ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

This entry is part 22 of 26 in the series 27 அக்டோபர் 2013

மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது

சின்ன மேசையருகே முழந்தாளிட்டு
நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது
சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில்
நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ
மழை வருமா எனக் கேட்ட பொழுது சிரித்தேன்
பெருங்குளத்துக்கு மத்தியிலான காட்டைச் சுற்றிவர
நிலத்தில் பதித்திருந்த பச்சை விளக்குகள்
முன்னந்தியில் ஒளிர ஆரம்பிக்கையில் மழை
சட்டெனப் பெய்து வலுத்தது கண்டு கை கோர்த்துக் கொண்டோம்

அப்பொழுதெல்லாம் எவ் வடிவ மேகம் போல நீ மிதந்தாய்
என் புன்னகை ஒரு மந்திரக் கோலென்றாய்
எந்த அதிர்வுகளுக்கும் ஆட்படாத மனம்
அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச் சொல்லி
உனது தூரிகை தொடர்ந்தும் சித்திரங்களைப் பரிசளித்தது
என் நேசம் உன் புல்லாங்குழலின் மூச்சென்றானது

நீ இசைத்து வந்த வாத்தியக் கருவியை
அன்றோடு எந்த தேவதை நிறுத்தியது
உன்னிலிருந்தெழுந்த இசையை
எந்த வெளிக்குள் ஒளிந்த பறவை விழுங்கிச் செரித்தது

மழைக் காலங்களில் நீர் மிதந்து வந்து
விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி
பெருக்கெடுத்துப் பாய்ந்தோடும் நதியொன்றிருந்த
எனது கிராமத்தின் கதையை
இக் கணத்தில் உனக்குச் சொல்ல வேண்டும்
ஊரின் முதுகெலும்பாய்ப் படுத்திருந்த மலையின் ஒரு புறம்
சமுத்திரமும் இருந்தது

வாழ்நிலங்களைக் காக்கவென மூதாதையர்
அம் மலையைக் குடைந்து இரண்டாக்கி
ஆற்றின் தண்ணீர்ப் பாதையை
கடலுக்குத் திருப்பிய கதையையும்
கூடைகூடையாய் தொலைவுக்கு கால் தடுக்கத் தடுக்க
பெண்கள் கல் சுமந்து சென்று கொட்டிய கதையையும்
இரவு வேளைகளில் விழி கசியச் சொன்ன
பாட்டி வழி வந்தவள் நான்

அந்த மன உறுதியும் நேசக் கசிவும் ஒன்றாயமைந்த
நான் மிதக்கும் தோணியை ஒரு பூக்காலத்தில்
ஏழு கடல் தாண்டித் தள்ளி வந்திருக்கிறாய்
உனது எல்லா ஓசைகளையும் மீறி
‘உஷ்ணப் பிராந்தியத்தில் வளர்ந்த செடியை
குளிர் மிகுந்த பனி மலையில் நட்டால்
ஏது நடக்குமென நீ அறியாயா’ எனப் பாடும் இராப் பாடகனின் குரல்
தினந்தோறும் இடைவிடாது எதிரொலிக்கிறது

– எம்.ரிஷான் ஷெரீப்
20120428

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *