நீங்காத நினைவுகள் – 17

This entry is part 16 of 27 in the series 29 செப்டம்பர் 2013

 

 

செப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் பெற்றோர் என்று இரண்டு வகைகள்?’ என்கிறீர்களா? அது அப்படித்தான்! ‘புகழ் பெற்றோர் எல்லாருமே உண்மையில் பெரியமனிர்கள் அல்லர்; பெரியமனிதர் யாவருமே புகழ் பெற்றோர் அல்லர்’ – ‘All the popular men are not really great and all the great men do not become popular’ எனும் பொன்மொழியைப் படித்ததன் விளைவு!

செப்டம்பரில் பிறந்தவர்களில் அறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரை அவர்கள், பேராசிரியர் கல்கி அவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை பேசப் போகிறது.

பதவியில் இருக்க முடிந்த வரையில், வாயையும் எழுதுகோலையும் மூடிக் கொண்டிருந்து விட்டு, இனித் தமது பதவிக்காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், போகிற போக்கில், இந்திய அரசு இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த விதத்தை – திறமையற்ற நிர்வாகம், முறையற்ற செயலாட்சி (Mismanagement and maladministration) என்று – விமர்சித்துவிட்டுப் போனார். தாம் பதவியில் இருந்த நாள் வரையில் இதை ஏன் அவர் சொல்லவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரிய தத்துவ ஞானி என்றும், பேராசிரியர் என்றும் புகழப்பெற்ற இவருக்கு சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசஃப் ஸ்டாலின் அவர்களின் பேட்டி அவர் தேடாமலே கிடைத்தது என்று சொல்லுவார்கள். வேறு எந்த நாட்டுத் தூதுவரையும் ஸ்டாலின் சந்தித்தே இல்லையாம். அந்த அளவுக்கு அனைத்துலகப் புகழும், மரியாதையும் அவருக்கு இருந்தது. இருவரும் சந்தித்த போது கடவுள் பற்றிய விவாதம் அவர்களிடையே எழுந்ததாம்.  விவாதத்தின் முடிவில், உலகத்தைப் படைத்தவன் என்று யாரும இல்லை, அது சூனியத்திலிருது உண்டாயிற்று என்று ஜோசப் ஸ்டாலின் கூற, ‘ அப்படியானால் அந்தச் சூனியத்தைப் படைத்தது யார்?’ என்று ராதாகிருஷ்ணன் வினவ, ஸ்டாலின் மவுனமாக இருந்ததாக எதிலோ படித்த நினைவு. தவறான தகவலோ சரியானதோ, தெரியாது.

இந்தத் தத்துவ ஞானி பற்றி அவர் மகன் ஆர். கோபால் எனும் பேராசிரியர் அவர் தம் தந்தை என்று கூடத் தயவு தாட்சண்ணியம் காட்டாமல் அவர் தன் அம்மாவுக்குத் துரோகம் செய்த கணவன் என்று வெளிப்படையாய்ச் சாடியுள்ளார்.  பெரிய மனிதர்களில் சிலர் உள்ளும் புறமும் வேறு வேறாக இருப்பார்கள் போலும்!

மற்றொரு குடியரசுத் தலைவர்.  ஊழலே செய்யாதவர், கைசுத்தம் நிறைந்தவர் என்றெல்லாம் புகழப்பெற்றவர். மாநில அளவில் அமைச்சராக இருந்தவர்.  பதவிக்காலம் முடிந்ததும், சொந்த வீடு இருப்பவர்க்கு அரசு வீடு கிடைக்காது என்பது சட்டம். எனவே, பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்குச் சில நாள்களே இருந்த போதோ, அல்லது விலகிய உடனேயோ, அவர் தமது வீட்டை மகனுக்கோ மகளுக்கோ கொடுத்துவிட்டுத் தமக்குச் சொந்தமாய் வீடு கிடையாது என்று சொல்லி அரசு வீட்டைக் குடியிருக்கப் பெற்றுக்கொண்டவர். அரசு அவருக்கு வீட்டை வழங்கிய போது சட்டப்படி அவருக்குச் சொந்தமாய் ஒரு வீடு இல்லைதான்.  ஆனால், அரசு வீட்டை இலவசமாய்ப் பெறுவதன் பொருட்டுக் கைவசம் இருந்த வீட்டை விற்றுவிட்டோ அல்லது யாருக்கோ வெகுமதியாய்க் கொடுத்துவிட்டோஓ தனக்கு வீடு இல்லை என்று சொல்லுவது பொய் சொல்லுவதற்கு இணைதானே? அது நியாயமான செயல்தானா?

வேறொரு குடியரசுத்தலைவர் தம் குடும்பப்பட்டாளம் முழுவதையும் குடியரசு மாளிகையில் குடியமர்த்தியது நமக்குத் தெரியும். பேரன் பேத்தியர் குடும்பங்கள் கூட இந்தக் கும்பலில் அடக்கம் என்று சொல்லப்பட்டது! அயல் நாடுகளுக்கும் ஒரு கும்பலையே தம்மோடு அரசுச் செலவில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தவர். சட்ட விரோதமாய்ப் பரிசுப் பொருள்களை யெல்லாம் அள்ளிச் சென்றவர்.

இன்னும் ஒருவர் ஆண்டுதோறும் அரசின் செலவில் திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர். மனிதர்களைதான் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால், கடவுளையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. சொந்தக் காசில் திருப்பதிக்கு வராதவர்க்கும் ஏழுமலையானின் அருள் கிடைக்கும் என்று நினைக்கும் இவர்களின் அறியாமையை என்னென்பது! இவ்வாறு ஏழுமலையானை ஏமாற்றுவதாக எண்ணித் தம்மைத் தாமேயும் ஏமாற்றிகொண்டிருந்த இந்தக் குடியரசுத் தலைவர் போகிற போக்கில் தம் வீட்டை ஒக்கிடுவதற்கென்று சட்ட விரோதமாக நாற்பது லட்சம் ரூபாய் அரசிடமிருந்து பெற்றவர். குடியரசுத் தலைவர் என்பதற்காகப் பாராளுமன்றம் இந்தச் சலுகையை இவருக்கு அளித்தது! இது, அதிகாரப் பிச்சை என்பார்களே, அதுவா, இன்றேல் பகல் கொள்ளையா!

இவர்களிடையே நம் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களைப் பற்றி நினைக்கும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது! அவர் நினைத்திருந்தால் தம் சகோதரரின் குடும்பத்தைத் உடனழைத்து வந்து துணைக்கு வைத்துக் கொண்டிருந் திருக்கலாம். ஆனால், தாம் மணம் செய்து கொள்ளாதவர் என்பதால் தமக்குக் குடும்பம் இல்லை என்று கூறி அந்த மாளிகையில் ஒரே ஓர் உதவியாளரோடு தனியாக வாழ்ந்துவிட்டவர். இந்தக் காலத்திலும், இப்படியும் சிலர் இருப்பது  பெருமைக்குரிய விஷயந்தான். எத்தகைய நேரெதிர்த் துருவங்கள்!

அறிஞர் அண்ணாதுரை அவர்களும் செப்டம்பர் மாதம் தான் பிறந்தார். நாள்கள் செல்லச் செல்லத் தம் பழைய கொள்கைகளைத் துறந்து புது மனிதராய்த் தம்மை மாற்றிக்கொண்டார்.

அந்நாளைய தபால்தந்தி இலாகா மைய அரசு அமைச்சர் எஸ்.கே. பாட்டீல், சென்னையில் தபால் இலாகாத் தலைமையாளரின் அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைக்க வந்த போது அறிஞர் அண்ணாதான் தமிழகத்தின் முதலமைச்சர். அந்த அலுவலகப் பணியாள் என்னும் முறையில் அத்திறப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆங்கிலத்தைக் கூடிய விரைவில் புறக்கணித்து ஹிந்தியை இந்தியாவின் அரசு மொழியாக ஆக்க வேண்டியதன் அவசியம் பற்றி எஸ்.கே. பாட்டீல் அவர்கள் தம் உரை நடுவே குறிப்பிட்டார்.

அண்ணா அமைதியான குரலில், ஆனால் அழுத்தந்திருத்தமாய், ஆணித்தரமான முறையில், ஆங்கிலத்துக்கு ஆதரவாய் முழங்கினார். அவர் வெளியிட்ட கருத்தின்போது மக்கள் அடிக்கடி கைதட்டினாலும், அவர் சொன்ன ஒரு வாக்கியத்துக்கு மிகவும் பலத்த கையொலி எழுந்தது.                     

“நாம் எந்த மொழியில் நம் எண்ணங்களை நாவினால் பரிமாறிக் கொள்ளுகிறோம் என்பதை விடவும், அந்தப் பரிமாற்றத்தின் போது நம் இதயங்கள் எந்த அளவுக்கு நெருங்கி உறவாடுகின்றன என்பது அதிக முக்கியமானது” எனும் பொருளில் அமைந்த வாக்கியத்ததின் ஒரு பகுதிக்குத்தான் அவ்வளவு பலத்த கையொலி. – “It is the language of the hearts that matters” என்று அவர் குறிப்பிட்டது இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது. அந்தப் பெரிய முழு வாக்கியம் ஞாபகமில்லை. உதடுகள் வெற்றுத்தனமாய்ப் பேசி உறவாடுவதை விடவும் இதயங்களின் நெருக்கம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எவ்வளவு உன்னதக் கருத்து! அப்போது, எஸ். கே. பாட்டீல் அவர்களின் முகத்தில் அசட்டுப் புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது.

அண்ணா அவர்களை முதன் முதலாய் நெருக்கத்தில் பார்த்தது அன்றுதான். ஒலிப்பதிவான அவர் தமிழ்ப் பேச்சுகளைக் கேட்டதுண்டு என்றாலும், ஆங்கிலத்திலும் அதே சரளத்தோடு ஆற்றொழுக்கு நடையில் பேசக்கூடியவர் என்பது அன்று தெரிந்தது. மக்களவையில் அவரது கன்னிப் பேச்சைக் கேட்டு அன்றைய பிரதமர் ‘அசந்து’ போய்ப் பாராட்டியதில் வியப்பதற்கு இல்லைதானே?

எங்கள் அலுவலகத் தலைமை அலுவலரைக் காண ஒரு நாள் ஓர் அன்பர் வந்திருந்தார்.  அவர் பேச்சு வாக்கில் ஒரு தகவலைச் சொன்னார். அண்ணா முதலமைச்சராக இருந்த போது, தி.மு.க. தொண்டர் ஒருவர் அப்போதைய மாநகரத் தந்தையை நேரில் பார்த்துத் தம் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தரும்படி கேட்டாராம். அவர் முந்நூறு ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். அந்த ஏழைத் தொண்டரிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் பிறகு வந்து பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணாவைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த அண்ணா உடனே ரூ. 300-க்குத் தம் சொந்த வங்கிக் கணக்குக் காசோலை ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்துக் கொண்டு போய்க் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அவர் மேயரைச் சந்திக்க அஞ்சியிருக்கிறார்.  ஆனால் அண்ணா அவருக்குத் தைரியம், சொல்லி மேயரிடம் போகச் சொல்லியிருக்கிறார். அப்புறம் என்ன நடந்தது என்கிற விவரத்தை யெல்லாம் அவர் கூறவில்லை.  ஆனால் சிரித்துவிட்டு, வேலை அந்தத் தொண்டரின் மகனுக்குக் கிடைத்துவிட்டது என்று மட்டும் சொன்னார். மேயருக்கு அண்ணாவிடமிருந்த நல்ல ‘டோசு’ம் கிடைத்தது என்று தெரிவித்தார்.

தமக்குக் கீழே பணி புரிந்துகொண்டிருந்த பிற அமைச்சர்களின் தன்மை, தரம் ஆகியவை பற்றி நன்கு அறிந்திருந்ததால் அவர்களை வைக்க வேண்டிய இடங்களில் வைத்திருந்ததாய்ச் சொல்லுவார்கள்.

பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேரக் கண்டால் பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி என்று தொடக்க நாளில் சொல்லிக்கொண்டிருந்த அண்ணாதான் பின்னாளில் எப்படி மாறிப் போனார்!  இதில் மட்டுமல்லாது திராவிடநாடு தொடர்பான கொள்கையையும் கோரிக்கையையும் அடியோடு கைவிட்டுவிட்டார். அதன் பின்னணி 1962 அக்டோபரில் சீனா  நம் நாட்டின் பல சதுர மைல்களையும் கபளீகரம் செய்ததே ஆகும். அதன் பின் அவரது கண்ணோட்டம் அடியோடு மாறியது. பகைவர்களைத் தவிர்க்க இந்திய ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டார். அப்போதுதான், இந்திய மாநிலங்களையும் காக்க முடியும் என்பது அவருக்குத் தெளிவாயிற்று. அவரது மனமாற்றத்தைப் பாராட்டுவதற்குப் பதில் சிலர் அவரைக் கிண்டல் செய்தார்கள்.  தவற்றைத் திருத்திக்கொள்ளும் பெரும்போக்கை மதிக்கத் தெரியாதவர்களாகவே நம்மில் பலரும் இருக்கிறோம்.

இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த ராஜாஜி பின்னாளில் அதைக் கைவிட்டபோது அவரையும் பலர் கிண்டல் செய்ததுண்டு. அதற்கு அவர் சொன்னார்: “ஒருவன் எப்போதோ கொண்டிருந்த கருத்தைக் கால மாறுதலை ஆராயாமல் பிடித்துக்கொண்டு எப்போதுமே தொங்குவது அறிவுகெட்ட செயலாகும். கொள்கை மாறாமை – அதாவது மாற மறுத்தல் – கழுதையின் தன்மையாகும்! (Consistency  is the quality of an ass)” என்றார். விவரங்கெட்ட மக்கள் தம்மைச் சந்தர்ப்பவாதி என்று தூற்றுவார்கள் என்பது தெரிந்தும் தம்மை அவர் மாற்றிக்கொண்டார். அதே நிலைப்பாட்டைத்தான் அண்ணாவும் மேற்கொண்டார்.

அவர் மிகவும் நாணய மானவராகவும் எளிமையானவராகவும் திகழ்ந்தார். கீழ்க்காணும் தகவலே இவற்றை மெய்ப்பிக்கக் போதுமானவை.  அவர் தமிழகத்தின்  முதலமைச்சராக இருந்த போது ஒரு நாள் அன்றைய இல்லஸ்ட்ரேடெட் வீக்லி அவ் இண்டியா எனும் ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்த கே. ஸ்ரீநிவாசன் அவரைப் பேட்டி கண்டார். பேட்டி அண்ணாவின் வீட்டிலேயே நடந்தது. ஸ்ரீநிவாசன் வந்ததும் அவரை வரவேற்ற அண்ணா, “உக்காருங்க்… ஆனா பாத்து கவனமா உக்காருங்க. ஏன்னா, அந்த நாற்கலிக்குக் கால் சரியில்லே. அது ஆடும்…” என்று எச்சரித்தாராம்.
ஸ்ரீநிவாசனுக்கு ஒரே வியப்பு: “ஏன் சார்? நீங்க சீஃப் மினிஸ்டரா யிருக்கிறதால உங்க வீட்டுக்குக் கவர்ன்மென்ட்லயே புது சோஃபா செட், மேஜை, நாற்காலின்னெல்லாம் குடுப்பாங்களே! அதுகளை வாங்கிப் போட்டுக்கலையா?” என்று அவர் அண்ணாவை வினவியுள்ளார்.

“அதெல்லாம் நமக்கெதுக்குங்க? என் சொந்த ஃபர்னிச்சரே போதும். அதை யெல்லாம் இப்ப அனுபவிச்சா, நாளைக்கு இந்தப் பதவி இல்லாம போச்சுன்னா அதை யெல்லாம் திருப்பிக் குடுக்கிறப்ப வீட்டில உள்ளவங்களுக்குக் கஷ்டமாயிருக்கும். சீஃப் மினிஸ்டர் பதவி நிலையானது இல்லே, பாருங்க!” என்றராம் புன்னகையுடன்.

‘அவற்றையெல்லாம் திருப்பிக் கொடுக்காமல் தாமே வைத்துக் கொண்டுவிடும் அமைச்சர்கள் இருக்கும் காலத்தில் இப்படியும் ஒருவரா!’ என்று ஸ்ரீநிவாசன் வியந்து போனாராம்.

நாணயமும் விவேகமும் நிறைந்த இந்தப் பதில் நம்மையும் சிலிர்க்க வைக்கிறதல்லவா! பதவி நாற்காலி ஆசையில் எதையும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளிடையே, வெறும் மர நாற்காலிக்குக் கூட ஆசைப் படாத அண்ணா எவ்வளவு உயர்ந்தவர்!

‘வெண்ணெய் திரண்டு வரும்போது  தாழி உடைவது போல்’ என்று சொல்லுவார்களே, அது போல் இக்கட்டான அல்லது தேவைப்படும் தருணங்களில் நல்ல / கெட்டிக்கார அரசியல்வாதிகளையும் தலைவர்களையும் இழப்பதே இந்தியாவின் தலையெழுத்தாக இருந்து வருகிறது. காந்தி, இந்திரா காந்தி (தம் தவற்றை உணர்ந்து திருத்திக்கொண்ட பின்னர் மக்கள் தேர்ந்தெடுத்த இந்திரா காந்தியைச் சொல்லுகிறோம்), ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டது நம் போதாத காலமே. அண்ணாவின் மரணம் இயல்பாக நேர்ந்தாலும், அதுவும் பேரிழப்பே. தமிழ் நாட்டின் தலையெழுத்தும் அதுதான் போலும். அவர் காலமான போது அவருக்கு அப்படி யொன்றும் வயது ஆகியிருக்கவில்லை.

காமராஜ், அண்ணாதுரை போன்றோர்க்காக நாம் காத்திருக்க வேண்டியதுதான் போலும்!

அடுத்து, எழுத்தாளர்களில் கல்கி அவர்களை எடுத்துக்கொண்டால், ஆபாசமான முறையில் பெண்களை வர்ணித்தல் வாயிலாகவும், விகார உணர்ச்சிகளைத் தூண்டுவதன் வாயிலாகவும்தான் ஒருவர் எழுதிப் புகழ் பெற முடியும் என்பதைப் பொய்யாக்கிய கண்ணியமான எழுத்துச் சிற்பி அவர். அவர் எழுதியுள்ள காதல் கதைகளைப் பதின்மர்களிடம் தயக்கமின்றிக் கொடுத்துப் படிக்கச் சொல்லலாம். இன்றைய எழுத்தாளர்கள் பலரின் கதைகளை அப்படிக் கொடுக்கப் பெற்றோர் விரும்புவார்களா!

என் தங்கை மகன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது தமிழில் அவன் நிறைய மதிப்பெண் பெற்றதற்காகத் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத் தொகுப்பைப் பரிசாகக் கொடுத்தார்கள். ஆங்காங்கு பாலியல் ஜோக்குகளையும், விரசமான உரையாடல்களையும், பெண்ணின் உடம்பை மலினமாய் வர்ணிக்கும் சொற்களையும் அள்ளித் தெளிப்பவர் அந்தத் தொகுப்பின் ஆசிரியர் என்பது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்க்குத் தெரிந்திருக்கவில்லை போலும்; தெரிந்திருந்தால், அப்போதுதான் பதின்மர் பருவத்தில் அடி எடுத்து வைத்திருந்தவன் கையில் அதைப் பரிசாய் அவர் கொடுத்திருந்திருக்க மாட்டார். அதை அவன் புரட்டும் முன் பிடுங்கி வைத்துக்கொண்டது ஞாபகம் வருகிறது!

என் மீது ஆத்திரம் கொண்ட. அவனுக்குக் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனின் அனைத்துப் பகுதிகளையும் கொடுத்துச் சமாதானப் படுத்தினேன். அப்போது அவனுக்குப் பள்ளி விடுமுறை தொடங்கி யிருந்ததால், அதை இராப்பகலாய்த் தொடர்ந்து படித்து, ரசித்து, எனக்கு நன்றி சொன்னதும், கல்கி அவர்களின் திறமையைப் புகழ்ந்ததும் கூட ஞாபகம் வருகின்றன.

 

அவனுக்குக் கிடைத்த பரிசுப் புத்தகத்தை நான் பிடுங்கி வைத்துக்கொண்டதை அவன் மறந்தே போனான்.

Series Navigationமைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!மதிப்பெண்ணின் மறுப்பக்கம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

8 Comments

  1. Avatar
    ஷாலி says:

    கட்டுரையாசிரியர் ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் பெரிய இடத்து வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுகிறார். குடியரசு தலைவர் பதவி ஒருவருக்கு கொடுப்பதே அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அவர் ஆண்டு அனுபவித்துக் கொள்வதற்க்காகவே.இந்த உண்மையை நன்கு அறிந்து கொண்டதால்தான் அவர்கள் மக்கள் வரிப்பணத்தை சட்டபூர்வமாக சுரண்டுகிறார்கள்.குடும்பம் கோத்திரத்தோடு குடியரசு தலைவர் மாளிகையில் டேரா போடுவதும்.குடும்பத்தோடு தனி விமானத்தில் டெல்லி-திருப்பதி வாராந்திர சேவை செய்வதும்.தனக்கு கொடுத்த பரிசுப் பொருள்களை அப்படியே லவட்டிக்கொள்வதும்,குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஏழைகளுக்கு ஒதுக்குவது போல் தனக்கு ஒரு பங்களா குடிசையை சுவாஹா செய்துகொள்வதும்,நாம் உலக மேப்பில் பார்க்கும் நாடுகளை இவர்கள் தனி விமானத்தில் சென்று பார்ப்பதும் நமது நாட்டின் முதல் குடி மகன் செய்வதுதான்.முதல் குடியே முதலுக்கு மோசமாய் இருக்கும்போது இடைமகன், கடைமகன் எல்லாம் என்ன செய்ய முடியும். ஆளாளுக்கு அள்ளித்திங்க வேண்டியதுதான்.இதிலே ஒரு கொடுமை என்னன்னா..வருடா வருட குடியரசு தின உரையில்,நாட்டு மக்களுக்கு இவர்கள் உபதேசம் காது கிழியும்.பிழைக்கத் தெரியாத பெரிய மனிதர்களில் கலாம் மாதிரி ஒன்றிரண்டு மட்டுமே விதி விலக்கு.இதில் குறிப்பிடத் தக்க செய்தி,இந்த முன்னால் குடியரசு தலைவர்கள் எவரும் சேரியில் இருந்து வந்தவர்கள் அல்ல,உயர் குடும்பம்,உயர் படிப்பு படித்தவர்கள்.இதற்க்கு மேல் நான் எழுதினால் என்னை எல்லோரும் அடிக்க வந்துவிடுவார்கள்.ஆகவே ஒரு வரியில் முடித்துக்கொள்கிறேன்.
    “கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே!’ வாழ்க ஜனநாயகம்!

  2. Avatar
    Venkat Swaminathan says:

    ”பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாப்பானை அடி முதலில்” என்ற ஞான ஒளி வீசும் உபதேசம் செய்தது, தந்தை பெரியார் என்றும் பகுத்தறிவுப் பகலவன் என்றும் போற்றப்படும், நமது முத்தமிழ் காவலரும் உலகத் தமிழினத் தலைவரும் கலைஞரும் ஆனவரின் கனவில் அடிக்கடி தோன்றி அறிவுரை வழங்கும் ஈரோட்டுப் பெரியார் ஈ.வே.ரா தானே அல்லாது, அண்ணாதுரை அல்ல என்று தான் நான் அறிந்த செய்தி. இது திக, திமுக தலைவர்கள் தொண்டர்களால் பெரும் மகிழ்ச்சியுடன் நினைத்த போது எல்லாம் மேற்கோள் காட்டப் படுவது. இந்த உப்தேச உரையைச் சொல்வதில் அத் தொண்டர்கள் தலைவர்களுக்கு டாஸ்மாக கடை போய் வந்த மயக்கமே ஏற்படும்.

    இதைத் தொடர்ந்து நிறைய பின்னூட்டங்களை வழக்கமான பின்னூட்ட வீரர்களிடமிருந்து வரும். அவர்கள் இந்த ஞான ஒளி வீசிய பெரியார் யார் என்பதை வழ்க்கமான பாணியில் விளக்குவார்கள்.

    1. Avatar
      ஷாலி says:

      பெரியவர் வெ.சா அய்யா அவர்களே!
      தாங்கள் தொடந்து விமர்சனக்கட்டுரைகள் மட்டுமே எழுதுங்கள். தயவு செய்து பின்னூட்டம் மட்டும் போட்டு விடாதீர்கள்.பெரியாரை நீங்கள் விளிக்கும் கிண்டல் முறை தங்கள் வயதிற்கோ தகுதிக்கோ தகுந்ததல்ல.
      நுணலும் தன் வாயால் கெடும்.

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஜோதிர்லதா கூறியவற்றிலுள்ள அடிப்படைக்கருத்தையே சிதைக்கிறார் பெரியவர் அய்யா வெ சாமிநாதன் அவர்கள்.

      எழுத்தாளர் சொல்லவந்த கருத்து இதுதான்:

      அண்ணாத்துரை அவர்கள் தன் தொடக்க அரசியல் காலங்களில் – அஃது அவரின் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து தொடங்கும் – பெரியாரின் புதுமைக்கருத்துக்களினால் – புதுமை ஏனெனின், பழமையில் ஊறிய தமிழ்ச்சமூகத்துக்கு அவை புதியவை – ஈர்க்கப்பட்டு பெரியார் சொன்னவைகளையே தாமும் கொண்டவராகி விளங்கினார். காலம் சென்றது. சமூகக்காரணிகள் மாறின. பழமையில் ஊறிய பஞசாங்கள் மாறா. அண்ணா அப்படிய்னறு. காலத்திற்கு எது நன்மை பயக்குமெனத் தெரிந்து பழைய கொள்கைகளை மாற்றினார்; அல்லது பின் தள்ளினார். அப்படிப்பின் தள்ளியவற்றுள் பெரியார் கொண்ட கடும்பார்ப்பன எதிர்ப்பும் ஒன்று. பார்ப்ப்னர்களுள் புதுமைவாதிகள் அவரை விரும்பினர். பழமை வாதிகளும் ஜாதிப்பெருச்சாளிகளும் அவரை எதிர்த்தனர். பழமையையும் ஜாதிவெறியையும் மாற்ற இவர்கள் பயப்படக்காரணம் பிறகென்ன? தன்னலம்தான்!

      எழுத்தாளர் இக்குணக்கூற்றை எடுத்துக்காட்டி, “பெரியவர்கள் எப்போதுமே முற்போக்குவாதிகள்; பழமையில் உறைந்து ஊரைக்கெடுக்கும் உலுத்தர்கள் அல்ல’ என்ற கருத்தோடு இணைத்து அண்ணாவைப்பாராட்டுகிறார்.

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    நல்லாயிருக்கு.

    ஒரு ஆண், மணவாழ்க்கைக்கு வெளியே பெண் சகவாசம் வைப்பது ஒரு பெண்ணின் (அதாவது நம் எழுத்தாளரதான்) பார்வையில் அப்பெண்ணுக்குத் துரோஹம் செய்வது என்றாகிறது.

    ஆணின் பார்வையில் அந்த மறுபெண்ணை வீட்டிற்கு அழைத்துவருவதும் அவளை சின்ன வீடு செட்டப் செய்து தன் வீட்டைக்கவனிக்காமல் அங்கே பழிகிடப்பதும், தன் சம்பாத்தியத்தை அவளுக்கே அள்ளிவீசுவதுமே தவறான நடத்தைகள். இதில் எதையும் இராதாகிருஸ்ணன் செய்யவில்லை. தன் அறிவின் மீது மையல் கொண்டு வந்து இளம்பெண்களிடம் ஃபளர்ட் மட்டுமே பண்ணினார். கோபால் தன் தாயின் மீது கொண்டு பரிவினால் அப்படி எழுதுகிறார். நானும் கோபாலில் தன்வரலாற்று நூலைப்படித்தேன். ஒருவேளை ‘தன் தாய்க்குச் செய்த துரோஹம்’ எனக்குறிப்பிடுவது, ஒரே வீட்டில் இன்னொரு அறையில் மனைவி இருக்க இவர் இளம்பெண்களை அருகில் உடகார வைத்துக்கொண்டு ஜல்சா செய்தால், அதை நான் ஒத்துக்கொள்கிறேன். கோபால் அப்படிச்செய்தார் என்கிறார். அதுவே துரோஹம். பார்த்தால் மட்டுமே பாவம். பார்க்காவிட்டால்? :-)

    கலாமைப்பற்றி ஒரு செய்தி படித்தேன். ஆனந்த விகடனின்.

    சென்னை சென்ட்ரலில் தில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியில் டிக்கட் பரிசோதகர்கள் ஒரு வயதான் இசுலாமியரிடமும் அவர் மனைவியுடனும் டிக்கட் பரிசோதித்த பின்னர் நீங்கள் யார் என்ங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார்:

    அந்த ஆள், நான் என் தம்பியைப்பார்க்க தில்லி செல்கிறேன். அவன் எனக்கு :என் பதவியேற்பு விழா அண்ணியிடம் வந்துவிடு என்று கடிதம் போட்டதால் போகிறோம் என்றார்.

    அதிர்ச்சியடைந்த பரிசோதகர் ஸ்டேசன் மாஸ்டரிடம் சொன்னார்: அப்துல்கலாமின் அண்ணனும் அண்ணியும் இரண்டாம் வகுப்பில் உட்கார்ந்து பதவியேற்பு விழாவுக்குச் செல்கிறார்கள் என்றார். அதுவும் தங்கள் சொந்தச்செலவில்.

    ஸ்டேசன் மாஸ்டர் உடனே ஜெனரல் மானேஜரைத் தொடர்பு கொண்டு அவர்கள் இரண்டாம் வகுப்பு டிக்கட்டை இரத்து செய்து அப்பணத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டு முதல் வகுப்பு டிக்கட்டுக்களை இரயில்வே செலவிலேயே கொடுத்து உடகாரச்சொல்லி விடை கொடுத்தனுப்பினார்கள்.

    இதுதான் செய்தி.

    ஜோதிர்லதா கிரிஜா எழுதிய இன்னொரு குடியரசுத்தலைவர், தமிழ்நாடு சட்டசபையில், இவருக்கு ஏற்கன்வே இரு பெரிய பங்களாக்கள் சென்னையிலும் தில்லியிலும் இருக்க தமிழக அரசுப்பணத்தைச் செலவ்ழித்து இன்னொரு பங்களாவைக்கொடுக்கிறோம் என்றவுடன் முசுக்கென்று கோபப்பட்டு தில்லிக்கே சென்று விட்டார். கருநாநிதி சொல்லாமிலிருந்தால், அரசு செலவில் அமைதியா அனுபவித்திருப்பார். நல்லவேளை எல்லோரும் அந்த நியாயத்தை ஒத்துக்கொண்டு விட்டார்கள்.

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    அண்ணாவின் எளிமை பற்றி ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருக்கிறார்.

    அண்ணா, காமராஜர், இராஜாஜி போன்றவர்களின் எளிமை லெஜன்டரி. ஆனால், அவர்கள் அப்பெரிய பதவிகளிலே இல்லாமலே போயிருந்தாலும் அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள்.

    சில பல குணங்கள் நம்முடன் நிழல் போலவே சுடுகாடு மட்டும் வரும். அதற்கு சிலபல காரணங்கள் இருக்கின்றன. மனோதத்துவம் அவற்றை ஆராயும். நம்பெற்றோரின் வாழ்வு கொள்கைகள்; அவர்கள் வாழ்ந்த விதம், நம் சிறுவயது வாழ்க்கைச்சூழல் – இவற்றைப்பொருத்து அவை அமையும்.

    அண்ணாவும் காமராஜரும் கலாமும் எளிய சூழ்நிலை. இராஜாஜி முன்சீப்பின் பிள்ளையாக வளர்ந்தாலும், பார்ப்ப்னருக்கே உரித்தான சிலபல வாழ்க்கைமுறைகளின் படி, ஆடம்பரமில்லா வாழ்க்கை வாழ்ந்திருப்பார்; அல்லது அவ்வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கும்.

    எனவே இவர்கள் எப்போதும் எங்கும் எளிய வாழ்க்கையை விரும்பினார்கள் என்பதை விட, ஆடம்பரம் தமக்கு முன்னே கொட்டிக்கிடந்தாலும் அதை அனுபவிக்க அவர்களால் முடியாது. தணலில் விழுந்த புழுவைப்போல மனம் துடிக்கும்.

    எனவேதான் இராஜாஜி தன்னுடைகளைத் தானே துவைத்தார் ராஷ்ட்ரபதி பவன் வாணாளில். அவருக்கு நூற்றுக்கும் மேலே வேலைக்காரர்கள். டோபிகளே 10க்கும் மேலே அங்கே. அவர்களெல்லாம் பண்டைக்காலத்துப்பைத்தியம் இவரென்று நினைத்திருந்தால் தப்பில்லை..

    இவர்களின் எளிமையை நான் குறைத்துப்பேசவில்லை. சொல்லவருவது, நீங்கள் எப்படி உங்கள் குழந்தைகளை வளர்த்தீர்களோ அப்படியே உங்கள் பிள்ளைகள் பிற்காலத்தில் வாழும்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      நான் என் குழந்தையை ஆடம்பரமாகத்தான் வளர்க்கிறேன். எனக்குக் கிடைக்காத வாழ்க்கை அவனுக்காவது கிடைக்கட்டும் என்ற நல்ல மனசுதான்.

  5. Avatar
    admin says:

    எதிர்வினை விரிவாகப் பதிய எண்ணினால் தனிக் கட்டுரை வடிவில் அனுப்பவும்.
    சுருக்கமாக படைப்பின் மையத்தை ஒட்டிய கருத்துகளை மட்டுமே பின்னூட்டங்களாக பதிவிடவும்.
    எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.
    நன்றி
    ஆசிரியர் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *