இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர்.
தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்” என்ற கம்பனும்,
சிட்டுக்குருவிகள் கூட கூடுகட்டப் பயப்படும், பொட்டல்வெளியான சிறுகூடற்பட்டியிலே பிறந்து, “போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று ஐம்பத்திரண்டு வயதுவரை வாழ்ந்து சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த முத்தையாவான கண்ணதாசனும் தமிழன்னையின் இரு கண்களைப் போன்றவர்கள்.
கம்பன் பாட்டன் என்றால் கண்ணதாசன் பேரன். பாட்டனைப் போற்றி அவன் சொத்தான தமிழை வளர்த்தவனே கண்ணதாசன். கண்ணதாசனோ தன்னைக் கம்பனின் மகனாகவே கருதுகிறார்.அதனால்தான்
”கம்பன் மகனாக நான் மாற வேண்டும்;
கன்னித்தமிழாலே உனைப்பாட வேண்டும்”
என்று பாடுகிறார்.
என்றைக்கும் இம்மண்ணில் கம்பன் கவிதை நிலைத்திருக்கும் எனும் நம்பிக்கை கவியரசருக்கு உண்டு. அந்த நம்பிக்கையினால்தான்,
”காலமழை ஆழியிலும்
காற்றுவெளி ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு—அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு
என்று அவரால் எழுத முடிகிறது.
கம்பன் தொட்டதையெல்லாம் இவரும் தொடர்ந்து எழுதிக் கொண்டு போகிறார். கம்பன் சீதா பிராட்டியை, வைதேகி, மைதிலி, ஜானகி, சீதை எனும் பெயர்களால் தனது பாடல்களில் குறிப்பிடுகிறான்.
கன்ணதாசனும் எல்லாப் பெயர்களையும் தேவைப் பட்டபோது பயன்படுத்துகிறார்.
”வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ?”
என்றும்,
”ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி” என்றும்
’அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்’ என்றும்,
”கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா” என்றும் கவியரசர் பாடுகிறார்.
அயோத்தி நாட்டைக் கம்பன் வர்ணிக்கும்போது, அந்நாட்டில் எல்லாரும் எல்லாச்செல்வமும் பெற்றுச் சிறந்திருந்தார்கள்; ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை என்கிறான்.
”எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ”
என்ற கம்பன் பாட்டை அப்படியே உள்வாங்கித்தான் கண்ணதாசன் பாடுகிறார். ஆமாம்! அவரே நடித்த பாட்டு இது.
”எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்—இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”
கம்பன் பாடிய இராமகாதையின் நோக்கமே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான். அதனால்தான் சுந்தர காண்டத்தில் இராமனுக்கு அனுமன் மூலம் செய்தி சொல்லும் சீதை,
’வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்’
என்கிறாள். கவியரசர் கண்ணதாசன் இராம அவதாரத்தைப் பாடும்போது “ஒருவனுக்கு உலகில் ஒருதாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்” என்பார். அதுமட்டுமல்ல; திரைப்படத்தில் ஒருதலைவன் தன் தலைவியிடம்,
:உன்னை அல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்”
என்று பாடுவான். இவையெல்லாம் கண்ணதாசனுக்குக் கம்பனால் ஏற்பட்ட தாக்கமே.
இராமன் “மன்னவன் பணியென்றாலும் நின்பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?” என்று கூறிக் கானகம் புறப்படுகிறான். ஆனால் அண்ணனுக்கு முடி இல்லை என்றதும் தம்பி இலக்குவன் சீற்றம் கொள்கிறான். சிங்கத்துக்கு இடவேண்டிய உணவை ஒரு நாய்க்கு இடலாமோ? என்று கேள்வி கேட்கிறான்.
இராமனோ ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” என்று கூறி தம்பியின் சினம் தவிர்க்க முயல்கிறான். அதாவது நதியில் நீர் இல்லாமல் போவது நதியின் குற்றம் இல்லை. இதில் யாரும் பிழை செய்யவில்லை, எல்லாம் விதியின் பிழை எனும் கம்பன் கருத்தைக் கண்ணதாசன் கையாள்கிறார். அதே உவமையை அப்படியே எடுத்து,
“நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதிசெய்த குற்றமில்லை,
விதிசெய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?” என்று கவியரசர் எழுதும்போது நம்கண்முன் கம்பன் வரிகள் வந்து நிற்கின்றன.
மேலும் இலக்குவன், ”நீர் உள எனின் உள மீனும் நீலமும்; நானும் சீதையும் ஆர் உளம் எனின் உளம் அருள்வாய்’ என்கிறான். அதாவது இராமனைத் தன்ணீருக்கு உவமையாக்கிக் குளத்தில் தண்ணீர் இருந்தால்தான் மீனும் பூக்களுமிருக்கும், நீ இருந்தால்தான் நானும் சீதையும் இருப்போம் என்பது இலக்குவன் கருத்து.
இதைத்தான் கண்ணதாசன் “குளத்திலே தண்ணியில்லே, கொக்குமில்லே, மீனுமில்லே” என்று பாடுவார்.
இந்திரசித்தன் தன் தந்தையான இராவணனிடம் சீதையை விட்டுவிடுங்கள், இராம இலக்குவர் சினம் தணிந்து திரும்பிச் சென்று விடுவர் என்று கூறுவான். இராவணனோ,
”முன்னையோர் இறந்தார் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும்
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும்
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கி யான் இந்நெடும் பகை தேடிக் கொண்டேன்’
என்பான். அதாவது இப்போரில் முன்பு இறந்தவர்களும், இப்போது இறவாமல் இருப்பவர்களும், நீயும், அவர்களைப் போரில் வென்று வெற்றி தருவீர்கள் என்று நான் இப்போரை மேற்கொள்ளவில்லை. என்னையே நம்பித்தான் இப்பெரிய பகையை நான் தேடிக் கொண்டேன் என்று இராவணன் கூறுகிறான். இதைத்தான் கண்ணதாசன் ”யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா” போங்க” என்று பாடுகிறார்.
சூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து எடுத்துவந்து அவளோடு அவன் வாழவேண்டியதை வற்புறுத்துவாள். அப்போது அவள் கூறுவாள்.
”பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாகத் தோள்வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி”
என்பது கம்பன் பாட்டு.
வீரம் பொருந்தியவனே, சிவன் பார்வதியை இடப்பாகத்தில் வைத்தான், திருமால் இலக்குமியைத் தன் மார்பில் வைத்தான், பிரமன் சரஸ்வதியைத் தன் நாவில் வைத்தான், சீதையை நீ அடைந்தால் எங்கு வைப்பாய்? என்பது இதன் பொருள்.
இதைத்தான் கண்ணதாசனும் “பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான், அந்தப் பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான், பாற்கடலில் மாயவனோ பக்கத்தில் வைத்தான்” என்று பாடுவார்.
கம்பன் மருத நாட்டுவளம் பற்றிப் பாடும்போது எல்லாம் உறங்குகின்றதென்று பாடுவான்.
நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு, தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை, துறையுடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம், பொழிலிடை உறங்கும் தோகை
என்று கம்பன் பாடுவதை வைத்துக் கண்ணதாசன்
”பூ உறங்குது, பொழுதும் உறங்குது, நான் உறங்கவில்லை” என்றும்
”கார் உறங்குது, கழனியில் நெல் உறங்குது, பூ உறங்குது, பொய்கையில் நீர் உறங்குது” என்றும் பாடுவார்.
”தோள் கண்டார், தோளே கண்டார்” என்று இராமன் தோளழகைப் பெண்கள் பார்த்ததைப் பாடும் கம்பன் அடிதான் கண்ணதாசனின் “தோள் கண்டேன், தோளே கண்டேன்” எனும் பாடலாயிற்று.
கோசல நாட்டு வளம் கூற வந்த கம்பன் ஒரு பாடலில் தேன் தேன் என்றுபாடுவான்.
ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும்
சோலைவாய்க் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க
வேலைவாய் மடுப்ப கண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ
இப்பாட்டில் கம்பன் ஐந்து இடங்களில் தேன்வைத்துப் பாடினான் என்றால் அவன் வழிவந்த கவியரசர் “பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்” எனத் தொடங்கும் பாட்டில் முப்பத்தாறு தேன்களை வைத்துப் பாடி உள்ளார். அதேபோல
“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்”
என்ற பாடலில் கம்பன் எட்டு வண்ணம் வைத்தான் என்றால் கண்ணதாசனோ “பால் வன்ணம் பருவம் கண்டு” என்று தொடங்கும் பாட்டில் முப்பத்திரண்டு வண்ணம் வைத்துள்ளார்.
இப்படி கம்பன் போட்ட பாதையில் கவியரசர் வெற்றிப் பயணம் செய்தார்.
அவருக்கும் கம்பனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அவரே பாடுவார்.
ஒரு கவியரங்கில் பாடுகிறார்.
”எப்படியோ எனக்கும் கம்பனுக்கும் தொடர்பு உண்டு,
செப்புவதெல்லாம் செந்தமிழாய் வருவதாலே, ஒருவேளை அக்காலம் கம்பன் வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்தேனோ?
கம்பனிடம் சொல், சந்தம் கடன் கேட்டேன். ஏதொன்றும் வட்டியில்லை”
கண்ணதாசன் என்னதான் இருந்தாலும் செட்டி நாட்டுக் கவிஞரல்லவா? கணக்கையும் வட்டியையும் விட முடியாதன்றோ?
கம்பன் புகழ் வாழுமட்டும் கவியரசர் கண்ணதாசனின் புகழும் வாழும்.
- திண்ணையின் இலக்கியத் தடம் – 2
- ”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்
- ஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்
- வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
- கு சின்னப்ப பாரதி அறக்கட்டளை
- கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்
- உயிர்த் தீண்டல்
- கடல் என் குழந்தை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)
- படிக்கலாம் வாங்க..
- தாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. !
- மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29
- கம்பனும் கண்ணதாசனும்
- மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!
- நீங்காத நினைவுகள் – 17
- மதிப்பெண்ணின் மறுப்பக்கம்
- மயிரிழையில்…
- கடவுளும் வெங்கடேசனும்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்
- முக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் 26
- கிம்பர்லிகளைக் காணவில்லை
- கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.
- எண்பதுகளில் தமிழ் இலக்கியம்
- புத்தா ! என்னோடு வாசம் செய்.
- குட்டி மேஜிக்