ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்

This entry is part 6 of 26 in the series 8 டிசம்பர் 2013

அத்தியாயம் 12

ஜராசந்த வதம்

jarasanthavathamகானடவப்ரஸ்தத்தில் யுதிர்ஷ்டிரரின் சபை கூடியது. அந்த சபையில் குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் மற்றும் மகரிஷிகளான தௌமியரும் த்வைபாயனரும் கூட இருந்தனர். அவர்களுடைய ஒருமனதான தீர்மானம் என்னவென்றால் தன்னை சக்கரவர்தியாக பிரகடனப் படுத்திக் கொள்ள யுதிஷ்டிரர் ராஜசூய யாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.   ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி இன்றி மிகுந்த பொருட் செலவில் அத்துனை பெரிய யாகத்தை புரிய யுதிஷ்டிரர் தயங்கினார். ஸ்ரீ கிருஷ்ணரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். ஸ்ரீ கிருஷ்ணரும் உடனே தருமரைப் பார்க்க வருகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணரிடம் யுதிஷ்டிரர் “ எனக்கு ராஜ சூய யாகம் புரிய வேண்டும் என்ற அவா உள்ளது. என் உற்றாரும் என் நல விரும்பிகளும் அந்த யாகத்தை நான் செய்ய வேண்டும் என்று பிரியப் படுகிறார்கள். இந்த விஷயத்தில் தங்களுடைய மேலான கருத்தை அறிய விரும்புகிறேன் கிருஷ்ணா “

யுதிஷ்டிரருக்குத் தெரியும். ஸ்ரீ கிருஷ்ணர் மற்றவர் போல முகத்துதி செய்ய மாட்டார் .எது சரி எது தவறு என்பது அவருக்கு தெரியும். ஸ்ரீ கிருஷ்ணர் மிக நாசூக்காக தருமனுக்கு ஒரு ராஜசூய யாகம் செய்யும் அளவிற்கு தகுதி இல்லை எனவும் அதை ஒரு சக்கரவர்த்தியால்தான் செய்ய முடியும் என்று கூறுகிறார். காரணம் என்னவென்றால் அந்த கால கட்டத்தில் ஜராசந்தன் மொத்த பாரத தேசத்தையும் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வரும் தகுதியுடன் ஆண்டு வந்தான்.. எனவே அவன்தான் உண்மையான சக்கரவர்த்தி யுதிஷ்டிரர் இல்லை என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறினார்.

ஜராசந்தன் ஒரு குயுக்தியான கொடுங்கோலன். அவனை விட வலுவிழந்த பல சிற்றரசர்களை வென்று சிறையில் அடைத்து மொத்தமாக பரமசிவனுக்கு நரபலி கொடுக்கத் திட்டமிட்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட எண்ணிகை நரபலி இட வேண்டும் என்பதால் மேலும் பல அரசர்களை வென்று சிறையில் அடைக்க திட்டமிட்டிருந்தான்.

“ பாரத வம்சத்தின் நன்மைக்காக யுதிஷ்டிரனே நீ ஜராசந்தனுடன் போரிட்டு அவனை வெல்ல வேண்டும்…….இவன் ஒருவன்தான் அப்பாவி மன்னர்கள் மேல் இப்படி ஒரு கொடுஞ்செயலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறான்……. அவனை வென்றால்தான் உன்னால் அடுத்த சக்கரவர்த்தி என்ற பெயர் எடுக்க முடியும்.”

ஸ்ரீ கிருஷ்ணரை சுயநலவாதி என்றும் சூழ்ச்சிக்காரகள் என்றும் இகழ்பவர்கள்  “ நல்லது! தன் சுய தேவைகளுக்காக செயல்படும் ஒரு சுயநலக்காரனின் தனிப்பட்ட பரிந்துரைதான் இது. தனது பழைய விரோதியான ஜராசந்தனை ஒழித்துக் கட்ட ஸ்ரீ கிருஷ்ணர் தயாரித்த மிகப் பெரிய திட்டம் இது “ என்றுதான் கூறுவார்கள்.

ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த காலகட்டத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்த அந்த மன்னர்களை ஜராசந்தனின் பிடியிலிருந்து விடுவித்து அந்த தேசத்தையும் அதன் மக்களையும் ஜராசந்தனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமன்றி வேறு நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை என்று நம்மால் அடித்து வாதாட முடியும். ஏன் என்றால் தன் தேசத்து குடி மக்களை ஜராசந்தனிடமிருந்து காப்பாற்றி ரைவத்ரா மலையில் புதிதாக கட்டப்பட்ட கோட்டைக்குள் முன்னமே குடியேற்றி விட்டார்.

எது எப்படியானாலும் சிலர் இன்னமும் ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனை தந்திரமாக கொன்றது தனது சுயநலத்திற்காக என்று  வாதிட்டாலும் ஒரு கொடுங்கோலனின் வீழ்ச்சியால் பல்லாயிரம் மக்களுக்கு நன்மை விளைந்தது என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தனது கீர்த்திமைக்காக ஜராசந்தனின் வதம் அமைந்து விடுமோ என்று கருதி அவனை வீழ்த்தும் திட்டத்தை அவர் கை விட்டிருப்பாரேயானால் அப்பொழுது அவரை கோழை என்று குறிப்பிடுவதில் தவறில்லை.

ஜராசந்தனை தன்னால் எதிர்க்க முடியாது என்று கருதிய தருமன் அதனை பீமனிடமும் அர்ஜுனனிடமும் விட்டு விடுகிறான்.

ஆனால் அவனுடைய பெருஞ்சேனையை எதிர்ப்பது நடவாத செயல். ஜராசந்தனை தந்திரமாக மல்யுத்தம் செய்ய அழைக்கின்றனர். அவனுக்கு எதிராக மல்யுத்தம் செய்ய ஸ்ரீ கிருஷ்ணரோ அர்ஜுனனோ பீமனோ எதிர்த்து நின்றாலும் அவர்களை வென்று விடும் அளவிற்கு ஜராசந்தன் ஒரு சிறந்த மல்யுத்த வீரன் என்று தெரிந்திருந்தும் ஜராசந்தனை தந்திரமாக மல்யுத்தம் செய்ய அழைக்கின்றனர். அந்த காலத்தில் சத்திரிய தர்மத்தின் படி ஒரு சத்திரியனை மற்றொரு சத்திரியன் மல்யுத்தம் செய்ய அறைகூவினால் அந்த சத்திரியன் மறுப்பெதுவும் சொல்லாமல் மல்யுத்தம் செய்ய வர வேண்டும்.

எனவே ஜராசந்தனை அழிக்கும் எண்ணத்துடன் மூன்று வீர்களும் ஜராசந்தன் இருப்பிடம் நோக்கி பயணித்தனர்.

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும் பீமனும் அர்ஜுனனும் நள்ளிரவில் மாறு வேடத்தில் ஜராசந்தனின் இருப்பிடத்தை அடைந்தனர். அவர்கள் மாறு வேடத்தில் சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என்னுடைய வாதம். ஏன் என்றால் ஜராசந்தனை பார்த்ததுமே ஸ்ரீ கிருஷ்ணர் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். கதையில் சுவை சேர்பதற்காக பிற்கால கவிஞன் எட்டுகட்டி இடைசெருகி இருக்க வேண்டும். எதற்கு சொல்கிறேன் என்றால் அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின்பொழுது அந்த இடம் தன் எதிரியின் இடம் என்றே ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார்.

இந்த இடத்தில் ஜராசந்தன் தனக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் உள்ள பகைமை எதுவென்று கேட்கிறான். தான் தனிப்பட்ட முறையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தீங்கிழைத்ததாக தெரியவில்லையே  என்று கூறுகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் என்றுமே நிதானம் தவறாதவர். எனவே ஜராசந்தன் யாதவர்களுக்குஇழைத்த கொடுமைகளை பட்டியலிட்டு கூறுகிறார். அந்த சமயம்  யுதிஷ்டிரர் புரிய இருக்கும் ராஜ சூய யாகம் காரணமாக தான் யுதிஷ்டிரர் சார்பில் பேச வந்துள்ளோம் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் நன்கு அறிவார்.. யுதிஷ்டிரரும் அவனைச் சார்ந்தவர்களும் தர்மம் தவறாதவர்கள் என்றும் , ஒரு நேர்மையான ஆட்சியை அமைக்க ஜராசந்தன் சிறைப் பிடித்துள்ள மன்னர்களை விடுவிக்க வந்திருப்பதாகவும் கூறுகின்றார். தானும் அவர்களை முன்னிட்டு வந்திருப்பது அப்பாவி மன்னர்களை மீட்க என்கிறார். இந்த முயற்சியில் தேவையானால் எவன் இவர்களை சிறை பிடித்து வைத்துள்ளானோ அவனை கொல்லவும் தயங்க மாட்டேன் என்றும் கூறுகிறார்.

இதிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனை கொல்லவும் ஆயத்தமாக இருக்கிறார் என்பது புலனாகிறது. இதற்கு பிறகு அவர் சிசுபாலனை வேறு வதம் செய்ய இருக்கிறார். ஏற்கனவே கம்சவதம் செய்து விட்டு வந்திருக்கிறார். ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். இத்தனை கொலைகளை செய்யும் ஸ்ரீ கிருஷ்ணரை எவ்வாறு ஒரு மனிதனாக போற்ற முடியும்? எதிரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் மனதை மாற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் முயலவில்லை?

இதற்கு என்னிடம் இரண்டு விடைகள் உள்ளன.

முதலில் ஸ்ரீ கிருஷ்ணர் மக்களை மனிதாபிமானம் மிகுந்த நற்செயல்களில் ஈடுபடுத்த தன்னால் ஆன முயற்சிகளை செய்தார். உதாரணமாக அவர் துரியோதனனையும் கர்ணனையும் பாண்டவர்களின் எதிரிகளாகாமல் இருப்பதற்கு எடுத்து  கொண்ட முயற்சிகள் ஏராளம். இந்த முயற்சிகளை எடுத்துக் கொள்ளும் சமயங்களில் தன்னிடம் எந்த அமானுஷ்ய சக்தியும் கிடையாது என்று உறுதியாக கூறுகிறார். நல்ல விஷயத்திற்கு தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வதாக கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரால் மனித எத்தனத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ய முடியாது என்று கூறியதன் காரணம் அவர் ஒரு சாதாரண மானுடப் பிறவி. ஜராசந்தனையோ அல்லது மற்ற பகைவர்களையோ அவர்  சூமந்திரகாளி என்று கூறி மாற்ற அவரிடம் மந்திரம் மாயம் எதுவும் இருக்கவில்லை.

இரண்டாவதாக நான் ஒப்பு கொள்ள வேண்டிய விஷயம் மக்களை தீமையிலிருந்து இரட்சித்து நல்வழியில் செலுத்த அவர் எந்த பிரசாரமும் மேற்கொள்ளவில்லை. ஏசுபிரானும், புத்த பெருமானும் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை பிரசாரம் செய்வதிலேயே கழித்து விட்டனர். தங்களால் கண்டறியப்பட்ட நற்செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக அந்த இருவரும் கொண்டிருந்தனர். இதற்கு மாறாக ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஒரு சீரான சமன்படுத்தப் பட்ட மனிதனாக இருக்கவே பிரியப் பட்டார்.

ஏசுபிரானும் புத்தரும் மேன்மையான மனிதப் பிறவிகள். மனித குலத்தை உய்விக்க பெரு முயற்சி எடுத்தவர்கள். கீழான மானுட வாழ்விலிருந்து மேன்மையான வாழ்வை பெற்றனர். இதன் மூலம் இந்த சமூகம் பாவங்களிலிருந்து விடுபட வழிகாட்டிகளாக விளங்கினார்கள்.

ஆனால் இதற்கு நேர்மாறாகஸ்ரீ கிருஷ்ணர் பன்முகங்களுடனும் அதே சமயம் மாறாத ஒத்த சிந்தனையுடனும் வாழ்ந்த புத்திகூர்மை மிகுந்த ஒரு சராசரி மானுடப் பிறவியாகவே திகழ்ந்தார். அவர் படு யதார்த்தவாதி. இந்த மண்ணின் மைந்தர். கடைமை நிர்பந்தித்த பொழுது அவர் துஷ்டர்களை அழித்து தர்மத்தை பரிபாலித்தவர்.

இது வரையில் கூறப் பட்ட பாரத கதையில் எந்த இடத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சித்தரிக்கப் படவில்லை. அதே போல் இது வரையில் ஸ்ரீ கிருஷ்ணர் தனது தெய்வத் தன்மையை பயன்படுத்தியதாக எங்கும் குறிப்பிடப் படவில்லை. ஆனால் ஜராசந்த வதத்திற்கு பிறகு சிலர் அவரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றே வணங்குகின்றனர். இந்த இடத்திற்குப் பிறகு ஸ்ரீ கிருஷ்ணரும் சில தெய்வச் செயல்களை புரிகிறார்.

என்னுடைய வாசகர்களில் சிலர் ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் இதுவரையில் தெய்வ தன்மையை வெளிப்படுத்தவில்லை என்று கேட்கலாம். அதற்கான பதிலையும் அவர்களே இவ்வாறு கூறலாம். ஏன் என்றால் இது வரையில் தன் தெய்வத் தன்மையை வெளிப்படுத்த அவருக்கு தேவை இருக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்கு இது விடையில்லை. ஏன் எனில் மகாபாரதத்தின் இறுதி பகுதிகளில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தெய்வத் தன்மையை அடுத்தடுத்து வெளிப்படுத்திய வண்ணம் இருப்பார். உதாரணத்திற்கு ஜராசந்தவதம் முடிந்ததும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனன் மற்றும் பீமனுடன் ஒரு தேரில் கிளம்பி செல்வார். அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் கருடனை அழைக்க கருடன் பறந்து வந்து தேரின் விதானத்தின் மீது  அமர்கிறார் .இங்கே கருடன் பறந்து வந்து வெறுமனே அமர வேண்டிய அவசியம் இல்லை. இது ஏதோ ஸ்ரீ கிருஷ்ணர் தன் தெய்வத் தன்மையை வெளிப்படுத்த கருடனை அழைப்பது போல உள்ளது. இதில் உள்ள முரண் என்னவென்றால் ஜராசந்தனை கொல்வதற்கு அவருக்கு தெய்வ சக்தி வேண்டியிருக்கவில்லை.. ஆனால் ஒரு தேரினில் செல்லும்பொழுது தெய்வத்தன்மை வேண்டி இருக்கிறது. என்ன ஒரு முரண்.

ஆரம்ப காலங்களில் பரமசிவனின் வரத்தின் காரணமாகவே ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனுடன் துவந்த யுத்தம் புரியவில்லை என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது. ஜராசந்தன் தன சுய நலத்திற்காக பீமனை துவந்த யுத்தத்திற்கு அழைப்பதாக குறிப்பிடுகின்றது.

என்னை போலவே என் வாசகர்களும் மூலக்கதையிலிருந்து பின்னால் வந்த கவிஞர்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த நகாசு வேலைகளின் காரணம் ஸ்ரீ கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்ப வைப்பதற்காக செய்யப் பட்டவை.

மூல நூலில் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மகாவிஷ்ணுவிற்கும் எவ்வித தொடர்பும் குறிப்பிடப் படவில்லை. ஏன் என்றால் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத்திரப் படைப்பு மூலக் கதையில் ஒரு சராசரி மனிதனாகவே காட்டப் படுகிறது. பின்னால் இதை காண நேரிட்ட கிருஷ்ண பக்தர்களுக்கு ஏன் இந்த தகவல் அதாவது ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வப் பிறவி என்ற செய்தி கூறாமல் விடப்பட்டது என்ற வருத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த தகவல் வேறு எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கெல்லாம் தேடி எடுத்து அவற்றுள் தங்களுக்கு தேவையானவற்றை மூல நூலில் சேர்த்திருக்க வேண்டும்.

எனவேதான் ஜராசந்த வதத்திற்குப் பிறகு அவனுடைய பிடியிலிருந்து விடுபட்ட மன்னர்கள் இதுவரை ஒருமுறை கூட மகாவிஷ்ணுவின் பெயராலோ அல்லது அவருடைய ஏனைய பெயர்கள் ஒன்றினாலோ ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்காதவர்கள் அன்று அவரை விஷ்ணு என்ற நாமத்தில் அழைக்கின்றனர். அந்தக் கொடுங்கோலனைத் தன்  கையால் பீமன்தான் கொல்கிறான். சிறைபிடிக்கப்பட்ட மன்னர்களுக்கு அவர்கள் விடுவிக்கப் பட்டதற்கு கிருஷ்ணரின் பங்களிப்பு எவ்வளவு என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் துப்பு துலக்கிய வரையில் மகாபாரதத்தின் மூல ஆசிரியர் மிகை உணர்ச்சி வெளிப்பாட்டுடன் தனது காவியத்தை புனைந்திருக்கிறார். பின்னால் வந்தவர்கள் இந்த மிகை உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிசய நிகழ்ச்சிகளை இணைத்து விட்டனர். அவர்கள் இயல்பிலிருந்து விலகி எவ்வாறு மிகைப்படுத்துதலை கையாண்டனர் என்பதற்கு ஒரு உதாரணம்.

“ கொடுங்கோலனும் பலசாலியுமான ஜராசந்தன் வாழ்ந்து வந்த அந்த மலைத்தொடரானது ஒரு முறை ஒரு தண்டத்தை சுற்றிக் கொண்டது. அந்த தண்டத்தை ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி ஏறிய அந்த தண்டமானது ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த இடத்திற்கு ஒரு யோஜனை துரத்திற்கு முன்பு வந்து நின்றது.”

ஜராசந்த வதம் தொடர்புடைய இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை விவரித்து விட்டு இந்த அத்தியாயத்தை நிறைவு செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

பீமனை எதிர்க்க ஜராசந்தன் ஆயத்தமாகிறான். ஒரு அந்தணனின் மேற்பார்வையில் துவந்த யுத்தத்திற்கு தயாராகிறான். போட்டி விதிகளின் படி தலைக் கவசத்தையும் உடற்கவசத்தையும் களைகிறான். அந்த பிரதேசத்தை சேர்ந்த நான்கு வருணத்தினரும் வயது வித்தியாசமின்றி அந்த துவந்த யுத்தத்தைக் காண கூடுகின்றனர்.யுத்தம் பதினான்கு நாட்கள் தொடர்கின்றது. ஜராசந்தன் உடல் தளர்ந்ததைக் கண்டு ஸ்ரீ கிருஷ்ணர் யுத்தத்தை நிறுத்துமாறு பீமனைக் கேட்டுக் கொள்கிறார். உடல் தளர்ந்த நிலையில் உள்ள எதிரியை தாக்குவது தரம்மில்லை என்று கூறுகிறார். மேலும் பீமன் தன் கைகளை மட்டுமே யுத்தத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

இருப்பினும் அதை செவிமடுக்காத பீமன் ஜராசந்தனை மேலும் தாக்கி கொன்று விடுகிறான். தர்மத்தை பற்றிய சிந்தையும் அதன் வழி நடத்தல் என்கிற அறிவு பீமனுக்கு ஸ்ரீ கிருஷ்ணரை விட சற்று குறைவுதான்.

ஜராசந்தனின் மரணத்திற்கு பின்பு ஸ்ரீ கிருஷ்ணரும் பீமனும் சிறைப் பட்டிருந்த மன்னர்களை விடுவிக்கின்றனர். பிறகு அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களுக்கு தங்கள் தேச எல்லையை விரிவுபடுத்தும் நோக்கம் கிடையாது. தந்தையின் அடாத செயலுக்கு தனயனை தண்டிக்கும் நோக்கம் இல்லாததால் ஜராசந்தனின் மகன் சகாதேவனிடம் ஆட்சி பொறுப்பை விட்டு விட்டு அகல்கின்றனர்.

விடுதலை அடைந்த மன்னர்கள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் கடைமைபட்டவர் ஆகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் யுதிஷ்டிரர் புரியவிருக்கும் ராஜசூய யாகத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறார். ஏன் என்றால் அந்த நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் நோக்கம் ஒரு தர்மம் மிக்க ஆட்சியை நிறுவுவதில் மட்டுமே இருந்தது.

*******************************************************

Series Navigation‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.இருண்ட இதயம்
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *