ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்

This entry is part 24 of 29 in the series 3 நவம்பர் 2013

நூலாய்வு
எஸ். ஷங்கரநாராயணன்

ஆற்று நீரின் ருசி

(நண்டு புடிக்கப் போய் – ராஜ்ஜாவின் சிறுகதைகள். அலமேலு பதிப்பகம் 50 எல்லைக்கல் தெரு குறிஞ்சிப்பாடி 607 302. 160 பக்கங்கள். விலை ரூ 100/-)

Nandu Pudikka Poi coverசிறுகதைகளில் தான் எத்தனை வகைமைகள். வாழ்க்கையின் சீரற்ற போக்கில் ஒரு லயத்தை ஒழுங்கை நியதிகளை, மனிதன் சமூகம் எனவும், பல்வேறாவகவும் கொண்டுவர முயல்கிறான். இதில் கலைக்கும் இலக்கியத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது. வாழ்வினை ஈர்ப்புடன் கழிக்கவும் களிக்கவும் அவை கற்றுத் தர கடமைப்பட்டே இயங்குகின்றன. இலக்கியம் வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தை, பயனை வலிமையாய் முன்வைக்கிறது. நேற்று இன்று நாளை என்கிற இந்தக் காலவோட்டத்தில் மனிதனை எதும் மிச்சம் வைக்கச் சொல்ல அது முன்வருகிறது. ஓடும் நதியில் மீன் பிடிப்பதைப் போல…

அறிந்தோ அறியாமலோ கதைகளில் ஒரு போதனை அம்சம், அறியாதவொன்றைத் தொடும் அம்சம் அமைந்து போகிறது. இருப்பதில் நீங்கள் அறியாததை அல்லது யூகிக்£த ஒன்றை அது மேஜிக் போல எடுத்துக்காடட வேண்டும்.

அ, அப்படியெல்லாம் இல்லை, என்பது சிறுகதைகளைப் பற்றிய ராஜ்ஜாவின் வாதமாக இருக்கலாம். எனக்கு அவர் கதைகளில் கிடைத்த ஆச்சர்யம் இதுதான். எந்தத் தத்துவத்தையும் சாராமல், தேடாமல் அவர் கதைகள் இயல்பாய், வாழ்க்கையாய் இயங்குகின்றன. யதார்த்தத்திலேயே கூட அதை எழுதிக்காட்டிய நோக்கம் சார்ந்து அதில் காரண காரிய அம்சங்கள், தர்க்கங்கள் அமைந்துவிடுதல் நடக்கும். இவர் கதைகள் அப்படியான ஒருமையை, அப்படியான ஒரு நேர்ப் போக்கினை சட்டைசெய்யாமல் பயணிக்கின்றன. இதனால் அந்தக் கதைப் பாத்திரங்களுக்கு ஆக நேர்மையை வழங்குவதாக அவர் கருதிக்கொள்ளலாம்.

வாழ்க்கையின் நேரடி அனுபவங்களை அப்படியே அவர் படம் பிடித்து கதை என ஆக்குகிறதாகக் கொள்ளலாம். இதில் கைச்சரக்கு என தனியே கலப்படம் செய்தல் தகாது என அவர் நினைப்பதாகத் தெரிகிறது.

கிரிவலம் போகையில் கூட்டத்தில் முன்னும் பின்னுமாக தன்னை அழுத்துகிற பெண்களைப் பற்றிய ஒரு உல்லாச மனம். பாவம் புண்ணியம் தியனம் தவம் … இதெல்லாம் இல்லை, என அவர் மறுக்கிறாரா, என்றால் அதுவும் இல்லை. அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போவுது. நமக்கு லாயக் படாத, தோதுப் படாத விஷயங்கள் அவை, என்கின்றன இவர் பாத்திரங்கள். வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வதே ருசிகரமான அம்சமாய் இருக்கிறது அவர்களுக்கு. சில கதைகளில் சாதி சமாச்சாரம் பற்றி கொஞ்4ம் அக்கறைகாட்ட அவர் முனைகிறார். அதிலும் கடும் பசியுடன் வந்த மூதாட்டி, தனக்கு உணவு படைப்பவர் ஒரு சலூன்காரர் என்றதும் அப்படியே பதறி எழுந்துபோய் விடுகிறாள், என்கிற கதையைக் காட்டிலும், ஆஸ்பத்திரியில் தன் பக்கத்து நோயாளி தன்-சாதி என்கிறாப் போல அகமகிழ்ந்து கூட உரையாட வரும் ஒருத்தரின் கதைநையாண்டி நன்றாக வந்திருக்கிறது. இவர கதைகளின் ஒட்டுமொத்த அடையாளமே இந்தவகையான ‘கிராமத்து நையாண்டிமேள’ எழுத்து எனலாம்.

கிராமத்துத் திண்ணைக் கதைசொல்லியின் குரல் இவரது எழுத்தின் அடிநாதமாய்க் கிட்டுகிறது. அதில் வாழ்க்கையே தன்னளவில் சுவாரஸ்யமானதாய் அவர் காட்ட முயல்கிறார். அல்லது அப்படியான நம்பிக்கையுடன் அவர் முன்வைக்கிறார். சமூக ஒழுங்குகள் தனி மனித ஒழுக்கங்கள், எல்லாமே அவர் மனித இயல்புமனத்தில் இருந்து விலகியவையாகவே கைக்கொள்கிறார். சிகெரெட் புகைப்பதை, மது அருந்துவதை – அப்பா பாத்திரங்கள் மூலம், அத்தனை அனுபவித்துச் சொல்கிறார். வைப்பாட்டி வைத்துக்கொள்வது ஆண்பிள்ளைக்கு கௌரவம் என அந்த அப்பா பெண்டாட்டியிடமே மீசை முறுக்குகிறார். இதில் எழுதிச்செல்லும் ஆசிரியரிடமும் தயக்கம் எதுவும் தென்படவில்லை. ராஜ்ஜா எப்படி ஆசாமி, என்பது இந்தக் கதைகளில் தெரியவே இல்லை!

கல்லூரிப் பேராசிரியர் இவர் என்கிற அளவில் இந்தப் பாங்கு எழுத்து தனி கவனம் பெறுகிறதாக நினைக்க வேண்டியிருக்கிறது. மாணவனுக்கு ஒரு ஆசிரியனாக இவர் ஒழுக்கத்தை போதிககவும், கடைப்பிடிக்கவும் வேண்டியதாக இந்த சமூகம் சொல்கிறது. அ, அப்படியெல்லாம் பிரமைகள் வைத்துக்கொள்ள வேண்டாம் என அவர் நினைக்கலாம்…

பிரமைகள், கனவுகள், லட்சிய முறுக்க விரைப்புகள் அற்ற எழுத்து என்பதும் ஆச்சர்யம்தான். வாழ்க்கையை அதன் ஆழத்தில் தரிசிக்க இவர் கதைகள் இட்டுச் செல்லவில்லை என்று சொல்லலாமா, என்றால் வாழ்க்கை சுவாரஸ்யமான ஒரு ஆற்றுப் பயணம், அவ்வளவே, என்பது இவரது கருதுகோளாக இருக்கிறது, என்றுதான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அதுதான் ராஜ்ஜாவின் நியாயம் என்று படுகிறது.

குடியின், புகைப்பழக்கத்தின் சரளமான வர்ணனைகள் வந்தாலும், அவை வாழ்க்கையில் இருந்து விலகிய துக்கத்திலோ, சோகத்திலோ விளைவன அல்ல. பேய் பயம் மறக்க சாராயங் குடித்த ஒரு கதை வருகிறது. அதுவும் விளையாட்டான கதைதான். ஆக இவர் பாத்திரங்கள் ஒரு வெதும்பலில் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகவில்லை, என்பது குறிப்பிடத் தக்கது. இன்னுஞ் சொல்லப் போனால், வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்து குடித்து கூத்தடிப்பவர்களே அதிகம், எங்க ஊர் மக்கள் குடிப்பார்கள் இப்படி அமர்க்களப் படுவதோ, ஆர்ப்பாட்டம் செய்வதோ கிடையாது என்றே குடை கதையில் குறிப்பிட்டு விடுகிறார்.

OLYMPUS DIGITAL CAMERA

பேராசிரியரின் நற்சான்றிதழ்! திஸ் இஸ் டு சர்ட்டிஃபை தெட் …

புத்தகத்தில் ஒரு இடம் ரொம்பக் கவர்ந்தது என்னை. வீட்டில் குருவி, மைனா, கிளி என வளர்ப்பவர் ஒருவர். அவருக்கு நாய், பூனை வளர்க்கப் பிரியம் கிடையாது. இந்தப் பறவைகளை அவை வேட்டையாடி விடுகின்றன, அதனால் பிடிக்கவில்லை என்கிறார் ராஜ்ஜா.

ராஜ்ஜா நினைத்தால் இப்படி மனிதக் கூறுகளை அடையாளங் காட்ட, எட்டித்தொ£ட முடியும். குடை போல வடிவம் சிறந்த சிறுகதைகளையும் தர முடியும். வாழ்த்துக்கள்.

Series Navigationசீதாயணம் [முழு நாடகம்] [5] படக்கதையுடன்கடைசிப் பக்கம்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *