நய்யாண்டி

This entry is part 8 of 31 in the series 20 அக்டோபர் 2013

– சிறகு இரவிச்சந்திரன்
Naiyaandiபலமுறை பார்த்து சலித்த பாத்திரத்தில், தனுஷ். புதுத் தென்றலாக, நஸ்ரியா. மகுடம் பறி போன ராஜாவாக, இயக்குனர் சற்குணம். நமுட்டுச் சிரிப்பு கூட வராத, நய்யாண்டி.
நாற்பது வயதாகும் மூத்த பிள்ளை பரஞ்சோதி (ஸ்ரீமன் ), முப்பத்தெட்டு வயதாகும் இரண்டாவது மகன் பரந்தாமன் ( சத்யன் ), ஆகிய இருவருக்கும், இன்னமும் கல்யாணம் ஆகவில்லையே என்கிற கவலையுடன் இருக்கும் அம்மா ( மீரா கிருஷ்ணன்), குத்துவிளக்கு வியாபாரம் செய்யும் அப்பா ( பிரமிட் நடராஜன் ). அவர்களது கடைக்குட்டி சின்னவண்டு (தனுஷ் ). ஊரின் திருவிழாவுக்கு, பாட்டி (சச்சு) வீட்டிற்கு வரும் வனரோஜா (நஸ்ரியா நசீம் ), சின்ன வண்டு கண்களில் பட, காதல் ஒட்டிக் கொள்கிறது. அப்பா பார்த்த மாப்பிள்ளை கிருஷ்ணாவைப் ( வம்சி கிருஷ்ணா ) பிடிக்காமல் வனரோஜா, சின்னவண்டுடன் வீட்டை விட்டு ஓடுகிறாள். அவசரமாக அவள் கழுத்தில் ஒரு தாலியும் கட்டி விடுகிறான் சின்னவண்டு. அண்ணன்களுக்கு கல்யாணம் ஆகும்வரை, தன் கல்யாணத்தை மறைக்க சின்னவண்டு படும் பாடும், அண்ணன்கள் வனரோஜா மேல் காதலாவதும் காமெடி முடிச்சு. அதை முடித்து, சின்னவண்டு, வனரோஜாவைக் கைப்பிடிப்பது க்ளைமேக்ஸ்.
தனுஷிடம் இருக்கும் அத்தனை பாவங்களையும், சக்கையாக செல்வராகவன் பிழிந்தெடுத்தபின், இனி தனுஷ் இம்மாதிரி பாத்திரங்களைப் புறம் தள்ளுவது அவரது எதிர்காலத்துக்கான கட்டாயம். நஸ்ரியா, அதிக வேலையில்லாவிட்டாலும், ரம்மியம். நண்பர்கள் சூரியும் (சூரி), மாமாவும் (இமான் அண்ணாச்சி ) செய்யும் காமெடியில், விலாவில் சொறிந்தாலும் சிரிப்பு வருவதேயில்லை. ஆறுதலாக கிராமத்து பாசக்கார அம்மாவாக வித்தியாசம் காட்டியிருக்கிறார் மீரா கிருஷ்ணன். சரண்யாவிற்கு சரியான போட்டி. வாழ்த்துக்கள். பின்பாதியில் வரும் ஸ்ரீமனும், சத்யனும் கொஞ்சம் போல ரசிக்க வைக்கிறார்கள்.
உண்மையான ஹீரோ கலை இயக்குனர் விஜய்முருகன். அகல ஆற்றில் இரண்டு நெடிய பனைமரங்களால் ஆன பாலம். குத்து விளக்குகள் அடுக்கப்பட்ட அறை. மரக் கிளைகளால் செய்யப்பட்ட பிரம்மாண்ட சிவன் சிலை.. அசத்தல் செட்டிங்க்ஸ். வேல் ராஜின் ஓளிப்பதிவு பளிங்கு சுத்தம். “ ஆலேலே எட்டிப்பார்த்தாளே” பாடலில் காட்டப்படும் சிதிலமான கட்டிடங்களும், நடுவில் சுழித்து ஓடும் ஆறும், ஒரு பார்வை பதம். இன்னமும் ஊட்டி குட்டி ரயில், பச்சைக் காடுகள் என புல்லரிக்க வைக்கிறார். சபாஷ்.தனுஷ் பாடிய “ டெடி பேர் “ பாடல் ஜிப்ரானின் பேர் சொல்லும். “ முன்னாடி போற புள்ளே “ வித்தியாச குரல்களில் ஒலிக்கும் ஒரு உற்சாகப் பாடல். அதில் தனுஷ¤க்கு ஈடு கொடுக்க முடியாமல் நஸ்ரியா தடுமாறுவது, அப்பட்டம்.
“ நம்ம போய் ஒரு பொண்ணு முன்னாடி நிக்கறத விட, நம்மளப் பத்தின நியூஸ் போய் நிக்கணும்” “ பசங்களுக்கு பொறந்தநாள்னா நாங்களே வந்து சொல்லணும்.. பொண்ணுங்களுக்கு பொறந்தநாள்னா நீங்களே தேடித்தேடிக் கண்டு பிடிப்பீங்க” மெல்லிய சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள்.
‘களவாணி’யில் ரசித்து, ‘வாகை சூட வா’வில் சிலிர்த்த ரசிகன், ‘நய்யாண்டி’யில் நொந்து போகிறான். சற்குணம் சறுக்கியிருக்கிறார். எழுந்திருக்க, பிரம்மப்பிரயத்தனம் தேவை அவருக்கு.
0
ஜட்ஜ்மெண்ட் : பொய்யாண்டி
பாமரன் குரல் : அந்த தொப்புள் சீனை வெட்டிட்டாய்ங்களா? காசுக்கு மோசமாயிட்டதே மாப்ளே!
கொசுறு:
விருகம்பாக்கம் தேவி கருமாரி காம்ப்ளெக்ஸில் பெரிய தியேட்டரில் ‘வணக்கம் சென்னை ‘, சின்ன அரங்கில் ‘ நையாண்டி’.. காரணம் முந்தையது ரெட் ஜெயிண்ட் வெளியீடு.. ஆனாலும் ரசிகன் ரியாக்ஷன் ரெண்டுக்கும் ஒன்றுதான்.. “ மொக்கை” ஆபரேட்டர் கோபி படம் பார்ப்பதற்கு முன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். “இண்டர்வெல்லுல தலையைப் பிச்சுக்கிட்டு ஒருத்தன் நிக்கறான் சார்.. அப்படி இருக்குது படம்..” “ எந்தப் படம் ?” “ நையாண்டிதான் சார்” “ அப்போ வணக்கம் சென்னை பரவாயில்லையா?” ‘ இதுவும் அவுட்டுதான்.. இதுல தலையை சொரிஞ்சிக்கறான் பார்க்கறவன்” ஐநூறு பிரிண்ட் ஒரு வாரம் என்று ஜெயசங்கர் ரேஞ்சுக்கு சிவாவும் தனுஷ¤ம் இறங்கி வந்தது அப்பட்டமாகத் தெரிகிறது..
0

Series Navigationசிறுகவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *