நீங்காத நினைவுகள் – 27

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

na_parthasarathyநா.பா. என்னும் இரெண்டெழுத்துச் சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்ட அமரர் திரு. நா. பார்ததசாரதி அவர்களின் மறைவு நாள் டிசம்பர், 13 ஆகும். அவருடைய சமுதாய நாவல் குறிஞ்சி மலர் கல்கியில் வெளியான போதும், வெளியான பின்னரும் புதிதாய்ப் பிறந்த தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அந்தப் புதினத்தின் நாயகியின்  பெயரான பூரணி என்பதைப் பல பெற்றோர்  சூட்டி மகிழ்ந்தார்களாம்! அதே போல் அதன் நாயகன் அரவிந்தனின் பெயரும் பல குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது. (இதே போல், பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் வரும் வானதியின் பெயரில் திரு திருநாவுக்கரசு அவர்கள் ஒரு தமிழ்ப் பதிப்பகத்தையே தொடங்கினார்.)

குறிஞ்சி மலர் கல்கியில் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நான் குழந்தைகளுக்கான எழுத்தாளராக உருப்பெற்று, ஜிங்லியில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகை பணம் ஏதும் அனுப்பியதில்லை. (கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகியவற்றில் எழுத்த்தொடங்கியதன் பிறகுதான் பணம் வரலாயிற்று. எனவே, அப்போதெல்லாம் அப்பாவின் எதிர்ப்போடுதான் எழுதிவந்தேன்.) கல்கியைக் காசு கொடுத்து வாங்கும் வசதி இல்லாததால் எங்களூர் சங்கரன் வாசகசாலையில் உறுப்பினராகிப் பத்திரிகைகளைப் பெற்றுப் படித்து வந்தோம்.  நா.பா. அவர்களின் குறிஞ்சி மலரை நானும் விழுந்து விழுந்து படித்தேன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.  நேர்மை, ஆண்மை போன்ற அருங்குணங்கள் கொண்டிருந்த கதாநாயகன் அரவிந்தனும், அதேபோல் பெண்களுக்குரியவை என்று கருதப்படும் சிறப்பியல்புகள் கொண்ட கதாநாயகி பூரணியும் என்னைப் பெரிதும் கவர்ந்தார்கள். ஆனால், நா.பா. பூரணியையே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக்குலுங்கும் அரிய குறிஞ்சி மலருக்கு ஒப்பிட்டு எழுதியிருந்ததைச் சகிக்க முடியவில்லை. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. (அதற்கான காரணம் இன்ன தென்பதை இக்கட்டுரையின் பிற்பகுதியில் அவருடன் நடந்த உரையாடலில் சொல்லவேண்டியிருப்பதால் இங்கும் அதைச் சொல்லவில்லை.)

நா.பா. அவர்களின் மீது ஒரே ஆத்திரம். ‘ பெரிய எழுத்தாளராக இருந்துகொண்டு கொஞ்சங்கூட யோசிக்காமல் இப்படிச் சொல்லிவிட்டாரே! என்று மனத்துள் பொருமித் தீர்த்தேன். எனது மறுப்பைத் தெரிவித்து உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று மனம் பரபரத்தது.  எழுதினேன்.  ஆனால் தபாலில் சேர்க்கத் துணிவு வரவில்லை. தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் ஒரு பெரிய எழுத்தாளருக்கு அப்படி ஓர் அதிகப்பிரசங்கித்தனமான    கடிதத்தை எழுதுவது சரியாகுமா?என்னும் தயக்கம் நிறைந்த கேள்வி  என்னுள் எழுந்ததுதான் அதற்குக் காரணம்.  அப்படியே நான் துணிந்து எழுதிவிட்டாலும்,  நா.பா. என்னைச் சினந்துகொண்டு ஏதேனும் எழுதி, அவரது கடிதம் அப்பாவின் கையில் கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் இன்னொரு காரணம். குழந்தைகளுக்காகத் தொடர்ந்து ஜிங்லியில் எழுதிக் கொண்டிருந்த என்னை, ‘இது போல் அதிகப்பிரசங்கித்தனமான கடிதமெல்லாம் பெரியவர்களுக்கு எழுதலாமா?என்று கேட்பதோடு நில்லாமல்  என் எழுத்து ஆர்வத்துக்குக் கண்டிப்போடு ஒரு முற்றுபுள்ளியும் வைத்துவிட்டால் என்ன செய்வது?என்கிற கேள்வியும் நான் வராழைத்துக்கொண்ட துணிச்சலுக்கு முட்டுக்கட்டை போட்டது. 

சில ஆண்டுகள் கழித்து, நாங்கள் சென்னையில் குடியேறியதன் பின், பெரியவர்களுக்கான எழுத்தாளராக வளர்ச்சி பெற்று இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகப் பங்கேற்ற போது நா.பா. அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

இதற்கிடையே, “தீபம்என்கிற பெயரில், நா.பா. ஓர் இலக்கிய மாத இதழைச் சொந்தமாய்த் தொடங்கி நடத்தலானார். அதற்கு நானும் ஒரு சந்தாதாரர் ஆனேன். தீபம் ஆகஸ்டு 1981 இதழில், அதன்  ‘இலக்கிய மேடை எனும் பகுதியில் கீழ்க்காணும் கேள்வி-பதில் வெளியாகி யிருந்தது.

கேள்வி:            சந்திரனைத் தலையில் உடைய ஒரு பெண் எழுத்தாளருக்கு இப்போது  மார்க்கெட் டல்லாமே?

பதில் :              ஆமாம். கொஞ்ச் காலம் முன்பு வரைநான் இப்போது ஏக பிஸிஎன்றும், ‘என்னுடைய  ரேட் இப்போது கூடிவிட்டதுஎன்றும் அவர் பெருமையாகத் தம்பட்டம் அடித்துச் சொன்னதைக் கேட்டால், கொஞ்சம் வேறு விதமாகக் கூடத் தொனிக்கும். அம்மையாருடைய சரச சல்லாப எழுத்துகளைப் படிக்கிற துர்ப்பாக்கியம் நேர்ந்தவர்களுக்கு, மனத்தில் அந்த வேறு விதமான தொனியே உறுதிப்படும். இப்போது எழுத்துத் துறையில் அவருக்கு மார்க்கெட் டல்லாகி விட்டாலும், என்ன, அவர் வேறு ஏதாவது ‘தொழில்செய்து கட்டாயம் பிழைத்துக்கொள்வார். நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

 இதைப் படித்ததும் ஏற்பட்ட கொதிப்பில் ஒரு கடுமையான கடிதம் என்னிடமிருந்து பறந்தது. அதை அப்படியே தீபம் இதழில் வெளியிட்ட நா.பா. அவர்களின் நேர்மையைப் பாராட்டத்தான் வேண்டும்.

எனது சாடல் பின் வருமாறு:

“தீபம், ஆகஸ்ட், 1981 இதழில், அதன் கேள்வி-பதில் பகுதியில் ஒரு பிரபல பெண் எழுத்தாளர் பற்றிக் “கிசுகிசுபாணியில் தாங்கள் கூறியவை மிகவும் கண்டிக்கத்தக்கவை.  “சரச-சல்லாபஎழுத்துகளை வைத்து ஓர் எழுத்தாளரை அவரது தனிப்பட்ட வாழ்க்கையை எடை போடுவது நியாயம் என்று கொண்டால், அவ்வாறு எழுதாத நிலையிலும் கூட வேறு வகை எழுத்துகளின் அடிப்படையில், நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது எழுத்தாளர்களை –  ஆண் எழுத்தாளர்களாயினும் சரி, பெண் எழுத்தாளர்களாயினும் சரி மட்டமானவர்கள் என்றே விமர்சிக்க வேண்டியது வரும்.  தனி மனிதன் ஒருவனின் வாழ்க்கை பிறருக்கு ஊறு செய்யாத வரையில், அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை  இல்லை; அது பண்பும் இல்லை.

மேலும், ஆண்களுடன் நட்புறவு கொண்டுள்ள ஒரே காரணத்தால் ஒரு பெண் தவறுகிறவளாகவோ, “வேறு தொழில்செய்யக்கூடியவளாகவோ இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.  இதை அளவு கோலாகக் கொண்டால், எல்லா எழுத்தாளர்களுக்கும் விபசாரப்பட்டம் கட்டும்படி இருக்கும்.

இநதச் சாடலை வெள்யிட்ட நா.பாவின் நேர்மையைப் பாராட்டுகிற அதே நேரத்தில்,   பெண் என்று வரும் போது அவளை எடை போடுவதற்குகும் வெளிப்படையாய் விம்ர்சிப்பதற்கும் ஆண்கள் தனி அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்கிற பொதுவான விதிக்கு நா.பா.  போன்ற உயர்ந்த மனிதர்களால் கூட விதிவிலக்காக இருக்க முடிவதில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது என்பதைச் சொல்லாதிருக்க முடியவில்லை!

தீபம் இதழில் சாடப்பட்டுள்ள பெண் எழுத்தாளரை விடவும் பன்மடங்கு மோசமான விரசத்துடன் எழுதும் ஆண்களை இப்படியெல்லாம் கடுமையாக விமர்சிக்காமல் விட்டுவைப்பதில் உள்ள நியாயம் புரிய மாட்டேன என்கிறது. இவ்வாறு எழுதுவதில் உள்ள மனக்குமுறலைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள மறுத்து –  எது ஒன்றையும் இவள் பெண் சார்ந்த உரிமைப் பிரச்சினையாக்கிவிடுவாள் என்று குற்றஞ் சாட்டுவார்களே யல்லாது, இந்தக் கூற்றில் உள்ள குற்றச்சாட்டுக்கு நியாயமான பதிலைச் சொல்ல மாட்டார்கள். (சொல்லுவதற்கு எந்தப் பதிலும் அவர்களிடம் கிடையாது என்பதே உண்மையாகும்.)

தங்கள் மூக்கை உடைக்கும் எதிர்ச்

சாடல்களைப் பல இதழாசிரியர்கள் பிரசுரிப்பதே இல்லை என்கிற நிலையில், நா.பா. பாராட்டுக்குரிய நேர்மையாளர் என்பது சரிதானே?

       அழகும் கம்பீரமும் பொருந்திய தமது தோற்றப் பொலிவில் இருந்த தன்னம்பிக்கையுடன், திரப்படக் கதாநாயகன் ஆகும் ஆர்வத்தில், நா.பா. திரு ஏவிஎம் செட்டியார் அவர்களை ஒரு சமயம் அணுகினாராம். கல்வியாளரான அவர் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபடலாமே என அறிவுறுத்தி, அவரை இலக்கியப் பாதைக்குத் திருப்பியவர் ஏவிஎம் செட்டியார் அவர்களே என்று நா.பாவின் நெருங்கிய சீடர் திருப்பூர் கிருஷ்ணன் அண்மையில் ஒரு வார இதழில் நினைவு கூர்ந்துள்ளார்.

       நா.பா. அவர்களைப்பற்றி எழுத்தாளர் ஜே.வி. நாதன் தம் கட்டுரை ஒன்றில் பல நாள் முன் எழுதியதும் நினைவுக்கு வருகிறது. அவரைத் தமது இல்லத்தில் (என்று ஞாபகம்) உபசரிக்கும் வாய்ப்புப் பெற்ற ஜே.வி. நாதன், தம் கால்களைக் கழுவிக்கொள்ள நா.பாவுக்கு ஒரு செம்பில் தண்ணீர் கொடுதத போது அவரின்  செந்தாமரைப் பாதங்களைக் கண்டு   தாம் வியந்ததைக் குறிப்பிட்டுள்ளார். கால்களை அந்த அளவுக்குத் துப்புரவாக வைத்துள்ள வேறொருவரைத் தாம் கணடதில்லை என்னும் பொருள்படக் கூறியுள்ளார்.     

                அனைத்திந்திய சாகித்திய அகாதெமியின் தலைவரான நா.பாவின் தலைமையின் கீழ் ஒரு மாநாடு மங்களூரில் நடந்தது. நா.பா. அவர்களால் (எனது மறுப்பு ஏற்கப்படாமல்) வலுக்கட்டாயமாய் அதில் உறுப்பினளாய்ச் சேர்க்கப்பட்டிருந்த நானும் அந்தக் குழுவினருடன் சென்றேன். சாப்பாட்டு மேசை எதிரே அமர்ந்திருந்த போது, வெகு நாள்களாய் என்னை உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை அப்போது அவரிடம் கேட்டே விடுவது என்று முடிவு செய்தேன்:

        “உங்கள் மேல் பல நாளாய் எனக்கு ஒரு கோபம்.

        “என்ன கோபம்?

        “உங்கள் குறிஞ்சி மலர் நாவலில், உங்களையும் அறியாமல் அல்லது யோசிக்காமல் பெரும் பிழை ஒன்றைச் செய்திருக்கிறீர்கள்.

        “பிழையா!  என்ன பிழை?

        “அந்த நாவலின் நாயகி பூரணியை நீங்கள் குறிஞ்சி மலருக்கு ஒப்பிட்டுள்ளீர்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அந்த மலருக்கு ஒப்பானவள் பூரணி என்கிறீர்கள். தடுக்கி விழுந்தால் ஆயிரக்கணக்கான பூரணிகளை நம் நாட்டில் காணலாம். அரவிந்தன் போன்ற இளைஞர்கள்தான் அரிதானவர்கள். எனவே, அரவிந்தனைத்தான் நீங்கள் குறிஞ்சிமலருக்கு ஒப்பிட்டிருந்திருக்க வேண்டும். பூரணியை ஒப்பிட்டது தவறு!

       நா.பா. பெரிதாய்ப் புன்னகை செய்தாரே ஒழிய என்னை மறுத்தோ தமது கூற்றுக்குச் சப்பைக்கட்டுக் கட்டியோ எதுவுமே சொல்லவில்லை.

       நா.பா. அவர்களின் மீது எனக்கு இன்னொரு வருத்தமும் உண்டு. சாகித்திய அகாதெமியின் உறுப்பினர் என்கிற வகையில் நான்கு ஆண்டுகளில் நான் பரிந்துரை செய்த நான்கு எழுத்தாளர்கள் ஆர். சூடாமணி, சுஜாதா, ரா.கி. ரங்கராஜன், வலம்புரி ஜான் ஆகியவர்களில் எவருக்குமே விருது கிடைக்கவில்லை என்பதுதான் அது!                                                                                                                                                                                                                                                                                                                                

………

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

4 Comments

  1. Avatar
    Jyothirllat Girija says:

    அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு.
    வணக்கம். நா.பா. பற்றிய என் கட்டுரையில் கீழ்க்காணும் முக்கியமானவை விடுபட்டுப் போய் விட்டன. அவற்றையும் இக் கடித்ம் மூலம் வெளியிட வேண்டுகிறேன்.
    தினமணி கதிரின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்ற பின், கதைக் கதிர் எனும் மாத நாவலைத் தொடங்கினார். அதில் பங்கேற்க வந்த அழைப்பின் பேரில் நான் அனுப்பிய ஒரு நாவலில் கீழ்க்காணும் உரையாடல் இடம் பெற்றிருந்தது. (சொற்கள் மாறி இருக்கலாம். ஆனால் கருத்து மாறவில்லை)
    ”அவங்க திட்டுறதெல்லாம் பிராமணங்களை. ஆனா, கல்யணம் கட்டுறதும் வச்சுக்கிறதும் மட்டும் பிராமணப் பொண்ணுங்களை!”
    மேற்காணும் கருத்து சர்ச்சையைக் கிளப்பும் என்பதோடு வீண் வம்பும் வந்து சேரும் என்று காரணம் காட்டி, தினமணி கதிரின் உதவி ஆசிரியர்களுள் ஒருவர் நா.பா. அவர்களின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று அதை நீக்கிவிட அனுமதி கோரிய போது, நா.பா., “அந்தப் பொண்ணே தைரியமா அப்படி எழுதி யிருக்கிறப்போ நாம் பயப்படலாமா? அந்த உரையாடல் அப்படியே இருக்கட்டும்.” என்று சொல்லிவிட்டாராம். இதை எனக்கு அந்த உதவி ஆசிரியரே தொலைபேசியில் தெரிவித்தார்.
    “வாரிசுகள் தொடர்வார்கள்“ எனும் எனது சிறுகதை ஒன்று அப்போது இருந்த அனைத்து வார, மாத இதழ்களிலிருந்தும் திரும்பி வந்திருந்தது. அது மாநில, மைய அரசுகளைச் சாடிச் சில நிகழ்வுகள் இடம் பெற்ற கதையாகும். தினமணி கதிருக்கு அதை அனுப்பி வைத்தேன். நா.பா. அதை வெளியிட்டதோடு நில்லாமல் அதை அவ்விதழின் மிகச் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்து அதை “நட்சத்திரக் கதை” என்கிற அந்தஸ்துடன் வெளியிட்டார்.
    பின்னர் ஒரு முறை “அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே ஓர் அந்தரங்கம்” என்கிற தலைப்பில் நான் அனுப்பியிருந்த சிறு கதையைப் படித்துவிட்டு, உதவியாசிரியர்களுள் ஒருவரிடம், “நான் அவசரமா ஒரு மீட்டிங்குக்குப் போறதால, என் சார்பில நீங்களே கிரிஜாவிடம் சொல்லிடுங்க – இந்தக் கதையைப் படிக்கிறப்போ பக் ப்க்னு இருந்தது. என்ன வரப் போறதோன்னு கொஞ்சம் திகிலாக் கூட இருந்தது. ஆனா அப்படி எதுவும் இல்லே. ஒரு நல்ல மெசேஜ்தான் இருந்தது. அதுக்காக என்னோட பாராட்டையும் சொல்லிடுங்க!’ என்றாராம். இது போல் ஓர் இதழின் ஆசிரியரே எழுத்தாளரைப் பாராட்டுவது என்பது அரிதுதானே? அந்த வகையிலும் நா.பா. அவர்கள் வித்தியாசமானவர்.
    அவர் படைப்புகளில் விரசமான ஒரு சொல்லைக் கூடக் காண முடியாது என்பார்கள். “அப்படி யெல்லாம்” எழுதினால்தான் புகழ் கிடைக்கும் என்றெண்ணி மலினமாக எழுதாததும், மலினமான அந்தக் கருத்தைப் பொய்யாக்கியதும் நா.பா. அவர்களின் சிறப்பாகும்.
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    புனைப்பெயரில் says:

    அவருடைய சமுதாய நாவல் குறிஞ்சி மலர் கல்கியில் வெளியான போதும், —> ஸ்டாலின் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் தானும் அரவிந்தன் குணம் கொண்டவர் என்று மக்கள் நினைப்பார்கள் என்று நடித்தார். மக்கள் மனம் தான் கஷ்டப்பட்டது… இவர் இதில் நடித்தாரே.. என்று… அரவிந்தன் அரவிந்தன் தான். பசுத் தோலை போர்த்தி கொள்வதனால் மட்டும்…..

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    ஆர். சூடாமணி, சுஜாதா, ரா.கி. ரங்கராஜன், வலம்புரி ஜான் –> என்னது இவர்களுக்கு சாகித்ய அக்காடமி விருதா…? நா.பா புத்திசாலி தான்…

  4. Avatar
    ameethaammaal says:

    அருமையான ஒரு நினைவுக் கட்டுரை. இதுபோன்ற கட்டுரைகளால் மக்களால் மறக்கப்பட்டுவரும் மூத்த எழுத்தாளர்கள் இன்றைய எழுத்தாளர்களுக்கு ஒரு முன்மாதிர ஆகலாம் என்று நம்புகிறேன். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *