நெடுநல் மாயன்.

This entry is part 26 of 31 in the series 20 அக்டோபர் 2013
==ருத்ரா.
மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து
நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன்
என்னுரு வரைதர மின்னுரு கண்டனன்.
காந்தள் பூக்கஞல் நளிதிரைக் கண்ணே
தீண்டும் இன்பம் பருகும் பூக்கோல்.
குவளை உண்கண் என்கண் தாஅய்
குமிழ்க்கும் அந்தீ இன்பம் கனல‌
படுதிரை எரிக்கும் இனிக்கும் மகிழும்.
முல்லை வெண்ணிரல் முரற்கை கேட்கும்.
புன்மை அதிர நகையும் புகையும்.
தாமரை தூஉய்த்த மணிநிறத்தும்பி
ஒற்றிய நுண்கால் மருவியபோன்ம்
முத்தம் அதுவாய் இழைத்தனன் ஆங்கே.
அண்டம் கடுத்ததோ.அடுக்கம் கிளர்ந்ததோ.
வளிசூழ் ஊழி பரவை பெயர்த்ததோ.
கல்பொதி கானம் மரவங்கள் யாழ‌
பேய்ப்பண் கொடுஞ்சுரம் ஓதை உமிழ‌
காமம் கிளர்ந்த கனலியும் விரைய‌
தீமழை வார்த்த ஊழ் ஈண்டு உற்றதோ.
ஐயன் அணிவிரல் பற்றி ஒழித்தேன்.
தண்கடல் தழைபு என் இதழ் ஒற்றும்.
அதிர்ந்தன யாவும் அடங்கின காண்.
வடிபுரை வார்கோல் தடவுநன் தழீஇ
பூஞ்சேக்கை துயில்பாய் பொருது
இரவு நீட்டி நற‌வு பெய்தன்ன‌
களிச்சாரலின் கண்கள் புதைந்து
கிடந்தனம் கொல்லோ புரிவளை தோழி!
======ருத்ரா
விளக்கவுரை
====================
தலைவன் ஒரு ஓவியன்.புருசுமயிர்கள் கொண்டு பல நெய்வண்ணம் குழைத்து வியக்கத்தக்க ஓவியங்கள் தீட்டி மனங்களை கொள்ளை கொள்பவன்.என் உருவம் வரைய எண்ணிய அவன் “மின்னலையே” குழைத்து உருவாக்க முனைந்தான்.அவன் தூரிகை காந்தள்விரல்கள் போல், நெளியும் தன்மையுள்ள திரைச்சீலையில் தீண்டி “தொடுதல்” இன்பம் கொண்டு கிறங்கும்.அது குவளை விழிகள் ஒத்த என் கண்கள் மீது தாவியதால் குமிழியிட்ட இன்ப உணர்ச்சியின் தீ மூட்டம் அந்த திரையையே எரித்துவிடுவது போல் இனித்துக் களிக்கும்.அப்போது முல்லைமலர்கள் வரிசையாய் பூத்து திடீரென்று சிரித்தது போன்ற என் சிரிப்பொலி கேட்கும்.அந்த மென்மை கூட அந்த நகைப்பில் புகை கக்கும் தீயை புதைத்து வைத்திருக்கும்.உடனே அவனும் என்ன செய்தான் தெரியுமா? தாமரைப்பூவுள் துய்த்துக்கிடக்கும் சுடர் பொருந்திய வண்டின் நுண்மையான கால் மிக மெதுவாக ஒற்றுவது போல் “முத்தம்”கொடுக்கும் காட்சியைத் தீட்டினான்.
அவ்வளவு தான்.
 இந்த அண்டம் தன் வலிமையையெல்லாம் காட்டிக் கிடுகிடுத்ததோ? மலைத்தொடர்கள் எல்லாம் ஆடத்தொடங்கினவோ?
காற்று திரண்டு வந்து பெரும்புயலாகி “ஊழி” எனும் பெரு ஆற்றலாகி இந்த அகன்ற உலகத்தின் கடற்பரப்பை பெயர்த்து எடுத்ததோ? பாறைகளும் காடுகளும் நிறைந்த மலையில் உள்ள “மராமரங்கள்” அதிர அச்சம் தரும் பாடல் முழக்கம் போல் அந்த அடர்காட்டு வழியில் எல்லாம் இரைச்சல்கள் வெளிப்பட அதுதான் சமயம் என கதிரவனும் தான் எரிக்கும் ஆசையால் கிளர்ந்து விரைந்து நகர
நெருப்பு மழை பெய்தது போல் இந்த “ஊழி”ப் பேரழிவு இங்கு வந்து விட்டதோ? அப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே ஓவியம் வரையும்  அவன் அழகியவிரல்களைப் பிடித்து நிறுத்தினேன்..குளிர்ந்த கடல் தளும்புவது போல் என் இதழ்கள் அவனுக்கு கொடுத்த முத்தத்தில் அதிர்ந்தனவெல்லாம்
அடங்கிப்போயின பார்த்தாயா? வடிவங்கள் வார்க்கும் தூரிகை
கொண்டு தடவி ஓவியங்கள் ஆக்கும் அவனைத் தழுவி மலர்ப்படுக்கையில் துயில்கொள்ள நாங்கள் பொருந்திக்கொண்டது கூட ஒரு போராட்டமே. உணர்ச்சிகளின் மோதல் போர் அது. இரவு முழுவதும் தேன்மழை களிப்பு மிக்க சாரல் தூவ கண்கள் தூக்கத்தில் மெல்ல மெல்ல புதையுண்டு கிடந்தோமே.சங்கு வளையல்கள் அணிந்த‌ தோழியே இதை அறிவாயா நீ.
======ருத்ரா
Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *