கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

 நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடு

meena_ஒரு சிறு அறிமுகம்.

 

ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடுகளாக பிரசுரமாகியுள்ளன. 2012-ன் இறுதியில் ஒன்றும், 2013 ஜூன் _ல் இன்னொன்றுமாக வெளியாகியுள்ளன. கிராமத்து ராட்டினம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் விரிவான அணிந்துரையும், ஆசிரியரின் அடர்செறிவான என்னுரையும் வெளியாகியுள்ளன. பூ மலரும் காலம் என்ற கவித்துவமான தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பிலும் 11 கதைகள் இடம்பெற்றுள்ளன. அமுதசுரபி ஆசிரியர், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணைன் விரிவான அணிந்துரையும் ஆசிரியரின் என்னுரையும் வெளியாகியுள்ளன.

”உத்தி என்ற வகையில் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்கள் முயன்று பார்க்கவேண்டிய களங்கள் இன்னும் நிறைய உண்டு என்றுதான் தோன்றுகிறது”, என்று தனது அணிந்துரையில் குறிப்பிடும் திருப்பூர் கிருஷ்ணன், தொடர்ந்து, “சில ஆண்டுகள் முன்னால் தமிழ்ச்சிறுகதைத் துறைக்கு ஓசைப்படாமல் ஒரு பேரிழப்பு நேர்ந்தது. எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் மறைவு தான் அது. உத்தி வகையில் எண்ணற்ற பாணிகளில் எழுதி எழுதிப் பார்த்த அசகாய சூரர் அவர். வெறும் விளம்பரங்களின் தொகுப்பாகவே கூட ஒரு கதையைப் படைத்த சாமர்த்தியம் அவருடையது”, என்று சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறே ‘பூ மலரும் காலம்’ என்னும் கதையிலும் ஜி. மீனாட்சி உத்தி வகையில் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருப்பதாக ஒப்பிட்டுக்காட்டுகிறார். “கருத்து வெளியே தனித்துத் துருத்திக்கொண்டு தென்படாமல் தான் சொல்ல வந்த கருத்தை இலக்கிய நயத்தோடு உள்meenakshi wrapperளடக்கியிருக்குமாறு சொல்லும் ஆற்றல் இவரிடம் தென்படுகிறது. காலப்போக்கில் இந்த ஆற்றல் பயிற்சியின் காரணமாக இன்னும் மேம்படும்”, என்று திருப்பூர் கிருஷ்ணன் கூறியிருப்பது மிகச் சரியான கணிப்பு.

அதேபோல், கிராமத்து ராட்டினம் என்ற தலைப்பிட்ட ஜி.மீனாட்சியின் சிறுகதைத் தொகுப்பிலான தனது அணிந்துரையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், “மொத்தம் பதினொரு கதைகள் அடங்கிய இத்தொகுப்பின் படைப்புகளை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். பெண் மனச் சிக்கல்களையும் இயல்புகளையும் பேசும் கதைகள், வாழ்வின் மற்ற பரிமாணங்களைச் சித்தரிக்கும் கதைகள் எனப் பொதுவாக இருவகையான கதைகள்”, என்று குறிப்பிட்டிருப்பதும் மிகச் சரியான கணிப்பு.

ஜி.மீனாட்சியின் கதைகளில் வரும் கதைசொல்லி எல்லா நேரமும் பெண்ணாகத் தான் வருகிறார் என்று சொல்லவியலாது. இது அவருடைய கதைகளின் பலம். ‘ஈவது இகழ்ச்சி’ என்ற கதையில் பொய் பித்தலாட்டம் செய்யும் பிச்சைக்காரர்களைப் பற்றிய கோபம் வெளிப்படுகிறது என்றால் வேறு சில கதைகள் உயர் மட்ட மனிதர்களின் அல்பத் தனங்களைப் அவர் பேசத் தவறவில்லை. பெரும்பாலான கதைகள் நகரில் நாம் தினமும் காணும், பங்கேற்கும் நிகழ்வுகளைச் சுற்றி அமைந்திருக்கின்றன. நகரின் பல முகங்கள், பல பரிமாணங்கள் இந்தக் கதைகளில் காணக்கிடைக்கின்றன. மீனாட்சியின் பெண் கதாபாத்திரங்கள் புலம்புவதில்லை. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது, அப்படியிருக்க முயற்சிக்கிறார்கள். அழுகையில் சுகம் காண்பதில்லை. ‘செல்லத்தாயி’ கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. சமூகத்தின் சாதாரண மனிதர்களின், அடித்தட்டு மனிதர்களின் கண்ணியம், கம்பீரம், கருணை, கடும் உழைப்பு, அன்பு, தோழமை எல்லாம் பல கதைகளில் இயல்பான தொனியில் அழுத்தமாகப் பேசப்பட்டிருக்கின்றன.

‘மறுபக்கம்’ கதை இசுலாமியப் பெண்கள் பர்தா அணிந்தாக வேண்டியுள்ள வழக்கத்தைப் பற்றி வெகு நுட்பமாக, எந்தவிதப் பிரச்சாரத்தொனியும் இல்லாமல் கையாள்கிறது. ‘பூ மலரும் காலம்’ காதலின் நேர்மறையான பக்கத்தைக் காட்டுகிறது என்றால் ‘கடல் சாட்சி’ அதன் எதிர்மறைப் பக்கத்தைக் காட்டுகிறது. நேசமாய்ப் பழகிய பின் நிர்தாட்சண்யமாக “பிடிக்கலை, விட்டுடேன்” என்று கூறுபவன் முதலில் கதாநாயகியைத் தவித்து அழவைத்தாலும், ஆரம்பத்தில் அந்தப் பிரிவு கதாநாயகியைக் காய்ச்சலில் தள்ளினாலும் இறுதியில் ‘ஹேண்ட் பேகிலிருந்து செல்போனை எடுத்து பெயர்களைத் துழாவி அவன் பெயர் வந்ததும் ‘டெலிட்’ என்ர வார்த்தையை அழுத்தி செல்போனிலிருந்தே அந்தப் பெயரை நிரந்தரமாக நீக்கிவிட்டு, வசதியாய் சாய்ந்து அமர்ந்துகொள்ளும் மனத்திடம் அந்த இளம்பெண்ணுக்கு இருக்கிறது!

‘பூ மலரும் காலம்’ தொகுப்பிலுள்ள ‘என்னுரை’ப் பகுதியில் “பத்திரிகை உலகில் நான் நுழைவதற்கு முன்பாக எனக்குப் பரிச்சயமானது சிறுகதை உலகு” என்று தன் படைப்பார்வத்தைப் பற்றிக் குறிப்பிடும் ஜி.மீனாட்சி, “ஆனாலும் தொடர்ந்து சிறுகதை எழுத்தாளராக ஆகாமல், பத்திரிகைத் துறையில் என் பயணம் தொடங்கியது. கட்டுரைகள், பேட்டிகள் என்று வேறு தளத்தில் இயங்கியபோது சிறுகதைகளில் தீவிரமாக ஈடுபடமுடியாமல் போயிற்று”, என்று தெரிவிக்கிரார். மேலும், “அத்துடன் என்னை ஆழமாகப் பாதித்த விஷயங்களை மட்டுமே சிற்கதைகளாக எழுதிவந்ததால் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மனம் நிறைந்திருந்தது. நதியின் போக்கில் நகரும் சருகைப் போல, எதையும் வலிந்து திணிக்காமல் இயல்பாக இயங்க முடிந்தது”, என்றும் தன் படைப்புலகு குறித்து விவரிக்கிறார்.

தினசரி எதிர்கொள்ளும் சமகால சமூகம், அதன் நடப்புகள், சக மனிதர்கள் என விரிகிறது ஜி.மீனாட்சியின் கதைப்புலம். சிறு சிறு வாக்கியங்கள். அலங்காரமற்ற [சமயங்களில் சற்றே வழக்கமான வறண்ட] வார்த்தைகள், வாக்கியங்கள், நகர்வுகளைக் கொண்டு கட்டமைந்திருக் கின்றன கதைகள். என்றாலும் அவற்றின் உள்ளடக்கங்களும், சட்டென்று கண்ணுக்குள் புகுந்து மனதில் நிறையும் கவித்துவ வரிகளும் வாக்கியங்களும் இந்த இரண்டு தொகுப்புகளிலும் கணிசமாகவே உண்டு. உ-ம்: “துதிக்கைக்குள் புதைத்து வைத்திருக்கும் தண்ணீரை அள்ளியள்ளி தன் மீதே ஆக்ரோஷமாய் வீசி ஆரவாரம் செய்யும் மதயானையின் குதூகலமாய் தோன்றியது கடலின் செய்கை [கடல் சாட்சி].

”தினசரி வாழ்வில் நாம் சந்திக்கிற சம்பவங்களே என் கதைக்கான களங்கள்” என்று தன்னுடைய ‘என்னுரை’யில் கூறியுள்ளார் ஜி.மீனாட்சி. இந்த சம்பவங்களும் சந்திப்புகளும் சக பயணிகளும் நமக்கும் நேர்ந்துகொண்டிருக்கின்ற காரணத்தால் இந்த இரண்டு கதைத்தொகுப்புகளுமே நிறைவான வாசிப்பனுபவம் தருகின்றன.

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *