அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

saidபேரா. க.பஞ்சாங்கம்

மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள்.

‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’ என்ற நூல் எட்வர்டு ஸெய்த்(1935-2003) எழுதிய ஏழு கட்டுரைகளின் தொகுப்பாகவும், அவரைக் குறித்து நினைவுக் குறிப்பாகத் தாரிக் அலி என்பார் எழுதிய கட்டுரையோடும், ரவிக்குமாரின் முன்னுரையோடும் 135 பக்க அளவில் அமைந்துள்ளது. நமது காலத்தில் மிகப்பெரிய அறிவுஜீவியாகவும், பாலஸ்தீனிய விடுதலைப் போராளியாகவும் எந்தவித சமரசத்திற்கும் ஆட்பட்டுவிடாமல் இயங்கிய ஒருவரை ஆதிக்க வர்க்கப் பிரதிநிதிகளே பயன்படுத்தி வருகின்றனர்; ஆனால் விடுதலையை, நீதியை வேண்டிப் போராடுகின்ற மக்களிடம்தான் அவர் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கில் அவர் கட்டுரைகளை மொழிபெயர்த்து வழங்குவதாக ரவிக்குமார் தன் முன்னுரையில் கூறுகிறார். தன் நோக்கிற்கு ஏற்றவாறு மிகவும் சிக்கலான, நுட்பமான கருத்தியல் தளங்களைத் தமிழில் தெளிவாக ரவிக்குமார் மொழிபெயர்த்துள்ளார் என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும்.

‘அவர், அவருக்கும் அப்பால் பல வாழ்வுகளைக் கொண்டவர்’ என்று தாரிக் அலியால் குறிப்பிடப்படும் எட்வர்டு ஸெய்த் கீழைத்தேயவியல் (ழுசநைவெயைடளைஅஇ 1978) என்ற தன் நூல் மூலம் உலகப் புகழ்பெற்றவர் ஆவார். அராபியம் மற்றும் கீழை நாடுகள் குறித்த மேற்குலகின் அடிப்படையான அனுமானங்களை வெறும் புனைவுகள் என்றும் பொய்கள் என்றும் நிறுவி, வரலாறு எழுதுதலில் வினைபுரியும் ஆதிக்க அரசியலின் அசிங்கமான முகத்தை அந்நூலில் வெளிக்கொணர்ந்ததன் மூலம் மேற்குலக அறிவுஜீவிகளை அதிர்ச்சியடைய வைத்தார். “எப்போதுமே நான் விசயங்களின் உள்ளும் புறமுமாக இருக்கிறேன். ஒரே விதமாக நீண்டகாலமாக இருப்பதில்லை” எனத் தன்னைக் குறித்து ஒரு நேர்காணலில் அறிவித்துக் கொள்ளும் ஸெய்த் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார். ஒரு விதத்தில் கல்வி கற்பிப்பது சாத்தியமே இல்லை என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஸெய்த், ஓர் ஆசிரியராக இருப்பது மிகவும் கடினமானது என்றும் அது ஒரு விதத்தில் அவரை அவரே சிதைத்துக் கொள்வதாகும் என்றும் ஆசிரியத் தொழிலின்; கடுமையைப் புலப்படுத்துகின்றார். தனது தொழிலால் தான் முடக்கப்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் விழிப்புணர்வை நோம் சாம்ஸ்கியிடமிருந்து பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கிற ஸெய்த், இலக்கியமானாலும், வேறு எந்த விசயமாக இருந்தாலும் நாம் அக்கறை காட்ட வேண்டியது அது எந்தளவு மற்றவற்றோடு கலந்துள்ளது என்பதைப் பற்றித் தானே ஒழியே அதன் தூய்மையைப் பற்றி அல்ல. எனவே ஒருவர் செய்ய வேண்டிய உருப்படியான காரியமாக அவர் கூறுவது சுத்தத்திலிருந்து வெளியேறுவதும் அசுத்தம் என்றும் கலப்பு என்றும் கூறப்படுபவற்றை நோக்கிச் செல்வதும்தான் என்கிறார். எனவே இலக்கியத்தை ஆய்வது என்பது அழகியல் சார்ந்ததல்ல் எல்லா விசயங்களுமே பௌதீகச் சூழலால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்கிற உண்மையின்மேல் வினைபுரிவதுதான் என்கிறார்.

‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’ என்ற எட்வர்டு ஸெய்த்தின் கட்டுரை, அறிவுஜீவிகள் குறித்த விமர்சனப்ப+ர்வமான பார்வையை முன்வைக்கிறது. ஓர் அறிவுஜீவி அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் துணிவுடனும் சுதந்திரத்துடனும் இருக்க வேண்டும் என்றால் அவர் தொழில்சார் மனப்பான்மையை விட்டுவிட்டு அதை ஒரு பொழுதுபோக்குக்காகச் செய்வதாக எண்ணிக்கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார். அதிகாரத்திடம் சேவகம் செய்து கொண்டும் பரிசுகளைத் தட்டிக் கொண்டும் வாழ்கின்ற ஓர் அறிவுஜீவி ஒருபோதும் விமர்சனப்ப+ர்வமாக இருக்க முடியாது. புனிதமான நோக்கு, புனிதம் வாய்ந்த பிரதிகள் முதலியவற்றோடு வாழ்நாள் முழுவதும் முரண் கொண்டு போராடுபவராக அறிவுஜீவி இருக்க வேண்டும். ஓர் அறிவுஜீவியை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அவர் எதை உயர்த்திப் பிடிக்கிறார் என்பதில்தான் இருக்கிறது. பிறர் துயரைத் தமதாக நினைக்கின்ற அறிவுஜீவிகள்தான் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். வழக்கமாகச் சிதைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் தரப்படுகின்ற தகவல்களின் காலமான இந்தக் காலகட்டத்தில், நடுநிலையான அறங்களோ மதிப்பீடுகளோ அறவே இல்லாமல் குழம்பிக் கிடக்கும் ஒரு காலச் சூழலில், வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவுஜீவி உண்மைகளைத் தேடி ஆய்வதும் விவரங்களைச் சேகரிப்பதும் என்கிற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அறிவுஜீவியின் குரல் ஒற்றைக் குரலாக இருக்கலாம். ஆனாலும் அது விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்ற உண்மையின் மேல் அறிவுஜீவி பணிபுரிய வேண்டும். குறுக்கிடுவது அறிவுஜீவியின் அடையாளம். தமிழ்ச் சூழலில் ஸெய்த்தினுடைய இந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்குத் தேவை என்பதை உணர்ந்து மொழிபெயர்ப்பு மூலம் தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் ரவிக்குமார்.

சார்த்தரைக் குறித்த கட்டுரையில் அவருக்கு ஜெர்மனோ ஆங்கிலமோ தெரியாது என்ற தகவல் முதன்முதலில் தெரிய வந்தபோது தனக்கு வியப்பும் ஏமாற்றமும் அளித்ததாகச் ஸெய்த் குறிப்பிடுகிறார். பாலஸ்தீனியம், இஸ்ரேல் குறித்த அரசியலில் சார்த்தரின் நிலைப்பாட்டை ஓர் அறிவுஜீவிக்குரிய நேர்மையோடு விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக விமர்சிக்கும் கட்டுரையில் மக்கள் ஆதரவு இல்லாத அரபு நாடுகளின் ஆட்சியாளர்களை மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வருவது அதன் சுரண்டும் தன்மையையே புலப்படுத்துகிறது என 2001-லேயே விமர்சித்துள்ளார். இன்று துனிசியா, எகிப்து, ஏமன், லிபியா என்று அரபு நாடுகளில் வெடித்துள்ள மக்கள் புரட்சி ஸெய்த்தினுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. சீக்குப் பிடித்த மத உணர்வுகளிலிருந்து நடக்கின்றது இந்த அமெரிக்க ஏகாதிபத்திய அரசியல். புனிதப்போர் என்று கொலைகளை முன்னிறுத்தும் பின்லேடனைப் பிணமாகவோ உயிருடனோ பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்ததும் பின்லேடன் தளத்திற்கு ஓர் அரசு கீழிறங்கி இழிந்து போவதைத்தான் காட்டுகிறது என விமர்சிக்கிறார். (இன்று பின்லேடனைச் சுட்டுக் கொன்று அடையாளம் தெரியாமல் கடலுக்குள் புதைத்ததாகச் சொல்லுவதிலும் ஏகாதிபத்தியம் எந்த அளவிற்கு இழிவு நிலைக்குப் போகக் கூடியது என்பதைத்தான் காட்டுகிறது) ஈராக், குவைத்துக்குள் நுழைவதை ஆக்கிரமிப்பு என்று ஒரு மாதிரியாகப் புனைவதும் அமெரிக்கா ஈராக்கிற்குள் நுழைவதை அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட என்று புனைவதுமாக நிகழ்கின்ற ஆதிக்க அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார் ஸெய்த். இவர் குறிப்பிடும் மற்றொரு முக்கியமான கருத்து, காலனித்துவத்திற்கு முந்திய கடந்த காலத்தில் ஆதிக்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்டக்கூடிய சக்தி சமூகத்திற்குள் இயங்கிக் கொண்டிருந்தது. பின்காலனித்துவச் சமூகத்தில் இந்த மகத்தான மக்கள் சக்தியைச் சிதைக்கிற தந்திரங்களைக் காலனித்துவவாதிகளும் ஏகாதிபத்தியவாதிகளும் தொடர்ந்து கையாண்டு வருகிறார்கள் என்பதாகும். ஆனால் அதையும் மீறி மக்கள் சக்தி என ஒன்று  ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி வரத்தான் செய்யும் என்றும் மதிப்பிடுகிறார்.

இவ்வாறு எட்வர்டு ஸெய்த்தின் சிந்தனைகளை மொழிபெயர்த்து வழங்கியதன் மூலம் ரவிக்குமார் தமிழ்ச் சூழலின் அறிவுத்தளங்களில் நிகழ்த்தப்பட வேண்டிய உரையாடல்களின் புள்ளிகளை நினைவுப்படுத்துகிறார்.

‘உரையாடல் தொடர்கிறது’ என்ற இரண்டாவது புத்தகம் ஸெய்த்தினுடைய மேற்கண்ட புத்தகத்திலுள்ள இரண்டு கட்டுரைகளோடு அகஸ்தோ போவால், அம்பர்த்தோ எக்கோ, காப்ரியேல் கார்ஸியா மார்க்யெஸ், மிஷேல் ஃப+க்கோ, க்ளோத் லெவிஸ்த்ராஸ் ஆகியோரின் இரண்டு இரண்டு எழுத்துக்களோடு ரவிக்குமார் முன்னுரையுடன் 152 பக்கத்தில் அமைந்துள்ளது.

“எல்லா விதமான கருத்தாக்கங்களும் வெறுமனே பெயர் உதிர்ப்புகளாக இழியும் தமிழ்ச் சூழலில் எல்லாவற்றுக்கும் கைடுகள்’ வேண்டும். எனவேதான் இங்குச் சிந்தனையாளர்களின் இடத்தை உரையாசிரியர்களே நிரப்பிக் கொண்டுள்ளனர். இந்த அவலம் மாற்றப்பட வேண்டுமெனில் ஏராளமான மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டாக வேண்டும்”

என்று ரவிக்குமார் முன்னுரையில் தன் மொழியாக்கச் செயலுக்கான சூழலை வெளிப்படுத்தியதிலுள்ள உண்மையைத் தமிழ் உலகம் ஆழமாக உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

அகஸ்தோ போவால் (1931) தான் முன்மொழிந்த ஒடுக்கப்பட்டோர் அரங்கு, இன்விசிபிள் தியேட்டர், நிய+ஸ் பேப்பர் தியேட்டர், லெஜிஸ்லேடிவ் தியேட்டர் ஆகியவை குறித்தெல்லாம் பிரேசில் நாட்டில் இருந்து கல்கத்தாவிற்கு வந்து பயிற்சிப் பட்டறை நடத்தியவர் ஆவார். இந்தியாவைக் குறித்துத் தான் பார்த்த அளவில் மிகவும் வன்முறை நிரம்பிய சமூகம் என அவர் மதிப்பிடுவது மிகவும் கவனத்திற்குரிய ஒன்றாகும். இன்விசிபிள் தியேட்டர் நடிகர்கள், பார்வையாளர்கள் என்கிற வேறுபாடுகளை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. நடப்பது நாடகமெனத் தோன்றாமல் செய்து விடுகிறது. எந்தவிதத் தீர்வுகளையும் முன்வைப்பதில்லை. மனிதர்களாகிய நாம் முடிந்து விடுவதில்லை என்பதனால் நாடகமும் முடிவதில்லை.இன்விசிபிள் தியேட்டரில் உரையாடலும் முடிவதில்லை. தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என அவர் நாடகம் குறித்து விளக்கும் போது மொழிபெயர்ப்பில் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். ஒடுக்கப்பட்டோர் அரங்கு இரண்டு அடிப்படை நோக்கங்களைக் கொண்டது என்கிறார். ஒன்று நாடகச் செயல்பாட்டின் கதாபாத்திரங்களாகப் பார்வையாளர்களை மாற்றியமைத்தல். இரண்டு அப்படி மாற்றம் அடைந்த பார்வையாளர்கள் அதைத் தனது நிஜ வாழ்விலும் பயன்படுத்த உதவுதல். ஒடுக்கப்பட்டோர் அரங்கு மூன்று கருதுகோள்களின்மேல் இயங்குகிறது என்கிறார். ஒன்று, தேசம் தழுவிய பெரிய கருத்தாக்கங்கள் யாவும் தனிமனிதர்களின் தனிப்பட்ட வாழ்வின் சிறு கூறுகளிலும் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டு, சமூக யதார்த்தத்தை மாற்றியமைக்கும் விதமாக ஒரு நாடகக் கலைஞர் தான் பெற்ற அழகியல் யதார்த்தத்தைக் கையாள வேண்டும். மூன்று, நாடக ஆக்கத்தில் தனிப்பட்ட ஒருவர் உருவாக்கும் படிமங்கள் அந்த அரங்கில் பங்கெடுக்கும் பிறரையும் பாதித்து அவரிடமிருந்து ஏராளமான படிமங்கள் உருவாகத் தூண்டுகோலாக இருக்க வேண்டும். மொத்தத்தில் ஒடுக்கப்பட்டோர் அரங்கு என்பது ஒடுக்கப்பட்ட ஒரு நபர், நாடக நிகழ்வில் பங்கேற்று அவர் ஆற்றுகின்ற ஒரு வினை அவரது நிஜ வாழ்வின் தன்மையையே மாற்றியமைத்தி;ட உதவி புரிகிறது என்பதுதான். இத்தகைய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தமிழ்ச் சூழலில் நாடகம் குறித்த உரையாடலை வளர்த்தெடுக்கப் பெரிதும் அடிப்படைத் தேவையாக இருக்கின்றன.

அம்பர்தோ எக்கோவினுடைய ‘கலாச்சார சகிப்புத்தன்மையும் குறியியலின் பயன்பாடும்’ என்ற தலைப்பில் அமைந்த நேர்காணல் கலாச்சாரப் பன்முகத் தன்மையின் மிக மேன்மையான முறையில் வலியுறுத்துகிறது. அதுவும் உலக அரசியலில் இரண்டு முகாம்கள் வினைபுரிந்து கொண்டிருந்த காலகட்டத்தைவிட ஏகப்பட்ட முகாம்கள், ஏகப்பட்ட பிரச்சினைகள் எனப் பல்கிப் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் கலாச்சார சகிப்புத் தன்மை மட்டுமே மனித நேயத்தைக் காப்பாற்றும்; அதற்குக் குறியியல் சிந்தனைகள் உதவ முடியும் என வலியுறுத்துகிறார் எக்கோ. மொழிபெயர்ப்பும் இதற்குத் துணைசெய்ய முடியும். மொழிபெயர்ப்பில் பல தவறுகள் நிகழலாம். சிதைவுகள் இருக்கலாம். துல்லியம் இல்லாமல் போகலாம். ஆனால் மற்றொரு பண்பாட்டைக் குறித்துச் சுத்தமாக எதுவும் தெரியாமல் போவதைவிட இது எவ்வளவோ மேல் என்கிறார். நர மாமிசம் சாப்பிடும் பண்பாட்டினை  எதிர்கொள்ள நேர்ந்தால் அதைப் புரிந்து கொள்ள முயல்வேனே தவிர, ஒரு சமூகவியல் ஆராய்ச்சியாளன் என்ற முறையில் அதை இழிவானதாக ஒருபோதும் கருதமாட்டேன். இதைப் போலத்தான் பர்தா போடும் பண்பாடு, பிறப்புறுப்பைத் தைத்துக் கொள்ளும் பண்பாடு முதலிய பண்பாட்டு வேறுபாடுகள் அனைத்தையும் நாம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் சகிக்க முடியாததற்கும், சகித்துக் கொள்ள முடிவதற்கும் இடையிலான எல்லைக்கோடு எது? உண்மையில் பண்பாட்டுப் பிரச்சினையில் மிக சிக்கலான இடம் இதுதான். எக்கோ சொல்லுகிற மற்றொரு முக்கியமான கருத்து அச்சு வடிவம் காலாவதியாகிவிட்டது; நாம் பிம்பங்களின் காலத்தில் வாழ்கிறோம் என்று பெருவாரியாக இன்று சொல்லப்படும் கருத்தை அவர் மறுத்துரைப்பதுதான். உண்மையில் வெகுஜன கலாச்சாரம் வாசிக்கிற பழக்கத்தைப் பன்மடங்கு அதிகமாக்கியுள்ளது.எனவே அச்சடித்த விஷயங்களின் பெருக்கம் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்துள்ளது என்று அவர் வைக்கிற கருத்து சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது. அறிவுஜீவிகள் குறித்தும் ஒரு சமூகத்தில் அவர்களின் தேவை குறித்தும் அவர் முன்வைக்கிற சிந்தனை ஆர்வம்தரத்தக்கதாக இருக்கிறது. அதாவது ‘மதிப்பீடுகள்’ குறித்த பிரச்சினையில் கவனம் செலுத்த இயலாத நிலையில் பெரும்பான்;மை மக்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகச் சூழலில், அந்தப் பணியைச் செய்கிற ஒரு சிலரை அந்தச் சமூகம் அறிவுஜீவி என்று ஆதரித்து வருவது தொடரத்தான் செய்யும் என்கிறார். ஆனால் அதற்காக அவர்களைத் தெய்வம் என்றும் அவர்கள் வாக்கைத் தெய்வ வாக்கு என்றும் கொண்டாடத் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார். இதுபோலவே பின்நவீனத்துவம் குறித்தும் அம்பர்த்தோ எக்கோ மிக நுட்பமான கருத்துக்களை முன்மொழிந்துள்ளார். பின்நவீனத்துவம் என்பது காலவரிசை சார்ந்தது அல்ல் மாறாக ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின்நவீனத்துவக் கூறுகளைக் கொண்டிருக்கிறது என்கிறார். ஒரே கலைஞனிடத்தில் நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் ஒருசேர இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு என வாதிடுகிறார். “சிறந்த பின்நவீனத்துவ நாவல் என்பது யதார்த்த பாணியா? அல்லது அது அல்லாததா?; உருவவியலா? அல்லது உள்ளடக்கவியலா?; தூய இலக்கியமா? அல்லது கட்டுப்பாடு கொண்ட இலக்கியமா? போன்ற இலக்கியச் சச்சரவுகளைக் கடந்து மேலே நிற்க வேண்டும்” என்று ஜான் பார்த் எழுதியதை மேற்கோளாகச் சுட்டிக்காட்டுகிறார்.

காப்ரியேல் கார்ஸியா மார்க்யெஸ்ஸினுடைய நேர்காணல் ஒன்றினையும் அதன் நுட்பம் குறையாமல் ரவிக்குமார் மொழிபெயர்த்துள்ளார். எழுதுவது இன்பமும்தான் துன்பமும்தான் எனக் கூறுகிற மார்க்யெஸ், தன்னை எழுதத் தூண்டுவது தன்னுள் தோன்றும் காட்சிப் படிமம்தான் என்கிறார். தனக்குப் பிடித்த எழுத்தாளர்களாக காப்காவையும் ஹெம்மிங்வேவையும் சுட்டுகிறார். தன்னுடைய மிகச்சிறந்த வாசகர் யார் என்ற கேள்விக்கு ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண்மணியைச் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பெண்மணி அவருடைய “நூற்றாண்டுக் கவலைகள்” என்ற நாவல் முழுவதையும் கையால் மீண்டும் எழுதிக் கொண்டிருந்தாராம். ஏனென்று கேட்டதற்கு உண்மையான பைத்தியம் இதை எழுதியவனா? அல்லது நானா? என்பதைக் கண்டறிய ஒரே வழி இப்படித் திரும்பவும் எழுதிப் பார்ப்பதுதான் என்றாராம். நாம் எல்லோருமே நம்முடைய முன்முடிவுகளின் பிணைக் கைதிகளாக இருக்கிறோம் என்கிற மார்க்யெஸ் பலரைப் போல தானும் இரட்டை வேடத்திற்குப் பலியானவன்தான் என்று உண்மை உரைக்கிறவராக இருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மிஷேல் ஃப+க்கோ எழுதிய இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரை  நேர்காணல் வடிவம் கொண்டதாகும். “அரசியலும் அறவியலும் என்பது” அதன் தலைப்பு. அரசியலைவிடவும் அறவியல்மீதுதான் எனக்கு ஆர்வம் என்றும், அரசியலை ஓர் அறவியல் பிரச்சினையாகப் பார்க்கிறேன் என்றும் ஃப+க்கோ விளக்கும் போது ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற தமிழ் இலக்கிய வரி தானாக வந்து போனது.

ஃப+க்கோவின் மற்றொரு கட்டுரை ‘தன்னிலையும் அதிகாரமும்’ என்பதாகும். பொதுவாக மொழிபெயர்ப்பதற்கு அந்த மொழி மட்டும் தெரிந்தால் போதாது; அந்த மொழிக்குள் வினைபுரியும் சொல்லாடல்களை உள்வாங்கிக் கொள்ளும் திராணியும் தத்துவச் செறிவும் இருந்தால் ஒழிய இத்தகைய மொழிபெயர்ப்புகள் சாத்தியமி;ல்லை. ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பு ஆற்றலுக்கு இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்திருக்கும் பாங்கே சரியான சான்று. ஃப+க்கோவின் கட்டுரைகளை ஆங்கிலத்தில் படிக்கும் போது புரிந்தது போலவும் இருக்கும் புரியாதது போலவும் இருக்கும். என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாகத் துல்லியமாகத் திரட்டிக் கொள்வது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒன்று. அத்தகைய புதிரான கருத்துலகச் சிந்தனைகளைத் தமிழ் மொழியில் கொண்டு வந்திருப்பது என்பது மிகப்பெரிய சாதனையாக எனக்குப் படுகிறது. ஃப+க்கோ இந்தக் கட்டுரையில் அதிகாரம் பற்றிய பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறார். தன்னுடைய முயற்சி, அதிகாரம் பற்றிய ஆய்வை நோக்கியது அல்ல. மாறாக மனித உயிரிகள் தன்னிலைகளாக மாற்றப்படுகின்ற பல்வேறு வழிமுறைகளைப் பற்றிய வரலாற்றை உருவாக்குவதாகும். ஏனென்றால் பொருளாதார உறவுகளை ஆராய வழிவகை இருப்பது போல (ஆடம் ஸ்மித், காரல் மார்க்ஸ்) மனிதர்களுக்கிடையிலான அதிகார உறவுகளை ஆராய உரிய கருவிகள் இல்லை என்கிறார். தன்னிலைகள் தனக்குள்ளே பிளவுண்டு கிடக்கும் அல்லது பிறரால் பிளவுறுத்தப்பட்டிருக்கும். இத்தகைய சிக்கலான தன்னிலையை ஆராய்வதற்கு முதல் படி அத்தன்னிலையைப் புறவயப்படுத்துதல் ஆகும். அதன் நீட்சியாக அதிகாரம் பற்றிய விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக அதற்கான கருத்துருவாக்கம் நிகழ்ந்து விடுகிறது (பாசிசம், ஸ்டாலினிசம் போன்று).

அதிகாரம் கட்டமைக்கும் பிறழ்வுராத மனநிலைஒபைத்திய மனநிலை, சட்டப்ப+ர்வமானது ஒ சட்டப்ப+ர்வமற்றது, அதிகார உறவுஒ எதிர்ப்புப் போராட்ட உறவு முதலிய பல்வேறு அதிகார உறவுகளை விளக்கும் ஃப+க்கோ, அரசின் அதிகார வடிவத்திற்கும் சமயகுரு அல்லது திருச்சபையின் அதிகார வடிவத்திற்கும் உள்ள வேறுபாட்டை நுட்பமாக விளக்குகிறார். திருச்சபையின் அதிகாரம், தன் ஜீவிதத்திற்காகத் தன்னையே தியாகம் செய்யவும் தயாராக இருப்பது. எனவே இது, தனது அரசைக் காப்பாற்றுவதற்காகக் குடிமக்களைத் தியாகம் செய்யும்படி நிர்ப்பந்திக்கும் அரசதிகாரத்தில் இருந்து வேறுபட்டது என்கிறார். அதாவது திருச்சபை அதிகாரம் அரசியல் அதிகாரத்திற்கு எதிர்விதமாக இரட்சிப்புத் தொடர்பானது. அரசின் இறையாண்மைக் கொள்கைக்கு எதிர்விதமாகத் தன்னையே பலியாக்கிக் கொள்வது. அரசின் சட்ட அதிகாரத்திற்கு எதிர்விதமாகத் தனிமனிதமயப்படுத்துவது-இப்படியெல்லாம் விளக்கிக் கொண்டு போகிறார் ஃப+க்கோ.

ஒரு வரலாற்று நிகழ்வை அதுவும் சமகாலத்திய, சமீபத்திய நிகழ்வை ஆராய்வதுதான் தத்துவவாதியின் வேலை என்று கான்ட் கூறினார். பொதுவாக இப்போது, இந்தக் கணத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதுதான் எல்லாத் தத்துவப் பிரச்சினைகளிலும் மிகவும் ஆதாரமான பிரச்சினையாகும். ஆனால் ஃப+க்கோ, இன்று இந்தத் தத்துவப் பிரச்சினை மாறியிருக்கிறது என்று முக்கியமான ஒன்றை முன்மொழிகிறார். அதாவது நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மறுப்பதுதான் இன்றைக்கு மிகப்பெரிய தத்துவப் பிரச்சினை என்கிறார். நவீன அதிகார அமைப்பின் இரட்டைத் தளையாகச் செயல்படும் தனித்துவப்படுத்தல் மற்றும் ஒட்டுமொத்தமாக்கல் என்கிற இரட்டைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது எப்படி என்பதை நாம் எண்ணிப்பார்த்துக் கண்டடைந்தாக வேண்டும் என்கிறார். முடிவாகத் தனிமனிதனை அரசு மற்றும் அரசு நிறுவனங்களிலிருந்து விடுவிக்க முயற்சிப்பது, அது கட்டமைத்துள்ள தனித்துவத்திலிருந்து விடுவித்துக் கொண்டு புதிய வடிவங்களாலான தன்னிலைத்துவத்தை உருவாக்குவதுதான் இன்று நம்முன் உள்ள சவால் என்கிறார் ஃப+க்கோ.

இந்த நூலில் லெவிஸ்த்ராஸினுடைய இரண்டு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இலக்கியமும் அமைப்பியலும் என்ற கட்டுரை நேர்காணல் வடிவம் கொண்டது. அதில் தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள உறவை விரிவாக ஆராய்கிறார். அந்த இரண்டுக்கும் இடையில் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற நூலை எழுதிய, தான் மிகவும் நேசிக்கின்ற ரூசோ எந்த ஒரு இடையீட்டையும் விரும்பவில்லை என்றும் ஆனால்  இடையில் உள்ள பல விஷயங்களே சமூக வாழ்விற்கு இரத்தத்தையும் சதையையும் கொடுக்கின்றன என்றும் விளக்குகிறார். ‘மார்க்சும் ப்ராய்டும் என்னைச் சிந்திக்க வைக்கின்றனர். ஆனால் ரூசோ என்னைப் பற்றி எரியச் செய்கிறார். அவர் என்னை அமைதிப்படுத்தவில்லை; அலைவுறச் செய்கிறார்’ என வியக்கிறார் லெவிஸ்ட்ராஸ்.

‘அறிவியலும் தொன்மமும்’ என்ற கட்டுரை தமிழ்ச் சூழலில் பெரிதும் அறியப்பட்ட கட்டுரை. விவாதிக்கப்பட்ட ஒன்று. மனத்திற்கும் புற உலகத்திற்கும் உள்ள உறவை அமைப்பியல் முறையில் விரிவாக விளக்கும் கட்டுரை இது. பண்பாட்டிற்கும் இயற்கைக்கும் உள்ள உறவை ஆராய்கின்ற கட்டுரை, ஒழுங்கற்றவைகளின் பின்னால் உள்ள ஒழுங்கைக் கண்டுபிடிப்பதுதான் அமைப்பியல் என விளக்குகிறார். இரத்த உறவு அமைப்புகள், திருமண விதிகளின் அமைப்புகள், தொன்மங்களின் அமைப்புகள் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள உறவுகளையெல்லாம் ஆராய்ந்து இன்றைய அறிவியலில் புலப்படும் தர்க்கத்திற்கும் தொன்மங்களில் அமைந்துள்ள தர்க்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற புரட்சிகரமான கருத்தை முன்மொழிந்த கட்டுரை இது. அறிவியல் எல்லாவற்றிற்கும் விடைகளைத் தந்துவிடாது. நாம் செய்ய முயற்சிப்பது என்னவென்றால் நாம் தருகின்ற விடைகளின் எண்ணிக்கையையும் தரத்தையையும் மிக மெதுவாக உயர்த்துவதுதான் என்கிறார் லெவிஸ்ட்ராஸ். இறுதியாக அவர் கூறுகின்ற கருத்து நம்முடைய இந்திய மரபுச் சிந்தனையோடு ஒத்துப் போகிறது. “என்னுடைய சொந்த அடையாளம் பற்றிய புலன் உணர்வை நான் எப்போதும் அடைந்ததில்லை. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு இடம். சில விசயங்கள் நிகழ்கிற இடம். நான் என்று எதுவும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் ஒரு முச்சந்திப் போலத்தான். நிகழ்ச்சிகள் நடக்கும் முச்சந்தி. அந்த நிகழ்ச்சிகளும் சந்தர்ப்பவசமான யதேச்ச நிகழ்வுகள்தான்”.

இவ்வாறு வாழ்வின் இருத்தல் குறித்த விசாரணைக்குத் தேவைப்படும் உரையாடல்களை இந்த இரண்டு புத்தகத்தின் மூலமாக ரவிக்குமார் தமிழுக்கு வழங்கியுள்ளார். கட்டுரையாளர்கள் குறித்தும் கட்டுரைகளுக்கு இடையில் வரும் தத்துவ அறிஞர்கள் குறித்தும் குறிப்புகளைத் தொகுத்துக் கொடுத்திருப்பது நூலுக்கு மேலும் கனம் சேர்;க்கின்றது. எழுபதுகளில் இத்தகைய தத்துவத் தேடல் சார்ந்த சிந்தனைகளை நா.வானமாமலை, தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, எம்.எம்.எஸ்.பாண்டியன் முதலியோர் தமிழுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். அதனால் மிகத் தீவிரமான வாசகர்களும், சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்களும் தம்pழுக்குக் கிடைத்தனர். அத்தகைய ஒரு சூழலை மீண்டும் உருவாக்கத் தமிழில் இத்தகைய மொழிபெயர்ப்புகள் அவசர அவசரமாகத் தேவைப்படுகின்றன. ரவிக்குமார் இத்தகைய பணியில் மட்டும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்கு ஆசையாக இருக்கிறது. காரணம் தமிழ்ச் சூழலில் இத்தகைய ஆட்கள் அருகிவிட்டார்கள் என்பதுதான்.

1. எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010, பக் 135; விலை ரூ 70ஃ-

2. ரவிக்குமார்(மொ.பு), உரையாடல் தொடர்கிறது, மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010, பக்.152, விலை ரூ 100ஃ-

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *