தன் கழுத்தில் இருந்த அட்டிகை காணாமற் போயிருந்ததைத் தன் மாமியார் சாரதா உடனே கண்டுபிடித்துவிட்டதால் நிர்மலாவுக்கு அதிர்ச்சி விளைந்ததே தவிர, வியப்பு ஏற்படவில்லை. கிளம்புகையில் பளிச்சென்று கழுத்தில் மின்னிய கனத்த நகை காணாததை ஒரு பெண்மணி கண்டு பிடிப்பதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லைதான். ஆனால் அதைப் பற்றியே கவலைப் பட்டு என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றி யோசித்து வைத்திருந்த நிர்மலா, அப்போதுதான் கவனித்தவள் போல் கழுத்தில் தடவிப் பார்த்துவிட்டு, “அய்யோ! ஆமா, அத்தை! நான் கீழே விழுந்தேனில்லையா? அப்ப அதனோட கொக்கி கழண்டு அது நழுவிடிச்சுன்னு தோணுது!” என்றாள், முகத்திலும் குரலிலும் அதிர்ச்சி காட்டி.
“நீ விழுந்த இடத்துக்கு வேணும்னா ஒரு நடை போய்த் தேடிப் பாக்கலாமா?”
“அது இன்னுமா அங்கேயே கிடக்கும்? வீண் அலைச்சல்தான் மிஞ்சும், அத்தை. விடுங்க. .”
“இன்னைக்கு என்ன, நஷ்டம் ஏற்பட்ற நாளா? உங்க மாமாவை வேற எவனோ பிக் பாக்கெட் அடிச்சிருக்கான்! பையில எவ்வளவு பணம் வெச்சிருந்தாரோ என்னவோ!”
நிர்மலா உடை மாற்றிக்கொள்ளத் தன்னறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள். நவனீதகிருஷ்ணனைச் சந்தித்ததன் விளைவான அதிர்ச்சியின் மிச்சம் இன்னும் நிறையவே அவளிடம் இருந்தது. தனது வாக்குறுதியை அவன் காப்பாற்றாமல், மறுபடியும் நகைகளுக்கு அடிபோடுவானோ எனும் கேள்வி அவளுள் திகிலைக் கிளர்த்தியது. உடை மாற்றிகொண்டபின் கூடத்துக்கு வந்து சாரதாவுடன் உட்கார்ந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவள் மனம் ஈடுபட மறுத்தது.
.. .. .. சோமசேகரன் வீடு திரும்பிய போது இரவு மணி எட்டு ஆயிற்று. அவர் உள்ளே வரும் வரை கூடக் காத்திருக்க முடியாமல், “என்னாங்க! என்னமோ பிக் பாக்கெட் அடிச்சுட்டதாச் சொன்னாங்களே? ஹேண்ட் பேக்கா? இல்லாட்டி, பர்சா? கிடைச்சுட்டுதா?” என்று சாரதா கவலையாய் அவரிடம் வினவினாள்.
“ஸ்ஸ்.. .. .. அப்பாடா!” என்றவாறு பொத்தென்று நாற்காலியில் விழாத குறையாக அமர்ந்துகொண்ட சோமசேகரன், “அந்த டி.வி. சனியனை நிறுத்து முதல்ல. சத்தம் காதைத் துளைக்குது!” என்றார்.
நிர்மலா அதை நிறுத்தினாள்.
“நிர்மலா! உன்னோட நெக்லேஸைத்
தொலைச்சுட்டியாம்மா?”
நிர்மலா திகைத்து நிற்க, “உங்களுக்கு எப்படிங்க தெரியும்? நாங்களே வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறந்தானே பாத்தோம்?” என்று சாரதா கூவினாள்.
தன் கைப்பையைத் திறந்து, அதிலிருந்து தாம் துழாவி எடுத்த அட்டிகையை . “இந்தாம்மா!” என்று அவளிடம் நீட்டியவாறு, சோமசேகரன் புன்னகை புரிந்தார்.
“பெரிய கதைம்மா. ஆச்சரியமான கதை. உன்னைத் தேடிக்கிட்டு நான் கோவில்லேருந்து வெளியே வந்தேனா? அப்ப ஒருத்தன் லபக்னு பாய்ஞ்சு என் கைப்பையை லவட்டிக்கிட்டு நகந்துட்டான். உடனே நான் செருப்புகளை நாம விட்டிருந்த ஆள் கிட்ட ஒரே வரியில விஷயத்தைச் சொல்லிக்கிட்டே ஓடினேன். அதுக்குள்ள நடந்ததைத் தெரிஞ்சுக்கிட்ட சிலர் என் உதவிக்கு வந்தாங்க. ரெண்டே நிமிஷத்துல அவனைத் துரத்திப் பிடிச்சுட்டோம். அங்க, பக்கத்திலேயேதான் போலீஸ் ஸ்டேஷன். இழுத்துக்கிட்டு ஓடினோம். போனா, அங்க ஒரு ஆச்சரியம் காத்திருந்திச்சு. மோட்டார் பைக்குல வந்து சங்கிலி பறிக்கிற கும்பலைச் சேந்தவன்னு சொல்லி ஒருத்தனைப் பிடிச்சு வெச்சிருந்தாங்க. அவன் கிட்ட இந்த நெக்லேஸ் இருந்திச்சு. அது நீயும் நானும் பாத்துப் பாத்து வாங்கினதாச்சே! நிர்மலாவுக்கு நாம குடுத்தது மாதிரி இருக்குதேன்ற ஒரு ஆர்வத்தில, ‘அந்த நெக்லேஸ் லாக்கெட்ல ‘அன்புடன் ரமேஷ்’னு பொறிச்சிருக்குதா பாருங்கன்னு இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னேன். பாத்தா, அப்படியே இருந்திச்சு. ‘என் மருமகளுதுப்பா. கோவிலுக்கு வந்தோம். கற்பூரம் வாங்கக் கடைக்குப் போச்சு. அப்ப அதை அவன் பறிச்சிருக்கான்’ அப்படின்னேன். தெரிஞ்ச இன்ஸ்பெக்டர். அதனால சிக்கல் இல்லே. தூக்கிக் குடுத்துட்டாரு. அப்படியே என் பையையும் குடுத்துட்டாங்க. வாங்கிட்டு வந்து சேந்தேன்!”
“எல்லாம் ஆண்டவனோட செயல்.. .. .. ஏங்க! அது சரி, அதெப்படி அவ்வளவு கரெக்டா எம் மருமகளோடதுன்னு இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னீங்க? இதே மாதிரி ஒண்ணு வேற யார் கிட்டவும் இருக்காதா என்ன?”
“அதுக்குக் காரணம், கற்பூரம் வாங்கப் போன பொண்ணு ரொம்ப நேரம் கழிச்சும் திரும்பி வராததுதான். நெக்லேஸைப் பறி குடுத்துட்டு, பயந்துக்கிட்டு வெளியவே நிக்கிறா போலன்னு எனக்குத் தோணிச்சு. அதான்!”
“பலே ஆளுதான் நீங்க!”
ஆனால் நிர்மலாவின் முகம் வெளிறி யிருந்ததைச் சாரதா கவனிக்கவில்லை.
ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கப் போவதற்கு முன்னால் குளிப்பது சாரதாவின் வழக்கம். அன்றிரவு அவள் குளிக்கப் போன நேரத்தில் சோமசேகரன் நிர்மலாவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே போனார்.
“வாங்க, மாமா.”
“உக்காரும்மா. உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.”
“நீங்க முதல்ல உக்காருங்க, மாமா.”
இருவரும் உட்கார்ந்த பிறகு. “அம்மா, நிர்மலா! அந்த ஆளு யாரும்மா?.” என்று அவர் வினவினார். நிர்மலாவுக்குத் தொண்டை வறண்டு போயிற்று.
.. .. ..ஓர் இளந் தம்பதியுடன் தான் அன்றிரவு கிளம்ப இருந்ததாக ஸ்டெல்லா தன் சகோதரியுடன் தொலை பேசியதன் அடிப்படையில், அந்தத் தம்பதி யாராக இருக்கும் என்று கண்டு பிடிக்கக் காவல்துறை முயன்றால், தாங்கள் இருவரும் மாட்டிக்கொள்ள நேருமோ என்கிற புதுக் கவலை சகுந்தலாவையும் கருணாகரனையும் அரிக்கத் தொடங்கிவிட்டாலும், சென்னையில் உள்ள அந்தப் பெண்மணியுடன் உடனே தொடர்புகொண்டு விட்டால் யாருடைய ஊகத்துக்கும் ஆளாகாமல் தப்பிவிட முடியும் என்னும் நம்பிக்கையும் இருவர் உள்ளங்களிலும் துளிர்விட்டது.
‘சகுந்தலா! அப்ப, ஸ்டெல்லா டீச்சர் நம்மைப் பத்தித் தன் அக்காவோட பேசி யிருக்காங்கன்னு தெரியுது. அதனால, நான் முதல்ல தேனாம்பேட்டை ஸ்கூலுக்குப் போய் விசாரிக்கிறேன். உன்னை அவங்களோட தங்க வைக்கிறதுக்கு உதவி கேட்டுப் பாக்கறேன்,’ என்ற கருணாகரன் முதன்முறையாகத் தோன்றிய புன்சிரிப்புடன் எழுந்தான்.
இரண்டு மணி நேரத்தில் திரும்பினான். ‘சகுந்தலா! உனக்கு ஒரு அம்மாவே கிடைச்சுட்டாங்க. அவங்க லீவு. அதனால வீட்டு அட்ரெஸ் கேட்டுக்கிட்டு அங்க போனேன். நம்மளைப் பத்தின எல்லாத்தையும் ஸ்டெல்லா டீச்சர் •போன்லேயே அவங்க கிட்ட சொல்லிட்டாங்களாம். ‘ஸ்டெல்லாவுடைய கடைசி ஆசை அதுன்றதால, அந்தப் பொண்ணை இங்கே கொணாந்து விடுப்பா. நான் பாத்துக்கறேன். ஆனா, அவளுக்குப் பதினெட்டு வயசு முடியற வரையில அவளோட வெளியிலே அங்கே இங்கேன்னு சுத்துறது, கொள்றதெல்லாம் கூடாது. சரியா? அது ஸ்டெல்லாவுடைய கட்டளை. உங்க கிட்டவும் அது பத்திப் பேசியிருக்கிறதாச் சொன்னா’ அப்படின்னாங்க… நானும், ‘ஆமாங்க, சொல்லியிருக்காங்க’ ன்னு ஒத்துக்கிட்டேன். ‘அப்புறம், இன்னொண்ணுப்பா. ஒரு அஞ்சாறு மாசத்துக்கு நீ எங்க வீட்டுப்பக்கமே வராம இருக்கிறது உனக்கு நல்லது. ஏன்னா, நீயும் அந்தப் பொண்ணும் ஓடிப் போனதா சந்தேகம் வந்து, விசாரணை அது இதுன்னு வந்தா, உன்னை வேவு பாப்பாங்க. நீ எங்கெங்கே போறே, பழகுறேன்னெல்லாம் கண்காணிப்பாங்க. ரெண்டு பேருக்கும் அது ஆபத்தாயிடும்’ னாங்க. அதனால, நீ உடனே கிளம்பணும். உன்னை அங்கே தங்க விட்டுட்டு, நான் என் •ப்ரண்ட் மேகநாதன் வீட்டுக்குப் போகணும். என்னோட தற்காலிக அட்ரெஸ்ஸையும் அவங்ககிட்ட குடுத்தேன்.’
கடவுள் தன்னை ஒரேயடியாய்க் கைவிட்டுவிடவில்லை என்று சகுந்தலா மகிழ்ச்சிக் கண்ணீர் உகுத்தாள்.
மார்கரெட்டும் அவள் கணவர் தெவய்சிகாமணியும் புனிதமே உருகொண்டவர்களாகச் சகுந்தலாவின் கண்களுக்கு எடுத்த எடுப்பில் தெரிந்தார்கள். அந்த அம்மாளைப் பார்த்ததும், அவரது முகச் சாயலில் ஸ்டெல்லாவின் ஞாபகம் கிளறப்பெற்று, ‘ஸ்டெல்லா டீச்சர்!’ என்று குமுறி அழத் தொடங்கிய சகுந்தலா அப்படியே தரையில் குத்திட்டு உட்கார்ந்து போனாள்.
அவளைத் தொட்டுத் தூக்கிய மார்கரெட், ‘எல்லாம் கர்த்தரோட விருப்பம், கண்ணு! நம்ம விருப்பம் எதுவுமே இல்லே. அழுவாதே!’ என்று கூறியவாறே தானும் கண்ணீர் விட்டாள்.
மார்கரெட்டுக்கும் தெய்வசிகாமணிக்கும் கிட்டத்தட்ட ஒரு சொந்த மகளைப் போன்றே அவள் இருக்கலானாள். நாள்கள் ஒவ்வொன்றாய்க் கழிந்துகொண்டிருந்தன. சகுந்தலாவின் திடீர் மறைவு சம்பந்தமாய்க் கருணாகரனை யாரும் சந்திக்கவில்லை. அவனை வேவு பார்த்ததாகவும் தெரியவில்லை. எனினும் அவளுக்குப் பதினெட்டு வயது ஆகும் வரையில் அவள் அவர்களின் வீட்டினுள்ளேயே வைத்துப் பாதுகாக்கப் பட்டாள். மார்கரெட்டும் தெய்வசிகாமணியும் அவளைத் தங்கள் அன்பாலும் பரிவாலும் திணற அடித்தார்கள்.
தெய்வசிகாமணி ஒரு பாதிரியாராக இருந்தார். இருவரும் தங்கள் வருமானங்களை யெல்லாம் நற்காரியங்களுக்காகச் செலவு செய்து வந்ததால், ஒரு சொந்த வீடு கூட அவர்களுக்கு இல்லை. அவளுக்குப் பதினெட்டு வயது ஆனதும், அவளிடமிருந்து பள்ளிச் சான்றிதழைப் பெறுவதற்கான மனுவை வாங்கிக்கொண்டு, தெய்வசிகாமணி அவளது ஊருக்குப் போய்த் தம் நண்பரான தலைமை ஆசிரியர் இருதயராஜிடம் சேதியைச் சொல்லி அவளது பத்தாம் வகுப்புச் சான்றிதழைப் பெற்று வந்தார்.
மார்கரெட்டும் தெய்வசிகாமணியும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடியதால், சகுந்தலாவின் ஆங்கில அறிவு இந்த இடைக்காலத்தில் மிகவும் வளர்ந்திருந்தது. தங்கு தடை யின்றிப் பேசக் கற்றுக்கொண்டுவிட்டாள். அவளுக்குப் பதினெட்டு வயது ஆவதற்குக் காத்துக்கொண்டிருந்த கருணாகரன் இதற்குள் சிக்கனமாய் வாழ்ந்து கணிசமாய்ப் பணம் சேர்த்து ஒரு சிறு வீட்டுப் பகுதியை வாடகைக்கு அமர்த்தினான்.
மார்கரெட் தம்பதியர் தம் இந்து நண்பர்கள் உதவியோடு இருவருக்கும் இந்து முறைப்படித் தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்வித்தார்கள். கட்டில், மேசை, நாற்காலிகள், பீரோ, பீங்கான் பாத்திரங்கள், ரேடியோ போன்ற தங்கள் உடைமைகள் பலவற்றை இருவருக்கும் திருமணப் பரிசுகளாய் வழங்கினார்கள். இதற்குக் கொஞ்ச நாள்கள் முன்பு, மார்கரெட் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
திருமணம் முடிந்து எல்லாரும் கிளம்பிப்போனதும், ‘இப்படி எல்லாத்தையும் எங்களுக்குக் குடுத்துட்டீங்களே, ஆண்ட்டி! வீட்டையே காலி பண்ணிட்டீங்க!’ என்று சகுந்தலா உருகிய போது, மார்கரெட் சிரித்தார்.
‘சகுந்தலா! நாங்க எப்பவோ எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணிட்டு மதர் தெரசா கிட்ட போயிருந்திருக்க வேண்டியவங்க. ஆனா, ஸ்டெல்லா உன்னை எங்க கிட்ட ஒப்படைச்சுட்டா. அந்தப் பொறுப்பை நிறைவேத்தாம நாங்க எப்படிப் போறது? எப்படி இருந்தாலும், இதை யெல்லாம் நாங்க யாருக்காவது கி•ப்டாக் குடுத்துட்டுப் போறதாத்தான் இருந்தோம். இப்ப நீ எங்க மக மாதிரி. அதனால உனக்குத் தர்றோம். அவ்வளவுதாம்மா! சந்தோஷமா எடுத்துக்க, சகுந்தலா!’
இருவரையும் புது வீட்டுப் பகுதியில் குடிவைத்துவிட்டு, இரண்டு நாள்கள் கழித்து மார்கரெட் தம்பதியர் கிளம்பிப் போனார்கள். அன்பே உருவான அந்தக் கணவன் – மனைவியரை எப்போது நினைத்தாலும் சகுந்தலாவின் கண்களில் நீர் பெருகும். இப்போதும் காண்கலங்கினாள். கொஞ்ச நாள் கழித்துக் கல்கத்தாவில் நடந்த குண்டுவெடிப்பில் இருவருமே இறந்து போன செய்தி அவர்களை வந்தடைந்து துடிக்கச் செய்தது.
நல்லவனான கருணாகரன் நடந்தவற்றை யெல்லாம் தன் பெற்றோர்க்குத் தெரிவித்தான். ஊருக்கு ஒரு முறை சென்றும் வந்தான். அவர்களும் ஒரு முறை வந்து போனார்கள். அவன் அவர்களுக்குப் பணமும் அனுப்பிவந்தான். இரண்டு ஆண்டுகள் வரை எந்தப் பிரச்சினையும் இன்றி இருவரும் வாழ்ந்தார்கள். ஆனால், தானும் ஒரு வேலையில் சேரச் சகுந்தலா செய்த முயற்சி பலிக்கவில்லை. வெறும் பத்தாம் வகுப்புக்கு வேலை கிடைப்பேனா என்றது. இதனால் அவள் தட்டச்சுக் கற்றுக்கொண்டாள். அதில் ஓராண்டு கழிந்தது.
மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் அவள் கருவுற்றாள். இதனால் அவள் வேலைக்குப் போகக் கூடாது என்று கருணாகரன் கருதினான். அவளது உடல் நலமும், குழந்தை நல்லபடியாய்ப் பிறக்க வேண்டும் எனும் கவலையும் வேறு எதையும் விட அவன் மனத்தில் முன்னணியில் நின்றன. உரிய நாளில் ஓர் அழகான பெண் குழந்தை பிறந்தது. அவள் வேலை தேடிக்கொள்ளுவதில் முனைப்பாக இருந்தது கண்டு கருணாகரனும் தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்தான்.
அவள் தன் முயற்சியைத் தொடங்கிய ஒரு வாரத்துக்குள் கருணாகரன் வெற்றி பெற்றான். ஓட்டல் ஒன்றில் வரவேற்பாளர் வேலைக்கான நேரிடைத் தேர்வுக்கு ஒரு நண்பன் மூலம் அவளுக்கு அழைப்பு வந்தது. கொஞ்சம் பெரிய ஓட்டல்தான். தங்குவதற்கான அறைகள் கொண்ட ஓட்டல். சகுந்தலாவுக்கு ஆங்கிலம் சரளமாய்ப் பேச வந்ததால் அவளுக்கு அவ்வேலை உடனே கிடைத்துவிடது.
குழந்தையைக் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குப் போகத் தொடங்கினாள். அவள் வேலையில் சேர்ந்த மறு மாதமே கருணாகரனின் கம்பெனியில் மிக நெடிய வேலை நிறுத்தம் ஏற்பட்டது. கம்பெனியை மூடப் போவதாகப் பேச்சு அடிபட்டது. ‘அட, கடவுளே! உனக்கும் வேலை கிடைச்சிடுச்சுன்னு பாத்தா, எனக்குப் போயிடும் போல இருக்கே?’ என்று அவன் அங்கலாய்த்த போது, ‘அப்படி நினைச்சுக் கவலைப் படாதீங்க. உங்க வேலைக்குக் குந்தகம் விளையப் போற நேரத்துலே எனக்குக் கிடைச்சிருக்குதேன்னு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க!’ என்றாள் அவள். ‘ நீ சொல்றது சரிதான்’ என்று அவன் ஒத்துப் போனான்!
அவன் அஞ்சியவாறே அவன் கம்பெனி மூடப்பட்டது. அவன் தற்காலிகப் பணியாள் ஆனதால், இழப்பீடாய்ச் சிறு தொகையே கிடைத்தது. துன்பமோ, இன்பமோ ஒற்றையாய் வராது என்பதற்கிணங்க, கருணாகரனுக்குத் திடீர் திடீரென்று தலையில் பொறுக்கமுடியாத வலி ஏற்படலாயிற்று. மிகவும் கவலைப்பட்டான். ஏனெனில் அது சாதாரணத் தலைவலியாக அவனுக்குத் தோன்றவில்லை. கண்களைக்கூடத் திறக்க முடியாத அளவுக்கு வலித்தது. மாத்திரைகள் சாப்பிட்டும் குறையாததால், சகுந்தலா அவனை மருத்துவரிடம் அழைத்துப் போனாள். அவர் அவனை ஒரு நரம்பியல் வல்லுநரிடம் போகப் பணித்தார். சோதனைகளுக்குப் பிறகு, மூளையில் கட்டி இருப்பதாக அவர் சொன்னார். சகுந்தலா அதிர்ந்து போனாள்.
உடனே அறுவை செய்யாவிட்டால் அவனது
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயத்தில், அறுவையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் சொல்லிவிட்டார். செய்யாவிட்டால் சாவு உறுதி, ஆனால், செய்தால் பிழைக்கக்கூடும் என்கிற நிலையில் அதைச் செய்துகொள்ளும் முடிவுக்கு அவர்கள வந்தார்கள். ஐம்பபதாயிரம் ஆகும் என்று அறிந்த சகுந்தலா அதிர்ச்சியில் உறைந்தாள். ஏனெனில், அவளிடம் ஐந்நூறு ரூபாய் கூட இல்லை! உதடுகள் பிளந்த நிலையில் சகுந்தலா மருத்துவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘என்னம்மா சொல்றே?’
‘நாங்க மிடில் க்ளாசுக்கும் கீழே, டாக்டர். ஏழைங்க. அவருக்கு இப்ப வேலையும் இல்லே. நானும் இப்பதான் அஞ்சாறு மாசமா வேலைக்குப் போறேன். கையிலே குழந்தை வேறே, டாக்டர்.’
‘எண்பதாயிரம் ஆகும்மா. உங்க நெலைமையைப் பாத்துட்டுத்தான் டாக்டர் •பீசைக் குறைச்சுக்கிட்டோம். ஒண்ணு பண்ணலாம் நீங்க. கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்.. .. ஆனா உங்களுக்கே தெரியும். நான் எதுவும் பேசக்கூடாது.. .. உங்க இஷ்டம்!’
‘நாளைக்கு வந்து சொல்றேன், டாக்டர். அது வரைக்கும் உங்க நர்சிங் ஹோம்ல வெச்சுப்பீங்களா, டாக்டர்?’ – டாக்டர் தலையசைப்பின் வாயிலாய்ச் சம்மதித்தார்.
கருணகாரனிடம் விவரத்தைக் கூறாமல், தான் வேலை செய்துவந்த ஓட்டலில் முன்பணம் வாங்கி வருவதாய்ச் சொல்லிவிட்டு, குழந்தையை மருத்துவ மனைப் பணி முடித்திருந்த ஓர் ஆயாவிடம் விட்டு விட்டு, அவள் உடனே அங்கு விரைந்தாள்.
அது ஓர் இருபத்துநான்கு மணி நேர ஓட்டல். நிர்வாகியின் வீடு ஓட்டல் வளாகத்திலேயே இருந்தது. சகுந்தலா ஓட்டலை அடைந்த போது இரவு மணி எட்டு. வரவேற்பறையில் இரவு நேரப் பணியாள் இருந்தான். சகுந்தலா அங்கிருந்தே நிர்வாகியுடன் தொலைபேசினாள்.
‘என்னம்மா, இந்த நேரத்துல •போன் பண்றீங்க? வேலையை விட்டுடப் போறீங்கள? பரிசுச்சீட்டு ஏதாவது விழுந்திருக்கா?’
‘அய்யோ! அப்படி இருந்தாத்தான் தேவலையே, சர்! என் ஹஸ்பண்டுக்கு மூளையில மோசமான ட்யூமர், சர்.. அம்பதாயிரம் ஆகும்ன்றாங்க. அட்வான்ஸ் வேணும், சர். அதான்……’
‘என்னம்மா? வெளையாட்றீங்களா? அட்வான்ஸ் – அம்பதாயிரமா! இப்ப தானே வேலையிலே சேர்ந்திருக்கீங்க? நடக்கிற காரியமாப் பேசுங்க!’
‘சர்! தொடர்ச்சியா உங்க ஓட்டல்லேயே சில வருஷங்களுக்கு வேலை செய்யிறதாக் காண்ட்ராக்ட்ல கையெழுத்துப் போட்றேன், சர்! பாதிச் சம்பளம் கைக்கு வந்தாப் போதும். மீதியை நீங்க் அட்வான்சுக்குப் பிடிச்சுக்கலாம்.’
‘உங்க சம்பளம் எவ்வளவு இப்ப?’
‘ரெண்டாயிரம், சர். நாலஞ்சு வருஷத்துக்குள்ள அடைச்சுட முடியும்.’
‘ஓட்டல் முதலாளின்னா இதுக்கு ஒத்துக்கணும்?’
‘நீங்க சிபாரிசு பண்ணினா ஒத்துப்பாரு, சர்.’
‘சரி. உடனே என் வீட்டுக்கு வாங்க. உங்க முன்னாடியே முதலாளியோட பேசறேன்.’ – அந்த அழைப்பின் பின்னணி புரியாத அவள் உடனே அவர் வீட்டுக்குப் போனாள்.
(தொடரும்)
- அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.
- காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014
- திண்ணையின் இலக்கியத் தடம்-15
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்
- ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரி
- ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்கு
- உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்து
- தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்
- நிர்வாணி
- மருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்பு
- நீங்காத நினைவுகள் – 27
- திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி
- சில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை
- புகழ் பெற்ற ஏழைகள் – 39
- என்னை ஆட்கொண்ட இசையும், நானும்
- கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு
- மருமகளின் மர்மம் 9
- சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13
- கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்
- பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’
- இடையனின் கால்நடை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 55 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்