முடியாதுன்னா, அதுக்காக நீ வெளியே போயிடுன்னு நான் சொல்ல மாட்டேன். நீ இங்கேயேதான் இருப்பே. நான் சொல்றபடி கேட்டுண்டும் இருப்பே. வா, வா.  எழுந்து வா…  ..  ..”

தயா தன் தலை எழுத்தை நோவது தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று உணர்ந்த விரக்தியுடன் எழுந்தாள். ..

மறு நாள் காலையில் ரமணி தன் அண்ணனின் அறைக்குப் போனான். அந்த நேரத்தில், மாமியாரும் குளிக்கப் போயிருந்ததால், தயா சாந்தியிடம் முந்திய இரவு தன் கணவனின் கையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சுருக்கமாய்ச் சொன்னாள்.

“அய்யோ! காதுல ரத்தம் காஞ்சு பொருக்குத் தட்டி இருக்கே, தயா! நான்   அந்த ரெண்டு ராட்சசங்களும் கெளம்பிப் போனதுக்கு அப்புறம்  காதுல தடவறதுக்கு ஏதாவது களிம்பு கிளிம்பு இருக்கான்னு பாக்கறேன்.  அது சரி, அவருக்கு எப்படி அந்த விஷயம் தெரிஞ்சுதாம்?”

“தெரியல்லே. சொல்லல்லே.”

“ஏய், சாந்தி! வாடி இங்கே!”

“அய்யோ! என்னால உனக்கும் இப்ப அடி விழப் போறது.”

“விழட்டும். அடியும் உதையும் எனக்குப் புதுசா என்ன?  வாங்கி வாங்கி, மனசும் உடம்பும் எனக்கு மரத்துப் போயாச்சு. நீ பேசாம இரு. நீ எதுக்கு இப்ப அழறே?”

பிறகு, “இதோ வந்துட்டேன்.!” என்றவாறு அவள் அவசரமாக நகர்ந்தாள். அதற்குள் அவனே அங்கு வந்துவிட்டான்.

“ஏண்டி! ரமணி பொண்டாட்டி குடுத்த லெட்டரைப் போஸ்ட் பண்ணினியா நீ? யாரு கிட்டடி கேட்டே? கோவில் குருக்கள் ரமணி கிட்ட தற்செயலாச் சொல்லல்லேன்னா தெரிய வந்திருக்காது. கூட்டுக் களவாணித்தனமாடி பண்றீங்க ரெண்டு பேரும்?’

தயா சமையலறைக் கதவிடுக்கு வழியே கவனித்தாள். அவன் சாந்தியைப் பிடித்துத் தள்ளிய தள்லலில் அவள் அப்படியே மல்லாந்து விழுந்தாள். தரையில் அவள் தலை மோதியது. கழிவறையிலிருந்து அப்போதுதான் வெளிவந்த மாமியர் எந்தவிதச் சலனத்தையும் முகத்தில் காட்டாது, மிக இயல்பான குரலில், “என்னடா ஆச்சு? என்ன பண்ணினா அவ?” என்றாள்.

ஒன்று, மாமியார் கல்நெஞ்சுக்காரியாய் இருக்க வேண்டும், அல்லது, மகன்களின் கொடுமைகளைப் பார்த்துப் பார்த்து அவளுக்கும் உணர்ச்சி கெட்டுப் போயிருந்திருக்க வேண்டும் என்று தயா நினைத்தாள்.

“ரமணி பொண்டாட்டி குடுத்த லெட்டரை எடுத்துண்டு போய் இவ போஸ்ட் பண்ணியிருக்கா. யாரைக் கேட்டுண்டு செஞ்சான்னு கேளு! லெட்டர் எழுதினா புருஷன் மூலமாத்தான் போஸ்ட் பண்ணணும்கிற இந்த வீட்டு ரூல் இவளுக்குத் தெரியுமில்ல? அதான் அடி வாங்கறா.”

இதற்குள் சுதாரித்துகொண்ட சாந்தி மெதுவாக எழுந்தாள்.

“சின்னவ ரமணியோட அலமாரியிலேர்ந்து இன்லண்ட் லெட்டர் திருடி எடுத்திருக்கா. இவ அதை ரகசியமா போஸ்ட் பண்ணியிருக்கா. நீ எங்க போய்த் தொலைஞ்சே, ரெண்டு பேருமா இத்தனை அட்டுழியம் பண்ற வரைக்கும்?”

“மத்தியானம் கொஞ்சம் கண்ணசந்தேன். அப்ப பண்ணி யிருப்பா. அதுக்காக நான் கொட்டுக்கொட்டுனு உக்காந்திண்டிருக்க முடியுமா? எனக்குத் தூங்க வேணாமா? பொண்டாட்டிமார்களை அடக்கி வையுங்கடா. அதை விட்டுட்டு என்னை அடக்கப் பாக்காதங்கோ!”

“இத பாருங்கடி. இனி இது மாதிரி ஏதாவது தப்புத் தண்டா நடந்ததுன்னு தெரிஞ்சுது..  ..  ..? ஆம்மா!” என்று உறுமிவிட்டு அவன் அகன்றான்.

..  ..  .. அன்றிரவு கழிவறைக்குச் செல்லுவதற்காக, தயா, சாந்தி இருவருமே தற்செயலாக இரவு ஒரு மணிக்கு எழுந்தார்கள். மாமியார் தன்னறையில் குறட்டை விட்டுக்கொண்டிருந்தாள்.

“தயா! ரெண்டு பேரும் ஒரே நேரத்துல எழுந்துண்டதும் நல்லதுக்குத்தான். எனக்கு ஒண்ணு தோணித்து. உங்கிட்ட எப்ப சொல்றது, எப்படிச் சொல்றதுன்னு முழிச்சிண்டிருந்தேன். இனிமே இப்படிப் பாதிராத்திரிக்கு மேல எழுந்து பாத்ரூமுக்குப் போற சாக்கில சந்திச்சுப் பேசறதுதான் சரி.”
“என்ன சாந்தி தோணித்து?”

“நாம ரெண்டு பேரும் இந்த வீட்டை விட்டு ஓடிப் போயிடலாம்..  .. எங்க வீட்டுக்காரரு குடிச்சுட்டு மெய்ம்மறந்து தூங்குறாரு. உங்களவரு?”

“அண்ணன் எவ்வழி, தம்பியும் அவ்வழி! சொல்லு.”

“எப்ப கெளம்புறது, எப்படிப் போறது, கொள்றது இதை யெல்லாம் நாம பேசணும். நாளைக்குப் பேசலாமா?”

“இப்பவே கூட பேசலாமே? அம்மா ரூம் பக்கம் ஒரு கண்ணு வெச்சிண்டு பேசலாம். பாத்ரூமுக்கு வேணா அவசரமாப் போகணும்னா போயிட்டு வா.”

“நம்ம பிரச்னையை விடவும் அவசரமான விஷயம் இருக்கா என்ன! இது மாதிரி ஒரு நாள் ராத்திரி ரெண்டு பேரும் ஓடிப் போயிடலாம். ஆனா, நடு ராத்திரிக்கு மேல தனியாக் கெளம்பிப் போறதுன்றது ஆபத்தான விஷயமாச்சே?”

“இந்த ரெண்டுங்களோட பேண்ட், ஷர்ட்டை மாட்டிண்டு ஆம்பளை வேஷத்துலதான் போகணும். ஆனா அந்த அளவுக்கு நாம மேக் அப் பண்ணிக்க முடியுமா என்ன? அதெல்லாம் சினிமாவிலதான் நடக்கும்.”

“அச்சு அசல் ஆம்பளைகள் மாதிரி மீசை கீசை வெச்சுக்க முடியாட்டாலும், தூரத்திலேர்ந்து பாத்தா ஆம்பளைகள்னு தோணுற அளவுக்குப் பண்ணிக்க முடியுமே! பேண்ட் வேணா வேண்டாம். அதை விட லுங்கிதான் சரி. மேல ஷர்ட்டு. பின்னலை மறைக்கிறதுக்கு வேணா, பிச்சோடாப் போட்டுண்டு தலையில ஒரு துண்டால தலைப்பாகை கட்டிக்கலாம். கிட்ட வந்து கவனிச்சாத்தானே தெரியப் போறது?”

“அப்படின்றியா, சாந்தி? அப்ப சினிமாவில பண்ற மாதிரியே பண்ணிடலாம்ங்கறயா?”

“சினிமா வேற, நிஜ வாழ்க்கை வேறயா என்ன! இன்னும் சொல்லப் போனா, சில விஷயங்கள் நிஜ வாழ்க்கையில தான் சினிமாவை விடவும் சுவாரசியமாவும் திகிலாவும் இருக்கு. நான் படிக்காதவதான். ஆனாலும், இப்படிப் பண்றதைத் தவிர இவங்ககிட்டேர்ந்து தப்பிக்கிறதுக்கு வேற வழி இருக்கிறதாத் தெரியல்லே. நம்ம மாமனார் இப்ப காசி யாத்திரைக்குப் போயிருக்கிறதும் ஒரு தோதான சந்தர்ப்பம். அந்த மனுஷன் இன்னும் ஒரு வாரத்துல திரும்பிடுவார். அதுக்குள்ள நாம ஓடிப் போயாகணும்.”

“நீ சொல்றதும் சரிதான். அப்புறம் இன்னொண்ணு, சாந்தி. நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு லெட்டர் எழுதிக் கையெழுத்துப் போட்டு வெச்சுட்டுத்தான் கெளம்பணும்.”

“என்னன்னு?”

“புருஷனோட கொடுமை தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறதா! இல்லாட்டா, நம்மளைத் தேடிக் கண்டு பிடிச்சு இழுத்துண்டு வந்துடுவா ரெண்டு ராட்சசங்களும். அது மட்டும் இல்லே. இதனோட காப்பி போலீஸ் கமிஷனருக்கும் போயிருக்கு’ அப்படின்னும் அதிலே எழுதிடணும்!”

“நீ சொல்றது கரெக்ட், தயா. அப்படித்தான் பண்ணணும். இதுக்குத்தான் படிச்சிருக்கணும்கிறது.”

“படிப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லே, சாந்தி. பாக்கப் போனா, இந்த யோசனை உனக்குத்தானே தோணித்து?”

“ஒரு தரம் ஏற்கெனவே ஓடின அனுபவம் இருக்கே! அதான். ஆனா, இந்தத் தரம் தப்பு ஏற்படாம யோசிச்சுப் பண்ணலாம்!” என்று சாந்தி சிரிக்க, “அய்யோ! ராத்திரி ஒருமணி! சிரிக்காதே. முழிச்சுண்டுடப் போறா!” என்ற தயா சாந்தியின் வாயைப் பொத்தினாள்.

“எப்படித் தற்கொலை பண்ணிக்கப் போறதா எழுதலாம்?”

“அதெல்லாம் அவாளுக்கு எதுக்குச் சொல்லணும்? தற்கொலை பண்ணிக்கிறோம்னு மட்டும் சொன்னாப் போறும். லெட்டர் எழுதி ரெடி பண்றதுதான் பிரச்னை. ஆனா எங்கிட்ட டயரி இருக்கு. பேனாவும் இருக்கு. அதிலேர்ந்து ரெண்டு தாளைக் கிழிச்சா ஆச்சு. அப்புறம் ஸ்டேஷனுக்குப் போனதும் நம்ம வேஷத்தைக் கலைச்சுடணும். நுழையறதுக்கு ஒரு நிமிஷம் முந்தி வேஷ்டியையும் சட்டையையும் ஈசியா எடுத்துடலாம். தலையை மட்டும் புடவைத் தலைப்பால முக்காடு போட்டுக்கலாம். ..  ..  .. மீதியை நாளைக்குப் பேசலாம்.”

சிரித்தபடி இருவரும் பிரிந்தார்கள்.

–    தொடரும்

jothigirija@live.com

Series Navigationபேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *