(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
43. பெண் விடுதலைக்காகப் போராடிய ஏழை……………..
வாங்க… வாங்க…..என்னங்க… அமைதியா வர்ரீங்க…என்ன சும்மா உம்முன்னு மொகத்த வச்சிக்கிட்டு இருக்கறீங்க…? என்னது பொண்ணுங்க இன்னக்கி சுதந்திரமா செயல்படவோ, நடமாடவோ முடியாம ரெம்ப ரெம்ப கொடுமைகளுக்கு ஆளாகுறாங்களா…..? இங்க பாருங்க…. இன்னக்கி நேத்து இல்ல பொண்ணுங்க கஷ்டப்பறது.. இந்தக் கொடுமை காலங் காலமாத் தொடர்ந்து நடந்துகிட்டேதான் வருது…..
உலகம் இன்றைக்கு எத்தனையோ முன்னேற்றத்தைக் கண்டாலும் பெண்கள் முன்னேற்றங்கறது கானல் நீராவே இருக்குதுங்க…பெண்கள் சுதந்தரமா நடமாட முடியலேங்க… ஒரு பொண்ணு நகைகளப் போட்டுக்கிட்டு நள்ளிரவுலே யாரோட துணையுமில்லாம எப்ப நாட்டுல நடமாடுறாளோ அன்னக்கித்தான் உண்மையான சுதந்திரம் கிடைச்சதா அர்த்தம்னு நம்ம தேசப்பிதா காந்தியடிகள் கூறினது இன்னக்கி வரைக்கும் நிறைவேறவே இல்ல…ஒரு நிமிடத்துக்குச் சராசரியா 5 பெண்கள் ஏதோ ஒரு வகையில சித்திரவதைக்கு ஆளகிறதா ஒரு புள்ளி விவரம் சொல்லுது…
அது மட்டுமில்லேங்க சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அது இதுன்னு சொல்றாங்க… ஆனா பெண்கள் இவையெல்லாம் பெண்களோட வாழ்க்கையில கானல் நீராத்தான் இருக்குது.. பெண்களுக்காக நெறையப் பேரு அந்தக்காலத்துல இருந்து போராடி இருக்காங்க..இன்னக்கி வரைக்கும் அந்தப் போராட்டம் தொடர்ந்துகிட்டேதான் இருக்குது…பெண்களப் போகப் பொருளாத்தான் இந்த சமுதாயம் நெனக்கிது…இந்த நிலமை யெல்லாம் மாறணும்… மாறாத வரைக்கும் சமுதாயத்துல போராட்டம் நடந்துகிட்டுத்தான் இருக்கும்…..
சரி…சரி நான் போனவாரம் கேட்ட கேள்விக்கான பதில் இப்ப நாம பேசின பேச்சுக்கள்லேயே இருக்குது… என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா…என்னது தெரியலயா..? பராவயில்லை…நானே சொல்றேன்..அவங்க வேற யாருமில்லே அன்னிப்பெசண்ட் அம்மையார்தான்…வெளிநாட்டுல இருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியராகவே மாறி இந்தியாவுல பெண்களுக்காவும், இந்திய சுதந்திரத்திற்காகவும் போராடுனாங்க…தன்னோட குடும்பத்தை விடவும் மக்களையும் அவங்களுக்குச் சேவை செய்வதையும் பெரிசா நெனச்சாங்க…காங்கிரஸ் தலைவராகவும் இருந்தாங்க..தன்னோட வாழ்க்கையை இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்கும், இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிச்சுக்கிட்டாங்க… அந்த ஒப்பற்ற தியாகச் சுடர்தான் இந்த அன்னிப்பெசண்ட் அம்மையார்….அவங்க பிறந்தது ஏழ்மையான சூழல்…அவங்களப் பத்தி சொல்றேன் கேக்குறீங்களா…ம்…ம்..என்ன….
கல்வியும் தொண்டு மனப்பான்மையும்
லண்டனில், அயர்லாந்து மக்கள் குடியிருப்பு என்றே தனியாக ஒரு பகுதி உண்டு. பிரிட்டிஷ் நாடு என்பது இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ் எனும் மூன்று நாட்டு இனங்களால் ஆனது. அயர்லாந்து மக்களை ஐரிஷ் (Irish) என்பார்கள். அங்கே இருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த மதபோதகர் வில்லியம் பைஜ்வூட்டின் மகள் தான் அன்னிபெசண்ட். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அத்தகைய வறுமையான குடும்பத்தில்தான் லண்டனில் 1847 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் நாள் அன்னிபெசண்ட் பிறந்தார். அவரது இயற்பெயர் அன்னி வூட் என்பதாகும்.
ஊதல் காற்று வீசும் பனிக் காலம். அன்னியிடம் அரைத் துண்டு ரொட்டி இருந்தது. அன்று அவளுக்கு ஐந்தாவது பிறந்தநாள். அன்றைக்குத்தான் அன்னிவுட் தனது தந்தையை இழந்தாள். கல்லறைச் சாலையில் விலை மலிவான சவப்பெட்டியை வாங்கி வர அம்மாவுடன் சென்றாள். அப்பாவின் மறைவுக்காக அழுவதைவிட, வாட்டும் வறுமைக்கு இனி என்ன செய்யப்போகிறோம் எனும் அச்சம் அவர்களை ஆட்டிவைத்தது.
சவப்பெட்டி சாலையில் அன்னி பார்த்த ஒரு காட்சி… அவள் வயதுடைய ஒரு பையன் சவப்பெட்டி செய்பவனின் உதவியாளனாக இருந்தான். அழுது அழுது அவனது கண்கள் உப்பி இருந்தன. அவள் அவனிடம் ஓடினாள். ”உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்டாள். ‘ஆமாம்’ எனத் தலையசைத்து அழுதான் அவன்.
”இந்தா, இது என் பிறந்தநாளுக்கு உனக்கு நான் தரும் பரிசு” எனச் சொல்லி, தன்னிடம் இருந்த அந்த அரைத் துண்டு ரொட்டியை அவனிடம் கொடுத்தாள். பிறரின் மகிழ்ச்சியில் தனது துயரத்தை மறக்கும் வித்தையை அப்போதே அவள் கற்றிருந்தாள்.
அம்மாவும் அன்னிவுட்டும் ஏதேதோ வேலைகள் பார்த்தார்கள். ஹார்ட்வர் எனும் பிரபலமான பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சந்தில் மிகச் சிறிய உணவு விடுதியை அமைத்தார்கள். அன்னி அந்த உணவகத்தில் அம்மாவுக்கு உதவியாக இருந்தார். அங்கே வந்த மாணவர்களுடன் பழகி, எழுதப் படிக்கக் கற்றாள். அந்தக் கடைக்கு அவ்வப்போது எலன் மாரியாட் என்கிற ஆசிரியை வருவார். ஒருநாள், அன்னிவுட் பைபிள் வாசகங்களை உரக்கச் சொல்வதைக் கேட்டு ஈர்க்கப்பட்டார். விளைவு, அன்னிவுட் அதே ஹார்ட்வர் பள்ளியில் மாரியாட் ஆசிரியையின் செலவில் கல்வி கற்கச் சேர்க்கப்பட்டு கல்வி பயிலத் தொடங்கினாள்.
பள்ளியில் கற்றதைவிட அன்னிவுட் தனக்குத்தானே கற்பித்துக்கொண்டது அதிகம். விரைவில் பள்ளியே அவளைப் பற்றிப் பேசத் தொடங்கியது. ஒரு சிறுவர் கூட்டம் தினமும் மாலையில் உணவகத்தில் காத்திருக்கும். எளிய வழியில் கணிதம் மற்றும் ஐரிஷ் மொழிப் பாடத்தை அந்தச் சிறுவர்களுக்குக் குட்டி ஆசிரியை ஆகி வகுப்பெடுத்தபோது அன்னிவுட்டுக்கு வயது எட்டு.
வறுமையில் வாடிய லண்டன் குடிசைப் பகுதிக் குழந்தைகளுக்கு ரொட்டித் துண்டுகளும் கல்வியும் புகட்ட, ‘பசித்த சிறுவர் இல்லாச் சமூகம்’ (No more – Hungry Children) எனும் குழுவை அன்னிவுட் அமைத்து வழி நடத்தியபோது அன்னிவுட்டிற்கு பதினோரு வயது ஆகும்.
அன்னியின் ஆசிரியை எலன் மாரியாட், தனது ஐரோப்பியப் பயணத்தில் தன்னோடு வரும்படி அன்னிவுட்டை அழைத்தார். அந்த இளம் வயதில் அன்னிவுட்டிற்குப் பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. தனது ஆசிரியையுடன் அன்னி ஐரோப்பாவைச் சுற்றி வந்ததால் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனை உடையவராக மாற்றம் பெற்றுத் திகழ்ந்தார். அப்பயணம் அவரது உள்ளத்தில் பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தது.
மணமும் மணமுறிவும்
அன்னிவுட் தனது 19-ஆவது வயதில் 1867- ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயதுடைய மத குருவை மணந்தார். அதனால் அன்னிவுட் அன்னிபெசண்ட் ஆனார். தொடக்கத்தில் அவர்களது இல்லறம் நல்லறமாக அமைந்தது. அதன் பயனாக அன்னிக்கும் பிராங்குக்கும் டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல அன்னிக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு எழத் தொடங்கியது. அன்னியின் விருப்பத்திற்கு மாறாக அவரது கணவர் அன்னியின் மீது தனது கொள்கைகளையும் கருத்துக்களையும் திணித்தார். இது சுதந்திர மனப்பான்மை கொண்ட அன்னிக்குப் பிடிக்கவில்லை. அதனால் கணவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் துன்பமாக இருந்தது. இல்லறம் கசக்கத் தொடங்கியது.
அன்னிபெசண்ட் தனது மகளுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போனார். கடவுள் மீதிருந்த நம்பிக்கை அவருக்குக் குறைந்தது. கடவுளை வெறுத்தார். இதனால் அன்னிபெசண்ட் நாத்திகரானார். ஆனால் அன்னிபெண்ட்டின் கணவரோ தனது மனைவி அன்னிபெசண்ட்டைக் கோயிலுக்குச் செல்லுமாறும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்குமாறும் வற்புறுத்தினார். இது அன்னிபெசண்டிற்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தன் கணவரிடம் தனது கருத்தை எடுத்துரைத்தார். ஆனால் அவரது கணவரோ அதனைக் கேட்பதாக இல்லை. தனது மதக் கருத்துக்களைத் தனது மனைவியின் மீது திணித்து அதனைக் கடைபிடிக்குமாறு அன்னிபெசண்ட்டை வற்புறுத்தினார். அன்னியின் அரசியல் போக்கும் அவரது கணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இதனால் சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னிபெசண்ட் தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதென முடிவெடுத்து அதன்படி 1873-ஆம் ஆண்டு கணவரைப் பிரிவதென முடிவெடுத்தார் அன்னி. இறுதியாகத் தனது கணவரையும், குழந்தைகளையும் விட்டுப் பிரிந்த அன்னிபெசண்ட் லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாக மணவிலக்கு அன்னிபெசண்ட்டிற்குக் கிடைக்கவில்லை. அன்னியின் இரண்டு குழந்தைகளும் அவரது கணவர் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.
தொடர்ந்த படிப்பும் முற்போக்கு எண்ணமும்
அன்னிபெசண்ட் கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை த் தொடங்கினார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார். அன்னிபெசண்ட் மதத்தையும் கடவுளையும் எதிர்த்துப் பரப்புரை செய்தார். மேலும் அன்னிபெசண்ட் “நியூமால் தூசியன் அமைப்பு” என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார்.
அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வலியுறுத்திப் பொதுக் கூட்டங்களில் பேசினார். “லிங்க்” என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதிக் குரல் கொடுத்தார். ஆதிக்கப் போக்கிலிருந்து பெண்களையும் தொழிலாளர்களையும் விடுவிக்க எண்ணிய அன்னிபெசண்ட் பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை யாருக்கும் அஞ்சாது வெளிப்படையாக எடுத்துரைத்தார்.
பிரம்ம ஞான சங்கத்தில் இணைதல் – இந்தியா வருதல்
The Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை 1889-ஆம் ஆண்டு பாரிசில் சந்திக்கும் வாய்ப்பு அன்னபெசண்ட்டிற்குக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு மீண்டும் அன்னிபெசண்ட் ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரம்மஞான சங்கத்தில் அன்னிபெசண்ட் உறுப்பினரானார். இதனை அடுத்து மார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்
1891–ஆம் ஆண்டில் பிளேவட்ஸ்கி இறந்ததைத் தொடர்ந்து பிரம்மஞான சங்கத்தின் முக்கிய உறுப்பினரானார். அச்சபையின் சார்பில் 1893- ஆம் ஆண்டில் சிகாகோவில் நடைபெற்ற உலக கொலம்பியக் கண்காட்சியில் அன்னி பெசண்ட் கலந்து கொண்டார். 1893 – ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக அன்னிபெசண்ட் இந்தியாவிற்கு வந்தார். சபையின் அமெரிக்கக் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மற்றொரு சபையானது ஹென்றிஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை தாங்கி தடத்தப்பட்டது.
இந்தியாவில் பிரும்மஞான சங்கத்தை நிறுவுதல்
இந்தியா வந்த அன்னி பெசண்ட்,சென்னையில் அடையாறி
அன்னி இயல்பாகவே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக ‘காமன் வீல்’ என்ற வாரப் பத்திரிகையை 1913- ஆம் ஆண்டில் அன்னிபெசண்ட் தொடங்கினார். 1914- ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலால் ஈர்க்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைமைப் பதவி
1907- ஆம் ஆண்டில் சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழுவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.
அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15- ஆம் நாள் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.
1917-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்க்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்கு மட்டும் தேர்ந் தேடுக்கப்பட்டார். லாகூரில் ஜவகர்லால்நேருவின் தலைமையில் 1929-ஆம் ஆண்டில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரசானது சோசலிசம் சார்பாகக் கருத்துக்களை வெளியிட்டது. இது அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை. இதனால் அவர் காந்தியடிகளின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரிட்டனுக்கு அன்னிபெசண்ட் பயணம் மேற்கொண்ட போதும்கூட அன்னிபெசண்ட் அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாகப் பொது மேடைகளில் உரையாற்றினார். 1929 இல் “பொதுநலவாய இந்தியா” என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரிட்டனின் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார். தனது தள்ளாத வயது வரை இந்திய விடுதலைக்காகவும், இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அன்னிபெசண்ட் அம்மையார் கடுமையாக உழைத்தார்.
இயற்கையெய்துதல்
அன்னிபெசண்ட் அம்மையார் தனது 86-ஆவது வயதில் தீவிர அரசியலில் இருந்து விலகினார். அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய நட்பினைப் பேணினார். மேலும் பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். அந்நிலையில் மரணம் அவரை நெருங்கியது. தம் வாழ்நாள் எல்லாம் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்த அன்னிபெசண்ட் அம்மையார் 1933- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் நாள் தமது 86-ஆவது வயதிலேயே சென்னையில் உள்ள அடையாறில் இயற்கையெய்தினார்.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, நம் பாரத நாட்டிற்கு வந்து அதன் விடுதலைக்காகப் போராடிய அன்னி பெசண்ட் அம்மையாரின் பணி போற்றத்தக்கது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்க இலக்கிய வரிகளுக்கு எடுத்துக்காட்டாக அன்னிபெசண்ட் அம்மையாரின் வாழ்க்கை அமைந்திருப்பது எத்தனை பொருத்தமானது.
வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் அப்படியே நாம் வாழ்ந்து மறைந்து போவதுதான் தவறானதாகும். வறுமையில் பிறந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து தன்னையும் மற்றவர்களையும் அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். மற்றவர்களுக்காகத் தொண்டு செய்தல் வேண்டும் அப்படீங்கற உன்னதமான எண்ணங்களை எல்லாம் அன்னிபெசண்ட் அம்மையாரின் வாழ்க்கை நமக்குத் தெளிவுறுத்துது… அதுமட்டுமில்லைங்க,
“வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் – சாதியுங்கள்
ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்”
என்ற சிந்தனையையும் அன்னிபெசண்ட் அம்மையாரின் வாழ்க்கை நமக்கு தருதுல்ல..
குறிக்கோள்களை வரையறுத்து அதன்வழியில் நடைபோட வேண்டும்..அப்பத்தான் நம்மளோட வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லைன்னா..சொல்லும்படியா இருக்காது…அப்பறம் என்ன குறிக்கோள வரையறுத்துக்கோங்க…அத நோக்கிப் பயணப்படுங்க….. வெற்றி ஒங்களத் தேடிவரும்….
ஒருத்தரு அமைச்சரா இருந்தாரு…எளிமையிலும் எளிமை…அவர எளிமையின் சிகரம்னே சொல்லலாம்….அவரு விடுதலைப் போராட்ட வீரர்…சுதந்திர இந்தியாவில் தமிழக அமைச்சர்…மதுரைக்கு அருகில் உள்ள தும்பைப்பட்டியில பிறந்தாரு…அரசியலில் நேர்மையானவரு…தன்னலமில்லா தகைமையாளர்… காமராசருனாலே மிகவும் மதிக்கப்பட்டவர்..அவரோட அமைச்சரவையில பல ஆண்டுகள் இருந்தாரு…அவரு யாருன்னு தெரியுதா….?அந்த நேர்மையின் சிகரம் பண்பின் இருப்பிடம் யாருன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்குறீங்களா…? நீங்களே கொஞ்ச யோசிங்க ஒங்களுக்குத் தெரியும்…அடுத்த வாரம் பார்ப்போம்…(தொடரும்………44)
- மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3
- ”ஆனைச்சாத்தன்”
- கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்
- நீங்காத நினைவுகள் – 31
- வளரும் அறிவியல் – மின் இதழ்
- ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4
- தினம் என் பயணங்கள் – 2
- திண்ணையின் இலக்கியத் தடம்- 19
- சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு
- மருமகளின் மர்மம் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- நரிக்குறவர்களின் நாட்டுப்புறப்பாடல்கள்
- ஸ்ரீதரன் கதைகள்
- தாயகம் கடந்த தமிழ்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 17