ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

Duryodhan Arjuna and Krishna

மகாபாரதத்தில் உள்ள உத்தியோக பர்வம் தண்டனைகள் பற்றியும் மன்னிக்கும் மாண்பு குறித்தும் உள்ள உரையாடல்கள் நிறைந்த பகுதியாகும். இதே பர்வத்தில் அதிகாரம் குறித்தும் அதனை முறையாக பயன்படுத்தும் விதம் குறித்தும் கூறப் படுகிறது.

ஒரு சமூகம் அதன் குற்றவாளிகளை இரண்டு விதமாக நடத்துகிறது.ஒன்று குற்றவாளியின் குற்றங்களை மறந்து மன்னிப்பது. மற்றொன்று அவர்களது குற்றங்களுக்கு தண்டனை அளிப்பது. அதற்காக அனைத்துக் குற்றங்களுமே மன்னிக்கப் படுமாயின் மொத்த சமூக அமைப்பும் நிலைகுலைந்து போய் விடும்.மாற்றாக அனைத்துக் குற்றங்களையும் தண்டிக்க என்று கிளம்பினால் மனிதர்கள் விலங்குகள் நிலைக்கு தள்ளப் படுவார்கள். எனவே மன்னிப்பிற்கு தண்டனைக்கும்  நடுவில் ஒரு கோட்டினை வரைவதே சமூகத்தின் முக்கிய பங்காகும். இப்படி ஒரு விவாதத்தை துவங்கி வைப்பவர் ஸ்ரீ கிருஷ்ணர். அப்படி பார்த்தால் உத்தியோக பர்வத்தின் கள நாயகனே ஸ்ரீ கிருஷ்ணர் என்று சொல்லலாம்.

அவருடைய செயல்பாடுகளில் இதுவரையில் அவர் அன்பையும் சில நேரங்களில் தனது அதிகாரத்தையும் பயன் படுத்துவதை பார்த்திருக்கிறோம். ( பொதுவாக இவர் தன்னை சுற்றி உள்ளவர்களை மன்னிக்கவும்  மக்கள் விரோதிகளை தண்டிக்கவும் முற்படுகிறார். ).இது விஷயம்  குறித்துஸ்ரீ கிருஷ்ணரின் எண்ண ஓட்டங்களின் தொகுப்பே உத்தியோக பர்வமாகும்.

இன்றைய நாகரீகம் வளர்ச்சியடைந்த சமூகங்களில் ஒரு குற்றத்தை மன்னிக்கவும் தண்டிக்கவும் சரியான சட்ட திட்டங்கள் உள்ளன.. ஒருவருடைய உடைமைப் பொருள் களவு போனால் அவர் சட்டத்தின் உதவியையும் காவல்துறையின் உதவியையும் நாடுவார்.ஆனால்  அப்படி ஒரு முழுமையான முறையில் சட்டதிட்டங்கள் வளர்ச்சி பெறாத சமூகத்தில் தனி மனித முடிவுகளே சட்டங்களாகின்றன.

வழக்கமாக வலிமை உள்ளவர் கைகளில் அதிகாரம் செய்யும் உரிமையும் நற்பண்பு நிறைந்த எளியவரிடம் மன்னிக்கும் மாண்பினையும் காண்கிறோம். ஆனால் அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த ஒருவர் கருணையுடன் எவ்வாறு நடந்து கொள்ள முடியும்? ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரால்தான் இப்படி ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கூற முடியும்.

பாண்டவர்கள் கள்ளச் சகுனியால் பகடையில் தோற்கடிக்கப் பட்டு தங்கள் ராஜ்ஜியம் முழுவதையும் இழந்து  பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் இருந்த கதை அனைவரும் அறிந்ததுதான். பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு ஒரு வருடம் கூடுதலாக அஞ்ஞாத வாசமும்ட இருந்தனர். அந்த ஒரு வருட அஞ்ஞாத வாசத்தின் பொழுது பாண்டவர்கள் அடையாளம் காணப் படுவார்களேயானால் மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் என்பது நிபந்தனை.

ஆனால் இந்த பதின்மூன்று வருடங்களையும் அவர்கள் முறையாக கழித்து விட்டார்கள் என்றால் இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப் பெற்றாக வேண்டும். நமது இந்த அலசலில் பாண்டவர்கள் இரண்டு நிபந்தனைகளையும் முறையாக நிறைவேற்றினர் என்பது மிகவும் முக்கியம். நியாய தர்மத்தின்படி அவர்கள்  இழந்த பூமியை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் துரியோதனன் அவ்வாறு திரும்பிக் கொடுத்தானா?  இல்லை. அப்படி இருக்கும்பொழுது இழந்த பூமியை மீண்டும் பெறுவதற்கு போர் புரிவதைத் தவிர பாண்டவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.

விராட ராஜனின் அரண்மனையில் ஒரு வருட அஞ்ஞாதவாசத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பாண்டவர்கள் அந்த ஒரு வரடம் கழிந்த பின்னர் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்துகின்றனர். விராடன் அவர்கள் பாண்டவர்கள் என்பவதை அறிந்ததும் பெருமகிழ்ச்சி கொள்கிறான். அந்த மசிழ்ச்சியின் உச்சமாக தன் மகள் உத்தரையை  அர்ஜுனன் மகன் அபிமன்யுவிற்கு மணமுடித்துத தர முன்வருகிறான். இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள தேசங்களில் இருந்தெல்லாம் மன்னர்கள் வருகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணரும் பலதேவரும் கூட வருகின்றனர். முறைப்படி அவர்கள் இருவரும் அபிமன்யுவின் தாய் மாமன்களாவர்.  பாண்டவர்களுடைய மாமனாரான துருபதனும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறான்.

திருமண வைபவத்தில் விராடனின் அரண்மனையில் கூடும் நட்பு மன்னர்கள் பாண்டவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் மீது கௌரவர்களிடம் உரிமை கோர வேண்டும் என்றும் அந்த உரிமை மறுக்கப் பட்டால் மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை குறித்தும் ஆலோசிக்கின்றனர்.  இந்த ஆலோசனையின் முடிவு அவர்களை மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொண்டு நிறுத்துகின்றது. ஸ்ரீ கிருஷ்ணரின் தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.  அனைவரது நலம் கருதி அப்போது எழுந்துள்ள நிலை குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் பேசத் துவங்குகிறார்.

பாண்டவர்களுக்கு சாதகமாகவும் கௌரவர்களுக்கும் இழப்பு ஏற்படாத வண்ணம் தர்மத்தின் வழியில் ஒரு தீர்வினை சிந்திக்குமாறு கூட்டத்தை வேண்டிக் கொள்கிறார். யுதிஷ்டிரன் ஒரு பெரும் சமாதானத்துடன் தங்களுக்குக் கிடைக்கும் பங்கில் பாதியைகே கூட துரியோதனன் கொடுத்தால் போதும்  என்று இறங்கி வருகிறான். ஆனால் அவற்றைக் கேட்டுப் பெற புத்திசாலித்தனமும் சாதூர்யமும் துணிச்சலும் மிக்க ஒருவர் தேவை என்கிறான்.

ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களின் பங்கினை கேட்டுப்பெற மட்டும் கௌரவர்கள் சபைக்குச் செல்லவில்லை. நியாயம் எதுவோ அதற்காக அவர்களிடம் வாதாடுகிறார். ஒருவரின் இழப்போ அல்லது இலாபமோ இங்கே  காரனமில்லை.  இங்கு பிரச்சினை ஒரு நபர் மற்றொரு நபரால் வஞ்சிக்கப்  படும்பொழுது பொதுவான தர்மத்தை நிலை நிறுத்த அவ்வாறு ஏமாற்றுகின்ற நபரை தடுத்து நிறுத்துவதாகும். எந்த கொதிப்பினையும் ஸ்ரீ கிருஷ்ணர் நியாயமான முறையிலேயே அடக்க நினைக்கிறார். போர் தவிர்க்க முடியாமல் போய்விட்ட தருணத்தில் கூட ஸ்ரீ கிருஷணர் ஆயுதம் ஏந்தி போரிட மறுப்பது குறிபிடத்தக்கது.

விராடன் அரண்மனையில் ஸ்ரீ கிருஷணர் பேசி முடித்ததும் பலதேவர் பேசுவதற்கு எழுந்தார். கௌரவர்கள் அழைப்பினை ஏற்று யுதிஷ்டிரன் பகடை சூதில் கலந்து கொண்டது மாபெரும் குற்றம் என்று கடிந்து கொள்கிறார்.

 

ஒரு குடியாட்சியில் பாராளுமன்றம் எவ்வாறு இயங்குமோ விராடனின் சபை  நியாய தர்மங்களுடன் விளங்கியது.அடுத்து சாத்யகி பேச எழுந்திருக்கிறார். சாத்யகி கிருஷ்ண பக்தர். பலமும் துணிச்சலும் மிக்கவர். மகாபாரதத்தில் அவருடைய போர்த் திறமை அர்ஜுனனுக்கும் அபிமன்யுவிற்கும் அடுத்ததாக போற்றப் படுகின்றது. அவர் எந்த ஒரு சமாதானத்திற்கும் ஒப்பு கொள்ள மறுக்கிறார். கௌரவர்கள் பாண்டவர்களுக்கு உரிய பங்கை திருப்பித் தரவில்லை என்றால் அவர்களுடன் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார். தன் பங்கிற்கு துருபதனும் சாத்யகியை வழி மொழிகிறான். அதோடு நில்லாமல் பாண்டவர்களின் நேச மன்னர்களின் உதவியுடன் போருக்கான ஆயத்தங்களையும் படை திரட்டும் வேலையையும் உடனே தொடங்க வேண்டும் என்கிறான். அதே நேரம் கௌரவர்களிடம் தூது பேச ஒரு சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும் என்கிறான்.

அந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியிலும் ஸ்ரீ கிருஷ்ணர் உரையாற்றுகிறார். மீண்டும் அமைதிக்காக குரல் கொடுக்கிறார். எவ்வழியிலும்  தவிர்க்க முடியாமல் போகும்பொழுது போர் அறிவிப்பு வரும்பொழுது தான் அந்த போரினால் நேரிடையாக பங்கேற்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக குறிப்பிடுகிறார் பாண்டவ்ர்களைப் போலவே கௌரவர்களும் தனக்கு நெருக்கமானவர்கள் என்பதால் தான் எந்த அணியிலும் சேரப் போவதில்லை என்கிறார்..துரியோதனன் யுதிஷ்டிரரின் யோசனையை ஏற்க மறுத்து அவர்களுக்கு உரிய பங்கை கொடுக்க மறுகும்பொழுது போர் தவிர்க்க முடியாமல் போகும்; அப்படி தவிர்க்க முடியாத சமயத்தில் வேண்டுமானால் தான் அதில் பங்கு வகிப்பதாக கூறுகிறார். அந்த முடிவு சமாதானத்திற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப் படும்பொழுது இறுதியில் எடுக்கும் முடிவு என்கிறார்.

கிருஷ்ண தூது பயனின்றி போனது போர் உறுதியாகிறது. இரண்டு அணிகளும் போருக்கு ஆயத்தமாகின்றார்கள். இரு அணிகளின் நட்பு மன்னர்களும் தங்களது நண்பர்களை அழைத்துப் படை திரட்ட கிளம்புகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணரை போரில் தங்கள் பக்கம் சேருமாறு கேட்பதற்கு அர்ஜுனன் துவாரகை நோக்கி பயணம் செய்கிறான்.அதே நோக்கத்துடன் துரியோதனனும் துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் அரண்மனைக்குள் பிரவேசிக்கின்றான்.ஒரே நாளில் ஒரே நேரத்தில் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்தை சென்றைடைந்ததாக மகாபாரதம் கூறுகிறது.

அந்த நேரம் ஸ்ரீ கிருஷ்ணர் சயனத்தில் கண்கள் மூடியபடி இருந்தார்.அந்த அறைக்குள் முதலில் நுழைந்த துரியோதனன் மட மடவென்று அவர் தலைமாட்டில் சென்று அமர்கிறான். அர்ஜுனனோ அவர் கால்பக்கம் அமர்ந்து அவர் கண் விழித்தால் வணங்குவதற்கு ஏதுவாக கைகளை தொழுத வண்ணம் இருக்கிறான்.. கண் விழித்ததும் ஸ்ரீ கிருஷ்ணரின் பார்வை முதலில் அர்ஜுனன் மேல் விழுகிறது.” என்ன வேண்டும் பார்த்திபா? “ என்று கேட்கிறார்.

துரியோதனன் நடுவில் குறுக்கிட்டு  முறுவலித்தபடியே  “ யாதவர்களில் சிறந்தவனே!  வர இருக்கும் யுத்தத்தில் உன் உதவியை நாடி வந்துள்ளேன். நாங்கள் எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கமோ அந்தளவிற்கு பாண்டவர்களும் உங்களுக்கு நெருக்கம் என்பதை அறிவேன். இருப்பினும் உன்னுடைய சயன அறையினுள் முதலில் பிரவேசித்தவன் என்ற முறையில் என் வேண்டுகோளை முதலில் செவி சாய்க்க வேண்டுகிறேன்.” என்கிறான்

ஸ்ரீ கிருஷ்ணர் “ ஓ! துணிச்சல் மிக்க துரியோதனனே! எனக்கும் தெரியும் இந்த அறைக்குள் நீதான் முதலில் பிரவேசித்தாய். ஆனால் கால்மாட்டில் இருந்த அர்ஜுனன் மீது என் பார்வை முதலில் பட்டு விட்டது. உங்கள் இருவருக்கும் உதவ சித்தமாக இருக்கிறேன். இருப்பினும் இளையோருக்கு முன்னுரிமை என்பது உலக வழக்கமல்லவா? எனவே அர்ஜுனனுக்கு என்ன தேவை என்று கேட்டு விட்டு உன்னிடம் வருகிறேன்.” என்கிறார்.

அர்ஜுனனைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் “ குந்தி மைந்தா! உன் வேண்டுதலை ஏற்றுக் கொள்கிறேன்.என்னிடம் பல கோடி யாதவர்களைக் கொண்ட பெரிய சேனை உள்ளது. என்னைப் போலவே அந்த சேனையில் உள்ளவர்கள் திறமையாகப் போரிட வல்லவர்கள். அந்தப் படை வேண்டுமா? அல்லது அந்தப் படை இன்றி யுத்த ஆலோசனை வழங்க நான் மட்டும் போதுமா? உன் விருப்பம் எதுவோ அதைகே கேள்” என்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் போரில் ஆயுதம் ஏந்தப் போவதில்லை  என்பது தெரிந்திருந்தும் அவருடைய மிக பெரிய நாராயண சேனையை வேண்டாது அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரையே தன் துணையாகக் கோருகிறான்.ஆனால் துரியோதனனுக்கோ ஸ்ரீ கிருஷ்ணரின் பலகோடி வீரர்கள் அடங்கிய சேனையின் மேல் விருப்பம் மிகுகிறது.

ஒருவன் தன் உடைமைகளை நன்கு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பது ஸ்ரீ கிருஷ்ணருக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர் வலுச்சண்டைக்கும் மன்னிக்கும் மாண்பிற்கும் தியாகத்திற்குமே முன்னுரிமை அளிக்கிறார்.எனவேதான் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக யுதிஷ்டிரர் பாதி ராஜியத்தைக் கூடா டுப்பதற்கு முன் வந்தபொழுது அவன் பெருந்தன்மையை வரவேற்றார்.

ஸ்ரீ கிருஷ்ணர் உண்மையில் ஒரு நடுநிலைவாதி.ஆனால் பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்கள் பக்கம் இருப்பவர் என்ற குற்றச்சாட்டு ஒம்று எப்பொழுதும் உண்டு. ஆனால் இந்த உத்யோக பர்வத்தில் அவர் எந்த அணியுடனும் கட்சி சேரவில்லை என்பது நன்கு விளங்குகிறது.

தான் ஒரு சிறந்த வீரனாக இருப்பினும் ஸ்ரீ கிருஷ்ணர் போரினை அறவே வெறுத்தார். எந்தப் போரிலும் வலிய சென்று கலந்து கொள்வதை விரும்பவில்லாதவர். குருக்ஷேத்திரப் போரினை தவிர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தார். போர் தவிர்க்க முடியாமல் போன பொழுது அந்தப் போரில் தான் ஆயுதம் ஏந்தப் போவதில்லை என்று முடிவு எடுக்கிறார். இப்படி ஒரு மேன்மையை வேறு எந்த சத்திரியனிடமும் நாம் சந்த்திததில்லை .தனது மன உறுதிக்கும் சத்திய விரதத்திற்கும் பெயர் பெற்ற பீஷ்மர் கூட ஸ்ரீ கிருஷ்ணருக்கு நிகராக மாட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நிகர்வி. எளிமையானவர். போரில் பங்கு பெற மாட்டேன் என்ற ஸ்ரீ கிருஷ்ணரை அர்ஜுனன் வியப்புடன் நோக்குகிறான். அவரை தன்னுடைய தேர்சாரதியாக இருக்க வேண்டிக் கொள்கிறான். சத்திரியர்களைப் பொறுத்த வரை ராதேயனாக இருப்பது அவர்களது கர்வத்திற்கு பங்கமாகும். அது ஒரு தரம் குறைந்த பதவி. சல்லியனை கர்ணன் தனது தேரோட்டியாக இருப்பதற்கு பணித்தபொழுது அவன் வெகுண்டெழுகிறான். எவ்வித அனுமானமும் இல்லாத ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனன் வேண்டியதும் உடனே அவனுக்கு தேரோட்டியாக இருக்க சம்மதிக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத்திரம் குற்றமற்றது. குணங்கள் நிறைந்தது.

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *