கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்

 

‘எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல வாழ முடியவில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம். இது என்ன சாபக்கேடு ஐயா?’  – லிண்டன் வீதியில் வசிக்கும் இவரது பெயர் விபரங்களைக் குறித்துக் கொண்ட போதும் ‘இந்தக் காலம் அவ்வளவு நல்லதல்ல’ என்ற எச்சரிக்கைக் குறிப்போடு ‘அவற்றைப் பிரசுரிக்க வேண்டாம்’ என அவர் கேட்டுக் கொண்டார்.

 

இலங்கைக்கு எத்தகையதொரு சுதந்திரம் வந்துவிட்டதென இறுமாந்திருந்த போதிலும், உண்மையில் இவ்வாறாக சிறைப்பட்டு, பயத்தோடு வாழும் மக்கள் கூட்டமொன்று இப் பூமியின் மீதே வாழ்வதைப் பற்றி அறிந்திருப்பது, அதற்கு முகம் கொடுத்துள்ள மக்கள் மாத்திரமே. இது அவ்வாறாகத் துயருறும் ஒரு தொகுதி மக்களின் கதை. இவர்கள் இலங்கை, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கின் சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள். கிரிக்கெட்டில், உலகக் கிண்ணங்களை வென்றெடுப்பதற்கு இலங்கைக் குழு திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், அரசாங்கமானது இக் கிண்ணங்களுக்காக தமது மக்களை வீட்டுச் சிறைக்குள் வைத்திருப்பதை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிடினும் உண்மை அதுதான். இது அவ்வாறான மக்களைப் பற்றிய கதை.

 

கிரிக்கெட் நிலா ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கினைச் சூழவுள்ள வானம் இந் நாட்களில் பிரகாசிப்பது உயர எழுந்திருக்கும் மின் கம்பங்களில் ஒளிரும் மின் விளக்குகளால்தான். இதனாலேயே கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கின் சுற்றுவட்டாரம் பகலைப் போல காட்சியளிக்கும். இரவின் கனத்த அந்தகாரத்தை வெட்டியகற்றும் மின்னொளிக் கீற்றுகள் இந் நாட்டின் கிரிக்கெட் பிரகாசத்தை முழு உலகுக்குமே எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கையில், அதனருகே வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் இதயங்கள், ஆழ்ந்த இருளினால் மூடப்பட்டுப் போவதை இச் சமூகத்தில் எத்தனை பேர் அறிவார்கள்?

 

‘நாங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியையாவது பார்ப்பதில்லை. அந்தளவுக்கு எமக்கு கோபமாக இருக்கிறது. கிரிக்கெட் போட்டியொன்று இருக்கும் நாளில், நள்ளிரவில் வந்து பாதை நெடுகிலும் இரும்பு வேலிகளை அமைப்பார்கள். விடிகாலையில் நாங்கள் எமது வீட்டு வாசல் கதவுகளைத் திறக்கையில் நாங்கள் சிறைப்பட்டிருப்போம். எமது வீடுகளுக்கு முற்றமொன்றில்லை. எமது முற்றம் வீதிதான். எமக்கு இந்த அனுபவம் பழக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறானதொன்றை அறிந்திருக்கவுமில்லை. அயல்வீடொன்றில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு, இரவு நேரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முற்படுகையில் வீட்டின் முன்பாக இரும்பு வேலி கட்டப்பட்டிருந்தது. வாகனமொன்றை வீதிக்கு எடுக்க முடியவில்லை. நோயாளியை தோளில் சுமந்தபடி தூக்கிச் சென்றோம். கிரிக்கெட்டிற்காக நாங்கள் இவ்வாறு துயருற வேண்டுமா? தவிரவும் எதற்காக இந்தளவு பாதுகாப்பு? யாரைப் பாதுகாக்க?’ – கெத்தாராம பன்சலை வீதியில் வசிக்கும் முஹம்மதின் கருத்து இது.

 

போதிராஜ மாவத்தை, கெத்தாராம பன்சலை வீதி, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, மாளிகாவத்தை குறுக்குத் தெரு, ஜும்மா மஸ்ஜித் வீதி, லிண்டன் பெரேரா வீதி உட்பட ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கைச் சூழவுள்ள வீதிகள் பலவும் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெறும் நாளில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் சுயரூபத்தைக் கொண்டிருக்கும். அந் நாட்களில் எந்தவொரு வாகனத்தையும் வீதியோரங்களில் நிறுத்திவைப்பது தடை. பஞ்சிகாவத்தையில் கூட நிலைமை இதுவேதான். வாகன உதிரிப்பாகங்களைப் பெற்றுக் கொள்ள பஞ்சிகாவத்தைக்கு வரும் வாகன உரிமையாளர்களுக்குக் கூட பஞ்சிகாவத்தையில் தமது வாகனங்களை நிறுத்தி வைப்பது தடை. இதனால் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் வியாபார நிலையங்களை மூடிவைப்பது சிறந்தது என அரசாங்கத்தையும், கிரிக்கெட் விளையாட்டையும் திட்டியபடி ஒரு வியாபாரி கூறினார்.

 

பிரபாகரனைப் படுகொலை செய்து முழுநாட்டையும் ஒன்றுபடுத்தியதாகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாகவும் அரசாங்கம் மார்தட்டிக் கொண்ட போதிலும் இன்று அன்றைய நாட்களை விடவும் சுதந்திரம் மட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதே இம் மக்களின் கருத்தாகும். தர்மதாஸவின் கூற்று அதற்கு வெளிப்படையானதொரு சான்றாகும்.

 

‘ சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலும் உலகக்கிண்ணப் போட்டித் தொடரொன்று நடைபெற்றது. ஆனால் இவ்வாறானதொரு தொந்தரவு இருக்கவில்லை. அத்தோடு அன்று யுத்தமும் இருந்தது. இன்று யுத்தமுமில்லாமல் என்ன செய்கிறார்கள்? வீதி முழுவதும் பொலிஸும், இராணுவமும் பாதைகள் தொடங்கும் இடங்களில் பதுங்குகுழிகளை அமைத்திருக்கிறார்கள். போட்டியொன்று நடக்கும் நாட்களில் கெத்தாராமைக்கு நுழையும் பாதையில் எவராலும் செல்ல முடியாது. செல்வதென்றால் அதற்கு போட்டியைப் பார்வையிடவென வாங்கிய அனுமதிச் சீட்டினைக் காட்டவேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாவிடின் அப் பாதையால் செல்ல முடியாது. அப் பாதையின் இரு மருங்கிலும் வசிப்பவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்ல லாஃப் கேஸ் சந்தியாலோ, போதிராஜ மாவத்தையின் எல்லையான ஊருகொடவத்தைச் சந்தியாலோ செல்ல வேண்டும். போதிராஜ மாவத்தையிலும் அடிக்கொருவராக இராணுவம், நாங்கள் இன்று வசிப்பது யுத்தக் கட்டுப்பாட்டுப் பகுதியிலா என எண்ணச் செய்கிறது. ‘

 

கெத்தாராம விளையாட்டரங்கினைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களில் அனேகர் இந் நாட்களில் அமைதியற்ற நிலையிலேயே வாழ்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு நடைபெறும் நாட்களில் இவர்களது வாழ்க்கை நடைமுறைகளை வேறுவிதமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் ஏனைய நாட்களில் செல்லும் நேரத்தை விடவும் முன்னதாகவே வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். ஏனெனில், வழமையாகச் செல்லும் பாதையைத் தவிர்த்து, மாற்றுப் பாதையில் செல்லவேண்டி இருப்பதனாலாகும். கெத்தாராம விளையாட்டரங்கிற்குச் செல்லும் வீதியின் இரு புறத்திலுமுள்ள குடியிருப்பாளர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாட்களில் தங்களது வாகனங்களை வீடுகளிலேயே விட்டுவிட்டுத்தான் தங்களது தொழில்களுக்காகச் செல்லவேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாளுக்கு முந்தைய இரவே அப் பாதையின் இருமருங்கிலும் இரும்பு வேலிகள் நட்டு மூடப்படுவதேயாகும்.

 

கிரிக்கெட் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட முன்பு இச் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லா வீடுகளையும் பரிசோதனை செய்து மக்கள் தொகையைக் கணக்கெடுத்துக் கொண்டுள்ளதோடு இதற்கும் மேலதிகமாக வீட்டுக்கு யாரேனும் வருவாராயின் அது குறித்து காவல்துறைக்கு அறியத்தர வேண்டும். அடிக்கொருவராக நிறுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் காவல்துறையினரும், இராணுவப் படையினரும்  ‘அவர்களுக்கும் செய்வதற்கு வேறு வேலையில்லை’  என்பதால் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குள் நுழைந்து தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டுகளிப்பதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

 

ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கைச் சுற்றி வசிக்கும் மக்களில் அனேகமானவர்கள் தினந்தோறும் உழைத்துப் பாடுபட்டு தனது சீவனோபாயத்தைக் கொண்டு செல்லும் அன்றாடங்காய்ச்சி மக்கள் ஆவர். கிரிக்கட் ஆரம்பமானதைத் தொடர்ந்து அவர்களது உழைப்பும் இடைநடுவில் தத்தளிக்க விடப்பட்டிருக்கிறது. போதிராஜ மாவத்தை, கெத்தாராம பன்சலை வீதி, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, மாளிகாவத்தை குறுக்குத் தெரு, ஜும்மா மஸ்ஜித் வீதி, லிண்டன் பெரேரா வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பாதைகளுக்கருகில் வசிக்கும், ஆட்டோ ஓட்டிப் பிழைப்பதை தமது சீவனோபாயத் தொழிலாகக் கொண்ட மக்கள் போட்டி நடக்கும் தினங்களில் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறார்கள். எல்லா ஆட்டோக்களையும் அன்றைய தினம் காவல்துறை அப்புறப்படுத்தி விடுகிறது.

 

‘நாங்கள் வரி கட்ட வேண்டும். முழுக் குடும்பத்தையும் கொண்டு நடத்துவது ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் உழைப்பினால்தான். ஒருநாள் ஆட்டோ ஓடாது விட்டால், இரண்டு மூன்று நாட்களுக்கு கடன்பட வேண்டிய நிலைமைதான். நாங்கள் அன்றாடங் காய்ச்சிகள். இந்த வீணான விளையாட்டுப் போட்டியினால் நாங்களின்று அனாதரவாக நிற்கிறோம். அதைப் பற்றிக் கதைக்கப் போனால் கெட்ட வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன ஐயா. கிரிக்கெட் போட்டியில் விளையாடுபவர்கள் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அரசாங்கமும் கிரிக்கெட்டைக் காட்டியபடியே எல்லா விளையாட்டுக்களையும் ஆடிக் கொள்கிறது. நாங்கள் கிரிக்கெட்டினால் உண்ணாமல், குடிக்காமல் இருக்க வேண்டியிருக்கிறது. நான் நல்லதொரு கிரிக்கெட் ரசிகன். ஆனால் இன்று எனக்குக் கூட கிரிக்கெட் மீது வெறுப்பாக இருக்கிறது. இங்கு மைதானமொன்று அமைக்கப்பட்டால் நாங்கள் முன்னேறி விடுவோமென நாங்கள் முன்பு நினைத்திருந்தோம். ஆனால் இன்று மைதானத்தின் காரணமாக எமக்குப் பாதையும் இல்லை.’ – ஆட்டோ சாரதியொருவரான பதிரணவின் கருத்தினோடு வெளிப்பட்டது கோபத்தை மீறிய இயலாமை.

 

பிரமாண்டமான கோட்டையொன்றைப் போல நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கெத்தாராம விளையாட்டரங்கு அதாவது ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கைப் பார்த்த மாத்திரத்திலேயே நினைவுக்கு வருவது கிரீஸ் நாட்டின் கோட்டையே. இதைச் சுற்றி வாழும் மக்கள், இதன் பிரமாண்ட தூண்களை அன்று ஆசையோடு விழிகள் மூடாது பார்த்திருந்த சுற்றுவட்டார வீடுகளின் குடியிருப்பாளர்கள் இதற்குள்ளேயே சிறைப்பட்டுவிடுவோமென, ஒரு போதும் எண்ணியிருந்திருக்க மாட்டார்கள். எனினும் இன்று அதுதான் நடந்திருக்கிறது. கிரிக்கெட்டின் பிரகாசத்தோடு உலகுக்குக் காட்டப்படும் இந் நாட்டின் பளபளப்பை ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கின் சுற்றுவட்டாரத்தினூடாக காண்பிக்க முடியாது. மைதானத்துக்கு வெளியே உயரும் கேமரா ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் இக் குடியிருப்பாளர்களின் வீட்டுத் தொடர்களையே காண்பிக்கும். இது நாட்டின் கௌரவத்துக்கு ஒரு இழுக்கு. ராஜபக்ஷக்களின் மதிப்புக்கு மிகப் பெரும் இழுக்கு. அதன் காரணமாக நாளை இக் குடியிருப்பாளர்களுக்கு பிரேமதாஸ மைதானத்துக்காக தமது வீடுகளைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டால் கூட அது ஆச்சரியமல்ல. இன்றும் கூட கிரிக்கெட் போட்டியின் காரணமாக அவர்கள் மிகப் பாரிய இன்னல்களை அனுபவிக்கிறார்கள்.

 

‘நாங்கள் இங்கு பக்கத்திலேயே வசித்த போதிலும் நாங்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில்லை. எங்களுக்கு போட்டியைப் பார்ப்பதை விடவும் வாழ்வதற்காக எவ்வளவாவது உழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கிரிக்கெட் பார்த்தோம் என்பதனால் எமது வயிறு நிறையாது. போட்டியென்றால் அன்றோ அல்லது அதற்குச் சில தினங்களுக்கு முன்போ கவுன்டரிலிருந்து நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியவேண்டும் அல்லவா? ஆனால் இங்கு அவ்வாறில்லை.  அண்மையில் ஒரு நாள் ஜீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் 50/= ரூபாய் நுழைவுச் சீட்டுக்கள் இரண்டிரண்டாக விற்கப்பட்டன. போட்டி போட்டு அவற்றை வாங்கியவர்கள், இன்னுமொரு பெரிய தொகைக்கு அவற்றை விற்றார்கள். இதுவொரு சூதாட்டம். எங்களது வாழ்வை நாசப்படுத்துமொரு கனவு’. இலங்கைக் கிரிக்கெட் குழு கிண்ணங்களை வென்றெடுக்கும் என இந் நாட்டு மக்கள் ஏக மனதோடு வாழ்த்துகிறார்கள். தொலைக்காட்சி மூலமாக போட்டியைப் பார்த்து மகிழ்கிறார்கள். கவலைப்படுகிறார்கள். எனினும் உலகக் கிண்ணப் போட்டிகளின் போது உலகமே பார்க்கும் பிரேமதாஸ விளையாட்டரங்கைச் சூழவுள்ள மக்கள் துயரத்தில் மூழ்கியிருக்கிறார்கள். மிகுந்த ஒளி பாய்ச்சும் மின்சார வெளிச்சத்துக்கு மத்தியில் இருளில் மூழ்கியிருக்கிறார்கள்.

 

பிரேமதாச அரங்கை சுற்றிப் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள அரணானது, இந்த அப்பாவி மக்களின் துயரங்களை மறைத்துக் கொண்டிருக்கிறது. போட்டிகளின் இடைநடுவே எழும் மிகப் பெரும் ஆரவார ஓசை, இம் மக்களது ஓலங்களை முழு உலகுக்கும் ஒளித்து வைத்திருக்கிறது. அந்த ஆரவார ஓசை மற்றும் இராணுவக் கட்டளைகளை மீறிப் பயணிக்க இந்த அப்பாவி மனிதக் குரல்களால் இயலாதெனினும், இவை உண்மையான வேதனைகள் என்பது மட்டும் நிச்சயமானது. கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக, இரகசிய வாசல்களால் தத்தமது வீடுகளுக்குள் நுழையும் மக்கள் வாழும் இடமொன்று உலகில் உண்டென்றால், அது கெத்தாராம விளையாட்டரங்கச் சுற்றுவட்டாரமே. இது அங்கு வாழும் மக்களின் குரல்.

 

எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

தகவல் உதவி டிரன்குமார பங்ககம ஆரச்சி

 

 

author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *