மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை
வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன்
( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் அ.ப. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில் தங்கியிருக்கமுடியவில்லை. கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் போக்குவரத்துக்கு வசதியாக கடலூரில் வசிக்கத் தொடங்கி, பணி ஓய்வுக்குப் பிறகும் அவர் வாழ்க்கை கடலூர் முகவரியோடு தொடர்கிறது. கடுமையான நிதிச்சிக்கலைச் சமாளித்து ’சங்கு’ என்கிற பெயரில் ஒரு சிற்றிதழை நடத்தி வருகிறார். தொடக்கக்காலத்தில் மரபுக்கவிஞராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்து, நவீன இலக்கிய வாசிப்புக்குப் பிறகு சிறுகதைகளை எழுதத் தொடங்கி நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இரண்டு நாவல்களும் ஒரு மரபுக்கவிதைத்தொகுதியும் வெளிவந்துள்ளன. இலக்கியப்பேரவை என்கிற பெயரில் ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். மாதம் ஓர் இலக்கியக்கூட்டம் நடத்தி வருகிறார். பயணங்களில் ஆர்வம் உள்ளவர். கடலூரில் உள்ள பல நண்பர்களை ஒருங்கிணைத்து சில ஆண்டுகளுக்கு முன்பாக பசுபதிநாத் வரைக்கும் சென்று வந்தார். தன் பயண அனுபவங்களை ஒரு சிறிய நூலாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இலக்கியமும், இவருடைய இனிய பழகும் முறையும் கடலூரில் ஒரு பெரிய நட்புவட்டத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். இளம்வயதில் அண்ணன் என்று அன்போடு அழைத்து இவரோடு இலக்கியம் பேசிய நினைவுகள் இன்னும் என் மனத்தில் நிழலாடுகின்றன. இவருடைய துணைவியார் அலர்மேல்மங்கை. ஓய்வுபெற்ற ஆசிரியை. இவருடைய பிள்ளைகள் அல்லி, முகிலன், எழிலன். மூவரும் திருமணம் முடித்து வெவ்வேறு ஊர்களில் குடியிருக்கிறார்கள். )
கேள்வி: உங்கள் மாணவப் பருவ வாழ்வில் இலக்கியத்துக்கான இடம் எப்படி உருவானது ? இலக்கியத்தின்பால் உங்கள் கவனத்தைத் திசை திருப்பிய சம்பவம் அல்லது மனிதர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?
பதில்: நான் படித்த ஜார்ஜ் நடுநிலைப் பள்ளியில் [ இன்றைய கோவிந்தையர் பள்ளியில் ] வாரந்தோறும் இலக்கிய மன்றம் நடைபெறுவதுண்டு. அதில் தவறாமல் நான் பேசுவேன். நான் அம்மன்றத்தில் செயலாளராக இருந்திருக்கிறேன். எனவே மேடைப்பேச்சு இயல்பாகவே வந்தது. அது மட்டுமில்லாமல் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு கையெழுத்திதழைத் தொடங்கி நடத்திய அனுபவமும் இருந்தது. நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்க வந்தபிறகு மாவட்டக் கல்வி அலுவலர் கலந்து கொல்ளும் விழாவில் என்னை இலக்கியத் தலைப்பில் மனப்பாடம் செய்து பேசச் சொன்னார்கள். இலக்கிய ஆர்வத்திற்கு முதல் காரணமாக எங்கள் எட்டாம் வகுப்புக்குத் தமிழாசிரியராக இருந்த புலவர் தா.மு. கிருஷ்ணனைச் சொல்லவேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்த பின் இலக்கிய ஆர்வத்தை வளர்த்த வகையில் எங்கள் ஊரைச் சேர்ந்த இராசாராமனுக்கும் அவர் நடத்திய திருக்குறட் கழகத்துக்கும் பெரிய அளவில் பங்குண்டு.
கேள்வி: நடுத்தட்டினர் அனைவரையும் ஈர்த்த அறுபதுகளின் அரசியல் ஈடுபாடு உங்கள் வாழ்வில் எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது? அன்றைய திராவிட இயக்கங்களைப் பற்றி உங்கள் மனப்பதிவு எப்படி இருந்தது?
பதில்: அறுபதுகளில் இறுதி மூன்றாண்டுகள் நான் வேலையேதுமின்றித் திரிந்துகொண்டிருந்தேன். அப்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த ந.க.காந்தி, சா.வே.இராமச்சந்திரன், க.இராமக்கிருட்டிணன், அ.பழனிவேலன் போன்றோர் மூலமாகத்தான் எனக்கு திராவிடஇயக்கம் அறிமுகமாயிற்று. அர. இராசாராமன் எப்போதுமே தன் தரப்பை அதிகமாக வெளிக்காட்டாத ஓர் இலக்கியவாதி. அவர் கண்ணதாசனின் ”தென்றல்” பழைய இதழ்களையெல்லாம் படிக்கக்கொடுத்தார். கண்ணதாசனின் நடையும் அண்ணாவின் பேச்சும் என்னை திராவிட இயக்கத்தின்பால் செலுத்தின. என்னுடைய அப்போதைய நண்பர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தனர். திராவிடம் என்பது மிகவும் கவர்ச்சிகரமான கோஷமாக இருந்தது. திராவிடம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். வாழ்வில் கடவுள் மறுப்பு மற்றும் தமிழ் முன்னேற்றம் ஆகிய இரண்டும் மிகமுக்கியமானவை என்னும் எண்ணமும் தோன்றி வளர்ந்த்தது.
தமிழ்நாட்டில் அப்போது திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்திமொழிப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. இயல்பாகவே தமிழ்மீது ஆர்வம் கொண்டிருந்த எனக்கு திராவிடஇயக்கம் மீது ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் விளையாடிவிட்டு மாலைவேளையில் கோயிலுக்கு ஒழுங்காகப் போய்வந்துகொண்டிருந்த நான் அப்பழக்கத்தை உடனடியாக உதறிவிட்டேன். அரசியலைப் பொருத்தமட்டில் எங்களுக்கெல்லாம் அண்ணா ஒரு தேவதூதனாகத் தெரிந்தார். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக எங்கள் ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் கூட்டம் நடக்கிற சமயங்களில் பயணத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல் போகத்தொடங்கினேன். அவருக்கு அடுத்து அப்போது நாவலர்தான் என்னைக் கவர்ந்த பேச்சாளராக இருந்தார். கலைஞரின் பேச்சில் இருக்கும் காரம் அவர் சொற்பொழிவில் இல்லாவிட்டாலும் நயம் இருக்கும்.
ஒருமுறை விழுப்புரம் மந்தகரைத்திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு நாவலர் பேச வந்திருந்தார். அப்போது ஆனந்தவிகடன் இதழில் வந்த கழுதை கார்ட்டூனுக்கு அவர் அளித்த விளக்கம் மிகவும் கவர்ந்தது. “அந்தக் கழுதை சாதாரணக் கழுதையல்ல. கோவேறு கழுதை. கோ என்றால் அரசர் என்று பொருள். அதுவும் அரசரும் அரசர்க்கெல்லாம் சக்கரவர்த்தியான ராஜகோபாலாச்சாரியார் ஏறும் கழுதை. வெற்றிக்கம்பத்தையும் அருகில்தான் போட்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சநாள்தான்” என்று அவர் நயம்பொங்கப் பேசினார்.
அந்தக் காலத்துப் பேச்சாளர்களில் முக்கியமான ஒருவர் சம்பத். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக எங்கள் சிற்றூருக்கு அருகில் இருந்த சிறுவந்தாடு என்னும் ஊருக்குச் சென்ற நினைவு உள்ளது. அப்போது அவர் காங்கிரசுக்காகப் பேசினார். சம்பத் பேச்சில் எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசும்போதுகூட நாகரிகம் இருக்கும். ஒருமுறை எங்கள் வளவனூர் துரோபதை அம்மன்கோயில் திடலில் பெரியார் காங்கிரசுக்குப் பிரச்சாரம் செய்யவந்தார். அங்கிருந்தவர்களிடம் அனுமதிகேட்டு அவர் இருந்த வேனில் ஏறிப்போய்ப் பார்த்தேன். ”வாங்கதம்பி, உட்காருங்க, என்னாபடிக்கிறீங்க” என்றெல்லாம் விசாரித்தார். நன்கு படிக்கச்சொன்னார். அவர் அப்போது தி.மு.கவை தாக்கிப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவரைப் பார்த்தது ஏதோ ஒரு பெரிய சாகசத்தைச் செய்ததுபோன்ற உணர்வைத் தந்தது.
எங்கள் வளவனூரில் தி.மு.க. என்றாலே சாமிக்கண்ணுவும் கிருஷ்ணமூர்த்தியும்தான். அக்ரகாரத்தில் ஓட்டு கேட்க வரும்போது அவர்கள் என்னையும் அழைத்துப்போவார்கள். 1967ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராமனுக்காக சாமிக்கண்ணு அவர்களுடன் சைக்கிள்கடை வெங்கடேசனும் நானும் இரவு மடத்தார்கடைவரை நடந்துசென்று ஓட்டுகேட்டது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.
தென்றல் இதழில் சம்பத்தும் கண்ணதாசனும் தி.மு.க.வை விட்டு வெளியேறிய சூழல்களைப்பற்றியெல்லாம் இலக்கிய நயத்தோடு கண்ணதாசன் எழுதியிருந்தார். அது என்னைக் கவர்ந்தது. கண்ணதாசன் கவிதைகளை ஒரு வேகத்தோடும் வெறியோடும் படிக்கத்தொடங்கினேன். அதன்பிறகுதான் எனக்கு பாரதி, பாரதிதாசன் அறிமுகமானார்கள்.
எங்கள் பகுதியிலேயே எங்கள் வீட்டுமேலே ஒரு சிறிய தி.மு.க. கொடியைப் பறக்கவிடும் அளவிற்கு திராவிட இயக்கத் தாக்கம் அப்போது இருந்தது.
வானொலியில் 67 தேர்தல் முடிவுகள் வரவர மகிழ்ச்சியில் பூரித்தேன். அண்ணா மறையும்வரை தி.மு.கமேல் குறைகாணவும் மனம்வரவில்லை. பிறகு, சற்று தெளிவு வந்தபோது தமிழுக்கு இன்னும் இவர்கள் இன்னும் நிறைய செய்திருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. கலைஞரின் மேலாண்மை தி.மு.கவை என் மனத்தைவிட்டு அகற்றத்தொடங்கியது.
கேள்வி: ஏறத்தாழ நாற்பதாண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறீர்கள்? கற்பிக்கும் முறைகளில் பல மாற்றங்கள் இந்த இடைவெளியில் உருவாகி இருக்கலாம். நீங்கள் மாணவராக இருந்த நாள்களுக்கும் ஆசிரியராகப் பல நூறு மாணவர்களை உருவாக்கியிருக்கும் இன்றைய நாள்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: நான் மாணவனாக இருந்தபோது நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு மாநில அளவில் இருந்தது. அதன் பாடத்திட்டம் ஆழமாகவும் தரமாகவும் இருந்தது. நான் அத்தேர்வு எழுதித் தேறியவன். பிறகு அத் தேர்வு மாநில அளவில் என்றாகி பிறகு வட்டார அளவு என்றானது. நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும் ஏன் தேர்வு உயர்நிலைப் பள்ளிகளுக்கு இல்லை என்ற கேள்வி எழுந்தபோது அரசு தேர்வையே ரத்து செய்து விட்டது.
என் ஆசிரியப்பணியின் கடைசிக்காலங்களில் செயல் வழிக்கற்றல் என்பதைக் கொண்டு வந்தார்கள். அதில் புத்தகம் பின்னுக்குத்தள்ளப்பட்டது. மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சியே இல்லை என்றாகிவிட்டது. எல்லாமே செயல் என்றாகி கற்றல் போய் விட்டது. மேலும் முதல் வகுப்பில் அ ஆ என்று தொடங்குவதற்குப் பதிலாக ப ட என்று தொடங்கச் சொன்னார்கள் . மொத்தத்தில் எந்த ஆட்சி வந்தாலும் முதலில் மாற்றம் செய்வது கற்பிக்கும் முறையில்தான் என்று சொல்லலாம்.
நான் மாணவனாக இருந்த போது எட்டாம் வகுப்பில் படித்த செய்யுள் பகுதிகளை இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கிறார்கள் என்றால் வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள். அதே சமயத்தில் அப்போது பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில் கற்ற அறிவியல், கணக்குப் பாடங்கள் இப்போது ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே ஆழமான அளவில் கற்பிக்கப்படுகின்றன. மொழிப்பாடம் மட்டும் மேம்போக்காக இருந்தால் போதும் என்கிற எண்ணம் அரசுக்கே இருக்கிறது. காலத்தின் கொடுமை என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.
கேள்வி: அறுபதுகளில் உருவான ஆசிரியர்களில் தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் நல்ல வாசகர்களாகவும் எழுதும் பயிற்சி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இன்றைய ஆசிரியர்களிடையேயும் அத்தகு ஆர்வம் இருக்கிறதா? இல்லை என்பது உங்கள் எண்ணமானால் எந்தக் காரணத்தால் அது வற்றிப்போனது என்று நினைக்கிறீர்கள்?
பதில்: அறுபதுகளில் ஆசிரியர்களை உருவாக்கியவர்கள் சிறந்த இலக்கிய ஆர்வம் உடையவர்களாகவும் தரமான மொழிப்பயிற்சி உடையவர்களாகவும் இருந்தார்கள். பொதுவாகவே அறுபதுகளின் சூழல் மொழியார்வமும் புதிய மறுமலர்ச்சிக் கருத்துகள் உண்டாவதற்குக் காரணமாகவும் இருந்தது. எழுத நிறைய இதழ்கள் இருந்தன. முக்கியமாக தொலைக்காட்சி போன்ற நம் நேரத்தைக் கொலைசெய்யும் ஊடகங்கள் இல்லை. இன்றைக்கு ஆசிரியர்களிடையே பொருள் முக்கியம் என்றாகிவிட்டது. இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு என்று எண்ணத் தொடங்கி விட்டார்கள்.
கேள்வி: இலக்கியப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவருடைய வாழ்வில் எத்தகைய விளைவுகளை உருவாக்க முடியும் என்பதை உங்கள் பணி வாழ்வை வைத்துச் சொல்லுங்கள்?
பதில்: என் பள்ளிவாழ்வில் மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வம் ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. வெள்ளிக் கிழமை தோறும் மாணவர்களை மேடையேற்றிப் பேசவைத்தது பல இலக்கியப் பேச்சாளர்களைக் கொண்டு வந்து இலக்கிய ஆர்வத்தை ஊட்டவைத்தது.
என் தனிப் பட்ட வாழ்வில் இலக்கியம்தான் பல அறநெறிகளைப் பின்பற்ற தூண்டுகோலாக இருந்தது. படி படி என்று என்னைத் தூண்டிப் படைப்பாற்றலை வளர்த்தது. ஒரு கையெழுத்திதழ் நடத்த வேண்டும் என்ற எண்ணம் வர வழி வகுத்தது. பள்ளியிலும் மாணவர்கள் எழுத “ வளர்ச்சி “ என்னும் கையெழுத்திதழ் தோன்ற வழிவகுத்தது.
கேள்வி: ஆரம்பத்தில் எத்தகைய நூல்களைப் படிப்பதில் உங்கள் கவனம் இருந்தது?
பதில்: எங்கள் வீட்டில் எப்போதும் குமுதம், கல்கண்டு ஆகிய இரண்டு இதழ்களையும் வாங்குவார்கள். அதிலிருந்துதான் என் வாசிக்கும் பழக்கம் தொடங்கியது. அதிலும் கல்கண்டு இதழில் வந்த தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளைவிட குமுதத்தில் வந்த சாண்டில்யனின் தொடர்கதைகள் என்னைக் கவர்ந்தன. அவற்றில் வரும் கதாநாயகனின் சாகசங்கள் ஒவ்வொரு இக்கட்டிலும் மாட்டிக்கொண்டு அவன் தப்பிப்பது எல்லாம் அந்த வயதில் மிகவும் பிடித்திருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது முதலில் சாண்டில்யனின் ‘கன்னிமாடம்’ படித்தேன். பிறகு அவருடைய தொடர்கதைகள் வரவர எல்லாவற்றையும் படிக்கநேர்ந்தது.
அப்புறம் சில காலம் கழித்து சிரஞ்சீவி, மேதாவி ஆகியோரின் நாவல்களை விரும்பிப் படிக்கத் தொடங்கினேன். அப்போது மாதம் ஒரு நாவல் வரும். அதன் விலை ஒரு ரூபாய். அப்போது அது ஒரு பெரிய தொகை. எனவே பத்து பேர் சேர்ந்து ஆளுக்குப் பத்துபைசா போட்டு மாதம் ஒரு நாவல் வாங்கி எல்லாரும் படிப்போம். பத்து மாதம் ஆனவுடன் அந்த நாவல்களை சீட்டு குலுக்கிப்போட்டுப் பிரித்துக்கொள்வோம். இந்தக் காலக்கட்டத்தில் என் தந்தையார் என்னை நூலகத்திற்கு அழைத்துப்போகத் தொடங்கினார். அங்கே எனக்கு ஒரு புதிய உலகம் தெரிந்தது. எந்தவித வேறுபாடுமின்றி பல எழுத்தாளர்களையும் வாசிக்கத் தொடங்கினேன். பல வார மற்றும் மாத இதழ்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை படிக்கும் பழக்கம் வளர ஆரம்பித்தது.
கேள்வி: எப்பொழுது எழுதத்தொடங்கினீர்கள்?
பதில்: எப்பொழுது என்பதைச் சரியாகச் சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவிற்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். ஆறாம்வகுப்பு படிக்கும்போது எங்கள் வீட்டில் வாங்கிவந்த தினத்தந்தியிலிருந்து முக்கியச்செய்திகள் என்று நான் நினைப்பவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதி அதை கைவேலை வகுப்பில் சகமாணவர்களுக்குப் படிக்கக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அதில் பெரும்பாலும் கொலை மற்றும் கொள்ளைபற்றிய செய்திகளே அதிகம் இருக்கும். அந்த வயதில் அவற்றின்மீது மிக ஆர்வமாக இருந்தது. பிறகு எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு கையெழுத்திதழ் தொடங்கினேன். அதில் காதுகளில் இதுவரை கேட்ட கதைகளை எழுதி நண்பர் வட்டாரத்தில் சுற்றுக்குவிட்டேன். ஓசை நயமுள்ள பாடல்களை அதிகம் எழுதத் தொடங்கினேன். ஒரு சில சரித்திரக்கதைகளை எழுத முயற்சி செய்தேன். அவை சாண்டில்யனின் பாதிப்போடு இருப்பதாக சில ஆசிரியர்கள் கூறினார்கள். எனவே கவிதைகளின்பக்கம் அதிகக் கவனம் செலுத்தினேன். பதினோராம் வகுப்புவரை அந்த இதழ் ‘கதைக்கொத்து’ என்னும் பெயரில் வந்துகொண்டிருந்தது. புனைபெயர்கள்மீது காதல் இருந்த காலம் அது. எனவே கதைப்பித்தன் என்ற பெயரையும் வைத்துக்கொண்டேன். பள்ளி இறுதி வகுப்பு முடித்து வளவனூர் திருக்குறட்கழகத் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் முழு எழுத்தாளனானேன் எனச் சொல்லலாம். அதில் அர. இராசாராமனோடு அப்போதிருந்த எல்லா நண்பர்களுக்கும் பங்கு உண்டு. எல்லாருமே எழுத்தாளர்கள். அனவைருமே நிறைய எழுதினோம். எழுதவேண்டும் என்பதற்காகவே பல கையெழுத்திதழ்கள் தொடங்கப்பட்டன. நான் அர. இராசாமனை சிறப்பாசிரியராக் கொண்டு ‘சங்கு’ என்னும் இதழ் ஆரம்பித்தேன். அதில் பல காலகட்டங்களில் துரை.தமிழ்த்தம்பி, தி.பழநிச்சாமி, இராசு. துரைக்கண்ணன், ஆகியோர் உறுப்பாசிரியராக இருந்தார்கள். ந.க. காந்தி செங்காந்தள் என்னும் இதழைத் தொடங்கினார். சா.வே.இராமச்சந்திரன் பாறை என்னும் கவிதை இதழைத் தொடங்கினார். அர.இராசாரமன் அறிமுகப்படுத்திய மரபுப்பயிற்சியின் விளைவால் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தங்கள் பழக்கமாயின. மாதம் ஒரு கவியரங்கமும் அதில் பாடப்படும் கவிதைகளை அப்பொழுதே விமர்சிப்பதும் ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தோம். திண்டிவனத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ’குயில்’, திருச்சியிலிருந்து வந்த ’கவியுகம்’, கோவேந்தனின் ’கவிஞன்’ ஆகியவற்றில் எனது கவிதைகள் வரத்தொடங்கின. எனது பெரும்பாலான மரபுக்கவிதைகள் தெசிணி நடத்திய ‘கவிதை’ என்னும் இதழில்தான் வெளிவந்தன என்பதைக் குறிப்பாகச் சொல்லவேண்டும்.
கேள்வி: கதை எழுதும் ஆர்வம் எப்போது வந்தது?.
பதில்: ஆசிரியப் பயிற்சிப்பள்ளியில் ஆண்டுவிழாவில் நடத்த ஒரு நாடகம் எழுதச்சொன்னதுதான் அதற்குக் காரணமாகும். ஓர் இளவரசியின்மீது ஆசைப்பட்டு கொடூர மனங்கொண்ட முகலாயமன்னன் அவள் நாட்டின்மீது படையெடுப்பதாகவும், அவளோ நாட்டைக் காக்க தன் மார்பகங்களை அறுத்து அவனுக்குப் பரிசாக அனுப்புவதாகவும் ஒரு கதை எழுதினேன். ’பரிசு வந்திருக்கிறது’ என்னும் தலைப்பில் அக்கதை நாவலர் நெடுஞ்செழியன் இரண்டாவது முறை ஆரம்பித்து நடத்திய ‘மன்றம்’ இதழில் வந்தது. இதுதான் அச்சில் வெளிவந்த என் முதல் கதை. தொடர்ந்து அரு.ராமநாதன் நடத்திய ’காதல்’ இதழில் ஒரு கதை வெளிவந்தது. ”வாத்துமேய்ப்பவள்” என்னும் அக்கதை தன்னைக் காதலித்துக் கெடுத்து, குழந்தையையும் கொடுத்த ஒரு பணக்கார இளைஞனை வாத்து மேய்க்கும் ஒரு சாதாரணமானவள் பழி வாங்கும் கதையாகும். திருமணம் செய்ய மறுத்த அவனை நகரத்தில் பார்க்கும்போதெல்லாம் அனைவர் முன்னிலையிலும் குழந்தையைக் காட்டி ”இதுதான் உன் அப்பா” என்று அவள் சொல்வதுபோல் செல்லும். அதன்பிறகு ஒரு பத்தாண்டுகள் கதை எழுதாமல் மரபுக்கவிதைகள் எழுதிவந்தேன். என்னுடைய ஒரு மரபுக்கவிதைத் தொகுப்புதான் வெளிவந்துள்ளது. இன்னும் மூன்று தொகுப்புகள் கொண்டுவரக்கூடிய அளவிற்குக் கவிதைகள் உள்ளன. தொண்ணூறுகளில் நவீன இலக்கியம் அறிமுகமான பிறகு என் எழுத்தின் கருப்பொருளே மாறிவிட்டது. சிற்றிதழ்கள் வாசிப்பு அதிகமாகியது. சிறுகதையின் வடிவம் கைக்குள் வசப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் “சுகன்” என் சிறுகதைகளை நிறைய வெளியிட்டதால் என் எழுத்தின் மீது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. தற்பொழுது நான்கு சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
கேள்வி: ஆசிரியப்பணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில்: ஆசிரியப்பணியை நான் தேர்ந்தெடுத்தேன் என்பதைவிட அப்பணிதான் என்னைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லவேண்டும். மே 1965—இல்நான்பள்ளியிறுதிமுடித்தேன். சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக்கில் அது திறந்து ஆறு மாதம் கழித்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனக்குப் படிக்க இடம்கிடைத்தது. அங்கு சென்று சேர்ந்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. நடத்தும் பாடங்கள் ஒன்றுமே புரியவில்லை. கூடப்பயின்றவர்கள் “இவ்வளவுநாள் கழித்து சேர்ந்து இருக்கிறாயே, எப்படி உன்னால் படிக்கமுடியும்” என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இரண்டுநாள் மட்டும் அதில் இருந்தவன் உடனே விலகி வீட்டுக்கு வந்துவிட்டேன். 1966-ஆம்ஆண்டு மின்துறையில் தற்காலிக எழுத்தராக ஒர் ஆறுமாதம் விழுப்புரத்தில் பணிபுரிந்தேன். அதில் பணியில் இருக்கும்போதே நிரந்தர எழுத்தர் பணிக்கு ஆள்எடுத்தார்கள். அதற்காக திருச்சிக்கு நேர்முகத்தேர்விற்குச் சென்றவனுக்கு சரியான சிபாரிசு இல்லாதால் கிடைக்கவில்லை. பிறகு ஒரு மூன்றாண்டுகள் கிரிக்கெட்விளையாடுதல், கடைத்தெரு வெங்கடேசன் மிதிவண்டிக்கடையில் உட்கார்ந்து பொழுதுபோக்குதல் என்று இருந்தபோது திருக்குறட்கழக நண்பர்கள் தொடர்பு ஏற்பட்டதும் வாழ்க்கை திசைமாறியது. அப்போது என் அண்ணனும் ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிநீக்கத்திற்கு ஆளாகி வீட்டிற்கு வரநேர்ந்தது. என்னுடைய இலக்கிய மற்றும் அரசியல் பணிகளுக்கு என் வீட்டில் எந்தத் தடங்கலும் செய்யாவிட்டாலும் என்னுடைய எதிர்காலத்திற்கு வழிவகுக்க வேண்டிய பொறுப்பு என் தந்தைக்கு இருந்தது. எனவே என்னை ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க எண்ணினார்கள். என்னோடு பள்ளியில் படித்தவர்கள் எல்லாரும் கல்லூரிகளில் சேர்ந்துவிட நானும் எதிலாவது சேர்ந்துவிட எண்ணினேன். அப்போதெல்லாம் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்போது இருந்த கிருஷ்ணமூர்த்தி என்னும் பள்ளி ஆய்வாளர் உதவி செய்ய வடலூர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் இடம் கிடைத்தது. ஆக பல திசைகள் சென்று கடைசியில் தானாகவே ஆசிரியர் பணியில் விழுந்தாலும் அப்பணிதான் எனக்கு ஏற்றது என்று சேர்ந்தவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. பணிக்காலம் முழுதும் மிக மனநிறைவுடன் இடையே சில மனவருத்தங்கள் வந்தாலும் பணிசெய்தேன் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லித்தானாகவேண்டும்.
கேள்வி: உங்கள் எழுத்து முயற்சிகளுக்கு அந்த நாள்களில் எத்தகைய ஆதரவு இருந்தது? மரபிலக்கியத்தைத் தொடர்ந்து நவீன இலக்கியத்தின் வழியில் உங்கள் ஆர்வம் எப்படிப் பரவியது?
பதில்:என் தோழர்கள், என் பெற்றோர் , திருமணமான பின் மனைவி என்று எல்லாருமே என் படைப்புக்ளைத் தொடர்ந்து படித்து ஊக்குவித்தனர். அப்போது வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ்கள் திண்டிவனம் குயில், தெசிணியின் கவிதை போன்றவை என் படைப்புகளை வெளியிட்டன. கடலூர் வந்த பின் ஒருநாள் நூலகத்தில் பாவண்ணனின் ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் சிறுகதைத் தொகுதியை எடுத்து வந்து படித்து அவருக்கு அது பற்றி எழுதினேன். அவர் மகிழ்ச்சியோடு பாராட்டி எனக்கு ஒரு மடல் எழுதினார். அக்கடிதத்தில் அப்போது கடலூரில் இரா. நடராசன் என்னும் எழுத்தாளர் நடத்திய நவீன இலக்கியம் பற்றிய முழுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொன்னார். நானும் அதில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நவீன இலக்கியம் என்ற புது உலகம் தெரிந்தது. நெய்வேலி வேர்கள் ராமலிங்கம் பல நவீன இலக்கிய சிற்றிதழ்களை அனுப்பிப் படிக்கும்படி உற்சாகப்படுத்தினார். தஞ்சாவூரில் இருந்து வந்து கொண்டிருந்த ’சுகன்’ என்னும் சிற்றிதழ் என் சிறுகதைகளை வெளியிட்டு என்னை மிகவும் ஊக்குவித்தது.
கேள்வி: நவீன படைப்புகளில் உங்களை ஈர்த்த அம்சம் எது?
பதில்: நவீனப் படைப்புகளில் என்னைக் கவர்ந்தது சிறுகதைதான். அதில்தான் வாழ்வின் பல முரண்களைக் காண முடிகிறது. மேலும் நவீன கதைகள் எந்த முடிவையும் சொல்வதில்லை. நீதிகளைப் புகட்டுவதில்லை . இதோ இது இப்படி இருக்கிறது. பார்த்துக் கொள், நீயாக ஒரு முடிவெடுத்துக்கொள் என்று வாசகனின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறது. ஒரு பூ தானாக மலர்வதைப் போல அதன் முடிவு நம் மனத்தில் அதுவாகத் தோன்ற வேண்டும். அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ எப்படி வேண்டுமானாலும் அமையலாம். அந்தச் சுதந்திரமே இதில் முக்கியம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: ஒரு சிறுகதையை நீங்கள் வாசிக்கும் அனுபவத்தைப் பற்றி ஓர் எடுத்துக்காட்டை முன் வைத்துச் சொல்ல முடியுமா?
பதில்:அண்மையில் முருகேச பாண்டியனின் ‘ ஒவ்வொரு குடையின் கீழேயும் ‘ என்ற கதையைப் படிக்க நேர்ந்தது. இரண்டாம் ஆட்டம் திரைப்படம் பார்த்துவிட்டு ஒருவன் வெளியில் வருகிறான். வீட்டிற்குப் போக மிதிவண்டியை எடுத்தால் அதன் பின் சக்கரத்தில் காற்று இல்லை. மழை வேறு தூறலாகத் துளைக்கத் தொடங்குகிறது. குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வண்டியைத் தள்ளிக்கொண்டுப் போகத் தொடங்குகிறான். அப்போது ஓர் உருவம் வருகிறது. அது ஒரு மனிதன். நாற்பது வயதுள்ள அவன் சற்று கௌரவமான தோற்றத்துடன் இருக்கிறான். கையில் ஒரு சிறு பெட்டி வைத்துள்ளான். அவனையும் இவன் குடைக்குள் “ வாங்க ‘ என்று அழைக்கிறான். அவனோ விகாரமாகச் சிரிக்கிறான் . இவனுக்கு பயம் வருகிறது. வந்தவன் பட்டென்று குடையைப் பிடுங்கிக் கொள்கிறான். கேட்கக்கேட்கத் தர மறுக்கிறான். குடைக்காரன் மழையில் நனைந்து கொண்டே நடக்கவேண்டியதாகிறது. வந்தவன் குடிகாரனோ அல்லது மனநிலை பிறழ்ந்தவனோ என்று இவன் நினைக்கிறான். அவன் இவனுடைய முகவரியைக் கூடச் சரியாகக் கூறுகிறான். மேலும் அவன், “ மரக்கடையில வேலை பாக்கிற சுந்தரமூர்த்தி பொண்டாட்டியைப் பார்த்திருக்கிறயா? ஆம்பளங்கிறவன் அவ கூட இருக்கணும். ராஜபோகம்னா அதுதான்“ என்று கூற இவனோ, ”கமலம் அக்காவா, இருக்காது “ எனத் திகைக்கிறான். அவனோ “ என்னா அசந்துட்டே? இனிமேல்தான் மெயின் கதையே இருக்கு “ என்கிறான். இப்படி பேசிக் கொண்டே போகிறார்கள். குடையைப் பிடுங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் வந்தவன் பெட்டியை திறந்து காண்பிக்கிறான். பெட்டி நிறைய மல்லிகைப் பூக்கள் இருக்கின்றன. திடீரென்று குடையுடன் அவன் வேகமாக ஓடுகிறான். இவனும் வண்டியைத் தள்ளிக்கொண்டு வேகமாகப் போகிறான். சற்று தூரத்தில் இருந்த பாலத்தில் உட்கார்ந்து அவன் இரண்டு உள்ளங் கைகளாலும் நெற்றியில் அடித்தவாறு அழுதுகொண்டிருக்கிறான். மல்லிகைப் பூக்கள் சகதியில் கீழே கிடக்கின்றன. குடை முன்னால் கிடக்கிறது. இவன் போய் குடையை எடுத்துத் தலைக்கு மேல் பிடித்துக்கொள்கிறான். ” ஏய்யா அழுவுறே “ என்று கேட்கிறான். மீண்டும் பலமாகத் தலையில் அடித்துக் கொண்டு அழுதவன் “ மல்லிகைப் பூவுன்னா என் பொண்டாட்டிக்கு உயிரு.. சண்டாளி , பாதகத்தி என்னைவிட்டு ஓடிப் போய்ட்டாளே “ என்கிறான். அவ்வளவுதான். கதை முடிந்து விட்டது. இதுவரையில் வில்லனாக நம்மால் நினைக்கப்பட்டவன் மேல் நமக்கு இப்போது பரிதாபம் வந்து கதை வெற்றி பெறுகிறது. இக்கதை ஒவ்வொரு வருக்கும் சுய அனுபவமாகவே இருக்கும் . எப்படியும் தன் வீட்டில் அல்லது தெருவில் கண்டிப்பாய் ஓடிப் போனவர்கள் இருப்பார்கள். அப்பாவோ , அண்ணனோ, அக்காவோ, தங்கையோ ஓடிப் போய் இருப்பார்கள். என் நண்பரின் மகள் வீடைவிட்டுப் போய் வேறு ஒருவனுடன் திருமணம் செய்து கொண்டுவிட்டாள். அவரோ அவமானம் என்றெண்ணி சொந்த வீட்டை விட்டு வேறு ஊருக்குச் சென்று விட்டார். ஓடிப்போனவரின் நினைவு வரும்போது நாம் என்ன செய்வோம் என்பது நமக்கே தெரியாது. அவர்களைப் பார்த்தால் கழிவிரக்கம்தான் தோன்றும் . இக்கதை படித்து முடித்தவுடன் ஓடிப்போன பலரின் நினைவு வந்து மனம் கனத்துப் போனது.
கேள்வி: மரபிலக்கியத்தில் பயிற்சி உள்ளவர்கள் பலர் சங்கப் பாடல்களையோ அல்லது சிலப்பதிகாரத்தையோ திரும்பத் திரும்பப் படிப்பதாகச் சொல்வதுண்டு. ஒரு நவீனஇலக்கிய வாசகராக நீங்கள் எப்படைப்பையாவது திரும்பத்திரும்ப்ப் படிப்பது என்று கருதியிருக்கிறார்களா? அது எது? எதற்காக அப்படைப்பு மீண்டும் மீண்டும் படிக்கத் தக்கது என்று கருதுகிறீர்கள்?
பதில்: இலக்கணம் தெரியாமலேயே நான் பாட்டெழுதத் தொடங்கியவன். பிறகு திருக்குறட்கழகம் அறிமுகமான பிறகு மரபுப்பா எனக்கு வசப்பட்டது. அதிலும் அப்போது திண்டிவனத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘குயில்’ எனுமிதழில் வெண்பா ஈற்றடி கொடுத்து எழுதச் சொல்வார்கள். அதில் வெண்பா எழுதிப் பழகி, பிறகு ஆசிரியப்பா எனத்தொடங்கி விருத்தத்துக்கு வந்தவன். அந்தக் காலகட்டத்தில்தான் பட்டிமன்றங்களில் நண்பர்களோடு சேர்ந்து நானும் பேசத் தொடங்கினேன். கம்பராமாயணத் தலைப்புகளில்தான் அதிக அளவில் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் புதுவையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடக்கும் கம்பன் விழாவிற்குச் செல்வது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அதில் கேட்ட பலரின் பேச்சுகளில் கூறப்பட்ட நயங்கள் என்னை மிகவும் ஈர்க்கத் தொடங்கின. முழுமையான அளவில், கம்பனைப் படிக்காமலேயே அவ்வப்போது கம்பனைக் கேட்டதும் பட்டிமன்றத்திற்காகப் படித்ததும் மெதுவாகக் கம்பனுக்குள் தள்ளின. அந்த ஆர்வத்தின் காரணமாக கம்பராமாயணம் முழுவதையும் படித்து மகிழ்ந்தேன். அந்தப் பயிற்சி தொடர்ச்சியாக சில நாட்கள் இராமாயணத் தொடர்சொற்பொழிவு நிகழ்த்த எனக்குப் பேருதவியாக இருந்தது.
திரும்பப் படிக்கவேண்டும் என்று நான் இப்போது எண்ணுவது கம்பராமாயணம்தான். நிறைய கம்பன் விழாக்களுக்குப் போய்க் கேட்டு அனுபவித்ததாலும் எண்ணற்ற பட்டிமன்றங்களில் நானும் கலந்துகொண்டு பேசியதாலும் அதில் நான் மூழ்கிவிட்டேன் என்றே கூறலாம். கம்பராமாயணம் என்பது என்னைப் பொருத்தமட்டில் பக்திநூல் மட்டுமன்று. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைச் சொல்லும் காவியமாகும். தந்தை, தாய், மகன்மகள், அண்ணன், தம்பி, கணவன், மனைவி, ஆகியவர்களோடு, நண்பன், அரசன், அமைச்சன், ஆகியோரும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அது தெளிவாகக் கூறுகிறது. நான் அதை ஒரு இலக்கிய நூலாகத்தான் பார்க்கிறேன் . அதே நேரத்தில் அது ஒரு ஆன்மிக நூலாக இயற்கை வர்ணனை நூலாக வரலாற்று நூலாக தத்ததுவ நூலாகவும் இருக்கிறது என்பதையும் கூற வேண்டும். எல்லாவற்றிகும் மேலாக அது வாழ்விற்கு வழிகாட்டும் நூலாகவும் திகழ்கிறது. அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்க வேண்டும், பிற மனிதர்களையும் நேசிக்க வேண்டும் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் பெரியோர் சொல் கேட்க வேண்டும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வர வேண்டும் என்பதெல்லாம் கம்பராமாயணம் கற்றுத் தருகிறது. முக்கியமாய் ’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதை அதில்தான் காணமுடியும். அதுமட்டுமல்ல, கம்பனின் பாடல்களின் ஓசைச் சந்தமும் இலக்கியநயமும் படிப்பவர்களைக் கட்டி போட்டு விடும் சக்திகொண்டவை. சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும்போது இராமன் கூறும் அறிவுரைகள் எல்லா நாட்டு அரசியல்வாதிகளும் பின்பற்றவேண்டியவை. அதில் முக்கியமானது “யாரோடும் பகை கொள்ளலன்” எனும்போது ”போரொடுங்கும் புகழொடுங்காது” என்பதாகும். பகையே இல்லாத ஓர் உலகத்தைக் கனவு காண்கிறான் கம்பன். ’பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே” என்பதன்படி இராவணனுக்கும் தூதனுப்பி ‘இன்றுபோய் நாளைவா’ என்று சொல்லி வாய்ப்புகள் கொடுத்துப் பார்க்கிறான்.
மேலும் வேடன் அரக்கன் முதலிய எல்லாரையும் சகோதரராகப் பாவிக்கும் இராமனை நமக்கு வழிகாட்டியாகக் காட்டி உலகசகோதரத்துவத்தைச் சொல்லுகிறான். அரக்கரிடத்தும் நல்லவர் உண்டு என்பதைச் சொல்லக் கும்பகருணனைக் காட்டுகிறது இராமாயணம். அதிலும் பாதி இராவணன் பாதி வீடணன், இதுதான் கும்பகருணன்.
போர்க்களத்தில் வீடணன் வந்து கும்பகருணனைச் சந்திக்கிறான். இராமன் பக்கம் வந்துவிடு என்று அண்ணனை அழைக்கிறான். அதற்கும் கருணன் பதில் சொல்வதாக கம்பன் எழுதுகிறான். ”நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் புகவிட்டார்க்கு உயிர் விடாது அங்குப் போகேன்” நயமும் உணர்ச்சியும் கலந்த பாடல் இது. கும்பகருணன் இந்த உலகவாழ்வை நீர்க்கோல வாழ்வு என்கிறான். நிலையாமையைக் கூறும் சொற்றொடர் இது. நீரில் போடும் கோலம் நிலைக்காது. இதை நீரால் போடும் கோலம் என்றும் பொருள்கொள்ளலாம். நீண்டநாள் வளர்த்த அண்ணன் இராவணனுக்கு உயிர்கொடாது அங்குப் போகேன் என்கிறான் கும்பகருணன். அங்கு என்பது இராமனையும் குறிக்கும். இலங்கையையும் குறிக்கும் என்று கொள்ளலாம். கம்பனின் மற்றொரு சிறப்பு நிகழ்வுத் தொடர்ச்சியாகும். ஓர் உதாரணம் சொல்கிறேன். இராவணன் சீதையைக் கவர்ந்துசெல்கிறான். ”நஞ்சனையான் அகம்புகுந்த நங்கைநான்” என்று சீதை வருந்துகிறாள். ‘கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சுபுகார்’ என்பது பண்டை மரபாகும். இதைமனத்தில் கொண்ட கம்பன் இராவணன் வீழ்ந்தபிறகு அவன் மனத்தில் சீதை இருக்கிறாளா என்று இராமன் விட்ட அம்பு தேடியதாக மண்டோதரி புலம்பினாள் என்று பாடுவான். “வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி இழைத்தவாறே கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச்சிறையில் கவர்ந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி” என்ற பாடல் கம்பன் ஒரு கவிச்சக்கரவர்த்தி என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.
கம்பனுக்குப் பிறகு பாரதியிடம்தாம் இந்தக் கலவையை நாம் பார்க்கமுடிகிறது. ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ என்ற வரியைப் பாருங்கள். உணர்ச்சி பொங்கும் பாடல் அடி இது. ஆனால் ’தாகம்’ என்ற சொல்லாட்சி கவனிக்கத்தக்கது. பொதுவாக தண்ணீர் வேட்கையைத்தான் தாகம் என்போம். . அது தண்ணீர் குடித்தால்மட்டுமே தீரக்கூடியது. அதுபோல சுதந்திரம் கிடைத்தால்மட்டுமே தீரக்கூடியது சுதந்திரதாகம் ஆகும். பாரதிதாசன் ஓர் உணர்ச்சிக்கவிஞர். அவரிடம் நயம் குறைவாகத்தான் இருக்கும். ‘நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்தே’ பாடலையும், ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலையும்’ போன்ற ஒரு சில பாடல்களை இரண்டும் சேர்ந்த குவியலாகக் கொள்ளலாம்.
கேள்வி: நீங்கள் பத்திரிக்கைக்கு ஒரு படைப்பை அனுப்பி அது வெளியிடப்படாத நிலையில் இருந்தால் எப்படி உணர்வீர்கள்? உங்களை எப்படி அமைதிப்படுத்திக்கொள்வீர்கள்?
பதில்: பொதுவாக ஒரு படைப்பை எழுதி முடித்தவுடன் அதற்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிட்டதென்றே சொல்லவேண்டும். பிறகு அதைப்பற்றி எடைபோட்டுச் சொல்லவேண்டியது வாசகன்தான். ஒவ்வொரு இதழ் ஆசிரியரும் ஒரு வாசகன்தானே? ஆசிரியரான அந்த வாசகரின் மனத்தில் நான் அனுப்பிய அந்தப் படைப்பப்பற்றி கருத்து மாறுபாடு இருக்கிறது என்றே எண்ணிக்கொள்வேன். அப்படைப்பின் மையம் அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் என்றும் நினைத்துக்கொள்வேன். படைப்பின் நடை இன்னும் மேம்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் அவர் நினைக்கலாம். ஒருவேளை அப்படைப்பின் தரம் அவரது இதழின் தரத்திற்குத் தாழ்ந்ததாகவோ அல்லது உயர்ந்ததாகவோ இருக்கலாம் என்றே என்னை அமைதிப்படுத்திக்கொள்வேன். சில இதழ்ஆசிரியர்கள் வெளியிடாத தங்கள் நிலையைத் தானாகவே சொல்வதுண்டு. ஏன் வெளியிடவில்லை என்று நானாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதும் உண்டு. தவிர, ஒரு படைப்பை வெளியிடுவதுபற்றி முடிவெடுக்க இதழின் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு. நான் நடத்திவரும் ‘சங்கு’ இதழின் வாசகர்கள்கூட சில சமயம் “அந்தப் படைப்பை ஏன் வெளியிட்டீர்கள்” என்று கேட்பதுண்டு. வெளியான படைப்பைப்பற்றி விமர்சிக்கலாமே தவிர ஏன் வெளியிட்டீர்கள் என்று கேட்கக்கூடாது என நினைப்பவன் நான். மேலும் ஓர் இதழ் வெளியிடாத ஒரு படைப்பை வேறு இதழ் வெளியிடுவதும் உண்டு. இது பல சமயங்களில் எனக்கு நேர்ந்திருக்கிறது.
கேள்வி: உங்கள் சிறுகதையில் ஒரு ஒப்பற்ற அனுபவத்தையோ அல்லது தருணத்தையோ ஆழமாகப் பகிர்ந்து கொள்ளப் போகிறீர்கள் என்று நினைக்கும் கட்டத்தில் வேகவேகமாக அதைத் தாண்டிப் போய் விடுகிறீர்கள். கதையைத் தொடங்கியவுடனேயே அக்கதையை முடித்துவிடும் அவசரத்தில் கதையை நகர்த்துகிறீர்கள். இந்த அவசரம் எதற்காக?
பதில்: நான் முதலில் சொன்னதுபோல எனது கதையை தொடக்க காலத்தில் அதிகம் வெளியிட்டது தஞ்சாவூர் “சுகன்” இதழ்தான். பிறகு தாமரை, செம்மலர், போன்ற இதழ்களைச் சொல்லலாம். இவை காலச்சுவடு, உயிர்மை போன்று வரும் மீச்சிற்றிதழ்கள் அல்ல. குறைந்த பக்கங்களில் வருபவை. எனவே என் படைப்பு பக்க அளவு அதிகமாக இருக்கிறது என்னும் காரணத்துக்காக நிராகரிக்கப்படக்கூடாது என்பதில் நான் அதிகக் கவனத்தை ஆரம்பம் முதலே நான் செலுத்தி இருந்தேன். எனவே நீண்டு செல்ல வாய்ப்புள்ள ஒரு சில கதைகளை நான் கட்டுப் படுத்தியதுண்டு. ஆனால் எந்தக் கதையுமே தொடர்ச்சி விட்டுப் போய் விட்டது என்ற குறை சொல்லக்கூடியவை அல்ல. கதை எழுதுவதற்கான கரு உருவாகி விட்டபின் அது மனத்திலேயே உழன்றுகொண்டிருக்கும் தருணங்களில் அது எப்படிப் போக வேண்டும் என்கிற தீர்மானம் தானாகவே உருவாகி விடுகிறது. எந்தக் கதையுமே ஒன்று மையத்தைப் பரவலாக்கவேண்டும் அல்லது முடிவை நோக்கிச் செல்லவேண்டும். சில மெதுவாகவும் ஒரு சில மிக விரைவாகவும் ஓடக் கூடியவையாக இருக்கலாம். கிரிக்கெட்டில் திராவிட் போன்றவர்கள் தொடக்கம் முதல் இறுதிவரை மெதுவாகவே ஆடக்கூடியவர்கள். ஆனால் ஷெவாக் போன்றவர்கள் வந்தவுடனேயே அடித்து ஆடத்தொடங்கி இறுதிவரை அப்படியே ஆடுபவர்கள். இரண்டு வகையான ஆட்டங்களும் நமக்குத் தேவைதானே. கதை எழுதத் தொடங்கும் போதே நான் முடிவையும் தீர்மானித்து விடுவதால் அதை நோக்கியே எழுத்து போய்க்கொண்டிருப்பது, நீங்கள் இதுபோன்று நினைக்கக் காரணமாக இருக்கலாம்.
கேள்வி: ”தேரு பிறந்த கதை” சிறுகதையில் தேரோட்டத்துக்கும் பல்வேறு சாதியினரின் கோயில் நுழைவிற்கும் தொடர்பு உள்ளது எனத் தொனிக்கும் பொருளில் வரிகள் இடம் பெற்றுள்ளன. எங்கேயாவது இப்படி ஒரு கருத்தாக்கத்தை நீங்கள் படித்ததுண்டா? அல்லது இப்படி இருக்கலாம் என்று ஊகத்தால் எழுதப்பட்டதா?
பதில்: ”தேரு பிறந்த கதை” என்ற கதை இருந்ததாலேயே அத் தொகுப்பு எட்டயபுரம், கம்பம், மற்றும் சேலம் ஆகிய ஊர்களில் முதல் பரிசு பெற்றது என நினைக்கிறேன். அக்கதை பற்றிப் பலபேர் என்னிடம் பல விமர்சனங்கள் வைத்தார்கள். பாராட்டியவர்களும் உண்டு. கண்டித்தவர்களும் உண்டு. எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் ஓர் வைணவ அறிஞர் ”தேரை ஒற்றுமையின் சின்னம் என்போம், ஊர்கூடித் தேர் இழுப்போம் என்போம், என்ன நீங்கள் இப்படி எழுதிவிட்டீர்களே” என்று மிகவும் வருத்தப்பட்டார்
நான் அதிகமாகத் தேரோட்டங்கள் பார்த்தது கிடையாது. கிருஷ்ணாபுரம் பள்ளியில் பணியாற்ற வந்த போதுதான் தேரோட்டத்தின் முக்கியத்தை உணர்ந்தேன். கிருஷ்ணாபுரத்திலிருந்து வைணவ திவ்யதேசமான திருவந்திபுரம் மிக அருகில் இருந்தது. அக்கோயிலின் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுப் புற கிராமத்தினர் அனைவருமே அதைப் பார்க்கக் கூடுவார்கள். அதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் என்ணிக்கை மிகவும் குறையும். கிருஷ்ணாபுரத்திலிருந்து தொலைவில் இருக்கும் மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலின் தேரோட்டம் பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது வழக்கம். ஆண்டுக்கொருமுறை நடக்குமதற்குப் போக மாதம் தோறும் பணம் செலுத்திச் சீட்டுகட்டி மக்கள் போவதை கிருஷ்ணாபுரத்தில் பார்த்தேன். அத்திருநாளில் போய் அத்தேரைப் பார்க்காவிட்டல் ஏதோ பெரிய பாவம் செய்வதாய் அவர்கள் வருந்துவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு வியப்பைத் தந்தது எதுவென்றால் பெரும்பாலும் மேல்மலையனூர் செல்பவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்ததுதான். அவர்கள் உள்ளூர்க் கோயிலில் நுழைய முடியாதவர்கள். பெரும்பாலும் சாமிகளின் வீதி புறப்பாடே கோயிலுக்கு நடந்து வர முடியாத வயதானவர்கள் தம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் சாமியைத் தரிசிக்கச் செய்த ஏற்பாடுதான் என்பது எண்ணம். இதே அடிப்படையில் சிந்தனை வளரந்து தேரு பிறந்த கதை உருவாயிற்று என்று கூறலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் உள்ளே போகமுடியாதவர்கள் அன்று ஒரு நாள் இறைவனைத் தேரில் தரிசிக்கிறார்கள் என்ற கருவை வைத்து எழுதப்பட்ட கதை அது. கரு வளர்ந்து ஏன் தேரை உருவாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பி விடையையும் கண்டது எனலாம்.
கேள்வி: இப்போது உங்களுக்கு வாசிக்கத்தக்கதை அல்லது வாசித்தலில் போற்றத்தக்கதை எப்படித் தீர்மானிப்பது என்னும் அளவுகோல்கள் உருவாகி உள்ளன. இந்த அளவுகோள்களின் படிக்கத்தக்க படைப்புகள் எவை என்று பட்டியலிட முடியுமா?
பதில்: தாராளமாக பட்டியலிட்டுச் சொல்லமுடியும். இதோ பட்டியல். இது என் ரசனையை அடிப்படையாகக் கொண்டது.
1 ஏழாம் உலகம்
2 நாஞ்சில் நாடன் சிறு கதைகள்
3 பொய்த்தேவு
4 மீனின் சிறகுகள்
5 சேரமான் காதலி
6 ஒரு புளியமரத்தின் கதை
7 நாளை மற்றுமொரு நாளே
8 பொன்னியின் செல்வன்
9 பருவம் [கன்னட மொழிபெயர்ப்பு]
10 அறம்
கேள்வி: எழுதுகிறவராக மட்டுமன்றி பத்திரிகை நடத்துகிறவராகவும் இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறவராகவும் ஒரு பல துறை ஆளுமையாக உள்ளீர்கள். இந்த நிலையில் பல தரப்பட்டவர்களைப் பார்த்துப் பழகிப் பேசும் வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைத்திருக்கும். இலக்கியச் சுவையின் எதிர்பார்ப்பில் தலைமுறைக்குத் தலைமுறை எப்படி வளர்ந்து வந்திருக்கிறது?
பதில்: இன்றைய தலைமுறை புரியாததை உடனே தள்ளி விடுகிறது. மறுபடியும் படித்துப் பார்க்கும் மனநிலை இல்லை. அதே நேரத்தில் பின் நவீனத்துவம் , மாய எதார்த்தவாதம் போன்றவற்றை விரும்பினாலும் யதார்த்தவாதத்தையே மிகவும் விரும்புகிறது. மேலும் புதிய தளங்களில் புழங்கும் படைப்புகளைத்தான் படிக்க விரும்புகிறது எனலாம். ஆனால் பழைய மரபிலக்கியங்களைப் புறந்தள்ளும் போக்கு வருந்தத்ததக்கது என்று சொல்லவேண்டும்.
- மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன்
- காற்றுவெளி மின்னிதழ் அறிவிப்பு
- மாவின் அளிகுரல்
- நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?
- “Thamilar Sangamam 2013
- சித்தன்னவாசல்
- துளிப்பாக்கள்
- மது விலக்கு தேவையா ? சாத்தியமா?
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்
- ரகளபுரம்
- ப மதியழகன் சிறு கவிதைகள்
- அழித்தது யார் ?
- வணக்கம் சென்னை
- தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி
- புகழ் பெற்ற ஏழைகள் 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏழை
- குழியில் விழுந்த யானை
- தீபாவளி நினைவு
- தூக்கமின்மை
- மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1
- தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !
- ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி
- கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)
- திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்