ஜாக்கி சான் 13. ஹாங்காங்கில் மறுபடி

ஆஸ்திரேலியாவில் தனிமையில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கப் பிடிக்காமல் தந்தையிடம் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொய் சொல்லி ஆறு மாதம் கழித்து ஹாங்காங் திரும்பினான் சான்.

அந்த ஆறு மாதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. விட்டுச் சென்ற வீடு தூசும் தும்புமாக இருந்தது. வீட்டைச் சுத்தம் செய்யவே ஒரு நாள் பிடித்தது. தங்குவதற்கு வசதிகளைச் செய்த பின்ஸ்டுடியோ பக்கம் சென்றான்.

அவனைப் பலரும் மறந்து விட்டிருந்தனர். வேலை தேடிச் சென்ற போது அவன் பெயரைக் கூட பலர் மறந்து விட்டிருந்தது சானுக்கு பெருத்த வருத்தத்தைக் கொடுத்தது. வேலை கிடைக்காமல்அலைய வேண்டியிருந்தது.

பெரியண்ணா சாமோ தான் கதி என்று எண்ணினான். அவரைக் காணச் சென்றான். சான் சொல்லாமல் கொள்ளாமல் ஆஸ்திரேலியா சென்றது வருத்தத்தைக் கொடுத்தப் போதும், வேலை கிடைப்பதுகஷ்டம் என்பது தெரிந்த காரணத்தால், பெரியண்ணா சாமோ கேலியாக, “ என்னப்பா திரும்பிட்டே.. இங்கேயும் கஷ்டம் தான்..” என்றார்.

கெஞ்சுவது பிடிக்காத போதும், வேறு வழியில்லாத காரணத்தால், “பெரியண்ணா.. இருந்தாலும்.. என்னிடம் பைசா கிடையாது. எப்படியாவது வேலை வாங்கிக் கொடுங்க” என்று சான் கேட்டுப்பார்த்தான்.

சாமோ எத்தனை தான் கேலி பேசினாலும், சானுக்கு உதவி செய்ய மறுத்ததில்லை. தான் வேலை செய்து கொண்டு இருந்த கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சானுக்கு வேலைவாங்கிக் கொடுத்தார்.

புதிய இயக்குநர் ஜான் ஊ. படம் ஹேண்ட் ஆப் டெத்.

அந்தப் படத்தில் சானுக்கு துணை நடிகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

சாமோ ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளாராக மிகச் சிறப்பாகச் செய்தார். படம் வெற்றி பெறவில்லையென்றாலும், சாமோ, சான், யூன் பியாவ் மூவரும் இதில் நடித்தது சானுக்கு மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. அதற்குப் பிறகு வந்த படங்களின் இயக்கம் மூலமாக ஜான் ஊ சிறந்த இயக்குநராகப் பெயர் பெற்றார்.

படம் முடிந்ததுமே சாமோ ஒரு பெரிய குண்டைப் போட்டார்.

புரூஸ் லீயின் மறைவுக்குப் பின், கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தில் எடுத்த படத்திலெல்லாம் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. பல ஆரம்பமான படங்களும் நிறுத்தப்பட்டன. ஸ்டண்ட் படங்களைமக்கள் விரும்பிப் பார்க்காததால், நகைச்சுவை படங்கள் பல வெளி வர ஆரம்பித்தன. அதனால் சானுக்கும் அவனைப் போன்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் வேலை கிடைப்பது கஷ்டமானது.

அதைத் தான் சாமோ சானிடம், “இனி மேல் வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம் சான்” என்று சொன்னார்.

“பெரியண்ணா ஏதாவது செய்யுங்க..” என்று சான் கெஞ்சினான்.

“என்னுடைய வேலைக்கே ஆபத்து இருக்கும் போது.. உங்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று சொல்..” என்று சானிடம் கேட்டார் சாமோ.

நேரம் சரியில்லாத காரணத்தால், சாமோ சானிடம் “நீ உங்க அப்பா அம்மாகிட்டே போறது தான் நல்லது” என்று அறிவுரை கூறினார்.

சான் அதை மறுத்துத் தலையை ஆட்டினான்.

“உனக்கு ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் இருப்பதால் அங்கே போகலாம்.. வரலாம்.. எங்களுக்கு அப்படிச் செய்ய முடியாது. திரை உலகம் ரொம்பவே கீழே போயிட்டது. அத்தோட நாங்களும் கீழே போகவேண்டியதுதான்” என்றார் ஆதங்கத்துடன்.

இதைக் கேட்ட சான் அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். சாமோ அவனைத் தட்டிக் கொடுத்து “நேரம் வரும் போது எல்லாம் மாறும். அது மாறும் போது நீ இங்கே வரலாம். உனக்காக நான்இங்கேயே இருப்பேன்.. உன்னுடைய பெரியண்ணனாக..” என்று கூறினார் ஆறுதலாக.

சாமோ மிக நல்ல அறிவுரையே கூறிய போதும், சானுக்கு அதை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. தான் தந்தையிடம் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் கூறி வந்ததும், ஒரு வருடத்திற்கும்குறைந்த நேரத்திலேயே ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று அவரிடம் எப்படிக் கூறி ஊர் திரும்புவது? தோல்வியை எப்படி அவரிடம் கூறுவது? ஆஸ்திரேலியா சென்று தலை குனிவதை விடவும்ஹாங்காங்கிலேயே இருந்து கொண்டு தெரு பெருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது.

சண்டைப் போடுவதைத் தவர வேறு எந்தத் திறமையும் இல்லாத காரணத்தாலும் ஒரு வாரத்திற்கு உண்ண மட்டுமே பணம் இருந்ததாலும், கதியின்றி பெற்றோரிடமே திரும்பச் சென்று விடலாம் என்றமுடிவுக்கு வந்தான்.

வீடு திரும்புவது பெரிய இம்சையாக இருந்தது. நகரம் தன்னைக் கண்டு கேலி செய்வதாகத் தோன்றியது. நகரத்தில் எவ்வளவு தான் பணம் கைக்கு கை மாறினாலும், தன்னிடம் எதுவும் இல்லையேஎன்ற ஆதங்கத்துடன் திரும்பினான்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே அப்படியே தொப்பென்று மெத்தையில் விழுந்தான். ஆடாமல் அசையாமல் படுத்திருந்தான்.

அப்போது அழைப்பு மணி ஒலித்தது.

யார் இந்த நேரத்தில்?

விரக்தியான இந்தத் தருணத்தில் வந்திருப்பது யார்?

தன்னைக் காண யாரும் இது வரை வந்ததில்லையே?

வீட்டு நிர்வாகியா? இல்லை அவர் பேத்தியா?

மற்ற ஸ்டண்ட் ஆட்களா?

யாரும் வர வாய்ப்பில்லையே?

கடன் தந்தவர்கள் யாரேனும் வந்திருக்கிறாரா?

ஒரு நொடியில் ஆயிரம் எண்ணங்கள். யாராயிருந்தால் என்ன? இப்போ போய் பார்ப்பது அவசியமா?

சான் சற்று நேரம் அப்படியே இருந்தான்.

மறு முறையும் மணி ஒலித்தது.

தன்னை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, யாராயிருந்தாலும் சென்று பார்த்து விடலாம் என்று எழுந்து சென்று கதவைத் திறந்தான்.

நின்றிருந்தவரைக் கண்டதும் சானுக்கு பெருத்த அதிர்ச்சி.

அடடா.. ஓ சாங்கல்லவா அது?

அப்படியே விக்கித்து நின்றான்.

வாழ்க்கையே வெறுத்திருக்கும் நேரத்தில், தன்னுடைய முன்னாள் காதலி அங்கு நின்றிருப்பதைக் கண்ட சானுக்கு எப்படி இருக்கும்?

ஓ சாங் இப்போது சற்றே உயரமாகவும், வயது கூடியும், முன்பை விட அழகாகவும் இருந்தாள். சிறுமியைப் போன்று தோற்றமளிக்காமல், நன்றாக அலங்கரித்துக் கொண்டு வாலிபப் பெண்ணாக,அழகாக நின்றிருந்தாள்.

சானைக் கண்டதும் “யூன் லோ..” என்றாள்.

சானுக்கு அவளைக் கண்டதும் நிறைய பேச வேண்டும் போலிருந்தது. அவளில்லாமல் மிகவும் வருந்தியதையும், மறுபடியம் பார்ப்போமா என்று ஏங்கியதையும் சொல்ல வேண்டும் போலிருந்தது. இருந்தாலும் எதுவும் பேசாமல், அவள் அறைக்குள் வர வழியை விட்டு நின்றான்.

அறைக்குள் நுழைந்ததுமே சுற்றிலும் பார்த்து விட்டு, “உன் அறை அழகாக இருக்கிறது..” என்றாள்.

உடைந்த சன்னலும், கையால் செய்யப்பட்ட மரச் சாமான்களும், பழைய மெத்தையும் இருந்த தன் அறையைப் போய் அழகாக இருக்கிறது என்கிறாளே?

“நன்றாகவா இருக்கிறது?” என்றான் சான் ஒப்புக்கு கேட்டு வைத்தான்.

“இருந்தாலும் இவை உன்னுடையதல்லவா.. நல்லாயிருக்கு..” என்றாள்.

இருந்த ஒரே நாற்காலியை இழுத்துப் போட்டு அவளை அமரச் சொன்னான். மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டான்.

“என்ன.. இங்கே?” என்று கேட்க எத்தனித்தான்.

அதை அவள் புரிந்து கொண்டு, “நான்.. நான் உன்னைப் பார்க்க ஸ்டுடியோ போனேன். உன்னுடைய நண்பர்களைப் பார்த்தேன். நீ வீட்டுக்குப் போனதாகச் சொன்னாங்க..” என்றாள்.

“இன்னிக்கு நான் சீக்கிரமாகவே வந்துட்டேன்” என்றான் வேகமாக.

அவள் சான் அமர்ந்திருந்த இடத்திற்கு எழுந்து வந்து, “யூன் லோ.. உன் பிரச்சினையைப் பற்றி அவர்கள் சொன்னார்கள்..” என்றாள் மிகவும் மென்மையாக.

சானுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாக இருந்தான்.

ஓ சாங் மேலும், “உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று உனக்குத் தெரிய வேண்டும்” என்றாள்.

அவள் காட்டும் இரக்கம் அவள் வார்த்தைகளில் தெரிந்தன. அது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“என் மேலா? நம்பிக்கையா? அதெப்படி இருக்கும்? உன் தந்தை சொன்னது அத்தனையும் உண்மை. நான் ஒரு ஏழை. வருங்காலமே இல்லாத ஸ்டண்ட் கலைஞன். வேலையில்லை. உன்னைப்போன்ற நல்லப் பெண்ணுடன் இருக்க அருகதையற்றவன்” என்றான் வெறுப்புடன்.

அதிர்ச்சியுற்ற சாங், “யூன் லோ.. அப்படிச் சொல்லாதே. நீ நல்லவன். திறமையானவன். உனக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். இப்போ நேரம் சரியில்ல.. அவ்வளவுதான்..” என்றாள் ஆறுதலாக.

“எனக்கு எப்போ நேரம் வந்து.. எப்போ நல்லது நடக்கும்..” என்றான் சோர்வாக.

பின்னர் சற்றே சுதாரித்துக் கொண்டு, “ஆமாம்.. நீ இங்கே ஏன் வந்தாய்? இந்த நேரத்தில் நீ மேடையில் முக்கிய பாத்திரத்தில் நடித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும்? இல்லை யாராவதுபணக்காரனோடு சுற்றிக் கொண்டல்லவா இருக்க வேண்டும்? உன்னுடைய வீட்டில்.. பெரிய வீட்டில் பெற்றோருடன் இருக்காமல் உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கோபத்துடன் கேள்வி மேல்கேள்வி கேட்டான்.

ஓ சாங் ஒன்றுமே பேசவில்லை.

“எனக்கு ஹாங்காங் வேண்டாம். யாருடைய தயவும் வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம்” என்று வேண்டா வெறுப்புடன் கத்தினான்.

“உனக்கு எதுவும் வேண்டாம் என்பது உறுதியா?” என்று கேட்டாள் சாங்.

அவள் தன் கைப்பையைத் திறந்து, காகிதத்தால் சுற்றப்பட்டிருந்த ஒரு கட்டை மெத்தையின் மேல் வைத்தாள்.

இருவரும் எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு கைகள் நடுங்க, சான் அந்தக் கட்டை எடுத்துப் பிரித்தான்.

அதில் பணம் இருந்தது. எண்ணிப் பார்த்தான். இருபதாயிரம் ஹாங்காங் வெள்ளி இருந்தது. இருந்த வீட்டின் பாதி விலைக்கான பணம் அது.

மிகவும் கவனமாக மறுபடியும் கட்டி அதைக் கீழே போட்டான்.

“என்னால் இதை எடுத்துக் கொள்ள முடியாது” என்றான் வீம்புடன்.

“யூன் லோ.. உன்னிடம் பணம் ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். உன்னுடைய பெற்றோரிடம் போக, ஆஸ்திரேலியாவுக்குப் போக டிக்கெட் வாங்கியாகணுமில்லையா? அவங்களத் தரச் சொல்லிகேக்கப் போறியா? அதுவா உனக்கு வேணும்..” என்று கேட்டாள் அன்புடன்.

சானின் கண்களில் நீர் கோர்த்தது. இந்த வயதான காலத்திலும் பெற்றோர் எத்தனை கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முடியாமல், அவர்களைத் தொந்தரவு செய்து,பணம் கொடுங்கள் என்று கேட்க முடியுமா என்று யோசித்தான்.

ஓ சாங் சொல்வது சரியே. அவள் உதவியைப் பெற்றுக் கொண்டால் நல்லது என்று தோன்றியது. சாங் பணத்தை அவன் கைகளில் திணித்தாள்.

“நீ எனக்கு பேரும் புகழும் பணமும் சம்பாதித்தப் பிறகு திருப்பிக் கொடு..” என்றாள்.

தன்னிடம் இவ்வளவு நம்பிக்கையா என்று அதிர்ந்திருந்த சமயத்தில், “நிச்சயம் நீ பெரியாளாக வருவாய் என்று எனக்குத் தெரியும். அதற்காக இது என் முதலீடு..” என்றாள் பெருமிதத்துடன்.

இதைக் கேட்டதும் சானுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, தன் பாஸ்போர்ட்டை மெத்தைக்கடியிலிருந்து எடுத்துக் கொண்டு, “ஓ சாங்.. நீ வீட்டுக் போய் உன்பாஸ்போர்ட்டை எடுத்து வா.. என்னுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்துடு.. என் பெற்றோர் உன்னை..” என்று சான் கூறிக் கொண்டே செல்ல.. சாங் மிகவும் அமைதியாக சற்றே புன்னகைத்துக்குக்கொண்டே, “யூன் லோ.. என்னால் முடியாது. என் பெற்றோரை விட்டு என்னால் வர முடியாது. நான் உன்னை மறுபடியும் பார்க்காமல் போக மாட்டேன்” என்றாள் உறுதியுடன்.

சாங்கின் உறுதி சானை என்னவோ செய்தது. அவனால் தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது.

“அது வரை என்னை ஞாபகம் வைத்துக் கொள்” என்று சொல்லி விட்டு, எழுந்து சென்றாள்.

சானுக்குத் தான் காண்பது கனவா நனவா என்று புரியவில்லை. சாங் வந்தாள். பணத்தைத் தந்தாள். சென்றும் விட்டாள். அவள் சென்று விட்ட போதும் அவள் கொடுத்த நம்பிக்கை சானிடம் கெட்டியாகஒட்டிக் கொண்டது. அவளது கருணை, அவளை மறக்க முடியாமல் அவனது நெஞ்சை நிறையச் செய்தது.

author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *