கனவு

This entry is part 14 of 29 in the series 3 நவம்பர் 2013


பாவண்ணன்

”கேவலம் கேவலம்” என்று தலையில் அடித்துக்கொண்டார் முருகேசன். மலைக்காற்றில் அவருடைய நரைத்த தலைமுடி ஒருபக்கமாகப் பறந்தது. சட்டை ஒருபக்கம் உடலோடு ஒட்டிக்கொள்ள இன்னொருபக்கம் இறக்கை விரித்துப் பறப்பதுபோலத் துடித்தது. அவர் எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் கண்களில் மெல்லமெல்ல ஒரு துக்கம் தேங்கி நின்றது. ஒருகணம் மூக்கை உறிஞ்சிக்கொண்டார். ”சரி விடுங்க முருகேசன், நாட்டுல இந்த மாதிரி இன்னிய தேதிக்கு மாசத்துக்கு ஒரு நூறு கொலயாச்சிம் நடக்குது. ஒன்னு ரெண்டுதான் பத்திரிகையில வருது. ஒன்னொன்னுக்கும் தலயில அடிச்சிக்கணும்னா இருபத்திநாலு மணிநேரமும் அடிச்சிகிட்டேதான் இருக்கணும்” என்றார் பக்கத்தில் இருந்த விஸ்வநாதன். முருகேசனை நெருங்கித் தோளைத் தட்டிக்கொடுத்தார். அவர் வார்த்தைகள் காதிலேயே விழாததுபோலவே காணப்பட்டார் முருகேசன்.
”இதுக்கெல்லாம் ஒரு பேரு வேற வச்சிருக்காங்க பாரு. கெளரவக்கொலைன்னு. பெத்த புள்ளயயே விஷம் வச்சி கொலை செய்றத எந்த சட்டத்துல கெளரவம்ன்னு சொல்லியிருக்குது? என்ன நாகரிகம் இது?” அடக்கிக்கொள்ள முடியாமல் பொங்கினார் முருகேசன்.
”அந்தக் காலத்துல தன்னுடைய புள்ள காதல் வழியில் எறங்கினா, அதுக்கு காரணமான அடுத்த வீட்டு புள்ளயயோ பொண்ணயோ ஆளவச்சி கொல செஞ்சிடுவாங்களாம். இன்னிக்கு அதுல ஒரு சின்ன மாற்றம் வந்திருக்குது. அவங்கவுங்க புள்ளைங்கள அவுங்கவுங்களே முடிச்சிடறாங்க”. விஸ்வநாதன் உச்சியை அடைந்தபிறகு சிறிது நேரம் நின்று மூச்சுவாங்கினார். சமதளமான இட்த்தைநோக்கி நடந்து, பக்கத்தில் இருந்த உயரமான பாறையொன்றின்மீது உட்கார்ந்தார்.
”குமுதம் செத்துப்போனதுக்கப்பறமா கண்மணியயும் பொன்னியயும் நான்தான் வளத்தேன் விஸ்வநாதன். ரெண்டு பேரயுமே பிலானிக்கு அனுப்பி படிக்கவச்சேன். பட்டம் வாங்கி விப்ரோ, ஐ.பி.எம்.னு போயிட்டாங்க. ஒருநாளு ஒருத்தி வந்து ஒரு பஞ்சாப்காரன கட்டிக்கிறேன்னு சொன்னா. இன்னொருத்தி ராஜஸ்தான்காரன புடிச்சிருக்குதுன்னு சொன்னா. ஒரு நிமிஷம் எதுவுமே புரியலை எனக்கு. அப்படியே செதுக்கிவச்ச செலயாட்டம் நின்னுட்டேன்”. விஸ்வநாதனுக்குப் பக்கத்தில் இன்னொரு பாறைக்கு அருகே வந்து உட்கார்ந்தார் முருகேசன்.
”அந்தப் புள்ளைங்கள படிக்கவச்சது நாமதான். சிந்திக்க வச்சதும் நாமதான். நல்லது கெட்டது தெரிஞ்சிக்க வச்சதும் நாமதான். அப்பறம் எப்படி அவுங்க சிந்தன தப்பான வழியில போகும்? வாழப் போவறது அந்தப் புள்ளைங்க. அதுங்க சந்தோஷமா நம்ம கண்ணுமுன்னால வாழறத பாக்கறதுதானே நமக்கும் சந்தோஷம்ன்னு யோசன வந்திச்சி. தாராளமா செஞ்சிக்குங்கம்மான்னு சொல்லிட்டேன். ஆளுக்கொரு மூலையில இருந்தாலும் எல்லாரும் இப்ப நல்லபடியா இருக்காங்க.”
”எல்லோரும் முருகேசனா இருந்தா இந்த உலகம் எங்கயோ போயிடும்” தரையைப் பார்த்தபடி சொன்ன விஸ்வநாதன் பிறகு நிமிர்ந்து, ”இவ்வளவு உயரத்துக்கு ஒங்கள அழச்சி வந்ததே அதோ அந்த மண்டபத்த காட்டத்தான். பேச்சு வேகத்துல அது எல்லாமே மறந்து போயிடுச்சி” என்று நாலைந்து புங்கமரங்களும் வேப்பமரங்களும் நின்றிருந்த திசையைக் காட்டினார். முருகேசன் திரும்பிப் பார்த்தார். அஸ்தமனச்சூரியனின் வெளிச்சத்தில் அந்த இடம் ஓர் ஓவியத்தைபோல இருந்தது. ஒரு கொக்குக்கூட்டம் வானத்தில் ரொம்பவும் தாழ்ந்து பறந்து சென்றது.
”மண்டபமா? வெறும் தூணுங்கதானே தெரியுது?” ஆச்சரியத்தோடு கேட்டார் முருகேசன். மெல்ல அதைநோக்கி நடந்தார். ”ஆனா இந்த இடத்துல ஒரு மண்டபம் இருந்தா நல்லாதான் இருக்கும். மரங்கள், மேகங்கள், நிலா, சூரியன், காற்று எல்லாமே நமக்குப் பக்கத்துலயே இருக்கறமாதிரியான சூழல்ல நமக்கும் அதுமாதிரியே ஒரு சுதந்திரத்தோட இருக்கணும்ன்னு தோணும், இல்லயா?” பனைமரங்களைப்போல உயரமாகக் காணப்பட்ட அந்தக் கல்தூண்களையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தாபடி சொன்னார். ”எவ்வளவு பெரிய தூண்கள், எவ்வளவு பெரிய தூண்கள்” என்று இடைவிடாமல் அவர் வாய் தன்னிச்சையாக முணுமுணுத்தது.
”மண்டபத்துக்காக எழுப்பப்பட்ட தூண்கள்தான் முருகேசன். உங்களுக்குத் தோணியதுபோல அந்தக் காலத்துல யாரோ ஒரு சிற்பிக்கும் தோணியிருக்கும்போல”. விஸ்வநாதன் சொல்லிக்கொண்டே தூண்கள் அருகில் வந்தார். அவர் கையிலிருந்த கைக்குட்டை காற்றில் நழுவி கீழே விழுந்து பறக்கத்தொடங்கியது. அதன் பின்னால் ஓடி எடுத்துக்கொண்டு திரும்பினார்.
”தூண்கள்ளதான் சின்னசின்னதா எவ்வளவு சிற்பங்கள் பாருங்க முருகேசன். கண்ணுக்கு எட்டுகிற தொலைவுதான் நம்மாலயும் பார்க்கமுடியுது. தூண் உச்சில இருக்கிற சிற்பங்களையெல்லாம் யாருமே இதுவரைக்கும் பார்த்ததில்ல. மனம்முழுக்க கனவுகளோடு வாழ்ந்திருப்பான்போல அந்தச் சிற்பி” என்றார். சிற்பத்தில் இருந்த ஒரு கிளியை அவர் விரல்கள் வருடியபடி இருந்தன.
”இவ்வளவு செஞ்ச சிற்பி மண்டபத்த ஏன் கட்டி முடிக்கலை? ” கேள்வியோடு விஸ்வனாதன் பக்கம் திரும்பினார் முருகேசன்.
“அதுலதான் கதையே இருக்குது. வழக்கமான காதல் கதைதான். சிற்பிக்கும் ஒரு பொண்ணுக்கும் இருந்த காதல். அந்த பொண்ணுக்காகத்தான் இந்த மண்டபத்தையே கட்டினான் சிற்பி. மண்டபத்து வேலை முடிஞ்சதுக்கப்பபுறம்தான் ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்ன்னு ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு பேச்சு. அதனால மண்டபத்துடைய மேல்தளத்துக்காக எல்லா வேலைகளும் வேகவேகமா நடந்திருக்குது. ஒரு தளத்துக்கு நாற்பது நாளோ நாற்பத்தஞ்சி நாளோன்னு ஒரு கணக்கு இருக்குமில்லையா? அதுவும் முடிஞ்சதுக்கு அப்பறமா சாரம் பிரிக்கற சமயத்துல தளம் நிக்கலை. மண்டபம் சரிஞ்சி விழுந்துட்டுதாம். மனம் உடைஞ்சிபோன சிற்பி நஞ்சு குடிச்சி செத்துப்போயிட்டார்னு கதை.”
முருகேசன் சற்று விலகி வந்து தூண்களின் உச்சியை அண்ணாந்து பார்த்தார். செவ்வண்ணத்தில் ஒரு குட்டை தேங்கியதுபோல அடிவானம் சிவந்திருந்தது.
”இதே மண்டபத்துக்கு வேற ஒரு கதையையும் இங்க உள்ளவங்க சொல்றதுண்டு. மண்டபத்துக்கு தளம் போட குறிச்ச தேதியில ஊருக்குள்ள யுத்தம் வந்திடுச்சி. சிற்பியும் கலந்துக்கவேண்டிய நெருக்கடி. அதனால மண்டபத்து வேலையை தள்ளி வச்சிட்டு சிற்பி யுத்தத்துக்கு போனார். போனவரு திரும்பலை. அங்கயே வீரமரணம் அடைஞ்சிட்டாருன்னும் அந்தப் பொண்ணு இதே மண்டபத்துகிட்ட தற்கொலபண்ணிகிட்டு செத்துட்டாஙகன்னும் சொல்வாங்க.”
”எந்தக் கதை உண்மையா இருந்தா என்ன விஸ்வநாதன்? கட்டி முடிக்க முடியாத, நிறைவேறாத ஒரு கனவு காலம்காலமா அப்படியே நம்ம முன்னால நிக்குது. எவ்வளவு பெரிய வேதனை அது?” தூண்களிலிருந்து பார்வையைத் திருப்பிய முருகேசன் பழமெனச் சிவந்து அடிவானில் அமிழ்ந்துகொண்டிருந்த சூரியனைப் பார்த்தபடி சொன்னார். அவர் குரலில் உணர்ச்சிகள் ததும்பிக்கொண்டிருந்தன.
”பின்னால வந்த பல அரசர்கள் இதைக் கட்டிமுடிக்க பல முயற்சிகள் எடுத்ததா சொல்றதுண்டு முருகேசன். ஆனால் எதுவுமே சரியா அமையலை. அப்படியே அரகொறயாவே நின்னுபோயிடுச்சி” நாக்கைச் சப்புக்கொட்டியபடி சொன்னார் விஸ்வனாதன்.
”நிறைவேறாத கனவுங்கறது இந்த மண்டபத்துக்குள்ள ஒரு முகம் மட்டும்தான். நிறைவேறாத ஆசை, நிறைவேறாத காதல் , நிறைவேறாத வாழ்க்கைன்னு இந்த மண்டபத்துக்குள்ள ஏராளமான முகங்கள அடுக்கிகிட்டே போகலாம். ”
விஸ்வநாதன் எதையோ பதிலாக சொல்ல வந்தார். அவரை சைகையாலேயே நிறுத்தி முருகேசன் மீண்டும் பேசத் தொடங்கினார். ”எல்லாம் நிறைவேறி திருப்தியா வாழறதுக்கு அடயாளமா ஏராளமான சிற்பங்கள் இங்க இருக்குது. சிவன் பார்வதி. முருகன் வள்ளி, ராதா கிருஷ்ணன்னு எவ்வளவோ பார்க்கலாம். ஆனால் நிறைவேறாத ஒரு கனவுக்கு எந்த வடிவமும் இல்ல. இப்படி தூண், மரம், பாறைன்னு சிதைஞ்சிபோன வடிவம்தான் அதுக்கெல்லாம் இருக்கும்போல.” பிறகு ஆழ்ந்த பெருமூச்சோடு மேற்குவானில் அமிழ்கிற கடைசித் துணுக்குச் சூரியனைப் பார்த்தபடி நின்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அருகில் புன்னைமரக்காட்டில் கூடுகளில் அடையவந்த பறவைகளின் சத்தம் கேட்டது. முதலில் அந்தச் சத்தம் ஒரு செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் தொனியில் கேட்டது. அப்புறம் ஒரு கோரிக்கையை முன்வைப்பதுபோலக் கேட்டது. பிறகு யாசிப்பதுபோல மாற்றம் பெற்றது. அந்தக் குரல் அவரைப் பிசைவதுபோல இருந்தது. அந்தத் துக்கத்தைத் தாங்க முடியாததுபோல துவண்டுபோனார். சட்டென்று தன்னுணர்வு பெற்றவரைப்போல, திரும்பி விஸ்வநானை நெருங்கி வந்து ”எங்கயோ தொடங்கி எங்கயோ போயிடுச்சி நம்ம பேச்சு” என்றபடி தோளைத் தொட்டார். ”சரி வாங்க, கீழ எறங்கிடலாம். இருட்டிப் போச்சின்னா பாதை சரியா தெரியாது” என்று திரும்பினார் விஸ்வநாதன்.
”எங்க வம்சத்துலயும் எவ்வளவோ கொலைகள் நடந்திருக்குதுங்க விஸ்வநாதன். முக்கால்வாசியும் பெண்கொலைகள். காதல் கூடாதுங்கறதுக்காக செய்யப்பட்ட கொலைகள்”” என்று தொடங்கினார் முருகேசன். ”பாத்து வரணும், யாரோ இங்க கருவேலத்த நட்டுட்டு போயிட்டாங்க. ரெண்டுமழயில அதுங்க துளுத்து எலயும் முள்ளுமா நிக்குது.” விஸ்வநாதனின் எச்சரிக்கைக்குரலை அவர் பொருட்படுத்தவே இல்லை.
””மனிதர்கள்கிட்ட இருக்கற வெஷத்துக்கு முன்னால இந்த முள்ளுடைய விஷம் ரொம்ப சாதாரணம் விஸ்வநாதன். நூத்துல ஒரு பங்கு, ஆயிரத்துல ஒரு பங்குன்னுதான் சொல்லணும்.” கசப்புடன் புன்னகைத்தார் முருகேசன். ”நான் சொல்றதெல்லாம் முந்நூறு நானூறு வருஷத்துக்கு முந்திய கதை விஸ்வநாதன். யாரோ ஒரு மூத்த அத்தக்காரி. எல்லாம் தெரிஞ்சவங்க. அப்பலாம் ஒரு குடும்பத்துல பத்து பன்னெண்டு மருமவளுங்க. அந்த மூத்த அத்தக்காரி வழியா, அந்த மருமவளுங்க காதுக்கு போயி, அவுங்க வழியா மத்தவங்களுக்கு போயி, இப்படியே காலம்காலமா அந்தக் கதைங்க இன்னும் உயிரோடயே இருக்குது. யார்யார்மூலமோ தெரிஞ்சிகிட்ட கதைங்களகூட அந்த அத்தகாரி சொன்னதா முடிச்சி போட்டுடுவாங்க. எல்லா கதைங்களுக்கும் அவுங்கதான் மூலம். அப்படி ஒரு பழக்கம் இந்த வம்சத்துல இருக்குது.”
””நாட்டுப்புறக்கதைங்கள்ளாமே அப்படித்தானே ஆரம்பிக்குது..”” என்று சொல்லிவிட்டு முருகேசனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தார் விஸ்வநாதன். ””எல்லாக் கதைங்களும் சாமிநாதக்கவுண்டரு கதையிலேருந்துதான் தொடங்கும். அதுக்கு முன்னால யாராச்சிம் ஒரு பூமிக்கண்ணோ, இல்ல ராஜாக்கண்ணோ இருந்திருக்கலாம். ஆனா சரியா விவரம் தெரியாது. எனக்கு என்ன தோணுதுன்னா அவர்தான் வம்சத்துல முதல் சொத்துக்காரன். எரநூறு முந்நூறு காணி இருக்கும்ன்னு சொல்வாங்க. சொத்துன்னு ஒன்னு சேந்தப்புறம்தானே ஒரு ஆளுக்கு இங்க சரித்திரமே உருவாவுது?”
சின்ன புன்னகையைப் பரிமாறிக்கொண்டார் முருகேசன். ””பாத்து நடக்கணும். பாதை ரொம்ப சரிவா இருக்குது. வழுக்கப்போவுது”” என்று எச்சரித்தபடி வந்தார் விஸ்வநாதன். முருகேசன் தொடர்ந்தார். “சாமிக்கண்ணு கவுண்டருக்கு மூணு பேரு பொண்டாட்டிங்க. ஆம்பளயும் பொம்பளையுமா பத்தொன்பது பேரு புள்ளைங்க. கோட்ட மாதிரி ஊடு. படியாளு அடியாளுன்னு ஒரு வேளைக்கு அம்பது நூறு பேரு சாப்புடற குடும்பம். நெல், கம்பு, கேவுரு, தெனைன்னு தொம்பைதொம்பையா நெரப்பி வச்சிருப்பாங்க. தொம்பை உயரத்துக்கு ஒரு பெரிய உலை. அதுலதான் நெல்லு அவிச்சி எடுப்பாங்க. தொம்பையிலேருந்து நெல்ல எடுக்கறது, தூசிதும்பு இல்லாம தூத்தி எடுக்கறது, நனைக்கறது, காயவைக்கறது, குத்தறது, பொடைக்கறதுன்னு ஒரு இருபது முப்பது பேரு எப்பவுமே வேல செய்யறது பழக்கம். அதுல ஒரு பையன். துருதுருன்னு வேல செய்யறவன். நல்லா நெடுநெடுன்னு உயரமா, வாட்டசாட்டமா மதுர வீரனாட்டம் இருப்பானாம். எப்படி பழக்கமாச்சோ தெரியலை. கவுண்டரு பொண்ணுக்கும் அவனுக்கும் ஒரு தொடர்பு உருவாயிட்டுது.”
பதற்றத்தோடு அவரைப் பார்த்துத் திரும்பினார் விஸ்வநாதன். “ஏதோ ஒரு நாளு. குத்தியெடுத்த அரிசிய எல்லாரும் பொடச்சிட்ட்டிருந்தாங்க. மொறம் பத்தலை. கவுண்டர்தான் மேல்பார்வை. அடுப்புக்கு வைக்கறதுக்கு வெறகு பொளந்துகிட்டிருந்தவன பாத்து உள்ள போயி இன்னும் கொஞ்சம் மொறங்கள் அள்ளிகிட்டு வாடான்னு அனுப்பனாரு. போன பையன் ரொம்ப நேரமா திரும்பி வரல. ஆத்திரத்துல கவுண்டருக்கு எதுவுமே புரியலை. கையில கெடைக்கட்டும் மொவன் தோல உரிச்சிட்டு தொங்க உடறன் பாருன்னு பல்ல நறநறன்னு கடிச்சிகினே உள்ள போயிட்டாரு. யாரயுமே அங்க காணோம். வெளிச்சத்துலேருந்து சட்டுனு உள்ள வந்ததால மொதல் பார்வைக்கு ஒன்னுமே தெரியல. ஒரே இருட்டு. அப்பறமா உத்து உத்து பாத்திருக்காரு. கவுண்டரு பொண்ணும் அந்த பையனும் தொம்பைங்க நடுவுல பாம்புமாதிரி பின்னிகிட்டு படுத்துங்கெடந்தத பாத்துட்டாரு. ஆத்தரம் தாங்கல அவருக்கு. காலாலயே பொண்ண ஒதச்சி ஒரு பக்கம் தள்ளிட்டு அந்த பையன அங்கயே அடி அடின்னு அடிச்சி தொவச்சிட்டாரு. குப்பை கூளத்த அடிச்சி இழுத்தாறமாதிரி அவன வெளியில இழுத்தாந்தாரு. உட்டுடு சாமி, உட்டுடு சாமின்னு கதறிகினு வரான் அவன். வெறவு பொளக்கற எடத்துலயே அவன கெடத்தி அந்த நிமிஷத்துலயே கோடாலியால துண்டுதுண்டா வெட்டி பொளந்துட்டாரு. கோவணத்த அவுக்கறதுக்கு கவுண்டன் ஊடுதான் கெடச்சிதாடா ஒனக்குன்னு சொல்லிகிட்டே அந்த ஒடம்ப வாரி, நெல்லு அவிக்கற ஒலையில போட்டு மூடிட்டாரு.”
”என்ன?” என்று பதற்றத்தோடு விரல்களால் வாயை மூடியபடி கேட்டார் விஸ்வநாதன். ”கேக்கறதுக்கே ஒடம்பு நடுங்குதில்லயா? ஆனா அதயெல்லாம் கூச்சமோ குறுகுறுப்போ இல்லாம செஞ்சாரு அவரு. அந்த வெவகாரத்துக்கு பிறகு வீட்டுல இருக்கற ஒவ்வொருத்தவங்களயும் வேவு பாக்கத் தொடங்கினாரு. எல்லாரு பின்னாடியும் அவரு நெழல்போல நின்னாரு. வம்சம் சுத்தமா இருக்கணும். வேற எந்த ரத்தமும் அதுல வந்து கலந்துடக்கூடாது. அதுல ரொம்ப கவனமா இருந்தாரு. அவருக்கு எட்டுப் பேரு தம்பிங்க. தன்னுடைய புள்ளைங்க மட்டுமில்ல, தம்பிங்க புள்ளைங்கள் மேலயும் ஒரு கண்ணு உண்டு அவருக்கு. அவர் கண்காணிப்ப மீறி எதுவும் நடக்காது. ஊருக்கு தெற்குல ஒரு ஏரி உண்டு. கடல்மாதிரி பொங்கும். வெட்டி அதுல போட்டுருவாரு. சாதிமானம்ங்கறது கடவுளுடைய ஒரு கட்டளபோல. நானா வெட்டறேன்? கடவுள்தான் எனக்குள்ள பூந்து வெட்டி சாய்க்கறாருன்னு சொல்வாரு.”
“அவருக்குப் பிறகு பூங்காவனக்கவுண்டரு. அப்பனுக்கு தப்பாம பொறந்த புள்ள. சாதிமானம் தன்னுடய குடும்பத்துக்குள்ள மட்டும் இருந்தா போதாது. ஊரு உலகத்துலயும் இருக்கணும்ன்னு நெனைக்கற ஆளு. ஊரு பஞ்சாயத்துலாம் அவருகிட்டதான் வரணும். ஆம்பள, பொம்பள விஷயம் உட்பட. அவரும் சம்பந்தப்பட்டவங்கள இழுத்துவந்து நிக்க வச்சி, பேருக்குன்னு ஒரு விசாரணை நடத்துவாரு. ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் துணிய உருவிட்டு அம்மணமாக்கிடுவாங்க. கை ரெண்டயும் பின்பக்கமா கட்டிட்டு, சாணிய கரச்சி கரச்சி ஊத்துவாங்க. காயக்காய உடம்புல ஊத்திகினே இருப்பாங்க. போகபோக இந்தக் கொடும கூடி போயிருச்சி. அடி வயத்துல சூடு வைக்கறது, துணியில்லாம ஓட வைக்கறது. சவுக்கமிளாரால அம்பது அடி, நூறு அடின்னு குடுக்கறது, அம்மிக்கல்ல தலயில தூக்கி வச்சி துணியில்லாம நிக்க வைக்கறது. இவ்வளவு கொடுமைங்களுக்குப் பிறகும் ஏன் அப்படி ஆசப்படுக்கறாங்கன்னு ஒருத்தவங்க கூட யோசிச்சி பாக்கல. யோசிச்சிருந்தா இது ஒருவேள இயற்கைன்னு புரிஞ்சிருக்குமோ என்னமோ…”
“அதுக்கபுறம் தனபால் கவுண்டரு வம்சம். அதே அகங்காரம். அதே திமிரு. அதே வேகம். சங்கராபரணி ஆத்துக்குப் பக்கத்துல ஒரு பெரிய சவுக்கத் தோப்பு உண்டு அவருக்கு. ஆம்பள பொம்பள விஷயத்துல கையும் களவுமா பிடிபட்டவங்களுக்கெல்லாம் அங்கதான் பஞ்சாயத்து நடக்கும். முடிஞ்ச கையோட, கையயும் காலயும் சேத்துக் கட்டி, அங்கயே ஒரு பள்ளத்த தோண்டி உயிரோடயே உள்ள தள்ளி புதைச்சிடுவாரு.”
”என்ன சொல்றதுங்க விஸ்வநாதன்? நாக்கும் ஒடம்பும் கூசுது. இப்படியெல்லாம் ஒரு வம்சமான்னு கேவலாம இருக்குது. தனபாலு கவுண்டரு, அவருக்குப் பிறகு ஜெயபாலு கவுண்டரு, அப்புறமா ருத்ரமூர்த்தி கவுண்டரு, நல்லமுத்து கவுண்டருன்னு நீளமா போவுதுன்னு வைங்க…ஆளாளுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டிங்க. பத்துப் பதின்ஞ்சி புள்ளைங்க. ரொம்ப காலம் சொத்துபத்துங்கள காப்பாத்த முடியல. கூட்டு உழைப்பு எப்ப நின்னுதோ, அப்பவே அடிவாரத்துல விரிசல் விட்டுடிச்சி. கெடச்சத பிரிச்சி எடுத்துகினு ஆளுக்கு ஒரு பக்கமா போயிட்டாங்க? பிரெஞ்சு ஆட்சி போலீஸ்னா அப்பலாம் ஒரு பயம். அடி, வெட்டு, பஞ்சாயத்துலாம் அதனாலயே நின்னு போச்சி. ஆனாலும் அடுத்த சாதி மேல எளக்காரம், வெறுப்பு, கசப்பு எதுவும் குறையவே இல்ல. எல்லாத்தயும் அடி நெஞ்சில அப்படியே தேக்கி வச்சிட்டாங்க. ”
”என் மனசுல அரகொறயா பதிஞ்சிருக்கற மொகம்னா அது எங்க தாத்தாவுடையதுதான். பெரிய மீச. குடுமி. காதுல கடுக்கன்லாம் உண்டு. வீரப்பக்கவுண்டரு. தாத்தாவுக்கு எங்க அப்பாவ சேத்து ஆறு புள்ளைங்க. எல்லாரும் அல்லும் பகலுமா நெலத்துல பாடுபடறவங்கதான். பள்ளிக்கூடம்லாம் அப்ப ஊருக்குள்ள வந்திடுச்சி. ஆனா தாத்தா யாரயுமே பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலை. ஆத்தா குடுத்த மண்ணு கொணத்த முழுசா தெரிஞ்சிக்கணும். அதும் மனசு கோணாம நடக்கணும். அந்த படிப்ப படிச்சிகிட்டா ஆயுளுக்கு அது போதும்ன்னு சொல்லி அடக்கிடுவாரு. அப்பா படிப்பு விஷயத்தால ஆயாவுக்கும் தாத்தாவுக்கும் தெனமும் சண்ட. இந்த வெறி புடிச்ச கூட்டமே வேணாமின்னு ஆயா அப்பாவ தூக்கினு வெளிய வந்துட்டாங்க. அந்த தெருவுலயே ஒரு கூரய போட்டுகினு கழனிவேல, அது, இதுன்னு செஞ்சி அப்பாவ படிக்கவச்சாங்க ஆயா. அப்பா நல்லா படிச்சி ரயில்வேல வேலைக்கு போனாரு. வேலைக்கு போன எடத்துலதான் அம்மாவ பாத்து ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டாரு. அம்மா வேற ஆளு. ஐயரு.””
””கல்யாண ஜோடிய தெருவுலயே நொழய உடாம ஆள வச்சி தடுத்துட்டாரு தாத்தா. இந்த ஓடுகாலிய மொதல்ல வெட்டிட்டு அப்பறமா ஒங்கள வெட்டறன்டானு ஆயா பக்கமா போனாரு தாத்தா. அப்பாவுக்கு டக்குனு யோசன வந்திருக்குது. குறுக்குல பூந்து நிறுத்தி இங்க பாருங்க, நாங்க ரெண்டு பேருமே சர்க்கார்ல ஊழியம் செய்யறவங்க. எங்களுக்கு ஏதாச்சிம் ஒன்னுன்னா பிரெஞ்சு போலீஸ்க்கு எல்லாருமே பதில் சொல்லியாவணும். ஜெயில்ல களி தின்னுதான் சாவணும்ங்கறது ஒங்க தலயெழுத்துன்னா இப்பவே போங்க. ரெண்டுல ஒன்னு பாத்துடலாம்ன்னு சொல்லிட்டு நின்னுட்டாரு அப்பா. தாத்தாவுக்கு தல தொங்கிடுச்சி. நறநறன்னு பல்ல கடிச்சிகினு கெளம்பி போயிட்டாரு.”
”அப்பா கல்யாணம் அந்தக் காலத்துல ஒரு பெரிய புரட்சின்னுதான் சொல்லணும். நான் பொறந்து ஏழெட்டு வயசு வரிக்கும் அதே ஊருலதான் இருந்தம். நாந்தான் எங்க தாத்தாவ பாத்திருக்கேன். அவரு என்ன நிமுந்துகூட பாத்ததில்ல. சித்தப்பா ஒருத்தரு திடுதிப்புனு ஒரு பொண்ண அப்பாவபோலவே கல்யாணம் செஞ்சிகினு ஊருக்குள்ள கூட்டியாந்தாரு. அவுங்க ஊட்டுக்குள்ள ஒரே சண்ட. கொழப்பம். அடுத்த நாளு காலையில மாந்தோப்புல அந்த புதுப்பொண்ணு தூக்குல தொங்கிச்சி. தாத்தாதான் கொலசெஞ்சி தொங்க வச்சிட்டாருன்னு பாதி பேரு பேசிகினாங்க. இம்ச தாங்காம அந்த பொண்ணே தூக்குல தொங்கிடுச்சினு பாதிபேரு சொன்னாங்க. அன்னிக்கே அப்பா குடும்பத்தோட அந்த ஊரவிட்டு கெளம்பிட்டாரு.””
””கடசி காலத்துல தாத்தாவுக்கு மூள கொழம்பிடுச்சி” விஸ்வநாதன்” என்றார் முருகேசன். கைக்கு எட்டிய ஒரு பூவரசம்பூவைப் பறித்து, அதை தன்னிச்சையாக உருட்டிக்கொண்டே பேசினார். “எப்பவும் ஒரே பொலம்பல். சத்தம். எல்லாப் பேச்சும் சாதி மானத்துலதான் வந்து முடியும். அவரு கையில ஒரு கத்தி வேற உண்டு. ஐயனாரு சாமி கணக்கா அத தூக்கிட்டுதான் திரிவாரு. ஆட்டுத்தலய பன்னிக்கும் பன்னித்தலய ஆட்டுக்கும் ஒட்டுப் போட முடியுமாடா நாய்க்குப் பொறந்தவனுக்களா? சாதிக் கட்டுமானம்ங்கறது ஆண்டவன் போட்ட கணக்குடா. எந்தக் காலத்துலயும் அது மாறக்கூடாதுன்னு எப்பவும் ஒரே கூச்சல். போறவன் வரவனயெல்லாம் பாத்துப்பாத்து தூதூன்னு துப்பிகினே இருப்பாரு. யாராலயும் அவர அடக்கமுடியலை. சரி, கத்தறவன் கத்திட்டு தானா அடங்கட்டும்ன்னு நெனச்சி உட்டுட்டாங்க. ஆனா போவப்போவ நெலம ரொம்ப மோசமாய்டிச்சு. இடுப்புல துணியே தங்கறதில்ல. அதப்பத்திலாம் அவருக்கு சுயநெனவே இல்ல. எங்களுக்கு செய்தி கெடச்சிது. ஆயா வரவே முடியாதுன்னு நின்னுட்டாங்க. அப்பா மட்டும் கெளம்பறபோது நானும் கூடப் போயி பாத்தேன். என்னால கண்ணத் தெறந்துபாக்கவே முடியலை. அவ்வளவு பயம். அப்பாவும் கண்கலங்கி திரும்பிட்டாரு. சித்தப்பா பொண்டாட்டி ஒருத்தவங்க இருந்தாங்க. அவுங்கதான் அவர கடசிகாலத்துல ஒரு கொழந்தய பாக்கறமாதிரி பாத்துகிட்டாங்க.””
””பெரியாத்தாதான் எங்க குலதெய்வம். ரொம்ப காலமா பூச பொங்கல்ன்னு எதுவுமே இல்லாம நின்னு போச்சி. அந்த சாபம்தான் இப்படி புடிச்சி ஆட்டுதுன்னு மணவெளி ஜோசியரு ஒருத்தரு சொன்னாரு. நாலஞ்சி பேரு சேந்து என்னென்னமோ கதைங்கள பேசிகினே தாத்தாவ அங்க அழச்சிம் போயிட்டாங்க. சங்கராபரணியில் முழுக்கு போட்டு துணிய கட்டி, நெத்தில விபூதி குங்குமம்லாம் பூசி, பெரியாத்தா முன்னால உழுந்து கும்புட வச்சாங்க. கோழிவெட்டி, பொங்கல் வச்சி குடும்பமே கும்புட்டுது. இனி வருஷம் தவறாம தைமாசம் அறுவட முடிஞ்சதுமே குடும்பமா வந்து படையல் போடறம் ஆத்தான்னு கண்ணீரு உட்டு அழுதாங்க. அதப்பத்தி எங்க அம்மாதான் கதகதயா சொல்வாங்க. எனக்கு இப்பகூட அத நம்பறது கஷ்டமா இருக்குது. ஆறே நாள்ல அந்த தாத்தாவுக்கு பழய நெலம திரும்பிடுச்சி. அந்தக் காலத்துல அது பெரிய அதிசயம்.””
சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருவரும் இறங்கினார்கள். அப்புறம் ””எங்க குடும்பத்துக்கு பெரியாத்தா குலதெய்வமான கதயயும் நீங்க கேக்கணும் விஸ்வநாதன்”” என்றார் முருகேசன். சரிவின் பக்கவாட்டிலிருந்து இறங்கிச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் ஆடுகளை மேய்த்தபடி ஒரு சிறுமி பாடிக்கொண்டே சென்றாள். ஒரு வேப்பமரத்திலிருந்து ஒரு குயில் கூவியது. செல்லமாக அழைத்துக் கொஞ்சுவதுபோல. ஒரு சில கணங்கள் அதைக் கேட்பதில் கழித்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தார் முருகேசன். “ரத்தமும் சதயுமா உயிரோட வாழ்ந்த பொம்பள அவுங்க. ஏதோ ஒரு தாத்தாவுடய சொந்தப் பொண்ணுதான். யாருக்கும் சரியா சொல்லத் தெரியலை. அவுங்க உண்மையான பேரே அதுதானா, வேறயான்னு கூட யாருக்கும் தெரியாது. பெரியாத்தா பெரியாத்தான்னு எல்லாரும் கூப்ட்டு பழக்கம். குடும்பத்துலயே ராசியான பொண்ணு அவுங்க. பத்து பன்னெண்டு அண்ணன்தம்பிங்க வாழ்ந்த கூட்டத்துக்கு நடுவுல ஒத்தைக்கு ஒத்தயா வாழ்ந்த பொண்ணு. குலவிளக்கு குலவிளக்குன்னு சொல்லி எல்லாரும் அவுங்க கையில வச்சி தாங்கியிருக்காங்க. கழனியில வெதைக்கறது, நாத்து நடறது, அறுவட எல்லாத்துக்கும் பெரியாத்தாதான் மொதல் கையியா நிக்கணும். பெரியாத்தாதான் வெளக்கேத்தி வச்சி எல்லாத்தயும் தொடங்கி வைக்கணும். பெரியாத்தா தொட்டதெல்லாம் வெளங்கும்ன்னு ஒரு நம்பிக்கை.””
””கெணத்துமேடு, கம்மாக்கரை, சவுக்கத்தோப்பு, மாட்டுத்தொழுவம், தென்னந்தோப்பு, மாந்தோப்புன்னு எல்லா எடங்கள்ளயும் பெரியாத்தாவுக்கு செல்வாக்கு உண்டு. வா பெரியாத்தா வா பெரியாத்தான்னுதான் எல்லாரும் அவுங்கள கூப்புடுவாங்க. அந்த அளவுக்கு மரியாத. கரைமேல நின்னுகினு அதட்டி உருட்டி வேல வாங்கற ஆளு கெடயாது பெரியாத்தா. ஆளோட ஆளா சேத்துல எறங்கி நின்னுடற ஆளு. பண்ணக்கார ஆளுக்கு சமானமா நின்னு வேல செய்யற அளவுக்கு பெரிய தெறமசாலி.””
””ஓய்வுங்கற பேச்சுக்கே பெரியாத்தா அகராதியில எடம் கெடயாது. பம்பரமா சுத்திசுத்தி வேல செய்வாங்க. என்னமோ தெரியலை, கும்பலப் பாக்கறதுக்கே கூச்சப்பட்டமாதிரி ஒருநாளு எல்லாத்திலிருந்தும் ஒதுங்கி நின்னாங்க. ஒருநாளு கழனியில நாத்து நடவு. மொதக்கட்டு நாத்து பெரியாத்தாதான் எடுத்து குடுக்கணும். கோழி கூவற நேரத்துல எல்லாரும் கெளம்பி கழனிக்கு வந்துட்டாங்க. பெரியாத்தாவும் குளிச்சிமுடிச்சி சுத்தபத்தமா வந்துட்டாங்க. வெளக்கேத்தி கெழக்க பாத்து கும்பிட்டுட்டு பெரியாத்தா நாத்துக்கட்டுங்கள எடுத்து ஆளுங்களுக்கு பிரிச்சி குடுத்தாங்க. வழக்கம்போல அவுங்களும் ஒரு நாத்துகட்ட எடுத்து குனிஞ்சி நட்டாங்க. அரகட்டு கூட நட்டு முடியலை, திடீர்னு ஓஓன்னு வாந்ததி எடுத்தாங்க. வயித்த புடிச்சிகினே அப்படியே வரப்புலயே ஒக்காந்திட்டாங்க. அண்ணன்தம்பிங்கள்ளாம் அங்க வந்து சேந்துட்டாங்க. என்னாச்சி பெரியாத்தாவுக்குன்னு எல்லாருக்கும் கவல. சின்னப் பொண்ண வெறும் வயித்தோட வயக்காட்டுக்கு எழுப்பி கூட்டாரலாமா? ஒரு நீராகாரமாச்சிம் குடுத்திருக்கக்கூடாதா? பித்தத்துல குனிஞ்சி நிமுந்து வேல செய்யறதுல வயித்த பொரட்டியிருக்கும் , ஒன்னும் கவலப்படாதிங்க, போயி வேலய பாருங்கப்பான்னு அங்க ஒரு ஆயா சொல்லிச்சி. அங்கயே ஒரு பல்லாவுல நீராகாரத்த ஊத்தி குடிக்கவச்சாங்க. அத குடிச்சிட்டு, பெரியாத்தா அப்படியே வரப்புல ஒக்காந்திட்டாங்க. அண்ணன் தம்பிங்க சேந்து வண்டியில் உக்காரவச்சி பெரியாத்தாவ ஊட்டுக்கு அனுப்பி வச்சாங்க.””
””அன்னிக்கு சாயங்காலமா மேய்ச்சல்லேருந்து வந்த மாடுங்களுக்கு தண்ணி வைக்கறதுக்கு பெரியாத்தாதான் போனாங்க. அங்க ஒரு தரம் ஓஓன்னு வாந்தி எடுத்தாங்க. ஊட்டு ஜனங்க யாரும் பாக்கலை. அவுங்களே வாயக் கழுவி அவசரமா கொப்பளிச்சி துப்பிட்டு வந்துட்டாங்க. ஆனா மாட்டுக்காரன் அதப் பாத்தது அவுங்களுக்கு தெரியாது. அவன் ஒரே ஓட்டமா ஓடி அண்ணன்மாருங்ககிட்டசொல்லிட்டான். சாணி நாத்தம் தாங்காம எடுத்திருப்பா, இது ஒரு கதியா போடான்னு அவன அனுச்சி வச்சிட்டாங்க அவுங்க. அப்பறம் அது பெரியவரு காதுக்கும் போயிட்டுது.””
””வீடு காடு கழனின்னு அலஞ்சிகிட்டே இருக்கற பெரியாத்தா எங்கயும் இருப்பு கொள்ள முடியாத ஆளா மாறிட்டாங்க. கழனிலதான இருக்கறாங்கன்னு நெனைக்கற சமயத்துல வீட்டுல இருப்பாங்க. வீட்டுக்குள்ள இருக்கறாங்கன்னு நெனைக்கற சமயத்துல வீட்டுலயே இருப்பாங்க. எல்லாருக்கும் ஒரே குழப்பம். ஆனா அத எப்படி பேசி தீத்துக்கறதுன்னு யாருக்கும் தெரியலை. ஒருத்தவங்க அறியாம ஒருத்தவங்க பெரியாத்தா நடவடிக்கைங்க ஒவ்வொன்னயும் நுட்பமா கவனிச்சாங்க. யாருக்குமே தெரியாம இது நடந்திச்சி. ஒரு நாளு ஆளுங்களுக்கு படியளக்குற சமயத்துல மந்தோப்புக்குள்ள பெரியாத்தாவும் காடுவேல செய்யற ஒரு பையனும் ரொம்ப நெருக்கமா பேசிட்டிருந்தத பாத்தாங்க. சரி, உட்டுப் புடிக்கலாம்ன்னு அமைதியா இருந்தாங்க. நம்ம பெரியாத்தாளா இப்பிடின்னு அவங்களுக்கு ஒரே அதிர்ச்சி. பெரியவரு காதுல உழறதுக்குள்ள எதயாச்சிம் பேசி கீசி மாத்திரலாம்ன்னு ஒரு அண்ணன்கரன் பெரியாத்தாவ பாத்து சாடமாடயா பேசியிருக்கான். ஐயோ சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாதுண்ணே, யாரோ எனக்கு ஆவாதவங்க கத கட்டி விட்டிருக்காங்க, நம்பாதிங்கண்ணேன்னு அழுது பொலம்பனாங்க பெரியாத்தா. கண்ணால பாத்தவன்கிட்டயே கதய மாத்திட்டாளேன்னு அண்ணன்காரனுக்கு அவமானமாய்டிச்சி. சரி, நம்மால எதுவும் கெடவேணாம்ன்னு அவரு அப்படியே ஒதுங்கிட்டாரு. அவரு ஒதுங்கனாலும் மத்த அண்ணன் தம்பிங்க ஒதுங்கத் தயாரா இல்ல. வசமா மாட்டட்டும்ன்னு சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தாங்க.””
””திடீர்னு ஒருநாளு பெரியவருக்கு காய்ச்சல். ஒழவுமாடு வாங்கறதுக்கு கண்டமங்கலம் சந்தைக்கி போனவரு எவளோ வித்தாள்னு புளிச்சி போன கள்ள வாங்கி குடிச்சிட்டு வந்து படுத்துட்டாரு. இஞ்சி கஷாயம், மிளகு ரசம்ன்னு எதஎதயோ வச்சி குடுத்தும் காய்ச்சல் நிக்கல. அப்பறம்தான் கோர்க்காடு வைத்தியர வண்டிவச்சி கூட்டாந்தாங்க. வழக்கமா அவருதான் குடும்பத்துக்கு நாடி புடிச்சி மருந்து குடுக்கறவரு. பெரியவருக்கு நாடி பாத்துட்டு மூணு நாளைக்கு மருந்து குடுத்துட்டு கெளம்பனாரு. ஐயா, வந்ததே வந்திங்க, என் பொண்ணுக்கும் நாடி புடிச்சி பாத்துட்டு போங்க. ஓஓன்னு காடுகழனியெல்லாம் வாந்தி எடுத்துங்கெடக்கறான்னு சொன்னாரு. அப்பதான் அவருக்கு சூடா நண்டு ரசம் வச்சி எடுத்தாந்தாங்க பெரியாத்தா. அதுக்கென்ன, பாத்தா போச்சின்னு கைய வாங்கி நாடிய பாத்தாரு. அப்பறம் ஒன்னும் இல்ல கவுண்டரே, பனி ஒத்துக்கல. காலையில மாட்டுகொட்டா பக்கம், கழனிப்பக்கம்ன்னு கொஞ்ச நாளு அனுப்பாம பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு சிரிச்சிகினே போயிட்டாரு. ஆனா, தாத்தா கொணமாகி ஒருநாளு ஆத்துப் பக்கமா போயிருந்த சமயத்துல நேருல வந்து பாத்தத வைத்தியரு, “குடும்பத்துக்குள்ள வச்சி சொல்ல வேணாம்ன்னுதான் எதயோ ஒப்புக்கு சொன்னன் கவுண்டரே. அது பனிவாந்தி கெடயாது, மாசமா இருக்கறவங்க எடுக்கற வாந்தி. எனக்கு ஒன்னும் புரியல கவுண்டரே” ன்னு சொல்லிட்டு போயிட்டாரு. நெஞ்சுக்குள்ள நெருப்பு புடிச்சி எரியறமாதிரி பெரியவருக்கு கோபம் சுர்ருனு ஏறிடுச்சி. ஊட்டுக்கே போவல. ஆத்தோரம் சவுக்கத்தோப்புலயே ஒக்காந்துட்டாரு. தேடி வந்த புள்ளகாரனுங்ககிட்ட விஷயம் இப்பிடி இப்பிடி இருக்குதுன்னு மெதுவா சொன்னாரு. மெதுவா, அவுங்களும் இங்க வச்சி பாத்தன், அங்க வச்சி பாத்தன்னு சொன்னாங்க. பிரச்சன கைமீறி போயிட்டுதுன்னு தெரிஞ்சிட்டுது. அமைதியா இருந்து காரியத்த கச்சிதமா முடிக்கணும்ன்னு பல்ல கடிச்சிகினும் போயிட்டாரு.””
””எப்பவும் கலகலப்பா இருக்கற ஊட்டுக்குள்ள திடீர்னு அமைதிய பாத்ததுமே பெரியாத்தாவுக்கு என்னமோ நடக்கப் போவுதுன்னு தெரிஞ்சி போச்சி. அவுங்க கேக்கறதுக்கு முன்னால நாமளே சொல்லலாமான்னு அவங்களுக்கு ஒரு யோசன. அதுக்கு முன்ன தன்னோட ஆளுகிட்ட ஒரு வார்த்த கேட்டுடலாம்ன்னும் நெனச்சாங்க. யோசனயில பெரியாத்தாவுக்கு தலயே கொழம்பி போச்சி.””
””ஒருநாளு பொழுது சாஞ்ச நேரத்துல மாந்தோப்புல வழக்கமா பாத்துக்கிற எடத்துல ரெண்டுபேரும் சந்திச்சாங்க. நெஞ்சில இருக்கறதயெல்லாம் கொட்டி அழுதாங்க பெரியாத்தா. அப்பாவும் அண்ணந்தம்பிங்களும் சுத்தி வளச்சி மறஞ்சி நிக்கறது பெரியாத்தாவுக்கு தெரியல. கண்ணமூடி கண்ண தெறக்கறதுக்குள்ள சுத்தி வளச்சிட்டாங்க. நாலு பேரு அவன அமுக்கி புடிச்சி சவுக்கத் தோப்புக்குள்ள தூக்கினும் போயிட்டாங்க. மிச்ச பேரு பெரியாத்தா வாயில துணிய அடச்சி மரத்துல சாச்சி கட்டிட்டாங்க. பெரியாத்தாவுக்கு கண்ணுமுழிலாம் பிதுங்குது. ஆ ஆன்னு மட்டும்தான் சத்தம் வருது. அவளால எதுவும் பேசமுடியல. அந்த கடசி நேரத்துல அப்பான்னு சொன்னாங்களா, அண்ணான்னு சொன்னாங்களா, தெய்வமேன்னு சொன்னாங்களான்னு எதுவுமே தெரியல. பெரியவரு அவுங்க வயித்துலயே காலால ஆத்திரம் தீர்ரவரைக்கும் எட்டி ஒதச்சாரு. கொட்டா போடறதுக்குன்னு பக்கத்துல மொடஞ்சி வச்சிருந்த கீத்துங்கள கொண்டாந்து பெரியாத்தாவ சுத்தி நிறுத்தி அடுக்கி ஆளயே மறச்சிட்டாங்க. கண்ணமூடி கண்ண தெறக்கறதுக்குள்ள பெரியவரு நெருப்பு வச்சிட்டாரு.”
”நடுராத்திரி வரைக்கும் இருந்து தணல் தணிஞ்சதுக்குப்பறமா எடுத்து வெளியில போட்டாங்க. ஒடம்பே இல்ல. கரிஞ்ச கட்ட. உருட்டிகினே வந்து தோப்புலயே ஒரு பள்ளத்த தோண்டி பொதச்சிட்டாங்க. சாதிப்பெரும தெரியாத சனியனே சனியனேன்னு அதும்மேல துப்பி செருப்பாலயே மிதிசாரு தாத்தா. அப்பறம்தான் ஊட்டுக்கு போனாங்க. பொண்ணயும் காணம், ஊட்டு ஆம்பளைங்களயும் காணம்ன்னு விளக்கு ஏத்தி வச்சிகினு ஊட்டு பொம்பளைங்கள்ளாம் என்ன ஏதுன்னு புரியாம ஒக்காந்திருந்தாங்க. மாந்தோப்புல கொட்டா பத்திகிச்சின்னு ஆளுக்காரன் வந்து சொன்னான். அதான் போயி பாத்துட்டு வரோம்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. பெரியாத்தா ஒங்க கூட வரலையான்னு பொம்பளைங்க கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லல.””
””அடுத்த பத்து வருஷத்துல குடும்பத்துல புதுசுபுதுசா ஏகப்பட்ட பிரச்சனைங்க. பெரியவருக்கு பக்கவாதம் வந்து ஒரு கை, ஒரு காலு தொவண்டுபோச்சி. கட்டிலோடயே மொடங்கிட்டாரு. நல்லா வெட்டு எடுக்கர பருவத்துல சவுக்கத்தோப்பு நெருப்பு புடிச்சி அழிஞ்சிபோச்சி. அறுவடை சமயத்துல அடமழ பேஞ்சி எல்லா விளைச்சலும் அழிஞ்சி போயிருச்சி. சின்ன வயசுப்புள்ளைங்க நாலஞ்சி பேரு அடுத்தடுத்து செத்துட்டாங்க. ஜோசியரு வந்து பாத்துட்டு, ஏதோ பெண்பாவத்தாலதான் குடும்பமே இப்பிடி ஒடுங்கி போயிடுச்சி. மொதல்ல குடியிருக்கற எடத்தயே மாத்துங்கன்னு சொன்னாரு. அப்பறமா அரகொறயா உலகத்த விட்டு போயிட்ட ஆத்மா ஒன்னு அமைதியே இல்லாம இங்கயே சுத்திசுத்தி வருது. அதுலேருந்து நீங்க மீளணும்ன்னா அந்த ஆத்மாவ நீங்க குல தெய்வமா நெனச்சி மனசார நம்பி வழிபடணும். அதும் மனசு குளுந்தா உன் குடும்பம் நிமிரும்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.””
””இதயெல்லாம் எங்க அம்மா ரொம்ப பின்னாலதான் சொன்னாங்க விஸ்வநாதன். ஆயா, அப்பாலாம் போனதுக்கப்பறமா ஏதோ ஒரு பேச்சி எங்கயோ தொடங்கி இந்த கத வரிக்கும் போயிடுச்சி. அதனால சொல்றமாதிரி சந்தர்ப்பம் அமைஞ்சிடுச்சி. அப்பாதான் அவுங்க வம்சத்தவிட்டு அறுத்துட்டு வந்தாரே தவிர, யாருக்கும் தெரியாம அம்மா அந்த குடுமப்த்து பொம்பள ஜனங்களோட அப்பப்ப போக்குவரத்து வச்சிருந்தாங்க போல. பேச்சோட பேச்சா பேசிப்பேசி தெரிஞ்சிகிட்டாங்கன்னு தோணுது. பெரியாத்தாவ கும்புடற சமயத்துல அம்மாவும் எப்பவோ ஒருதரம் அவுங்களோட போய் வந்ததா சொன்னாங்க.””
””அப்பா ரயில்வேயில இருக்கும்போது பெரியாரு கட்சியில இருந்தவரு. சாமி நம்பிக்கைலாம் அவருக்குக் கெடையாது. அம்மா எல்லாத்தயும் மனசுக்குள்ளயே கும்புட்டுக்குவாங்க. நானும் தம்பியும் சாமி இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரின்னு போயிடற ஆளுங்க. பக்திப்பழமும் கெடயாது. பக்தி வெறுப்பும் கெடயாது.”
”அம்மாவும் போயி சேந்துட்டா. என்னமோ அவசரத்துக்கு வண்டிய புடிக்கறமாதிரி குமுதமும் சீக்கிரமா போயிட்டா. ரெண்டு பொண்ணுங்களும் படிக்கறதுக்கு பிலானி போயிட்டாங்க. ஒருநாளு ராத்திரி எதயோ படிச்சிகிட்டிருக்கும்போது திடீர்னு பெரியாத்தா ஞாபகம். நம்ம வழியில அம்பது அறுபது வருஷமா ஒரு படயலும் இல்லயே, அதனாலதான் அடுக்கடுக்கா இந்த சோதனயோன்னு ஒரு கோணத்துல யோசன ஓடிச்சி. அடுத்த நாளு அம்மா சொன்ன குறிப்ப வச்சி வண்டி புடிச்சி போயிட்டேன். எங்க எடத்துலேருந்து எட்டுமணி நேரம் பயணம். தோப்பு கெணறுலாம் எதுவும் இல்ல. எல்லா எடங்கள்ளயும் சுத்திசுத்தி ஊடுங்கதான். சந்து சந்தா வளஞ்சி போயி ஒரு மாமரத்துங் கீழ கண்டுபிடிச்சேன். சுத்தியும் மதில போட்டிருந்தாங்க. ஒரு பெரிய சமாதி. அதுல ஒரு மாடம். அதுக்குள்ள ஒரு வெளக்கு.””
””மொத்தத்துல ரெண்டுமூணு நிமிஷங்கள்தான் அங்க நின்னிருப்பேன். திடீர்னு மனசு பாரமாய்டிச்சு. விளக்கு சுடர பார்க்கப்பார்க்க தன் கனவு நெறவேறாதா, தன் ஆச பலிக்காதான்னு ஏக்கத்தோடு நெனச்சிகிட்டு யாரோ நிக்கறா மாதிரி இருந்திச்சி.””
””என் பெரிய பொண்ணு கண்மணி இருக்காளே, பாஸ்டன் யுனிவர்சிட்டியில நாங்க இருந்த நேரத்துல பொறந்த பொண்ணு அவ. சின்னவதான் இந்தியாவிலயே பொறந்த கொழந்த. யு.எஸ்.ல மனைவிக்கு பிரசவமாவற நேரத்துல கணவனும் பக்கத்திலயே இருக்கணும்ன்னு சொல்வாங்க. பொறந்த கொழந்தய நேருக்கு நேரா நின்னு பாக்கும்போது நமக்கு ஒடம்புலாம் ஒதறிடும் விஸ்வநாதன். கூறுபோட்டு எடுத்த தர்பூசணிபழம்மாதிரி தெரியும். அழுக சத்தம் மட்டும் இல்லன்னா, அத கொழந்தன்னே சொல்லமுடியாது. ஒடம்புலாம் கொழகொழன்னு ரத்தம். தேன்மாதிரி பிசிபிசுன்னு ஒட்டி ஒழுவற தண்ணி. வதங்கி கன்னங்கரேல்னு போன கீரத்தண்டு மாதிரி ஒடம்பச்சுத்ததி ஒரு கொடி. எல்லாத்தயும் சுத்தமாக்கி, கழுவி எடுத்தாந்த பிறகுதான் அது கொழந்தயா தெரியும். அசுத்தத்துக்கு நடுவுலதான் சுத்தம் இருக்குது. ஒரு கோணத்துல யோசிச்சா, சுத்தத்த பாதுகாக்கற கவசமா அசுத்தம் படைக்கப்பட்டிருக்குமோன்னு தோணுது.””
””மண்டபம் பாக்கலாம் வாங்கன்னு ஒங்க கடிதம் கெடச்சதுமே கெளம்பிட்டேன். விஸ்வநாதன். எனக்கும் ஒங்ககிட்ட பேசறதுக்கு இப்பிடி நெறயா விஷயம் இருந்திச்சி. போன வாரம் பெரிய பொண்ணு லண்டன்லேருந்து பேசனா. அவகிட்ட பெரியாத்தாவுக்கு படயல் போட்ட விஷயத்த சொன்னன். பெரியாத்தா கதை ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்குதுப்பா, அவுங்கள பத்தி நீங்க குறும்படம் ஒன்னு எடுத்தா என்னன்னு கேட்டா. எனக்கும் அந்த யோசன புடிச்சிருந்திச்சி விஸ்வநாதன். அதுக்கு உரையாடல் எழுத நீங்கதான் பொருத்தமானவர்னு அந்த நிமிஷத்துலயே முடிவு பண்ணிட்டேன். அதப்பத்தியும் நாம பேசணும் விஸ்வநாதன்”” என்றார் முருகேசன். ””பின்முதுகு வரை நீண்ட கூந்தல், மல்லிகை, துறுதுறுன்னு அகலமா கண்கள். தளிர்மேனின்னு இப்பவே பெரியாத்தா என் கற்பனையில வந்தாச்சி முருகேசன்”” என்று புன்னகை செய்தார் விஸ்வநாதன்.

(2011)

Series Navigationபிறவிக் கடன்!ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *