கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 11 காண்டவ வனம்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்

 

மகாபாரதத்தில் நாம் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரை ஹஸ்த்தினாபுரத்தின் அருகில் காண்டவம் என்ற பிரதேசத்தின் எல்லையில் இருந்த பெரிய காட்டின் அருகில் பாண்டவர்களுடன் சந்திக்கிறோம்.

காண்டவ வனம் எரிக்கப் படும் கதைகளை நாம் கேட்டால் அவற்றில் பாதி வெறும் கற்பனை என்பது தெளிவாகும்.உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம். சுவேதகி என்றொரு அரசன் இருந்தான். அவன் யாகங்கள் புரிவதற்கு மிகவும் விருப்பம் கொண்டவன். ஒரு முறை அவனது யாக குண்டத்தில் எவ்வளவு முயற்சி எடுத்தும் அக்னி வளராமல் தளர்ந்தது. பிரம்மாவிடம் அவன் முறையிட பிரம்மா அக்கினியிடம் காண்டவ வனத்தை விழுங்கி அதன் தளர்ச்சியை போக்கிக் கொள்ள சொல்லுகிறார்.

அக்கனியும் வனத்தின் விளிம்பிலிருந்து தன் கபளீகரத்தை ஆரம்பிக்கிறான். ஆனால் வனத்தின் பூர்வ குடிகள் அக்னி படர ஆரம்பித்ததும் நீர் ஊற்றி அணைத்து விடுகின்றனர். மீண்டும் அக்னி பீடிக்க தொடங்க , மீண்டும் பூர்வ குடிகள் அணைப்பதுமாக இது தொடர்கிறது. நொந்து போன அக்னிபகவான் ஒரு அந்தண வடிவம் எடுத்து கிருஷ்ணார்ஜுனர் முன்பு போய் நிற்கிறார்.  தனக்காக அவர்கள் இருவரையும் காண்டவ வனத்தை அழித்துக் கொடுக்கும்படி கேட்கிறார். அந்த நண்பர்கள் இருவரும் தங்கள் வில்லை ஆயுதமாக தாங்கி கண்டவ வனம் சென்று அதனை எரிக்கின்றனர். இந்திரன் உடனே மழையை பொழியச் செய்து அவர்கள் முற்சியை தடுக்கிறான். மற்ற தேவர்களும் இந்திரன் பக்கம் சேர்ந்து கிருஷ்ணார்ஜுனர்களை எதிர்க்கின்றனர். அப்பொழுது ஒரு அசரீரி எழுகிறது. அதாவது ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் பன்னெடுங்காலம் முன்பு இரண்டு ரிஷிகளாக இந்த பூமியில் வலம் வந்தவர்கள் எனவே அவர்களுடன் போட்டி வேண்டாம் என்கிறது அந்த அசரீரி.

ஒரு கதை சொல்லிக்கு அசரீரியைப் போல கை கொடுக்கும் உத்தி வேறு இருக்க வாய்ப்பில்லை. யார் கூறினார்கள் என்பாதை தவிர்த்து எளிதாக ஒரு செய்தியை கூறிவிட முடிகிறது. இந்த இடத்திலும் தேவர்கள் அசரீரியை கேட்ட பிறகு போரிடாமல் விலக  ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் அந்த வனத்தை எரிக்கின்றனர். தன் தளர்ச்சியிலிருந்து மீண்ட அக்னியும் வளர்ந்து ஸ்ரீ கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் புகழ்ந்து பாட தொடங்குகிறார். அதே போல மற்ற தேவர்களும் அவர்கள் இருவரையும் போற்றுகின்றனர்.

மேற் சொன்ன கதையில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மை என்னவென்றால் பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதியில் பல்வேறு குடியினரும் பலவகை விலங்கினங்களும் வசித்து வந்தன. ராஜ்ஜிய விரிவாக்கம் காரணமாக ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனரும் அந்த வனத்தை எரித்து வெற்றிடமாக்கி தங்கள் ராஜ்யத்துடன் இணைத்துக் கொள்கின்றனர் என்பதுதான். தன் தேவைக்கு நிலம் தேவைப் படும்பொழுது காட்டை அழிப்பது என்பது மனித இயல்பு. வங்காளத்தில் உள்ள சுந்தர வனக் காடுகள் நாள் தோறும் இவ்வாறுதான் எரிக்கப் பட்டு வருகின்றன. இதில் பராக்கிரமும் இல்லை அக்கிரமும் இல்லை.

இவ்வளவு விஸ்தாரமாக காண்டவ வன எரிப்பைப் பற்றி கூறுவதற்குக் காரணங்கள் உள்ளன. ,மேலே உள்ள கதையில் புனைவு என்பது மிகவும் தரம் தாழ்ந்திருப்பதற்கு இந்த இடைசெருகல் மிகவும் மட்டமான ரசனை உள்ள கவியினால் இடை செருகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இதன் மையப் பகுதி அதன் நிஜத்தை இழக்காமல் இருப்பதன் காரணம் மூல நூலிலும் , நூல் அறிமுகப் படலத்திலும் இந்த நிகழ்ச்சி விவரிக்கப் பட்டுள்ளதே ஆகும். காண்டவ வனம் எரிக்கப் பட்டதும் மகாபாரதம் நேரே சபா பர்வத்திற்குள் நுழைந்து விடுகிறது. பதினெட்டு பர்வங்களில் ஒன்றான இந்த சபா பர்வம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஒரு அழகிய சபா மண்டபத்தை எழுப்புவதும் பின்னர் அதில் ராஜ சூய யாகத்தை நடத்துவதும் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளாகும்.

அப்படி ஒரு அற்புதமான மண்டபத்தை பாண்டவர்கள் மயன் என்ற தேவ ஸ்தபதி மூலம் எழுப்பினார்கள். மயன் தன்னை மயதனவான் என்றே குறிப்பிடுகிறான். அவன் காண்டவ வனத்தில் வசித்து வந்தவன். ஸ்ரீ  கிருஷ்ணரும் அர்ஜுனரும் அந்த வனத்தை எரிக்க தொடங்கியபொழுது அவர்கள் இருவராலும் கொல்லாமல் விடப் படுகிறான். அவன் அற்புத திறமை படைத்த ஒரு கட்டிடக் கலைஞன். தனவான் என்று அவன் பெயருக்குப் பின்னால் உள்ள பட்டம் அவனை ஒரு ஆரியனல்லாதவன் என்பதைக் கூறுகிறது.

கதை போக்கின்படி தன்னை நெருப்பில் மாய்த்து விடாமல் காப்பாற்றிய அர்ஜுனனுக்கு நன்றிக் கடனாக உதவுவதற்கு மயன் முன் வருகிறான். மயனின் நல்லாதரவைத் தவிர தனக்கு வேறெதுவும் வேண்டாம் என்று அர்ஜுனன் கூறி விடுகிறான். ஆனால் மயன் பிடிவாதமாக பிரதி உபகாரம் செய்வதில் உறுதியாக இருக்கவே பார்த்திபன், “ ஓ! நன்றி மறவாதவனே! உன் உயிரைக் காப்பாற்றியதற்கு நீ எனக்கு பிரதி உபகாரம் செய்ய நினைக்கிறாய். ஆனால் அப்படி ஒரு உதவியை பெற்றுக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை.” என்று கூறுகிறான். அப்படி ஒரே சேவையை ஏற்றுக் கொண்டால்தான் மயன் மகிழ்வுறுவான் என்பதால் “ இருந்தாலும் உன்னை ஏமாற்றமடைய செய்ய மாட்டேன்.எனக்கு செய்ய வேண்டிய பிரதி உபகாரத்தை நீ ஸ்ரீ கிருஷ்ணருக்கு செய். அவருக்கு செய்வது எனக்கு செய்வதாகும்.” என்கிறான்.

ஸ்ரீ கிருஷ்ணரும் அவன் உதவியை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து விடுகிறார். வேண்டுமானால் யுதிஷ்டிரருக்கு வேண்டிய உதவியை செய்யப் பணிக்கிறார். மயன் ஒரு தேர்ந்த கட்டிடக் கலை விற்பன்னன் என்பதால்  பெரிய அழகிய மாளிகை ஒன்றினையும் அதில் ஒரு அதியற்புத மண்டபத்தையும் படைக்கிறான்.

இப்பொழுது இந்த கோரிக்கை தனக்காக இல்லாமல் யுதிஷ்டிரருக்காக என்பது போல தோன்றினாலும் அது ஸ்ரீ கிருஷ்ணரின் தனிப் பட்ட ஆசைகளையும் நோக்கங்களையும் பூர்த்தி செய்வதற்கே ஆகும். அந்த கால கட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வாழ்வில் இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று தர்ம உபதேசம் இன்னொன்று தர்ம பரிபாலனம். யுதிஷ்டிரருக்கு ஒரு சபா மண்டபத்தை கட்டித் தரச் சொல்வதன் மூலம் தர்மத்தின் அடிப்படையில் ஒரு பேரரசை நிறுவதற்கு அவர் செய்திருந்த தீர்மானத்தை கோடிட்டு காட்டுவதாகவே உள்ளது.

முந்தைய அத்தியாயத்தில் அதாவது சுபத்ராவின் ஹரணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் என்றுமே ஒரு  சமூக சீர்திருத்தவாதியாக. செயல்பட்டதில்லை என்று அடித்துக் கூறியிருந்தேன். அவருடைய நிர்மல குணங்களை படிப்படியாக ஆராய்ந்து செல்லும்பொழுது அவருடைய நோக்கம் சமூக சீர்திருத்தம் என்றில்லாமல் ஒரு நீதி நேர்மையுடன் கூடிய அரசு ஒன்றினை நிறுவுவதே ஆகும் என்பது தெளிவாகிறது. ஸ்ரீ கிருஷ்ணரைப் பொறுத்த வரையில் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு ஒரு பெரிய விருட்சத்தின் ஒரே ஒரு கிளையை காப்பாற்றுவதற்கும்( சீர்திருத்தம் என்ற பெயரில் ) , மொத்த மரத்தையும் முழுவதும் பராமரிப்பதற்கும் ( தர்மபரிபாலனம் மூலம் ) இடையில் இருக்கும் வேறுபாடாகும்.

கிருஷ்ணன் என்கிற மனிதன்.

ஸ்ரீ கிருஷ்ணர் பற்றிய இந்த ஆய்வில்அவருடைய மனிதத் தன்மைகளை மட்டும் கூறுகிறேன். ஆனால் ஒரு அவதார புருஷனின் குணங்களாக வருணிக்கப்படும் குணங்கள் எல்லாமே பட்டை தீட்டப் பெற்ற அழகான மனித குணங்களே ஆகும். இதற்காக அவர் அவதார புருஷனாக பூமிக்கு வந்தவர் என்ற வாதத்தை நான் மறுக்கவில்லை. அப்படி ஒரு அவதாரம் நிகழ்ந்தது என்று கொண்டாலும் அவர் ஒரு மனிதனாக எது முடியுமோ அதை மட்டும் செய்பவராகவே இருந்தார். ஓர் அதிசயப் பிறவியாக அவர் தன்னைக் காட்டிக் கொண்டதே இல்லை. ஏன் என்றால் மனித அவதாரம் எடுக்கும் கடவுள் மனிதனாக இருந்தால் மட்டுமே முடியும் என்பதால்தான்.

பாஸ்டனில் உள்ள ட்ரினிட்டி தேவாலயத்தில் 1885ம் வருடம் மார்ச் மாதம் 25ம் நாள் Dr.ப்ரூக்ளின் ஆற்றிய பேருரையிலிருந்து ஒரு பகுதியை பார்ப்போம்.

“ ஏசு பிரான் ஒரு மானுடனைப் போலவே இந்த உலகில் வந்துதித்தார் என்பதை மறந்து போகின்றோம். வேறு சிலரோ இன்னும் மேலே போய் அவர் இந்த மானிடருக்கு ஒரு உதாரண புருஷனாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற அவசியமே இல்லை என்கின்றனர். அவருடைய தெய்வத் தன்மையானது அவரது மானுட இயல்பை அழித்து விடும் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அவர் நமது இயல்பை ஏற்றுக் கொண்டவர். தன் ஒத்த மனிதர்களைப் போலவே கொடுமைகளைக் கண்டு பொங்கி எழுந்து தட்டி கேட்கும் சராசரி மானுடனாகவே வாழ்ந்தார். அவரது மனிதாபிமானத்தின் அறமானது சமூகத்தின் அனைத்து தேவைகளினாலும் அழுத்தப் பட்டது. இருப்பினும் அது இயல்பு மாறாமல் இருந்தது. அது அப்படிப்பட்ட ஒரு மனிதாபிமானமாகும் .ஒரு சாதாரண மனிதனின் எல்லைக்குள் நின்று கொண்டு தன்னை முழுவதும் வெளிப் படுத்திய மனிதாபிமானம். அவரை நாம் உண்மையுடன் பின் தொடர்ந்தால் நாம் புனிதராவோம்.ஏன் எனில் ஏசுபிரான் ஒரு புனிதர்.”

Dr. ப்ரூக்ளின் ஏசுபிரானுக்குக் கூறியதைத்தான் நான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் கூற விரும்புகிறேன். நாம் அவரை தெய்வப் பிறவி என்றே கூறினாலும் தன்னுடைய தெய்வத் தன்மையை வெளிப்படுத்துவது ஒன்றே அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடைய அமானுஷ்ய தன்மை வெளிப்படும் இடங்கள் மூல நூலில் உள்ளதா அல்லது பிற்சேர்கையா என்று பிறகு பார்ப்போம். இந்த தருமத்தில் ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூறுவேன். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஒரு கடவுள் என்ற பதாகையை எந்த காலத்திலும் உயரத் தூக்கிப் பிடித்ததில்லை.அவர் தெளிவாக குறிப்பிடுகிறார். “ ஒரு மனிதனாக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செவ்வனே செய்வேன். என் இறைசக்தி மூலம்  நான் எதையும் செய்ய மாட்டேன்.”

முன்காலத்தில் ஒரு மனிதன் க்ருஹஸ்தனாக இருந்து என்னவிதமான சம்ஸ்காரங்கள் புரிய வேண்டுமோ அத்தனை கருமங்களையும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆற்றுகின்றார். தான் ஒரு தெய்வப் பிறவி என்பதை ஸ்தாபிக்க நினைத்திருந்தால் அவர் செயல்கள் எல்லாமே வேறு விதமாக அமைந்திருக்கும். காண்டவ வனம் முழுவதும் எரிக்கப் பட்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் பானடவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு துவாரகை. நோக்கி சென்று விடுகிறார். இந்த கால கட்டத்தில் அவர் இல்லறதர்மத்தைப் பேணும் விதமாக பல கர்மங்களை ஆற்றுகிறார். ஒரு மானுடனாக அமானுஷ்ய சக்தி எதுவுமின்றி சடங்குகள் பல புரிகிறார்  .”  விடை பெறுவது என்று முடிவானதும் ஸ்ரீ கிருஷ்ணர் புதிய பட்டாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டார்…… தெய்வங்களையும் அந்தணர்களையும் வணங்கினார்……….. தன் மாளிகையை அடைந்ததும் வயது முதிர்ந்த தன் தந்தை வசுதேவரையும் தாய் தேவகியையும் வணங்கினார்…….பின்னர் அவர்களிடமிருந்து விடை பெற்று கொண்டு ருக்மிணியின் மாளிகைக்குள் பிரவேசித்தார்……..” என்கிறது மகாபாரதம்.

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //ராஜ்ஜிய விரிவாக்கம் காரணமாக ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனரும் அந்த வனத்தை எரித்து வெற்றிடமாக்கி தங்கள் ராஜ்யத்துடன் இணைத்துக் கொள்கின்றனர் என்பதுதான். தன் தேவைக்கு நிலம் தேவைப் படும்பொழுது காட்டை அழிப்பது என்பது மனித இயல்பு. வங்காளத்தில் உள்ள சுந்தர வனக் காடுகள் நாள் தோறும் இவ்வாறுதான் எரிக்கப் பட்டு வருகின்றன. இதில் பராக்கிரமும் இல்லை அக்கிரமும் இல்லை.//

    ராஜ்ய விரிவாக்கத்திற்காக அன்றே வனத்தை எரித்ததுபோல் அந்நாளைய ரோமாபுரி,மற்றும் சீனப்பேரரசுகள் காடுகளை அழித்தும்,எரித்ததும் காரணமாக அன்றே புவி வெப்பமடைவதற்க்கான(Global Warming) மீதேன் வாயு மிகையாக இருந்ததாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
    நெதர்லாந்து பல்கலைகழக ஆய்வாளர் (Nederland Utretcht university) சிலியா சபார்ட்,கிரீன்லாந்தில் பனிக்கட்டியை துளைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் படிந்த பனிக்கட்டி மாதிரிகளை ஆய்வு செய்தார்.
    வெப்ப உயர்வுக்கு காரணமான மீத்தேன் வாயு கி.மு.100 க்கு முன்பே அதிகளவில் இருப்பது தெரியவந்தது.இதன் காரணம் அன்று ஆண்ட பெரும் ரோமானிய சாம்ராஜ்யமும்,சீனாவை ஆண்ட ஹன் சாம்ராஜ்யமும் காடுகளை தீயிட்டு அழித்து வேளாண்மையும் மற்றும் நகரை விரிவுபடுத்தினர்.மேலும் தங்கள் ஆயுதசாலைகளுக்கு மரங்களை வெட்டி எரித்து அதன் வெப்பத்தில் வாள்களை தயார் செய்தனர். ஆக புவி வெப்பஉயர்வு அன்றே ஆரம்பித்து விட்டது.

    The researchers found that methane production was high around 100 B.C., during the heyday of the Roman civilization, and waned around A.D. 200 as the empire faltered. The methane was released when Romans burned down forest to clear land for crops and expanding settlements, Sapart said.
    This time period also coincided with the peak of China’s Han dynasty, which burned large amounts of wood to forge swords. Once the dynasty collapsed around A.D. 200, atmospheric methane levels dropped.
    -The Nature Journal 3, october,2013.
    http://www.livescience.com/23678-methane-emissions-roman-times.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *