அழித்தது யார் ?

This entry is part 13 of 26 in the series 27 அக்டோபர் 2013

24.10..2013
வே.ம.அருச்சுணன் – மலேசியா

“மணி…..! நீ என்னடா சொல்ற…?”
“ஜீவா அண்ணே……நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க…..! நீங்க மெத்த படிச்சவங்க……யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய பட்டங்கள வாங்கினவங்க…..நான் போய் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல முடியுமா?”
இருவரும் பேசிக் கொள்வதைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழரசு பால்ய நண்பன் மணியைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கின்றான். பிரளயம் வெடிக்கும் சூழல்.ஏற்கனவே ஒருமுறை இது போன்று அவர்கள் இருவரும் பேசியது அவன் நினைவுக்கு வருகிறது. ம்……இன்று சிறிது வேடிக்கைப் பார்க்கலாம்.களுக்கென்று சிரித்துக்கொள்கிறான்.பல அர்த்தங்களை உள்ளடக்கி ஆருயிர் நண்பனை நோக்கி மீண்டும் ஒரு புன்முறுவல்.
“அதாண்டா சொல்றேன்……பேசாம என் பிள்ளைப் படிக்கிற அதே பள்ளியில உன் பிள்ளையையும் சேர்த்திடு…..!”
“நடக்கிற தூரத்தில தமிழ்ப்பள்ளி இருக்கிறப்போ,பத்து கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற வேற்று மொழிப் பள்ளியில பிள்ளையைச் சேர்க்கச் சொல்றீங்களே…..? படிச்ச மனிதர் நீங்களே….நம்ம பள்ளியை அழிக்க வழி சொல்றீங்களே…..இது சரியாண்ணே?”
“அட மண்டு சொல்றத புரிஞ்சிக்க….தாய்மொழிய அழிக்கச் சொல்லலடா……….!”
“தமிழ் இளைஞர் மணி மன்றத்தில நான் பொறுப்பில இருந்தப்ப, மொழி அழிஞ்சா…. ஓர் இனம் அழியுமுனு….., அண்ணன் சா.ஆ.அன்பானந்தன் மேடையில சொன்னது என் நெஞ்சில இன்னும் பசுமையா இருக்கு…..!”
“அட, நீ ஒன்னு…..! இப்ப காலம் மாறிப்போச்சு…….பிழைக்கிற வழியப்பாரு மணி”
“எல்லாரும் பிழைக்கிற வழியைப் பார்த்துட்டுப் போனா….நம்ம தாய்மொழிய யார் காப்பாத்துறது?
“எப்படி சொன்னாலும் நீ புரிஞ்சிக மாட்டுரியே………!”
“அண்ணே…..நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னோட ஒரே பிள்ளையத் தாய்மொழிப் பள்ளிக்குத்தான் அனுப்பப்போறேன்….!”
“படிச்ச மனுசன் சொன்னா கேட்கனும்.நல்ல பையனாச்சேனு உண்மைய எடுத்துச் சொன்னா…..புரிஞ்சிக்காம பிடிவாதமா இருக்கிறியே…..!”
“உங்க மூனு பிள்ளைகளப் போல இந்த நாலாவதுப் பிள்ளையையும் வேற்றுப் பள்ளியிலப் போடுங்க! ஆனா…தாய்மொழியை அழிச்ச பாவம் உங்களப் போன்ற அதிகம் படிச்ச பச்சோந்திகளச் சும்மா விடாது!”
“யாரு என்ன சொன்னாலும் சரி…..கண்டிப்பா என் நாலாவது பிள்ளையையும் வேற்றுப் பள்ளியிலதான் சேர்க்கப்போறேன்!”
“புரட்சிக் கவிஞர் பாரதிதான், ‘தமிழைப்பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்னு’ சொல்லியிருக்கிறாரு. படிச்சவங்கதான் படிப்பறிவு இல்லாத பாமரமக்களுக்கு முன் மாதிரியா நடந்துக்கனும். ஆனா……உங்களப் போன்ற சுயநலப் பேர்வளிகளாள இன்றைக்கு 52% தமிழ்மாணவர்கள் வேற்றுப் பள்ளியிலப்படிக்கிறாங்க.வெறும்48% சதவீத மாணவர்கள்தான் தமிழ்ப்பள்ளியிலப் படிக்கிறாங்க……! நமக்கு இருக்கிற வாய்ப்பை இழக்கலாமா?”
“மணி…..உண்மையிலேயே உன் மண்டையில களிமண்னுதான் இருக்கு……! பிழைக்கத்தெரியாத ஆளா இருக்கிறீயே! செக்கண்டரிப் பள்ளிக்குப் போனா மலாய் மொழியிலதான் எல்லா பாடங்களும் படிச்சிக் கொடுப்பாங்க.மலாய் மொழியில நல்லா எழுதப்படிக்கத் தெரிந்தாதானே மாணவர்கள் கல்வியில சிறப்பா முடியும்?”
“தமிழ்ப்பள்ளியிலப் படிக்கிற பிள்ளைகள் மலாய்ப் பாடத்தைச் சரியா செய்ய முடியாதுன்னு சொல்றீங்களா…..?”
“ உண்மையத்தானே சொல்றேன்….!”
“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மலாய்ப் பாடத்தில சிறந்து விளங்கிறாங்க என்பதற்கு அண்மையில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் பல ஆயிரமாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றதைக் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையே தக்கச் சான்றாக இருக்கும் போது, நீங்க உண்மைக்குப் புறம்பாக கருத்துச் சொல்றீங்களே…..?”
“யூபிஎஸ்ஆர் தேர்வுல நாட்டில எத்தனைத் தமிழ்ப் பள்ளியில நூற்றுக்கு நூறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைஞ்சிருக்குனு சொல்லு….?”
“கல்வியில எண்பது சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும்; நல்லொழுக்கமுள்ள மாணவர்களாக நூற்றுக்கு நூறு சதவீதம் கொண்டவர்களாவும், தமிழ்ச்சமுதாயத்தைக் காக்கும் உணர்வு மிக்கவர்களாகவும் இருக்கிறாங்க…..!”
“மற்றப் பள்ளியிலப் படிக்கிற மாணவர்களுக்குச் சமுதாய உணர்வே இல்லேன்னு சொல்றீயா…..?”
“சுயநலப் போக்குள்ள உங்களைப் போன்ற பெற்றோர்களுக்கே மொழிப்பற்றும் சமுதாயப் பற்றும் இல்லாத போது, உங்கப் பிள்ளைகளுக்கு மட்டும் எங்கிருந்து வந்திடப் போகுது….?
தமிழை மறப்பவன் பெற்ற தாயையே மறந்தவன்…..!”
“ என்னை சபிக்கிறீயா மணி….?”
“உங்க மீது தனிப்பட்டு எனக்கு எந்தவித குரோதமும் இல்ல! ஆனா….ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை மதிக்காத நீங்க ஒரு துரோகி என்பது நூறு சதவீதம் உண்மை…!”
“நீ…..சொல்றது உனக்கே ஓவாரா தெரியல…..?”
“தாய் மொழிய மறக்கும் உங்களத் துரோகின்னு சொல்லாம வேற எப்படி சொல்றறு….!”
“இன்னும் கொஞ்ச நேரம் பேசினா…..என்னைக் கொன்னுப் போட்டாலும் போட்டிடுவே போலிருக்கு…..! நான் புறப்படுறேன். ம்………நல்லதுக்குக் காலம் இல்ல மணி!”
“அண்ணே…..தமிழன் என்ற முறையில நீங்க சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமைய……மறக்காம செய்யப் பாருங்க….!”
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்….! ஜீவா அங்கிருந்து நடையைக் கட்டுகிறான்.
விதண்டாவாதம் புரிந்து ஜீவா மீது ஏற்பட்ட ஆத்திரமும் வெறுப்பும் அடங்க மணிக்கு பல நிமிடங்கள் ஆயின.
“அவருக்கிட்டப் பேசின நேரத்தில,படிக்காதவங்கிட்டப் பேசியிருந்தாவது, நிச்சயமா
நாளுபிள்ளைகளத் தமிழ்ப்பள்ளிக்குச் சேர்த்திருக்கலாம்….!”
“ச்சே…..!ஆசிரியரே தமிழ்மொழிக்குச் சவக்குழி தோண்டுகிறாரே….? தமிழால் வயிற்றைக் கழுவும் இவரைப் போன்றோர் மான ரோசம் இல்லாதவர்கள்.இந்தச் சமுதாயத்தின் பாவச் சின்னங்கள் அரசு…!”
“ஓசோன் ஓட்டையால உலகமே வெப்பத்தால கொதிச்சிக்கிட்டு இருக்கு.போதாருக்கு வாத்தியாரோட அனல் பறக்கும் பட்டிமன்றம் வேறு…!”
அங்காடித் தெருவில் சில்லென்று இளநீர் அருந்துகின்றனர்.ஏறிப்போயிருந்த உடம் சூடு சற்று குறைந்து மணியின் முகத்தில் இறுக்கம் மறைந்து போனது.தமிழரசு மணியின் முதுகைத் தட்டிக் கொடுக்கிறான்.இருவரும் வாய்விட்டு சிரிக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களே இருப்பதை மணிக்கு நினைவூட்டுகிறான் அரசு. இருவரும் அங்கிருந்த விரைகின்றனர்.
இரண்டு மாதங்களில் புதிய கல்வி ஆண்டைத் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பள்ளி ஒன்றுக்குப் போதிய மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கைக் குழுக்கூட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் மணியும் அரசும் கலந்து கொள்கின்றனர்.
“கடந்த 56 ஆண்டுகளாகச் சீராக இயங்கிக் கொண்டிருந்த அப்பள்ளி பெற்றோர்களின் பிறமொழி மோகத்தினால் மாணவர்களின் எண்ணிக்கைத் திடுமென குறையத்தொடங்கிப் பள்ளி மூடும் மோசமான நிலைக்கு வந்துவிட்டது.இந்த வட்டாரத்தில் இருக்கும் எல்லா குடியிருப்புகளுக்கும் சென்று பெற்றோர்களை நேரில் சந்திக்கவிருக்கும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்…..!” தலைவர் அறிவானந்தன் குறிப்பிட்ட போது வருகையாளர்கள் இருக்கையில் நிமிர்ந்து அமர்கின்றனர்.
மறுநாள், ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஐந்து மாடிகளைக் கொண்ட ‘தேச மேகா’ குடியிருப்புப் பகுதியில் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.
அமைதியில் மூழ்கிப் போயிருந்தது அக்குடியிருப்பு. ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைகளில் விடுமுறை பல தமிழ்க்குடும்ப உறுப்பினர்கள் நீள்துயிலில் மூழ்கிருந்தனர். உலகத்தில் என்ன நடக்கின்றன என்பதையெல்லாம் அவர்கள் கண்டுக் கொண்டதாக் தெரியவில்லை!
மின் தூக்கியில் செல்லாமல் நடந்து சென்று இரண்டாவது மாடியை அடைகின்றனர். அறிமுகமான ஒருவர் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. சிறிது தாமதத்துடன் கதவைத் திறந்தவர் வெளியில் சிலர் நிற்பதைக் கண்டு அதர்ச்சி கொள்கிறார்.
“வணக்கம் மணி…..என்ன விசியம்?”
“வணக்கம் மாது…..! உங்கப் பிள்ளைகளப் பள்ளியில பதிஞ்சிட்டிங்களா…..?”
“இன்னும் பதியில மணி. நேரம் இல்ல……….. தினமும் வேலை………..!”
“சரி…..பிள்ளைகளோடப் பிறந்த பத்திரங்களைக் கொண்டாங்க. நம்ப தமிழ்ப்பள்ளியிலச் சேர்த்திடலாம்……!”
“வேற பள்ளியில சேர்க்கிறதா இருக்கோம்……!”
“பக்கத்தில நம்ம பள்ளி இருக்கிறப்ப வேற்றுப் பள்ளியில ஏன் போடனும்னு சொல்றீங்க….?”
“ சொல்றேனு வருத்தப்படாதே மணி…..!”
“சொல்றதச் சீக்கிரமா சொல்லுங்க….இன்னும் பல பெற்றோரைப் பார்த்தாகனும்…..!”
“ஐந்தாவது மாடியில் இருக்கிற தமிழ் வாத்தியார் ஜீவா மூன்று பிள்ளைகளையும் மற்ற பள்ளியிலத்தானத்தானே போட்டிருக்கிறாரு. அடுத்த பிள்ளையையும் வர்ர வருசம் மற்ற பள்ளியிலத்தானாம். என்னோடப் பிள்ளையையும் சேர்க்கச் சொன்னாரு….!”
“புல்லுருவிகளச் சும்மா விடக்கூடாது மணி….!”
“வம்பு பண்ண நமக்கு நேரமில்ல அரசு! வந்த வேலையப் பார்ப்போம்….!”
“சொல்ல வெட்கமா இருக்கு மணி…….! என் இரண்டு பிள்ளைகளுக்கும் பிறந்த சூரா எடுக்கல…….தமிழ்ப்பள்ளியிலச்சேர்த்துக்குவாங்களா?”தலையைத்தொங்கப்போட்டுக் கொள்கிறார்.
“உதவி செய்யத்தானே வந்திருக்கோம்….! எதுக்கும் கவலைப் படாதிங்க.தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளைச் சேர்த்தாலே நம்ம தாய்மொழியைக் காப்பாற்றிடலாம்………!”
பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்ப்பதற்காக வீடுவீடாகச் செல்வதைக்கண்டு வேண்டாத விருந்தாளிகளைப் போல் பார்த்தும் பார்க்காவது போல் சிலர் ஒதுங்கிச் செல்கின்றனர்.சிலர் முகத்தில் வெறுப்பைக் காட்டினர்.
ஐந்து மாடிகளிலுள்ள பெற்றோர்களைச் சந்திப்பதில் தொய்வில்லா பணிகளை மேற்கொள்கின்றனர் மணி தலைமையிலான குழுவினர்.
“உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா தம்பி? பெற்றவர்களுக்குத் தெரியாத அவர்கள் பிள்ளைகள எந்தப் பள்ளியிலப் போடனுமுனு…அதிகப்பிரசிங்கத்தனமாகப் பேசிக்கிட்டுத் திரியாம உடனே வீடு போய் சேருங்க.இங்கிருந்து நீங்கள் உடனே போகலன்னா கலாட்டா செஞ்சிங்கனு போலிஸ்சைக் கூப்பிட்டு உங்களயெல்லாம் உள்ளே தள்ளிடுவேன்…!” குடியிருப்புத் தலைவர் வீரமலை எரிமலையாகிப் போகிறார்.
“ கொஞ்ச நாள்ள தமிழ்மொழி அழிஞ்சிடும் போல இருக்கு.அதான் நாங்க படிச்சப் பள்ளிக்குப் பிள்ளைகளைச் சேர்க்கிறோம்.எங்களோட முயற்சிக்கு நீங்களும் உதவலாம்……!”
“தமிழ் படிக்காத நான் எப்படி தமிழ்ப்பள்ளிக்கு உதவி செய்யிறது?”
“உங்க பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்க…..!”
மணி கூறியதைக் கேட்டு,மௌனமாக அங்கிருந்து நகர்கிறார்.
“ அரசு, எத்தனை மாணவர்கள் சேர்ந்திக்கிறார்கள்…….?
“ மணி…..இன்று மட்டும் ஐம்பது மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள்……!”
“ ஏற்கனவே பத்து மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள்……!”
“அரசு…..! புதிய ஆண்டுல….இரண்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் என்று சொல்லு…..?”
“மணி…..! அடுத்த ஆண்டு முதல் எல்லா வகுப்புகளும் இரண்டு வகுப்புகளாகத் தொடர நாம் கடுமையாக உழைக்க வேண்டும்……!”
அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் ஐந்து குடியிருப்புகளிருந்து ஐம்பது மாணவர்களின் பதிவு குறித்து மீண்டும் மண்டபத்தில் கூடிய உறுப்பினர்களுக்கு இனிப்பானச் செய்தியாக அமைந்தது. பள்ளியின் அடுத்தக்கட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பயனாகக் கருத்துகளை விவாதித்தப் பின்பு கூட்டம் முடிவுறுகிறது.
வழக்கம் போல் பரபரப்பானச் செய்திகளைத் தினமும் தாங்கி வரும் தமிழ் தினசரிகள் அன்று மிக ஒற்றுமையாக எல்லா தமிழ் தினசரிகளிலும்,முதல் பக்கத்தில் தேசியப் பள்ளியில் பயிலும் பதின்மூன்று தமிழ்ப்பிள்ளைகள் கழிவறை அருகில் உணவருந்தும் படக்காட்சியுடன் வந்த செய்தியைக் கண்டு ஒட்டு மொத்த இந்தியச் சமூகம் கொதித்தெழுந்தது!
பள்ளிக்கெதிராகக் காவல் துறையில் பல புகார்கள் கொடுக்கப்படுகின்றன.கட்சி பேதமின்றி பிரச்சனைக்குத் தீர்வு காண அரசியல் வாதிகள் முயல்கின்றனர். பல பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் உடனே மாற்றப் பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன் வைத்தனர்.
பல முறை பேசப்படும் பொய் கூட உண்மையாகிவிடுவது போல் வியாக்கியானங்களாலும்,குதர்க்கமானப் பேச்சுகளால் காலம் கரைந்ததேயன்றி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சாதகமானதைவிட பாதகமான நடவடிக்கைகளே அரங்கேரின.
மூன்று பிள்ளைகளோடு தம் நான்காவது பிள்ளையையும் அழைத்துக் கொண்டு ஆசிரியர் ஜீவா தமிழ்ப்பள்ளியை நோக்கிப் புயலாய்ப் பயணிக்கிறார்!

முற்றும்

Series Navigationப மதியழகன் சிறு கவிதைகள்வணக்கம் சென்னை
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *