ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்

This entry is part 20 of 27 in the series 29 செப்டம்பர் 2013

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்

 

 

கற்பனை விரிவுகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைளைகளில் தனி இடம் உண்டு.. ஆனால் நமது பனியின் நோக்கம் அத்தகைய அழகியல் கற்பனைகளில் மூழ்கி விடாமல் அவற்றிற்கு பின்பு உள்ள உண்மைகளை வெளிக் கொணர்வதில் இருக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவனத்திற்கு வந்த பிறகு மூன்று அசுரர்களைக் கொன்றதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.வாத்சாசுரன்,பகாசுரன் மற்றும் ஆகாசுரன் என்ற மூன்று அரக்கர்கள் அவர்கள்.வாத்சாசுரன் கன்றின் வடிவிலும்,பகாசுரன் கொக்கு வடிவிலும், ஆகாசுரன் மலைப்பாம்பு வடிவிலும் வந்ததாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. ஒரு சிறுவனுக்கு தன்னுடன் உள்ள நண்பர்ககளை காக்கும் பொருட்டு இது போன்ற உயிரினங்களை கொல்வது ஒன்றும் அத்தனை கடினமான காரியமாக இராது.ஆனால் இந்த சம்பவங்கள் குறித்த தகவல் விஷ்ணு புராணத்திலோ,மகபாரதத்திலோ அல்லது ஹரிவம்சத்திலோ குறிப்பிடப் படவில்லை. யஜுர் வேதத்தில் அக்னி வழிபாட்டில் இந்த நிகழ்ச்சிக்கு வெகு தொலைவில் ஒரு சில குறிப்புகள் உள்ளன.

“ ஹே அக்னியே! ஏமாற்றுக்காரகளையும் கொலைபாதகர்களையும், அசூயை கொண்டவர்களையும், எங்களிடம் குறை காண்போரையும் அழித்து விடு”

ஸ்ரீமத் பாகவத ஆசிரியர் தனது கற்பனை புனைவை மெருகூட்ட மேலே சொன்ன வேத வாக்கியங்களிளிருந்து கையாண்டிருப்பாரோ?

பிரம்மா  ஸ்ரீ கிருஷ்ணரை சோதிக்க பசுக்களையும், இடையர்குல சிறுவர்களையும் ஒரு குகையில் அடைத்து வைத்து விடுவதாக பாகவதம் கூறுகிறது. இது தெரிந்தவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தனை பசுக்களையும் இடைச் சிறுவர்களையும் அவரவர் போன்ற தோற்றத்துடன் மீண்டும் படைத்து விடுகிறான். எனவே பசுக்களும் , இடைச் சிறுவர்களும் மாயமாக மறைந்து போன விஷயம் ஒருவருக்கும் தெரியாமல் போய் விடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் செயல் திறனின் முழுமையும் பிரம்மாவிற்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை விளக்க இந்த நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

மற்றொரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் பெரிதாகப் பரவிய காட்டுத் தீயை தன வாய்க்குள் உரிந்து உள் இழுத்து பிருந்தாவன மாக்களை காப்பாற்றினான் . பாற்கடலை கடையும்பொழுது  முதலில் வெளி வந்த ஆலாகால விஷத்தை பரமேஸ்வரன் தான் அதை உட்கொண்டு தேவர்களை காப்பாற்றியதாக கதை ஒன்று உள்ளது. சிவனைப் பின் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் நெருப்பை விழுங்க வேண்டியதாயிற்றா? சைவர்களுக்கும்,வைஷ்ணவர்களுக்கும் எப்பொழுதும் கருத்து மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். மிகைப் படுத்துதல் மூலம் தத்தம் கடவுள்களை உயர்த்துவது என்பது தவிர்ப்பதற்கில்லை.

அடுத்து நாம் காளிங்க நர்த்தனத்திற்கு வருவோம்.

காளிங்கன் என்ற பெயர் கொண்ட கொடிய விஷப் பாம்பு ஒன்று தன்னுடைய மிகப் பெரிய குடும்பத்துடன் யமுனை நதி நீரால் உண்டான மடு ஒன்றில் வசித்து வருகிறது. விஷ்ணு புராணத்தில் அதற்கு மூன்று தலைகளும்,  ஹரிவம்சத்தில் அதற்கு ஐந்து தலைகளும் , ஸ்ரீமத்  பாகவதத்தில் அதற்கு ஆயிரம் தலைகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.  அவற்றின் கொடிய நஞ்சு காரணமாக அந்த மடுவில் வேறு உயிரினங்கள் வசிக்க முடியாமல் போய்விடுகிறது. மறந்து போய் மடுவின் நீரைக் கால்நடைகள் பருகினால் மறுகணமே செத்து மடிகின்றன. புல் பூண்டு கூட முளைக்காமல் போய் விடுகிறது .காளிங்கனை வெல்லவும் பிருந்தாவன ஆயர்களை மன பீதியிலிருந்து விடுவிக்கவும் ஸ்ரீ கிருஷ்ணர் முனைகிறார். மடுவில் குதிக்கிறார். காளிங்கனும் ஸ்ரீ கிருஷ்ணரை நெருங்குகிறான் .கண்ணனை தாக்குகிறான் .ஸ்ரீ கிருஷ்ணர் காளிங்கனின் தலை மேலே ஏறி நிற்கிறார். கையினில் புல்லாங்குழலை பிடித்து ஊதியபடியே அதன் மேல் நடம் புரிகிறார். காளிங்கனும் இந்த நடனத்தைத் தாங்க முடியாமல் வாய் வழியாக இரத்தம் கக்கத் தொடங்குகிறான். காளிங்கனின் மனைவியர் கதறியபடி ஸ்ரீ கிருஷ்ணரை இரைஞ்சத் தொடங்க ஸ்ரீ கிருஷ்ணர் மனம் இரங்குகிறார்..காளிங்கனை அவ்விடத்தை விட்டு அகன்று கடலில் சென்று வாழ கட்டளை இடுகிறார். எனவே மடுவும். மக்களும்,மாக்களும் காப்பாற்றப் படுகின்றன.

மேலே கூறப் பட்டது ஒரு வீர தீரம் மிகுந்த சிறுவன் தன்னை சார்ந்த மனிதர்களை தீய சக்தியிடமிருந்து காப்பாற்றுவதற்கு எடுக்கும் செயலின் அழகியல் சார்ந்த கற்பனைப் புனைவு. இந்த காளிங்க நடனமானது பௌராணிகர்களால் பெரிதும் கவரப் பட்டு அவர்களின் கற்பனை புனைவின் விரிவு காலம் செல்ல செல்ல வளர்ந்து கொண்டு சென்றதே அன்றி சிறிதும் குறையவில்லை. சிற்ப சாஸ்திர நுணுக்கங்களுடன் மேலும் மேலும் மெருகேற்றப் பட்ட காளிங்க நர்தன கண்ணன் சிற்பத்தின்  கலை நயத்தை காணும் கண்களுக்கு இந்து மதத்தை இழிவாக பேச மனம் வருமா என்ன?

ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவன மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற கோவர்த்தனகிரியை குடையாக தன் கரங்களால் ஏழு நாட்கள் தாங்கியதாகக் கூறப்படும் புனைவில் ஒளிந்திருக்கும் மெய்ப் பொருளானது சுவாரஸ்யமானதும் இக்காலத்திற்கு பொருந்தி வருவதுமாகும்.

பிருந்தாவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைக் கடவுளுக்கு ஊர் மக்கள் விழா எடுப்பது வழக்கம்.அந்த சடங்கின் வெறுமையை ஸ்ரீ கிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.” இந்திரனை பூசிப்பதை விட்டு விட்டு நம்மை சுற்றி உள்ளவர்களின் மீது கவனம் செலுத்துவோம்.ஆடு மாடுகளை நன்கு பராமரிப்போம்.சு ற்று சூழலையும் , தாவர ஜங்கமங்களையும் நன்கு பாது காப்ப்போம். நாம் வாழும் பகுதியை நன்கு பராமரிப்போம்.” என்கிறார்.

பிருந்தாவன மக்கள் அந்த இளைய தலைவனின் சொல்லிற்குக் கட்டுப்பட்டு அந்த வருடம் இந்திரனுக்கு விழா எடுப்பதை தவிர்க்கின்றனர். ஏமாற்றமடைந்த இந்திரன் அவர்கள் குடியிருப்பு முழுவதையும் பாழ் படுத்தும் நோக்கத்துடன் கட்டுக்கடங்காத மழையை பொழியச் செய்கிறான்.எனவே ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை பெயர்த்தெடுத்து தன ஒற்றைக் கரத்தால் தூக்கி பிருந்தாவன மக்களின் மேலே  குடை போல் பிடித்துக் காப்பாற்றுகிறான். ஏழு நாட்கள் சென்ற பின்பு இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு

ஸ்ரீ கிருஷ்ணனுடன் நல் உறவை மேம்படுத்திக் கொள்கிறான்.

கோவர்த்தன கிரி இன்னமும் இருக்கிறது.மிகச் சிறிய மலை. இதன் தோற்றம் விநோதமாக இருக்கிறது.ஏ தோ ஒரு பெரிய இயற்கை உந்து சக்தி அந்த மலையை அடியோடு பெயர்த்து வேறு இடத்தில் நிறுவியது போன்ற தோற்றம். ஒரு வேளை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு அந்த மலை இயற்கை சீற்றங்களால் இடம் பெயந்திருக்கக் கூடும். அத்தகைய பெயர்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணர் செய்தார் என்று கற்பனை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிகழ்ச்சிக்கு மகாபாரதத்தில் கூட இடம் இருக்கிறது. சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணரை நாக் கூசும்படி ஏசும் சமயம் எருறுபுப் புற்று போன்ற கோவர்தனகிர்யை தூக்கிய பெருமை உடையவன் எனக் கூறுகிறான். நாம் ஏற்கனவே ஒப்புக் கொண்டது போல மகாபாரதத்தில் காணப்படும் மிகை இயற்கை விஷயங்கள் காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்களுடன் தன நிஜத் தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் யாதெனில் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை சார்ந்த மக்களின் சுற்று சூழலில் அதிக அக்கறை கொண்டவர் என்பதாகும்.

ஆயர்பாடி கோபிகைகள்

ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு கிருஷ்ணனின் கோபிகா லீலை என்பது வைணவ சம்பிரதாயத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றாகவே கருதப் படுகிறது.ஸ்ரீ கிருஷ்ண கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளவர்களுக்கு இந்த உறவு பெரும் தாக்கத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தும். இந்த உறவை ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒரு கரும் புள்ளியாகவே மற்றவர்  பார்க்கின்றனர்.

மகாபாரதத்தில் இந்த கோபியரைப் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லை.சபா பர்வத்தில் கிருஷ்ணர் மீது மைல் கணக்கில் குற்றம் ஒப்பிக்கும் சிசுபாலனுக்கு இப்படி ஒரு உறவு கிருஷ்ணனுக்கு கோபிகைகளுடன் இருந்தது என்று தெரிந்திருந்தால்  அதையும் பட்டியலில் சேர்த்திருப்பான். எனவே கண்ணன் கோபிகா உறவு என்பது பிற்காலத்தில் புனையப் பட்ட கற்பனை என்ற முடிவுக்கே வர வேண்டி உள்ளது.

இருந்த போதிலும்திரௌபதி வஸ்திராபரணத்தின் பொழுது திரௌபதி தன வேண்டுதலில் கோபிகா பிரியனே என்று குறிப்பிடுகிறாள்.

இந்த உறவு இயற்கையான ஒன்றுதான். பிருந்தாவனத்தில் கண்ணன் மீது காதல் வயப் படாதவர்களே இல்லை என்று கூறலாம். ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இவன் மேல் மோக வயப் படுகின்றனர். இனிமையான சுபாவம் ஸ்ரீ கிருஷ்ணருடையது.அவரது வாலிப வயதில் பொலி காளையைப் போல் அவர் இருந்திருக்க வேண்டும். அந்த காலத்தில் இளையவர்கள் ஆண்களோ பெண்களோ அவரவர் தோழர்கள் மற்றும் தோழியருடன் இனைந்து, மகிழ்ந்து, சல்லாபித்து ஆடுவதும்  பாடுவதும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்.

இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து கோபிகைகளாலும் மோகவயப்பட்ட ஒரு ஆண் அழகன்.. காலம் செல்ல செல்ல நாகரீகம் என்ற பெயரில் சமூக மாற்றங்களினால் பல சமூகங்களில் ஒரு யுவனும் ஒரு யுவதியும் தனியாக பேசுவது குற்றம் என்றானது .சாதாரணமாக சிரித்து பேசுவது கூடத் தவறாகக் கருதப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பிருந்தாவனம் ஒரு திறந்த , ஒளிவு மறைவற்ற கலாசாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் .எனவே கோபிகைகளுடனான உறவு அவர்களுக்கு தவறாக தோன்றவில்லை.

பின்னர் சமூகம் மாறுபடத் தொடங்கியது. கிருஷ்ண லீலை மீண்டும் மீண்டும் வருணிக்கப் பட்டபொழுது அது பல்வேறு வர்ணங்களைப் பூசிக் கொண்டது.கிருஷ்ண பக்தர்களின் அமானுஷ்ய கூறுகளும்,தத்துவங்களும் இந்த உறவின் மீது ஏற்றப் பட்டு விளக்கம் கொடுக்கப் பட்டது. தத்துவப் போர்வையில் ஸ்ரீ கிருஷ்ணரின் ராசா லீலை பல்வேறு வ்யாக்யானங்களைப் பெற்று விட்டது.

Series Navigationகடவுளும் வெங்கடேசனும்முக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *