தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

This entry is part 4 of 33 in the series 6 அக்டோபர் 2013

பயனர்-Aathavan

நித்தியானந்தன் ஆதவன்

தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது, விக்கியூடகங்களின் உள்ளடக்கம் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது தான். அந்த வகையில் பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்களில் மாணவர்களின் செயற்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பயன்படுத்துதல்

விக்கியூடகங்கள் இணையத்தை நன்முறையில் மாணவர்கள் பயன்படுத்த வழிவகை செய்யும் கருவியாக செயல்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். விக்கியூடகங்களை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் போன்ற பாலர் பயன்படுத்தினாலும் அவர்களை விட மாணவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

காரணம் அவர்களது கல்விக்கு விக்கியூடகங்கள் தேவைப்படுவதனாலேயாகும். விக்கியூடகங்களில் தேடுதலும் இலகுவானது மற்றுமொரு காரணமாகும். மாணவர்கள் விக்கியூடகங்களில் அதிகமாக விக்கிப்பீடியாவையே பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை பாட வேலைக்குப் பயன்படுத்துகிறார்கள். “தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது” என்று தலைமையாசிரியர் ஜோதிமணி கூறுகிறார்.
எனினும் விக்கியில் இருந்து தகவல்களைப் பயன்படுத்தும் போது மாணவர்கள் அவதனாமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் தவறனா தகவல்கள் இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. சில தகவல்கள் முழுமையாக இல்லாமலும் இருக்கலாம். ஆகவே சுட்டப்பட்ட மேற்கோள்களை பார்த்து உறுதிசெய்து பயன்படுத்தலாம். பேச்சுப் பக்கத்தை அவதானித்து மேலும் சிக்கல்களை அவதானிக்கலாம்.

பங்களிப்பு

விக்கியூடகங்களை அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் அதில் பங்களிக்கவும் முனைய வேண்டும். ஒரு சில மாணவர்கள் விக்கியில் தமது பங்களிப்பைத் தொடங்கியிருகின்றனர். தமிழ் விக்கிப்பீடியாவில் இவ்வளவு காலமும் சிறப்பாக மதனாகரன் எனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் பங்களித்து வருகிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவரால் கல்விச் சுமை காரணமாக தற்போது சிறப்பாக பங்களிக்க முடியவில்லை. இவரைப்போலவே கிருத்திகன் என்ற மாணவரும் இலங்கையிலிருந்து சிறப்பாக பங்களித்து வருகிறார். இவர்களைப் போலவே ஆதவன் எனும் பயனரும் யாழ்ப்பாணத்திலிருந்து பங்களிக்கிறார். ஜீவதுவாரகன் என்பவர் யாழ்ப்பாணத்திலிருந்து புதிதாக பங்களிக்க தொடங்கியுள்ளார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து அபிராமி எனும் மாணவரும் பங்களிக்க தொடங்கியுள்ளார். இவ்வாண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றான கட்டுரைப் போட்டியின் காரணமாக பிரபன் என்ற மாணவப் பங்களிப்பாளரும் யாழ்ப்பாணத்திலிருந்து பங்களிக்கத் தொடங்கியுள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்களின் பங்களிப்பு இந்தியாவிலிருந்து மிகச்சொற்பமே. அதிகமாக மாணவர்கள் இலங்கையிலிருந்தும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்தும் பங்களிக்கின்றனர்.

பங்களிப்பதால் கிடைக்கும் பயன்கள்

* மாணவர்களின் எழுத்துத் திறன் மேம்படும். தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் பங்களிக்கும் கட்டுரைகளைப் பிற பயனர்கள் திருத்தி உதவுவார்கள். வரலாற்றுப் பக்கத்தில் திருத்தங்களை அவதானிப்பதன் மூலம் மாணவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தலாம். * விக்கி, விக்கி நுட்பத்தை அறிந்து கொள்ளல்: விக்கி என்பது இணையம் ஊடாகப் பலர் கூட்டாகச் சேர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு மென்பொருள். மாணவர்கள் தமிழ் விக்கியூடகங்களில் பங்களிப்பதன் ஊடாக விக்கியில் தொகுப்பது பற்றி, விக்கித் தொழில்நுட்பங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். * விக்கிச் சமூகம்: உலகளாவிய அளவில் பன்மொழிகளில் விக்கியில் தொகுக்கும் தன்னார்வலர் சமூகத்தோடு மாணவர்கள் ஊடாட முடியும். ஒரு கட்டற்ற, கூட்டுறவு, கூட்டு மதிநுட்ப செயற்திட்டம் எப்படி சமூகத்தால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நெருக்கமாக அவதானிக்கலாம். மேலும் பல்துறை சார்ந்த அறிஞர்களோடு பழக வாய்ப்புக் கிடைக்கும். இதன் மூலம் மாணவர்களின் பல்துறை அறிவு விருத்தி அடையும். * தமிழ்க் கல்வி: தமிழ்க் கல்விக்கு தமிழ் விக்கியூடகங்கள் ஒரு முதன்மை இணைய கல்வி வளம் ஆகும். தமிழ்க் கல்விக்கு வாசிப்பு, எழுத்து, கலைச்சொற்கள், அறிவியல் தமிழ் எனப் பல முனைகளில் தமிழ் விக்கியூடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். * தமிழ்த் தட்டச்சு: தமிழ் விக்கியூடகங்களில் பங்களிப்பதன் மூலம் மாணவர்கள் தமிழ் தட்டச்சு பழகலாம். இது அவர்களது கல்வி வாழ்க்கைக்கு உதவலாம். * தகவல், அறிவு, பல்லூடகங்கள்: விக்கியூடகங்கள் பல்துறைகளில் பல வகை அறிவுத் தகவல்களைக் கொண்டுள்ளன. விக்கியில் பங்களிப்பதன் ஊடாக விக்கி வளங்களைத் திறனாகப் பயன்படுத்துவது பற்றி அறிந்து கொள்ளலாம். * மகிழ்ச்சி, பொழுதுபோக்கு: விக்கியில் பங்களிப்பது மகிழ்ச்சியைத் தரும் ஒரு செயற்பாடு ஆகும். மேலும் இது ஒரு பொழுதுபோக்கு ஆகும். * சமூக சேவை: விக்கிப் பங்களிப்பு ஒரு வகைச் சமூக சேவை ஆகும். இது பல மக்களின் அறிவுப் பசியைத் தீர்க்க உதவும் * கல்வி வளர்ச்சி: விக்கியில் தொகுக்கும் போது அல்லது கட்டுரை எழுதும் போது அது மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். இதன் மூலம் மாணவர்களின் அறிவும் வளர்ச்சி அடையும். மேலும் பல்வகையான பொருள்கள் பற்றி கட்டுரைகளைத் தொகுப்பதால் பொது அறிவும் வளரும். * புகைப்படக்கலை: மாணவர்கள் எடுக்கும் ஒளிப்படங்களை, நிகழ்படங்கள் விக்கி பொதுவில் பதிவேற்றுவதன் மூலம் பொழுதுபோக்காகவும் அவர்களுக்கு நன்மையாகவும் அமைகிறது.

பங்களிக்க வராமைக்கான காரணங்கள்

பெரும்பாலான மாணவர்கள் விக்கி ஊடகங்களைப் பயன்படுத்தினாலும் அதில் தாங்களும் தொகுக்கலாம் என அறியவில்லை. விக்கி கொள்கைகளைப் பற்றியும் போதுமானளவு அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்தோரும் ஆர்வமில்லாமையால் பங்களிப்பதில்லை. அவர்கள் விக்கிப்பீடியாவில் தொகுப்பதால் எப்பயனும் இல்லை என நினைக்கலாம்! ஆர்வமில்லாமைக்கு முக்கிய காரணம் தமிழ் தட்டச்சு தெரியாமையாகும்.

மாணவர்கள் தமது முக்கிய தொழிலாகக் கல்வியையே கொள்கின்றனர். இக்கால மாணவர்களுக்கு அது ஒரு மனச்சுமையாகவும் மாறிவிடுகிறது. பெற்றோர்களால் எப்போதும் மாணவர்கள் படிப்பதற்கே உந்தப்படுகிறார்கள். அதனால் அதில் மிகுதியாக உள்ள நேரத்தைத் தாம் விரும்பிய முறையில் செலவழிக்க முனைகிறார்கள். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் நேரத்தை விளையாடுவதற்கோ, அல்லது இதர தேவைகளுக்காகவோ பயன்படுத்த எண்ணலாம். மேலும் சிலர் இது தமது கல்வியை பாதிக்குமோ என பயப்படுகின்றனர். விக்கிப்பீடியாவால் தமக்கு விளையும் பயன்கள் பற்றித் தெளிவில்லாமலும் இருக்கலாம். மேலும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க எண்ணம் அதிகம் இருந்தாலும் அதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது முக்கியம். அந்த அனுமதி கிடைக்காவிட்டால் பங்களிப்பது சிரமம் தான். இதற்காக அவர்கள் சிறிது நேரத்தை ஒதுக்குவதற்கு வேண்டலாம்.

விக்கியூடகங்களை மாணவர்கள் தொகுக்க முனைந்தாலும் விக்கி நுட்பத்தை இலகுவில் புரிந்து கொள்ள அவர்களால் முடிவதில்லை. ஆகையால் விக்கியூடகங்களைத் தொகுப்பதால் ஏதேனும் பிரச்சினைகள் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர். ஆகையால் விக்கிப்பீடியாவிற்கு வருவது தமது தேவைகளைப் பூர்த்தி செய்வது, செல்வது என்றே பல மாணவர்கள் உள்ளார்கள். விக்கி தொழில்நுட்பம் பற்றி இவர்களுக்குப் போதிய அறிவும் விளக்கமும் இல்லை என கூறலாம்.

மாணவர்களை ஈர்க்க சில வழிகள்

மாணவர்கள் விக்கியூடகங்களை அதிகம் பயன்படுத்தினாலும் விக்கியூடகங்களில் பங்களிக்க வருவதில்லை, அதற்கான காரணங்களை மேலே பார்த்தோம். இதை மாற்றியமைக்க விக்கி செய்யக்கூடிய சில விடயங்களை கவனிப்போம். விக்கியூடக மன்றத்தை பள்ளிகளில் உருவாக்குவது மிகவும் உதவும். இதன் மூலம் மாணவர்கள் விக்கியை இலகுவில் அணுகமுடியும். சிறந்த பரப்புரையாகவும் அமையும். இங்கே விக்கித் தொழில்நுட்பம் பற்றிய விளக்கத்தை எடுத்துரைக்கலாம். தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு தமிழில் தட்டச்சுப் பயிற்சி தேவைப்படின் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை ஒழுங்குபடுத்தி உதவலாம். இதன் மூலம் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் அதைக்கற்றுக்கொண்டு விக்கியில் பங்களிக்க வருவார்கள். தமிழ் தட்டச்சு மட்டும் இல்லாமல், நிரலாக்கம், ஒளிப்படக்கலை, நிகழ்படக்கலை, வரைகலை, விக்கியில் தொகுப்பது போன்று ஒரு மாணவர் குழுவிற்கு ஈடுபாடு உள்ள, தேவையான திறன்கள் தொடர்பாக பயிற்சிகள் ஒழுங்கமைத்து உதவலாம். இது அவர்களுக்கு பிடித்தமான துறையிலேயே பங்களிக்கத் தூண்டும். மேலும்,இது அவர்களது ஈடுபாட்டைக் கூட்டுவதோடு ஆர்வத்தையும் வளர்க்கும். பள்ளியில் ஆசியர்கள் விக்கியில் பங்களிப்பதை ஒரு பயிற்சியாக வழங்கலாம். இதன் மூலம் விக்கிப் பயன்பாடு பலரிடையே பரவும் என்பதில் சந்தேகமில்லை. இதை விக்கியோடு இணைந்து செய்வது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பீடியா மாணவர் மன்றம் அமைக்கும் செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இம்மன்றங்கள் விக்கியூடகங்களை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்துவதோடு, விக்கியூடகங்களில் இருக்கும் பல்வேறு தகவல்களை மாணவர்கள் அறிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்துவதற்கும் வழிகாட்டுகின்றன. மேலும், விக்கியூடகங்களில் மாணவர்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்பதையும் இம்மன்றங்கள் விளக்கியுரைத்து, மாணவர்களை ஊக்குவிக்கின்றன.

முடிவுரை

மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு விக்கியூடகங்கள் தற்காலத்தில் இன்றியமையாத ஒன்றாகும் நிலைமை உருவாகின்றது. அதைப்போலவே மாணவர்களின் பங்களிப்பும் விக்கியூடகங்களில் முற்காலத்தை விட அதிகமாகத் தான் உள்ளது. எனினும் சில காரணங்களால் மாணவர்களால் விக்கியூடகங்களில் பங்களிக்க முடியவில்லை. தற்போதைய காலகட்டத்தில் கல்விக்கூடங்களில் விக்கியூடக மன்றங்கள் ஆரம்பமாகத் தொடங்கிள்ளன. இம்மன்றங்கள் அளிக்கக் கூடுமான உந்துதலும் ஊக்கமும் மாணவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

Series Navigationஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன்தமிழ் விக்கியூடகங்கள்
author

நித்தியானந்தன் ஆதவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *